திங்கள், நவம்பர் 25, 2024
கிஷ்கிந்தா காண்டம்
அப்புறம்...
பார்த்த உடனே யாரிடம் வேண்டுமானாலும் எதை பற்றியும் பேசிவிடும் பழக்கம் என்னுடைய முன்னாள் boss இடம் கற்றுக்கொண்டது இல்லை இல்லை தொற்றிக்கொண்டது.
அலுவலகத்திற்கு
தினமும் ஒரு மணி நேர ரயில் பயணம். முதல் முறை பார்த்தபொழுது, பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு,
அவர் இன்று என்ன
சாப்பிட்டார், எதை
டிவியில் விரும்பிப்பார்த்தார், குழந்தைகளிடம்
ஏன் இன்று கோபம் கொண்டார், கிரிக்கட்
ஸ்கோர், காட்டன்
பேண்ட், பட்டன்
மொபைல், ரிங்க
ரிங்க ரிங்கா ரிங்காரே பாட்டு, புலுசு
குழம்பு, தான்
வெயிட் போட்டது, தொப்பை,
காங்கிரஸ்
கவர்ன்மென்ட், பாலிசி,
ஹேர்ஸ்டைல் என
எங்கெங்கோ பேச்சு தொட்டு வளர்ந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த இந்த
சந்திப்பில் எனக்கு நினைவில் உள்ளது மட்டுமே மேலே. அவர் பகிர்ந்தது இன்னும்
அதிகம்.
அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அங்கங்கு இருப்பவரிடம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அங்கு ஆரம்பித்தது.
'நம்மளால புதுசா ஒரு ஆளுகிட்ட ஜெல்லாகிறது கஷ்டம்ங்க' என்ற கேட்டகரியிலிருந்து, 'வாங்க பழகலாம்' என்கிற ரேஞ்சுக்கு மாறியாகிவிட்டது. வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது முன்னிற்பவரிடம், மீட்டிங்கில் அருகில் அமர்ந்திருக்கும் மற்ற துறை ஆட்களிடம், பஸ்ஸில், மெக்கானிக் ஷாப்பில், இட்லி பார்சல் கட்டும் நேரத்தில், கீரை பாட்டி, தெருவில் போளி விற்பவர், மட்டன் பாய், கோவில் பூஜாரி, ஓலா ட்ரைவர், தெருவில் இருக்கும் வாண்டுகள் என எல்லாரிடமும் 'அப்புறம்' என்று சகஜமாக இயங்க முடிகிறது.
அதற்காக எல்லாரிடமும் எல்லாம் என்றில்லை. அங்கங்கு, அவரவரிடம் அப்பப்போதைக்கு பங்கம் இன்றி கலகலப்பாக கடத்தி விட முடிகிறது. கார் ஸ்பாவில் வெறும் பதினெட்டே நிமிடங்கள் பழகிய ஒருவர், ATM கார்டு போன்ற ஒரு பிரைவேட் மேரேஜ் இனிவிட்டேஷனை, மீண்டும் அச்சு அடித்து தரும் அளவுக்கு ஒரு கஜகஜா மெயின்டைன் பண்ண முடிகிறதென்றால், சுழி நம்மவர் போட்டது.
திடீரென்று பாஸ் நினைப்பு ஏன்? ஏதேனும் விபரீதமா? இல்லை. இல்லை. குத்துக்கல் போல நன்றாகத்தான் இருக்கிறார். டிக்கட் வாங்கி பரலோகம் சென்றால் தான் புகழ் பாடி நினைவு கூற வேண்டுமா?
இருக்கும்போதே
கொண்டாடிவிடுவோம்.
திங்கள், நவம்பர் 11, 2024
அமரன்
2014 இல் முகுந்த் இறந்தபோது இறுதிமரியாதையில் அவரது குழந்தை அந்த பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு அந்த நிகழ்வின் தாக்கமறியாது நின்று கொண்டிருக்கும். ஆனால் பார்த்த நமக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் அப்பாவியான முகம் கொடுத்த தாக்கம் சொல்லி மாளாது.
மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை அசாதாரண மனம் கொண்டு தாங்கிய அவரது மனைவி இந்துவின் கண்கள் வழியே நமக்குத் தருகிற செல்லுலாய்டு ஓவியம் தான் அமரன்.
மேஜரின் முறுக்கேறிய உடல் கட்டுடன், மேஜர் என்ற பொறுப்பிற்க்கிணங்க தலைமைப்பண்பை பறைசாற்றும் பாத்திரத்தில் சிவா. கலகலவென நடித்து ஜனரஞ்சக நடிகராக வலம் வந்த சிவாவிற்கு, இதில் காதலன், தந்தை, மகன், சோல்ஜர், தலைவன், நண்பன் என பல்வேறு வேடம். முழுப் பொறுப்பையும் உணர்ந்து மேஜர் முகுந்தாகவே நம் கண்முன் தெரிகிறார். வாழ்நாள் முழுவதற்குமான ஒரு கதாபாத்திரம். வெல்டன் சிவா.
படம் முழுக்க சாய் பல்லவி தான். முதன் முதலில் முகுந்தை பார்த்தது முதல் இறுதியில் விருதினை பெற்றுக்கொள்ளும் வரை அத்தனை உணர்ச்சிகள். அனாயசமாக நமக்குள் கடத்திவிடுகிறார். வெட்கம் கொள்வதாகட்டும், முகுந்தே முகுந்தே என்று கொஞ்சுவதாகட்டும், புல்லட் காயம், போனில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கும் நேரங்களில் வெடித்து அழுவதாகட்டும், அண்ணன் வந்து துக்க சேத்தி சொல்லும்போது உடைந்து அழுது பின் முகுந்தின் வார்த்தைக்கிணங்க கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்து பார்ப்பதாகட்டும் அவ்வளவு நேர்த்தி. கண்டிப்பாக ஒரு நேஷனல் அவார்ட் பார்சல். அதை விட இந்து தன்னை, தன காதலை, முகுந்தை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து கொள்ள எடுத்துக்கொண்ட சிரத்தையாகத்தான் சாய் பல்லவியின் நடிப்பை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜில்லா, வீரம், அதிபர் புஷ் வருகை, இந்து ரூமில் தொங்கும் ரோஜா ஏ ஆர் ரஹ்மான் என டீட்டெய்லிங்கில் ப்ரொடக்ஷனின் உழைப்புத் தெரிகிறது. காதல் bgm ஆகட்டும், சண்டை காட்சி புல்லட் தெறிப்புகளாகட்டும், சொல்லி அடிக்கிறது ஜி. வி பிரகாஷின் இசை. படம் நெடுகிலும் GVP ராஜ்ஜியம் தான். ஒற்றை பிள்ளைக்காக பரிதவிக்கும் அம்மா கேரக்டரில் கீதா கைலாசம் நிஜ அம்மாக்களை பிரதிபலிக்கிறார். ஆர்மிக்காரனுக்கு மகளை கட்டிக்கொடுப்பத்தில் முதலில் மறுதலித்து பிறகு மோனே என்று அரவணைத்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் வர்கீஸ்.
நாற்பது நிமிட டிரான்சிட் டிராவலில் மனைவியையும் மகளையும் உச்சி முகர்ந்து செல்லும் காட்சியில் இராணுவ வீரரின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்கிறது. ஒரு தனி மனிதனின் மிலிட்டரி வாழ்க்கையை நகலெடுத்ததில் அமரன் ஒரு மைல்கல்.
முகுந்தின் வாழ்க்கையின் சாட்ச்சியாக அமரன் வெளிவந்திருக்கிறது. இதுபோல் பேர் தெரியாத பல முகுந்த்களின் அமர காவியம் சொல்லப்படாமலிருக்கிறது.
இளம் வயது காதல், OTA ட்ரெயினிங், LoC, காஷ்மீர் அரசியல், தீவிரவாத தாக்குதல், இந்திய ராணுவ செயல்பாடுகள், வீரர்களின் மரணம் என ஒரு புல் பேக்கேஜாக அமரன் ஜொலிக்கிறார்.
மஸ்ட் வாட்ச் மூவி.
2014 மற்றும் 2023 இல் முகுந்தை பற்றி எழுதிய பதிவுகள் கீழே.
#AMARAN #saipallaviofficial #sivakarthikeyan
ஞாயிறு, நவம்பர் 10, 2024
சதுரகிரி பயணம்
எப்படியும் ஆறு ஏழு வருடங்கள் இருக்கும். இன்று போகலாம் நாளை போகலாம் என்று திட்டமிடும் போதெல்லாம் நடந்தேறவில்லை. திடீரென்று ஒரு நாள். ஆன்மிகப்பயணம் எல்லாமே அப்படித்தானே.
தாணிப்பாறை சென்றடைந்த போது மணி மதியம் பன்னிரண்டு. அந்த வளைவுக்கு அருகில் வாகனத்தை நிப்பாட்டிவிட்டு, கூட்டம் செல்லும் வழியில் நடக்க ஆரம்பித்தாயிற்று. அமாவாசைக்கு முதல் நாள். பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று கூட்டம் மிகுதியாக இருக்கும். ஒரு நாள் முன் என்பதால் அந்த அளவுக்கு இல்லை. சிதறலாகத்தான் மக்கள் இருந்தார்கள். எவ்வளவு தூரம் எத்தனை மணி நேரப் பயணம் என்றெல்லாம் தெரியாது. கிளம்பியாயிற்று. ஆரம்பத்தில் பெரிதாகத் தெரியவில்லை. போகப்போக பேஸ்மண்ட் வீக் ஆகிவிட்டது. இந்த ஆரம்பத்தில் மற்றும் போகபோகவுக்கும் இடைவேளை என்பது பத்து நிமிடம் தான். ஆமாம். ஏற ஆரம்பித்து பத்தே நிமிடத்தில் மூச்சு இறைக்க ஆரம்பித்து விட்டது. பிறகு இருபத்தைந்து முப்பது டிகிரி சாய்மானத்தில் நடந்து கொண்டே இருந்தால்? எதிர்வந்த ஒருவரிடம் கேட்டேன்?. 'பாஸ் இன்னும் எவ்ளோ தூரம்?'. இந்த கேள்வியை இடைக்கொருமுறை எதிர் வருபவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனை பெரும் சொல்லிவைத்தாற் போல் ஒரே பதிலை வேறு வேறு வார்த்தைகளில் கூறிக்கொண்டே சென்றார்கள். 'இந்தா கூப்பிடு தூரம் தான். இந்தா பக்கத்தில தான். கொஞ்ச தூரம் போன உடனே, அவ்ளோதான். கொஞ்சம் முன்னாடி போங்க'. இந்த கூப்பிடு தூரம் என்பது ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே பதிலாக வந்து விழுந்தது. ஆனால் போகபோகத்தான் தெரிந்தது. இவர்கள் மோட்டிவேட் செய்கிறார்கள் என்று. மொத்தப் பயண நேரம் நான்கரை மணி நேரம். பத்து கிலோமீட்டர்.
மேலே உயரே உச்சியிலே என்று இந்திரா சௌந்திரராஜன் நாவலின் தலைப்பு போல் மேலே உயரே உச்சியிலே உள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்குச் சென்றடைந்த பொது மணி மாலை நான்கரை. கோவிலுக்குச் செல்லும் முன் ஒரு சிறு நீரோடை. ஆறு என்று கொள்ளலாம். ஆனால் தண்ணீர் அந்த அளவு ஓடவில்லை. கணுக்கால் அளவுக்கு இருந்தது. தண்டால் எடுப்பது போல் படுத்து எந்திரித்து குளித்து சென்றோம்.
திட்டமிட்டது என்னவோ, அன்று இரவு அங்கு தங்கி அதிகாலை சுந்தர மகாலிங்க ஸ்வாமிகள் தரிசனம் செய்வது என்பது தான். ஆனால் நாங்கள் சென்றடைந்த நேரம் கோவிலில் யாரும் இல்லை. அப்படியே சன்னதி முன் உட்கார்ந்து இரண்டு மூன்று அடி அருகிலேயே சுயம்பு லிங்க தரிசனம். எப்படியும் அரை மணி நேரம் இருக்கும்.
பிறகு அந்த வளாகத்தைச் சுற்றி பார்த்தோம். நெடிதுயர்ந்த ஆல மரம். சூலம். விநாயகர், அம்மன் போன்ற விக்கிரகங்கள். ஒரு நீரோடை. மாலை ஆறு மணி போல். இருள் கவியும் ரம்மியமான நேரம். ஒரு விதமான பரந்துபட்ட அனுபவத்தை மனதிற்குள் தந்து கொண்டிருந்தது.
ஆனால், ஆனால்... அந்த ரம்மியமான சூழலை ரசிக்க முடியாத அளவுக்கு மனிதக் கழிவுகள் ஆங்காங்கே. சில இடங்களில் கீழே பார்க்க முடியவில்லை. கீழே பார்க்காமல் கால் வைக்க முடியவில்லை. அதுபோன்றதொரு நிலை. கழிவறைகள் இல்லாமலில்லை. பராமரிப்பு மற்றும் போதாக்குறை. அல்லது அந்த நேரங்களில் ரயில் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க நினைக்கிறார்களா என்பது புரியவில்லை. இரவு அந்த மலையில் தங்கலாம் என்ற முடிவை மறுசிந்தனையின்றி மாற்றிக்கொண்டு கீழே இறங்கிவிடலாம் என்று தீர்மானித்துவிட்டோம். அருகிலேயே சில கடைகள். சுவாமி படங்கள். கிழங்கு சூப். உடல் வலி தெரியாமல் இருக்க அந்த சூப் ஒன்றை குடித்து விட்டு ஒரு சிறு டார்ச் வாங்கி கொண்டு இறங்க ஆரம்பித்தோம். மழை தூர ஆரம்பித்தது. மணி ஏழரை அல்லது எட்டு இருக்கலாம்.
கடைகளைத்தாண்டிய உடன் அந்த வெளிச்சம் மறைந்து கும்மிருட்டு. அப்படி ஒரு இருட்டு. அருகில் இருக்கும் ஆள் தெரியவில்லை. இதில் பாதையை எங்கு கண்டுபிடிக்க. கும்பலாக நடக்க வேண்டிதான். அதில் ஒருவர் வேகமாக நடக்க அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தோம். போகபோகத்தான் தெரிந்தது அவர் அங்கு அதிக முறை வந்து பழக்கமுள்ளவர் என்று. திருமங்கலத்துக்காரர். அரவணைத்து கூட்டிச்சென்றார். பாசக்கார பயலுவ தான்டே. இரண்டு மூன்று முறை அந்த கும்பலில் வந்தவர் சிலர் பின்தங்கிவிட நின்று காத்திருந்து கூட்டிச்சென்றார்.
அந்த
கும்மிருட்டு சொன்னேனல்லவா? கால்
வாசி தூரம் கடந்திருப்போம். அதே இருட்டு. கையில் இருக்கும் டார்ச் தாவி வேற எந்த
வெளிச்சமும் கிடையாது. டார்ச் என்றால் பியர் க்ரில்ஸ் லெவலுக்கு ஒரு பெரிய பிளாஷ்
லைட் போல யோசிக்கக் கூடாது. திருவிழாக்களில் ஒரு கயிறில் பத்து டார்ச் சேர்த்து
சுற்றி வைத்து தொங்கப் போட்டிருப்பார்களே அந்த டார்ச். சுண்டுவிரல் அளவு தான்.
அந்த இரவு நேரத்தில் வண்டுகள் அல்லது பூச்சிகள் ரீங்கரிக்கும் சத்தம். ஒருவிதமான
கலக்கமாக இருந்தது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு பிளிறல். எங்கிருந்து வந்தது
என்று தெரியவில்லை. சர்வ நாடியும் ஒரு நிமிடத்தில் ஒடுங்கி விட்டது. அப்படி ஒரு
சத்தம். சத்தம் கேட்ட திசையில் திரும்பி பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. முன்னரே
சொன்னேனே. கும்மிருட்டு. அப்போது அந்த திருமங்கலத்துக்காரர் தான் சொன்னார்.
'பயப்படாதீங்க.
காட்டெருமை தான். சிவா சிவானு சொல்லிகிட்டே கீழ நடங்க. இந்த காட்டுல எந்த ஒரு
மிருகமும் தாக்குனது கிடையாது.' என்று
தைரியமூட்டினார். திருமங்கலத்துக்காரர் வீரர் தாம்டே. சிவ சிவா என்று சொல்லி
வேகுவேகு என்று கீழே இறங்கிவிட்டோம். இரண்டே மணிநேரத்தில் இறங்கி தாணிப்பாறை
வந்தடைந்தோம். அன்று இரவே ஊர் திரும்பியாகிவிட்டது.
அந்த மலையில் ஏறுவதற்கு சரியான உடை யாதெனில், ஒரு பெர்முடாஸ் அல்லது ஷாட்ஸ். ஒரு முண்டா பனியன். கையில் ஊன்றி நடக்க ஒரு குச்சி. சிலர் காலில் செருப்பு இல்லாமல் நடக்கிறார்கள். செருப்பு போட்டிருந்தால் வழுக்காமல் இருக்க வேண்டும். ஷூ ஓகே. மேலே கோவிலுக்கு முன் கழட்டி வைக்க இடமுண்டு. வழுக்குப் பாறை, கரடு முரடான ஒற்றையடி பாதை, நீரோடை, மணற்பரப்பு, புல்வெளி, கற்கள் என்று பாதைகள் நிறம் மாறும். தண்ணீர் பாட்டில்கள் ஓகே. ஆனாலும் அவை சுமை தான். எத்தனை லிட்டர் தான் எடுத்துச் செல்வது?. இரண்டு மூன்று இடங்களில் வாட்டர் பாட்டில் விற்பனை செயகிறார்கள். காலை ஆறு மணி போல் ஆரம்பித்துவிட்டால் மாலை ஆறு மணிக்குள் இறங்கி விடலாம். ஒரு நல்ல டார்ச் உசிதம். அலுப்பு இல்லாமல் பேசிக்கொண்டே நடப்பதற்கு ஒரு நல்ல குழு. குடும்பமாக ஏறுகிறார்கள். பெண்கள் குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லை. சமீபத்தில் வந்த வெள்ளத்திற்குப்பிறகு கட்டுப்பாடுகள் அதிகம். பௌர்ணமி தினம் அன்று தான் அனுமதி இருக்கிறது போல் தெரிகிறது. விசாரித்துக்கொள்ளலாம்.
எல்லாம்
சிவமயம்
லப்பர் பந்து
குடும்பத்துக்கு நல்லவனா இருக்கிறவன் எல்லாம் ஊருக்கு நல்லவனா இருப்பான்னு சொல்ல முடியாது. ஊருக்கு நல்லவனா இருக்கிறவன் குடும்பத்துக்கு நல்லவனா இருப்பான்னு உத்திரவாதம் இல்லை. என் குடும்பத்துக்கு ஒருத்தன் போதும்.
டேய் அது சாதித்திமிருடா. அப்ப நீ பண்றது என்ன ஆம்பளைத் திமிரா?.
இதுல மாட்டுக்குப் புரியுமா? நீ குணங்கிட்டு இங்க வந்துட்டன்னு?
நினைப்பு வந்தா ஒரு புடவைல படுக்க மாட்டியா?
எனக்கு
எத்தனையோ SC பிரெண்ட்ஸ்
இருக்காங்க. அவங்க ஒருத்தன கூட நான் அந்த மாதிரி பிரிச்சி பாத்தது இல்லன்னு
சொல்றவனைத்தான் முத நம்ப முடியாது. விஷம்.
- லப்பர்
பந்து ❤️❤️❤️
த வெ க
விமர்சனம் இல்லாத அரசியலும் இல்லை, தலைவனும் இருந்தது இல்லை.
இறங்கி விளையாடும் துணிவும் ஆட்டமும் தான் வெற்றியை, வீரனை நிலை நிறுத்துகிறது.
கட்சியின் பெயர், கொடி, கொள்கை, மாநாடு என படிக்கட்டுகள் ஒவ்வொன்றிலும் இன்று ஏறி நிற்கும் விஜய், வெற்றியை நிலை நாட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நடிகன் பின் தான் செல்ல வேண்டுமா? என்றால், தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வென்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா இது.
நீ
வர்லாம் வர்லாம் வா தலைவா ❤️❤️❤️
அஷோக் செல்வன்
நம்ம தமிழ் சினிமால இப்போதைக்கு மொழு மொழுமொழுனு ஒரு சாக்லேட் பாய் ஹீரோனா யோசிக்காம அஷோக் செல்வன தான் டிக் அடிக்கணும்.
ஜெமினி, கமல், ஹேய் ஹேய் கார்த்திக், பிரஷாந்த் வரிசைல இந்த அஷோக் செல்வனையும் வரிசைப்படுத்தலாம். லவ்வர் கேரக்டர்ல இவர் நடிச்ச தெகிடி, சவாலே சமாளி, 144, ஓ மை கடவுளே, மன்மத லீலை, நித்தம் ஒரு வானம், சபா நாயகன், பொன் ஒன்று கண்டேன் படங்கள் எல்லாம் அவ்ளோ துறு துறுனு இருக்கும்.
நடுவுல சில படங்கள் அடிதடினு திசை மாறிருக்கார். அண்டர் பிளே பண்ணி நடிச்ச போர் தொழில் மாதிரியான கேரக்டர் எடுபட்டாலும், தமிழ் சினிமால தற்போதைக்கு மிகுந்த தட்டுப்பாடு இருக்குற 'பார்த்தேன் ரசித்தேன் சாக்லேட் பாய் பிரசாந்த்' கேரக்டருக்கு ஒன்பது பொருத்தமும் பொருந்தி வர்ற நடிகர் நம்ம அஷோக் செல்வன் தான்.
உஷாரா செலக்ட் பண்ணா, பாட்டு பாடவா பாடம் சொல்லவா காதல் மன்னனா ஒரு பெரிய ரவுண்ட் வரலாம்.
Ashok Selvan
வேட்டையன்
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பும் குற்றவாளிகளுக்குத் தண்டனை என்கௌண்டர் தான் என்று தீர்ப்பெழுதி சுட்டுத்தள்ளும் போலீஸ் அதிகாரி, தான் ஒரு ஹண்டர் அல்ல ப்ரொடக்டர் என்று மனமாறினால் அதுவே வேட்டையன்.
ரஜினி. 74 வயது ஆகப்போகிறது. நடையில் அதே வேகம், முடி கோதி விடும் அழகு, flip போனை அவரது பாணியில் திறந்து மூடும் ஸ்டைல், வயதிற்கேத்த நடனம், ஆக்ஷனில் நாடி நரம்பு முறுக்கேறி அனல் பறக்கும் பாங்கு, 'குறி வைத்தால் இரை விழணும்' என்று கூலிங் கிளாஸை போடும் ஸ்டைல் என 80s முதல் ஜென் z வரை கவர்ந்து, 'தான்' தான் இன்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று சொல்லியடிக்கிறார்.
என்னடா டைட்டில் கார்டில் பேர் வரவில்லையே என்று யோசிக்கும் நேரத்தில் ஒரு ஆக்ஷன் ப்ளாக்குடன் அட்டகாசமான ஓப்பனிங். feast. இன்னும் முடில கண்ணா என்று 'மனசிலாயோ' சாங்கில் ஒரு அட்டகாசமான பெர்பார்மன்ஸ். டபுள் தமாகா. ரஜினி வெறியர்களுக்கு அங்கேயே முழு திருப்தி. பைசா வசுல்.
மஞ்சு வாரியர், அமிதாப், பஹத், ரித்திகா, துஷாரா, ராணா, ரோகினி, அபிராமி, கிஷோர், லேட் சுந்தர் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. அத்தனை பேருக்கும் அளந்து வைத்தது போல் காட்சிகள். தங்கள் பங்குக்கு செவ்வெனே செய்திருக்கிறார்கள். ஒரே வருத்தம். தலைவருடன் கூடவே வந்தாலும், முக்கிய திருப்பத்தைத் தந்தாலும் நடிப்பு அரக்கன் பஹத்துக்கு இந்த ரோல் ஒரு சோளப்பொரி தான். இன்னும் அதகளப்படுத்தியிருப்பார். என்ன செய்வது. தலைவர் இருப்பதனால் அண்டர் பிளே.
பறந்து வரும் சுருட்டில் தலைவரின் ஓப்பனிங் சீனை வைத்ததாகட்டும், குணாவைப் போட்டுத்தள்ளும் காட்சியாகட்டும், துஷாராவின் துயரத்தை காட்டும் காட்சியாகட்டும், கதிரின் கேமரா கோணங்கள் நெருடலில்லாமல் கதையுடன் இழைந்து போனதில் பல இடங்களில் புதுசு. முதல் பாதியை பரபரவென்று எடுத்துச் சென்ற எடிட்டர் பிலோமின் இரண்டாம் பாதியில் சற்றே தனது கத்திரியை இன்னும் கூர் தீட்டியிருக்கலாம்.
ரஜினி என்றாலே போதும் போல. அருமையான தீம் பிடித்திருக்கிறார் அனிருத். 'சூப்பர் ஸ்டாருடா' என்ற தீம் தியேட்டரில் நெருப்பை பற்ற வைத்திருக்கிறது. அதிரடி ஆக்ஷன், bgm என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அனி.
'மே அமிதாப் போல் ரஹா ஹூன்' என்ற அதே KBC வாய்ஸில் அமிதாப். நமக்கெல்லாம் அந்த குரல் தானே அமிதாப். 81 வயது. 67 வயதில் மீண்டும் திரைக்கு வந்து கோலோச்சி கொண்டிருக்கும் அமிதாப் இன்ஸபிரேஷன்.
'அவன் தப்பிக்க விட்டது பணத்துக்காக இல்ல. நட்புக்காக. ரிலீஸ் ஹிம்', Truth is bitter', 'என்கவுண்டர் என்ற ஆய்தத்தை சாமானியனினுக்கு எதிராக எடுக்கும் அதே போலீஸ், அரசியல்வாதிக்கு, கட்சி தலைவர்களுக்கு, கல்வி தந்தைகளுக்கு எதிராக ஏன் எடுப்பதில்லை', 'இது அவசரம் இல்ல ஸ்பீட்', 'மூளை இல்லனா போலீஸ் ஆகலாம். திருடனாக முடியாது', 'ஜஸ்டிஸ் delayed is ஜஸ்டிஸ் denied, ஜஸ்டிஸ் hurried is ஜஸ்டிஸ் burried', 'அவசர தீர்ப்பு தேவையில்லை விரைவான நீதி வேண்டும்' போன்ற வசனங்களில் ஈர்க்கிறது ஞானவேல் கிருத்திகா கூட்டணி.
குணாவை குற்றவாளியாக பார்வையாளர்களும் நம்பும் படி காட்சி அமைத்தது ஒரு நெருடல், போங்கு என்றால் ஆரம்பக்காட்சியில் தமிழகத்தில் போதைபொருள் பதுங்குவது, கடத்துவது என்று அதிரடி சரவெடியாக களமிறங்கிய ஞானவேல், சரண்யா கொலை, துப்பறிவது, இரண்டாம் பாதியில் NAT அகாடெமி என்று நீட் கோச்சிங்கிற்கு மடை மாறியது ஏன்?. தட்டி கேட்க வேண்டிய விஷயம் தான். குறை சொல்லவில்லை. ஆனால் சரண்யாவை கொலை செய்தவன் வெறும் அம்பு தான், எய்தவனை தேடிப்போக வேண்டும் என்று துப்புத்துலக்கிய அதே வேகத்தை, அறிவை, 'போதை குமரேசனை' எய்தவன் யார் என்று சேர்த்துத் துலக்கியிருக்கலாம். அங்கு மடை மாறிய காரணம் என்னவோ? எய்தவன் யாரென்று ஸ்க்ரிப்ட் எழுதும்போது அது தலைமைச் செயலகத்தில் லீட் கொண்டு விட்டதா இல்லை போதைப்பொருள் கொள்முதல் தலைவன் லோகேஷ் கனகராஜிடம் சென்று நின்றுவிட்டதா? சமூக நீதியை நீதியரசர் சந்துருவின் கேஸ் மூலம் சமரசமின்றி ஜெய் பீமில் காட்சிப்படுத்திய இயக்குனர் வேட்டையனில் பதுங்கியது ஏன்? ரஜினி, லைக்கா மற்றும் ஞானவேலுக்கே வெளிச்சம்.
எழுத்தா? அல்லது சூப்பர் ஸ்டார் பிம்பமா? என்ற போட்டியில் வென்றிருப்பது சூப்பர் ஸ்டார் தான். தாராளமாக குடும்பத்துடன் ரசிக்கலாம். கொண்டாடலாம்.
ஶ்ரீருத்
#vettaiyan #Rajinikanth #amithabachan #Thushara #Abhirami
#rithikasingh #ManjuWarrier #RanaDaggubati #kishore #TJGnanavel
#LycaProductions #RedGiantMovies #VettaiyanFromOct10


.jpg)

