திங்கள், பிப்ரவரி 27, 2023

காலை ஊன்றி நடப்போம்

 கடந்த வாரத்தில் நான் கடந்த இரு நிகழ்வு. இரண்டுமே உடன் பணிபுரிவர்கள் குடும்பத்தில் நடந்தவை தான்.

முதலாவது நிகழ்வு. மத்திம வயதுக்காரர். உடன் பிறந்த ஒரு அக்காள் உண்டு. மற்றொரு நாள் என்று விடிந்த பலருக்கு போல அன்று அவருக்கு விடியவில்லை. ஊரில் இருந்த அவரது தந்தையார் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். இரு வருடங்களுக்கு முன்பு அவர் தன் தாயை இதே மாரடைப்பின் காரணமாக இழந்திருந்தார். ஆபரேஷன் தியேட்டர் வாசலில் ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு எது நடந்தாலும் பொறுப்பில்லை என்று இவரிடம் கையொப்பம் வாங்கிவிட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் எவ்வளவோ ட்ரை பண்ணினோம். காப்பாத்த முடியலை என்று அடுத்த ஆபரேஷனுக்கு உள்ளே போன டாக்டரை பார்த்து விரக்தியடைந்திருந்தார். நம்மல்லாம் என்ன படிச்சு என்னத்துக்கு?  மனுஷனால முடியாத காரியம் ஒண்ணும் இல்லனு சொல்ல முடியாது. கண்ணு முன்னாடி துடிசிட்டிருக்க உயிரை காப்பாத்த தெரியலை. நிறைய கத்துகிட்டோம்னு என்னைக்குமே நாம் சொல்லிக்கக்கூடாது. இனிமேல் தான் கத்துக்க ஆரம்பிக்கணும் என்று மனம் வெதும்பி பேசியது இன்றும் ஞாபாகம் இருக்கிறது”.



சரி. நிகழ்காலத்திற்கு வருகிறேன். அப்பாவின் இறுதி சடங்கையெல்லாம் நிறைவேற்றிவிட்டு ஆபீஸ் திரும்பியவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லாதான் பேசிட்ருந்தார். இந்தா மாதிரி ஆகும்னு எதிர்பார்க்கலை. எந்த ஒரு அறிகுறியுமே இல்லை. அம்மா போனதுக்கப்புறம் தோப்பு துரவுன்னு பாத்துட்டு நிம்மதியா தான் இருந்தாரு. அவருக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தாரு. திடீர்னு இப்டி ஆனது ஏத்துக்கவே முடியல. பெரிய வீடு. நீளமா இருக்கும். தொட்டில வளக்குற மீன் வாங்குறதுக்கு நானும் அப்பாவும் எங்கெங்கெல்லாமோ போவோம். பஸ் ஏறி அடுத்த ஊருக்கு. சைக்கிள்ள, டூ வீலர்ல. ஃப்ரெண்ட் மாதிரி தான் பேசுவாரு. எல்லாம் இப்போ ஞாபகத்துக்கு வருது. ஒண்ணு பாருங்க அதுல. அவரு ஆசை பட்ட மாதிரி கடைசில பொண்ணு மடில தான் உசுர விட்டாரு.

இன்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்ப யத்தனிக்கும் வேளையில் கேட்டேன். வீட எப்பிடி மெயின்டய்ன் பண்ணப் போறீங்க? அடிக்கடி ஊருக்கு போக வேண்டிருக்குமா?’

இல்ல. தேவையிருக்காது சார். அது அக்கா பேர்லேயே மாத்திடலாம்னு சொல்லிட்டேன். நமக்கு இங்க ஒரு வேலை இருக்குது. மாமா எதுவும் வேலை செய்யலை. ஏஜன்சி மாதிரி ஒரு பிஸினஸ் பண்றார். இந்த வீடு அவங்களுக்கு கொஞ்சம் மனசளவுல தெம்ப கொடுக்கும். எங்க அக்காதானே. அப்பா இத தான பண்ணிருப்பார்

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வார்த்தையே வரவில்லை. அவருடைய அப்பா உயிரோடிருந்திருந்தால் கூட இரு பக்கமும் பாதி பாதி என்று அல்லாடியிருப்பார். எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்? பெற்றோர் இறந்த பிறகு தங்கையை வீட்டிற்குள்ளேயே வராதே என்று முற்றத்திலேயே நிற்க வைத்திருக்கும் சகோதரர்களை பார்த்திருக்கிறேன். பெற்றோருடன் இருந்தபோது ஒரு தட்டில் சாப்பிட்டவர்கள் தானே இந்த இருவரும். வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க முடியாத அந்த பெண் மனது என்ன பாடு பட்டிருக்கும்? இவர் தனது அப்பாவின் ஸ்தானத்திற்கும் ஒரு படி மேலே சென்றுவிட்டார். ஒரு வேளை ஆத்மா என்பது உண்மையாக இருந்தால், இவர்களது பெற்றோரின் ஆத்மா மிகுந்த மகிழ்ச்சியுடன் இவரை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கும்.

ரண்டாவது நிகழ்வும் அலுவலக ஊழியர் தான். மங்களூர் சொந்த ஊர். வேலைக்காக திருச்சியில் குடியிருக்கிறார். கடந்த வாரம் இவரது தாயார் தவறிவிட்டார். விசாரித்தபொழுது தான் தெரிந்தது இவர் பதினோராவது குழந்தையாம். தாயார் ஸ்ட்ரோக்கில் விழுந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக படுத்த படுக்கையாகிவிட்டார். தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயாரை மங்களூரில் தன் சொந்த வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். மனைவி மக்கள் மங்களூரில். இவர் இங்கு. இரண்டு வராங்களுக்கு ஒரு முறை மங்களூர் பயணம். லீவை காம்பன்சேட் செய்வதற்கு அனைத்து ஞாயிற்று கிழமையும் அலுவலகம் வந்துவிடுவார். யோசித்து பாருங்கள். வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் விடுமுறையே நமக்கு பத்தவில்லை. நாள்தோறும் ஆபீஸ் வருவது என்பதெல்லாம்?

பேசிக்கொண்டிருந்த பொழுது தான் தெரிந்தது.

நான் கடைசி பையன். எனக்கு முன்னாடி பத்து பேரு. அம்மா அப்பாவ யாரும் பாத்துக்கமாட்டோம்னு சொல்லிட்டாங்க. இவங்களுக்கு உடம்பு சரியில்லாம இருக்கும்போது இருமுனா வாமிட் பண்ணிட்டா திட்டிட்டே இருப்பாங்க. அதனால அப்பா அம்மாவுக்கு அங்க இருக்க பிடிக்கல. இங்க கூட்டிட்டு வந்தேன். அப்பாவுக்கு கிளைமேட் ஒத்துக்கல. ஊர்லயும் வீடு இல்ல. லோன் போட்டுட்டு ஊர்ல இடம் வாங்கி வீடு கட்டினேன். அப்பா இறக்குறதுக்கு முன்னாடி மூணு மாசம் அந்த வீட்டுல இருந்தாரு. அம்மாவ அதே வீட்டில ரெண்டு வருஷம் வச்சி பாத்துக்கிட்டேன்”. என்றார்

நாம் சிறு குழந்தையாக இருந்தபோது நமது எச்சங்களை கையில் ஏந்தி கழுவிய கைகள் தானே நம் அப்பா அம்மாவுடையது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் குழந்தையாக மாறிய அந்த தருணத்தில் பணிவிடை செய்ய நாம் தயங்குவது ஏன்? ஏறிய ஏணியை எட்டி உதைப்பது எந்த வகையில் சேர்த்தி?

இறுதியாக ஒன்று சொன்னார். “நான் பிறக்கும் போது எங்க அம்மாவுக்கு நாப்பது வயசு. அப்பாவுக்கு நப்பாத்தஞ்சு. கடைசி காலத்துல அவங்கள நான் பாத்துக்கிட்டேன்ற சந்தோஷம் திருப்தி எனக்கு இருக்கு சார். எங்க வீட்டுல சந்தோஷமா தான் இருந்தாங்க. இறந்தாங்க. அது போதும்”

இரண்டுமே பத்து நிமிட உரையாடல்கள் தான். எத்தனை எத்தனை புரிதல்கள். வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் எப்போதும் கொடுத்துவிடுவதில்லை. இரண்டு பெரு வாழ்வின் சாட்சியங்கள் கண் முன்னே வந்து போகின. நாம் வாழப்போகும் எஞ்சிய வாழ்க்கைக்கான  படிப்பினைகள் என மிக மிக நெகிழ்ச்சியான இரு தருணங்கள் அவை.

தரையில் காலை ஊன்றி நடப்போம்!!!

வியாழன், பிப்ரவரி 23, 2023

விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்

இது நடந்து எப்படியும் பத்து வருடங்கள் இருக்கலாம்.

ஒரு நண்பகல் வேளையில் மத்திய கைலாஷ் MRTS ஸ்டேஷன் நோக்கி நடந்துகொண்டிருந்தபோது, எனக்கு எதிரே இருபதடி தொலைவில் திபு திபுவென்று ஐந்தாறு குண்டர்கள் அரிவாளுடன் ஓடி வந்தனர். பக்கென்றிருந்தது. தலை தெறிக்க ஓடி வந்தவர்கள் வேகமாக என்னை கிராஸ் செய்துவிட்டு MRTS ஸ்டேஷன் உள்ளே ஓடினார்கள். அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த போது கொஞ்ச தூரத்தில் கட் கட் என்று சொல்லும் சத்தம் கேட்டது. அப்பொழுதான் புரிந்தது அது ஒரு சினிமா சூட்டிங் என்று. சூரியா படம். பேர் ஞாபகமில்லை.  

கடந்த வாரம் இது போல சென்னை பைபாஸ் ரோட்டில் ஒருவர் டூ வீலரில்  சென்று கொண்டிருக்கிறார். இரவு பன்னிரெண்டு மணி. திடீரென்று மூன்று பேர் புதருக்குள் இருந்து வெளியே ஓடி வருகின்றனர். இவர் என்னவென்று சுதாரிப்பதற்குள் தலையில் ஒரு வெட்டு. ஹெல்மட் போட்டிருக்கிறார். அதற்கு மேல் தான் வெட்டு என்றாலும் தடுமாறி கீழே சாய்கிறார். மூன்று பேரும் அவரை தூக்கி புதருக்குள் இழுத்து போட்டு சரமாரியாக வெட்டுகின்றனர். மறிப்பதர்க்காக குறுக்கே கை நீட்டினாலும் அங்கேயும் ஒரு வெட்டு. கை, கால், முகம் தலை என்று எல்லா இடத்திலும் வெட்டு. கீழே விழுந்த லேப்டாப் மற்றும் பர்சை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றனர். அவ்வளவும் அரை நொடியில். இவர் உயிரை கைய்யில் பிடித்துக்கொண்டு தவழ்ந்து ரோட்டின் மேலே வருகிறார். ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லவும் அடுத்த இரண்டு நிமிடங்களில் ரோந்து வாகனம் வந்திருக்கிறது.



மேல சொன்னவை சினிமா சூட்டிங் இல்லை. சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு எங்கள் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கடந்த வாரம் நடந்த சம்பவம்.

போலீஸ் வந்தவுடன் ஆசுவாசமாயிருக்கிறார். ஆனால் வந்தவர்கள் இவருக்குத்தான் குடைச்சல் கொடுத்திருக்கின்றனர். முன் விரோதமா? கள்ளக்காதலா? சாதி மறுப்பு திருமணமா? என பல்வேறு கேள்விகளால் இவரை துளைத்து  எடுக்கின்றனர்.  ஒரு கட்டத்திற்கு மேல் இவரால் சமாளிக்கமுடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார். ஆம்புலன்ஸ் அழைத்து மருத்துவமனையில் அனுமதித்து ஏழு இடங்களில் தையல். உயிருக்கு பயம் இல்லை. 3000 ரூபாய் STUDD ஹெல்மட் என்பதால் பிழைத்திருக்கிறார். லோக்கல் பிராண்டாக இருந்திருந்தால் வீசிய வீச்சிற்கு தலை பிளந்திருக்கும்.

CCTV பார்த்த பின்பு தான் போலீஸ் அவர்களை அடையாளம் கண்டுள்ளது. ரிபீடட் அஃபண்டர்ஸ். வெட்டியவனே போலீஸ் ஒருவரின் மகன். சாரி. மகர். முழு போதையில் இருந்திருக்கின்றனர். போதை என்றால் மது இல்லை. கஞ்சா. இது போன்ற வழிப்பறி தான் இந்த கும்பலின் வேலையாம். அடித்துவிட்டு கொள்ளையடித்து செல்வார்களே ஒழிய இது போல வெட்டியதில்லையாம். அதனால் தான் போலீசுக்கு டவுட் வந்து இவரை பிராண்டியிருக்கிறார்கள்.

இரண்டு விஷயங்கள்.

முதலாவது. ரிபீடட் அஃபண்டர்ஸ் என்றால் எப்பொழுது இவர்கள் திருந்துவது. ஜெயிலில் போடுவது ஜாமீனில் வெளிவருவது மட்டுமே இவர்களின் தொழில் என்றால் பொதுமக்கள் நிலையென்ன? வெட்டு பட்டு விழுந்தவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவ்வளவு குறுக்கு விசாரணை அந்த நேரத்தில் எதற்கு?

இரண்டாவது. கஞ்சா வெகு எளிதாக எல்லோரிடமும் புழங்குகிறது. அதுவும் பள்ளி மாணவர்களிடம். வெட்டிய மூன்று பேருமே இருபது இருபத்தைந்து வயதுக்குள்ளகத்தான். CCTV யில் இவர்கள் நடந்து போன காட்சியை போலீசார் காமித்திருக்கிறார். எதையோ சாதித்தது போல் கத்தியை கையில் பிடித்துக்கொண்டு நடு ரோட்டில் நடந்திருக்கின்றனர். பயம் என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. நான் மகான் அல்ல படத்தில் வரும் விஷக்கிருமிகள் போல. கஞ்சா, ஊசி, பவுடர் போன்ற போதைப்பொருள் அவ்வளவு எளிதாக ஊருக்குள் கிடைக்கிறது. விடலை பையனிற்கு எங்கு விற்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் போலீசுக்கு தெரியவில்லையா? அரசியல் சாயம் பூச விரும்பவில்லை. எந்த ஆட்சி என்றாலும் இதுதான் நிலைமை என்றால் எங்கு போய் முறையிடுவது? ஆயிரம் அற்புதங்கள் நிகழ்த்தும் இதுபோன்ற இளைஞர் சக்தி, பாதை மாறி போனால் முடிவு என்னவாகும் என்பது யோசிக்கவே மிரட்சியளிக்கிறது. 

படிக்கப்போகும் பிள்ளைகள் படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. ஒழுக்கத்துடன் இவர்கள் பள்ளியிலிருந்து வெளி வந்தால் போதுமேன்றிருக்கிறது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மாணாக்கர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டிய தருணம்.

 

சனி, பிப்ரவரி 18, 2023

உணவு பரிமாறுதல்

 


நமது வீடுகளில் ஒரு பழக்கம் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தோ தெரியாமலோ தொடர்ந்து இருந்துவருகிறது.

அது உணவு பரிமாறுதல்.

அதில் என்ன இப்போ ?

இருக்கிறது. பெரும் பிரச்சினை பசுந்தோல் போர்த்திய புலி போல ஒளிந்துகொண்டிருக்கிறது.

ஓட்டலில் சாப்பிட செல்லும்போது சர்வர் என்று நாம் ஜபர்தஸ்தாக விழிக்கும் அந்த பணியாள் கூட டேபிளில் உணவு கொணர்ந்து வைப்பாரே தவிர நமக்கு பரிமாறுவதில்லை. 'மீல்ஸ்' என்று தூக்கி கொண்டு வரக்கூடாது. சாதம் தவிர மற்றவை எல்லாவற்றிற்கும் கிண்ணி போட்டுவிட்டார்கள்.

சர்வர் என்று அழைக்கப்படும் சர்வரே நமக்கு பரிமாறுவது கிடையாது என்றால் வீட்டில் எஜமானி என்றழைக்கப்படுபவர் மட்டும் என்ன விளக்குமாருக்கு பரிமாற வேண்டும்???.

பெருங்குறு நகரங்கள் கூட ஓரளவுக்கு தேறிவிட்டது. எப்படி தேறியது? கொஞ்சம் படிப்பு. கொஞ்சம் சம்பாத்தியம் செய்கின்ற பெண்களால். சிட்டியை விட்டு விலகி கிராமத்து பக்கம் சென்றால் இந்த பழக்கம் பெவி குயிக் போட்டு ஒட்டி இருப்பதை பார்க்கலாம். கணவன் நோயாளியா இல்லை மாற்றுத்திறனாளியா என்ன? தட்டில் எடுத்துவந்து சாதத்தை அருகில் வைக்க, வைத்ததோடு மட்டும் அல்லாமல் பார்த்து பார்த்து அருகில் உட்கார்ந்து குழம்பு, ரசம் என்று ஊற்றுவதெல்லாம் என்ன கணக்கு என்று தெரியவில்லை. இது அன்புங்க என்ற மீண்டும் தூக்கி கொண்டு வராதீர்கள். அப்படியொரு நொன்னை இருக்கிறது என்றால் பாத்திரம் விலக்குவதோ, துணி துவைப்பதோ, குழந்தையை பார்த்துக்கொள்ளுவதோ, வீட்டை பெருக்குவதோ என்று ஏதாவது ஒரு வேலையில் இந்த அன்பு புண்ணாக்கை ஆண்களும் காமிக்கலாமே. செய்யமாட்டார்கள். ரவுண்ட் கட்டியவுடன் கலாச்சாரம் என்று முனங்கக்கூடாது. காரணம் ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தெய்வத்தின் மேல் பழி போடவேண்டியது.



ஏன்? அவர்கள் வாயாலேயே சொன்னதை சொல்கிறேன்.

உடன் வேலை பார்ப்பவர். ஆந்திராக்காரர். அவர்களுடையது ஊரக வீடு. மரங்கள் அடர்ந்த செடி கொடிகள் நிறைந்த பசுமையான சூழலில் அமையப்பெற்ற வீடு. தேக்கு மரம் மற்றும் வாதாங்கொட்டை மரங்கள் அதிகம் உண்டு. இலை எப்பொழுதும் விழுந்த வண்ணமே இருக்கும். ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது செடி கொடி மரங்கள் தோட்ட பராமரிப்பு என்று பேச்சு சென்றுகொண்டிருந்தது.  செலவை குறைக்குபொருட்டு சில பரமாரிப்புகளை நிறுவனம் பார்த்துக்கொள்ளாது என்றும் வீட்டில் குடியிருப்போர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை வந்திருந்த நேரம்.

"சரி, செடிகள் நட்டு வைக்கிறாயே. இலை குப்பைகளையும் நீயே கூட்டிவிடுவாயா?" என்று கேட்டேன்.

"இல்லை" என்று கண்ணடித்தான்.

"ஏன்?" என்று கேட்டேன்

"ஒரு முறை செய்துவிட்டால், அந்த வேலை தன் தலையில் விழுந்து விடும்" என்று ஒரு அரும்பெரும் லாஜிக் ஒன்றை உதிர்த்தான்.

தூக்கிவாரிப்போட்டது. அடேய். பெண் குழந்தை என்பது வீட்டின் மஹாலக்ஷ்மி. இருபது இருபத்தைந்து வீட்டில் ராணி போல வளர்த்து, ஆயிரத்து இருநூறு கிலோமீட்டருக்கு அப்பால் உனக்கு மணமுடித்து உன்னை நம்பி தன் பெண்பிள்ளையை கொடுத்திருக்கிறாரே உன் மாமனார், அந்த நன்றிக்காகவாவது எதாவது செய்யலாமே" என்றேன்.

"ம்ஹூம்" என்றான்

"உனக்குத்தான் அந்த பழமொழி பிரமாதமாக ஒத்துப்போகிறது"

"என்ன?" என்றான்

"கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பது போல" என்றேன்

அதன்பிறகு அவன் என்னிடம் பேசுவதில்லை.

இது ஒன்று மட்டும்தான் குரங்கு என்று பார்த்தால் ஊருக்குள் பாதிக்கு மேல் குரங்காகத்தான் இருக்கிறது.

இன்னொருவர். கேரளத்துக்காரர்.

வீட்டில் அவருடைய அன்றாட நியமங்களை கேட்டால் தலைசுற்றியது. எழுந்தவுடன் ஒரு பெட் காஃபி. சின்னவீடு பாக்யராஜ் போல குளிக்க துண்டு. இஸ்திரி போட்ட பேண்ட் சட்டை. டைனிங் டேபிளில் சாப்பாடு. உண்டு விழுங்கியவுடன் இன்சி தட்டிப்போட்ட டீ. இரவு. அது சுக்கு போட்ட பால். மனைவி படித்திருப்பதோ பி.டெக் இன்போர்மஷன் டெக்நாலஜி. ஆனால் செய்வதோ நீர் யானை பராமரிப்பு. 

உனக்கு என ஒய் எரிகிறது? என்றால் எரியத்தான் செய்கிறது.

இஞ்சி டீயும், சுக்கு பாலும் போட்டு கொடுப்பதற்கு I.T படித்த மணப்பெண். அதுவும். எப்படி? வரதட்சிணையுடன் டெலிவரி. இதில் நீர் யானைக்கு மிடுக்கு வேறு.

விளங்கிவிடும்.

வாழ்நாள் மூச்சுடும் போடும் சாப்பாட்டை ஒரு முறையேனும் வாய்விட்டு பாராட்டாத அதே ஜென்மங்கள் தான் முழங்கை வரை வழிந்தோடும் சாம்பாரையும் தயிரையும் வழித்து நக்கும். இங்கிதம் கொஞ்சமும் இன்றி அண்டா வாயை திறந்து அதிர்ந்து ஏப்பமிடும். நசுக்கி அபான வாயுவை வெளியிடும். இந்த கோணங்கி சேட்டைகளை சகித்து அருகில் இருந்து பார்த்து பார்த்து பரிமாறி கொண்டிருக்கும் பெண்கள் தாய்மார்களின் நிலையை நினைத்தால், நெஞ்சு பொருக்குதில்லையே!!!

நீர் யானைகள் எப்போதுமே விழித்துக்கொள்ளாது. பெண்கள் தான் எழ வேண்டும். தொழத்தேவையில்லை.

இல்லை. எனக்கு இதுமாதிரி பரிமாறிக்கிட்டு சேவை பண்ணிட்டு இருக்கத்தான் பிடிச்சிருக்கு. அதுதான் அன்பின் வெளிப்பாடுன்னு சொன்னா, இந்த ஆணாதிக்க சமுதாயத்துல ஊறி போனவங்கன்னு தான் அர்த்தம். ஏற்கனவே பெண்களை எங்கே வெளியே விட்டால் தன்னை மிஞ்சிவிடுவாளோ என்று அஞ்சித்தான் இல்லாத பொல்லாத சடங்குகளை உலகமே அதனதன் கெபாசிட்டியில் அனுசரித்துக்கொடிருக்கிறது. அன்பு என்ற அந்த ஒற்றை வார்த்தையில் தான் வதை தொடங்க ஆரம்பிக்கிறது. அது சுயமரியாதையை கீழே தள்ளி மிதிக்கிறது. உலகில் எந்த ஒரு விளங்கும் சுயமரியாதை இன்றி வாழ்வது இல்லை. மனிதனைத்தவிர.

என்னிடம் அப்ரெண்டிஸ் ட்ரைனிங்கிற்காக சேர்ந்த பெண் அவள். கல்லூரி படிக்கும்பொழுதே சென்னையில் ஒரு IT கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. கோர் கம்பெனியில் வேலை என்று அதற்கு செல்லவில்லை என்றாள். வீட்டில் உள்ளூரிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று வீட்டில் நிர்பந்திக்கிறார்கள் என்றாள்.  

"பன்னாட்டு நிறுவனம். கிடைக்க போகும் exposure நன்றாக இருக்கும். இங்கேயே இருந்தால் அப்ரெண்டிஸ் முடித்துவிட்டு இதே ஊரில் வேறு வேலை கிடைக்காது. யாராவது ஒருவன் மணம் முடித்து உன்னை அழைத்து செல்வான். ஐந்து ரூபாய்க்கு ஒரு தோடு வேண்டும் என்றால் கூட அவனிடம் நிக்க வேண்டும். ஐந்து ரூபாய் என்பது தோடுக்கு அதிகம் என்று சொல்லுகிற லூசுகள் அதிகம். நேப்கினுக்கு கூட பைசா பார்க்கும் ஜந்துக்கள் உண்டு. ஆதலால் சொந்த காலில் நில். கிளம்பி விடு" என்று துரத்திவிட்டேன்.

வேலை பார்த்து என்ன கிழித்தாய்? என்றால் இதைச்சொல்வேன். வாழ்க்கையில் ஒரு பெண்ணின் சுயமரியாதையை காப்பாற்றியதில் ஆகபெரும் நிம்மதி எனக்கு. இன்றும் தொடர்பில் இருக்கிறாள். வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் இன்னும் நாலு பேரை தேற்றி  விடக்கூடும்.

'சும்மா அடிச்சிவிடாதீங்க. அஞ்சு ரூபாய்க்கு கணக்கு பாப்பாங்களா?' அப்டினு மூன்றாவது முறையாக தூக்கிக்கொண்டு வந்தீர்களேயானால் இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.

இன்னோரு பார்ட்டி. வயசு முப்பத்தியெட்டு. கல்யாணமாகி ரெண்டு குழந்தை. சம்பாதிக்கிறத முழுசா அவங்க அப்பா அம்மா கைல குடுத்துடும். சாயங்காலம் வெளில போணும்னா அப்பாகிட்ட முப்பது ரூபா கேட்டுட்டு பஜ்ஜி சாப்பிடப்போகும். அவங்க அப்பா அதிலேயும் பத்த கட் பண்ணிக்கிட்டு இருபது தான் கொடுப்பார். வாங்கிட்டு போய்டுவாப்புல. இப்போ அவன் வைப் இந்த பார்ட்டிகிட்ட என்னனு போய் தன்னோட தேவைக்கு நிப்பா? ஒவ்வொன்னையும் மாமனார்ட்ட கேக்கனும்னா இவரு ரோல் என்ன?

பொண்ணுங்கள பெத்தவங்க ஆணாதிக்கத்துக்கு எதிரா தைரியம் கொடுத்து வளக்கணும். படிப்போட கருத்துச்சுதந்திரமும் முக்கியம்ங்கிறத புரிய வைக்கணும். சுயமரியாதையோட வாழ சொல்லிக்கொடுக்கனும். எதிர்த்து நின்னாத்தான் உரிமை கிடைக்கும்.

எழுமின் விழுமின். சோறு போடாதுமின்.

 

 

 

 

 

 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2023

The Elephant Whisperers

இது விமர்சனம் அல்ல. வரி வடிவத்திற்கும் ஒலி ஒளி வடிவத்திற்குமான ஒரு ஒப்பீடு என்று கொள்ளலாம்.

ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த கணம் முதலே இதை காண வேண்டும் என்ற எண்ணம் உதித்திருந்தது. நேரம் கூடிவராத காரணத்தினால் தள்ளி போய் கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் வெளியான விகடனில் இடம்பெற்றிருந்த 'தாயைப்பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்' என்ற தலைப்பு வெகுவாக ஈர்க்க கட்டுரையை வாசித்தேன்.




கட்டுரை அந்த படத்தை பற்றிய விமரிசனம் அல்ல. பொம்மன் மற்றும் பெள்ளியின் யானைகளுடனான வாழ்க்கையை பற்றிய ஒரு சாட்சி என்று சொல்லலாம். யானைப்பாகன் அவர்களது சமூகம், வாழ்க்கை முறை, யானைகளுடனான அவர்களுடைய உறவு, பராமரிப்பு, அன்பு, அக்கறை, வெகுளித்தனம் நிறைந்த அவர்கள் இயல்பு என சிறு கட்டுரையாக வெளிவந்திருக்கிறது. படித்து முடித்தவுடன் பொம்மன் மற்றும் பெள்ளியுடன் உரையாடியது போல் இருந்தது.

அதன் பின்பு இரண்டு நாட்கள் கழித்து Netflixல் 'The Elephant Whispherers' பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. காட்டை, யானையை படம்பிடித்த விதம் மற்றும் மென்மையாக பின்னோடும் இசை என அந்த டாகுமெண்டரிக்கு உறுதுணையாக பல இருந்தும் அந்த இரு பக்க கட்டுரை கடத்திய உணர்வு இந்த நாற்பது நிமிட வீடியோவில் இல்லை. பொம்மன் மற்றும் பெள்ளியின் அப்பழுக்கற்ற பேச்சு கவர்ந்திருந்தது. மூங்கில்களின் ஊடே எட்டிப்பார்த்த யானை குட்டியின் கண்கள் காந்தம் போன்று நம்மை சுவீகரித்தாலும் டாகுமெண்டரி முழு நிறைவாக இல்லை. ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.

விகடனில் வெளியாகியிருந்த அந்த நான்கு படங்கள் கட்டுரைக்கு நியாயம் சேர்ப்பவையாக இருந்தன. மிக யதார்த்தமான கவரேஜ். பொம்மன் பெள்ளி மற்றும் அந்த சமூகத்தை எழுத்து வடிவில் நமக்கு கடத்திய விதம் செழுமை.

படித்து முடித்த பின்பும் யானையின் வாசம் நம்மிடம் எஞ்சி நிற்கிறது. வரி வடிவம் ஒலி மற்றும் ஒளியை வென்று காட்டிய மற்றுமொரு உன்னத தருணம்.

வாழ்த்துக்கள் Sathish Ramasamy மற்றும் Arun Patrick

புதன், பிப்ரவரி 01, 2023

மேஜிக்கள் வேர்ட்ஸ்


மூணு மேஜிக்கள் வார்த்தை இருக்கு. பெரும்பாலும் அதை யூஸ் பண்ணா நமக்கும் மத்தவங்களுக்கும் மனசு நோகாம அப்புறம் சேதாரம் இல்லாம தப்பிச்சிரலாம்.

முதல் வார்த்தை ‘Thank You’

நமக்கு என்ன வச்ச வேலை ஆளா மத்தவங்க. ஒரு மொபைல் சார்ஜர பக்கவாட்டு டேபிள்ல இருந்து எடுத்து தந்தா கூட thanks சொல்லலாம். கியுல முன்னாடி போகவிட்டா, காசு வாங்கிட்டு பேலன்ஸ் கொடுத்தா, நாம வரதுக்காக கதவ திறந்து பிடிச்சிருந்தா, டெலிவரி பாய்க்கு, சேல்ஸ் கேர்ளுக்கு, சர்வருக்கு இப்டி ஏகப்பட்ட இடம் இருக்கு. வாய்ப்பு இருக்கு. ஒண்ணும் பெரிசா யோசிக்க வேண்டாம். எங்கல்லாம் நமக்கு பிடிக்கிற மாதிரி யாரு நடந்துக்கிட்டாலும் சொல்லலாம். அழகா சின்னதா புன்னகைச்சு ஒரு தேங்க்ஸ் சொல்லி எந்த அளவுக்கு ரெஸ்பொன்ஸ் கிடைக்குதுனு தான் பாருங்களேன்.



இரண்டாவது வார்த்தை ‘Please’

ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் ஆகட்டும், இல்ல மனைவிகிட்ட தண்ணி எடுத்து கொடுன்னு (அவ்ளோ வசதியா என்ன?) சொல்றதாகட்டும், அட்ரெஸ் கேக்கும்போது, மெயில்ல ஒரு டேட்டா கேக்கும்போது அந்த வார்த்தைய உபயோகிக்கிறதுல எந்த தயக்கமும் தேவையில்லை. டக்குனு பதில் கிடைக்கும். வேலை ஆகும். நமக்கு செய்யணும்னு தலை எழுத்தா என்ன? இந்த மேஜிக் வேர்ட்டுக்கு அப்டி ஒரு பவர்.

மூணாவது வார்த்தை ‘Sorry’

அது என்னமோ குடும்ப மானமே கப்பல் ஏறிடுங்கற மாதிரி இந்த வார்த்தைய யூஸ் பண்றதுக்கு அவ்ளோ தயக்கம். சின்ன குழந்தைங்க கூட இந்த சாரி சொல்றதுக்கு அவ்ளோ தயக்கம் காமிக்குது. பெருசுங்க கேக்கவே வேணாம். என்னமோ சாரி கேட்டுட்டா தோத்துட்டோங்க்ற ரேஞ்சில யோசிக்க வேண்டியது. அது தோல்வியே கிடையாது. அங்க தான் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கோட உறவு ஆரம்பிக்கிற இடம். அந்த மொமெண்ட மிஸ் பண்ணாம சாரி கேக்கலாம்.  ஒண்ணும் தப்பில்ல.

ஆஃபிஸ்ல ஒருத்தர் இருக்கார். அவர் உதவியே பண்ணலன்னாலும் கூட அடிக்கடி நம்பிள் ‘thank you’ சொல்றது உண்டு. அவருக்கு ஏன் சொல்றோம்னு தெரியாது. உபகாரம் பண்ணலன்னாலும் உபத்திரவம் பண்ணாம இருந்ததுக்கு உனக்கு ஒரு கோடி கும்பிடுயான்ற thank you தான் அது.

ஆக, கூச்சப்படாம இந்த மூணு வார்த்தையையும் உபயோகிச்சிங்கன்னா, வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான் சொல்றமாதிரி வருடத்தின் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் பொன்னாள் தான்.