வடசென்னை
முதல் பாகம் ரீலஸ் ஆன பின் இரண்டாம் பாகம் தொடங்கும்பொழுது, படக்குழுவிற்கு,
முக்கியமாக வெற்றிமாறன் மற்றும் தனுஷிற்கு வடசென்னை ஹேங்க் ஓவர்
ஏற்பட்டிருக்கிறது. அந்த காரணத்திற்காகவே, அதாவது ஒரு
சேஞ்சுக்கு, இவர்கள் எடுத்துள்ள படம் தான் அசுரன்.
அடேய்!!!. ஒரு சேஞ்சுக்கு இப்படி ஒரு அவார்ட்
படம்னா....
பன்னிரெண்டு
வருடங்களில் வெற்றிமாறன் இயக்கிவுள்ள படங்கள் 5 மட்டுமே. அதில் நான்கு தனுஷ்
நடித்தது இல்லை இல்லை வாழ்ந்தது. மீதம்
ஒன்று தனுஷ் தயாரித்தது. ஐந்துமே தரமான சம்பவங்கள்.
நாவலை
படமாக எடுத்து நல்லபேர் வாங்கிக்கொண்டதில் மலையாள திரையுலகம் முதலிடம். தமிழில்
அவ்வாறு வெற்றி கண்ட இயக்குனர்களை, படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என் நாவலை திரைப்படமாக எடுத்து
கற்பழித்தது போதும் என்று கைகூப்பி கும்பிட்டுள்ளார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்).
அந்த வகையில் நாவலின் கரு சிதையாமல் அதை
படம்பார்க்கும் ரசிகனுக்கு ஏற்றார் போல் திரைகதையாய் மாற்றி,
வணிக ரீதியாகவும் வெற்றியபெற தேவையான இத்யாதிகளை சேர்த்து தன்னை ஒரு முத்திரை
இயக்குனராய் தகவமைத்துக்கொண்டதில் வெற்றிமாறன் இயல்பாகவே வெற்றிபெற்றுவிடுகிறார். ‘Red
tea’ நாவல் பரதேசியாய் மாறியது ஒரு முன்னுதாரணம்.
நாவலாசிரியர்
பூமணிக்கு அபரிமிதமான சந்தோஷம் ஏற்பட்டிருக்கலாம். தன் கற்பனையில் மட்டுமே கதாநாயகனின்
எழுச்சியை கண்ட எந்தவொரு எழுதாளனுக்கும் அதை மேலும் மெருகேற்றி வெள்ளித்திரையில் காணும்பொழுது
மயிர்க்கூச்செறிந்து புளகாங்கிதம் அடைவதில் ஆச்சரியம் அல்லவே.
கதாபாத்திரம்
வெகுண்டெழுந்த காரணத்தினால் மட்டும் இப்படத்திற்கு அசுரன் என்ற பெயரை காரணமாக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.
நடிப்பு அசுரன் என்று சொன்னாலும் இந்த பெயர் சாலப்பொருந்துகிறது. விதை, செல்வராகவன் கையினால் புதுபேட்டையில் போடப்பட்டது.
அதன் பின் சுயம்புவாக வளர்ந்துள்ளது.முதல் சில காட்சிகளில் தனுஷை மூன்று
குழந்தைக்கு அப்பாவாக, அதுவும் ஒரு இளைஞனுக்கு அப்பாவாக
பாவிப்பதில் உள்ள நெருடல்களை பின்வரும் காட்சிகளின் நீட்சியில் தன் அசாத்திய நடிப்புத்திறமையால்
மெய்மறக்கச்செய்து நம்மை கட்டிபோட்டுவிடுகிறார். திமிறி எழும் மூன்று முறையும் அரங்கில்
கைதட்டல்கள் அதிரடிக்கின்றன. சண்டை காட்சிகளில் பீட்டர் தெறிக்கவிட்டிருக்கிறார். அந்த
மூன்றுமே அசுரவதம்.
கரிசல்காட்டுடன்
ஒட்டாதது மஞ்சுவார்யாரின் நெகிழி முகம். கதைக்களதிற்குத்தேவையான ரெட்ரோ செட், பாத்திரதெரிவு வட்டார மொழி என்று அனைத்தும்
படம் நெடுகிலும் கைகூடிவந்திருக்கிறது. இறுதி காட்சியில் சிவசாமியின் மகனை அடிக்கும்பொழுது
தட்டிக்கேட்காத ஒரு நாயும் அதன் பின் வாடக்கூரானின் மகனை சிவசாமி அடிக்கும்பொழுது தட்டிகேட்பது, சமூகத்தின் பிசிறில்லாத பிரதிபலிப்பு. சிறை செல்லும்முன் சிவசாமி சொல்லும்
அந்த ஒரு வசனம் சத்தமில்லாத செருப்படி.
ஒடுக்கப்பட்ட
சமூகத்தின் குரலை திமிறி அடித்து ஓங்கி ஒலிக்கிறான் ‘அசுரன்’.
