வியாழன், ஜூன் 19, 2025

Once upon a time in Madras


ரொம்ப நாள் கழிச்சு நல்ல ரைட்டிங்ல மூவி பார்த்த ஒரு திருப்தி. பரத், அபிராமி, தலைவாசல் விஜய் என மல்டி ஸ்டார் காஸ்டிங். இவங்க இவங்க நடிப்பு தான் பிராமதம்னு சொல்ல முடியாத அளவுக்கு எல்லாருமே கச்சிதம். எல்லாத்துக்கும் மேல கதை, திரைக்கதை, காட்சிகள் கோர்க்கபட்ட விதம் அருமை.

இது ஒரு hyperlink திரில்லர் மூவி. பல இடங்கள், மனிதர்கள், பொருட்கள் மற்றும் டைம்லைன் ஒரு இடத்துல வந்து அழகா உக்கார விதம் தான் இங்க ஹய்லைட். குழந்தைகளோட பாக்கறத அவாய்ட் பண்ணிடலாம்.
இந்த மாதிரி ரைடர்ஸ்க்கு நிறைய வாய்ப்பு குடுக்கணும். வாழ்த்துக்கள் Prasadh Murugan. Part 2 எப்போ?
ஆஹா மற்றும் அமேசான் பிரைமில்.



ரோஜர் பெடரர்


2003 இருக்கலாம். டென்னிஸ் என்கிற கேம் பற்றி எதுவும் தெரியாது. அது பேரே டென்னிஸ் என்று கூட தெரியாது. பால் பேட்மிட்டன் என்று கூட நினைத்ததுண்டு. அப்பொழுதெல்லாம் டிவியில் அதிகமாக கிரிக்கட், புட்பால், ஹாக்கி, பூஸ்ட் விளம்பரம். அவ்வளவு தான்.
ஏதேனும் கிரிக்கட் ஓடுகிறதா என்று ஒருமுறை ஸ்போர்ட்ஸ் சேனலை அலசிக் கொண்டிருந்தபோது ஒரு சேனலில் இந்த கேம். எதற்கு அதை பார்க்க ஆரம்பித்தேன் என்று புரியவில்லை. இரண்டு நிமிடம் பார்த்திருப்பேன். ஸ்கொர் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். லவ் தேட்டி, டியூஸ் என்று என்னவெல்லாமோ. ஒன்று விளங்கவில்லை. ஆனால் கேமை கவனித்துக்கொண்டிருக்கிறேன். யார் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் கண் அசைக்கவில்லை. காரணம் ரோஜர். எலிகன்ஸ் என்று ஒரு வார்த்தை உண்டு. அது ரோஜர் ஆடும் அந்த ஸ்டைல் தான். முதலில் அவர் யார் என்பதை தெரிந்துகொண்டு பின்பு டென்னிஸ் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டேன்.



ஆஸ்திரேலியன் ஓபன், ரோலண்ட் கேரோஸ், விம்பிள்டன், யூஎஸ் ஓபன் என வருடத்தின் நான்கு கிராண்ட்ஸ்லாமும், அதனுடன் ATP 1000, ATP 500, ATP 250, ATP ரேங்கிங்ஸ் என ஒவ்வொன்றாக புரிய வந்தது. 2003இல் யாரென்று அறிந்திராத ரோஜரை பிடிக்க ஆரம்பித்து அதன் பிறகு டென்னிஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு, அன்றிலிருந்து கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள், 2022இல் அவர் ரிட்டையர் ஆகும் வரை, ரோஜரை பின்தொடர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட டிஜிட்டல் ஸ்டாக்கிங் போல்.
பள்ளியோ, கல்லூரியோ அல்லது வேலைக்கு வந்த பிறகோ, எல்லா நாட்களிலும் காலையில் சிஸ்டம் ஆன் செய்தவுடன் முதல் வேலை கூகிளில் ரோஜர் பெடரர் என்று தேடுவது தான். அதிகாலை எழுந்தவுடன் முதல் வேலையே அதான். கூகிள் நியூஸ் டேபில் அவர் சம்பந்தமான செய்திகளை படித்துவிட்டு தான் மறு வேலை. 2003 என்று சொன்னேன் அல்லவா? அது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் வருடம். விம்பிள்டன் கோப்பை. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, 2005 முதல் 2007 வரை அவரது ப்ரைம் வருடங்கள் என்று சொல்லலாம். அவரது முழு கேரியர் ஹிஸ்டரியில் இந்த மூன்று வருடங்கள் என்பது ரத்தினக்கற்கள் போல. யார் என்றாலும் துவம்சம் தான். அலட்டிக்கொள்ளாமல் விளையாடுவது அவரது தனித்துவமான ஸ்டைல். கிரேஸ், ச்சார்ம், எலிகேன்ஸ என எதுவேண்டுமானாலும் சொல்லலாம். இந்த மூன்று வருடங்களில் இவர் விளையாடும் போட்டிகள் எல்லாம் எனக்கு போரடித்துவிட்டது. ஆமாம். பின்னே, விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால். போட்டியின் முடிவுகள் தெரிந்த பின் அதில் உள்ள சுவாரசியம் என்ன? இரவு இவரது போட்டி லைவ் வருகிறது என்றால், டிவியை ஆப் செய்து பதட்டமில்லாமல் தூங்கிவிடுவேன். மறுநாள் பெடெரர் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு இரண்டு என்கிற நேர் செட்களில் வென்றார் என்கிற ரீதியில் நியூஸ் இருக்கும்.
இவரது வெற்றிக்கான செய்திகள் எனக்கு தனி உத்வேகத்தை அளித்தன. வெற்றி பெற்றால் அந்த செமஸ்டர் பரீட்ச்சை ஈஸி. இல்லையென்றால் கொஸ்டின்ஸ் டப் என்று ஒரு அர்த்தம் பொதிந்து வைத்திருந்தேன். அதே போல் அவரது தோல்விகள் செமஸ்டர் தேர்வு மட்டுமல்ல மற்ற எல்லாவற்றிலும் ஒரு இம்பேக்ட் கொடுத்தது. கிட்டத்தட்ட வேலைக்கு சென்று இரண்டு மூன்று வருடங்கள் வரை இதே பேட்டர்னில் தான் இருந்தேன். பிறகு மெல்ல மெல்ல இந்த OCD குறைந்தது.
2003 முதல் 2007 வரை இவர் துவம்சம் செய்திருந்தார் என்று சொன்னேனல்லவா?. அதில் ஒரு விதிவிலக்கு. அது நடால்.
பெடரரின் சரித்திரம் நடாலின்றி எழுத முடியாது. 2004 இல் இரண்டு பெரும் முதல் முறையாக மியாமியில் மீட் செய்கிறார்கள். காற்றில் பறக்கும் இறகைப் போல் லகுவாக விளையாடிக்கொண்டிருந்த பெடரருக்கு நடாலின் அதி தீவிரமான அல்லது பவர்புல் கிரவுண்ட் ஸ்ட்ரோக்ஸ்சுக்கு பதில் இல்லை. இரண்டு பெரும் இரண்டு வெவ்வேறு விதமான ஸ்டைல். அனல் பறந்த அந்த மீட்டில் நடால் நேர் செட்டுக்களில் இவரை வெல்கிறார். அதற்குப் பிறகு அதே மியாமியில் 2005இல் மீண்டும் பெடரர் நடால் ரீமேட்ச். பெடரர் போராடி வெல்கிறார். கொஞ்சம் நம்பிக்கை மிளிரும் நேரத்தில் காட்சிகள் மீண்டும் மாறுகின்றன. அதற்குப் பிறகு சந்தித்த மேட்ச்களில் எல்லாம் நடாலின் ஆதிக்கம் தான். 2005 முதல் 2008 வரையிலான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் எல்லாவற்றிலும் நடால் பெடெரர் தான் பைனலில் மீட் செய்கிறார்கள். அத்தனையிலும் நடால் தான் சேம்பியன். சரி clay கோர்ட்டில் மட்டும் தான் இந்த தோல்விகள் என்று ரசிகர்களும் பெடரரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால், மனதளவில் பெடரர் உருக்குலைந்தது 2008 விம்பிள்டன் மேட்சை நடாலிடம் தோற்ற தருணத்தில். அதன் பிறகு நடந்த ஆஸ்திரேலியன் ஒபெனிலும் பெடரரை வீழ்த்தியிருப்பார். எப்பொழுது நடாலை மீட் செய்தாலும் பெடரர் choke ஆக ஆரம்பித்தார். அரிதிலும் அரிதாக வெற்றி கிட்டியது. இதுவரை இவர்கள் இரண்டு பெரும் 40 முறை மீட் செய்திருக்கிறார்கள். 16 முறை பெடரர், 24 முறை நடால். அதில் அதிகபட்சம் clay கோர்ட் தான். அதில் முடிசூடா மன்னன் நடால். 2017 இல் இறுதியாக இவர்கள் இருவரும் விளையாடிய ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை மறக்க முடியுமா. மூன்று முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு வெகுண்டெழுந்து அந்த பட்டத்தை கை பற்றியிருப்பார். ஓன் ஆப் தி பெஸ்ட் பைனல்ஸ். அந்த உத்வேகம் அவரை மேலும் இரண்டு கிராண்ட்ஸ்லாம் வெல்ல வைத்தது. மொத்தமாக 20 ஸ்லாம்கள்.
ஒரு காலத்தில் பீட் சாம்பராசின் 14 ஸ்லாம்கள் ரிக்கார்ட் முறியடிக்கப்படுமா என்ற சந்தேகத்தை 2009 இல் பிரெஞ்சு ஓபன் ஸ்லாம் வென்று சமன் செய்திருப்பார். அதன் பிறகு ஆடிய பதிமூன்று வருடங்களில் ஆறு ஸ்லாம்கள். நடால் மற்றும் ஜோகோவிக் காலம் அவை. கிட்டத்தட்ட 86 ஸ்லாம்களில் இவர்கள் கூட்டாக 66 ஸ்லாம்கள் வென்றிருக்கிறார்கள். The big three. இவர்களுடன் முர்ரே உண்டு. மூன்று ஸ்லாம்கள். ஆனால் மூன்று பேருக்கும் நெருக்கமாக டஃப் கொடுத்து விளையாடி இருக்கிறார். இதில் யார் GOAT என்ற விவாதத்திற்கு என்றுமே செவி சாய்த்ததில்லை. அவரவர் விளையாட்டில் அவரவர் the best. ஒன்று மட்டும் நிச்சயம். இவர்கள் டாமினேட் செய்தது போல் எந்த ஒரு விளையாட்டிலும் எவரும் இருபது வருடங்களுக்கு மேல் கோலோச்சியது இல்லை.
237 வாரங்கள் தொடர்ந்து நம்பர் ஒன் பிளேயராக பெடெரர் இருந்தார். கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள். இந்த ரிக்கார்ட் இது வரை முறியடிக்கப்படவில்லை. இனிமேலும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஆக்டிவ் பிளேயராக இருக்கும் ஜோகோவிக் 122 வாரங்கள் மட்டும். தற்போது சின்னர் 53 வாரங்கள். ஆனால் இவர்களால் தொடர்ந்து ஆடும்பொழுது காயம் அடையாமல் இருக்க முடியாது. ஸ்பேனிஷ் காளை மாடை அடக்குவது போல் இவர்கள் டென்னிஸ் கோர்ட்டில் ஆக்ரோஷமாக விளையாடுவது ஒரு மேஜர் காரணம். பெடரர் balet டேன்ஸ் போல் தனது டெக்கினிக்குகளை தகவமைத்திருந்தார். அது அவரது உடலுக்கு நீண்ட காலம் ஒத்துழைத்தது. அதேபோல் இதுவரை ஆடிய 1251 மேட்ச்களில் எந்த ஒரு மேட்சிலும் அவர் retired hurt என்று ஒய்வு பெற்றதில்லை. மிகப்பெரிய ரிக்கார்ட். நம்ப முடியாத பல ஷாட்கள் இன்றும் காண ஆச்சர்யமாக இருக்கும். டென்னிஸில் மட்டுமா ரிக்கார்ட். இவரது நான்கு குழந்தைகளும் ட்வின்ஸ் தான். முதலில் இரு பெண்குழந்தைகள். அதன் பிறகு இரண்டு ஆண் குழந்தைகள். இவரது மனைவியின் பெயர் மிர்கா. அவரும் ஒரு டென்னிஸ் பிளேயர். இவரது கேரியருக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு தன்னை டென்னிஸில் இருந்து விடுவித்துக்கொண்டு இவர் செல்லும் இடங்கள் முழுவதும் கூடவே இருந்தார். பெடரரின் உண்மையான பலம். அதுபோல் உறுதுணையான அவரது பெற்றோர்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால் 2009 இல் நடால் சற்றே மனதளவில் உருக்குலைந்து இருந்தார். காரணம் அவரது பெற்றோர் பிரிவு. அந்த பிரிவு தான் நடாலைத் தோல்வியில் தள்ளியது. பெடரருக்கு 2009இல் பிரெஞ்சு ஓபன் பட்டம் ஜெயித்து கொடுத்தது. elusive grandslam title.
வெற்றியோ தோல்வியோ குழந்தை போல் இவர் அழுவது உண்டு. ஆன் தி கோர்ட் மட்டுமல்ல ஆப் தி கோர்ட்டும் இவர் மேல் மக்களுக்கு மிகப்பெரிய கிரேஸ் உண்டு. உதாரணமாக இவரது கேரியரில் இவர் நடாலை மீட் செய்தது 40 முறை. அதில், 24 முறை பைனல் போட்டிகள். அதில் ஒன்பது மேஜர் (கிராண்ட்ஸ்லாம்) பைனல் போட்டிகள். அதில் மூன்றில் மட்டுமே பெடரர் வெற்றி. மீதி ஆறு நடால். அதாவது 26 கிராண்ட்ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு, வெறும் 20 ஆக சுருங்கக் காரணம், நடால். ஆனால் கோர்ட்டுக்கு வெளியே இவர்கள் இருவரும் நட்பு பாராட்டும் அழகே அழகு தான். அதனால் தான் ஒய்வு பெரும் நாளில் தனக்கு அருகில் நடால் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
சமீபத்தில் இவரது 'ட்வெல்வ் பைனல் டேஸ்' பார்க்க வாய்ப்பு கிட்டியது. அமேசான் பிரைமில். ஒரு விளையாட்டு வீரர் தன வாழ்வில் இரண்டு முறை இறக்கிறார். முதல் இறப்பு அவர் அந்த விளையாட்டில் இருந்து ஒய்வு பெரும் பொழுது நேர்கிறது என்ற ரோஜர் பேசுவதிலிருந்து டாகுமெண்டரி ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற் போல் அவரது ஒய்வு செய்தியை அறிவிக்க அவரது டீம் ரெடியாகிறது. பன்னிரண்டு நாட்கள் முன்பிலிருந்து அவர் ஒய்வு பெரும் அன்று வரை, என்ன என்ன எண்ண ஓட்டங்கள். மன வேதனைகள். ஹய்ஸ் அண்ட் லோஸ் கவரேஜ் தான் இந்த ட்வெல்வ் பைனல் டேஸ். தனது சக போட்டியாளரான நடாலுடன், தான் ஒய்வு பெரும் அந்த நாளை பகிர்ந்து கொண்டார். சிறு குழந்தை போல் இருவரும் அழுதனர். பார்க்கும் எவருக்குமே நீர் கோர்த்துவிடும். அந்த அளவுக்கு அவர்களின் நட்பு தீவிரமானது.
போலவே, ஒய்வு அறிவித்த பின் பல வீரர்கள் காணாமல் போய்விடுவார்கள். பொது இடங்களில் பார்க்க முடியாது. அவர்களை பற்றிய ஒரு செய்தி வெளிவராது. கோஸ்ட் போல் மறைந்து விடுவார்கள். கோடானு கோடி ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருக்கும். அதுபோல் தான் இருக்க விரும்பவில்லை என்றும் அவ்வப்போது exhibition மேட்ச், விழாக்கள், ட்ரைனிங் கோர்ட் என வளைய வருவதை விரும்புவதாக ரோஜர் தெரிவித்திருப்பது மிகவும் ஆழமான ஒரு கருத்து. பரவலாக அவர் விரும்பப்படுவதற்கான காரணம் இதுதான். ஒரு பள்ளியின் Graduation Day அன்று ஒரு உரை நிகழ்த்தியிருப்பார். வாய்ப்பிருந்தால் பாருங்கள். The finest speech,
பெடெரரின் டாகுமெண்டரி என்றவுடன் அவரது கேரியர் முழுவதும் அலசியிருப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் ஒய்வு பெற்ற இறுதி பன்னிரண்டு நாட்கள் மட்டுமே என்பது சற்று ஏமாற்றம். அவரின் கேரியர் முழுவதும் அலசி, முக்கியமான மேட்ச்களை, ஷாட்களை கம்பைல் செய்து ஒரு டாகுமெண்டரி எடுப்பார்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பெடரர் தான் வளர்ந்தது மட்டுமின்றி டென்னிஸ் கேமையும் வளர்த்து எடுத்தார். பிக்காஸோ தூரிகை எடுத்து ஓவியம் தீட்டுவது போல் அவரது டென்னிஸ் கேம் தனித்துவமானது. அதற்கென்று ஒரு புதிய பரிமாணத்தையும் அளித்தார். ஒரு திறமையான விளையாட்டுவீரர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதரின் சகாப்தத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை தான்.
லவ் யூ ரோஜர்
❤️❤️❤️

புதன், ஜூன் 18, 2025

எ மென் கால்டு ஓட்டோ


டாம் ஹென்க்ஸ் நடிப்பில் 2022இல் வெளியான திரைப்படம்.
மனைவியை இழந்த ஓட்டோ (டாம் ஹென்க்ஸ்) ஆறு மாதமாக தனிமையில் வாடுகிறார். அதனாலேயே தற்கொலைக்கு முயல்கிறார். அப்பொழுது அவரது எதிர் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் குடி வரும் ஒரு குடும்பத்திற்கும் இவருக்கும் நடுவிலே ஒரு சின்ன பிணைப்பு ஏற்படுகிறது. தனிமையின் காரணத்தினால் சமூகத்தின் மீது விரக்தியில் இருக்கும் ஓட்டோ, அந்த குடும்பத்தின் அன்பு காரணமாக, தனிமையிலிருந்து சற்றே வெளிவரும் வேளையில் இதயம் செயலிழந்து இறந்து போகிறார். ஓட்டோவின் இந்தப் பயணம் தான் கதை.



ஒரு சிறு குடியிருப்பில் மூன்று நான்கு குடும்பங்களுக்கு மத்தியில் கதை நகர்கிறது. ஒரு ட்ரென்ஸ்ஜெண்டர் கதாபாத்திரமும் இரண்டு மூன்று காட்சிகளில் வருகிறது. இப்பொழுதெல்லாம் இது போன்ற கதாபாத்திரங்களை வலிந்து திணித்து விடுகிறார்கள் போல் தெரிகிறது. LGBT கம்யூனிட்டி மக்கள். டாம் ஹென்க்சின் இளமைப்பருவ காதல் ஒரு அழகான ஹைக்கூ போல பிளாஷ்பேக்கில் வருகிறது. எல்லா மனிதர்களுமே நல்லவர்களாக வருகிறார்கள்.
ஒரு நல்ல பீல் குட் மூவிக்கு தாராளமாக டிக் அடிக்கலாம். நெட்பிலிக்ஸ்

முதுமை


வெளியே செல்லும் நேரங்களில் அவ்வப்போது தென்படும் வீடற்ற வயோதிக மனிதர்களின் முகங்களை பார்க்கும் பொழுதெல்லாம், 'என்ன காரணத்திற்காக இவர் இங்கு அநாதரவாக நிற்கிறார்?, சொந்த பந்தங்கள் இல்லையா? வீடு எங்கே? வீட்டில் இருந்து குடும்பத்தினரால் விரட்டிவிடப்பட்டவரா?, பிசினசில் தோல்வி, முன்கோபம், பகை, ஏதேனும் குற்றம் புரிந்தவரா? குடி நோயாளியா? நம்பிக்கை துரோகத்தால் ஏமாற்றப்பட்டவரா? அல்லது அவர் தலையெழுத்தே அப்படியா? என ஒரு ஆயுள் முழுவத்துக்குமான கேள்விகளையும் வருத்தங்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித பயத்தையும் உண்டு பண்ணிவிடுகின்றன.
முதுமை பருவம் என்பது எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஆரத்தழுவி ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.




மொபிலிட்டி முதல் காரணம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுது முதியவர்களால் வேகமாக அலல்து மூவ் செய்வது என்பதே ஒரு ஹெர்குலியன் டாஸ்க். அனைவருக்கும் ஈடு கொடுத்து நடப்பதே சிரமம். அதனாலேயே பல முதியவர்கள் சுற்றுலாக்களை தவிர்த்து விடுவதுண்டு.
உணவு ஒவ்வாமை அல்லது செரிமானம் மற்றொரு காரணம். எல்லா நேரங்களிலும் கிடைப்பதையெல்லாம் அரவை மெஷின் போல் தின்று கொண்டிருக்க முடியாது. கிட்ஸ் பிரெண்ட்லி நூடுல்ஸ் கூட போகுமிடமெல்லாம் கிடைத்துவிடுகிறது. ஆனால் ஓல்ட் ஏஜ் பிரெண்ட்லி இட்லி, இடியாப்பம் ஆவியில் வேக வைத்த உணவுகள் கிடைப்பது குதிரைக்கொம்பு தான். பரோட்டா பரவிய அளவுக்கு இட்லி கிடைப்பதில்லை.
உடல் நலம் மற்றும் நோயின்மை என்பது மற்றொரு பிரதான காரணம். படித்து முடித்து வேலை பார்க்கும் போது சற்று ஓய்வெடுக்கலாம் என்று மாங்கு மாங்கென்று படித்து வாழ்க்கையின் அடுத்த கட்டமான வேலைக்கு நகரும்போது தான் 'ஒய்வு என்பது கல்லறையில் தான்' என்கிற அந்த உண்மை சுடும். அது உரைக்கும் நேரத்தில் குடும்ப என்கிற ஒரு கட்டுக்குள் இருப்போம். தான் தோன்றித்தனமான முடிவெல்லாம் எடுக்க முடியாது. நம்மைச் சுற்றி நான்கு ஜீவன்கள். வெக்கம், அவமானம் தோல்வி போன்ற பல நெகட்டிவ் உணர்வுகளை சகித்து ஒய்வு பெரும் நாளை எதிர்நோக்கி காத்திருப்போம். உடல் என்ன மெஷினா? இத்தனை நாள் இழுத்த இழுபறிக்கெல்லாம் தேய்மானம் ஏற்பட்டு பல உடல் உபாதைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை எட்டிப்பார்க்கும். வேலைக்கு ஓடும் வேகத்தில் உடல் தரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தியிருப்போம். நாள்பட்ட நோய்கள் உடலை பதம் பார்த்து கொண்டிருக்கும்.
இறுதியாக பணப் பற்றாக்குறை அதிமுக்கியமான ஒரு காரணம். எல்லாமே குழந்தைகளுக்கென்று கிஞ்சித்தும் யோசிக்காமல் வரவுக்கு மீறி எடுத்து வாரிச் செலவு செய்துவிட்டு, முதுமை வரும் பட்சத்தில் அவர்களை நாடி நிற்கும் நிர்கதி யாருமே எதிர்பார்க்காத மற்றும் விரும்பாத ஒன்று. சொந்தமாக ஒரு வீடாவது வாங்கி விட மாட்டோமா?, குழந்தைகளை நல்ல கல்லூரியில் படிக்க வைத்து விடமாட்டோமா? ஒரு தொழில் அமைத்து கொடுத்து வாரிசை ஒரு முதலாளியாக பார்த்து விடலாம் என எண்ணற்ற லட்சியங்களில் தங்களது இளமையையும், செல்வத்தையும் தொலைத்தவர்களின் மிச்சம் இருக்கும் சுய மரியாதையை காப்பாற்றும் ஒரு சிறு தொகையே இந்த ஓய்வூதியம். அரசாங்கத்தில் வேலை பார்ப்பவரைத் தவிர எல்லோருக்கும் ஓய்வூதியம் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் 2004க்கு பிறகு சேர்ந்தோருக்கு அந்த ஓய்வூதியமும் கிடைக்காது. வேலை பார்க்கும் பொழுதே ஓய்வு காலத்திற்கு திட்டமிட வேண்டும்.
நேரம், பணம் மற்றும் உடல் நலம் இந்த மூன்றுமே ஒருவருக்கு ஒருசேர கிடைத்துவிடுவதில்லை. இளமையில் கிடைக்கும் பணத்தையும் உடல்நலத்தையும் விரயம் செய்து முதுமை பருவத்துக்கு வந்திருப்போம். அப்பொழுது, ஒன்று பணம் கையில் இருக்காது. அல்லது உடல் நலம் இருக்காது. இழந்ததை எண்ணி துக்கப்பட அல்லது கிடைத்ததை நினைத்து கவலைப்பட செழிப்பாக நேரம் மட்டும் கிடைக்கும். கண்ணீர் அல்லது உதட்டோரம் பூக்கும் மென்சிரிப்பு இலவசம்.
பஸ் ஸ்டாப்பில், டைனோசர் போல் பெரிதாக இருக்கும் மேம்பாலத்திற்கு அடியில் ஒரே ஒரு கட்டைப்பையை தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கும் வயோதிகர்கள் க்ஷண நேரத்தில் பல சிந்தனைகளைத் தூண்டி விடுகிறார்கள். எழுபது வயதில் குச்சி ஊன்றி தள்ளாடி நடந்து வந்து ஒரு வயோதிகப் பெண்மணி யாசகம் கேட்டது இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. யாசகம் கேக்கும் அந்த கை எத்தனை பேருக்கு அன்னமிட்டிருக்கும்? அதில் ஒருவர் கூடவா இவருக்கு இல்லை?
உறவினர் ஒருவருக்கு டெய்லி நர்ஸ் தேவைப்பட்ட சமயத்தில் அதுகுறித்து விசாரிக்க ஒரு ஹோமிற்கு சென்றிருந்தோம். இரண்டு மூன்று ரூம்களில் பெரியவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவருக்கு நூறு வயது. ஹைகோர்ட் ஜட்ஜ். ஒரு பெட்டில் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் விரிந்து அகோரமாக படுத்துக்கிடந்தார். இல்லை படுக்கவைக்கப்பட்டிருந்தார். நிலை குத்திய பார்வை மேனோக்கி இருந்தது. அவரது வாரிசுகள் வெளிநாட்டில். இவருக்கு மாதா மாதம் பராமரிப்பு தொகை வந்துவிடுகிறது. மக்கள் வருவதில்லை. வீடியோ கால் தான். கைகளும் காலும் ஒத்துழைக்காத அந்த வயதில் அவரது மனம் எதை அசை போட்டுக்கொண்டிருக்கும்? சிறு குழந்தையில் ஓடி ஆடியதையா? வேலைக்கு சென்று முதல் சம்பளம் வாங்கிய நாட்களையா? திருமணம் முடிந்து புதுப்பெண்ணுடன் சுற்றுலா சென்றதையா? பேர் சொல்லும் வாரிசு என்று தற்போது வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சியதையா? பெற்றோரையா? நண்பர்களையா? தன்னை நட்ட நடுவில் விட்டுச்சென்ற மனைவியையா? எதை யோசித்துக்கொண்டிருப்பார்? இரு கண்களின் ஓரம் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கூட நின்று பார்க்க முடியவில்லை.
கொடிதினும் கொடிது இந்த முதுமையில் தனிமை. என் முடிவு இதில் எதைச்சேரும் என்று எண்ணும்பொழுது தான்...
ஆனால், ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒரு போட்டோவையோ, மனிதரையோ, ஞாபகங்களையோ திருப்பி பார்க்கும் நேரங்களில், இந்த வாழ்க்கையை இந்த தருணத்தை இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று ஒரு எண்ணம் யவருக்குமே தலை தூக்காமல் இருந்ததில்லை.
இந்த தருணத்தை மிஸ் செய்துவிட்டோம் என்று நாம் நாளை வருத்தப்படக்கூடிய அந்த கணம், இன்று நம் கையில் ப்ரெசன்ட்டாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்.
ஶ்ரீருத்

தக் லைப்

மூத்திரத்துக்கு முட்டுச்சந்து மாதிரி அது என்ன கேங்ஸ்டர் படம்னாலே மும்பைக்கு டெல்லிக்கு ஓட வேண்டிது. அதுவும் இடைக்கிடைல ஹிந்தி டைலாக் அதுக்கு சப்டைட்டில் வேற. சரி மன்னிச்சு.

நல்ல கேஸ்டிங், நல்ல மியூசிக், எடிட்டிங், மேக்கப், நடிப்பு, ஃபைட், ஒளிப்பதிவு அப்டினு எல்லாம் இருந்தாலும் அந்த கதை எங்க? கதை. கதை. இஷ்டத்துக்கு எழுதிருக்கானுங்க.
மணிரத்னத்துக்கு நல்ல வர்ற ஒரு ஏரியானா அது லவ் ஸ்டோரீஸ் தான். அதுல இறங்கி அடிக்கிறத விட்டுட்டு இந்த கேங்ஸ்டர்லாம் எதுக்கு. எப்படி இதுக்குலாம் ஒரு ஸ்டோரி டிஸ்கசன்னு ஒன்னு நடத்துனாங்க. ஆடியன்ஸ் பாவம்னு AD ஒருத்தன் கூடவா சொல்லமாட்டான். பெரிய இயக்குனரு மேஜிக் பண்ணுவாருனு நினைச்சானுங்களோ என்னமோ.
இப்போல்லாம் அறிமுக இயங்குனருங்க பல பேரு நல்ல கதை எழுதி பட்ஜட்க்குள்ள அருமையா படம் எடுத்துடுறாங்க. வெகு ஜனமும் ரசிக்குது. ஹிட் ஆகுது. ஓடுது. இந்த தக் லைப் படம் எந்த மாதிரி ஆடியன்ஸுக்கு பிடிக்கும்னு தெரில.




த்ரிஷாவை அப்பன் வச்சிருக்கான். அவன்கிட்டேந்து பையன் அவளை ஆட்டைய போடுறான். 'நான் பொறந்திருக்கவே கூடாதுன்னு' த்ரிஷாக்கு ஒரு டயலாக் வரும். சொல்லப்போனா அந்த படத்துல நடிச்சிருக்கவே கூடாது. அவ்ளோ பங்கம்.
சிக்கா சிக்குன்னு ஒரு பாட்டு கேக்குற மாதிரி இருக்கேன்னு நினைக்கும்போதே நடுவுல சம்பந்தமே இல்லமா கத்தி சாரி பாடி வச்சிருக்காப்புல. அஞ்சு வண்ணப்பூவே ஆறுதல். இறுதில அந்த விண்வெளி நாயகான்னு பில்டப் எதுக்கு? என்னமோ போடா மாதவா.
அதுல பாருங்க. படத்துல பிரமாதமா ஒரு டைலாக் வரும். கமல் சிம்புவை சந்தேகப்பட்டுருவாரு. சிம்பு கோச்சிப்பார். அப்போ நாசர் வந்து சமாதானப்படுத்தவாப்புல. 'டேய் என் தம்பி இப்டி தான். பந்தில உக்கார வச்சு இலை நிறைய வகை வகையா பரிமாறி ஓரத்துல பீயை தடவி விட்டுடுவான். நீ இத பெரிசா எடுத்துக்காத' அப்டினு சொல்லுவார்.
அதுமாதிரி பந்தில வகை வகையா பரிமாறுன மாதிரி எல்லாம் நல்லாருந்தும் ஓரத்துல இந்த கதையை தடவி விட்ருக்கார் நம்ம மணி.

சேர்க்கை


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
அளவாய் உண்டு தேவைக்கேற்ப உறங்கி எழும் உடல் சார்ந்த ஒழுக்கம் கூட ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அகத்தூய்மை. மனதிற்கான ஒழுக்கம்?
ஐந்து வயது முதல் இருபது வயது வரை வீட்டில் இருக்கும் நேரத்தை விட, நாம் வெளியில் இருக்கும் நேரம் மற்றும் பழகும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கிலே அடங்காது. சில பாசிங் க்ளவுட்ஸ் போல். அவ்வப்போதைக்கு இருக்கும். பின்பு மறைந்துவிடும். சில நாடன் காடன் போல் இறுதிவரை ஒட்டி நிற்கும்.
நன்மக்களுடனான சேர்க்கை எவ்வளவு முக்கியமோ அதைவிட அதி முக்கியம் எவர் எவருடன் சேரக்கூடாது என்பதும். கூட படித்த எத்தனையோ நண்பர்கள் ஒரு கட்டத்தில் தடம் மாறி விலகிச் செல்வதை கவனித்திருக்கிறேன். முன்பெல்லாம், அதாவது பள்ளியில் பயிலும் பருவத்தில், சிகரெட், பீர், கொஞ்சம் தாதாயிசம் போன்றவை படிப்பிற்கு, ஒழுக்கத்திற்கு கேடு விளைவிப்பவையாக இருந்தது. ஆனால், இப்பொழுதெல்லாம் எல்லாவற்றையும் தாண்டி போதை வஸ்துக்கள் மெல்ல மெல்ல வேரூன்ற ஆரம்பித்துவிட்டன. கண் முன்னேயே பல இளம் சிறார்கள் கெட்டொழிவதை பார்க்க முடிகிறது. அதட்டி அடக்க முடிவதில்லை. போதை தலைக்கேறி கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். கொலையும் செய்யத் தயங்குவதில்லை. தடம் மாறும் இளைய சமுதாயத்தை திருத்துவதா? சமூக விரோதிகளை எதிர்ப்பதா? அல்லது அதிகாரத்தை பகைத்துக் கொள்வதா? என்று காவல் துறையே குழம்பி திகைத்து நிற்கிறது.
நல்ல வேளையாக பால்யத்தில் சேர்க்கை ஒழுங்காக அமைந்தது. இன்று வரையிலும் தொடர்கிறது. ஏதேனும் மனதிற்கு சந்தேகமாக நெருடலாக இருந்தால் கழுவிகிற நீரில் ஓடும் மீனைப் போல் விலகி ஓடி விடுவதும் இந்த நற்சேற்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.



நன்றாக நினைவிருக்கின்றது. பாளை தூய யோவான் மேனிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் வரையில் இன்டெர்வல் அல்லது ரீசஸ் பீரியடில் கிடைக்கும் பத்து நிமிடங்கள் ஜோசப் மேத்யூவுடன் நேரம் போக்குவேன். கெமிஸ்ட்ரியில் புரியாத ஆர்கானிக் பார்முலா மற்றும் இன்டெக்ரல் கேல்குலஸ் போன்ற இத்யாதிகளின் டென்ஷனிலிருந்து அந்த பத்து நிமிடம் ஒரு பெரிய வடிகாலாக இருக்கும். PET பீரியடில் பிரிஜித் பாலா மற்றும் சுப்பையாவுடன் ஒரு நெடு நடை. மற்றவர்கள் எல்லாம் ஏதேனும் விளையாடிக்கொண்டிருக்க க்ரவுண்டின் கடைக்கோடியில் இருக்கும் கடைக்குச் சென்று அந்த வாரத்தில் சேர்த்த ஐம்பது பைசா அல்லது இரண்டு ரூபாய்க்கு அப்பளப்பூ வத்தல் அல்லது ஜவ்வு மிட்டாய் வாங்குவோம். அதுதான் அந்த வாரத்தின் மிகப்பெரிய சந்தோசம்.
சோமா ராகுல் பாலமுருகன் சீதாராமானுடனான மதிய நேர வேப்ப மர உணவு இடைவேளை இன்றுவரை ரம்மியமாயிருக்கிறது. அதிகபட்சம் கில்லி விஜய் தில் விக்ரம் அவ்வளவுதான் பேச்சு நீளும். அதைத் தாண்டினால் படிப்பு தான். ஆரோக்கியமான போட்டி ஒன்று நிலவியது.
ஸ்கூல் செல்லுவதற்கு அன்புநகரிலிருந்து குறைந்த பட்சம் ஐந்து கிலோமீட்டர். திருச்செந்தூர் மீட்டர் காஜ் ரயில்வே தண்டவாளங்களில் சைக்கிளை அலேக்காக தூக்கி வைத்து உழவர் சந்தை தாண்டி மெயின் ரோட் பிடித்து பள்ளி செல்லுவதற்கு அரை மணி நேரம் ஆகிவிடும். சேம்சனுடன், ஜாபருடன், டேவிட்டுடன், சுதனுடன் கதைத்த கே டிவி சினிமாக்கள், சச்சின் செஞ்சுரி, சேவாக் அதிரடி, WWE படிஸ்டா ராக், அண்டர்டேக்கர் என பலவும் அந்த ஸ்கூல் செல்லும் வழி முழுவதும் இன்றும் கூட சிதறி கிடக்கும். தினமும் அந்த ஒரு மணி நேரம் அவர்கள் தயவில் உருண்டோடியது.
அன்பு நகர் காலனியில் வெளிச்சமின்றி கிடக்கும் குடிநீர் பம்ப் தொட்டி அடியில் கூடும் கூட்டத்தில் ஒரு நாளும் நின்றதில்லை. idle mind டெவில் workshop என்பது போல் குட்டிச்சுவர் பேச்சு என்றுமே உருப்பட்டதில்லை. இரண்டு மூன்று பேர் போலீசில் சிக்குமளவுக்கு போனது. செல்வா விநாயகர் கோவிலில் விளக்கு போட்ட நேரம் இந்த தொட்டி பேச்சிலிருந்து காப்பாற்றியது.
கல்லூரி காலத்தில் கூட பாண்டி மூர்த்தி சதீஷ் வல்லபன் இபு லக்ஷ்மன் தாஸ் அசன் ரமேஷ் என இன்னும் பலர். அத்தனை பேரில் ஒருவர் கூட எந்த தீய பழக்கமும் இல்லாதவர்கள். நினைக்காதவர்கள். இருபது வயதில் டிமோன் பும்பா பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தோம் என்றால் நம்ப முடிகிறதா. மாலை வந்தவுடன் போகோ சேனலில் அனிமேட்டட் பீன் சீரிஸ். காம்பவுண்ட் கிரிக்கட். கல்லூரி, நூலகம், வீடு என்று தன்னை அறியாமலையே கோடு கிழித்தாற் போல் ஓடிவிட்டது. எங்குமே தடம் மாறவில்லை. அது போன்ற சகாக்களும் அவனுருளால் உடனிருந்ததில்லை.
எதற்குச் சொல்கிறேன் என்றால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கொண்ட பெற்றோர்கள் இந்த சேர்க்கையை உன்னிப்பாய் கவனிப்பது முக்கியம். நீங்கள் பிள்ளைகளை வைத்து ஒரு கனவு கோட்டை கட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் அங்கே திசை மாறும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். முளையிலேயே கிள்ளி விடுதல் நலம். இருக்கும் வேலைகளுக்கிடையில் இதை எப்படி மேய்ப்பது என்று அங்கலாய்த்துக்கொள்ளாமல் கவனம் கொள்ளுதல் நலம்.
அவ்வப்போது நன்றியுணர்வுடன் நினைத்துக்கொள்வது உண்டு. உடல் நலம், மனநலம், தீங்கிழைக்கா எண்ணங்கள், நற்சிந்தனை, உதவும் எண்ணம் என இன்னும் எத்தனை எத்தனையோ நல்ல விஷயங்கள் நண்பர்களால் அவர்கள் அறியாமலேயே இத்தனை காலம் கற்று தரப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் கூட. இந்த சேர்க்கை தான் ஒரு நல்ல கல்லூரி மற்றும் வேலையில் அமர உதவியிருக்கிறது. மனைவியிடம் கனிவாய் விட்டுக்கொடுத்து போகச் சொல்லுகிறது. அடுத்த தலைமுறையான குழந்தைகளிடமும், முந்தைய தலைமுறையான பெற்றோரிடமும் தன் நிலை உணர்ந்து நடந்துகொள்ள வைக்கிறது. அதற்காக உள்ளுக்குள் அடியோடு மிருகம் இல்லை என்று கூறுவதற்கில்லை. ஆனால் அந்த மிருகம் கொன்று மனிதம் முளைக்க இந்த சேர்க்கை மிக மிக உதவியிருக்கிறது. அகண்ட இருளில் வழிநடத்தும் லாந்தர் போல.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.

டிரவுசர் பாக்கெட் துக்கடா

கிரிக்கெட் எல்லாம் அப்போது விளையாடத் தெரியாது. அப்போது மட்டும் இல்லை இப்போதும் தான்.

வாழ்நாளிலே இதுவரை இரண்டே இரண்டு முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஸ்கூல் அனுவல் லீவில் இருக்கிறவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு வீட்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் இல்லையென்றால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஒரு கூட்டம் விளையாடும். அதுபோல் இரண்டு முறை.
ஹைகிரவுண்ட் அன்புநகர் ஹவுசிங்க் போர்ட் பின்னாடி இருக்கும் ஒரு கிரவுண்ட். பாளையம்கோட்டை GH இல் இருந்து அங்கு வந்து தான் உடலை புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். அது ஒரு முற்காடு. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது ஒரு சுடுகாடு. ஹவுசிங்க் போர்டிலிருந்து பெருமாள்புரம் நீச்சல் குளம் வரை செல்லுவதற்கு அந்த முற்காட்டில் மணலில் ஒரு பாதை இருந்தது. ஒத்தையடி பாதை போல இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகி ஒரு மைதானம். அதில் தான் கிரிக்கெட் விளையாடுவார்கள். உச்சி வெயில். இப்போது தான் வெயில் எல்லாம். அந்த வயதில் வெயில் எல்லாம் உடலுக்கும் தெரியாது. மனதிலும் உரைக்காது. வீட்டை விட்டு வெளியே வரும் ஒரு சுதந்திரம். அது மட்டும் தான். அதற்கான விலை எதுவென்றாலும் தரக்கூடிய வயது.


அப்பொழுது அந்த டீம் சேஸிங் செய்து கொண்டிருந்தது. எல்லோரும் அவுட். கடைசி ஒருவன் நின்று கொண்டிருக்க, பதினோராவது ஆள் அங்கு இல்லை. திசை தெரியாமல் அங்கே நான் போய் நிற்க, டீமில் ஆள் இல்லை என்று என்னை இழுத்து விட்டார்கள். பேட்டிங். நான் வலது கை பழக்கமுடையவன். ஆனால் பேட்டை வாங்கி நின்ற பொழுது இடது கை தான் வாகாக வந்தது. சரி அடிப்போம் என்ற தொனியில் நான் நிற்க, அதுவே அவர்கள் அனைவருக்கும் ஒரு ஷாக். பெரிய ஆட்டக்கார புலியாக இருப்பனோ என்று. முதல் பந்து எதிர்கொண்டேன். மட்டை காற்றில் சுழன்று, பந்து கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது. கீப்பர் நன்றாக காத்து வருகிறது என்றான். அதில் உள்ள வஞ்ச புகழ்ச்சி எனக்கு புரியவில்லை. இரண்டாவது பந்து, மூன்றாவது பந்து என எல்லாமே எப்படி என்னைத் தாண்டி பின்னால் சென்றது என்றே தெரியவைல்லை. எதிர் சைடில் நின்றவன் ‘டேய் தொட்டு விட்டு ஓடு. போதும்’ என்றான். வச்சிக்கிட்டா வஞ்சனை செய்றேன் என்று நான். ஐந்தாவது பால் என்று நினைக்கிறேன். பந்தை குறி பார்த்து முட்டி போட்டு ஒரே சாத்து. சிக்சர். டீம் ஜெயித்துவிட்டது. எதிர் அணியில் இருந்து இரண்டு மூன்று பேர் ‘அது எப்படி நீ லெஃப்ட் ஹேண்டில் சிக்சர் அடிக்கலாம்?’ என்று அவர்களுக்கு இறுதி வரை பொறுக்கவே இல்லை.
இரண்டாவது முறை ஹவுசிங் போர்ட் காலனிக்குள்ளாகவே விளையாடிய ஞாபகம். மரத்துக்காக இருக்கும் சிமிண்ட் தொட்டியில் கரிக் கோடு கிழித்து. இப்பொழுது வலது கை பேட்டிங். எப்படி ஒரு கண்சிஸ்டன்சி பாருங்கள். எறிபந்து தான். கண்ணை மூடி சுழற்று சுழற்று என்று சுழற்றியதில் எக்குதப்பாக இரண்டாவது மாடி வீட்டுக்குள் கிச்சன் வழியாகப் போய் விழுந்தது. அவ்வளவுதான். பந்தை தரமாட்டேன் என்று கூறி அன்று ஆட்டம் கிளோஸ். இரண்டாவது விக்கி பந்து வாங்குவதற்கெல்லாம் காசு கிடையாது. ‘நீ தாம்ல வாங்கித் தரணும்’ என்ற பஞ்சயாத்துக்காகவே அதற்குபின் விளையாடியதில்லை.
ஹவுசின் போர்ட் வருவதற்கு முன், EB காலனி ரோட்டில் வைத்தியநாதன் வீட்டில் வாடகைக்கு இருந்தபோது தென்னை மட்டை மற்றும் தென்னங்குறுத்து வைத்தெல்லாம் விளையாடிய ஞாபகம் வருகிறது. விசாலம் மாமி வீட்டில் வாடகைக்கு இருந்த கார்த்தி தான் பார்ட்னர். சக்தி சக்தி சக்திமான் ஒளிபரப்பான காலம். ஞாயிறு தோறும் விசாலம் மாமி கூப்பிட்டு ஒரு மணி நேரம் ஸ்லோகம் பாட வைப்பார். ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும், ஓம்காரம் பிந்து சம்யுக்தம், உபாஸ்மகே’ என்று முக்கால் மணி நேரம் ஸ்லோகம் கிளாஸ். வாசித்து முடித்தால் கற்கண்டு, அவல், பொறி என்று ஏதாவது ஒரு பிரசாதம். மாமா ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து ஹிந்துவை விடாது வாசித்து கொண்டிருப்பார். கார்த்தி பன்னிரெண்டாவது முடித்து திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் பொறியியல் சேர்ந்தான். அங்கு சேரக் காரணம் என்னவென்று அவர்கள் அம்மாவிடம் கேட்ட போது பாரதிதாசன் என்று பெயர் வைதிருக்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கும் என்றார். அந்த அளவிற்கு தான் அப்போது எக்ஸ்போசர் (இணையம் பரவலாகா நேரத்தில்).
வைத்தியநாதன் சாரின் பஜாஜ் ஸ்கூட்டர் வீட்டிற்கு வெளியில் நிற்கும். பெட்ரோல் மூடியைத்திறந்து அதை வாசனை பிடிப்பது ஒரு அலாதி அனுபவம். டுர் டுர் என்று ஸ்டாண்ட் போட்ட வண்டியை ஓட்டிக்கொண்டு. ஸ்கூல் வாத்தியார் பிச்சை ஜெபராஜின் LML வெஸ்பா. பில்லியனில் உக்காறுபவர்கள் முதுகை சாய்ப்பதற்கு ஏதுவாக ஒரு பேக் ரெஸ்ட் இருக்கும். அந்த பேக் ரெஸ்டை அட்ஜஸ்ட் செய்து முன்னாடி கொண்டு வந்து ஓட்டுபவருக்கு மட்டும் வைத்துகொள்ள முடியும். இப்பொழுது அது போன்ற வண்டிகள் இல்லை. பில்லியன் சீட் இல்லாத புல்லட்டை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். தனிமையிலே இனிமை போல.
சொல்லவந்தது, இந்த கிரிக்கெட் விளையாடும்போது மாது என்றொரு அண்ணன் இருப்பார். மாதவன் முழுப் பெயர். அன்புநகர் ஏ பிளாக்கிலிருந்து வருவார். பன்னிரெண்டாவது வகுப்பு படித்து கொண்டிருந்தார் என்று ஞாபகம். வெள்ளை வெளேரென்று. ரிச்சி ரிச் அண்ணன். காட்டன் டிரவுசர். பீச் ஷர்ட் என்று அப்போதே ட்ரெண்ட். டிரவுசர் பாக்கெட்டில் தீனி ஐட்டங்கள் இருக்கும். விளையாடும் பொழுது அவ்வப்போது பாக்கெட்டில் கையை விட்டு ஓரொரு அயிட்டமாக எடுத்துக் கொடுப்பார். முறுக்கு, சேவ், தட்டை, பக்கோடா. பந்தைத் தொடுகிறோம் மண்ணில் கை வைக்கிறோமே என்றெல்லாம் சுத்தம் பார்த்ததில்லை. வாங்கி ‘லபக்’ தான்.
அதில் ஒரு கார வகை. டைமண்ட் ஷெப்பில் இருக்கும். கொஞ்சம் ஊதினாற் போல. என்ன பெயர் என்று தெரியவில்லை. திருச்சியில் பல கடைகள் எறிபார்த்து அவர்களிடம் இது போல விளக்கி, அங்கு கண்ணாடி பேட்டியில் இருக்கும் தீனிக்களை எல்லாம் வெறிக்க வெறிக்க பார்த்து, ம்ஹூம். கிடைக்கவில்லை. நிரம்ப நாள் கழித்து அதன் பெயரை கண்டுபிடித்தேன். துக்கடா. இங்கு கிடைப்பதில்லை. நெல்லையில் இருக்கும் நண்பனிடம் பார்சல் கேட்டு மெசேஜ் அனுபியிருந்தேன். இரண்டு வருடமாக பேக் செய்து கொண்டிருக்கிறான். டன் கணக்கில் அனுப்புகிறான் என்று நம்புகிறேன்.
நேற்று ரோட்டில் செல்லும்போது ஒரு சிறுவன் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்து சாப்பிட்டதை பார்த்ததன் விளைவு, இந்த டிரவுசர் பாக்கெட் துக்கடா, பஜாஜ் பெட்ரோல் வாசனை, தென்னங்குறுத்து கிரிக்கெட், ஸ்லோகம் சொல்லும் விசாலம் மாமி, அன்புநகர், ஹைகிரவுண்டு என்று நினைவுகள் அலைபுரண்டுவிட்டது.
நம்மிடம் மிச்சம் இருப்பது இந்த நினைவுகள் மட்டும் தானே !!!

டிடி நெக்ஸ்ட் லெவல்


FDFS . இது தான் முதல் முறை. பெரிய பெரிய நடிகர்களுக்குக் கூட இந்த FDFS சென்றதில்லை. நேபோட்டிசம் இல்லாத ஒரு நடிகர். அத்தனை ஹீரோக்களுக்கு மத்தியில் தானும் ஒரு கதாநாயகன் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்துவதே பெரிது. தனக்குண்டான கிரௌண்ட் இதுதான் என்று ஒரு வட்டத்துக்குள் ஆடி அந்த பிம்பத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். அதற்கே வாழ்த்துக்கள் சாண்டா.
நெக்ஸ்ட் லெவல் பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். டிடி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு இல்லை. ஆனால் மோசமில்லை.
பளிச் சந்தானம். மஷ்ரூம், டபிள் சைட் என்றெல்லாம் கலந்துகட்டி ஒரு தினுசான ஹேர் ஸ்டைலில் அசத்தலாயிருக்கிறார். லூஸ் பேண்ட் ஷர்ட் கேன்வாஸ் சகிதம் உடலை குறுக்கி கைகளை ஆட்டி ஆட்டி என தற்காலத்து புள்ளிங்கோ மற்றும் யோ யோ கதாபாத்திரத்தில் கனகச்சிதம். ஹீரோயின் கீத்திகா. எங்கிருந்துதான் அள்ளி வருகிறாரோ? இதுவரை கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களிலும் நவாம்சங்களுடன் ஹீரோயினை செலெக்ட் செய்திருக்கிறார்.




தங்கையாக யாஷிகா ஆனந்த். என்னடா நைட்டி அணிவித்து தண்ணீர் குடம் தூக்கி வர சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தால், அடுத்த காட்சியிலேயே ஜீன்ஸ் ட்ரவுசர் கொடுத்து இங்கிட்டும் அங்கிட்டும் திரிய விட்டிருக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் நடிகை கஸ்தூரி. 51 வயதில் யாஷிகாவிற்கே டப் கொடுக்கிறார்.
கவுதம் வாசுதேவ் மேனன் மேல் என்ன காண்டோ தெரியவில்லை. வித்தியாசமான கதாபாத்திரம் என்று கோமாளி போல் ஒரு வேடம். செல்வராகவன் சிறப்பு. தவிர நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன், லவுட் ஸ்பீக்கர் ரெடின் கிங்ஸ்லி என்று ஒரு பட்டாளம். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
லொள்ளு சபா மூலம் கோலிவுட்டில் விசிட்டிங் கார்ட் கொடுத்த சந்தானம் இதில் கையில் எடுத்திருக்கும் கரு மூவி ரிவியூவர்ஸ். பஸ்ட் ஹாப் மொக்கை செகண்ட் ஹாப் போர் என்று சகட்டு மேனிக்கு அடித்துவிடும் மூவி ரிவ்யுவர்களை ஸ்பெஷல் ஷோ வைத்து சினிமா பேரடைஸ் எனும் தியேட்டரில் செல்வராகவன் பேய் கொலை செய்கிறது. ரேப் பாடல் மூலம் மூவி ரிவியூ செய்யும் சந்தானத்தையும் அது போல அழைக்க அவர் குடும்பமே அதில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து தன் குடும்பத்தை மீட்டாரா இல்லையா என்பது தான் நெக்ஸ்ட் லெவல்.
கேம் ஸ்டார்ட் செய்வதற்கே கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவரை மெதுவாக செல்லும் படம் கேம் ஆரம்பித்தவுடன் சற்றே டாப் கியர் எடுக்கிறது. சொகுசு கப்பல், மிஸ்டரி பங்களா, பாழடைந்த பேக்டரி என்று மூன்று லொகேஷன்கள். காமெடி என்கிற பெயரில் பல நேரம் வாங்கிக்கட்டிக் கொள்ளும் சந்தானம் இந்த முறை அளவாக வாசித்திருக்கிறார். படத்தை ஓரளவேனும் கலகலப்பாக வைத்திருப்பது மாறன் மற்றும் ராஜேந்திரன். இந்த பாகத்தில் பேய் இடம்பெறும் காட்சிகள் குறைவு. அதனாலேயே சுவாரசியம் கம்மி. டெக்ஸ்சாஸ் செயின் சா மாசாக்கர் படம் போல் கேனிபல்ஸ் தான் வில்லன். ஹாரர் ஜானரை கையில் எடுத்திருக்கிறார்கள். சில நேரங்களில் இல்லை பல இடங்களில் ரிப்பீட் மோட் போல் போர் அடிக்கிறது.
ஒளிப்பதிவு, இசை, பட்ஜட், நடிகர்கள், கதை, செட் என அனைத்தும் கை கூடி வந்தாலும் காமெடி DD ரிட்டர்ன்ஸ் அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனாலேயே இதை நெக்ஸ்ட் லெவலாக கொண்டாட முடியவில்லை. இந்த எதிர்பார்ப்பை ஒத்தி வைத்தால் இது ஒரு நல்ல முயற்சி தான்.

டூரிஸ்ட் பேமிலி


ஒரு நல்ல பீல் குட் மூவி என்று பார் போற்றிவிட்டது. இதற்கு மேல் இதில் என்ன கூற?
என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் ஆச்சர்யப்படவைத்தது இதன் திரை மொழி. ஒரு நல்ல நாவல் வாசிப்பாளனை முதல் பக்கத்தில் இருந்து கட்டிப்போட வேண்டும். அதே போன்று ஒரு நல்ல சினிமா முதல் காட்சியிலிருந்து பார்வையாளனை தன்னுள் ஈர்க்க வேண்டும். 'மீன் பிடிக்கும்பொழுது திசை தெரியாமல் வந்துவிட்டோம், நல்லாருக்கீங்களா அண்ணா?' என்று ஆரம்பம் முதல் இறுதி வரையில் அந்த லாவகம் நன்றாக கூடி வந்திருக்கிறது.
அபிஷன் ஜீவித்தின் முதல் படம் என்கிறார்கள். எப்படி முதல் படத்திலேயே இவ்வளவு செய்நேர்த்தி?. அதுவும் பல காட்சிகள் படம் நெடுகிலும் ஆங்காங்கே முன்னும் பின்னும் கோர்க்கப்பட்ட விதம் ஆச்சர்யம். உதாரணமாக, ஜெனி நாய், லெமன் ஜூஸ், ஆம்புலன்ஸை கூப்பிடு, தம்பி சாப்பிட்டியா? போன்ற காட்சிகள் ஒரு சோறு பதம்.
அதுமட்டுமா? ஒரு நல்ல திரைக்கதைக்கு உதாரணமாக காட்சிக்கு காட்சி திருப்பங்கள். ஒரு பக்கம் லாக்கப்பில் போலீசின் லத்தியும் அதிகாரமும் நீண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு நேர் மாறாக தாஸின் அன்புக்கரங்கள் கேசவ் நகரில் அதை விட இன்னும் அதிகமாக நீளுகின்றன. பாராட்டப்படும் நேரத்தில் ஒரு நெகிழ்வான தருணம், சிரிப்பு என திரைமொழியில் நல்ல இலக்கணம்.



கொசுறு தகவலாக கேசவ் நகர் காலனியேவெறுக்கும் அந்த குடிகார இளைஞன் தான் படத்தின் டெரெக்டர் அபிஷன் ஜீவிந்த்.
படம் நெடுகிலும் நெகிழ்வான காட்சிகள். பார்க்கும் நமக்கு கண்களில் நீர் கோர்க்கவில்லையென்றால் ஆச்சர்யம் தான். அவ்வளவு நெகிழ்ச்சி. அகதியாக ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை சோக டெம்ப்ளேட்டில் அடைக்காமல் கிட்டத்தட்ட டார்க் காமெடி ஜானரில் (ஒரு பாதி) பரிமாறியிருக்கிறார்.
சசிகுமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் காட்சியில் எங்கே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் குடும்பத்திற்குள் ஒரு கலகம் எழப்போகிறதோ என்று பதைபதைப்பு நம்மிடையே தொற்றிக்கொள்ளும் நேரத்தில் ஆற்றாமை, சோகம், பெருங்கோபம், விரக்தி, அரவணைப்பு, பாசம், காதல், நெகிழ்வு, உற்சாகம் என பல உணர்வுகளை கடத்துகிறது. அபிஷனின் எழுத்துழைப்பு.
இறுதியில் ஒரு சீரியல் போல டிராமா டெம்ப்ளேட்டில் அடக்கியது ஒரு நெருடல். ஆனால் பீல் குட் மூவி என்றாகிவிட்டது. இதை விட வேறு என்ன நல்ல முடிவை எழுதி விட முடியும்.
எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே நிதானித்து அக்கம் பக்கம் அருகிலிருப்பவரிடம் அன்பைப் பகிருங்கள் என்று கூறும் டூரிஸ்ட் பேமிலிக்கு யோசிக்காமல் ஒரு டூர் செல்லலாம்.