வியாழன், ஜூன் 13, 2013

மகேந்திரனின் ஜானி


கெட்ட பய சார் காளி என்று தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கண்ணீரை துடைத்துவிட்டு முள்ளும் மலருமில் தன் நடிப்பால் அசத்திய ரஜினியை, ரெட்டை வேடங்களில் தன் இயல்பான நடிப்பால் ஜானியில் அடுத்த கட்டதிற்க்கு உயர வைத்திருக்கிறார் மகேந்திரன் என்று பலரால் அறியப்படும் அலெக்சாண்டர்.

பொதுவாக இவர் படங்களில் அதிகம் ஆச்சர்யத்தை அளிப்பது, ஏழு அல்லது எட்டு கதாபாத்திரங்களூடே நகர்ந்து செல்லும் வலிவான திரைக்கதையே. எங்கேனும் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்தை இழக்காமல் அசௌகர்யத்திற்கு இடம் கொடுக்காமல் நகர்ந்து செல்கிறது. இவ்வளவு குறைவான பாதிரங்களுடன், அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை எளிதாக காட்சியமைத்து இரண்டு மணி நேரத்திர்க்கும் மேலாக பார்வையாளர்களை கட்டி போட முடியுமா என்ற கேள்வியை அனாயாசமாக தட்டி விட்டு தன் படைப்பின் மூலம் பதில் தருகிறார் மகேந்திரன்.


ஜானியாக கேடி ரஜினி. வழக்கம் போல் ஒருவரை ஏமாற்றும் பொருட்டு செல்லும் இடத்தில் அர்ச்சனாவின் (ஸ்ரீதேவி) குரலால் வசீகரிக்கபட்டு அவளுடன் பரீச்சயமாகிறார். சந்திப்பு நட்பாக, பின் காதலாக பரிணாமம் பெறுகிறது. மற்றொருபுறம் விதய்சாகராக கருமி ரஜினி. பார்பர். பத்மாவால் (தீபா என்று அழைக்கபடும் உன்னிமேரி) வஞ்சிக்கபட்டு இரு கொலைகளை செய்கிறார். இருவரையும் போலீஸ் தேடுகிறது. பெண்கள் மேல் ஒரு வெறுப்பை சுமந்திருக்கும் பார்பர் ரஜினி, இருவரின் முக ஒற்றுமையை சாதகமாக்கி கொண்டு, தன்னை ஜானியாக மாற்றிக்கொண்டு ஸ்ரீதேவியை ஏமாற்ற நினைக்கிறார். ஸ்ரீதேவியின் அப்பழுக்கற்ற அன்பின் முன்னால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜானி செய்த குற்றத்திற்கும் தானே பொறுப்பு என்று போலீசில் சரணடைகிறார். ஜானி அர்ச்சனா இணைகிறார்கள்.
ஜானியில் ரசிக்க வைத்த சில விஷயங்கள்.

1.   மனதை வருடும் ஐந்து பாடல்கள். ஒரு இனிய மனது’, என் வானிலே’, செனோரிட்டா’, ஆசைய காத்துல’, மற்றும் காற்றே எந்தன்

2.   பண்ணைபுரம் ராஜாவின் ஒப்பற்ற பின்னிசை. படத்தை பார்க்கும்பொழுது ஏற்படும் ‘impact’ இவர் தயவினால்.

3.   இசைஞானியிடம் ‘BGM’ மற்றும் பாடல்களை கறந்து, மிகைபடுத்தாமல் திரைக்கதையினுள் பாங்காக சொருகிய மகேந்திரனின் சாமர்த்தியம்.

4.   ரஜினி என்று துதிக்கபடும் மாபெரும் காந்த சக்தியின் நடிப்பாற்றல். அவர் நடிப்பை பயன்படுத்தி வெளிவந்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அநேகமாக அவர் நடிப்பு காணாமல் போனது எஸ்.பி. முத்துராமனின் கைகளால் தானிருக்கும்.

5.   ஸ்ரீதேவியின் குரல். நன்றி நம்ரதா சவ்ஹேணி

6.   அர்ச்சனா ஜானிக்கான பிரேத்யேக BGM

7.   மகேந்திரனின் திரைக்கதை

8.   பார்பர் ரஜினியின் ஒன் லைன் தத்துவங்கள். முக்கியமாக எப்பவுமே ஒன்ன விட ஒன்னு பெட்டெராத்தான் தெரியும்.

9.   மீண்டும் இளையராஜா.

இத்தனை கவித்துவமான படங்களை இயக்கிய மகேந்திரன், தன் காலங்களில் அதிகம் கண்டுகொள்ளபடாதவர். முப்பது வருடங்கள் கழித்து அவரது திரைகதைகள் இப்பொழுது பாடமாக எடுத்து கொள்ளப்படுகின்றன. போற்றபடுகின்றன. மணிரத்னம் சினிமாவுக்கு வருவதற்கு தூண்டுதலாய் அமைந்தவர். முப்பத்தாறு வருடங்களில் வெறும் பன்னிரெண்டு படங்கள் மட்டுமே மகேந்திரனிடமிருந்து பெற்றது, தமிழ் ரசிகர்களின் காலம் கடந்த குற்றமாகும்.

புதன், மே 01, 2013

ஜான்ஸ் ஸ்கூல் - பெண்கள்

காலை தினமும் நடைபயிற்சி முடித்து அந்த வழியாக வருவதுதான் வழக்கம். வரும் வழியில் இருக்கும் தேவாலயத்தில் ஆறு மணிக்கு மணி அடித்து ஏசுவின் பாடலை ஒலிப்பார்கள். பல முறை கேட்ட ராகம் போல் தோன்றினாலும், அவசரகதியில் ஒரு முறையேனும் நின்று கேட்டதில்லை. இன்றும் அதுபோல் எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே என்று தோன்றவே, அருகில் சென்றுதான் கேட்டு பார்க்கலாமே என்று யத்தனித்தென். காதில் ஒலித்த அந்த பாடல்,

'தேன் இனிமைய...ிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே'

நினைவு கொசுவர்த்தி சுருளாக சுருள, காலச்சக்கரத்தில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி சென்றது. தூய யோவான் மேனிலைப்பள்ளி. ஏழு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பள்ளி. அந்த ஆறு வருடங்களும், காலை ஒன்பதிற்கு அடிக்கும் மணிக்கு பிறகு, வகுப்பின் மூலையில் சதுரமாக தொங்கிகொண்டிருக்கும் ஒலிபெருக்கியை பார்த்துக்கொண்டே அதில் இருந்து ஒலிக்கும் பிரேயர் பாடல்களை கேட்டும், பாடியும், மற்றவன் பாடுகிறானா என்று ஓரக்கண்ணில் பார்த்தும் கழித்த பொன்னான நாட்கள். பரந்து விரிந்த அந்த பள்ளியின் (சுமார் 80000 சதுர அடி) எந்த மூலையில் யார் சென்று கொண்டிருந்தாலும் சரி, ஒன்பது மணி பிரேயர் பாடல் ஒலிக்கும்போது அந்தந்த இடத்தில் அங்கேயே நின்று இறைவனுக்கு நன்றி கூறி பிரார்தித்து பின் நகரும் ஒழுக்கத்தை கற்று கொடுத்த பள்ளி. சிறு துளி பேரு வெள்ளமாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது போல், அங்கு கற்று கொண்ட ஒழுக்கம் இன்று வரையில் அலுவலக வேலை முதற்கொண்டு தனி மனித வாழ்விலும் பலருக்கு உதவியிருக்கும் என்பது திண்ணம்.

'தந்தானைத் துதிப்போமே - திருச்
சபையாரே, கவி - பாடிப்பாடி.
தந்தானைத் துதிப்போமே

என்ற அடுத்த பாடல் ஒழிக்க ஆரம்பித்திருந்தது.கள்ளனை துரத்தும் நாய் போல் உருண்டோடி, வேர்த்து விறுவிறுத்து, தொட்டியில் கழனியை குடிக்கும் மாடு போன்று சோறு தின்று, குதிரை போல் ரயிலிலும் பேருந்திலும் நின்றுகொண்டே தூங்கி கழிக்கும் தேமே என்ற வாழ்கையில், அவ்வப்போது இது போன்று பால்யத்தை நினைவுபடுத்தும் சங்கதிகள், படித்தோம் படுத்தோம் என்று டெட்லைன் போன்று பரபரப்பு இல்லா, மீளா வாழ்கைக்கு திரும்ப துடிக்கிறது என்பதை மறுதலிக்க இயலாது



கல்லூரி தினங்களில் நண்பர்களோடு கதைத்து கொண்டிருக்கும்பொழுது அடிக்கடி இந்த ஸ்டேட்மெண்ட் யார் வாயிலிருந்தாவது தவறாமல் வந்துவிடும். 


‘மச்சா இந்த பொண்ணுங்க ஃபிரண்ட்ஷிப் பாத்திருக்கியா? எல்லாம் மேலோட்டமாதான் இருக்கும். கல்யாணம் வரைக்கும் தான். அதுக்கப்புறம் ஒருத்தியாவது டச்ல இருக்காளுங்களா? சுத்தமா இருக்காது ஆனா பசங்க அப்டியில்ல. கடைசி வரைக்கும் அவன் டச்லேயேதான் இருப்பான்’

நிதர்சனமான பொய்!!!

பார்த்த...ு பழகிய வரைக்கும் இந்த கூற்றை ஓரளவு நான் ஒத்துக்கொண்டிருந்தாலும், அவர்களுடைய நட்பு நுனிப்புல் மேய்ச்சல் அளவுக்குத்தான் என்பது ஈகோயிஸ்ட் ஆண்களின் தவறை மூடி மறைப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட கூற்று என்று ஒருவாறு அனுமானிக்க முடிக்கிறது

ஆறு சகோதரிகள், நான்கு சகோதரர்கள் என்ற ஆலமரம் போல் பரந்து விரிந்திருக்கும் குடும்பங்கள் கூட திருமணத்திற்கு பிறகு அறுத்தெரியப்பட்ட நாற்றாகவே அறியப்படுகின்றன. காற்றின் வேகத்தில் சுதந்திரமாக மேலே பறக்கும் பட்டத்தை அங்குமிங்கும் சுண்டி அலையவிட்டு வேடிக்கை பார்த்து பின் நூலை மெதுவாக சுற்றி பட்டத்தை கைக்குள் அடக்குவது போல், திருமணமான முதல் நாள் முதலே, ‘நீ இந்த குடும்பத்தின் அடையாளம், கெக்கே பெக்கே என்று நாலு பேர் முன்னாடி சிரிக்காதே என்று ஒவ்வொரு நாளும் ஒரோர் நிபந்தனைகள் விதிக்கபட்டு, உறவினர் வட்டம் முதல் நட்பு வட்டம் வரை நாளுக்கு நாள் சுருக்கபடுகிறது.

பத்து மாதம் சுமந்து பெற்றவளுக்கு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு மனைவியின் இனிஷியலை தருவித்திருக்கிறார்கள்???

திருமணம் முடிந்து தனக்கும் தன் பிறந்த வீட்டுக்கும் எச்ச சொச்சமாக அறியப்படும் உறவாக இருக்கும் தந்தையின் இனிஷியலை கூட எத்தனை பெண்கள் மறந்து கணவனின் இனிஷியலை சேர்த்துக்கொள்ள வைக்கபடுகிறார்கள்???? (பிரியத்துடன் சேர்க்கபட்டவை தவிர்த்து)

திருமணத்திற்கு பின் புகுந்த வீடு மட்டுமே உன் வீடு என்று சொல்லும், கணவர்களே, உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தால் இதையே சொல்லி வளர்க்கும் தைரியமிருக்கிறதா?

ஒரு பெண்ணிற்கு அவள் அக்காவும் தங்கையும், கடைசி வரை அக்காவாகவும் தங்கையாகவும் தான் தெரிகிறார்கள். ஆனால் கணவன் மற்றும் அவன் வீட்டாரின் வரட்டு கவுரவத்தின் முன் அவள் பாத்திரமும் காட்சிகளும் மாற்றப்படுகின்றன. lமாமனார், மாமியார், ஓரகத்தி, நாத்தனார், அண்டை அயலார், பிறந்த வீடு, இருபத்து நாலு மணி நேரமும் துணை தேடும் குழந்தை, இதோடு கணவனையும் சேர்த்து அவள் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் சமூகத்திற்கு தெரியாமலில்லை, அவள் நட்பு வட்டம் ஏன் சுருங்கியது என்று?

நட்போ, சுற்றமோ எதுவாகினும் உறவில் பலவீனபட்டவள் அல்ல பெண். உறவை பலபடுத்த வந்தவளே பெண். குடும்பத்தின் மகிழ்ச்சியை ஆக்கும் அழிக்கும் ஒரே சக்தி பெண்.

குட்டி சுட்டிஸ்

பரிசுத்ததை தேடும்பொழுது மனசு சொல்லும் ஜோய் ஆலுக்காஸ்.

இல்லை. எனக்கு என் குழந்தை தான் தெரிகிறது.

அன்று நண்பகல், தட்டில் சாதத்தை போட்டு பாப்பாவிடம் நீட்டினேன்.

‘ஐ’ என்று வாங்கி கொண்டது.

‘என்னது இது?’ கேட்டது.

... ‘ரசம் புவ்வா பாப்பா, நல்லாருக்கும். சாப்பிடு. என்றேன்.

‘ரசம் புவ்வாவாஆஆஆஆஆ?’ இழுத்து கேட்டாள்.

‘ஆமா சாப்பிடு’

தட்டை கைய்யில் வாங்கி கொண்டு, அழகாக கால் நீட்டி அமர்ந்து மடியில் வைத்து கொண்டது. ஒரு கை சாதம் எடுத்து வாயில் போட்டாள். முகத்தில் ஏதும் மாறுதல் தெரியவில்லை. மென்று முழுங்கினாள். இரண்டாவது கை எடுத்து மீண்டும் வாயில் வைத்து மென்று கொண்டிருந்தாள்.

ஊரில் உள்ள அனைத்து தெய்வத்தையும் நினைத்து கொண்டிருந்தேன். எப்படியாவது இந்த தட்டு சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டாள் என்றால்.....

நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பித்துவிட்டாள். இரண்டு கையும் தட்டில் இருந்தது.

‘பாப்பா, ஒரு கைல சாப்பிடுமா.’

ம்ஹூம். இரண்டு கையையும் வைத்து சப்பாத்தி மாவு பிசைவது போல சாதத்தை பிசைய ஆரம்பித்துவிட்டாள். இன்று கோபப்படக்கூடாது.

‘பாப்பா கைய்ய எடு. தட்ட கொடு. நான் ஊட்டி விடுறேன்.’

'வேணாம்ம்ம். குடு. நானே ச்சாபிடுறேன்’ என்றது.

மீண்டும் கையை வைத்து பிசைந்து இரண்டு கைகளில் சாதத்தை அள்ளி வாயில் வைத்தாள். அப்பாடா என்று நினைக்கும்போது, அவ்வளவு சாதத்தையும் ‘வே’ என்று துப்பினாள். லேசாக கோவம் எட்டிபார்த்தது.

‘பாப்பா, சாபிடுமா. துப்பக்கூடாது.’

‘ச்சரி, நல்லாருக்கும்ம்ம்’ என்றவள் இரு கைகளிலும் சாதத்தை அள்ளி தலையில் கொஞ்சம் முகத்தில் கொஞ்சம் கை கால்களில் கொஞ்சம் என்று தடவிக்கொண்டு என்னை பார்த்து கண்ணை மூடி சிரித்தாள். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருந்தது.

‘பாப்பா, இப்போ, சாப்டுறியா இல்லையா’

‘ம், ச்சாபிடுறேன்’ என்றவள், இரு கைகளிலும் சாதத்தை எடுத்து ரெக்கையடித்து பறக்கும் பறவை போல இரு பக்கமும் உதறி தூவ ஆரம்பித்தாள். உட்கார்ந்திருந்த இடமெல்லாம் சாதமாக கொட்டி, கோவம் தலைக்கேறியது.

‘நீ என்கிட்ட அடி வாங்கப்போற. ஒழுங்கா சாப்பிடபோறியா இல்லையா?.’

ஒருமுறை என்னை பார்த்துவிட்டு, கையில் கொஞ்சம் சாதத்தை எடுத்து, ஷெல்பிலிருந்த டெட்டி பியர் வாயில் கொஞ்சம் ஊட்டினாள். இன்னும் கொஞ்சம் எடுத்து அருகிலிருந்த நீளமான நாய்குட்டி பொம்மைக்கு கொஞ்சம், அப்புறம் அவளது சின்ன வயது சட்டையை போட்டிருந்த மிஸ் வேர்ல்ட் பொம்மைக்கு கொஞ்சம் என ஊட்டிவிட்டு, என்னருகில் வந்து, ‘நீ ச்சாப்பிடு, ரசம் புவ்வா நல்லாருக்க்க்க்க்கும்ம்ம்ம்’ என்று தலையை ஆட்டி ஆட்டி சொன்னபோது. தலைக்கேறிய கோபம் முழுவதும் மறைந்து உதட்டோரம் பூத்த சிறு புன்னகையையும், கண்ணில் துளிர்த்த நீரையும் தவிர்க்க முடியாமல் கட்டிக்கொண்டேன்.

பரிசுத்தமான அன்பும், அரவணைப்பும் மட்டுமே நிரம்பியது குழந்தைகளின் உலகம் போல. நாம் தான் அடிக்கடி மறந்துவிடுகிறோம், குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை.

Purity at the utmost form

2115Like · 

ஜூட்டா, கண்டுபிடிக்கவா என்று சுவரோரம்
கண்ணை பொத்தி கண்ணாமூச்சி விளையாடும்
என் இரு வயது மகளை
விளையாட்டாக அடித்து வைக்க
'ஏம்ப்பா அடீக்றிங்க?' என்று
தலையை சாய்த்து உதட்டை சுழித்து கையை நீட்டி கேட்கும்
மழலை கேள்வியை நினைக்கும்பொழுது
என்னையறியாமல் உதட்டோரம் பூக்கும்
புன்னகையில் கழிகிறது
அந்த வாரம்.

முத்து நகர் எக்ஸ்ப்ரஸ்

கடந்த வாரம்
முத்து நகர் எக்ஸ்ப்ரஸில் பயணம் செய்ய நேர்ந்தது.

மாம்பலம் தாண்டி சில நிமிடங்களில் டி‌டி‌ஆர் வந்தார், வயது ஐம்பது மதிப்பிடலாம். ஒவ்வொரு டிக்கட்டாக பொறுமையாக சோதனை செய்தார். அருகிலிருந்தவர் தான் கொண்டு வந்திருந்த டிக்கட்டை காமித்து மூன்று பேர் வரவில்லை என்றார்.

‘ஓ, நான் இந்த டிக்கட்ல வேணா Not Travelled னு எழுதித்தரேன். நீங்க போய்ட்டு இந்த டிக்கட் காமிச்சு காசு திரும்ப வாங்கிக்கலாம்.’ ...என்றார்.

பக்கத்திலிருந்தவருக்கு வாயெல்லாம் பல்லாக தெரிந்தது.

‘நல்லது சார். நான் கூட பணம் வேஸ்டாச்சேனு வருத்தபட்டேன். Last minute cancellation. அதான்.

‘நோ ப்ராப்ளம். நீங்க கிளைம் பண்ணிக்குங்க.’ என்றார்.

இவ்வளவு பொறுமையாய் ஒரு டி‌டி‌ஆர் பேசி பார்த்ததில்லை.

அடுத்து என்னுடைய டிக்கட்டை காட்டினேன்.

‘சார், ‘excess fare’ கட்டணும்’. என்றார்

‘Fare Revision’ முன்பே டிக்கட் புக் செய்திருந்ததினால், வித்தியாசத்தொகையை ‘excess fare’ ஆக, ரயிலில் டி‌டிஆரிடமே கட்டலாம்.

தன் பாக்கெட்டில் கை விட்டு ரசீது புக்கை எடுத்து, PNR நம்பர், From, To என எல்லா விவரங்களையும் அதில் பொறுமையாக எழுதி கையில் குடுத்தார். முப்பது ரூபாய்கே ரசீது எழுதிருந்தார். வழக்கமாக முப்பத்தெட்டு ‘excess fare’ வரும்.

‘சார். முப்பதெட்டு ரூபானு நினைக்கிறேன். செக் பண்ணுங்க’ என்றேன்.

குனிந்து செக் பண்ணியபிறகு, ‘ஆமா தம்பி. கரெக்டு தான். முப்பதெட்டு ரூபானு போட்டுருக்கு. சரியா தெரியல. என்றார்.

மீண்டும் ரசீது புக்கை எடுத்து PNR வகையறாவை எழுத ஆரம்பித்தார்.

‘சார். அதே ரசீதுல முப்பத, முப்பத்தெட்டுனு மாத்திடலாமே.’ என்றேன்.

உடனே பதட்டபட்டவர், ‘அது கூடாது தம்பி, Govt விஷயம். Audit ப்ராப்ளம் வரும். இதெல்லாம் நாம கரெக்டா இருக்கனும்.’ சொல்லிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் பொறுமையாக எழுதி, எட்டு ரூபாய்க்கான ரசீதை என்னிடம் குடுத்தார்.

அந்த கேப்பில் அருகிலிருந்தவர், டி‌டி‌ஆர் ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்குறாரே’ என்று என காதை கடித்தார். ஒன்றும் சொல்லாமல் திரும்பினேன்.

பர்ஸில் சில்லரை இல்லாததால், நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.

‘அய்யோ. இப்பதான் தம்பி, கலெக்ஷன் ஆரம்பிச்சேன். சில்லரை இல்லை. ரசீதுல வேணா எழுதி தரேன் என்று நூறு ரூபாயை வாங்கியவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மீண்டும் நூறு ரூபாயை என் கையிலே கொடுத்து விட்டு ‘வேணாம் தம்பி, நீங்களே சில்லரை மாதி கொடுங்க’ என்றார்.’

‘சார், ரசீத வேற குடுத்துட்டீங்க, வேணாம் நீங்களே வச்சுக்குங்க. சில்லரை கலெக்டானதும் குடுங்க என்றேன்.

‘அய்யோ, உங்க கிட்ட வாங்கிட்டு நாம்பாட்டுக்கு மறந்துட்டேனா கஷ்டம். நீங்க கொடுக்க மறந்தா கூட என் பாக்கெட்லேந்து எடுத்து கட்டிப்பேன். உங்க எக்ஸ்ட்ரா காசு நான் மறந்து எடுத்துட்டு போய்டக்கூடாது.’ என்று சொல்லியவர் அடுத்த கேபினுக்கு போய்விட்டார்.

அந்த ஒரு ஷணத்தில் டி‌டி‌ஆர் எனக்கு காந்தியாய் தெரிந்தார்,

தற்செயலாக வந்த மினரல் பாட்டிலை வாங்கிவிட்டு, சில்லரையை தேற்றினேன்.

கொண்டு போய் அவரிடம் குடுத்தேன். ‘தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு ரசீதை எழுத ஆரம்பித்தார்.,
மீண்டும் வந்து என் இருக்கையில் அமர்ந்தபோது, அருகிலிருந்தவர், ‘அப்பவே சொல்லல. இந்த ஆளு வித்தியசாமா இருக்காருனு, சரியான லூசுனு நினைக்கிறேன். அவர் பாக்கெட்லேந்து போட்டு கட்டுவாராம்.’

ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பி கொண்டேன்.

இப்போழுதெல்லாம் நேர்மை நியாயமாக நடந்துகொண்டால் லூசாகத்தான் தெரிவோம் போல.

42913769Like ·





கவுண்டர் செந்தில் slang ல் படிக்கவும்

டேய் நாதசு

சொல்லுங்கண்ணே

எனக்கு ஒரு டவுட்டு டா. இந்த ரயில்வேக்காரய்ங்க எல்லாரும் உஜாலா போட்டு சுத்தமாய்ட்டனுங்களா?

ஏன்னே ?

... நேத்து ஊருக்கு போயிருந்தேனா?

போயிருந்தீங்க.

முழுசா கேளுடா ஆம்லெட் வாயா. நேத்தும் ட்ரைன்ல வர்றப்போ ஒரு TTR டா

அண்ணே. இன்னொரு TTR ஆ? வேணாம்னே. ஏற்கனவே நீங்க சொன்ன TTR கதைய கேட்டுட்டு அவனவன் அவருக்கு மானசீகமா கோயிலு கட்டி கும்புடுராய்ங்க . இதுல இன்னொரு TTR கதையா. தமிழ்நாடு தாங்காதுன்னே .

டேய்ய்ய்ய்

வேணாம்னா விடவா போறீங்க. சொல்லுங்கண்ணே.

நேத்தும் 38 ரூவா குடுக்கனும்டா. கைல அம்பது ரூவாதான் இருந்துச்சு. அத குடுத்தேன். அத வாங்கினவரு மீதி இருபது ரூவாய எண்ட குடுத்துட்டு ஒரு எட்டு ரூவா சில்லரை இருக்கானு கேட்டாரு. நான் பர்ச நோண்டி பாத்துட்டு, ஆறு ரூவாதான் சார் இருக்குது. நீங்க பத்து ரூவா வச்சிக்குங்கனு சொன்னேன். அதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமாடா?

என்னன்னே சொன்னாரு?

ஆங், அப்டி கேளுடா. அந்த ஆறு ரூவா மட்டும் குடுங்க, பரவால்லன்னு சொல்லிட்டருடா. எவ்ளோ சொல்லியும் மனுஷன் கேக்கல.

ரெண்டு ரூவா தானேனு விட்டுட்டாரு. இதுக்கு போயி?

டேய், ட்ரைன்ல ஒரு நூறு பேரு ரெண்டு ரூவா இல்லன்னு சொன்ன என்னடா செய்வாரு.

சரி விடமாட்டிங்க. மேல சொல்லுங்க.

அண்ணன் லேசுபட்ட ஆளாடா. உடனே வெளில எட்டி பாத்தேண். காபி விக்கிறவன் வந்தான். அவன்ட, ஒரு பத்து ரூவாய்க்கு சில்லரை இருக்குமான்னு கேட்டேன்டா. உடனே என்னமோ அவன் அண்ட்ராயர கேட்ட மாதிரி என்ன மேலயும் கீழயும் பாத்தான் பாரு. சரிதான் போடான்னு, ஒரு காபியா வாங்கிட்டு மீதி சில்லரைய தேத்திட்டேன்.

ஆனா நீங்க காபி குடிக்கறது இல்லையேன்னே ?

அங்க தான் அண்ணனோட விஞ்ஞானத்த பாக்கணும். பக்கத்துல இருந்த கோச் அட்டேண்டருட்ட காபிய குடுத்து குடிங்கனு சொல்லிட்டேன். மீதி ரெண்டு ரூவா சில்லரைய TTR ட குடுத்துட்டேன்.

ஆமா இவரு பெரிய காமராஜரு, TTR பெரிய காந்தி.

என்னடா அங்க முனங்கலு .

ஒன்னும் இல்லன்னே. TTR ஒரு கிறுக்கன் மாதிரி சொன்னா, நீங்க கேனைகிறுக்கன் மாதிரி பதிலுக்கு வேலை செஞ்சிட்டு வந்திருக்கீங்கனு எவனாவது ஒருத்தன் கமெண்ட் அடிக்கபோறான்.

டேய் நாதசு. அதாண்டா உலகம். நல்லது பண்ணா கிறுக்கன் தாண்டா சொல்றாய்ங்க

ஆமாண்ணே. அண்ணே. ஒரு சின்ன ரிக்வஸ்டு.

சொல்லுடா கோமுட்டி தலையா.

அடுத்த தடவ ஊருக்கு போனீங்கன்னா, தயவு செஞ்சு 38 ரூவா சில்லரை எடுத்துட்டு போங்கண்ணே. இப்படி சில்லரை எடுத்துட்டு போகாம மொக்க போஸ்டா போட்டு எங்கள சாகடிக்காதிங்கன்னே.

டேய் அட்வைசாடா, போடா போய் பல்லு விளக்குடா நாயே.


125Like ·  ·

வியாழன், மார்ச் 14, 2013

திருவரங்கன் உலா


திருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது, அது ஏதோ ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித்திருந்தேன். அந்த கணிப்பை அடித்து நொறுக்கியது போல் இருந்தது அதை பற்றி தெரிந்து கொண்டபோது. திருவரங்கன் உலா ஒரு காரணப்பெயர். திரு அரங்கனின் உலாவே திருவரங்கன் உலா. அரங்கன்- ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவன். உற்சவர். எழுதியவர் ஸ்ரீ வேணுகோபாலன். இந்த பெயர் புதியதாக தோன்றினால், புஷ்பா தங்கதுரை என்ற பெயர் கேள்விபட்டது போல் இருக்கிறதா? அவரே தான் இவர். புஷ்பா தங்கதுரை இவரது புனை பெயர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.

திருவரங்கன் உலா என்றதும் ஏதோ உற்சவரை பல்லக்கில் உட்காரவைத்து அதன் பின் பாசுரங்கள் பாடிச்சென்றதை பற்றி என்று நினைத்தால், இல்லை. கி.பி. 1300 ஆம் ஆண்டு, சுல்தானியர்கள் படை தெற்கே படையெடுத்து வந்தபோது, நாட்டை கைப்பற்றியதோடல்லாமல் கண்ணில் தென்பட்ட கோவில் கோட்டை என்று எல்லாவற்றையும் சூறையாடினார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாகுபாடின்றி துவம்சம் செய்தார்கள். அவர்களிடமிருந்து விக்கிரகங்களை காப்பாற்றி சிலர் மண்ணில் புதைத்து வைத்தார்கள், சிலர் கையில் தூக்கிக்கொண்டு கண் காணாத இடத்திற்கு ஓடினார்கள்  திருவரங்கத்தில் இப்பொழுது நீங்கள் தரிசிக்கும் அரங்க விக்கிரகம் அவ்வாறு தூக்கி செல்லபட்டு சுமார் அறுபது ஆண்டுகள் பல இடங்களில் சுற்றி திரிந்து பின்னர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பட்டது. இதுவே திருவரங்க உலாவக வடித்திருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

முதல் இரண்டு பாகம் திருவரங்கன் உலாவாகவும், அதைத்தொடர்ந்து பின்னிரு பாகங்கள் மதுரா விஜயமுமாக படைத்திருக்கிறார். ஆரம்பித்த இரு பக்கங்களிலேயே குதிரை பாய்ச்சலாக கதை செல்கிறது. ஒரு இடமேனும் தொய்வில்லை. பொன்னியின் செல்வன் மற்றும் சிவாகமியின் சபதம் தொடர்ந்து மிக ஆவலுடன் படித்த ஒரு வரலாற்று பெட்டகம்.

குலசேகரன், திருவரங்கன் உலாவின் கதாநாயகன்.. குலசேகரனின் எச்சரிக்கையின் (சுல்தானியர்கள் படையெடுப்பு) பேரில் ஸ்ரீரங்கமே அரங்கனை தூக்கி கொண்டு ஓடுகிறது. ஒரு குழு ஸ்ரீரங்கத்து கோவிலை காக்க பின் தங்கி விடுகிறது. அடுத்த நூறு பக்கங்களுக்கு, ஒரு சிறு படையை வைத்து கொண்டு, சுல்தானியர்களின் படையிடம் அவர்கள் போரிட்ட விதத்தை மயிர் கூச்செரியும் விதத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் விளக்கியுள்ளார். கோவில் மதில் சுவரை கோட்டையாக, கொதிக்கும் எண்ணை மற்றும் தீப்பந்தத்தை ஆயுதமாக, முள்செடியே அரணாக, சாதாரண பாமர மக்களின் போருதவி என பல விடயங்கள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.

இந்த சுல்தானியர்கள் திருவரங்கத்தின் மீது படையெடுத்ததற்கான காரணமே அலாதியானது. கி.பி. 1300 ன் ஆரம்பத்தில் சுல்தானியர் படையெடுத்து வந்து தெற்கை நாசபடுத்தி பல ஆபரணங்களை கொள்ளை அடித்து சென்றனர். அவ்வாறு எடுத்து செல்லபட்டவையில் திருவரங்கனின் விக்கிரகமும் ஒன்று. கொள்ளையடிக்கபட்ட பொருள்களெல்லாம் தில்லி கோட்டையில் பத்திரப்படுத்தபட்டன. சுரதானி என்று அழைக்கபடும் ஒரு சுல்தானிய இளவரசி, அந்த விக்கிரகத்தை பார்த்துவிடுகிறாள். அதன் சௌந்தர்யத்தின் மீது தீராக்காதல் கொண்டு அதையே நினைத்து உருகுகிறாள். அல்லும் பகலும் அதனுடனே கழிக்கிறாள். இவ்வாறு இருக்கையில் திருவரங்கனை இழந்து தவிக்கும் திருவரங்க வாசிகள் தில்லிக்கு வருகிறார்கள். ஆடல், பாடல் என்று சுல்தானை மகிழ்விக்கிறார்கள். அதில் மயங்கிய சுல்தான் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, தாங்கள் எங்களிடமிருந்து எடுத்து சென்ற பொருள் வேண்டும் என்று சொல்ல, சுல்தானும் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருவரங்க வாசிகள், விக்கிரகத்தை தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக திருவரங்கத்திற்கு வந்து சேருகிறார்கள். திருவரங்க விக்கிரகம் காணாது திகைக்கும் சுரதானி, ஒருவாறு உண்மையை தெரிந்து கொண்டு, ஒரே ஓட்டமாக திருவரங்கத்திற்கு வந்து சேர்க்கிறாள். அங்கே ஜோதியாய் வீற்றிருக்கும் அரங்கனை தரிசித்து அதே இடத்தில் மாண்டு விடுகிறாள். இதை கேள்விபட்ட சுல்தான், அந்த விக்கிரகத்தில் ஏதோ வசியம் இருக்கிறது என்று, அதை மீண்டும் கைப்பற்ற படையெடுத்து வருகிறார். அதன் பின்பு அரங்கனது விக்கிரகம் எவ்வாறு தப்புவிக்கபட்டது என்பதே திருவரங்க உலாவின் கதை. இல்லை இல்லை. வரலாறு. இந்த சுரதானியே, துலுக்க நாச்சியார் என்று பெயர் பெற்று கோவில் மதில் சுவரில் காட்சி தருகிறாள். Wiki Link

திருவரங்கனை தப்புவிக்க எவ்வாறெல்லாம் பிரயத்தனபட்டார்கள் என்று படித்தறியும்பொழுது சொல்லோன்னா வியப்பை அளிக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சிறு கிராமமாக அரங்கனை தூக்கி சென்றவர்கள், பின்னாளில் போரில் அடிபட்டோ, வயதான காரணத்தினாலோ, ஒவ்வொருவராக மடிந்து, இறுதியில் ஐந்து பேர் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அந்த ஐவரும் கொடவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள். சிங்கழகர், ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர் என அந்த ஐவரின் பெயரையும் குறிப்பிடுவது, ஸ்ரீ வேணுகோபாலின் அற்பணிக்கபட்ட ஆராய்ச்சியை பறை சாற்றுகிறது.

ஒரு கட்டத்தில் அரங்கனை தூக்கிக்கொண்டு அவர்கள் மலை மீது ஏற முற்பட, சுல்தானிய படைகள் பார்த்துவிடுகிறார்கள். எப்பாடுபட்டாவது அரங்கனை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் இலை, கொடிகளை கயிராக திரித்து தன் உடம்பில் அரங்கனை அணைத்துக்கொண்டு கயிரை கட்டி, மலை மீதிருந்து உருண்டு மாண்டு விடுகிறார், ஒரு கொடவர். அவரது பிராயம் சுமார் எண்பது ஆண்டுகள். அதன் பிறகு கீழ் வரும் கொடவர், அந்த அரங்கனை எடுத்துக்கொண்டு சுல்தானிய படைகளிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் சென்று விடுகிறார். சுமார் இருபது ஆண்டுகள் தன்னந்தனியாக அரங்கனோடு, நிதமும் காட்டு கனிகளை கொண்டு நிவேதனம் செய்து, சித்தப்ரம்மையுடன் அரங்கனை போற்றி காத்து வருகிறார். ஆசைகளை அறவே அறுத்து அரங்கன் மீது அவர்கள் கொண்டுள்ள பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

அரங்கனை மீண்டும் கோவிலில் எழுப்ப ஒய்சள வள்ளலார், மதுரை மீது தொடுத்த படையெடுப்பின் மூலம் அவரது வீரமும் (சுமார் எண்பது பிராயம்) மற்றும் சுல்தானின் வஞ்சகத்தால் ஏமாற்றபட்டு கொலை செய்யப்பட்டதையும் வரலாற்றை ஒட்டியே பயணித்து ஆசிரியர் விவரிக்கிறார்.

முதல் இரு பாகத்தில் குலசேகரன் மற்றும் ஹேமாலேகாவின் பிரேமையும், பிந்தைய இரு பாகங்களில் வல்லபன் மதுராவின் பிரேமையும் கண்ணில் நீர் சொறியவைக்கின்றன. இருவரது காதலும் நிறைவேறவில்லை. மதுரா வல்லபனை மணக்காது ஒரு இளவரசனை மணந்து கொண்டதை கண்டு துக்கிக்கும் வல்லபன் மற்றும் வாசகர்களை, மதுரா சொல்லும் காரணங்கள் சமாதானபடுத்துவதோடு மட்டுமில்லாது மதுராவின் நியாயங்களையும் நிலை நாட்டிவிடுகின்றன. தூய பிரேமையை வெளிபடுத்துகின்றன.

திருப்பதியில் கட்டப்பட்டிருக்கும் அரங்க மண்டபம், அரங்கன் சில நாட்கள் திருப்பதியில் தங்கியிருந்த காரணத்தினால் எழுப்பபட்டிருக்கிறது. மேலும், சுல்தானை மது மாதுகொண்டு மயக்கி, அவரை பலவீனமாக்கிய கங்கணர் (விஜயநகர அரசர்), கண்ணனூர் மீது படையெடுத்ததின் (இப்போதைய சமயபுரம்) காரணமும், அரங்கனை மீண்டும் ஸ்தாபிக்கத்தான் என்று தெரிய வருகிறது.

அரங்கனை ஸ்தாபித்த பின், விஜயநகரம், மதுரயை நோக்கி படையெடுத்து செல்கிறது. மதுரையை கைப்பற்றி, மீனாக்ஷி கோவிலை மீட்டெடுத்து, இப்போதிருக்கும், பல கோபுரங்களை ஸ்தாபித்தனர்.

அரங்கன் இல்லாத நாற்பது வருடங்களும், திருவரங்க மக்கள் இன்னொரு அரங்க மூர்த்தியை வழிபட ஆரம்பித்திருந்தார்கள். முதல் தலைமுறை அழிந்து இரண்டாவது தலைமுறை நடந்து கொண்டிருந்தது. அரங்கனது கதையை எடுத்து சொல்ல ஊர் பெரியவர்கள் யாருமில்லை. இதன் காரணத்தினால், நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்த மூர்த்தியை, இவன் நமது அரங்கன் தானா என்று சந்தேகிக்கிறார்கள். அச்சமயம், அங்கு வந்து தேசிகர், ஒரு உபாயம் கூற, அவ்வூரிலேயே மிக வயதான ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஆனால் அவருக்கோ கண் பார்வை பறி போயிருக்கிறது. இருந்தும் அவர் அரங்கனை கண்டுபிடிக்க ஒரு வழி சொல்லுகிறார். அரங்கனின் அபிஷேக நீரை தீர்த்தமாக பருகியிருப்பதால் இரண்டு மூர்த்திகளையும் நீராட்டி, அதை கொணர சொல்லுகிறார். அரங்கனது மூர்த்தியில் இயல்பிலேயே ஒரு சுகந்தம் பரவியிருப்பதை அறிந்திருந்த அவர், திருவரங்கனை சரியாக அடையாளம் கண்டதையடுத்து வல்லபன் மற்றும் விஜயநகர சாம்ராஜியமே (போர் எடுத்த) சந்தோஷப்படுகிறது. இன்றும் அரங்க சன்னிதியில் இரு மூர்த்கிகளை தரிசிக்கலாம்.

மேலே கூறிய அனைத்தும் திருவரங்கன் உலா புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பெரியீர்காள்’, தேவரீர்’, பிள்ளைக்காள்’, சேவார்த்தி’, தேவர்மீன்’, பிள்ளைக்காள்’, என கி.பி. 1300 ஆம் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வந்த அனுபவத்தையும் அரங்கனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலையும் தருகிறது, திருவரங்கன் உலா.

திங்கள், பிப்ரவரி 25, 2013

சில இத்யாதிகள்


உலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும், மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. கவனிக்க பொறியியல் துறை மத்தியில் மட்டுமே இந்த ஒப்பீடு.. சுட்டெரிக்கும் வெயில், புயல் மழை, குப்பை, மண், தூசி, மற்றும் இயற்கை சீற்றங்களை உள்வாங்கிக்கொண்டோ அல்லது சகித்து கொண்டோ வேலை செய்தாகவேண்டிய கட்டாயம் கட்டுமான பொறியாளர்களை மட்டுமே சாரும். கட்டுமான பொறியாளர்கள் என்று நான் இங்கு பொதுவாக குறிப்பிடுவது சிவில், மெக்கானிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளை. மின் நிலையங்களோ, கப்பல் கட்டுமான தளங்களோ, தேசிய நெடுஞ்சாலை, மெட்ரோ என எந்தவொரு வேலையாகட்டும் இவர்களின் பாடு சொல்லி மாளாது.
வாரத்திற்க்கு ஐந்து நாள் மட்டும் கம்ப்யூட்டர் பொட்டியை தட்டும் வேலையை விட்டுவிட்டு, வாராத்தின் ஏழு நாளும் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையை எண்ணி நொந்து கொள்ளாத நாளே இல்லை எனலாம். வாரத்தின் எல்லா நாட்களும் திங்கள் கிழமையாகவே தோன்றுவது ஒரு நரக வேதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை தானேன்றாலும், இங்கு கரையே இல்லையே காலூன்ற. வந்து பார்த்தாலன்றி முழுவதும் உணர்ந்து கொள்ளல் சிரமம். அதுவும் கார்பரேட் வசதிகளை சில காலம் அனுபவித்து விட்டு இந்த கச்சடாவில் மீதி வாழ்வை கழிப்பது நித்தம் நித்தம் ஒரு சாதனையாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கிறது. தற்சோதித்ததில் சில.

1.   கட்டுமான தளங்களில் இருக்கும் இந்நிறுவனங்களில், இயற்கை உந்துதலை கழிப்பதற்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் இருந்ததேயானால் அதை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதலாம். ஏனெனில் ஒரு நாளின் தொண்ணூறு சதவீதத்தை பகலவனின் நேர் கண்காணிப்பில் கழிப்பதால், அங்கு வளரும் மரம் செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்கப்பெறுவதற்கு இதை ஒரு மறைமுக ஏற்பாடாக இந்நிறுவனங்கள் கருதுகின்றன.

2.   தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் கி.மு. வில் வந்தது. படத்தை பார்த்த எல்லோருக்கும் தாகத்தை உணர வைத்திருப்பார் இயக்குனர் சிகரம். அது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர் என்று தேடி பார்த்தாலும் 105 டிகிரியின் கானல் நீரைத்தவிர வேறெதுவும் தென்படாது. வருடத்தின் 365 நாளும் மேன் Vs வைல்டு பியர் கிறில்ஸ் போல தண்ணீர் பாட்டிலுடன் அலைவது சாத்தியப்படாத ஒன்று.

3.   நம்ம வீட்ல ஒருத்தர் நான் தூங்கின பிறகு வந்துட்டு காலைல எந்திக்கிறதுக்கு முன்னாடி போறாரே? அவரு யாரு மம்மி?. அவர் தான்மா உங்க அப்பா. சிவில் இஞ்சினியரா வேல பாக்குறாரு.

இது ஏதோ மிகைபடுத்தபட்ட நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களும் விடுமுறையே இன்றி காலை ஏழு முதல் இரவு வரை சைட்டில் காலம் தள்ளும் அனைவரும் இந்த கேள்வியை அனுபவித்திருப்பார்கள்.

4.   Social Life’ என்று அழைக்கபடும் சமூக வாழ்க்கைக்கு சிறிதும் இடம் கொடுக்காத தொழில் இது. ஏன்? குடும்ப உறுப்பினரிடம் கூட நேரம் செலவிட முடியாது. உறவினரின் நல்லது கெட்டது என்று எதுவானாலும் கேள்விக்குறிதான். 90 சதவீத கட்டுமான பணிகள் நகரத்தின் எல்லைக்கு பல மைல் தொலைவில் அமைந்திருப்பதால் (சுற்றுப்புற சூழல் காரணமாக) ஒரு முறை வேலைக்கு சென்று வருவதற்கே நித்திய கண்ட பூர்ணாய்சாகிவிடுகிறது. வீட்டிற்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்குவதற்கே அல்லாத வேண்டியுள்ள நிலைமையில் மற்றவைக்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.

5.   முன்பு பார்த்த மென்பொருள் வேலையில் நானும் கம்ப்யூட்டர் பொட்டியும் சில எருமை மாடுகளுடன் (டேமேஜர்) அன்றைய பொழுது கழிந்துவிடும். ஆனால் இங்கு வந்த பிறகு ரெட்டேரி லாரி டிரைவர் முனியாண்டி முதற்கொண்டு நொய்டா பொது மேலாளர் தாஸ் வரை பாலோ அப் என்ற பெயரில் போனை போட்டு அவனுக்கு நமைச்சல் கொடுத்து பின் பன் வாங்குவது அலாதி எரிச்சல்.

6.   லஞ்சத்தின் புகலிடம் இந்தத்துறையே. நுழையும் வாயிலில் இருந்து வெளியேறும் கழிவு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்து ரூபாயிலிருந்து பத்து கோடி வரை. ஒரு டீயிலிருந்து கார் வரை கூச்சமின்றி பிச்சையெடுக்கிறார்கள். அதுவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நெற்றியில் திருநாம பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, சீசன் தவறாது மாலை, அன்னை தெரசா காந்தி போல அறிவுரை சஷ்டியை நோக்க’, ‘முருகனை கூப்பிட்டு என்ற மொபைல் ரிங்க்டோன்கள். அப்பப்பா இவர்கள் அட்ராசிட்டி தாளவில்லை.

7.   ஒருவேளை நீங்கள் ஹரிச்சந்திரன் போல் நேர்மை சத்தியம் நியாயம் என்று சூளுரைப்பவரா? இந்த தொழிலுக்கு சற்றும் லாயக்கில்லாதவராக அறியப்படுவீர்கள். விடுகிற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே இறக்க கடவது. நாளையே தாஜ்மஹால் கட்ட முடியுமா என்று கேட்டால், நாளைக்கு என்ன, இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள முயற்சி பண்றேன் என்ற சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கேட்டால், ட்ரைனிங் கொடுக்கறாராம். போடா ங்கோ....

8.   திட்டியவுடன் கோவம் வருகிறதா? சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா? இது போல் வேறு ஏதாவது, வெக்கம் மானம், சூடு, சுரணை இத்தியாதி என இருந்தால் தயவு செய்து அதை வீட்டில் வைத்துவிட்டு வரவும். அதையும் மீறி எடுத்து வந்தால் நாலாக மடித்து சட்டை பைய்யில் போட்டுக்கொள்ளவும். பின் விளைவுகள் விளக்கமுடியாதது. வஞ்சம் வைத்து காலை வாரும் ஓநாய் கூட்டம் இங்கு அதிகம்.

9.   உலகத்தில் ஏதோ எல்லா பெண்களுமே மாயமாய் மறைந்து ஆண்கள் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை தருவது. ஏற்கனவே ஆணாதிக்க மிக்க சமுதாயத்தில், சிறிதும் பெண்களை சீண்டாத அல்லது கருத்துக்கு மதிப்பு கொடுக்காத களம். அதிகமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பெண்களை கொண்டது இந்த கட்டுமானத்துறை. .

இவற்றை நினைத்து தினம் நொந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பூங்கா ஸ்டேஷன் சப்வேயில் நாள் முழுதும் நின்றுகொண்டு காலை நான்கு பத்து ரூபாய், மதியம் ஐந்து பத்து ரூபாய் இரவு ஆறு பத்து ரூபாய் என்று விற்கும் சமோசாக்காரனும், சேத்பட் ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பார்மில் இரவு வெறுந்தரையில் படுத்துறங்கும் நாடோடி மக்களும், சத்யம் தியேட்டர் அருகில் இருக்கும் உஷா அப்லயன்சஸ் கடைக்கு எதிரில் தார் ரோட்டில் கொசுக்கடியில் புட்டி பாலை குடித்து கொண்டே வெட்டவெளியில் தூங்க முயற்சிக்கும் கைக்குழந்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தட்டு தடுமாறி ரயில் பெட்டியை தடவிக்கொண்டே ஏறி இறங்கி கட்டை குரலில் ஒருவ்ர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டே மொபைல் கவர், டார்ச் லைட் என விற்கும் கண் தெரியாதவர்களும், காலை ஐந்து மணிக்கே பஸ் வசதியில்லாமல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மீஞ்சூரில் ரயிலை பிடித்து அத்திப்பட்டில் இறங்கி ஷேர்ஆட்டோவை பிடித்து வெறும் இருநூறு ரூபாய்க்கு சித்தாள் வேலை பார்க்கும் என் அம்மா வயதுடைய பெண்கள், அங்கேயே நான் மினரல் வாட்டரில் தண்ணீர் குடிக்கும்பொழுது டேங்கர் லாரியின் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்கும் மேஸ்திரி வரை ஒவ்வொருவரும் தலையில் குட்டி நிதமும் ‘You are Gifted’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.