திருநெல்வேலியில்
இருந்த வரைக்கும் தியாகராஜநகர் Dr ரவிச்சந்திரன்
தான் எங்களுக்கு பேமிலி டாக்டர். இந்த பேமிலி டாக்டர் என்ற கான்செப்டில் நமக்கு
எது அலர்ஜி என்று நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. 'உனக்கு இது செட் ஆகாதுப்பா' என்று அவரே வேறு மருந்து
பரிந்துரைப்பார். படித்து முடித்து வேலைக்கு சேர்ந்த புதிதில் என்றேனும்
காய்ச்சல் என்றால் உடனே அவருக்கு மொபைலில் விளிப்பேன். அருகில் இருக்கும் மருந்து
கடைக்கு போகச்சொல்லி சில மருந்துகள் பரிந்துரைப்பார். இரவு அந்த டோஸ் எடுத்த பின்
மறுநாள் காலை துலக்கி விட்டது போல் பளிச் என்று இருக்கும். ஏதோ புத்துணர்வு
கிடைத்தது போல். இப்பொழுது இந்த பேமிலி டாக்டர் கான்செப்ட் அருகிவிட்டது போல்
தெரிகிறது. காய்ச்சல் என்றால் இதுபோல தான் என்று வரையறுத்து வைத்திருந்தேன். இந்த
ஃப்ளு அட்டாக் செய்யும் வரை.

கடந்த
வாரம் ஊரே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான மும்முரத்தில் இருந்த போது கடுமையான
தலைவலி. மாலை மதி இறங்க இறங்க இங்கு தலையைப் பிய்த்துத் தூர எரியும் அளவுக்கு
சொல்லொண்ணா பாரம். அருகில் இருந்த டாக்டரிடம் சென்று காணித்த பொழுது 'இப்போ வர சீசன் பீவர் மாதிரி தான் தெரியுது.
மூணு நாளைக்கு மேல இருந்துச்சுன்னா டெஸ்ட் எடுத்துக்கலாம்' என்றார். இந்த மூணு நாள் டெஸ்ட்
கேட்டுப் பழகிப் புளித்துப்போன ஒன்று. என்றைக்குமே அடுத்தநாள் காய்ச்சல்
நிலைத்ததில்லை. ம்ஹ்ம் என்று உதறிவிட்டு பிட்டத்தில் ஒரு ஊசியை ஏற்றிவிட்டு வந்து
படுத்துறங்கிவிட்டேன். ஆவலாய் எதிர்பார்த்திருந்த அந்த 'வியர்க்கும் படலம்' வரவில்லை. பின்னிரவு தாண்டியது. அதிகாலை
புலர்ந்தது. ம்ஹ்ம். வியர்க்கவில்லை. ஆனால் சற்று வலி குறைந்த பாடு இருந்தது.
காலை
ஆகாரமாக கஞ்சியை குடித்தபின் மீண்டும் உடல்வலி படுத்தியெடுக்க மீண்டும் மருத்துவமனை.
ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு மீண்டும் அதே டயலாக்ஸ். 'சீசனல் காய்ச்சல். இட்லி சுகர். ரசம்
சாதம். மூணு நாள் டெஸ்ட். இன்ஜெக்ஷன்'. தேடிவந்தது அந்த இன்ஜெக்ஷனுக்குத்தானே என்று மீண்டும்
பிட்டத்தில் ஊசியேற்ற வைபவம். கெத்தாக காலரை மடித்து விட்டு வந்து
படுத்துறங்கியதில் வேர்த்திருந்தது. 'சின்ராசை இனி கைலேயே பிடிக்கமுடியாது' என்று நினைத்தால் அன்று மாலையே மீண்டும்
சொல்லொண்ணா தலைவலி. உடல்வலி. தொண்டை கமருகிறது. இருமல். மூக்கு ஒழுகுதல். நெஞ்சில்
வலி. மீண்டும் மருத்துவமனை. அதே டையலாக். அதே அதே. மற்றுமொரு முறை ஊசி. இரவு சற்று
வேர்த்திருந்தது.
மூன்று
ஊசிக்கு கீழ்படியாத காய்ச்சல் என்றவுடன் கொஞ்சம் கிலியாக இருந்தது. நண்பனை
அழைத்தேன். 'அடேய்.
இது வைரல் பீவர். நீ தலைகுப்புற நின்னாலும் மூணு நாளு இருக்கும். மூடிட்டு படு.
மூணு நாளைக்கப்புறம்', இடைமறித்து
'என்ன டெஸ்ட்
எடுக்கணும் அதானே' என்றேன்.
'தெரிதுல. ஃப்ளு
காய்ச்சல் அப்டித்தான் இருக்கும்' என்று
தேத்திவிட்டான்.
நண்பன்
கூறியது போல விருந்துக்கு வந்த சொக்கார் போன்று மூன்று நாட்கள் குத்த வைத்து தான்
கிளம்பியது. மூன்று நாட்கள் மேலேயும் காய்ச்சல் தொடர்ந்திருந்தால் டெஸ்ட் எடுத்து
பார்த்து என்ன காரணத்திற்க்காக இன்பெக்ஷன் என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார்
போன்ற antiviral கொடுப்பார்கள்
போல. நாம் அடிக்கடி விழுங்கும் amoxy cefi போன்றவை antibiotics வகையறாக்கள். பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றை இவை
பெரும்பாலும் சரி செய்துவிடுகிறது. ஆனால் வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட anitviral
தேவைப்படுகிறது.
இதில் ஒரு பியூட்டி என்னவென்றால் மூன்று நாட்களுக்குள் நம் உடலில் எதிர்ப்புசக்தி
உண்டாகி அதுவே வைரஸை அழித்து விடுகிறது. அல்லது வலுவிழக்கச் செய்கிறது. அதையும்
தாண்டி வைரஸ் 'வந்து
பார்' என்றால்
நாம் உஷாராகி விட வேண்டும். டெங்கு, கொரோனா போன்று ஏதாவது ஒன்றாக
இருக்கலாம். அதீத கவனம் தேவை.
தொற்று
ஏற்பட்டவுடன் என்ன செய்யவேண்டும்? திரவ
உணவுகள், பாராசிட்டமால்,
தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற இத்யாதி சைட்
எபெக்ட்ஸ்களுக்கு டாக்டர் பரிந்துரைக்கும் antibiotics. முக்கியமாக முழு ஒய்வு. பாராசிட்டமாலில்
dolo 650 தான்
வேலைக்கு ஆகிறது. மற்ற பேர்களில் வருகிற பாராசிட்டமால் எனக்கு ஒர்கவுட் ஆகவில்லை.
அதுவும் கால்பால். நோ யூஸ்.
எல்லாம்
சரி. எவ்வாறு தொற்று ஏற்படுகிறது? கொரோனா
காலத்தில் நாம் கற்றுக்கொண்ட அதே தனிமனித இடைவெளிதான். பாதிக்கப்பட்டவரின் தும்மல்,
இருமல், கண்ணீர் போன்ற நீர்த்திவலைகள் மூலம்.
சீசனல் நேரங்களில் ஆவது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது. நோய் எதிர்ப்பு
சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நலம். குழந்தைகள்
மற்றும் முதியவர்களை இது மிகவும் பாடாய்ப்படுத்திவிடும்.
வைரசுக்கு
எதிரான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.