அந்தி வானம் தனது உடுப்பை மாற்றிக்கொண்டிருந்த இருள் கவியும் நேரம் அது. சிறு முனகல் சத்தம் வந்த திசையை உற்று கவனித்து பின்பு அதை நோக்கி அவன் நடக்கலானான். 'தியா' என்று ஒரு முறை அழைத்து பார்க்கலாமா என்று எண்ணி பின் தியாவுக்கு அதுவே ஆபத்தாக முடிந்துவிடும் என்ற காரணத்தினால் அமைதியானான். அவனது ஒவ்வொரு அடியும் பூனை இரையை பிடிக்க அடியெடுத்துவைப்பது போல கவனமாக இருந்தது. இலை சருகுகள் சத்தம் எழுப்பிவிடும் என்பதினால் கவனமாக நடந்தான். நின்று சற்று காதை கூர்மையாக்கியதில் மாடியிலிருந்து அரவம் வந்தது போல் இருந்தது. படிக்கட்டின் கைப்பிடி கூட கட்டப்படாத புது அடுக்குமாடி கட்டிடம் அது. விரைவாக மேலேறி அவன் கண்கள் தேடிய திசையில் இடதுபுறமாக அவள் காணக்கிடைத்தாள். தியாவின் வாயை ஒரு கையால் மூடி மறு கையால் அவளது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தான் அந்த சைக்கோ.
'ஒரு அடி மேலே எடுத்து வச்சேன்னா, இவளை கொன்னுடுவேன்' என்று ஆவேசமாக ஒரு முறை கத்தியை தூக்கி காட்டினான். ஆறே வயதான அந்த பிஞ்சு மிரண்டிருந்தது அதன் கண்களில் தெரிந்தது.
தன் குழந்தையை இந்த நிலையில் பார்த்து உணர்ச்சிவயப்பட்டவனாக ஒரு ஹிஸ்டெரிக் பேஷண்ட் போல கத்திகொண்டே அவனை நோக்கி ஓடவும், அந்த சைக்கோ கொலைகாரன் கத்தியை தூக்கவும், டிவி அணைந்தது. சனிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு வேலை.
க்ளைமேக்சில் கரெண்ட் போனதில், வசந்த் சற்று அப்செட். OTTயின் தயவில் மீதியை பார்த்துவிடலாம் என்று எண்ணி தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருக்கும்போதே அவனது குழந்தை நிஷா அங்கு ஓடிவந்தாள். மூன்றாம் வகுப்புக்கான துறுதுறுப்பு. கொஞ்சம் படபடப்பாக இருந்தாள். இந்த முறை என்ன வேலை கொடுக்கப்போகிறாளோ என்ற மிரட்சியில் அவளை பார்த்தான்.
'அப்பா, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க' என்றாள்.
அவளது படபடப்பு வசந்தை கொஞ்சம் பரபரப்பாக்கியது. 'என்ன நிஷா. ஏன் இப்டி தலை தெறிக்க ஓடி வர?'
'ஸ்கூல்ல எனக்கொரு ப்ராஜக்ட் கொடுத்துருக்காங்க'
'உனக்கெங்க கொடுக்குறாங்க. எனக்கும் அம்மாக்கும்தான் கொடுக்குறாங்க.'
'அப்பா, ஹெல்ப் பண்ணுங்கப்பா'
சரி.
என்ன பண்ணனும் சொல்லு. முடிஞ்சா பண்ணுவோம்.
‘ஐ. சூப்பர்’
‘ஆனா ஒரு கண்டிஷன்’
‘என்னப்பா?’ என்று சோகமானது
'நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். நீதான் முழு ப்ராஜெக்ட்டையும் பண்ணனும்'.
'ஓகே ப்பா. டன்'.
'சரி. சொல்லு'.
'ஒரு பேமிலி ட்ரீ சார்ட் ரெடி பண்ணணுமாம்'.
'அப்டினா?'.
'ஆலமரம் மாதிரி இருக்கும்ல. டாப் ல ஒருத்தங்க. அவங்க கீழ நிறைய கொஞ்சம் பேர். அதுக்கு கீழ இன்னும் கொஞ்சம் பேர்னு'.
‘ஓகே. புரிஞ்சிடுச்சி. எங்க கம்பெனில கூட அத ஆர்கனைசேஷன் சார்ட்னு சொல்லுவாங்க. ரொம்ப சிம்பிள். நான் சொல்றதையெல்லாம் எடுத்துட்டு வா. ரெடி பண்ணிடலாம்’.
‘சரி. சொல்லுங்க’.
‘உன்னோட போட்டோ, உன் தம்பியோட போட்டோ, அப்புறம் அம்மவோடது என்னோடது எல்லாமே இவ்ளோ சின்னதா இருக்குமே. ஸ்டாம்ப் மாதிரி. அந்த கப்போர்டல ஒரு பைல்குள்ள இருக்கும் பாரு’.
‘சரி வேற என்ன வேணும் பா’.
‘நம்ம வீட்ல வேற யாரு இருக்காங்க?’.
‘நம்ம தாத்தா பாட்டி’.
‘குட். அவங்ககிட்டயும் இதே மாதிரி போட்டோ இருக்கானு பாத்து கேட்டுட்டு வா. அப்புறம் கொஞ்சம் பெவிகால். அதோட ஒரு ஒயிட் பேப்பர். ஒரு கலர் பென்சில் அண்ட் ஸ்கேல்’.
‘ஒன்னொன்னா சொல்லலாம்ல. ஸ்கூலே பரவால்லப்பா’.
சிறிது நேரத்தில் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு வந்து வசந்திடம் ஒப்படைத்தாள்.
வசந்த் அதற்குள் ஒயிட் பேப்பரில் ஒரு ட்ரீ சார்ட் போல பென்சிலில் கொடு போட்டு வைத்திருந்தான். ஊடே சதுரம் சதுரமாக வரைந்து வைத்திருந்ததில் அந்த சின்ன சின்ன போட்டோவையெல்லாம் ஒவ்வொன்றாக ஓட்டச்சொன்னான். ஒட்டியது போக இன்னும் மூன்று பழைய போட்டோக்கள் இருந்தன.
‘இது யாரு நிஷா?’
‘இது பாட்டியோட அம்மாவும் அப்பாவும். அப்புறம் இது தாத்தாவோட அப்பாவாம்’
‘ஓ. இவ்ளோ கலெக்ட் பண்ணிட்டியா? வெரி குட். பட் உன்னோட பேமிலி ட்ரீ சார்ட் ஒட்டுறதுக்கு உங்க தாத்தா பாட்டி போட்டோ போதும். அவங்க அம்மா அப்பா தேவப்படாது நிஷா’
‘ஒக் டேடி. நான் அவங்க போட்டோ பாத்ததில்லையா. அதான் கேட்டேன். தாத்தா பீரோலேந்து எடுத்து கொடுத்தார்’.
‘நீ பாக்றது இருக்கட்டும். நானே இன்னும் பாக்கல நிஷா. கொண்டா அவங்க போட்டோவ பாக்கலாம்’
‘இந்தாங்க’ என்று அவள் கொடுத்த மூன்று போட்டோக்களையும் பார்த்தான். வசந்தின் அம்மாவின் சாயல் அவள் தந்தையை ஒத்திருந்தது. அம்மாவின் அம்மா கொஞ்சம் கருப்பாக பாம்படம் என்று சொல்லக்கூடிய பெரிய லோலாக்கு போட்டிருந்தாள். மூன்றாவது போட்டோவில் இருந்தது தனது பூஜை அறையில் இருக்கும் தாத்தாவின் போட்டோவை போல் இருந்தது. அது தனது அப்பாவின் அப்பாவுடைய போட்டோ என்பதை வசந்த் கணித்துக்கொண்டான். ஆனால் அப்பாவின் சாயல் துளி கூட அந்த தாத்தாவின் போட்டோவில் இல்லை. ஒரு வேலை அப்பா தனது அம்மாவின் சாயலை பெற்றிருப்பாரோ என்று எண்ணி தனது பாட்டியின் போட்டோவை தேடினான். ஆனால் நிஷா மூன்று தான் கொண்டு வந்தாள் என்பது நினைவிருந்தது.
‘நிஷா’
சட்டை பண்ணாமல் போட்டோவை ஒட்டி கொண்டிருந்தது.
‘நிஷா’
‘என்ன டேடி?’
‘எத்தன போட்டோ கொண்டு வந்த. இங்க மூணு தான் இருக்கு. இன்னொரு போட்டோ இருக்கணுமே. பாத்தியா?
‘டேடி. நான் கொண்டு வந்தத கொடுத்துட்டேன். என்ன ப்ராஜக்ட் பண்ண விடுங்க. டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் முடிச்சிட்டு சுட்டி டிவில ஹைடி பாக்கணும்’.
ப்ராஜக்ட் வேலை முடிந்து விட்டதினால் நிஷா உஷாராகிவிட்டாள். இனி இவளிடம் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. காரிய சமர்த்துக்கள். நேரே அப்பாவிடம் கேட்டு விடலாம் என்று முடிவு செய்தவனாய் தன்னுடைய தந்தையின் அறையை நோக்கி போனான்.
உள்ளே அறையில் வசந்தின் அப்பா சுப்பையா சாய்வு நாற்காலியில் கண் அயர்ந்திருந்தார். இப்பொழுது எழுப்பலாமா வேண்டாமா என்று குழம்பி, நாய் போல் ஓடி கொண்டிருக்கும் தன் வேலைப்பளுவில் இதை பிற்பாடு மறந்து விட வாய்ப்பிருக்கிறது என்று முடிவு செய்தவனாய், ‘அப்பா’ என்றழைத்தான்.
சுப்பையா எழுபது வயதை நெருங்கியிருந்தார். ஒரு குவளை தண்ணீர் கூட அடுத்தவரிடம் எதிபார்க்காதவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிற ஒரு ஜீவன். அதிர்ந்து பேசாதவர். சில நேரங்களில் பதட்டமடைந்தால் காடு கொள்ளாது. ஆகையால் தேவை ஏற்பட்டால் மட்டுமே வசந்த் அவரிடம் பேச்சு கொடுப்பான். இடிபஸ் காம்ப்ளெக்ஸ்சாக கூட இருக்கலாம்.
அவனது குரல் கேட்டு திரும்பி பார்த்தவர் என்ன என்பதை பார்வையால் கேட்டார்.
'நீங்க நிஷாகிட்ட போட்டோ கொடுத்தீங்க இல்லையா?'
'ஆமா' அளவாக பதில் வந்தது
'அதில ஆச்சியோட போட்டோ இல்லையா?'
'கொடுத்தனே'
'நான் உங்களோட அம்மா போட்டோ கேட்டேன் பா'
சிரித்தார். ஒரு மௌனம் விழுந்தது. அந்த மௌனத்தை மீண்டும் கலைக்க வசந்துக்கு மனதில்லை. அமைதியாக சுவரில் சாய்ந்து கொண்டு நின்றான். அவரையே குறுகுறுப்பாக பார்த்து கொண்டிருந்தான்.
அந்த குறுகுறுப்பு அவரை ஏதோ செய்திருக்க வேண்டும். அவனை நோக்கி திரும்பினார்.
'போட்டோ இல்ல. எடுக்கல'
'ஏன்பா? நான் ஆச்சி போட்டோவை பாத்ததே இல்லையே. இன்பாக்ட் உங்களோட கல்யாணத்துக்கு முன்னாடியே ஆச்சியும் தாத்தாவும் தவறிட்டதா சொன்னீங்க.'
'ஆமா. சரியாதான் நியாபகம் வச்சிருக்க நீ. ஆனா போட்டோ எடுக்கல. இப்ப உள்ள காலம் மாதிரி இல்லடா அப்போ. நீங்கல்லாம் இப்போ நினைச்சதெல்லாம் போட்டோ எடுத்து வைக்குறீங்க. அப்போல்லாம் போட்டோ எடுத்தாலே ஆய்சு கம்மி ஆகிடும்னு வெளிலயே வரமாட்டாங்க. வீட்டுக்கு வீடு ஆள தேடிப்போய் கண்டுபிடிச்சி தடுப்பூசி போட்ட காலம்டா அது. உங்க ஆச்சி போட்டோ எடுக்கல. ஆனா ஆய்சும் கெட்டியில்ல. தாத்தா போனவுடனே அதே சோகத்துல போய்ட்டா.
கைல பொத்தி வச்சி வளத்தா. அப்போ இந்த அளவுக்கு வசதியில்ல. பீடி சுத்துனா. கடலை வித்தா. இட்லி சுட்டா. கதிர் அறுத்தா. செய்யாத வியாபாரம் இல்லை. அப்டி தான் படிக்க வச்சா. உங்க தாத்தாவாது பீடி குடிச்சார். சீக்கிரம் போய் சேந்தார். இவளுக்கு என்ன. பாக்கு மட்டும் தான் போடுவா. தாத்தா போன அவசரம் போல. அப்டி என்ன தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டா.
இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா இதான் உன் பேரன்னு உன்னைய தூக்கி அவ மடில போட்ருப்பேன். பாக்கு மென்ன எச்சி உன் மேல தெரிக்க உனக்கு குடுத்துவைக்கல' என்றார்.
'எங்கே இருக்கிறது, இங்கே. கிளம்புகிறேன். சரி என்கிற மாதிரியான தலையசைப்பு இதுபோலதான் வசந்துக்கும் அவனது தந்தைக்கும் இடையேயான சம்பாஷணைகள் இருந்தன. ஒரே ஒரு கேள்வி, ஒரு பொருள் இவ்வளவு பேச வைக்குமா என்பதே வசந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் சற்று அவரிடம் கேட்க வேண்டும் போல இருந்தது.
'உங்கள அதுக்கப்புறம் மாணிக்கம் பெரியப்பா பாத்துக்கிட்டருதானேப்பா சொன்னீங்க. அவங்க கூட இறந்து
போய்ட்டாங்களே. அதுக்கப்புறம் நாம அவங்க கூட பேசுறதே இல்லையே'.
பலமாக சிரித்தார். 'வசந்த்' என்று விளித்து அவனை தீர்க்கமாகப்பார்த்தார்.
சுவரில் சாய்ந்திருந்த வசந்த் நேராக நிமிர்ந்தான்.
'ஒன்னு நல்லா ஞாபகம் வச்சிக்கோ. நீ காதால கேக்குற கண்ணால பாக்குற எல்லாமே நிஜமல்ல. உள்ளார்ந்து பாக்கணும். உணரணும். அப்போ தான் உண்மை புரியும். சின்ன வயசில உன் மனசுல நஞ்ச வளக்க கூடாதுன்னுதான் நான் உண்மையை சொல்லல'
'என்னப்பா சொல்றீங்க? ஒன்னும் புரியல'
'உங்க ஆச்சி இறந்தபிறகு உங்க பெரியம்மா அதாவது எங்க அண்ணி வீட்டுல தான் போய் தங்கியிருந்தேன். தாய் கோழியோட சிறகு அரவணைப்புல வளந்த குஞ்சு நான். வெளில ஒரு பருந்தோட பார்வையிலேயும் அதுவரைக்கும் படலை. அதனால கஷ்டம் தெரில. உங்க ஆச்சி இறந்தபிறம் எப்போ அந்த வீட்ல நுழைஞ்சனோ அப்போலேந்து நான் படாத கஷ்டம் இல்ல.
வசந்த் மௌனமாய் நின்று கொண்டிருந்தான்.
சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு உத்திரத்தை நோக்கி பார்த்துக்கொண்டே சுப்பையா தொடர்ந்தார்.
'எங்க அண்ணி, அதான் உங்க பெரியம்மாட்ட நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சம் இல்லை. அண்ணன் அவம்பிள்ளை எல்லாம் சாப்டரும். எனக்கு சாப்பாடு வராது. உச்சி வெயில்ல தான் காலை சாப்பாடே கிடைக்கும். அப்புறம் மதிய சாப்பாடு சாயங்காலம் தான். பொழுது அடையும் நேரம் ஊத்துவா. உங்க ஆச்சி செத்தப்புறம் நான் சுடு சோறே சாப்பிட்டது இல்ல. உங்க அம்மாவை கல்யாணம் பண்ற வரைக்கும். அந்த ஒரு வாய் கஞ்சிக்கு உங்க பெரியம்மா என்ன பேசாத பேச்சு இல்ல. என்னதான் விவரம் தெரியாம வளந்துட்டாலும் ஒரு அளவுக்கு மேல என்னால தாங்கிக்க முடியலை. அண்ணன் கொஞ்சம் கூட இத கண்டுக்க மாட்டான். வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். அப்புறம் பாட்டு புக்கு வித்தேன். சின்ன பொட்டி கடை வச்சேன். எம்.ஜி.ஆர் பீரியட்ல வேலை கிடைச்சுது. அதுக்கப்புறம் தான் நிமிந்து உக்காந்திருக்கேன்.'
வசந்த் பொறுமையாய் பார்த்து கொண்டிருந்தான். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனை புரிந்துகொண்டவராக சுப்பையா
'ஆங், அதான் உங்க ஆச்சி போட்டோ கிடையாது டா. உங்க ஆச்சி என் கண்ணுக்குள்ள மட்டும் தான் இருக்கா.
அவ இந்த கொடுமைய பாக்க வேண்டாம்னுதான் கிளம்பிட்டா போல. உங்களுக்கும் கொடுத்துவைக்கல. என் கண்ணுக்குள்ள மட்டும் தான் இருக்கா'
வசந்துக்கு என்ன பேசுவதென்று குழப்பாமாயிருந்தது.
மீண்டும் அதே கேள்விக்கு வந்தான். 'நீங்க என்னோட சின்ன வயசுலேந்தே உங்க ஊருக்கு கூட்டு போனதில்லை. எனக்கு அத பத்தி தெளிவா கேக்குறதுக்கு அப்போ வயசும் இல்லை. புரிதலும் கிடையாது. விவரம் தெரிஞ்சி கேட்டப்போ அவங்க யாரும் நம்மகிட்ட பேசமாட்ட்டாங்கன்னு சொல்லிட்டீங்க. ஆனா இப்போ தோணுதுப்பா. உங்களுக்கு அப்புறம் ஒரு வேளை எனக்கு ஆச்சி போட்டோ கிடைக்குதுன்னு வச்சுக்கிட்டாலும், இதுதான் உங்க ஆச்சின்னு சொல்றதுக்கு யாரும் இருக்கமாட்டாங்க. இப்போவே பாக்கணும்னு தோணுது. உங்க ஊர்ல, நீங்க பொறந்த வீட்டுல, ஏதாவது ஒரு ட்ரங்க் பெட்டில இருக்கலாம் இல்லையா?'
'உன் ஆசை எனக்கு புரியுதுப்பா. ஆனா என்னோட விவரப்படி உங்க அச்சியோட போட்டோ நம்மகிட்ட கிடையாது'.
'உங்களுக்கே தெரியாம, ஏன் ஆச்சிக்கே தெரியாம, பெரியப்பா கல்யாணத்துல அல்லது ஏதாவது கோவில் திருவிழால பொதுவா எடுத்த போட்டோல எங்கயாவது இருக்கலாமேப்பா'
'நீ சொல்றது சாத்தியமே இல்லனு சொல்லமாட்டேன். ஆனா
அத ஏன் இப்போ இப்படி தேடுற?
“இல்லப்பா. சின்ன வயசுலேந்து நான் தாத்தா பாட்டி கூட
வளந்தது இல்ல. தியாவ பாக்கும்போது எனக்கும் அதே மாதிரி ஆச்சி தாத்தா கூட
வளந்துருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. சரி, அது இனிமே நடக்காது. இப்ப தியாவுக்காக ப்ராஜக்ட் பன்னும்போது திரும்பவும்
அதெல்லாம் ஞாபகம் வந்துச்சு. அதான் கேட்டேன். போட்டோவாது பாக்கலாமேன்னு’.
‘ஒகே வசந்த். புரியுது. அதான் சொன்னேனே. உனக்கும் தாத்தா பாட்டிய பாத்து
வைக்க கொடுத்து வைக்கல அவங்களுக்கும் பேரக்குழந்தைய கொஞ்ச கொடுத்து வைக்கல. சரி, ஒரு வேளை நீ சொல்றமாதிரியே போட்டோ அங்க இருந்தாலும் இப்போ நான் அவங்க கிட்ட பேசுற மனநிலமைல இல்லை. ரணம்
ஆறல. வயசும் ஆய்டுச்சு. வீம்பும் ஜாஸ்தி ஆகிடுச்சு. உங்க பெரியப்பா இறந்தப்போ அவன் குடும்பம் திக்கு தெரியாம நின்னுடிருந்தது. அவனுக்கு மூணு குழந்தைங்க. ஒரு பொண்ணு ரெண்டு ஆணு. அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றதுனு தெரியாம நிக்கும்போது அப்போ கவர்ன்மென்ட் வேலைல சேர்ந்திருந்த நான் அவங்களுக்கு கொஞ்சம் உதவினேன். நன் பழைய அவமானங்களை ஞாபகம் வச்சுக்கலை. அதுமட்டுமில்லாம மனிதாபிமான அடிப்படையில இறந்த பெரியப்பாவோட வேலை அவன் வாரிசுக்கு தான் வரணும்னு மூத்தவனுக்கு அவங்க அப்பா வேலை வாங்கி கொடுத்தென். அதுக்கு எவ்ளோ அலைஞ்சிருப்பேன் தெரியுமா?. வேலை வாங்கினப்புறம் ஒரு மருந்துக்கு கூட நன்றி சொல்லல. தகப்பன் ஸ்தானத்துல இருந்த என்ன கொஞ்சம் கூட மதிக்கலை. போதும் வசந்த். பழசை அதிகமா நான் ஞாபகப்படுத்த விரும்பலை. ரொம்ப காயப்படுத்துது.'
'அப்பா'
'என்னால பேச முடியாது வசந்த். அவங்க எங்க இருக்காங்கனு கூட எனக்கு தெரியாது'
'இல்லப்பா. பெரியப்பா எந்த டிபார்ட்மெண்ட்ல வேலை பாத்தாருன்னு சொன்னீங்க?'
'விவசாயத்துறை. ஏன் எதுக்கு.'
‘அந்த எரியால ஒரு ஃப்ரெண்ட் இருக்கான். பிடிச்சிடலாம். அவங்க தொடர்பு கிடைக்குதான்னு முயற்சி பண்றேன்.
மௌனமாய் இருந்தார்.
வசந்த்க்கு உடனே ஊரகத்துறையில் வேலை பார்க்கும் நண்பன் நினைவில் வந்தான். கல்லூரி முடித்து இரண்டு வருடங்கள் விழி பிதுங்கி தேர்வுக்கு படித்து அரசு இயந்திரத்தில் பொறியாளராக பனியாணை வாங்கிய மாடசாமியை அலைபேசியில் அழைத்தான்.
இறந்து போன பெரியப்பாவின் மற்றும் அவரது மகனின் பேரையும், ஊரையும் அவர்கள் மனிதாபிமான
அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து இதைவைத்து ஏதேனும் தகவல் திரட்ட முடியுமா என்று கேட்டான்.
குட்டிபோட்ட பூனை போல இவன் உலாவிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் அலைபேசியில் ஒரு வாட்ஸப் செய்தி வந்து விழுந்தது.
இசக்கி என்று பெயர் எழுதி ஒரு நம்பரும் இருந்தது.
திரும்பி அவன் அப்பாவை பார்த்தான். ஏதோ ஒன்றை யூகித்தவராய் இதுக்கு மேல உன் இஷ்டம்' என்று சொல்லியவாறு சேரில் சாய்ந்துகொண்டார்.
நம்பரை டயல் செய்த வசந்த் 'ஹலோ' என்று விளித்து பால்கனியில் சென்று பேச ஆரம்பித்தான்.
சுப்பையாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு அறுந்த போன உறவுச்சங்கிலியை இவ்வளவு எளிதாக
கண்டடைந்துவிட முடியுமா என்று யோசித்தார். கைகுள்ளே உலகம் வந்த வேகத்தை எண்ணி கண் அயர்ந்தவர் ஒரு ஐந்து நிமிடம் உறங்கியிருப்பார்.
அறையின் வாசலில் அரவம் கேட்டு முழித்தவர் வசந்த் திரும்பி வந்ததை கண்டார்.அவர் பார்வை என்னவாயிற்று கேட்டது.
'அவங்கதானா?'
'அவங்கதான்ப்பா'
கண்கள் விரிய 'போட்டோ கிடைச்சுதா?' என்றார்
'போட்டோ கிடைக்கலப்பா. ஆனா..’
‘ஆனா
என்ன வசந்த்’ என்று நிமிர்ந்தார்.
ஆனா, அண்ணன்
கிடைச்சிட்டாரு'
பெருமூச்சு விட்டவாறு மெலிதாக சிரித்துகொண்டே சுப்பையா நாற்காலியில் சாய்ந்தார்.