சனி, டிசம்பர் 18, 2021

சௌபாக்யா அபார்ட்மென்ட்


ராஜாவுக்கு உள்ளூர 'திக்' என்றிருந்தது. கடந்த மாதம் தான் போய்விட்டு வந்திருந்தான். இப்பொழுது மீண்டும் கிளம்பவேண்டும் என்று சொன்னால் ஆஷா கோவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.  அதுவும் மூன்று நாள் ஆபிஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்பதை அவளிடம் பொறுமையாக சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும். கடந்த முறையும் தகராறு ஆகிவிட்டது.  இந்த முறையாவது பிழைப்போமா என்று  ஒரு வித குழப்பத்திலிருந்தான்.


அந்த சௌபாக்யா அபார்ட்மென்டின் மூன்றாவது மாடியில் கொஞ்சமே கொஞ்சம் வெயில் படுமாறு இருந்தது அவனது வீடு. படியேறும் பொது என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டான். காலிங் பெல் அடிக்கலாமா என்று யோசிக்கும் வேளையில் ஆஷாவே கதவை திறந்துவிட்டாள். 


ஆஷா அவனுடைய இளம் மனைவி. இருபத்தைந்து வயது மதிப்பிடலாம். ஒருவேளை வீட்டில் அனுமதி கிடைத்திருந்தால் மாடெலிங் துறையில் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போல ஒரு  பிரபலமான பெர்ஸனாலிட்டியாக இருந்திருக்கும் அளவுக்கு ஒரு வனப்பு அவளிடமிருந்தது. பாலு மகேந்திரா, சந்தோஷ் சிவன் போன்ற ஒளிப்பதிவாளர்களின் கேமராவுக்குள் அழகாக தஞ்சமடையவேண்டியவள்.கடந்து செல்லும் ஆடவர்களை ஒரு முறையேனும் கண்டிப்பாக திரும்பி பார்க்க வைக்கும் சுந்தர ரூபம் அவளுடையது. 'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' என்பது போல ராஜா அவளை திருமணம் செய்து எட்டு மாதங்கள் முன்பு கூட்டி வந்துவிட்டான்.  


ஆஷா, "என்னங்க, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. அதிசயமாயிருக்கு. எப்பவும் ஆறு மணியாகும்."


ராஜா, "ஆமா செல்லம். ஆபிஸ்ல இன்னைக்கு கொஞ்சம் பிரச்சனையிடுச்சு. அதான் அப்சட் ஆயிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சிட்ருக்கேன்"


ஆஷா, "என்ன பெரிய பிரச்சினை. நீங்க தான் எல்லாத்தையும் அசாதாரணமா டீல் பண்ற ஆளாச்சே. அப்புறம் என்ன அப்படி கவலை?"


ராஜா, "ஆபிஸ்ல என்னோட ஒருத்தன் இருக்கானே, பேரு கூட ஆனந்த். ஞாபகம் இருக்கா?"


ஆஷா, "ஆமா. சொல்லிருக்கீங்க. டைவர்ஸ் ஆக போதுனு சொல்லிருக்கீங்க"


ராஜா, "எக்ஸாக்ட்லி. அவனேதான். அவனுக்கு கோர்ட்ல ஹியரிங். அதனால அவன் மதுரைக்கு போறமாதிரி ஒரு நிர்பந்தம். கிளம்பி போய்ட்டான். மூணு நாள் ஆகிடும்"


"அவன் இல்லனா என்ன இப்போ. போய்ட்டு தான் வரட்டுமே. அதனால என்ன பிரச்சினை உங்களுக்கு?"


"அதுதான் பிரச்சினையே குட்டி. அவன் ஊருக்கு போய்ட்டானா. அந்த ப்ராஜெக்ட்ல நாங்க ரெண்டு பேருதான். இப்போ கிளையண்ட் வேற அவசரமா ஒரு மீட்டிங் கூப்பிட்றாங்க. கண்டிப்பா அட்டென்ட் பணியே ஆகனும். அவன் இல்லாததுனால என்னைய போகச்சொல்றாரு மேனஜர்"


சொல்லிவிட்டு ஒரு தயக்கத்துடன் ஆஷாவை ஏறிட்டு பார்த்தான். 


செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் இளங்கலை பொறியியல் முடித்த ஆஷா அவனுக்கு ஸ்ட்ராங்கான ஏலக்காய் டீ போட்டுக்கொண்டிருந்தாள். இவன் கூறிய விஷயத்தை கேட்டதும் இவனை ஒரு முறை திரும்பி பார்த்தாள்.


ஆஷா, "அப்போ நீங்க வெளியூர் போகனும்னு சொல்றீங்களா?"


"ஆமா ஆஷா, ஒரு மூணு நாள் தான். வேலை முன்னடிஞ்சிடுச்சுனா ரெண்டே நாள்ல திரும்பிவந்துடுவேன். நான் இல்லன்னா இந்த மீட்டிங் கரெக்ட்டா கன்வெர்ஜ் ஆகாது. ப்ராஜெக்ட் டிலே ஆயிடும்"


"நீங்க வேல பாக்றத பத்தி எனக்கு ஒண்ணுமில்லைங்க. ஆனா அடிக்கடி இதே மாதிரி போறீங்க. போன மாசம் கூட போய்ட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் ஆறு மாசம் வெளியூர் போற மாதிரி இருக்காதுன்னுதானே சொன்னீங்க. இப்போ திரும்பவும் போறேன் சொல்றீங்க."


"நான் என்ன பண்ணுவேன் செல்லம். இந்த ஒரு தடவ கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோயேன். நான் போய்ட்டு உடனே வந்துடுவேன். இதுக்கப்றம் வெளியூர் ட்ரிப் ஒரு வருஷத்துக்கு இருக்காது."


ராஜா கெஞ்சினான். ஆஷா அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள். கொதித்துக்கொண்டிருக்கும் ஏலக்காய் டீயை வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். காதோரமாக "ஸாரி" என்று கிசுகிசுத்தான். தன் இடுப்பை வளைத்திருந்த ராஜாவின் கையை இருக்க பற்றிக்கொண்டே கொஞ்சும் குரலில் ஆஷா பேசினாள்.


"நீங்களே யோசிச்சு பாருங்க. ரோபோடிக்ஸ் படிச்சிட்டு வேலைக்கு போணும்ன்றது என்னோட ரொம்ப நாள் ஆசை. ஆனா வீட்ல பெர்மிஷன் கிடைக்காததுனால நான் வேலைக்கு போக முடியல. நீங்க வந்து என்ன கொத்திட்டு வந்துட்டீங்க. அபார்ட்மெண்ட் நல்லாதான் இருந்தாலும், நீங்க காலைலே போனீங்கன்னா ராத்திரி தான் வர்றீங்க. துணைக்கு இருக்கட்டுமேனு ஒரு மெக்காவ் பறவைய அவ்ளோ காசு கொடுத்து வாங்கி வச்சிருக்கீங்க. அது கிட்ட நான் எவ்ளோ தான் பேசுறது. அது எப்படி கூண்டுல அடைஞ்சி கிடைக்குதோ அதே மாதிரி நான் இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிறேன். இந்த மாதிரி லோன்லியா பீல் பண்ற டைம்ல நீங்க வேற இதேமாதிரி அடிக்கடி ஊருக்கு போறேன்னு சொல்றது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலங்க."

 

ஆஷா அவளின் குறைகளை ஒரேடியாக கொட்டி தீர்த்தாள். ராஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளை முதலில் சமாளித்தால் போதும் என்று நினைத்தான். பின்புறமாக கட்டிக்கொண்டிருந்தவன் கையை விடுவித்து மெதுவாக அவளின் முன்னாள் வந்து நின்றுகொண்டான். அவளின் பஞ்சு போன்ற தாடையை தன் இரு விரல்களால் தூக்கி கோலிக்குண்டு போலிருந்த அவள் இரு கண்களை நேராக பார்த்தான். செர்ரி பழத்தின் சிவப்பை ஓத்திருந்த அவளது இதழ்களை இரு விரல்களால் நீவி விட்டுக்கொண்டே மற்றொரு கையால் அவளை இழுத்து தன பக்கம் அணைத்து கொண்டான். கொஞ்சம் வெட்கம் வந்து சிரித்தவளின் கண்ணா குழிகளை பார்த்து "இங்கே ஒரு ஸ்டராபெரி நட்டு வைக்கலாமா ஸ்வீட்டி?" என்று கொஞ்சவும் தேநீர் பொங்கி ஸ்டவ்வை அணைத்துவிட்டது.


ஆஷா அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டே "கொஞ்சம் விட்டா இந்த சமயலறையை, பெட்ரூமா மாத்திடுவீங்க போலேயே" என்று சிணுங்கிக்கொண்டாள். 


"ஆஷா, நீயே எனக்கு கொஞ்சம் ட்ரெஸ்லாம் எடுத்து வச்சிடேன். நீ போனதடவ செலெக்ட் பண்ணிகொடுத்த மெரூன் ஷர்ட் ரொம்ப நல்லா இருந்துச்சின்னு க்ளையண்ட் சொன்னாங்க தெரியுமா?"


"அப்போ இந்த தடவையும் அதே மெரூன் எடுத்துவச்சிடவா" என்றால் ஆஷா. 


அவள் ஆசுவாசமாகிவிட்டாள் என்பதை தெரிந்துகொண்ட இவன் சற்றே பெருமூச்சு விட்டான்.  குளியலறையை நோக்கி நகர்ந்தான். ஆஷா அவனது உடைமைகளை சூட்கேசில் பேக் செய்ய ஆரம்பித்து கொண்டே இரவு உணவுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். பாக்கெட் பெர்பியும், லேப்டாப், பவர் பேங்க் என ஒவ்வொன்றாக எடுத்துவைத்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தான் ராஜா. வெகுவேகமாக உடலை காயவைத்துவிட்டு ஆஷா எடுத்துவ வைத்திருந்த உடைகளை உடுத்திக்கொண்டான். ஆஷாவும் கொஞ்சமே கொஞ்சமாக ரெபிரஷ் செய்திருந்தாள். இவன் வருவதற்குள் இரவு உணவை உணவு மேஜையில் எடுத்துவைத்திருந்தாள். 


"ஏங்க. சாப்பிட வரீங்களா. டைம் ஆகுதுல. கார்ல தான் போறீங்க. சீக்கிரமா கிளம்பினாதான் நேரத்தோட போக முடியும்."


"வந்துட்டேன் மை டியர். இன்னைக்கு என்ன ஸ்பெஷல். தினம்தினம் நீ புதுசா ஏதாவது செஞ்சு அசத்துவியே. இன்னைக்கு என்ன செஞ்சிருக்க ?"


"இன்னைக்கு ஒன்னும் ஸ்பெஷலா செய்யலைங்க. கோதுமை தோசையும் தக்காளி சட்டினியும். மனசு சரியில்ல. நீங்க ஊருக்கு போறத நினச்சு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க."


"நீ எது செஞ்சாலும் ஸ்பெஷல் தான் எனக்கு. ரொம்ப வருத்தப்படாத கண்ணு. இன்னைக்கு போய்ட்டு ரெண்டே நாள் தான். திரும்பி வந்துடுவேன். ஒரு பெரிய டெட்டி பியர் இருக்குல்ல. அத நான்தான்னு நினைச்சு கட்டி பிடிச்சு தூங்கிடு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ போன்ல பேசுறேன். கவலைப்படாத ஆஷா" என்று ஏதேதோ சொல்லி தேற்றினான்.


அரை மணி நேரத்தில் சாப்பிட்டு எல்லாம் .சூட்கேசில் சரியாக இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு கிளம்ப யத்தனித்தான். 


"என்னங்க, போயே ஆகனுமா?" என்ற ஆஷாவை ஒரு முறை இறுக்க அணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஊமையாக்கினான். 


மூன்றாவது மாடியிலிருந்து படியிலேயே இருவரும் இறங்கி வந்தனர். பார்க்கிங்கில் இருந்த காரின் டிக்கியில் சூட்கேஸை வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஒருமுறை ஆஷாவிடம் "லவ் யூ" என்றான். ஆஷா கையசைத்து வழியனுப்பினாள். கார் அபார்ட்மெண்டை விட்டு வெளியேறி அந்த தெருவை கடந்து திரும்பியபின் நின்றது. மேனேஜரை விளித்தான். 


"என்ன ராஜா. ஆபிஸ்லேந்து சீக்கிரம் கிளம்பிட்டீங்க. ஒன்னும் ப்ராபளம் இல்லையே."


"ஊர்ல தாய் மாமாக்கு உடம்பு சரியில்ல சார். அதான் உடனே கிளம்புறமாதிரி ஆகிடுச்சு. ஒரு ரெண்டு நாள்ல வந்துடுவேன். எல்லா விஷயத்தையும் ஆனந்த்ட்ட சொல்லிருக்கேன். அவரு மேனேஜ் பண்ணிப்பார் சார்"


"ஓகே ராஜா. யூ ப்ளீஸ் .டேக் கேர். நான் இங்க பாத்துக்குறேன்" என்று மேனேஜர் கூறினார்.


ராஜா பெருமூச்சுவிட்டான். போனை எடுத்து அடுத்த கால் செய்தான். எதிர் முனையில் மீனா. "ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.


மூன்று தெரு தள்ளி தனித்திருந்த வீட்டில் காரை நிப்பாட்டினான். தயாராக இருந்த மீனா வந்து ஏறிக்கொண்டாள். மீனா அவனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவள்.  


"என்ன ராஜா, இவ்வளவு நேரம்?" 


"அத ஏன் கேக்குற மீனா? நான் என் பொண்டாட்டிய சமாளிச்சுட்டு வெளிய வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓரளவு சமாளிச்சுட்டேன். டோன்ட் ஒரி" என்றான்.


மீனாவை ஏற்றி கொண்ட அந்த கார் கொடைக்கானல் செல்லும் ரோட்டை நோக்கி வேகமாக ஓடியது. ராஜா ஒரு முறை ஆஷாவை நினைத்து கொண்டான். மனசாட்சி கொஞ்சம் அவனை பிராண்டியது. என்ன தான் இருந்தாலும் தன்னையே நினைத்து உருகும் ஆஷாவிற்கு துரோகம் செய்வது அவனுக்கு நெருடலாயிருந்தது. எனினும் அந்த எண்ணங்களை தவிர்த்துவிட்டு மீனாவின் கையை தனது மடியில் எடுத்து வைத்து கொண்டு காரின் வேகத்தை அதிகரித்தான். 


அதே வேளையில் சௌபாக்கியா அபார்ட்மெண்டில் ராஜாவை வழியனுப்பிவிட்டு படியேறும் முன் ஆஷா, எதிர் வீட்டு கார்த்தியை எதிர்கொண்டாள். "அவர் மூன்று நாள் வெளியூர் போயிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறத்தொடங்கினாள் .  

வியாழன், டிசம்பர் 16, 2021

சபாபதி

 

வ்வொருத்தராக  வந்து சேருவதற்குள் மணி காலை பத்தாகிவிட்டது. விழாவை தலைமை தாங்கும் அந்த பள்ளியின் தாளாளர் சரியாக பத்து ஐந்துக்கு வந்ததும் விழா தொடங்கியது. நல்லாசிரியர் விருது பெற்ற தந்தைக்கு மரியாதை செய்யும் பொருட்டு முகிலன் அந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தான். பள்ளியின் தாளாளர் இடதுபக்கம் அமர மேடையின் நடுவே கம்பீரமாய் சிறிது புன்முறுவலோடு விழாவின் நாயகன் நல்லாசிரியர் சபாபதி காணக்கிடைத்தார். 

 

ம்பிரதாய வரவேற்புரை முடிந்ததும் முகிலன் முன்வந்து மைக்கை கையிலெடுத்து ஒரு முறை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தான். "அனைவருக்கும் வணக்கம். இங்கு நாம் கூடியிருக்கும் நோக்கம் எனது தந்தை நல்லாசிரியர் விருது பெற்றதை போற்றும் பொருட்டும் மேலும் அவரது சாதனைகளை அவருடனான அனுபவங்களை இங்கு விவரிக்கும் தருணங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்ககும் ஊக்கம் அளிக்கும் விதமாகவும் அமையும் என்ற ஒரு உயர்ந்த எண்ணத்திலே இந்த விழாவை முன்னெடுத்திருக்கிறேன். இந்த விழாவை இனிதாக துவங்கும் பொருட்டு என் தந்தையுடனான என் அனுபவங்களை இங்கு விவரிக்கிறேன். 

 

வாத்தியாரப்பா என்று அன்பாக அழைக்கப்படும் சபாபதி சார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.  அவர் நல்லாசிரியர் விருது பெற்ற காரணத்தினால் தான் நான் இந்த தருணத்தில் பெருமை  கொள்கிறேனா என்றால் நிச்சயமாக இல்லை. என்னுடைய தந்தையாக இருந்தாலும் அவர் என்னுடன் ஓர் உற்ற தோழனாகத்தான் பயணித்தார். ஒரு பதின்ம வயது சிறுவன் எவ்வாறு தனது சுகதுக்கங்களை  நண்பனுடன் பகிர்ந்து கொள்ளுவானோ அது போன்ற ஒரு சுதந்திரத்தை எனக்கு அளித்திருந்தார். சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோள் என் மனதில் வேரூன்றியிருந்தது. மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்ற உந்துதலோடு, இல்லை உந்துதல் என்று சொல்லுவதை விட வெறியுடன் படித்துக்கொண்டிருந்தேன்.  மருத்துவத்துக்கான நுழைவுத்தேர்வு எழுதி முடித்த தருணம் அது. அதற்கு முந்தைய வருடத்தின் கட் ஆப் மார்க்கை விட 3 மார்க் குறைவாக வரும் என்பதை தேர்வு அறையை விட்டு  வெளியே வந்தவுடனேயே என்னால் கணிக்கமுடிந்திருந்தது.  ஆங்கோர் காட்டிடையே பொந்தினில் வைத்தேன் என்பது போல ஏழு ஆண்டுகளாக மருத்துவம் படிக்க வேண்டும் என மனதுக்குள் சுமந்திருந்த கனவு. மருத்துவப்படிப்பு எட்டாக்கனி என்று தெரிந்தபின்பு மிகவும் துவண்டிருந்தேன். எதிலும் கவனம் செலுத்தமுடியாத நான் அடுத்த நாள் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை கடமைக்கேனும் எழுத கூட முனைப்புக்காட்டவில்லை. அன்று இரவு உறங்காமல் நான் தவித்ததை கண்டு என்னருகில் வந்த தந்தை, நடந்ததை அவ்வாறே ஏற்றுக்கொண்டு நடக்கவேண்டியதில் கவனம் செலுத்து என்று ஒரு உற்ற தோழனைப்போல் என் தோள் பற்றி ஆறுதல் கூறினார். நட்சத்திரங்கள் நிறைந்த அகண்டு விரிந்த ஆகாயத்தின் கீழே நடைபெற்ற அந்த இரண்டு மணி நேர உரையாடல் என்னை தேற்றி உத்வேகப்படுத்தியது. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து படித்தவற்றை நினைவில் கொண்டு அடுத்த நாள் தேர்வு எழுதினேன். பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதோ இன்று உலகின் உயரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் அங்கம் வகிக்கிறேன். வில்லிலிருந்து விருட்டென்று கிளம்பும் அம்பை போல ஓடும் என் வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும் தருணத்தில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் முன்வைப்பது, அன்று நான் துவண்டிருந்தபோது நடைபெற்ற எனது தந்தையுடனான சம்பாஷனைகள் மட்டுமே. இதை ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாள் விழாவில் நினைவு கூர்ந்து தந்தையிடம் கூறி ஆசி வாங்க வேண்டும் என்று ஆசை கொள்வேன். ஆனால் இன்று உங்கள் எல்லோருக்கும் முன்னால் என் வெற்றியின் காரணகர்த்தாவாக என் தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார் என்பதை இந்த விழாவிலே பதிவு செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன்".

 

கூட்டத்தாரையும் தன் தந்தையையும் பார்த்து வணங்கிய முகிலன் தன் தந்தைக்கு அருகிலே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டான். சபாபதியிடம் கொஞ்சமும் மாறாத அதே புன்முறுவல். 

 

வருடன் வேலைபார்த்த பல ஆசிரியர்கள், சபாபதியுடனான தங்களின் அனுபவங்களை அடுத்தடுத்து பகிர்ந்துகொண்டனர். அவருடன் இருபத்து மூன்று வருடகாலமாக வேலை பார்த்துவந்த வெங்கடாச்சலம் பேசும்போது அவரது கண்ணில் நீர் வழிந்ததை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. "நானும் சபாபதியும் ஒரே வருடத்தில் இந்த பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோம். இருவருமே அவ்வளவு வசதி பின்புலங்கள் இல்லாத குடும்பப்பின்னணியிலிருந்து தான் முன்னேறி இந்த ஆசிரியர் வேலைக்கு வந்திருந்தோம். பணியில் சேர்ந்த சில நாட்களில் எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு வருடத்தில் அவள் சுகவீனப்பட்டுவிட்டாள். மருத்துவமனையில் சேர்ந்து அவளை காப்பாற்றி கொண்டுவருவதற்குள் ஏகப்பட்ட செலவு செய்து நிலைமை கைமீறி போய்விட்டது. போராடி பிழைத்தது மட்டுமே சாதனை. ஆனால் மருத்துவச்செலவுக்காக நான் வாங்கிய கடன் என் கழுத்தை நெருக்கியது. செய்வதறியாது கையறு நிலையில் இருந்த என்னை தேற்றியது சபாபதி மட்டுமே. என்னுடைய சொல்லொன்னா துக்கங்களை அவருடன் நான் பகிர்ந்து  கொண்டதால் அது பாதியாக குறைந்தது. மனதில் ஏற்பட்ட கலக்கங்களுக்கு வார்த்தைகளால் மருந்து போட்டதோடு மட்டுமல்லாமல் என்னுடைய கடனை தீர்ப்பதற்கு பொருளாதாரரீதியாகவும் பெரும் உதவிகள் செய்தார். தேவைக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக வாழும் சபாபதி, தான் அன்று வரை சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையை கைமாறாக கொடுத்து உதவினார்.  வட்டியில்லா அந்த கடன் எனது பெருந்துயரை துடைத்து எனது குடும்பத்தையும் காப்பாற்றியது. அன்று அவர் காப்பாற்றிய எனது மகள், இன்று மருத்துவராயிருக்கிறார்.  கடன் வாங்கி பிழைப்பு நடத்தினான் என்ற பேச்சுக்கு ஆளாக என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆதலினால் சபாபதி அன்று செய்த உதவி எங்கள் இருவரையும் தவிர்த்து யாருக்கும் தெரியாது. இன்று, இந்த தருணத்தில் உங்கள் எல்லோருக்கும் மத்தியில் இதை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏனெனில் அவர் சுயநலம் பாராது உதவி செய்யவில்லையெனில் இன்று நானோ என் குடும்பமோ இங்கு உயிருடனில்லை. எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று நா தழுதழுக்க பேசிவிட்டு அமர்ந்தார்.  

 

ந்த கூட்டத்திலேயே வயது மூத்தவராக இருந்த சபாபதி வாத்தியாரின் சித்தப்பா நீலகண்டன், மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்டார். ஒரு நாற்காலி கொடுக்கப்பட்டு அதில அமரவைத்த பின்பு, தழுதழுத்த தன் குரலினால் பேச ஆரம்பித்தார். "கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எனது அண்ணன் மகன் சபாபதி சிறு வயதிலிருந்தே படிப்பில் சுட்டி. தன்னை விட வயது மூத்தோரிடம் மரியாதையாக பேசும் தன்மை இருந்தாலும் தனது கருத்தை தைரியமாக வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதில்லை. அவன் ஆசிரியர் பணியை விரும்பியே தேர்வு செய்தான். ஏனெனில் குழந்தைகளை ஒரு பொறுப்புள்ள  பிரஜையாக மாற்றும் சக்தி ஆசிரியர்களிடத்தில் இருந்தது என்று அவன் உறுதியாக நம்பினான். மாணாக்கர்களை நல்வழிப்படுத்துவதன் மூலம் தேசம் சுபிக்ஷமடையும் என்பது அவனது எண்ணம்.  அவன் விரும்பியது போலவே ஆசிரியர் பணியை தெய்வீகமாக நினைத்து  சுவீகரித்திருந்தான். இதை நான் கூறுவதற்கு காரணம், பள்ளி முடிந்து பின்பு தன் குடியிருப்பின் அருகிலிருக்கும் வசதிவாய்ப்பற்ற குழந்தைகளுக்கு பணம் ஏதும் வாங்காமலேயே வியாசம் கற்று கொடுத்தான். 

 

குறைவாக பேசினாலும் அவருக்கு நா வரண்டிருந்தது. சிறிது நீர் அருந்தினார். தடிமனாக இருந்த மூக்கு கண்ணாடியை சரி செய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.

 

"பாபதி எனது அண்ணண் மகன் தான் என்றாலும் நான் அவனிடம் எள்ளளவும் பாசம் காட்டவில்லை. சிறுவதிலேயே அவன் முதிர்ச்சியடைந்த மனிதனாக தன சுற்றத்தில் நன்மதிப்பை பெற்றிருந்தான். அதேசமயம் எனது மகன் என் கோடானுகோடி கனவுகளை மெய்யாக்கவில்லை. கூடாத சேர்க்கை அவனை படுகுழியில் தள்ளியது. போதைக்கு அடிமையாகிய அவன் இளம் வயதிலேயே புத்தி சுவாதீனமின்றி மரித்துவிட்டான். இறைவன் எழுதிய இந்த சமத்துவமில்லா கோட்பாடு எனக்கு  மனக்கிலேசத்தை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இயலாமையினால் நான் சபாபதியை கண்டு பொறாமை கொண்டேன். அவரவரின் வினைப்பயன்களே அவரவரின் பலாபலன்கள் என்பதை புரிந்துகொள்ள தவறி விட்டேன். முகத்திற்கு நேரே ஒரு முறை கூட அவனை பாராட்டியதில்லை. ஏன் அவன் இல்லாதபோது பொழுது கூட அவனை பற்றிய பேச்சை லாவகமாக தவிர்த்தேன். பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் இந்த பித்து பிடித்த மனதிற்கு அனைத்துமே கோணலாக தான் தெரிந்தது. இன்று எனக்கு அகவை தொன்னூற்றி மூன்றை எட்டுகிறது. இன்று பழுத்த கிழமாக நிற்கிறேன். இளம் வயதிலேயே சபாபதி முதிர்ச்சி பெற்றுவிட்டிருந்தான். அந்த முதிர்ச்சியை இப்பொழுதுதான் நான் எட்டுகிறேன் என்று தோன்றுகிறது. சபாபதியின் புகழை அங்கீகரிக்கவில்லையே ஒழிய நான் அவனை வெறுக்கவில்லை. அவனுக்கு நல்லாசிரியர் விருது மிகவும் பொருத்தமானது. ஏனெனில் அவன் தனது வேலையை மிகவும் நேசித்தான். அதை ஊழியமாக எண்ணாமல் கடமையாக செய்தான். இந்த விருதுக்கு முழு தகுதியுடையவன் அவன். எனது மனதில் எந்த விகல்பமும் இல்லாமல் நெஞ்சார வாழ்த்துகிறேன். விருது அவனை அலங்கரித்தது என்று சொல்லுவதை விட அவனுக்கு விருது அளித்து விருது தன்னை அலங்கரித்துக்கொண்டது என்று கூறினால் மிகையல்ல" என்று கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். 

 

தற்கு பிறகு பேசவந்தவர்கள் அனைவருமே சபாபதியே வெட்கப்படும் அளவுக்கு பாராட்டினார்கள். அரசுப்பள்ளியில் படித்த தன் மகன் எந்த வித தனிவகுப்புகளுக்கும் செல்லாமல் IITயில் படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு சபாபதி ஆசிரியரின் தனிப்பட்ட பயிற்றுவிக்கும் முறையே காரணம் என்று நன்றி தெரிவித்து கொண்டார். அண்டை வீட்டில் வசிக்கும் குமரேசன், சபாபதி தன வீட்டை சுற்றி தோட்ட வளர்க்கும் பாங்கையும், சுத்தமாக பேணுவதில் காட்டும் அக்கறையையும் சிலாகித்துக்கொண்டார். எதிர் வீட்டு பாக்கியம் மாமி, சபாபதி தினமும் காக்கை குருவிகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவளிப்பதையும் மனிதர்களை போலவே விலங்குகளிடத்தில் அவர் காட்டும் அன்பு தன்னை வியக்க வைக்கிறது என்று புளகாங்கிதமடைந்தார். சபாபதி குடியிருக்கும் ஊரகத்தின் தலைவர் வையாபுரி, தன் பங்கிற்கு சபாபதியின் பொதுநலத்தை பாராட்டினார். ஊரக மன்றத்தில் அவர் எந்த பொறுப்பும்  அவர் வகிக்கவில்லையென்றாலும், தாமாகவே முன்வந்து சாலை போடுவதற்கும், கழிவு நீர் கால்வாயை சுத்திகரிப்பதற்கும் கோவிலை புணரமைக்க நிதி திரட்ட உதவியது என பல உதவிகளை பட்டியலிட்டு அவரை தான் மானசீகமாக குருவைப்போல மதிப்பதாக உணர்ச்சி ததும்ப பாராட்டினார். 

 

வர்கள் அனைவருமே பேசி முடிக்கவும் மணி ஒன்றை நெருங்கவும் சரியாக இருந்தது. பள்ளியின் தாளாளர் நன்றியுரை தெரிவித்து விழாவை நிறைவு செய்தார். உயிரோடு இருக்கும் பொழுது உறவாடி உணர்வுகளை பகிர்ந்து வாழத்தெரியாத நம்மை போன்று விழாவுக்கு வந்த அனைவருமே, வரிசையில் நின்று சபாபதியின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு நகர்ந்தனர். 

 

ல்லாசிரியர் விருதின் அறிவிப்பு வரும் சில நாட்களுக்கு முன்னர் மறைந்த சபாபதி, தன் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத பாராட்டுக்களை கேட்காமலேயே அதே புன்முறுவலோடு புகைப்படத்தில் உறைந்திருந்தார். 

 

வியாழன், டிசம்பர் 09, 2021

நகரம்

 


கிழக்கே உதித்திருந்த சூரியனின் வெளிச்சக்கீறல்கள் கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்திருந்தது. இரவு பெய்த பலத்த மழை நின்றாலும் கூட தூவானம் நின்றபாடில்லை. 


முந்தைய நாட்களின் கசடுகள் கரைந்து புத்தம் புது காலையாக விடியும் பலருக்கு மத்தியில் அந்த பெரியவருக்கு அது மீண்டும் மற்றொரு நாளாகவே விடிகிறது.  பூட்டிய ஹார்டவெர் கடையின் வாசலில் ஷட்டரை ஒட்டி படுத்திருந்த அவர் முழித்துப்பார்த்தார். மழைத்தூறலும் குளிர்காற்றும் அவரது உடலை பதம்பார்த்தன. கட்டியிருந்த சாரத்தை இழுத்து உடலைப்போர்த்திக்கொண்டார். எழுவதற்கு தெம்பும் இல்லை. மனமுமில்லை. அருகில் செயல்படும் கனரக தொழிற்சாலையின் வாசலில் கொட்டப்படும் அன்றைய பேப்பர் குப்பையை சேகரித்து எடை போட்டு வயிற்றை நிரப்பும் ஒரு எளிய ஜீவராசி. பெயர் தெரியாது. வீடும் உறவும் அற்றவர்களை அலட்சியம் செய்து பெயரை தெரிந்துகொள்ள விழையாத வசதியான இந்த சமூகத்தின் மீது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஹார்டுவேர் கடையை திறக்கும் வரைக்கும் படுத்தே கிடப்பார். கண்விழித்து முழித்து பார்த்தால் எவராவது வந்து எழுந்திருக்கச்சொல்லலாம். ஆனால் அதை விட முக்கியமாக வயிற்றை கிள்ளும் பசியை ஒத்திப்போட வேண்டி தலைமீது கட்டியிருந்த உருமாலை அவிழ்த்து முகத்தில் மூடிவிட்டு மீண்டும் உறங்க முயற்சித்தார்.   


தே காலை வேளையில், ஆறு முப்பத்துக்கு ஐபோனில் ஒலித்த குக்கூ அலாரத்தை, கௌதம், ஒரு கையால் அமர்த்திவிட்டு மறு கையால் 24 டிகிரியில் குளிர்வித்துக்கொண்டிருந்த ஹாயர் ஏசியை ஆஃப் செய்து   சோம்பலை நெட்டி முறித்துக்கொண்டான். துள்ளியோடும் இருபத்து ஐந்து வயது. மாதம் ஆறு இலக்க சம்பளம். எழுவதற்கு தெம்பும் மனமும் இருந்தாலும் சோம்பலில் இன்னும் சில நிமிடங்கள் கண்ணை மூடி உறங்க முயற்சித்தான். கண்களை கசக்கி கொண்டான். க்யுல்ட்டை விலக்கிக்கொண்டு அந்த பிரமாண்ட வேலைப்பாடுள்ள மரக்கட்டிலை விட்டு இறங்க யத்தனித்தான். கால்களை கிரானைட் தரையில் வைக்கும்போது சில்லென்று, ஊசி குத்துவது போல அவன் உடம்பில் குளிர் ஏறியது. அருகில் இருந்த பஞ்சு போன்ற காலுறையை அணிந்துகொண்டான். ஆட்டோமெட்டிக் பல் விளக்கும் கருவியில் தனது ஆறடி உயரத்தை கண்ணாடியில் ரசித்துக்கொண்டே பல் துலக்கினான். வலது கையால் பல் துலக்கும் போதே ஒருக்களித்து இடது கையின் முஷ்டியை முறுக்கி தசைகள் தெரியும் தனது புஜங்களை ரசித்தான்.  


"பெரியவரே எந்திரிங்க" என்று குரல் கேட்டு விழித்து பார்த்தார் அந்த பெரியவர். ஹார்டவெர் கடை வாசலை கூட்டி பெருக்கும் பெண்மணி வந்திருந்தாள். அவள் வந்துவிட்டாளானால் மணி ஏழரை ஆகிவிட்டது என்று அர்த்தம். அடுத்தது என்ன செய்வது என்று பெரியவருக்கு தெரியவில்லை. எந்திரித்து இடத்தை காலி செய்ய வேண்டும். மெதுவாக எழுந்திரித்து வெளியே நடக்க ஆரம்பித்தார். பசி வயிற்றை கிள்ளியது. போட்டிருந்த அழுக்குச்சட்டையில் இரண்டு ரூபாய் மிஞ்சியிருந்தது. சைக்கிளில் வரும் சுக்கு காஃபி குடிக்க வேண்டுமென்றாலே எட்டு ரூபாய் கேப்பான். அருகிலிருந்த அடிபம்பை நோக்கி வெறுங்காலில் நடந்தார். தேங்கியிருந்த நீரை குடிக்கும் மாடை சத்தம் போட்டு விரட்ட முயன்றார். இவரிடம் காசில்லை என்று விஷயம் தெரிந்தோ என்னமோ மாடு கூட நகர மாட்டேன் என்று முரண்டு பிடித்தது. கீழே கிடக்கும் குச்சியை எடுத்து விரட்டினார். மாடு அசைந்து சென்ற பிறகு, பெரியவர் அடிபம்பை பலம் கொண்ட மட்டும் பிரயத்தனம் செய்து அடித்து தண்ணீர் வரவைத்து குடித்தார். தொண்டையை தாண்டி தண்ணீர் வயிற்றை சென்று அடைந்து அவரது பசியை கொஞ்சம் கொஞ்சமாக தணித்தது. 

 

கௌதமுக்கு அந்த வெனிலா ப்ரோடீன் ஷேக் கொஞ்சம் உவப்பாக இருந்தது. நேற்றைய சாக்லெட் பிளேவர் ப்ரோடீன் ஷேக்கை விட தான் இதை அதிகம் விரும்புவதாக உணர்ந்தான். ட்ரெட் மில்லில் ஓடியதால் வியர்வை துளிர்த்திருந்தது. ஓடிய அளவிற்கு 560 கலோரியை அவன் கரைத்திருப்பதாக அந்த வெல்கெர் ட்ரெட்மில் கணக்கு காட்டியது. மனதுக்குள் கணக்குபோட்டுக்கொண்டான். இப்பொழுது குடித்த ஷேக் 390 கலோரி. அதை விட 170 கலோரி அதிகமாக கரைத்திருக்கிறோம் என்பதில் அவனுக்கு திருப்தி. காலை உணவாக அவித்த முட்டைகள் 3 மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்று முடிவுசெய்துகொண்டான். கழுத்தில் வழிந்த வியர்வையை தனது தேங்காய் பூ டவலால் துடைத்து விட்டான். லேசாக மூச்சு வாங்குவதை ஆசுவாசப்படத்திக்கொள்ள ஒரு சில நிமிடங்கள் ஆளுயர கண்ணாடியில் தன்னை உற்று பார்த்துக்கொண்டு 

குளிர்வித்து கொண்டிருக்கும் ஏசியின் கீழே நின்றுகொண்டான். ஓடுவதற்காக மட்டுமே உபயோகப்படுத்தும் அந்த நைக் ஷூவை கழற்றி கவரில் சுருட்டி தனது ஜிம் பேக்கில் வைத்துவிட்டு ஏழாவது மாடியிலிருந்து கீழே இறங்கும் பொருட்டு லிப்ட் பொத்தானை சொடுக்கினான். 


ண்ணீர் குடித்த தெம்பில் பெரியவர் அந்த கனரக தொழிற்சாலையை அரை மணி நேரத்தில் வந்தடைந்தார். விதவிதமாக கார்கள் நிப்பாட்டப்பட்டிருக்கும் அந்த கார் ஷெட் தான் அவர் ஓய்வுகொள்ளும் இடம். இன்னும் சிறிது நேரத்தில் அந்த ஷெட் முழுவதும் கார்களால் நிறைந்துவிடும். அருகில் பரந்து விரிந்திருந்த ஆலமரம் அந்த இடத்திற்கே பர்வத மலை போன்ற நிழலை கொடுத்துகொண்டிருந்தது. புள்ளினங்களின் க்ரீச்கள், ஆற அமர உட்கார்ந்து அசை போடும் மாடுகள், செல்லும் வழியெல்லாம் முகர்ந்து பார்த்துக்கொண்டே ஓடும் நாய்கள், அவ்வப்போது தோகை விரித்தாடும் மயில்கள் என ரசிக்க ஆயிரம் இருந்தும் வண்டியை நிறுத்திய வேகத்தில்  கட்டிடத்தை நோக்கி ஓடும் மனிதர்களை பார்க்கும் போது இவருக்கு விந்தையாக இருக்கும். இன்னும் சற்று நேரத்தில் தூய்மைப்பணியாளர்கள் வந்து கொட்டும் பேப்பரை சேகரிக்கத்தொடங்க வேண்டும். சில நேரங்களில்  கெட்டியான பிளாஸ்டிக் மற்றும் உடைந்த இரும்புத்துண்டுகள் போன்றவை கூட வந்து விழும். அவ்வாறான நாட்களில் இன்னும் ஒரு இட்லியோ அல்லது ஒரு பருப்பு வடையையோ  அதிகமாவோ வாங்கி சாப்பிடலாம். மதியம் சாப்பிடப்போகும் அந்த ஒரு தட்டு உணவை மனதில் நினைத்துக்கொண்டே ஆவலுடன் தன் பார்வையை அந்த குப்பைகொட்டப்படும் இடத்தை நோக்கி நிலைகுத்தி நிற்கச்செய்தார்.


குளித்து முடித்து உற்சாகமாக உடைகளை அணியத்தொடங்கியிருந்தான் கௌதம்.  முஸ்லி சில்க் ஷர்ட் அவனை இன்னும் எடுப்பாக காட்டியது. முழுக்கை சட்டையின் கை கஃப் பட்டன்களை  அணிந்துகொண்டே வட்டமாக இருக்கும் அந்த ரோஸ்வுட் டைனிங் டேபிளில் உட்கார்ந்தான். முன்னமே அவித்து தயாரகியிருந்த முட்டைகளை வெளியில் எடுத்து உரிக்கத்தொடங்கினான். அருகிலிருந்த அலெக்சாவை விழித்து இன்றைய செய்திகளை சொல்லுமாறு பணித்தான். காதுகளை அலெக்ஸாவுக்கும், கண்களை ஸ்மார்ட்போனிலும், கைகளை முட்டையிலும் மனதை அன்று அலுவலக நண்பர்களுடன் பார்ட்டிக்காக செல்லும் ப்ரன்ச் சாப்பாட்டிலும் குவித்தான். அன்லிமிட்டட் சாப்பாட்டில் வழங்கப்படும் கடல் உணவு வகையறாவை மட்டுமே சாப்பிட வேண்டும் இல்லையென்றால் வயிற்றில் சதைப்பிடிப்பு விழுந்து விடும் என்பதில் கவனம் கொண்டான். வெள்ளை கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு மஞ்சள் கருவை குப்பையில் கொட்டினான்.  அலுவலகத்திற்கு கிளம்பும் பொருட்டு 27ஆவது மாடியில் இருக்கும் தனது பிளாட்டிலிருந்து ஜிவ்வென்று லிப்ட்டில் கீழிறங்கத்தொடங்கினான். 


ணி பத்தை தாண்டியிருந்தது. அந்த அலுவலகத்திலிருந்து இரு நபர்கள் டீ கேனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்.  அலுவலகத்திலிருக்கும் ஊழியர்களுக்கு போக டீ மீதமிருந்தால் அந்த நபர்களுக்கு அன்று மனதிருந்தால் அந்த பெரியவரை கூப்பிட்டு டீயை ஒரு கிண்ணத்தில் ஊற்றுவர்.  சூடு ஆறியிருந்தாலும் பசிக்கிற வாய்க்கு அது அமிர்தமாகவே அந்த பெரியவருக்கு இருந்தது. ஆவலுடன் அந்த இரு நபர்கள் இவரை நோக்கி வருகின்றனரா என்று  பார்த்துக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த இரு நபர்கள் அவர் நோக்கி வந்தனர். கேனை கவிழ்த்தது அரை க்ளாஸ் டீயை அவருக்கு ஊற்றினர். அவர்கள் டீ கேனை நிமிர்த்துவதற்குள் அந்த டீயை குடித்துவிட்டார்.  அந்த இனிப்பு சுவை அவருக்கு நாடி நரம்பெல்லாம் சென்று சற்றே தெம்பை அளித்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சரியாக பத்தரை மணிக்கு துப்புறவு ஊழியர்கள் வந்து பேப்பரை கொட்டினர். அவர்கள் செல்லும்வரை அமைதியாக இருந்துவிட்டு மெதுவாக எழுந்து செல்லலானார்.


புதிதாக சேர்ந்திருந்த  மூன்றே மாதங்களில் அவனுக்கு ஆன்சைட் வாய்ப்பு கிடைத்ததன் பொருட்டு இந்த உபச்சார விழாவை அலுவலக நண்பர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தான்.  அன்றைய ஆன்சைட் கால்களின் நிலுவையில் உள்ள வேலைகளை முடிந்தளவு முடித்துவிட்டு பதினோரு மணியளவில் அந்த நட்சத்திர ஹோட்டலை அடைந்து வேலட் பார்க்கிங்கிற்கு காரை கொடுத்துவிட்டு அனைவரும் அந்த பிரமாண்ட வாயிலை நோக்கி நடந்தனர். சலாம் அடித்து வாயிற்கதவை திறந்த காவலாளியை சற்றும் அலட்சியம் செய்யாமல் அனைவரும்  உணவு அறையை நோக்கி விரைந்தனர். விருந்து என்ற காரணத்தினால் அனைவரும் காலை உணவை குறைவாகவே எடுத்திருந்தனர். அனைவரும் ஒருமுறை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் உணவுகளை கண்களால் மேய்ந்துவிட்டு வட்டமாக இருந்த போர்சிலின் தட்டுக்களை கையில் எடுத்துக்கொண்டனர். மெக்ஸிகன், கொரியன்   உணவுகளை ருசிக்கும் பொருட்டு தட்டில் எடுத்துவைத்து அதன் சுவை பிடிக்காமல் தட்டுடன் அவற்றை அப்புறப்படுத்தி புது தட்டுக்களை கையில் எடுத்து வேறு புது உணவுகள் இருக்கிறதா என்று தங்கள் வேட்டையை மீண்டும் ஆரம்பித்தனர். 


ன்றைக்கும் இல்லாத அளவுக்கு அன்று அதிக அட்டைப்பெட்டிகள் அந்த குப்பைத்தொட்டியில் கொட்டிக்கிடந்தன. இன்று ஒரு நாள் நன்றாக சாப்பிடலாம் என்று அவர் மகிழ்ந்த நேரத்தில் இவ்வளவு சுமைகளையும் எவ்வாறு தூக்கி செல்லப்போகிறோம் என்ற கவலை மிதமிஞ்சி நின்றது. ஒருவாறாக தரையில் அனைத்தையும் விரித்து வைத்து அடுக்கிவைத்தார். அதை தலையில் சுமந்துகொண்டு அந்த பழைய பேப்பர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இறுதி இலக்கை கண்களால் கண்ட பின் அதை நோக்கி ஓடும் மராத்தான் வீரர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவாரோ அதே போன்ற உவகையை அந்த பழைய பேப்பர் கடையை பார்த்தவுடன் அந்த பெரியவர் கொண்டார். நா வறண்டு கால்கள் துவண்டு நடந்துகொண்டிருந்த அவர் சற்று வேகமாக நடக்கத்தொடங்கினார். சுமந்துவந்தவற்றை எடை போட்டபின் அவருக்கு 60 ரூபாய் கிடைத்தது. எப்பொழுதுமே முப்பது ரூபாய்க்கும் குறைவாக மட்டுமே கிடைக்கும் அவருக்கு இன்று சற்று அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. கையில் அந்த ரூபாய் தாள்களை வாங்கி முகர்ந்துபார்த்தபொழுது அவருக்கு மட்டும் உணவு வாடை அடித்தது. பசி இன்னும் வயிற்றை கிள்ளியது.  எப்பொழுதும் ஒரு கரண்டி கலவை சாதம் சாப்பிடும் அவர்,  வெகு நாள் கனவாக இருந்த அரை பிளேட் பிரியாணி வாங்கி சாப்பிடலாம் என்று சற்றே மகிழ்ந்து அந்த தெரு முனையிலிருக்கும் தள்ளுவண்டியை நோக்கி நடக்கலானார். கால்களில் தெம்பு கூடியிருந்தது. 


டல் உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று முடிவு செய்திருந்த கௌதம், அங்கு பரப்பி வைத்திருந்த விதவிதமான உணவுகளை கண்டதும் சற்றே கட்டுப்பாடு இழந்து அளவுக்கதிகமாக உண்டான். அந்த நிகழ்வின் விளைவாக செரிக்காத உணவுகளை அவன் வாந்தி எடுக்கும் அளவுக்கு ஆகியது.  சிறிது நேரம் கழித்து ஐஸ்க்ரீம் மற்றும் கஸாட்டா போன்ற கேக் வகைகளை அனைவரும் உள்ளே தள்ளினர். லெதர் வாலெட்டில் வைத்த பில்லை எவ்வளவு எனறு பாராமலேயே கார்டை தேய்த்தான். ஐந்தாயிரத்து முன்னூறு என்று குறுஞ்செய்தி காட்டியது. கார் வாசலில் காத்திருக்க அனைவரும் அதில் ஆரோகணித்து அலுவலகம் நோக்கி கிளம்பினர். 


ந்த தெருவின் முனையில் இருந்த தள்ளுவண்டியை வந்தடைந்த பெரியவர், கூட்டத்தை பார்த்தவுடன் அரை பிளேட் பிரியாணி என்று மிகுந்த தயக்கத்துடன் ஆர்டர் செய்தார். ஒரு தட்டில் பிளாஸ்டிக் கவர் விரித்து பிரியாணி கிண்ணம் கவிழ்க்கப்பட்டு பெரியவரிடம் தட்டு நீட்டப்பட்டது. அறுபது ரூபாயை கொடுத்தபொழுது "கொஞ்சம், அந்தப்பக்கம் ஓரமாய் போய் சாப்பிடுங்க பெரியவரே" என்ற கடைக்காரர் கூறியதை செவிமடுத்து சற்று தள்ளி நின்று கொண்டார்.


கௌதமின் கார் அந்த பெரியவர் நின்றிருந்த அதே தெருமுனையை வந்தடையும் நேரத்தில் பெரியவர் சற்று ஒதுங்கி நின்று சாப்பிட யத்தனித்தார். வேகமாக திருப்பத்தில் திரும்பிய கௌதமின் கப்பல் போன்ற அந்த பென்ஸ் கார் பள்ளத்தில் ஒருமுறை ஏறி இறங்கியது. விஷ்போன் சஸ்பென்க்ஷன் உதவியுடன் உள்ளே மிக மெலிதான அதிர்வுதான் என்றாலும் வெளியே பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த பெரியவர் ஏந்தி நின்றிருந்த பிரியாணி பிளேட்டின் மீது சகதியுடன் சேர்த்து சிதறியது.  அவர் என்ன நடந்தது என்று உணரும் முன்னரே அந்த கார் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. பெரியவருக்கு அழுகையாய் வந்தது. ஒரு முறை அந்த பிரியாணியை கிளறிப்பார்த்தார். முழுவதும் மண் கொட்டியிருந்தது. பிளாஸ்டிக் கவருடன் அதை குப்பையில் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். 


ங்கிதம் இல்லாத அந்த பசி அவரின் வயிற்றை இன்னமும் பிராண்டி கொண்டிருந்தது. மிகவும் தளர்ந்த நடையுடன் அந்த அடிபம்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார். 

புதன், டிசம்பர் 08, 2021

TEXAS BBQ


சினிமாவில் நடிக்கும் முகம் தெரியாத ரீல் ஹீரோக்களின் சாகசங்களை அங்கலாய்க்கும் நாம், ஏன் நமக்கு அருகிலேயே  சாதித்து கொண்டிருக்கும் ரியல் ஹீரோக்களை பற்றி பேசவோ பாராட்டவோ கூடாது?



சிறு வயது முதலே நண்பன். சிறு வயது என்றால் ஐந்து அல்லது ஆறு வயது முதல் தற்போது வரை, தோராயமாக 30 வருட பழக்கம். கேட்டரிங்கில் பட்டம் அதிலேயே மேற்படிப்பு போன்றவற்றை முடித்து ஒரு கேட்டரிங் கல்லூரியிலேயே விரிவுரையாளராக அவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். தொழில் முனைவராகும் பொருட்டு, சில நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தொழில் தொடங்கி கிட்டதட்ட ஒரு வருட காலம் நன்றாகவே போய்க்கொண்டிருந்த நேரத்தில், பங்குதாரர்கள் நிறுவனத்தில் இருந்த பணத்தை சுருட்டிவிட்டு இவனை ஏமாற்றி சென்று விட்டனர். நம்பவே முடியாத அளவுக்கு கடன் சுமை. கோர்ட், கேஸ் என பல போராட்டங்கள், சுற்றத்தாரின் அவப்பேச்சுக்கள். அந்த வழக்கிலிருந்து வெளிவருவதற்குள் கையில் சேர்த்துவைத்திருந்த கொஞ்ச நஞ்ச பணமும் கரைந்துவிட்டது. திருமணமாகி ஒரு வருடமே ஆகியிருந்தது. கைகுழந்தை வேறு. பெற்றோர் மற்றும் மனைவியின் தேற்றலில் வேலை தேடி வெளிநாடு பயணம். அங்கு சில வருடங்கள் தனிமையாக போராடி ஒரு நல்ல நிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு குடும்பத்தை அழைத்துச்செல்லலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது கொரொனா காரணமாக ஊர் திரும்ப வேண்டிய சூழல். மீண்டும் அதே வெளிநாடு கம்பெனிக்கு வேலைக்கு செல்லலாம் என்று முயன்றால் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படவில்லை.  சொந்த ஊரிலேயே மீண்டும் தொழில் தொடங்க ஆலோசனை செய்தான். எங்கு ஏமாற்றப்பட்டமோ அங்கேயே சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறி. ஒரு சில திட்டங்களை பரிசீலனை செய்துவிட்டு, TEXAS BBQ என்ற பெயரில் புல்லட் barbeque ஒன்றை டிக் அடித்தான். RE புல்லட் ஆர்டர் செய்து அதன் பக்கவாட்டில் barbeque பிட்டிங்க்ஸ் தயாரித்து மாற்றியமைத்து, ஒரு சுபதினத்தில் கும்பகோணத்தில் ஆரம்பித்தும் விட்டான். ஒரு சில தினங்களில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. புல்லட்டிலிருந்து சிறு டிரக் போன்று உருமாறி TEXAS BBQ Truck மற்றும் TEXAS BBQ பெயரிலேயே ஹோட்டல் என வேரூன்றி வளர்ந்துவிட்டது. ஃபிரான்சைஸ் ஆர்டர் முறையில் திருவாரூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி என அவனது நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் பரந்து விரிந்துவிட்டன. கும்பகோணத்தின் அடையாளமாக உருமாறியிருக்கும் TEXAS BBQ வை பார் புகழும் ஒரு நல்ல ஃபுட் செயினாக உயர்த்த அயராது உழைத்துக்கொண்டிருக்கிறான்.

எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் ஃபீனிக்ஸ் பறவை போன்று துளிர்த்தெழுந்து தானும் வாழ வழி கண்டு மற்றவர்களுக்கும் வாழ வழி செய்துகொடுக்கும் நண்பன் இன்னும் பல வெற்றிகள் அடைந்து மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்.