வியாழன், மார்ச் 23, 2023

Wild Dog & The Ghost

இரண்டுமே நாகர்ஜுனா படம். 

புனே ஜேர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு, ஹைதராபாத் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சில துர்சம்பவங்கள் தொடர்பான தீவிரவாதியை பிடிக்கும் கதை தான் வைல்ட் டாக். கிட்டத்தட்ட உண்மைக்கு அருகிலேயே படத்தை எடுத்துள்ளதினால் உறுத்தவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பு தான். முதல் காட்சியிலிருந்தே கதைக்குள் வந்துவிடுகிறார்கள். பாடல் கிடையாது. கதை பல இடங்களில் பயணிப்பதால் லொகேஷனுக்கு பஞ்சமில்லை. பிரெஷாக இருக்கிறது. இறுதியில் கொஞ்சம் சொதசொதவென்று இருந்தாலும் தாராளமாக பார்க்கலாம். ஆறு கோடியில் படத்தை எடுத்திருக்கிறாரக்ள் என்பது ஆச்சர்யம் தான்.

Ghost படமும் இதே ரகம் தான். என்ன? wild dog படத்தில் ஒரு பொறுப்பான நார்கோடிக் அதிகாரியாக வருகிறார். ஆனால் Ghost படத்தில் freelancer டைப். செம ஸ்டைலிஷ் டைப் மூவி. முதல் காட்சியிலிருந்தே அதகளம். துப்பாக்கி வெடிப்பதென்ன தோட்டாக்கள் பறப்பதென்ன. லாஜிக் மீறல்கள் அதிகம். இருந்தாலும் விசுவல் ட்ரீட் தான். இறுதி காட்சியில் பாகுபலி படத்தையே மிஞ்சும் அளவுக்கு வாள் வீச்சு. தலை உடல் என எல்லாமே இரண்டு துண்டங்களாகி ரத்தம் தெறிக்க விழுகின்றன. துபாய், ஊட்டி என படக்காட்சிகள் கண்களுக்கு விருந்து. 


இரண்டு படத்திலுமே மிகவும் ரசித்தது நாகர்ஜூனாவைத்தான். 63 வயசு. நம்பவே முடியவில்லை. இன்றைய சினிமா உலகில் 63 வயதிலும் விக் இல்லாமல் நடிக்கும் ஒரே இளைஞன் நாகர்ஜூனா தான். ஓடுகிறார். மலையில் உருண்டு தலைகுப்புற விழுந்து சண்டை போடுகிறார். கூலர்ஸ் கோட் சகிதம் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். இந்த வயதிலும் ஒரு லிப் லாக் சீன். அடேங்கப்பா. பார்க்கும் நமக்கு கூட உறுத்தல் இல்லை. அவ்வளவு இளமையாக இருக்கிறார். சிவா படத்தில், கீதாஞ்சலி படத்தில் நாகர்ஜுனா எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்பவும் இருக்கிறார். உண்மையான மார்க்கண்டேயர் !!!

இரண்டுமே ஸ்டைலிஷான படங்கள். கூடவே நாகர்ஜூனாவின் இளமைக்காக சார்மிங் லுக்குக்காக தாராளமாகப் பார்க்கலாம். 


செவ்வாய், மார்ச் 14, 2023

வதந்தி


வதந்தி வெப்சிரிஸ். கொஞ்சம் தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. தாமதமான முடிவு என்றாலும் தரமான ஒன்று தான்.

என்னுடைய பார்வையில் சில கண்ணோட்டங்கள். No Spoilers

1. எஸ்.ஜே.சூர்யா. 1986இல் வாசுதேவநல்லூரிலிருந்து நடிக்க வந்த இளைஞன். அவரை நமக்கு ஒரு இயக்குனராகத்தான் தெரியும். சொல்லப்போனால் இயக்குனர் கம் நடிகர். ஆனால் அவர் இண்டஸ்ட்ரிக்கு வந்த முதல் காரணமே நடிக்கத்தான். வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. பாண்டியராஜனின் நெத்தியடி, கிழக்குச்சீமையிலே போன்ற படங்களில் ‘அன்கிரெடிட்டட் ரோல்’ என்று சொல்லப்படுகின்ற ஒரு நிமிட வேடம் தான் கிடைத்தது. நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தன்னை இண்டஸ்ட்ரியில் நிருபித்த பிறகு ஒரு நடிகனாக பரிமளிக்கலாம் என்று முடிவு செய்தார். இயக்குனர் அவதாரம் எடுத்தார். ‘ஆசை’ படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த காரணத்தினால் அஜித்திடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுதான் ‘வாலி’. அதன் பின்பு வந்த ‘குஷி’ தமிழ் சினிமாவில் ஒரு வரலாறு. தமிழில் வெளிவந்து ஹிட்டடித்து பின்பு அதே படம் தெலுங்கில் ரீமேக், பின்பு ஹிந்தியில் என இரண்டாம் படத்திலேயே பாலிவுட் வரை சென்றார். இப்பொழுது சூர்யா என்ற நடிகன் வெளியே வருகிறார் ‘நியூ’ படம் மூலமாக. பின்பு அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி என நடிப்பும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு மெருகேரியது. சிம்ரன் இவருடன் நடிக்கவில்லை என்பதனால் அவரைப்போன்று உருவத்தோற்றம் கொண்ட மீரா சோப்ராவை (நிலா) வம்படியாக நடிக்க வைத்தார். பாலச்சந்தர் ரஜினியை போன்று உருவாக்கி காட்டுகிறேன் என்று ராகவா லாரன்ஸை 'பார்த்தாலே பரவசத்தில் நடிக்க வைத்தது போல. இடையில் இரு தலைக்கொள்ளி எறும்பாக இயக்குனர் மற்றும் நடிகர் என இரு குதிரைகளில் பயணம் செய்து தடுமாறிக்கொண்டிருந்தவரை மீட்டெடுத்தது ‘இறைவி’ படம். தேசிய விருதுக்கானப் பரிந்துரை. இதுதான் பாதை என்று தீர்மானித்து தன்னை ஒரு நடிகனாக செப்பனிட்டுக்கொண்டிருக்கிறார்.




அந்த நடிகன் மிளிர்கிற இடம் இந்த ‘வதந்தி’ வெப்சீரிஸ். முதல் எபிசொடிலிருந்து இறுதிவரை எஸ்.ஜே.சூர்யாதான். பதற்றம், கோபம், இயலாமை, மிரட்டல், காதல், இரண்டு மூன்று இடங்களில் மோனோ ஆக்டிங் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் இந்த மகா நடிகன். 54 வயது என்றெல்லாம் சொல்லவே முடியாது. சார்மிங். 

2. திரைக்கதை. எட்டு எபிசோட். முதல் காட்சியிலேயே கொலை. இறுதிவரை அதாவது கிட்டதட்ட ஆறு மணிநேரம் பார்வையாளனை யூகிக்க வைக்க முடியாமல் காட்சிக்கு காட்சி பதைபதைப்பையும் கூட்ட வேண்டும், அதே சமயம் ஆரவத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு மணி நேர சினிமாவிலேயே அலுப்புதட்டிவிடும் நமக்கு ஆறு மணி நேரங்கள் கடந்ததே தெரியவில்லை. நிச்சயமாக சினிமாவை விட இதுபோன்ற வெப்சீரிசை கொண்டாடித்தீர்த்தே ஆக வேண்டும். அவ்வளவு சுவாரஸ்யமான திரைக்கதை. வாழ்துக்கள் ஆண்ட்ரூ லூய்ஸ். இரண்டு சினிமாக்கள் எடுத்துவிட்டார். ஒரு வெப் சீரிஸ் முடித்திருக்கிறார். இன்னும் இவருக்கு ஒரு விக்கி பேஜ் இல்லாததை தமிழ் கூறும் நல்லுலகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3. முதல் எபிசோடிலேயே இறந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு இனிமேல் நடிக்க ஸ்கோப் இல்லையோ என்று நினைத்தால், படுஏமாற்றம். நான் லினீயராக விரியும் திரைக்கதையில் சூராய்வுக்கு அடுத்தபடியான ஸ்கோப் சஞ்சனாவிற்கே. ஒரு டீன் ஏஜ் பெண்ணாக எல்லா உணர்வுகளையும் உள் வாங்கி அசாத்தியமாக முகத்தில் வெளிப்படுத்துகிறார். வெலோனி இறந்த முதல் எபிசோட் முதற்கொண்டு இறுதிவரை அந்தப் பெண்ணின் ஒழுக்கம் கேள்விக்குறியாகிக்கொண்டே இருக்கிறது. வதந்தியின் வெப்சீரிசில் இருக்கும் கதை மாந்தர்கள் மட்டுமல்ல, பார்க்கும் நாமும் அவளை சந்தேகிக்கிறோம். ‘Character assassination’ என்பது எவ்வாறு நடக்கிறது என்பதற்கு இந்த வெப்ஸீரிஸ் எழுதியிருக்கும் என்னையும் வசிக்கும் உங்களையும் சேர்த்து ஒரு சமுதாய பிரதிபலிப்பு.

4. வெலோனியை கொன்றது இவன்தான் என ஒருவனை வைத்து கேசை முடிக்கிறது காவல் துறை. ஆனால் அது உண்மையல்ல என்று நம்புகிறார் சூர்யா. வெலோனியை கொன்றது யார் என தலையைப் பிய்த்துக்கொள்கிறார். அவருடன் நாமும். காட்சிகள் கடத்தும் உணர்வில் தொய்வில்லை. ஐந்தே முக்கால் மணி நேரம் வரை யார் செய்திருப்பார்கள் என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை. இறுதி பதினைந்து நிமிடத்தில் தான் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி யார் எனத்தெரியவருகிறது. இப்படி ஒரு காரணத்திற்காக கொலையா என்ற கேள்வி எழாமலில்லை. Plot with a twist என்ற ஜானரில் இதை ஷமிக்கலாம்.

5. எஸ்.ஐ. ராமராக வரும் விவேக் பிரசன்னா பாடு கட்சிதமான தேர்வு. மிக சீரியசாக செல்லும் கதையில் அவரிடமிருந்து சட்டிரிக்கல் (satirical) வசனங்கள் வெளிப்படுவது ஒரு ஆறுதல்.

6. ‘என்ன சொல்லுதீவோ’ என கன்னியாகுமாரி பேச்சுவழக்கில் ஈர்க்கிறார் சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட்.

7. குளப்புலி லீலா ஒரு முக்கிய கதாப்பத்திரத்தில் வருகிறார். ‘அண்ணாத்தவில்’ தன்னை விட வயது முதிர்ந்த ரஜினிகாந்துக்கு பாட்டியாக நடித்த கோபம் போகவில்லை போலும். கடுகடு வென்று தானிருக்கிறார்.

8. சென்செஷனல் சேதி தான் வேண்டும் என்று துடியாய் துடிக்கும் பத்திரிக்கை ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பேரடி ‘நச்’ பொருத்தம்.

9. கதைமாந்தார்கள் மட்டுமல்லாமல் மேன்சன், காடு, சூர்யாவின் ஜிப்ஸி ஆகியவையும் கதாபாத்திரங்களாக மிளிருகின்றன.

அரை நாள் செலவு செய்து தாரளாமாக பார்க்கலாம்.

#Vadhandhi #VadhandhiTheFableOfVelonie #VadhandhiOnPrime #SJSurya #sanjanakrishnamoorthy #andrewlouis #PushkarGayathri

ஞாயிறு, மார்ச் 12, 2023

இரட்ட

 

ஜோஜு ஜார்ஜின் நடிப்பா இல்லை எம்.ஜி.கிருஷ்ணனின் திரைக்கதையா என்று எதைச்சொல்ல? இரட்ட படத்தின் வெற்றிக்கு. 

வேகமான் போலீஸ் ஸ்டேஷன் அமைச்சர் ஒருவரின் வருகைக்காக தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த தருணத்தில் ஒரு காவலர் அங்கே  இறந்துவிடுகிறார்.  மூன்று குண்டடிபட்டு. அவரின் மேல் வன்மம் கொண்ட மூன்று காவலர்களின் மேல் சந்தேகம் வலுக்கிறது. SP மற்றும் அமைச்சர் அங்கு நேரே வந்துவிட, இறந்ததற்கான காரணம் என்ன என்று தெரிந்து கேஸை முடிக்க அங்குள்ள காவலர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் நமக்கும் ப்ரெஷர் ஏறிவிடுகிறது. 



இறந்து போன ASI  காவலராக மற்றும் அவரின் அண்ணன் DSPயாக ஜோஜு ஜார்ஜ் இரட்டை வேடம். விசாரணை செல்லும் கோணத்திலேயே கதையும் விரிகிறது. ASI காவலருடைய பின்னணி, டிஸ்பியின் பின்னணி, இவர்கள் இரண்டு பேர் மற்றும் பெற்றோரின் பின்னணி, சந்தேக வட்டத்திற்குள் இருக்கும் அந்த மூன்று காவலர்கள் மற்றும் அவருக்கும் ASIக்கும் இடையிலான grudge என ரேஷமோன் பாணியில் திரைக்கதை கிளை பரப்பிச் செல்கிறது. இரண்டு மூன்று நடிகர்களைத்தவிர அனைவருமே அதிகம் பரிச்சயப்படாத புது முகங்கள். அவ்வளவு யதார்த்தம் நடிப்பிலே. 

இறுதியில் அவர் ஏன் இறந்தார் என்ற காரணம் தெரியவரும்போது DSP மட்டுமல்ல நமக்கும் மெல்லிய சோகம் கலந்த அதிர்ச்சி ஏற்படுகிறது. 

மற்றுமொரு தரமான மலையாள சினிமா. 

கொசுறு: கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என்று நடிப்பில் வெரைட்டி காட்டி பின்பு சரியான வழிகாட்டுதல் இன்றி நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை விட்டு கொடுத்துவிட்ட அஞ்சலி இரட்ட படத்தில் இன்னதென்று புரியாத ஒரு சிறு கேரக்டரில். நெஞ்சு பொறுக்குதில்லையே !!! 

புதன், மார்ச் 08, 2023

சின்னக்கிளி குட்டியப்பன்

 

சோர்ந்து இருக்கும் நேரத்தில் ஒரு சிறு கோப்பை தேநீர் வழங்கும் உற்சாகத்தை போன்றது சிறு கதை வாசிப்பு. இத்தனை இக்கட்டுக்கள் நடுவிலும் நம்மை அயராது ஓட வைத்திருப்பது நல்ல எழுத்துக்கள் மட்டுமே.

கடந்த வார விகடனில் வெளியாகியிருந்த சிறுகதை அதுபோன்றதொரு உற்சாகத்தை நல்கியது. கதையின் பெயர் சின்னக்கிளி குட்டியப்பன். ஆசிரியர் ராஜேஷ் வைரபாண்டியன்.

கதையின் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அப்படித்தான் கதையும் என்னை அதனுள் இழுத்தது.  நான்கே நான்கு பக்கங்கள் தான் கதை. ஆனால் அதற்குள் மூன்று பெரும் வாழ்வுகளை அநாயசமாக கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.



குழந்தை இல்லாத ஒரு ஆச்சியும் தாத்தாவும் தன் அண்ணனின் கடைக்குட்டியை சுவீகரித்து வளர்க்கின்றனர். ஆச்சியின் அரவணைப்பில் தாத்தாவின் கதகதப்பில் அந்த குழந்தை குட்டியப்பனாக வளர்ந்து குடிக்கு அடிமையாகி நான்கு குழந்தைகளை பெற்று பின் வீட்டில் இருந்து ஒரு நாள் காணாமல் போய் இறந்துவிடுகிறது. தன் குழந்தையை எதிர்நோக்கி படுக்கையில் காத்திருக்கும் ஆச்சியும் சேதியறிந்து இறந்துவிடுகிறாள். இதான் கதை.

கதை மாந்தர்களாக ஆச்சி, தாத்தா, குட்டியப்பன், மனைவி, அவள் அம்மா, நான்கு குழந்தைகள் (இருவாச்சி), ஆலமரம், முட்டைகோஸ், ஏனிப்படி முட்டாய், முந்திரிக்கொத்து, கொடிமுல்லை என்ற கண்ணுக்குட்டியும் அதன் அம்மா பசுவும், கோழிக்குஞ்சுகள் மற்றும் ஒரு அண்டங்காக்கை. இவை அனைத்தும் அந்த கதையில் வெறுமனே இடம்பெறாமல், கதையின் ஒரு அங்கமாக இருப்பதுதான் அதுவும் அந்த நான்கு பக்கத்துக்குள் ஒரு தாக்கத்தை கொண்டுவருவது, அதுவும் வலிந்து திணிக்காமல் வார்த்திருப்பதுதான் இந்த கதையின் சிறப்பு.

கிராம சொலவடை நம்மை அந்த சூழலுக்கே அழைத்துச்சென்று விடுகிறது.

குட்டியப்பனுக்கு ஆச்சியை தாத்தவை விட அதிகமாக பிடிக்கும். இனிஷியலை சி. என்று மாற்றிக்கொள்கிறான். சின்னக்கிளி என்பது அந்த ஆச்சியின் பெயர். ஏலே, என் பேரதாம்ல நீ இனிஷியலா போட்டுக்கணும் என்று தாத்தா சொல்லவும், நீ என்ன செஞ்ச? சிலோனுக்கும் ஊருக்கும் அலைஞ்ச. எனக்கு பீ மூத்திரம் அள்ளிபோட்டது சின்னக்கிளி தானே என்கிறான் குட்டியப்பன். நியாயம் தானே. உழைத்துக்கொட்டினாலும் உருவாக்கி வளர்ப்பது என்னமோ அம்மா தான். ஆறே ஆறு வரிகள் தான். இதையே மேடை போட்டு பேசியிருந்தால் பெண் சுதந்திரம், சம உரிமை என்று சென்றிருக்கும். ஆனால் வெறும் ஆறே ஆறு வரியில் அதுவும் நெருடலில்லாமல் கதையின் போக்கில் கருத்தை செருகி வைத்த ஆசிரியரின் ஆளுமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆச்சிக்கு எங்கு சென்றாலும் இனிப்பு வாங்கி வருகிறான். ஒருமுறை வீட்டிற்கு வரும்போது முந்திரிக்கொத்தை கொடுத்துவிட்டு அவள் காலை தன் மடியில் எடுத்து வைத்து பிடித்து விடுகிறான். அப்பு, எனக்கெதுக்குப்பா, உன் கடைக்குட்டி இருவாச்சிக்கு இது ரொம்ப பிடிக்கும்லா. அவளுக்கு கொடு என்கிறாள்.  ஆச்சிக்கும் கொடுத்துவிட்டு ஆலமரத்துக்கடியில் விளையாடும் தன் குழந்தைகளுக்கும் பிய்த்துக்கொடுக்கிறான். கொடிமுல்லை தலை ஆட்டுகிறது. உனக்கு இல்லாமலா, இந்தா என்று அதற்கும் பிய்த்து கொடுக்கிறான். கதை முழுவதும் இது போல வாஞ்சை விரவி கிடக்கிறது.

ஒரே வருத்தம் தான். இன்னும் சற்று பெரிய கதையாக இருந்திருக்கலாமோ என்று. அது தான் அந்த சிறுகதையின் மகத்தான வெற்றி.

வாழ்துக்கள் ராஜேஷ் வைரபாண்டியன்.

 

ஞாயிறு, மார்ச் 05, 2023

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்கிற வார்த்தை சமீப காலமாக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்வதென்றால், எதிர்கால சந்ததியை மனதில் வைத்துக்கொண்டு நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையங்கள் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மாறாக சூரிய ஒளி, காற்று மற்றும் கடல் அலைகள் மூலம் எரிசக்தியை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.



இவர்கள் குறிப்பாகச்சொல்வது 'கார்பன் உமிழ்வுகளை'. பெட்ரோல் டீசல் உபயோகப்படுத்தும் அனைத்து வாகனங்கள் இதில் குறிவைக்கப்படுகின்றன. நிலக்கரி உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் யுக்தியை படிப்படியாக கைவிட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. புரியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 4 லட்ச மெகாவாட்டில், 2.75 லட்ச மெகாவாட்டை உமிழ்ந்து கொண்டிருக்கும் அனல் மின் நிலையங்களை அணைத்து வைக்க சொல்கிறார்கள். இவற்றை விடுத்து சோலார், காற்று, கடல் அலைகள், நீர் மின் நிலையம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். 2030 க்குள் 50 சதவீத உற்பத்தி இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மட்டுமே தயாரிக்கப்படும் என்று பாரிசில் கையெழுத்தாகி விட்டது.

ஒருவேளை அனைத்து வாகனங்களையும் EV ஆக மாற்றினால், அவை அனைத்திற்கும் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட்கள், பெருகி கொண்டிருக்கும் ஜனத்திரளுக்கான மின் தேவைகள் என  அதற்கான மின் உற்பத்தி கட்டுமானத்தில் நாம் வலுப்பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. இவற்றையெல்லாம் 2030 க்குள் எப்படி செய்யப்போகிறோம் என்பது நமக்கு முன் நிற்கும் ஒரு மிகப்பெரிய கேள்வி.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் சக்தி என்ற தத்துவம், வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீது பெருத்த நிதிச்சுமையைத்தருகிறது என்று ஆப்பிரிக்க கண்டத்தின் உள்ள ஒரு நாட்டின் பிரதமர் அறைகூவல் விடுக்கிறார். கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முடிந்தவரை எரிசக்தியை உபயோகித்துவிட்டு இவர்க ஒப்பந்தம் போடா வளரும் நாடுகளை குறி வைக்கும் பொழுது தான் அசதியளிக்கிறது.

சரி, நமது நாட்டில் நாம் எந்த அளவுக்கு இந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேறியிருக்கிறோம் என்று பார்க்கலாமா?

இந்தியா உலகின் மின்சார நுகர்வோர் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் உலகின் 3வது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர் ஆக விளங்குகிறது. 2022 ஆம் ஆண்டு வரையில் 40% ஆற்றல் திறன் (400 GW இல் 160 GW) புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து வருகிறது. நவம்பர் 2021 இல், சூரிய சக்தி (48.55 GW), காற்று (40.03 GW), சிறிய நீர் சக்தி மின்சாரம் (4.83 GW), இயற்கை எரிவாயு (10.62 GW), பெரிய நீர் சக்தி மின்சாரம் (46.51 GW), ஆகியவற்றை உள்ளடக்கிய 150 GW இன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை இந்தியா கொண்டிருந்தது. மற்றும் அணுசக்தி (6.78 GW). 2030 ஆம் ஆண்டிற்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் நம்மை பெருமைப்பட வைத்திருக்கிறது.

சூரிய ஒளி, காற்று மற்றும் ஆற்றில் இருந்து ஓடும் நீர்மின்சாரம் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு உகந்த மலிவான மின்சார ஆதாரங்கள் ஆகும் என்பதில் நமக்கு எந்த மாற்று கருத்தும் இருக்கப்போவதில்லை. இந்தியாவில் தினசரி உச்ச தேவையில் (Peak Demand) சில ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க மின் சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு நல்ல செய்தியாகும். 4 மணி நேர பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் அதிக செலவினங்கள் இல்லாத ஒரு வகை மின் உறப்த்தியாகும். இந்தியா மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக மக்கள்தொகையில் 17% ஆகும். ஆனால் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்தி நுகர்வில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தியின் நிறுவப்பட்ட திறன் 30 நவம்பர் 2022 நிலவரப்படி 119.512 GW ஆகும். 2017 மற்றும் 2022க்கு இடையில் வரக்கூடிய பல்வேறு கட்ட கட்டுமானத்தின் கீழ் 50 GW க்கு மேல் புதிய நிலக்கரி அடிப்படையிலான திறன் சேர்க்கை தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க நான் முன்னரே கூறிய பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவுபடுத்த நம் அரசாங்கம் முழு முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கான சான்றாகும்.

இந்தியா அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது மற்றும் அதிக சோலார் ஆற்றல் அறுவடை செய்ய ஏதுவான பூகோள ஏற்பு உள்ள ஒரு நாடாகும். இது இந்தியாவில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான சிறந்த கலவையாகும். காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு தேசிய சோலார் மிஷன் தொடங்குவதற்கு இந்திய அரசு நவம்பர் 2009 இல் முன்மொழிந்தது. 2022 ஆம் ஆண்டுக்குள் 20GW கிரிட் திறன் மற்றும் 2GW ஆஃப்-கிரிட் நிறுவல்களை இலக்காகக் கொண்டு, 11 ஜனவரி 2010 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த திட்டம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இலக்கு பின்னர் அதே தேதியில் 100 GW ஆக அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் 2015 யூனியன் பட்ஜெட்டில் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்த தேசிய சோலார் மிஷன் இலக்கை அடைய திட்டம் வைத்துள்ளது. நேஷனல் சோலார் மிஷன் "சோலார் இந்தியா" என்ற அதன் பேச்சுவழக்கு பெயரால் விளம்பரப்படுத்தப்பட்டு அறியப்படுகிறது. 2013 ஆம் ஆண்டிற்குள் 1,000 மெகாவாட் மின்சாரத்தை நிறுவுவதும், 2022 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட பணியின் முடிவில் சேகரிப்பாளர்களுடன் அமைப்பதும் இந்த பணியின் முந்தைய நோக்கங்களாகும்.

நவம்பர் 30, 2015 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே ஆகியோர் சர்வதேச சூரியக் கூட்டணியைத் தொடங்கினர். இந்தியாவின் லட்சிய சோலார் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு US$350 மில்லியன் நிதியை அமைத்துள்ளது மற்றும் யெஸ் வங்கி சூரியசக்தி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக US$5 பில்லியன் கடனாக வழங்கியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிலைகளுக்கு 115 ஜிகாவாட் சேர்ப்பதற்கான ஏல செயல்முறை 2019-2020 இறுதிக்குள் நிறைவடைந்தது.

கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள உலகின் முதல் மற்றும் 100% சூரிய சக்தியில் இயங்கும் விமான நிலையத்தையும் இந்தியா கொண்டுள்ளது என்பது உலக நாடுகளை நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அஸ்ஸாமின் குவாத்தியில் முழுவதும் 100% சூரிய சக்தியில் இயங்கும் ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் கேரளாவின் வயநாட்டில் உள்ள பாணாசுர சாகர் நீர்த்தேக்கத்தில் கட்டப்பட்டது.

30 ஜூன் 2018 நிலவரப்படி, இந்தியாவில் காற்றாலை மின்சாரத்தின் நிறுவப்பட்ட திறன் 34,293 மெகாவாட் ஆகும். முக்கியமாக தமிழ்நாடு (7,269.50 மெகாவாட்), மகாராஷ்டிரா (4,100.40 மெகாவாட்), குஜராத் (3,454.30 மெகாவாட்), ராஜஸ்தான் (2,784.90 மெகாவாட்), கர்நாடகா (2,784.90 மெகாவாட்), 2,318.20 மெகாவாட்), ஆந்திரப் பிரதேசம் (746.20 மெகாவாட்) மற்றும் மத்தியப் பிரதேசம் (423.40 மெகாவாட்) என காற்றாலை மின்சாரம் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் 10% ஆகும். 2022-க்குள் காற்றாலை மூலம் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

நவம்பர் 2020 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 7.4 ஜிகாவாட் (இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 3.11%) நிறுவப்பட்ட திறன் கொண்ட 7 அணுமின் நிலையங்களில் 10 அணு உலைகளும், 8 ஜிகாவாட் திறன் கொண்ட 10 அணு உலைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன. நிலக்கரி, நீர்மின்சாரம், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் எரிவாயு சக்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஐந்தாவது பெரிய மின்சார ஆதாரமாக அணுசக்தி உள்ளது.

நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முழுமையாக மாறுவதற்கு எவையெல்லாம் தடைக்கல்லாக இருக்கின்றன என்பதனை பார்க்கலாம்.

அதிக ஆரம்ப செலவு: நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆரம்ப முதலீடு சுமார் ஒரு மெகாவாட்டிற்கு 4 கோடிகள், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான முதலீடுகள் மிக அதிகம். 25% திறன் பயன்பாட்டுடன் கூடிய காற்றாலை மின் நிலையத்திற்கு ஒரு மெகாவாட்டிற்கு 6 கோடி. 80% திறன் பயன்பாட்டிற்கு, ஆரம்ப முதலீடு ஒரு மெகாவாட்டிற்கு ரூ.18 கோடி ஆகும். 15% திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு ரூ. 18 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

வானிலை சார்ந்தது: சூரிய, காற்று, அலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வானிலை நிலையைச் சார்ந்தது. சாதகமான வானிலை இல்லை என்றால், அது திறமையற்றதாகவும் சாத்தியமற்றதாகவும் மாறும்.

இடம்: பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகள் பெரிய அளவிலான இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இது பரந்த நிலப்பரப்பின் விலை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிற சிக்கல்களைக் கொண்டுவருகிறது.

காற்றாலை ஆற்றல் தொழில்நுட்பத்தின் குறைபாடுகள்: விசையாழிகள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன மற்றும் செயல்படும் போது பறவைகளையும் கொன்று வருகின்றன.

நீர்மின் நிலையங்களின் விளைவுகள்: அணைகள் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடத்தை அழித்து அவற்றின் இடம்பெயர்வு முறையையும் தடுக்கிறது. அவை வண்டல் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இயக்கத்தையும் குறைக்கின்றன, இது வெள்ளப்பெருக்கு மற்றும் டெல்டாக்களை பாதிக்கிறது.

இந்தியா கவனம் செலுத்த வேண்டிய பகுதி. புதுப்பிக்கத்தக்க பொருட்களின் அதிகரிப்பை மேம்படுத்த, சேமிப்பு மற்றும் பேட்டரி தீர்வுகள் பெரிய அளவில் தேவைப்படுகின்றன.

நிலையான + 24 மணி நேர மின்சாரம் + சேமிப்பு அமைப்பு = பெரும் சவால்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியிலிருந்து பசுமை இல்ல வாயு உமிழ்வை இடமாற்றம் செய்து அதன் மூலம் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முக்கிய ஆற்றலைக் கொண்டுள்ளன.

பல நாடுகளின் சமீபத்திய தேசிய கொள்கைகள், உத்திகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் மையமாக நிலையான வளர்ச்சி உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித்திறனுக்கும் வழிவகுக்கும் மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக நமது அன்றாட வாழ்வில் ஆற்றல் தேவை. புதுப்பிக்கத்தக்கவை காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவும் ஒரு சிறந்த வழியாகும், ஆனால் தலைமுறைகள் தங்கள் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்ய நிலையானதாக இருக்க வேண்டும்.