தான் காதலிக்கும் பெண் வேறு ஒருவனை விரும்புகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளையே திருமணம் செய்ய நேர்ந்து அவளை அவள் காதலனோடு சேர்த்து வைக்கும் ஒரு 2025 இளைஞனின் முயற்சியே இந்த ட்யுட்.
நண்பன் கூறியது போல் இந்த படத்தை அந்த ஏழு நாட்களின் நீட்சியாக தான் பார்க்க முடிகிறது. ராஜேஷின் கதாப்பாத்திரம் தான் பிரதீப். போலவே 'ஏ நீ ரொம்ப அழகா இருக்க' படத்தின் கருவான, 'பிடிக்கலைன்னா ஒதுங்கிடு' என்பதின் அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன். போலவே கே பியின் பார்த்தாலே பரவசமும் நினைவில் வருகிறது. கிட்டத்தட்ட அதனுடன் சாதி மறுப்பு ஆணவக்கொலை என சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் போகிற போக்கில் லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன். எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டவே இல்லை. வெகு சீரியஸான காட்சிகள் எல்லாம் படு கேசுவலாக காமெடி அதகளம் பண்ணிருக்கிறார்கள். சமீப காலத்தில் இதுபோல் அதாவது பொதுஜனம் பந்தாடுவது போல் ஒரு ஹீரோவுடைய இன்ட்ரோ ஸீன் வந்தது உண்டா? அதையும் விசில் அடித்து தியேட்டரில் ஏற்று கொண்டதுண்டா? வெல் டன் கீர்த்தி.
'அது எப்படிப்பா கல்யாணம் பணிகிட்ட பொண்ணு வேறு ஒருத்தன் கூட சேர்ந்து குழந்தை பெத்து அதுக்கு இவரு டயாபர் மாட்டி விடுவார்?' என்கிற வெகு மேலோட்டமான பார்வை மற்றும் கேள்வியால் சில எதிர்மறை விமர்சனங்களை ட்யுட் எதிர் கொள்கிறது. அதே கேள்வியைத்தான் இந்த படம் நம் முன்னே வைக்கிறது. ஒரு மஞ்சள் கையிற்றின் மேல் இருக்கும் செண்டிமெண்ட் அதன் பின்னால் இருக்கும் பெண்ணின் மனசை கவனிக்கத் தவறுவது ஏன்? அதை ஏற்றுக்கொள்ளும் பிரதீப்பின் மனதை க்ரின்ச் என்று ட்ரெண்ட் செய்வது தானே தற்போதைய பேஷன் என்று அதற்கான விடையையும் கொடுத்திருக்கிறார் கீர்த்தி. இந்த மனப் பக்குவத்தைத்தான் தற்போதைய 2கே கிட்ஸ் ட்ரெண்டுடன் ட்யுட் நம்முன் படைக்கிறது.
நிற்க.
சிவக்குமார் ஒரு பேட்டியில், 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்ற பாடலுக்கு ஏ பி நாகராஜன் அவரை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பதை கூறியிருப்பார். இரு கண்கள் அதன் இடையே உள்ள இடைவெளி, மூக்கின் நீளம் அகலம், தாடை போன்று ஒரு கதாபாத்திரத்துக்கு அல்லது கதையின் நாயகனாக அவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அளவுகோலால் அப்பொழுது தேர்ந்தெடுத்தார்கள் என்றார். 'இதுல எதுவுமே மேட்ச் ஆகலை. இவன் எப்படிடா ஹீரோ?' என்று அந்த பார்முலாவையெல்லாம் அடித்து தூக்கி எறிந்து விட்டு ஒவ்வொரு படமும் சொல்லி அடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே, ட்ராகன், ட்யுட் என அனைத்தும் இளசுகளின் பல்ஸ். ரஜினி போல் கையை சொடக்கு போட்டு அவர் காமிக்கும் மாஸை 2கே கிட்ஸ் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ரீல்ஸில் பிரதிபலிக்கிறார்கள். அதுதான் நிஜம். மேலும் அதுதான் சினிமா வெற்றி பெற இங்கு தேவை.
ஹீரோவுடன் ஒரு கனெக்ட். லவ் டுடே 5 கோடி போட்டு 20 மடங்கு லாபம். டிராகனில் 35 கோடி போட்டு 150 கோடி லாபம். ட்யுட் 30 கோடியில் எடுக்கப்பட்டு தற்போது வரை 100 கோடி சம்பாதித்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளரின் அணுக்க நடிகராக பிரதீப் உருவெடுத்து கொண்டிருக்கிறார் என்பதில் கருத்து வேறுபாடே இல்லை. ப்ரதீப்பையும் இந்த கதையையும் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் தற்கால ட்ரெண்டை பரந்த மனதுடன் அணுகி ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
என்னடா படம் எடுத்திருக்கிறான் என்று சலிப்பு தட்டியது என்றால் 'வெரி சாரி பூமர் அங்கிள்' என்று தற்காலத்திய சூமர் கிட்ஸ் உங்களை பின் தள்ளி முன் சென்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
#dudemovie #dude #pradeepranganathan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக