புதன், ஏப்ரல் 15, 2026

எஞ்சிய பொழுதுகள் நரகமே

காலம் தாண்டியதொரு பந்தம் தான் திருமணம். திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 'இவன் இப்படித்தான் இவள் இப்படித்தான்' என்றொரு உணர்தல் ஏற்பட்டு, குழந்தை பெற்று, வளர்த்து ஆளாக்கி, பட்டாம்பூச்சிகள் போல அவர்கள் வீட்டை விட்டு பறந்து அவர்களுக்கென ஒரு வாழ்க்கையினை அமைத்து கொண்ட பின் எஞ்சி நிற்பது மீண்டும் அந்த இருவர் மட்டுமே. 

ஆனால் முன்பு இருந்தது போல் அதே இளமையும் துடிப்பும் இருக்காது. இதுகாறும் இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கடந்து வந்த இன்ப துன்பங்களை புரிதலுடன் அசை போடும் ஒரு காலம் அது. அப்படிப்பட்ட ஒரு முதிர் பருவ காலத்தில், அவ்வளவு காலம் தன்னுடன் வாழ்ந்த துணையை இழப்பது எனும் நிகழ்வு கொடிதினும் கொடிது. அறுபது எழுபது வயதில் பெற்றோர் கிடையாது. பெற்ற பிள்ளைகளும் பல்வேறு காரணங்களினால் உடன் வசிப்பதில்லை. கைப்பிடித்த துணையும் இல்லாமல் போவது கிட்டத்தட்ட ஆதரவற்ற ஒரு நிலை தான். துணையை இழந்து அதிகம் துன்பப்படுவது பெண்களை காட்டிலும் ஆண்கள் தான். குறைந்த பட்சம் வேளாவேளைக்கு 'சாப்பீட்டீர்களா?' என்று கேட்பதற்கு கூட ஒருவர் இருக்கமாட்டார். பிள்ளைகளும் கேட்காது. ஏனென்றால் அது பழக்கத்திலும் இருக்காது. அம்மா இருக்கும் வரை இதுபோல் அப்பாவை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 


ஆனால், அம்மாவிற்கு பின்? துணை இழந்த அத்தனை முதியவர்களை காண முடிகிறது. சூரியன் உதிக்கும் முன்பே வாக்கிங் கிளம்பிவிடுகிறார்கள். பிறகு பார்க்கிறவர்களுடன் எல்லாம் பேச்சு. ஹோட்டல் சாப்பாடு அல்லது அதற்கு ஏதேனும் ஒரு ஏற்பாடு. பின்பு மதிய உறக்கம் அல்லது தொலைக்காட்சி, செல்பேசி. இந்த வங்கிகளெல்லாம் ஒரு நல்ல மீட்டிங் பாயிண்ட். அதிலும் SBI. மாலை வாக்கிங், கோவில், நூலகம், மன்றம் பிறகு சாப்பாடு என்று பொழுதை கழித்து விட்டால் இரவு போர்த்திவிடும். அந்த நாளில் அதுவரை எப்படியோ பகல் பொழுதை கழித்து விடுவார்கள். ஆனால் இரவில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் தான். அத்தனை வருடங்கள் மனைவியுடன் பேசிய பேச்சுக்கள், சிரிப்புகள், கொட்டிய வார்த்தைகள் என அத்தனையும் சுவர் முழுக்க நிறைந்திருக்கும். அருகில் படுக்க இல்லாளும் கிடையாது. பக்கத்து அறையில் குழந்தைகளும் கிடையாது. பெயரன் பேர்த்திகளும் கிடையாது. இருந்தாலும் வீடியோ கால் தான். இரண்டு நிமிடங்களில் bye சொல்லிவிடுவார்கள். 

நிதர்சனம் அதுதான். இரவில் ஊர் அடங்கி அனாதரவற்ற நிலையில் அப்பொழுது வீடு முழுவதும் நிறைந்திருக்கும் நிசப்தம் பல ஞாபகங்களை கிள்ளி எறிந்து தள்ளும். இரவிற்கு அப்படியொரு சக்தி உண்டு. 'இன்னும் கொஞ்சம் கனிவாக பேசியிருக்கலாமோ?, அந்த ரசம் சுவையாக இருந்தது என்று சொல்லியிருக்கலாமோ? இன்னும் இரண்டு நாள் விடுப்பு எடுத்து கோவிலுக்கோ அவள் ஆசைப்பட்ட சினிமாவுக்கோ சென்றிருக்கலாமோ?, இன்னும் இன்னும் என ஏக்கம் நீளும். எவ்வளவு தான் சொந்தங்கள் இருந்தாலும், அருகில் படுத்துக்கொள்ளும் உரிமை மனைவிக்கு மட்டுமே. முதியவரின் அந்த வெளி தெரியாத அழுகையை ஈரமாகும் அந்தத் தலையணையிடம் கேட்டால் அவ்வளவு கதை தினமும் கூறும். வயோதிக பருவத்தில் தன் உற்ற துணையை இழந்து வாடும் ஒவ்வொரு முதியவருக்கு எஞ்சிய பொழுதுகள் நரகமே.

கருத்துகள் இல்லை: