புதன், ஏப்ரல் 15, 2026

ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்

புறநகர் ரயில் வண்டியில் தினமும் இரண்டு மணி நேர பயணம். சைதாப்பேட்டையில் ஏறினால் பார்க்கில் இறங்கி பிறகு கும்மிடிப்பூண்டி ரயில் பிடித்து எண்ணூர் தாண்டி அத்திப்பட்டு ஸ்டேஷன் வரை செல்ல வேண்டும். காலை மாலை என்று கணக்கெடுத்துக் கொண்டால் நான்கு மணி நேரம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு, இதுபோல் 4g, 5g எல்லாம் கிடையாது. தங்கம் விலையில் தான் 3gயே கிடைக்கும். சில நேரங்களிலேயே போன் சூடாகி விடும். அதனால் இப்பொழுது போல் யூட்யூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற பொழுது போக்கு வகையறாக்கள் கிடையாது. ஸ்ட்ரீமிங் என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஏதேனும் கம்ப்யுட்டரிலிருந்து போனுக்கு ஏற்றிவிட்டு ஒயர் ஹெட் போனில் பார்த்தால் தான் உண்டு. அது கொஞ்சம் சிரமமான வேலை. அதனால் முக்கால்வாசி பேர் அந்த நான்கு மணி நேரத்தில் கதையடிப்பார்கள். சிலர் வாசிப்பு. சிலர் தூக்கம். சில வா பார்த்தல். நான் வாசிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்த வாசிப்பு என்பது பெரும்பாலும் அன்றைய நாளிதழாகத்தான் இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து, தினமலர், தமிழ் இந்து போன்று. இரண்டு அல்லது மூன்று ரூபாய் விலை தான் இந்த தினசரி நாளிதழ். 7.40க்கு பீச் ட்ரைனில் பார்க் ஸ்டேஷன் வந்திறங்கி ஓடோடி 7.48க்கு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்து இந்த இரண்டு ரூபாய் நாளிதழை வாங்கி 8.00 மணி கும்மிடிப்பூண்டி ரயிலில் இடம் பிடித்துவிட்டால் அதற்கப்புறம் இந்த வாசிப்பு தான். ரிட்டயர்டு ஆன தாத்தாக்கள் எல்லாம் வீட்டின் நடுவில் ஒரு ஊஞ்சல் கட்டி பரீட்ச்சைக்கு வாசிப்பது போல் இந்துவை வாசிப்பார்களே அது போல், ஒரு மணி நேரம் கடும் வாசிப்பாக இருக்கும். கொஞ்சம் நாள் பேசிப்பழகிய பின் இதை கவனித்து ஒருவர் கேட்டார்.

'இதுல என்ன உபயோகம் இருக்குனு இப்படி வாசிக்கிறீங்க?'

'நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கத்தான் சார்'

'எல்லாமே குப்பை. இதுல வர நியூஸ் எதுவுமே தேவை இல்லாதது. இது உங்க மண்டைக்குள்ள போய் தேவையில்லாத ஸ்பேஸ் பிடிச்சுக்குது, படபடக்க வைக்குது, anxiety depression எல்லாம் ஜாஸ்தி ஆயிடும். பூரா நெகடிவிட்டி'.

'என்ன பண்ணச் சொல்றீங்க?'

'புத்தகம் வாசிங்க' என்றார்.

பள்ளி கல்லூரி காலங்களில் நூலகம் நூலகமாக சென்று வாசித்து, பின்பு வேலைப் பளு காரணமாக வாசிப்பு அறவே நின்றிருந்த நாட்கள் அவை. அவர் கூறியது உள்ளுக்குள் ஒரு பொறி தட்டியது போல் இருந்தது. நாளிதழ்களை தூக்கியெறிந்து ஆர்யகவுடா முருகன் லெண்டிங் லைப்ரரி வந்து தஞ்சமடைந்தேன். நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் மேல் வாசித்தேன். மனதிற்குள் குப்பையாக எதுவும் சேரவில்லை. சரியான அறிவுரை. நிற்க.

இப்பொழுது வசிக்கும் இடம் ஒரு சிறு ஊரகம். டவுன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் மூன்று பேர் என்று எடுத்துக்கொண்டால் கூட கிட்டதட்ட 30000 பேர். அதிகபட்சம் 50000 பேர். ஒரே இடத்தில். பல தரப்பட்ட மனிதர்கள். வெவ்வேறு வயத்தைச் சார்ந்தவர்கள். பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி பயிலும் இளைஞர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள், பெற்றோர்கள், நடுத்தர வயத்துக்கார்கள், ஒய்வு பெற்றவர்கள், முதிர்ந்த பெரியவர்கள் என அத்தனை பேர். குடும்பங்கள் என்று எடுத்துக்கொண்டால் பலவகையாக இருக்கிறது. இதிலே நேர்கோட்டில் எந்த வித விவகாரமும் இன்றி பயணிக்கும் குடும்பங்கள் உண்டு. அதற்கு நேர் எதிராக டிவோர்ஸ் ஆனவர்கள், மறுமணம் ஆகாதவர்கள், சிங்கிள் பேரன்ட்ஸ், தினமும் சண்டை போடும் குடும்பம், ரெட்டை வால் குருவி குடும்பம் என பல வெரைட்டிகள் இங்கு உண்டு. அலுவலகம் என்று எடுத்துக்கொண்டால் நம் மீது உண்மையான அக்கறை எடுத்துக்கொள்ளும் 0.02% மக்கள், மீதம் பொறாமையிலேயே பொருமித்தள்ளும் கனவான்கள், கிறுக்கு பிடித்த மேலதிகாரிகள், சைக்கோ டீம் மேட்கள், அறுந்த வால் ஜென z ஜூனியர்கள், கீழே என்ன நடக்கிறது என்றே தெரியாத உயர் உயர் மேலதிகாரிகள் என ஒரு மினி நேட் ஜியோ வைல்ட் சேனல் நடத்தலாம். இது இல்லாது இந்த 10,000 குடும்பங்களைச் சார்ந்து இயங்கும் நேரடி அல்லது மறைமுக வியாபாரங்கள், வியாபாரிகள், அவர்தம் குடும்பங்கள் என அவ்வளவு நிகழ்வுகள் ஒரு நாளில் அல்ல ஒரு நொடியில்.


அதனால் என்ன என்று தானே உங்கள் கேள்வி? இந்த அத்தனை நிகழ்வுகளும் விரும்பியோ விருப்பம் இல்லாதோ எப்படியாவது காதில் வந்து விழுந்து விடுகின்றன. வாட்சப் முதல் காரணீ. ஆபிஸ் கிசுகிசுக்கள் இரண்டாம் காரணீ. இவற்றையெல்லாம் தவிர்த்து அன்றாட வேலைகளை மனத்தாங்கல் இன்றி பார்ப்பதே ஒரு பெரும் போராட்டாமாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, இந்த வருட ஆரம்பத்தில் அதாவது ஜனவரியில், எங்கள் ஊரகத்தில் ஒரு துர் சம்பவம் நடந்தது. தன் அண்ணனை பள்ளிக்கு அழைத்து போக வந்த வேனின் சக்கரத்தில் மாட்டி ஒரு வயது குழந்தை இறந்துவிட்டது. ஒரு வருட விடுப்பு முடிந்து முழு நேர வேலைக்கு ஒருவரை அமர்த்திவிட்டு அப்பொழுது தான் அந்த குழந்தையின் அம்மா வேலைக்குச் செல்கிறார். ஆற்ற முடியாத துயரம். இன்னொரு சம்பவம். அடுத்த மாதம் என்று நினைக்கிறேன். எங்களுடன் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து

தற்கொலை செய்துகொண்டார். நிதி சார்ந்த முதலீட்டில் ஒரு பெரிய தொகையை ஏமாந்து விட்டார். பெரும் துக்கத்தில் இருந்தார் போல். ஆனால் ஒருவரிடமும் பேசியதில்லை. மனைவி மற்றும் இரு குழந்தைகள் என நிராதரவாகிவிட்டனர். மார்ச் மாதம், ஒரு உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். காரணம் தெரியவில்லை. ஒரு பெண் குழந்தை மற்றும் மனைவி. இவை மட்டும் இல்லை. ஊரகத்தில் மாடு முட்டி கீழே விழுந்து கோமாவில் இருப்பவர்கள், நாய் குதறிய குழந்தைகள், தற்கொலை, குடும்ப பிரச்சினைகள், பள்ளி நிகழ்வுகள், கல்லூரி கலாட்டாக்கள், மைதானத்தில் அத்துமீறல்கள் etc etc என அனைத்து செய்திகளும் அடுத்த நொடியே வந்தடைந்து விடுகிறது.

ஒழுக்கமாக இருக்கும் குடும்பங்கள், அவர்தம் பிள்ளைகள், படிப்பு, மேற்படிப்பு, திருமணம், குழந்தைகள், வெளிநாடு செல்லுதல், இங்கிருந்து பிள்ளைகளை பார்க்க அவர்களும் வருடத்திற்கு ஓரிருமுறை பயணம், ஒய்வு காலம், ஒரு நன்னாளில் மீளாப் பயணம். இதுவே தந்தை அல்லது தாய் சரியில்லாத குடும்பம், அவர்கள் நித்தமும் படும் இன்னல்கள், குடியினால் ஏற்படும் திடீர் மரணங்கள், தாய் சேய் என இருவரும் வீட்டு வேலை செய்வது என இது மற்றொரு பக்கம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் குழந்தைகள், இங்கு தன்னந்தனியாக நிற்கும் அவரது பெற்றோர்கள். ஏதேனும் ஒரு எமெர்ஜென்சி என்றால் அண்டை அயலார் தான். கால் ஒடிந்தாலும் கூட வரத்தயங்கும் அல்லது வர முடியாமல் போகும் குழந்தைகள். இறந்த பின்பு கூட இரண்டு நாட்கள் கழித்து வரும் குழந்தைகள், துணையை இழந்து தன்னந்தனியாக வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் தெருவில் பொழுதை போக்கும் பெரியவர்கள் என இவர்களை பார்க்கும் பொழுது ஒரு கணம் மிகவும் திகிலாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை இப்படித்தான் செல்லும் என்பது சுற்றி இருக்கும் இந்தப் பெரும்பான்மையானவர்களை கவனிக்கும் பொழுதே தெரிந்து இந்த டெம்ப்லேட் வாழ்க்கையின் மொத்த சுழற்சியும் அத்துபடியாகிவிட்டது. அசுவாரஸ்யமானதொன்று.

நற்செய்திகளை விட இந்த கெட்ட செய்திகள் பல மடங்கு வேகத்தில் காட்டுத்தீ போல் பரவுகின்றன. இந்த அதீத குப்பைகளால் ஒரு நெகட்டிவிட்டி சூழ்கிறது என்று தெரியாமலேயே மனம் சோர்ந்துவிடுகிறது. நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் புத்தனின் 'அத்தனைக்கும் சாட்சியாயிரு' என்பது இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

அன்று ரயில் பேசின் பிரிட்ஜ் தாண்டியபோது அவர் கொடுத்த அறிவுரை தான். 'உங்களுக்கான விஷயம் என்றால் அதுவே தானாக உங்களை வந்தடைந்து விடும். விழிப்போடு அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடிக்கு இந்த குப்பைகளுக்கு உங்களுடைய மனதிலும் மூளையிலும் இடம் கொடுத்து வீணடிக்காதீர்கள்' என்றார்.

நூற்றுக்கு நூறு சதவீதம் சரி. இந்த குப்பைகளில் இருந்து விலகி நடக்கும் போராட்டத்தினூடே தான் இந்த அழகான வாழ்க்கையைத் தேடி பயணிக்க வேண்டிருக்கிறது. இன்று கிடைக்கும் இந்த நொடியும், சூழலும் நாளை அமையுமா என்பது தெரியாது.

ஆதிலினால், நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு நொடியையும் ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்.


கருத்துகள் இல்லை: