கிருஷ்ணன் ஏதும் பேசாமல் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். மூக்குக் கண்ணாடி கழட்டி மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. முழங்கைகளை மேஜை மீது ஊன்றி இரு பெருவிரல்களால் நெற்றியை தாங்கிக் கொண்டிருந்தார்.
காலையில் அவரது வீட்டு ஓனர் கூறிய வார்த்தை மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
‘கொஞ்சம் அவசரம். ரெண்டு மாசத்துல வீடு காலி பண்ணிடுங்க கிருஷ்ணன்'
இருபது வருடங்களுக்கு மேல் இங்கு குடியிருக்கிறார். ஓனருடன் சுமூகமான உறவு
தான். ஏதோ அவசரம். ஆனால் வீட்டைக் காலி செய்ய வேண்டும் அதுவும் உடனே
என்பதனை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மனைவியுடன் அளவளாவிய அறை, நிலவு
பார்த்து சுகித்து கிடந்த மொட்டை மாடி, குழந்தை பள்ளி சென்றது, சடங்கு,
திருமணம் என அவரின் வாழ்க்கையை மிக அருகில் இருந்து சாட்சியாய் பார்த்த
வீட்டை அவரால் பட்டென்று அறுத்து விட்டுச் செல்ல முடியவில்லை.
மீதம் இருக்கும் அறுபது நாட்களை இந்த வீட்டில் ஆசை தீர வாழலாம் என்று நினைத்தாலும் வருத்தமே அவருக்கு மிதமிஞ்சியது.
சில நாட்கள் முன்பு அவரின் டாக்டர் கூறியது சரிதான் என்று நினைத்துக்
கொண்டார். குணமாகுற ஸ்டேஜ் தாண்டிடுச்சி. இதுக்கு மேல நீங்க ட்ரீட்மண்ட்
எடுத்து சிரமப்பட வேண்டாம். எவ்ளோ நாள்னு கேக்காதீங்க. அப்புறம் நிம்மதி
இருக்காது கிருஷ்ணன்'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக