விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 15, 2026

Hotspot 1& 2

ஒருசேர இரண்டு படங்களையும் பார்த்தாகிவிட்டது.

ஹாட்ஸ்பாட் 1. ஒரு A சர்டிபிகேட் அந்தாலஜி மூவி. நடு ஹாலில் பார்க்க முடியாத அளவுக்கு பாதகக் காட்சிகள் ஏதும் இல்லை. இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் ஒரு ப்ரொட்யூசரிடம் கதை சொல்லும் இயக்குநராகவே வருகிறார். நான்கு கதைகள். முதல் மூன்று கதைகள் தரம். நான்காவது போதனை. முதல் மூன்றுடன் ஒட்டவே இல்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் நல்ல ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டிங்கிற்கு உதாரணம்.

ஹாட்ஸ்பாட் 2. U/A. இரண்டே கதைகள். முதல் கதையில் தம்பி ராமையாவின் ட்விஸ்ட் அதகளம். ஆனால் அவரின் அட்வைஸ் ஓவர்டோஸ். டைம் ட்ரேவல் பேசும் இரண்டாவது கதை ஒரு மஸ்ட் வாட்ச். அதுவும் இறுதியில் வரும் அந்த ட்விஸ்ட் 👌 ரகம்.

ஜாலியாக பார்க்கலாம். பிரைம் வீடியோ.

#HotSpot2Much #Hotspot




Not all movies are the same Dual & Simple Manushan

Not all movies are the same Dual

தெலுங்கில் வெளிவந்திருக்கும் ஒரு atmoshpheric த்ரில்லர் படம். தமிழ் டப்பிங் உண்டு. zombie, parallel world என இரண்டு வெவ்வேறு விஷயங்களை இணைத்திருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவு, இசை இரண்டும் த்ரில்லருக்கான மூட் செட் செய்கிறது. கொஞ்சம் ஸ்லோ. கத்தி பயமுறுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. ஆனாலும் காட்சிகள் இழுத்து பிடித்து உட்கார வைக்கின்றன. அமேசான் பிரைமில் கிடைக்கிறது.





Simple Manushan

மலேசியாவில் இருந்து வெளிவந்திருக்கும் ஒரு அக்மார்க் தமிழ் படம். வயதேறிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு பெண் பார்க்கும் படலம். ஒவ்வொன்றும் விதவிதமாக தட்டிப்போகிறது. அழுது வடியாமல் சுய எள்ளலுடன் மிகவும் கலகலப்பாக எடுத்துள்ளனர். பாத்திரத்தின் உணர்வறிந்து தனது நடிப்பால், இந்திரவேல் சந்திரபோஸ் நம்மை கட்டிவைத்துவிடுகிறார். மலேசிய வாழ் தமிழ் மக்கள், அவர்கள் வாழும் கிராமம், கடல் கடந்தும் வீற்றிருக்கும் அய்யனார் கோவில், கடாவெட்டு என தமிழ் கலாச்சாரம் விரவிக்கிடக்கிறது. தாராளமாக டிக் அடிக்கலாம்.

#notallmoviesarethesamedual
#simplemanushan

லீடர்

லெஜெண்ட் சரவணனின் .இரண்டாவது படம். லெஜெண்ட் படத்தில் அவரது தோற்றம் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டது. 

லீடரில் அதை சரி செய்திருக்கிறார்கள். அது மட்டும் தானா? படத்தின் இறுதி வரை எந்த ஒரு காட்சியும் சலிக்கவில்லை. சொல்லப்போனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. காட்சிகள் குதித்தோடுகின்றன. சரவணன் subtle ஆக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் கிடையாது. ஆதலால் அவரது நடிப்பில் குறையேதும் இல்லை. ஆக்ஷன் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார். 



வெளிநாடு காட்சிகள், ட்ரெயின் சண்டை காட்சிகள் எல்லாம் பரபரவென்று ஓடுகின்றன. செண்டிமெண்ட் காட்சிகளும் உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள். இண்டெர்வெலில் சோகமாகும் ரசிகர்களை, க்ளைமேக்ஸ் காட்சி மீட்டெடுத்துவிடுகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள், சண்டைக்காட்சிகள், எடிட்டிங், திரைக்கதை என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்திருக்கிறார்கள். ஒரு பக்காவான மாஸ் கமெர்சியல் சினிமா. கேப்டன் ஆப் தி ஷிப்பாக துரை செந்தில்குமார் ஜெயித்திருக்கிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன், காக்கிச்சட்டை இயக்குனர்) 

குடும்பத்துடன் தாராளமாக தியேட்டரில் கண்டுகளிக்கலாம். #leadermovie #LegendSaravanan

நீளிரா

ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் தான் படத்தின் நீளம். ஆனால் அதன் தாக்கம் ஒரு முழு நீளப் படத்தை விட அதிகம். அடுத்த நாள் திருமண நிகழ்வுக்காக ஒரு ஈழத் தமிழ் குடும்பம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த இரவில், இந்தியாவின் ஒரு ராணுவக்குழு அந்த வீட்டில் பதுங்கிக் கொள்ள வருகிறது. அந்த ஓர் இரவு தான் படம். IPKF (இந்திய அமைதிப் படை) அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அப்போது பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடைக்கு மேல் ஆண்களின் சட்டைகளை அணியும் அந்த ஒரு காட்சி, ஈழத் தமிழிர்களின் அன்றைய போர்க்கால அவல நிலையை முழுவதுமாக பறைசாற்றி விடுகிறது. 

படம் முழுக்க அந்த ஒரு வீடுதான். அலுப்பில்லாமல் இறுதி காட்சி வரை திக் திக் என நகர்கிறது. காட்சிகளின் தாக்கம் உணர்ந்து பின்னணி இசை மூலம் நம்மிடம் பதைபதைப்பைக் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ்ணக்குமார். ரத்தம் தெரிக்காமல், ஆபாசமில்லாமல் உண்மைக்கு நெருக்கமாக கதை எழுதி காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் சோமீதரன். 

#Neelira



தாய் கிழவி

மிகக் கவனமாகத்தான் காசு போடுகிறார்கள். நடிகர்களைக் கூறுகிறேன். வேறு ஒருவர் தயாரிப்பில் நடிக்கும்போது இந்த அளவுக்கு சிரத்தை எடுப்பது போல் தெரியவில்லை. சொந்தத் தயாரிப்பு எனும்போது கதை, இசை, நடிகர்கள் என அனைத்துமே அம்சமாக உட்கார்ந்துவிடுவது, அதுவும் கையடக்கமான பட்ஜெட்டில் என்பது அதிசயம் தான். 

தாய் கிழவி எப்படி இருக்கிறது? 

வட்டிக்கு விட்டு பிழைப்பை நடத்தும் பவுனுத்தாயி சாகக் கிடக்கிறார். திடீரெனே அவர் 160 பவுனுக்கு சொந்தக்காரர் எனத் தெரியவருகிறது. அதன் பிறகு அவரை காப்பாற்றத் துடிக்கும் களேபரமே தாய் கிழவி. பவுனுத்தாயாக ராதிகா. இந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை யோசிப்பது சிரமம் தான். 

பிராஸ்தடிக் மேக்கப்புடன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். ஆனாலும், அந்த 20 நிமிடமும் சரவெடி தான். பவுனுத்தாயின் மகன்களாக பாலசரவணன், சிங்கம்புலி மற்றும் அருள்தாஸ். கோல்ட் குமாராக இளவரசு, மகளாக ரேச்செல், மூன்று மருமகள்கள், மருமகன் முத்துக்குமார், பென்னி குயிக் முனீஸ்காந்த், டாக்டர் ஜார்ஜ் மரியான் என அனைவருமே பாத்திரம் அறிந்து பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார்கள். 

பாலசரவணனின் பூமாலை கட்டும் காட்சி கலகலப்பு. தாய்கிழவியின் பேரன் கவனிக்க வைக்கிறார். கருப்பு கோவில் அணையா விளக்கு காட்சிகள், கங்காரு அடிகளார் சாமிகள் என அதகளம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு பக்கபலம். காமெடி காட்சிகள், எமோஷன், நையாண்டி என பின்னணி இசையில் பெரும் பங்காற்றியிருக்கிறது. கதையோட்டத்தினூடே வரும் பாடல்கள் மிகவும் உயிர்ப்பு. மேலும், ஆங்காங்கே ஒலிக்கும் கமலின் திரைப்படப் பாடல்கள் ஒரு கதாப்பத்திரமாகவே வருவது புதுமை மற்றும் சிறப்பு. மரணப்படுக்கையில் இருக்கும் தாய் கிழவியை சுற்றித் தான் கதை என்றாலும், காட்சிகள் ரிப்பீட் மோடில் வருவது சற்று சலிப்பைத் தட்டுகிறது. எடிட்டர் லோகேஷ் இங்கு தயவு பார்க்காமல் கத்தரித்திருக்கலாம். 



படம் முழுக்க டார்க் ஹியூமர் தான் என்றாலும், அதனூடே அலுப்புத் தட்டாமல் வாழ்க்கைப் பாடமும் எடுத்துள்ளார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். நடுரோட்டில் நடக்கும் ஆம்புலென்ஸ் வெண்டிலேட்டர் காட்சி, சுருளியை வளர்த்த விதம், அதை சுருளியே மருமகள்களுக்கு புரியவைத்த இடம், பவுனுத்தாயின் பல்லாங்குழி விளையாட்டு காட்சிகள் எனப் பூமாலையில் இடையிடையே கட்டப்பட்டிருக்கும் மரிக்கொழுந்து வாசம் போல படத்தின் பேசுபொருளாக மணக்கின்றன. ‘காசு இல்லையென எந்தப்பெற்றோரும் குழந்தையைக் கைவிடுவதில்லை. ஆனால் பெற்றோரின் நிலைமை அதுபோல இல்லை’ போன்ற வசனங்கள் சிந்திக்கவைக்கின்றன. என்னதான் இறுதிக்காலத்தில் கூடவே இருந்து கவனித்துக் கொண்டாலும், இறுதியாகப் படுக்கையில் இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை அப்படியே விடுவதா அல்லது காப்பாற்றுவதா என எந்த முடிவும் எடுக்க முடியாத கையறு நிலையில் தான் சகோதரனோடு பிறந்த மகள்கள் இருக்கிறார்கள் எனும் உண்மையை நுட்பமாக பேசியிருக்கிறது சுருளி கதாபாத்திரம். 

படபடவென இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளில் பவுனுத்தாயி மிகக் கம்பீரமாகத் தெரிகிறார். பெண் சுதந்திரம், சுய மரியாதை என நெருடலில்லாத வசனங்கள் பளிச். யாரும் தூக்கிவிட இல்லாத அநாதரவான நேரத்தில், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கவிழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை இழுத்துப் பிடித்து ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்து நிப்பாட்டிய உங்கள் பாட்டியின் கதைதான் இந்த தாய்கிழவி குடும்பத்துடன் சிரித்து மகிழவேண்டிய படம். 

 #ThaaiKizhavi #sivakarthikeyan #SivakumarMurugesan #RadhikaSarathkumar #NivasKPrasanna

அவதார் பயர் அண்ட் ஆஷ்

முதல் பாகம் வந்தபொழுது ஒரு புது உலகத்தை ஜேம்ஸ் கேமரூன் படைத்திருந்தார். பத்து அடி உயர மனிதர்கள், நீல நிற உடல், அவர்களை சுமந்து செல்லும் பறவைகள் என 3டி இல் பார்ப்பது பரவசமாயிருந்தது. இரண்டாவது பாகத்தில் கடல் சார்ந்த காட்சிகள் புதுமையாக இருந்தன. அதைத்தாண்டி மற்றவை ஈர்க்கவில்லை. இப்பொழுது இன்னும் பாதகம். எந்த ஒரு புதுமையும் இல்லை. எல்லாமே பழையது. பார்த்து சலித்தது. 'வா மாப்பிளை. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்' என்கிற ரீதியில் சண்டை போடுகிறார்கள். ரெட் டாக்சி புக் செய்து போவது போல் அந்த பறவைகளை பிடித்து எல்லா இடமும் பறந்து, ரிப்பீட் மோடில் காட்சிகள் நம்மை கழுத்தறுக்கின்றன. 



மூன்று மணி நேரத்திற்கு மேலாக படம் ஓடுகிறது. தவிர பல வருடங்கள் கழித்து மூன்றாம் பாகம் என்பதால் முதல் இரண்டு பாகத்தில் நடந்தவை ஞாபகத்தில் இல்லை. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கடந்த வாரம் என்று ரீகேப் போடுவது போல் செய்திருக்கலாம். 3டி கண்ணாடி வேறு இம்சிக்கிறது. அதற்கு தனியாக 30 ரூபாய் தெண்டம். 

2029 மற்றும் 2031 இல் நான்கு மற்றும் ஐந்தாம் பாகம் வர இருக்கிறதாம். சோதிக்காதீங்க கேமரூன்.

#AvatarFireAndAsh #AvatarFireAndAsh

டீசல் 2025

படத்தை 2023ல முடிச்சுட்டாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ படம் பொட்டிக்குலேயே ரெம்ப நாள் கடந்துருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சி 2025ல ரிலீஸ் பண்ணிருக்காங்க. பொட்டிக்குள்ளேயே இருந்துருக்கலாம். 

க்ரூட் ஆயில் கொண்டு போறதுக்காக கடற்கரை ஓரமா ஒரு ராட்சச பைப் லைன் போடுறாங்க. அங்க இருக்குற மீனவர்களுக்கு இது பிரச்சினையா இருக்கு. தங்களோட வாழ்வாதாரம் பாதிக்குதுனு இந்த பைப்ல கையை வச்சி க்ரூட் ஆயில் திருடி இவங்களே லாரி புடிச்சி மும்பைக்கு அனுப்பி அதை சுத்திகரிச்சி ரிட்டர்ன் சென்னைக்கு கூட்டியாந்து பங்குல ரொப்பிடுறாங்க. எப்படி தலை சுத்துதா? இதுக்கே இப்டினா? இந்த க்ரூட் ஆயில் ப்ரியர்களுக்குள்ள கேங் வார் வருது. அதுல DSP வினய் மேல நம்ம தம்பி ஹரிஷ் கையை வச்சிடுறாரு. அவர போடறதுக்கு ஊரு முழுக்க தேடுறாங்க. 


ஆனா தம்பி 'இடியாப்பம் இடியாப்பம்'னு விக்கிற மாதிரி தெருத்தெருவா சுத்துறாரு. நடுவுல கோர்ட்டுக்கு வந்து 'hollow man' மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு பைட் வேற. ஆனா போலீஸ் கண்ணுல படமாட்டேங்குறாரு. திருப்பியும் கடல்ல ஹைட் அவுட். வெயிட் வெயிட். இப்போவே டயர்ட் ஆனா எப்படி? இந்த க்ரூட் ஆயிலை எதிர் கும்பல் திருடி பதுக்கி வச்சிருவாங்க. எவ்ளோ. 2 கோடி லிட்டர். எங்க அப்டினா பக்கத்துல குடிதண்ணிக்கு போடுற பைப்ல. அங்க தண்ணி விடலையாம். அதனால அங்க ஒளிச்சு வச்சிருவாங்க. இதன் காரணமா பெட்ரோல் இல்லாம சென்னையே ஸ்தம்பிக்குது. சென்டர்ல ப்ரெஷர். பூரா பயலுவளும் தேடுறாங்க. இப்போ நம்ம தம்பி தைரியமா வெளில வந்து 'எனக்கு இந்த க்ரூட் ஆயில் இருக்குற இடம் தெரியும்'னு உதார் விடுறாரு. போதாக்குறைக்கு 

இவரு பொளந்த DSP தான் இவருக்கு ப்ரொடெக்ஷன் கொடுக்கணுமாம். எப்படி? இன்னும் முடியலை. 'எங்க நைனாவை வெளில கொண்டு வா. இடத்தை காமிக்குறேன்'னு கண்டிஷன் போட, அவங்க இவரு நைனாவை வெளில விட, புல்லிங்கோ நைனாவை போட்ருவாங்க. இதுக்கு அவரு உள்ளையே இருந்துருக்கலாம். இப்போ தான் ஹைலைட்டே. இவரு அந்த பைப்ல பதுக்கி வச்சிருந்த க்ரூட் ஆயில் ஒரே ராத்திரில பேரேல்ல மாத்தி (சைன்டிஸ்ட் காளி வெங்கட் உதவி) மீனவர்கள் படகு மூலமா கடலுக்கு கொண்டு போய், ஜனம் எல்லாத்தையும் கூட்டி படகைல்லாம் ஹார்பர் ரூட்டை ப்ளாக் பண்ண வச்சி, எந்த ஒரு கப்பலையும் வர விடாம ஸ்டேட், நேஷனல், இன்டர்நெஷனல் பிரச்சினையா மாத்தி, 'ஓகே ஓகே பைப்பை தூக்குறோம்'னு ஒத்துக்குறாங்க. அப்பப்பா. ஒரு 2000 கோடி பட்ஜட் படம் சாமி இது. 12 கோடில முடிச்சிட்டாங்க. அதான் ப்ராபளம். 

ஹீரோயின். அதுல்யாரவி. 'கனவுல கடல் கன்னி வருது. ஹரிஷோட அம்மா தான் அதுனு' அது ஒரு பக்கம் பினாத்திக்கிட்டு. 'எம்மா. நீங்கதான் ஹீரோயின். தம்பி எங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் ஒன் சைட் ஷால் போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடங்க. அப்பப்போ அழுவனும்னு சொல்லிருப்பாங்க போல. இந்த வருட தேசிய விருது நிச்சயம். காமெடி கேரக்டர் ரோல் பண்ணிட்ருந்த விவேக் பிரசன்னாவை இங்க வில்லனாக்கிருக்காங்க. வாய் முழுக்க சோறை திணிச்சு வச்சா எப்படி இருக்குமோ அது மாதிரி படம் முழுக்க ஒரு தினுசா முழிச்சிட்டே வராரு. செம டெரருங்க. இரண்டாவது தேசிய விருது. அப்பாவியா ஊருக்கே நல்லது செஞ்சிடிருக்குற கேரக்டரை பிடிச்சி கொடூரமா கொல்லுவாங்கல்ல. அது மாதிரி இதுல ரமேஷ் திலக்கை க்ரூட் ஆயில்ல முக்கியே கொன்றுவாங்க. பழி வாங்குறேன்னு விவேக் பிரசன்னாவை ஹரிஷ் தம்பி இப்டி தான் சாகடிப்பாரு. 

டைரெக்டரு நம்மளை அதே மாதிரி கொல்றாரு. ஆக மொத்தம் இது டீசல் இல்லை. க்ரூட் ஆயில்.

#dieselmovie #HarishKalyan #athulyaravi

ஓஹோ எந்தன் பேபி

எவ்ளோ நாள் தான் கொலை, கொள்ளை, மர்டர், அடி தடி படமா பாத்துட்டே இருக்கிறது. 

ஒரு நல்ல லவ் ஸ்டோரியா பீல் குட் படம் இருக்கானு கேட்ட இதோ 'ஓஹோ எந்தன் பேபி'.  

பைவ் ஸ்டார் கிருஷ்ணா டைரக்ட் பண்ணிருக்குற முதல் படம். அத்தனை படங்கள் நடிச்சிட்டு தன் கிட்ட இருக்கிற அந்த டெரெக்டர் ஆசையை இந்த படம் மூலமா தீர்த்துக்கிட்டார்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடி மாடர்ன் லவ் சென்னை வெப் தொடர்ல 'காதல் என்பது கண்ணுல ஹார்ட்டுல வர ஒரு எமோஜி' எபிசோட். எடுத்துருக்கார். அதுவும் துள்ளலான லவ் ஸ்டோரி தான். அதே போல ஓஹோ எந்தன் பேபி படமும் பாக்குறதுக்கு நல்லாருக்கு. சிம்பிளா எந்த ஒரு குழப்பமும் இல்லாத லவ் ஸ்டோரி. பாக்குறாங்க. பேசுறாங்க. பழகுறாங்க. கோவத்துல பிரிஞ்சிடுறாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல சேந்துடுறாங்க. அவ்ளோதான். 



காதலர்களும் புதுசு. காட்சிகளும் புதுசு. ருத்ரா, மராத்தி பொண்ணு மிதிலா, விஷ்ணு விஷால், மிஸ்கின், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், பாலாஜி சக்திவேல் இவங்க எல்லாரோட சேர்த்து 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதினு ஒரு பெரிய பட்டாளம் இருக்குது. எல்லோருக்கும் அழகா அளவா ஒரு ஸ்பேஸ். ரெண்டு மூணு லிப் கிஸ் உண்டு. டிஸ்க்ளைமர் சொல்லிடறேன். ம்யூசிக்லேந்து ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை கேஸ்டிங்னு எல்லாமே குட். ரைட்டிங் மட்டும் தனியா ரெண்டு பேர் பண்ணிருக்காங்க. முகேஷ் மஞ்சுநாத் மற்றும் ஷாரதா ராமநாதன். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு நல்ல விஷயம். 

 நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் ஆகிருக்குற இந்த ரொமேன்டிக் லவ் ஸ்டோரிக்கு தாராளமா ஒரு ஹாய் சொல்லலாம். 

#OhoEnthanBaby #mithilapalkar #VishnuVishal @[1824306148:2048:Krishnakumar Ramakumar] Sharada Ramanathan

சரண்டர்

நொடிக்கு நொடி பக்காவான அட்ரீனலின் ரஷ். ஒவ்வொரு சீனும் பதட்டத்தை கூட்டிட்டே இருக்கு. தேவையில்லாம ஒரு சீன் கூட இல்ல. முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. கடைசி நேர க்ளைமேக்ஸ் பைட் மட்டும் தான் ரத்தம் தெறிக்குத்து. நிறைய சீன்கள் இருட்டுலே எடுத்தாலும் பளிச்சுனு இருக்கு. அதிலையும் அந்த தீம் ம்யூசிக். வயலின்ல இந்த பக்கம் ஒரு இழுப்பு. அந்த பக்கம் ஒரு இழுப்பு. அப்படி படபடக்க வைக்குது. லால், முனீஸ்காந்த் தவிர பெரிய கேஸ்டிங் இல்லை. 

அப்படி இருந்தும் ஒவ்வொரு நடிகரும், நடிப்பும் தரம். எல்லாமே அந்த மாயாஜால திரைக்கதை அப்புறம் காட்சி கோர்ப்பு தான். ஒரு த்ரில்லர் மூவி எப்படி எடுக்கணும்னு ஒரு இலக்கணம் கொடுத்துருக்கார் அறிமுக இயக்குனர் கௌதமன். சன் நெக்ஸ்ட். 

#surrender



தலைவன் தலைவி

எதற்கும் துணிந்தவன், பசங்க 1 &2, கதகளி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை மூலம் தனக்கென ஒரு தனி ரசிக பட்டாளம் வைத்திருக்கும் பாண்டிராஜின் மற்றுமொரு படைப்பு இந்த தலைவன் தலைவி. அவரது படைப்பில் என்னை பொறுத்த வரையில் என்றும் முதலிடம் நம்ம வீட்டு பிள்ளை. கிரிஞ்ச் என்று கூறினாலும் நம்ம வீட்டு பிள்ளை ஒரு முழுமையான படைப்பு. வெகுஜனமும் ரசித்திடும் வகையில் அது ஒரு மைல்கல். 

தலைவன் தலைவி எப்படி இருக்கிறது ? 

'தன்னோட குடும்பத்துக்கிட்ட தோக்கிறதுக்கு துணிஞ்சவன் வாழ்க்கைல என்னைக்கும் தோக்கமாட்டான்' இந்த டையலாக் எழுதுனவனே அடிக்கனும் எனும் இன்ட்ரோ சீனில், ஸ்டோரி ஸ்க்ரீன்ப்லே டெரெக்ஷன் - பாண்டிராஜ் என கார்ட் போடுகிறார். தன்னைத் தானே எள்ளி நகையாடும் சுய எள்ளலுடன் தைரியமாக களமிறங்கியிருக்கிறார் பாண்டிராஜ். டாம் எண்டு ஜெரி போல் சண்டை போட்டுக்கொள்ளும் புருஷன் பொஞ்சாதி கதை தான் இந்த தலைவன் தலைவி. குல தெய்வ கோவிலில் முதல் மொட்டை போடும் சீனில் ஆரம்பித்து இறுதியில் சுபம் போடும் வரை பொருத்தமான இடங்களில் பிளாஷ் பேக் மூலம் கதை சொல்லியிருக்கும் வித்தை ஈர்க்கிறது. 

அதே கணவன் மனைவி உரசலுக்கிடையில் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைக்கிறார்கள் தீபா, ஜானகி சுரேஷ் மற்றும் நாத்தனார் ரோஷினி. எந்த வித உறுத்தலுமில்லாமல் மருமகளை பங்கம் செய்யும் கேரக்டரில் தீபா பக்காவான தேர்வு. அதுவும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் பாங்கு...ஆஹா. ஸ்க்ரிப்டின் நாயகி சத்தியமாக அவர் தான். காளி வெங்கட், சரவணன், செம்பன், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, மைனா, சென்ராயன், சித்ரா லக்ஷ்மணன், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார் என ஒரு பட்டாளமே இருக்கிறது. அத்தனை பேர் இருந்தாலும் யாரையும் டம்மியாக்காமல் ஒவ்வொருத்தரும் ஒரு இடம் என கதாசிரியராக மிளிர்கிறார் பாண்டிராஜ். நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் குறையேதுமில்லை. சொல்லப்போனால் ஒரு நாணயத்தின் இருதுருவமாக சேர்ந்தும் இருக்கிறார்கள். எதிர் எதிராகவும் நிற்கிறார்கள். அதுதான் இயல்பு எனும் பாடம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். 



சில பல இடங்களில் வளர்ந்தும் குறைந்தும் வருகிறார் நித்யா மேனன். ADகள் கவனிக்கவும். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஒரே இடத்தில் படம் பிடித்திருந்தாலும் அலுக்காமல் கத்தரித்திருக்கிறார் பிரதீப். யானை மலை, ஹோட்டல் என சுகுமாரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு கடுமையாக உழைத்திருக்கிறது. சின்ன சின்ன மெனெக்கடல்கள் தான் ஒரு படைப்பை மெருகேற்றும். உதாரணமாக டம்பளருடன் கல்லில் மீண்டும் சூடாகும் டீ, அதே டீ டம்பளரில் தலைக்கு ஒத்தடம் கொடுக்கும் காட்சி என இயல்பாக ஆனால் மதுரை மண்ணுக்கேற்ற டீடைலிங் சூப்பர். பாதி மொட்டையுடன் குழந்தை க்யூட். 

எப்படித்தான் படம் பிடித்தார்களோ. ஆரம்ப காட்சியில் நித்யா மேனன் சாப்பிடும் பரோட்டா வகைகள் மதுரை மண்ணின் ஸ்பெஷல். நா ஊர வைக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் சீன்ஸ், ரோமேன்ஸ், காமெடி என வழக்கம் போல் பாண்டிராஜின் எல்லாமும் கதம்பபமாக இருக்கிறது இந்த தலைவன் தலைவியில். எல்லாமே நிறைவாக இருந்தும் இந்த திருஷ்டி பொட்டாய் விஜய் சேதுபதி ஹை பிட்ச்சில் கத்துவதை மட்டும் சகித்துக் கொண்டால் தலைவன் தலைவிக்கு நாமும் ஒரு கொடி பிடிக்கலாம். 

2022இல் பாண்டிராஜ் பற்றி எழுதிய பத்தி கீழே. 

 https://www.facebook.com/share/p/19T9w7wzqy/ 

 #thalaivanthalaivii #vijaysethupathy #NithyaMenen #santhoshnarayanan #YogiBabu #Pandiraj

டிடி நெக்ஸ்ட் லெவல்

டிடி நெக்ஸ்ட் லெவல் FDFS . 

இது தான் முதல் முறை. பெரிய பெரிய நடிகர்களுக்குக் கூட இந்த FDFS சென்றதில்லை. நேபோட்டிசம் இல்லாத ஒரு நடிகர். அத்தனை ஹீரோக்களுக்கு மத்தியில் தானும் ஒரு கதாநாயகன் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்துவதே பெரிது. தனக்குண்டான கிரௌண்ட் இதுதான் என்று ஒரு வட்டத்துக்குள் ஆடி அந்த பிம்பத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். அதற்கே வாழ்த்துக்கள் சாண்டா. நெக்ஸ்ட் லெவல் பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். 

டிடி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு இல்லை. ஆனால் மோசமில்லை. பளிச் சந்தானம். மஷ்ரூம், டபிள் சைட் என்றெல்லாம் கலந்துகட்டி ஒரு தினுசான ஹேர் ஸ்டைலில் அசத்தலாயிருக்கிறார். லூஸ் பேண்ட் ஷர்ட் கேன்வாஸ் சகிதம் உடலை குறுக்கி கைகளை ஆட்டி ஆட்டி என தற்காலத்து புள்ளிங்கோ மற்றும் யோ யோ கதாபாத்திரத்தில் கனகச்சிதம். ஹீரோயின் கீத்திகா. எங்கிருந்துதான் அள்ளி வருகிறாரோ? இதுவரை கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களிலும் நவாம்சங்களுடன் ஹீரோயினை செலெக்ட் செய்திருக்கிறார். 

தங்கையாக யாஷிகா ஆனந்த். என்னடா நைட்டி அணிவித்து தண்ணீர் குடம் தூக்கி வர சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தால், அடுத்த காட்சியிலேயே ஜீன்ஸ் ட்ரவுசர் கொடுத்து இங்கிட்டும் அங்கிட்டும் திரிய விட்டிருக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் நடிகை கஸ்தூரி. 51 வயதில் யாஷிகாவிற்கே டப் கொடுக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் மேல் என்ன காண்டோ தெரியவில்லை. வித்தியாசமான கதாபாத்திரம் என்று கோமாளி போல் ஒரு வேடம். செல்வராகவன் சிறப்பு. 



தவிர நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன், லவுட் ஸ்பீக்கர் ரெடின் கிங்ஸ்லி என்று ஒரு பட்டாளம். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். லொள்ளு சபா மூலம் கோலிவுட்டில் விசிட்டிங் கார்ட் கொடுத்த சந்தானம் இதில் கையில் எடுத்திருக்கும் கரு மூவி ரிவியூவர்ஸ். பஸ்ட் ஹாப் மொக்கை செகண்ட் ஹாப் போர் என்று சகட்டு மேனிக்கு அடித்துவிடும் மூவி ரிவ்யுவர்களை ஸ்பெஷல் ஷோ வைத்து சினிமா பேரடைஸ் எனும் தியேட்டரில் செல்வராகவன் பேய் கொலை செய்கிறது. ரேப் பாடல் மூலம் மூவி ரிவியூ செய்யும் சந்தானத்தையும் அது போல அழைக்க அவர் குடும்பமே அதில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து தன் குடும்பத்தை மீட்டாரா இல்லையா என்பது தான் நெக்ஸ்ட் லெவல். 

கேம் ஸ்டார்ட் செய்வதற்கே கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவரை மெதுவாக செல்லும் படம் கேம் ஆரம்பித்தவுடன் சற்றே டாப் கியர் எடுக்கிறது. சொகுசு கப்பல், மிஸ்டரி பங்களா, பாழடைந்த பேக்டரி என்று மூன்று லொகேஷன்கள். காமெடி என்கிற பெயரில் பல நேரம் வாங்கிக்கட்டிக் கொள்ளும் சந்தானம் இந்த முறை அளவாக வாசித்திருக்கிறார். படத்தை ஓரளவேனும் கலகலப்பாக வைத்திருப்பது மாறன் மற்றும் ராஜேந்திரன். இந்த பாகத்தில் பேய் இடம்பெறும் காட்சிகள் குறைவு. அதனாலேயே சுவாரசியம் கம்மி. டெக்ஸ்சாஸ் செயின் சா மாசாக்கர் படம் போல் கேனிபல்ஸ் தான் வில்லன். ஹாரர் ஜானரை கையில் எடுத்திருக்கிறார்கள். சில நேரங்களில் இல்லை பல இடங்களில் ரிப்பீட் மோட் போல் போர் அடிக்கிறது. ஒளிப்பதிவு, இசை, பட்ஜட், நடிகர்கள், கதை, செட் என அனைத்தும் கை கூடி வந்தாலும் காமெடி DD ரிட்டர்ன்ஸ் அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனாலேயே இதை நெக்ஸ்ட் லெவலாக கொண்டாட முடியவில்லை. 

இந்த எதிர்பார்ப்பை ஒத்தி வைத்தால் இது ஒரு நல்ல முயற்சி தான். 

#DDNextLevel #santhanam

டூரிஸ்ட் பேமிலி

ஒரு நல்ல பீல் குட் மூவி என்று பார் போற்றிவிட்டது. இதற்கு மேல் இதில் என்ன கூற? 

என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் ஆச்சர்யப்படவைத்தது இதன் திரை மொழி. ஒரு நல்ல நாவல் வாசிப்பாளனை முதல் பக்கத்தில் இருந்து கட்டிப்போட வேண்டும். அதே போன்று ஒரு நல்ல சினிமா முதல் காட்சியிலிருந்து பார்வையாளனை தன்னுள் ஈர்க்க வேண்டும். 

'மீன் பிடிக்கும்பொழுது திசை தெரியாமல் வந்துவிட்டோம், நல்லாருக்கீங்களா அண்ணா?' என்று ஆரம்பம் முதல் இறுதி வரையில் அந்த லாவகம் நன்றாக கூடி வந்திருக்கிறது. அபிஷன் ஜீவித்தின் முதல் படம் என்கிறார்கள். எப்படி முதல் படத்திலேயே இவ்வளவு செய்நேர்த்தி?. அதுவும் பல காட்சிகள் படம் நெடுகிலும் ஆங்காங்கே முன்னும் பின்னும் கோர்க்கப்பட்ட விதம் ஆச்சர்யம். உதாரணமாக, ஜெனி நாய், லெமன் ஜூஸ், ஆம்புலன்ஸை கூப்பிடு, தம்பி சாப்பிட்டியா? போன்ற காட்சிகள் ஒரு சோறு பதம். அதுமட்டுமா? ஒரு நல்ல திரைக்கதைக்கு உதாரணமாக காட்சிக்கு காட்சி திருப்பங்கள். ஒரு பக்கம் லாக்கப்பில் போலீசின் லத்தியும் அதிகாரமும் நீண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு நேர் மாறாக தாஸின் அன்புக்கரங்கள் கேசவ் நகரில் அதை விட இன்னும் அதிகமாக நீளுகின்றன. 


பாராட்டப்படும் நேரத்தில் ஒரு நெகிழ்வான தருணம், சிரிப்பு என திரைமொழியில் நல்ல இலக்கணம். கொசுறு தகவலாக கேசவ் நகர் காலனியேவெறுக்கும் அந்த குடிகார இளைஞன் தான் படத்தின் டெரெக்டர் அபிஷன் ஜீவிந்த். படம் நெடுகிலும் நெகிழ்வான காட்சிகள். பார்க்கும் நமக்கு கண்களில் நீர் கோர்க்கவில்லையென்றால் ஆச்சர்யம் தான். அவ்வளவு நெகிழ்ச்சி. அகதியாக ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை சோக டெம்ப்ளேட்டில் அடைக்காமல் கிட்டத்தட்ட டார்க் காமெடி ஜானரில் (ஒரு பாதி) பரிமாறியிருக்கிறார். 

சசிகுமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் காட்சியில் எங்கே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் குடும்பத்திற்குள் ஒரு கலகம் எழப்போகிறதோ என்று பதைபதைப்பு நம்மிடையே தொற்றிக்கொள்ளும் நேரத்தில் ஆற்றாமை, சோகம், பெருங்கோபம், விரக்தி, அரவணைப்பு, பாசம், காதல், நெகிழ்வு, உற்சாகம் என பல உணர்வுகளை கடத்துகிறது. 

அபிஷனின் எழுத்துழைப்பு. இறுதியில் ஒரு சீரியல் போல டிராமா டெம்ப்ளேட்டில் அடக்கியது ஒரு நெருடல். ஆனால் பீல் குட் மூவி என்றாகிவிட்டது. இதை விட வேறு என்ன நல்ல முடிவை எழுதி விட முடியும். எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே நிதானித்து அக்கம் பக்கம் அருகிலிருப்பவரிடம் அன்பைப் பகிருங்கள் என்று கூறும் டூரிஸ்ட் பேமிலிக்கு யோசிக்காமல் ஒரு டூர் செல்லலாம். 

 #TouristFamily #AbishanJeevinth

குடும்பஸ்தன்

காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் மிடில் க்ளாஸ் இளைஞன் ஒருவன், ஒரு கட்டத்தில் வேலையிழந்து வெளியில் சொல்லாமல் கழுத்தை நெறிக்கும் வரை கடன் மேல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதில் வெற்றி கண்டாணா என்பதை டார்க் ஹ்யுமர் பாணியில் சொல்லியிருக்கிறது இந்த குடும்பஸ்தன். மணிகண்டன். படத்தின் போஸ்டரிலேயே, மணிகண்டன் in குடும்பஸ்தன் என்று போட்டிருந்தார்கள். 

அசுர வளர்ச்சி. 

ஒரு வசனகர்த்தாவாக உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னை தகவமைத்துக்கொண்ட மணிகண்டன், ஒரு நடிகனாக குறுகிய காலத்தில் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானது. எட்டு தோட்டாக்கள் ஜெய், காலா லெனின்,ஜெய் பீம் ராஜ்கண்ணு, குட்நைட் மோகன், லவ்வர் அருண் மற்றும் குடும்பஸ்தன் நவீன் என மணிகண்டன் ஏறி வந்த இந்த படிகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் செல்லுலாய்டு ஓவியங்கள். அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளை அனாயசமாக கடத்துகிறார். ரொமான்ஸாகட்டும், பதட்டம், அழுகை, சோகம், கோபம், இயலாமை என நவரசமும் ததும்பி வழிகிறது. சுற்றி கடன்காரர்கள் துரத்த, யாருமே நுழைய முடியாத வெகு நாள் அடைப்பு எடுக்கப்படாத நாற்றமடிக்கும் பப்லிக் டாய்லட்டுக்குள் அடைக்கலம் தேடி நுழையும் மணிகண்டன் காட்டும் உணர்ச்சிகள் ஒரு பானை சோறு பதம். காட்சியும் தான். என்னை பொறுத்தவரையில், நெகட்டிவ் உணர்ச்சிகளான, கோபம், இயலாமை, அழுகை, பதட்டம், படபடப்பு போன்றவற்றில் மணி ஸ்பெஷலான ஒரு உயரம் தொட்டிருக்கிறார். கலைஞன். 



நாயகியாக சான்வெ மேகனா. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கென்று அளந்து வைத்திருக்கும் ரோலில் கனகச்சித பொருத்தம். லவ்வராக, மனைவியாக, மருமகளாக என மூன்று ரோல்களில் தனக்கென்று கொடுக்கப்பட்டதை செவ்வெனே செய்திருக்கிறார். 

குருசோமசுந்தரம். நிறை குடமாக நிற்கும் அவரிடம் இருந்து வெகு குறைவாகவே தமிழ் சினிமா உபயோகித்துக்கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுத்த கூத்து பட்டறைக் கலைஞன். ஜோக்கர் படத்திற்கு முன்னும் பின்னும் அவரை முழுதாய் உபயோகித்தவர் இல்லை எனலாம். அக்காவின் கணவனாய் வரும் குரு செய்யும் அலப்பறைகள் அதகளம். டைம்டேபிள் போட்டு மனைவியை சமைக்கச்சொல்லும் சாவனிச ரோலாகட்டும். கீழே குனிந்து சலாம் போடும் ஆபிஸ் ரோலாகட்டும், மச்சானிடம் மட்டம் தட்டி எள்ளி நகையாடும் மாப்பிளை ரோலாகட்டும், எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். இந்த குரு என்னும் அக்ஷய பாத்திரத்திடம் எடுத்துக்கொள்ள தமிழ் கலையுலகத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது. 

சுந்தரராஜன். 'அதுல ஒன்னும் இல்ல. கீழ போடுங்க' என்று ஒரு பழைய காமெடி உண்டு. அதே ரவுசான ரோலில் சுந்தரராஜன். மணிகண்டனின் அப்பாவாக வருகிறார். இதுபோன்ற குணச்சித்திர நடிகர்களை தமிழ் சினிமா பெரிதும் மிஸ் செய்கிறது. திரையில் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. 

மணிகண்டனின் அம்மாவாக கனகம். ஜெய ஜெய ஜெய ஹே மாமியார். ரவுசு டு தி கோர். மதுப்பிரியர்களாக வரும் நக்கலைட்ஸ் பிரசன்னா, ஜென்சன் திவாகர் காமெடி திரையில் சரவெடி. தனம், சாவித்திரி, நிவேதிதா என நக்கலைட்ஸ் யூட்யூப் பட்டாளம் இங்கு ஆஜர். அனைவருமே கொடுத்த பாத்திரத்தில் நச்சென்று பதிந்துபோயிருக்கிறார்கள். வீட்டிற்கு வீடு வாசப்படி என்று அன்றாடம் நடக்கும் காட்சிகளைத் தான் கோர்த்து பூமாலையாக்கியிருக்கிறார் 

அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர். அவருடன் உறுதுணையாக பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் இந்த கூட்டணி அமர்க்களப்படுத்தியிருக்கிறது. யூட்யூப் சேனல் அனுபவம். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து பதமாக பரிமாறியிருக்கிறார்கள். கடன் மேல் கடன் வாங்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கஷ்டத்தில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை இந்த அளவுக்கு டார்க் ஹ்யுமராக வெகு ஜனமும் ரசித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் எழுதி இயக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 

அந்த அளவுக்கு எழுத்து மற்றும் நடிப்பு பரிமளிக்கிறது. முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை தியேட்டரில் வெடிச்சிரிப்பு. கிடைக்கும் இடங்கள் எல்லாம் காமெடி தான். சொல்லப்போனால் முதல் பாதி முழுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒரு நொடி கூட தவற விடாமல் கவனித்தால் பல இடங்களில் கன்னி வெடி போல் சிரிப்பை புதைத்திருக்கிறார்கள். 'பக்கத்து வீட்டுல கர்ரன்ட் இருக்கா, பிரேக் வேண்டாம். கண்ட எண்ணைல பொரிச்சிருப்பாங்க, 'செருப்பை பாத்துக்கோங்க. ஐயோ இவர் பொண்ணோட தம்பி. அப்படியா அப்ப பத்திரமா பாத்துக்கோங்க', கார் எங்க கிடந்துச்சு?, வச்சி மட்டும் சாப்பிடாதீங்க, பிராடு வேலைக்கு ஏண்டா மோட்டிவேஷன்?, இல்ல இன்னைக்கு மாமியார் பெர்த்டே. விசுக்கு விசுக்குனு கேக்கணும், மூடிய ஆர்கானிக் வழியா எடுக்க முடியுமான்னு பாக்கறேன், தேவி சில்க்ஸ் & brand ஷூ புறம் பேச்சு, காந்திநகர், என்ன சொன்னீங்கன்னு FM சவுண்ட் குரைக்கிறது என படம் முழுக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடி கதக்களி. 

காரில் தெரியும் available balance tag நல்ல ஈர்ப்பு யுக்தி. அதே நேரத்தில், 'SC கேட்டரிங், சோறு தான சமைச்சேன்' போன்ற வசனங்களில் சாதித்திமிரை சாடத் தவறவில்லை. போலவே, 'எந்த பக்கம் இருந்து பாக்கறோம்ங்கிறது தான் பாய்ண்ட்', 'இயந்திரத்துக்கு இதயம் இல்லை. 

எத்தனை தடவை போட்டாலும் அதைத்தான் காமிக்கும்', 'பணம் கடவுள், compromise வழிபாடு' போன்ற வசனங்கள் வாழ்க்கைப்பாடமாக விரிகின்றன. என்னதான் செய்தாலும் நிமிர்த்த முடியாத வாலாக இருக்கும் குரு சோமசுந்தரம் ஆபிசில் நடக்கும் துரோகத்தில் ஒரேடியாக மாறுவது, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மகனின் தட்டை தாய் எடுத்துச் செல்வது, குடும்பமே நடுத்தெருவில் நின்றாலும் மன்னிப்பு கேட்காத தன்மானமிக்க ஒருவன் மானமிழந்து ஊரு முழுக்க கடன் வாங்குவது, ஒரே மாதத்தில் எல்லாக்கடனையும் அடைத்தது (சான்வெயின் நிறைமாத வயிறு சாட்சி) என நெருடல்கள் சில இருக்கின்றன. 

சுஜித்தின் ஒளிப்பதிவு, கண்ணனின் கத்திரி மற்றும் வைசாகின் இசை, படத்தின் டெம்போவை ஜானரை நேர்கோட்டில் பயணிக்கவைக்கிறது. அதிலும் லேசா லேசா பாட்டு பயன்படுத்தப்பட்ட இடங்கள் எல்லாம் 1000 வாலா சரவெடி. வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் வயிறு வெடிக்க சிரித்து மகிழும் ஒரு பிளாக் பஸ்டர் மூவி தான் இந்த குடும்பஸ்தன். 

 #Kudumbasthan #Manikandan #rajeshwarkalisamy #sanvemeghana #nakkalaites #GuruSomasundaram @[100003041747039:2048:Prasanna Balachandran] @[100001910746726:2048:Rajeshwar Kaliswamy]

ஜீன்ஸ் 1998

சிறு வயதில் பார்த்த ஞாபகம். கடந்த வாரம் மேற்கொண்ட ஒரு நெடுந்தூரப் பயணத்தில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. 

சந்தேகமில்லாமல், படம் முழுக்க பிரஷாந்த் ஆக்கிரமித்திருக்கிறார். அவ்வளவு கரிஷ்மா. இரண்டு பிரசாந்த்களும் நெட்டி சோம்பல் முறிக்கும் காட்சி தான் ஹீரோ இண்ட்ரோ ஷாட். சிரித்தபடியே ராமுவை எழுப்புவார். Slightly Feministic. இருந்தாலும் அழகு தான். உள்ளாடையுடன் குளிக்கும் ஒரு காட்சியில் பிரசாந்தின் ஜிம்னாஸ்டிக் பாடியை காமித்திருப்பார்கள். இதுபோன்ற காட்சிகள் எந்த ஹீரோவுக்கும் அன்றுமட்டுமல்ல, இன்றுவரை தமிழ் சினிமாவில் அரிதானவை. மேலும், அமெரிக்கன் ஸ்லாங்கில் ஆங்கில உச்சரிப்பு எல்லாம் வேற லெவல். அதுவும் ராமு அடிக்கடி சொல்லும், ‘ஐ லைக் இட் வெரி மச்’ டையலாக். ஸ்டைல் மட்டுமின்றி, காதல், கோபம், பரிதவிப்பு, சோகம் என நடிப்பிலும் வெரைட்டி காண்பித்திருப்பார். இந்தப் படத்தில் கம்மிட்டாகிய காரணத்தினால் பிரசாந்த் ஏழு படங்கள் தவறவிட்டார். முதலில்  அப்பாஸ் நடிப்பதாக இருந்தது. 

ஐஸ்வர்யா ராய். கேட்கவா வேண்டும். 1994 மிஸ் வேர்ல்டு. இந்தியனில் நடிக்கக் கூப்பிட்டு வரமுடியாத காரணத்தினால், அடுத்ததாக வந்த ஜீன்ஸை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மதுமிதா மற்றும் வைஷ்ணவி என்று டபிள் ட்ரீட். ULA ஹாஸ்பிட்டலில், மினரல் வாட்டர் வைத்து முகம் கழுவிய அழகை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன? 

டைட்டில் கார்ட் சீனில் கழுகுப் பார்வையில் காண்பிக்கப்படும் அமெரிக்கா, அதுவும் இரவு நேரத்தில், அத்தனை உயரிய கட்டிடங்களில் ஒளிரும் விளக்குகள், அதனுடன் ‘நிசரிச’ பின்னணி இசை என எல்லாம் சேர்ந்து ஒரு மோன மயக்கம் தரும். வாய்ப்பிருந்தால் டைட்டில் கார்ட் சீன் மட்டும் மீண்டும் ஒருமுறைப் பாருங்கள். மோஷன் கேப்ட்சரிங்கில் இரண்டு ஐஷ்வர்யா ராய் ஆடும் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல், முப்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு அதிசயம். ஏன்? இன்றும் பல கோடி செலவில் எடுக்கப்படும் படங்களிலேயே VFX சொதப்பும் போது, 1998-லேயே இதைச் சாத்தியப்படுத்தியது மிகப்பெரிய சாதனை. ரெட்டையர் நாசர் மற்றும் ரெட்டையர் பிரஷாந்த என இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் எந்த காட்சிகளிலும் பிசிறு இருக்காது. இந்த செய்நேர்த்திகளுக்காத்தான் இந்தியாவிலிருந்து ஜீன்ஸ் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. 



வாராயோ தோழி, ஹைர ஹைரப்பா, அதிசயம், கொலம்பஸ் எல்லாமே ஃப்ரஷாக இன்றும் நம் பிளேலிஸ்டில் உள்ளன. கொலம்பஸ் பாடல் மாகாபலிபுரத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது கொசுறுத் தகவல். 

சில காட்சிகள் தான் என்றாலும், ‘சுந்தாராம்பாள்’ எனும் கேரக்டரில், தனது 36வது வயதில் ராதிகா ஒரு முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருப்பார். பாகுபலி ராஜமாதாவிற்கு ரம்யாக்ருஷணனை விட்டால் வேறு யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், சந்தேகமே இல்லாமல், ராதிகாவும் ஒரு போட்டியாளர் தான். 

படத்தின் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். ஆம். டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் தான். டென்னிஸ் விளையாடி முடித்த பின் அமெரிக்காவில் செட்டிலாகி, கிட்டதட்ட 125 பதங்களுக்கு மேல் தயாரித்துவிட்டார். 20 கோடி தயாரிப்பில், அன்று ஜீன்ஸ் தான் இந்தியாவின் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் மூவி. 

பட்ஜெட்டில் மட்டும் பிரம்மாண்டமில்லை, பார்க்கும் ஒவ்வொரு பிரேமிலும் 'அதிசயம்' தான் இந்த ஜீன்ஸ். ராமு பாணியில் சொல்ல வேண்டுமானால்... I like it very much! 


மேட் இன் கொரியா - 2026

ப்ரியங்கா மோகன் நடிப்பில், கார்த்திக் (நித்தம் ஒரு வானம் இயக்குனர்) இயக்கத்தில் வெளிவந்துள்ள நெட்ப்லிக்ஸ் திரைப்படம் என்ன ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நல்ல ஃபேமிலி மூவி. 

சில்லறையை கீழே போட்டு பொறுக்கச் சொல்லாமல் குடும்பத்துடன் கூடிப் பார்க்கலாம். துளி கவர்ச்சி இல்லை. நல்ல இசை. இன்னும் அந்தத் தீம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் VTV சாயல். கொரியா காட்சிகள் அற்புதம். அழகான கொரியாவை மேலும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நேர்மறை கொரிய கதாபாத்திரங்களின் வடிப்பு. என்ன நெகட்டிவ்? காதலன் கதாபாத்திரம் குழப்பம். எதற்காக விட்டுச் செல்கிறான் என்பதில் தெளிவில்லை. அதுபோல் இறுதிக்காட்சியில் மன்னிப்பு கேட்பதிலும் உயிரில்லை. 


அதுபோல், கிராமத்தில் இருக்கும் அம்மாவை விட்டுட்விட்டு எங்கோ கொரியாவில் இருக்கும் வயதான பெண்மணியிடம் உருகுவது நெருடல். அதுபோல், கொரியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, செண்பகம், தான் சிறு வேலைகள் மூலம் சம்பாதித்த காசை கொடுத்து உதவுவது என்பது போங்கு. கொரியாவின் கலாச்சாரம், உணவு, கொண்டாட்டங்கள் போன்றவற்றை இன்னும் அதிகமாகக் காட்சிபடுத்தியிருக்கலாம். நல்ல வாய்ப்பிருந்தும் இயக்குனர் தவறவிட்ட ஒரு கோல்டன் சான்ஸ். படம் மேலும் மெருகேறியிருக்கும். இவையெல்லாம் சிறு சிறு குறைகள் தான். பெரும் பட்ஜெட்டில் pan India மூவி என்று தற்போது கொட்டப்படும் கழிசடை படங்களுக்கு இது ஆயிரம் மடங்கு மேல். தாராளமாய் Indo-kimchi பிரைட் ரைஸ் சாப்பிட்டு வரலாம். 

 கொசுறு செய்தி : படத்தின் இறுதி காட்சி வரை, கதாநாயகி ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா என்று தான் நினைத்திருந்தேன். #madeinkorea #Priyankamohan

சர்வம் மாயா

சர்வம் மாயா - Hotstar OTT 

பீல் குட் மூவி கேட்டகிரியில் சேட்டன்மார்களை அடித்துக்கொள்ளவே முடியாது. வந்து பார் என்கிறார்கள். பூஜையின் மீது இருந்த கவனத்தால், மாரடைப்பில் உதவிக்குத் துடித்த அம்மாவை இழந்து விடுகிறார் நிவின் பாலி. மேற்கொண்டு நடக்கும் சடங்கில் வளர்ப்பு நாய் அருகிலே வர, அப்பா இவரை திட்டி வெளியே அனுப்பிவிடுகிறார். அவர் மேல் உள்ள வெறுப்பின் காரணமாக பூணூலை அறுத்தெறிந்துவிட்டு கிடார் வாசிக்கச் சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பும் நிவின், மீண்டும் பூஜை செய்ய ஆரம்பிக்கிறார். பேயோட்டுவதற்கு அழைப்பு வருகிறது. பூஜை வெற்றிகரமாக முடிந்தாலும் பேய் இவருடன் ஒட்டிக்கொள்கிறது. அதன் பின், நடக்கும் களேபரமே சர்வம் மாயா. முதல் பாதியில் ஒரு காமெடி படமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் ரொமான்ஸ் மற்றும் இறுதியில் எமோஷனல் என வேறு பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது. 



அஜூ வர்கீஸ், பார்த்தாலே கிச்சு கிச்சு மூட்டுகிறார். 'பீடி வலிக்குமோ' வசனம் ஒரு சாம்பிள். அவருக்கென ஒரு தனி தீம் மியூசிக். வீணை மட்டுமே வைத்து வெவ்வேறு எமோஷன்களை கடத்தியிருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். 

சந்தேகமே இல்லாமல் படத்தின் அட்ராக்ஷன், டெலுலு கதாபாத்திரம் மற்றும் அதற்கு உயிர் கொடுத்திருக்கும் ரியா ஷிபு தான். மாயா கதாபாத்திரத்தின் முடிவை ரசிகர்களிடம் விட்டது ஜீனியஸ் மூவ். வீக்கெண்டில் பார்பதற்கான ஒரு க்ளீன் பேமிலி மூவி. 

 #sarvammaaya #thameenfilms #riyashibu #nivinpauly #AjuVarghese

Stranger Things

ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. 

2016இல் முதல் சீசன். அதன் பின் 2017, 2019, 2022 மற்றும் 2025 வரை தொடர்கள் வெளியாயின. ஒரு படம் என்றால் அதிகபட்சம் 2.30 மணி நேரம். அதைத்தாண்டி தொடர்ந்தாற் போல binge வாட்சிங் செய்ததில்லை. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் அதனை உடைத்தெறிந்தது. முதல் சீஸனின் முதல் எபிசோடே நம்மை இழுத்து பிடித்து உட்காரவைத்துவிடும். பின்னே ஆறு ஏழு குழந்தைகள், காட்டிற்குள் அவர்களின் சாகசப் பயணம், அங்கே ஒரு ஸ்ட்ரேஞ்சர், அதன் பின் அவர்கள் துப்பறிவது என எழுந்து போகவே மனமில்லாமல் அமர்ந்திருப்போம். நம்மை ஹாக்கின்ஸ் நகரத்தின் பிரஜை போல உணரவைத்திருப்பார்கள்.


கிட்டத்தட்ட பத்து வருடங்கள் படம் பிடித்திருக்கிறார்கள். ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீசன் வளர்ந்தது போல் அந்த சிறுவர்களின் பத்து வருட இயல்பான வளர்ச்சியும் பிரதிபலிக்கும். உதாரணமாக மில்லி பாபி ப்ரவ்ன் பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை எனும் நான்கு பருவங்களை கடந்து வளர்ந்திருக்கிறாள். இதுபோன்றதொரு காட்சிப்படுத்துதல் என்பது அரிது. ஐந்து எபிஸோடிலும் சற்று டல்லாக உணர்ந்தது சீசன் 2 தான். உபயம் காலி எனும் நம்பர் எயிட் கதாபாத்திரம். சீசன் 5லும் அதுபோலவே உணர முடிந்தது. அநியாயமாக லெவனை மூளைச்சலவை செய்திருப்பார். ஆனால் அதை விட வேறொரு பொருத்தமான எண்டிங் யோசிக்க முடியவில்லை. என்ன ஒரு வருத்தம் என்றால் மைக்குடன் சேர்த்து வைத்திருக்கலாம். மனதிற்குள் சென்று அங்கு ஒரு உலகை கட்டமைத்து அங்கிருந்து மற்றொரு உலகத்தில் இருக்கும் பிரஜைகளை கட்டுப்படுத்துவது என ஒரு இடியாப்பச் சிக்கலான கதையை லாவகமான எடிட்டிங் மூலம் குழப்பமில்லாமல் தந்திருக்கிறார்கள். அதிலும் சீசன் 5 ஒரு அக்மார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். 

நீங்கள் மனதளவில் பலவீனமராக இருந்தால் வெக்னா போன்ற மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுவீர்கள் என்ற தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். தீம் ம்யூசிக். ஒரு வகையான நாஸ்டால்ஜியா எபெக்ட் கொடுக்கிறது. ஹாக்கின்ஸ் சிட்டி என்று ஒரு நகரத்தையே ஷூட்டிங் பொருட்டு உருவாக்கியிருக்கிறார்கள். 1980 கட்டிடங்கள், கார்கள், ஸ்கூல், ஆடைகள், வெண்டிங் மெஷின்ஸ், மால், லேப், லேண்ட்லைன் போன்கள், சைக்கிள், விளையாடும் பொம்மைகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கின்றனர். அனைத்து சீசனில் உள்ள எபிசோட்களையும் சேர்த்தல் கிட்டத்தட்ட 45 மணி நேரம் ஓடுகிறது. இரண்டு முழு நாட்கள். மிக சீரியஸாக செல்லும் கதையை சற்றே லகுவாக்க டஸ்டின் மற்றும் லூகாஸின் பாத்திரப்படைப்பு மிகவும் உதவியிருக்கிறது. என்னதான் டஸ்டின் மற்றும் லுகாஸ் ஜாலியாகப் பேசி சிரிப்பை வரவழைத்தலும் அவர்கள் இருவரின் யோசனைப்படிதான் வெக்னாவை அழித்து ஹாக்கின்ஸை மீட்பார்கள். இன்றும் அந்த முதல் சீசனை வீட்டின் புறவாசல், மாடி, படுக்கை அறை, ஹால், முன்வாசல் என எல்லா இடங்களிலும் அமர்ந்து binge வாட்ச் செய்தது ஞாபகம் இருக்கிறது. 

என்ன ஒரே வருத்தம் என்றால் சீசன் 5 பார்த்து முடிக்கும் அதே நேரத்தில் நமக்கும் பத்து வயது கூடியிருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் பொழுது தான் கொஞ்சம் பக்கென்றிருக்கிறது. 

 #strangerthings

சிறை 2025

பார்க்க வேண்டும் என்று நினைத்ததற்கு ஒரே காரணம் கதாசிரியர் தமிழ். பார்க்க வேண்டாம் என்று மனம் தடுத்ததற்கு ஒரே காரணம் ஆஸ்கர் நாயகன் விக்ரம் பிரபு தமிழ், சினிமாவிற்கு வரும் முன் ஒரு போலீஸ் அதிகாரி. சொல்வதற்கு அத்தனை கதைகள் வைத்துள்ளார். டாணாக்காரன் ஒரு சோறு பதம். அவர் எழுதிய கதை தான் சிறை. அவர் சிறை அதிகாரம் என்ற வரிசையில் படங்கள் எடுக்கலாம். ஒரு சிறைக்கைதியை எஸ்கார்ட் செய்து நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும். நீதிமன்றம் சென்று சேரும் வரை அத்தனை பதைபதைப்பு. பார்வையாளனின் அனைத்து யூகங்களையும் தவிடுபொடியாக்கி உண்மைக்கு அருகில் ஒரு படைப்பைக் கொடுத்துள்ளனர். படம் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே குற்றம் சாட்டபட்டவரின் மீது நாம் வைக்கும் முன்முடிவுகள் நாம் யார் என்பதை அறியும் ஒரு வாய்ப்பு. அனிஸ்மா மற்றும் அக்ஷய் குமாரின் நடிப்பு கதைக்கு பெரும் பலம். லியோ தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் தான் அக்ஷய். அனிஸ்மா மலையாள தேசத்து நாயகி. 


விக்ரம் பிரபு இந்த முறை ஏமாற்றவில்லை. ஆனால் அதே விறைப்பான தோரணை. ஏட்டையா கதாபாத்திரம் என்பதால் அளவெடுத்து தைத்தது போல் பொருந்துகிறது. சக ஊழியனுக்காக டூட்டி பார்க்கும்பொழுது மனதைத் தொடுகிறார். இறுதி காட்சியில், நீதிமன்றத்தில் இளம் ஜோடிகளை மட்டுமல்ல நம்மையும் நெகிழ வைத்துவிடுகிறார். தனக்குண்டான அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்தவரை பிறருக்கு உதவியாயிருக்க முயலுங்கள் என்பதே சிறையின் ஆன்மா. ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளனை சிறை பிடித்து அமர வைத்ததில் கதாசிரியர் தமிழும் இயக்குனர் சுரேஷும் வெற்றி பெறுகின்றனர் 

 #சிறை #siraimovie #VikramPrabhu

காந்தா

ஆக, ஓரளவு நல்ல திரைக்கதை, கதாபாத்திரத் தேர்வு, ரெட்ரோ செட், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு, எடிட்டிங், வசனம், டூயட் மற்றும் பின்னணி இசையிருந்தால் கள்ளக்காதல் கூட புனித காவியமாகிவிடுகிறது. காந்தா #kaanthamovie



Dies Irae

அக்மார்க் திரில்லர். பேயை காமிக்காமலேயே பதற வைத்திருக்கின்றனர். ஒரே ஒரு சீன் தவிர. டைரக்டர் ராகுல் சதாசிவன் பேய் ஜானருக்கு என்றே பிறந்திருக்கிறார். பூதகாலம், பிரம்மயுகம் இப்பொழுது dies irae. சீனுக்கான atmoshpere மூலம் பதைபதைப்பு ஏற்படுத்துவதில் ராகுல் ஒரு ட்ரென்ட்செட்டர். மேலும் பிரம்மயுகம், பூதகாலம் reference கவனித்தீர்களா? 

ராகுல் சினிமாடிக் யுனிவர்ஸ் ❤️ 



பிரணவ் நடிப்பு, ராகுல் இயக்கம், கலை, பின்னணி இசை என எல்லாவற்றையும் தாண்டி எனக்கு பிடித்திருந்தது ப்ரணவின் வீடு. 

Dream House. #DiesIrae #PranavMohanlal #RahulSadasivan