ஞாயிறு, ஜனவரி 12, 2020

தர்பார்


அது என்னமோ தெரியவில்லை, இந்த எழுபது வயது தாத்தாவை 2019 இன் கலாச்சார சீரழிவின் உச்சகட்ட குழப்பத்தில்  இருக்கும் ஆறு வயது சிறுவனுக்கு கூட பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. அவ்வளவு charisma.



ரஜினியை பார்க்கும்போதெல்லாம் தோன்றும் ஒரே எண்ணம் “அடேங்கப்பா, என்னா ஸ்பீடு”.  எழுபது வயதில் அவரிடம் இருக்கும் இந்த வேகம் இன்றைய முட்டிவலி முதுகுவலி முப்பது வயதுக்காரர்களுக்கு பெரும் inspiration. 1,2,3,4 போன்ற exercise டேன்ஸ் ஸ்டெப்பில் கூட அத்தனை வேகம். இளமை திரும்புதே... திருமதி லதா அவர்கள் ஒரு கிலோ படிகாரத்தை சுற்றி போடவும். படம் முழுவதும் அவரது ஸ்டைல் ராஜ்யம் தான். ஓபனிங் மற்றும் கல்யாண சாங் என இரண்டிலும் ரஜினியின் டேன்ஸ், ஊட்டி ஸ்ட்ராபெர்ரி போல fresh. போலவே ஓபனிங், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் க்ளைமாக்ஸ் பைட் சீன்சும் அட போட வைக்கிறது. நிவேதவுடனான சென்டிமெண்ட் காட்சியில், தன் கண்களாலேயே உணர்வை கடத்திய விதம் சொல்கிறது, the kaali is back’ என்று. காந்தக்கண்ணழகன். யோகி பாபுவுடன் சரிக்கு சமமாய் கலாய் வாங்கியும் கலாய்த்தும் 2020 புள்ளிங்கோ கிட்ஸுடனும் சொடக்கு போடும் நேரத்தில் கனெக்ட் ஆகிவிடுகிறார். தலைவரின் வேகம், நடனம், பைட் சீன்ஸ், சென்டிமெண்ட், காமெடி என் எல்லாவற்றிற்கும் இம்மியளவும் பிசகாமல் பக்கபலமாய் இருப்பது அனிருத்தின் மாஸ் bgm.

நிவேதா தாமஸ். சும்மா கிழி பாடலில் இவரை காமிக்கும்பொழுது, இவர்தான் ரஜினிக்கு ஜோடியோ என்று மைல்டாக நெஞ்சு வலித்து மனம் பதறிய நேரத்தில், மகள் என்று அறிமுகப்படுத்தி ஆசுவாஸபடுத்தியிருக்கின்றனர். பிராமதமான நடிப்பு. கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். அப்பா மகள் பிசிக்ஸ் (ஒரு சேஞ்சுக்கு) நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஹாஸ்பிட்டல் சீனில் தியேட்டர் மொத்தமே அழுதது எல்லாம் டரைக்டர் டச். Kudos.

நயன்தாரா. ரஜினி படம் எடுக்குறோம். ஒரு ஹீரோயின் தேவப்படுதுனு சொல்லிருப்பாங்க போல. ஸ்கோப்லெஸ் கேரெக்டர்.  அந்த இரண்டைத்தவிர வேற எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. (நடிப்பு, டேன்ஸ்).

யோகி பாபு. நிறைவான கிச்சுக்கிச்சு. ரஜினையே கலாய்க்கும் கதாபாத்திரம். தூள். இவருக்குள்ளும் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட் இருப்பது தெரிகிறது. அதை வெளிக்கொணரும் முயற்சியில் ஜெயம் ரவி இருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாசு. இவரிடமெல்லாம் என்ன டரைக்டர் மெடீரியல் இருக்கிறது என்று தலைவர் தன்னை ஒப்படைத்தார் என புரியவில்லை. லாஜிக் மீறல்கள் இருக்கலாம். அதுக்காக இப்படியா. கொடியில் காயப்போட்டிருக்கும் ஒரு வேஷ்டியை  ஏகே 47 துப்பாக்கியால் சல்லடை போட்டு, அதை ரஜினிக்கு உடுத்திவிட்டுருக்கிறார்.  தலைவரும் அதை அணிந்துகொண்டு முடிந்த வரை முட்டுகொடுத்திருக்கிறார். திரைக்கதையில் இருக்கும் டேமஜை ரஜினியின், அந்த charisma, ஸ்டைல், வேகம் போன்ற சில இத்யாதிகள் மறைக்கின்றன.

அய்யய்யோ ரஜினியோட நயன்தாரா டேன்ஸ் பண்ணலயே. என்ன பண்ணலாம். நயன்தாரா கசின் கல்யாணத்துல ஏதோ ஒரு குட்டி பொண்ணுக்கு செயின் தொலைஞ்சுடுச்சு. அதை கண்டுபிடிக்க மும்பை கமிஷ்னர (ரஜினி), நயன் கூப்ட்ராங்க. அவரு பாட்டு பாடி செயின கண்டுபிடிக்கிறாரு. இப்படித்தான் சீன் யோசித்திருப்பார்கள் போல. ஓபனிங் சீனில் ரஜினிக்கு சவால் விட்டு பேசும் ரவுடியின் வீடியோ சமாச்சாரத்தில், வீடியோ டைமிங் ப்ராப்ளம். வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் வீடியோ டைமர் 17 செகண்டில் நின்றுவிடுகிறது. அது போலவே நிவேதா தாமசின் வீடியோ கிளிப்பிங்கிலும் டைமர் டேமேஜ்ட். ஏற்கனவே கதையை லெஃப்டில் திருப்பலாமா ரைட்டில் திருப்பலாமா என்று குழம்பியிருக்கும் டைரெக்டருக்கு முத்தாய்ப்பாக வைத்துசெய்திருக்கிறார்கள் தம்பிமார்கள். ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் உள்ள continuity mistake (உதாரணத்திற்கு, ஹீரோவின் சன்கிளாஸ், ஹீரோயின் கும்குமம், வாட்ச்) வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு assistant director க்கு தான். அடேய்...உதவி இயக்குனர் அப்ரசண்டிகளா...என்னடா பணிட்ருந்தீங்க?. கபாலி’, காலா’, பேட்ட போன்ற படங்களில் இருந்த மெனக்கடல்கள், டீடெலிங்க் கூட, தர்பாரில் மிஸ்ஸிங். இறுதிக்காட்சியில் சுனில்ஷெட்டியை கத்தியால் குத்தி கொள்வதெல்லாம் மொக்க க்ளைமாக்ஸ். தலப்பாகட்டி சென்று தயிர் சாதம் சாப்பிட்டது போல சப்பென்றிருக்கிறதுஎப்படியும் ஓடிடும் என்று ரசிகனை முழுமுட்டாளாக்கிய பாவத்திற்கு, முருகுக்கு ஒரு கும்பிபாகம் பார்செல்.

அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடுவில் பெயரிடப்படாத வி(வீ)....ம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி. தலைவர் is in his fag end of the career. தன்னுடைய எனர்ஜியை, ஸ்டைலை, காரீயரின் தரமான கடைசி படங்களை இதுபோன்ற வெந்தும் வேகாத டைரக்டர் படங்களில் நடித்து கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்பது என்னைப்போன்ற அவரின் தீவிர ரசிகனின் உள்ளக்கிடக்கை.

ஆமென்.

செவ்வாய், ஜனவரி 07, 2020

எனை நோக்கி பாயும் தோட்டா


ந்திய தேசிய மொழியில் ஷைலி என்ற வார்தைக்கான அர்த்தம் மொழி நடை. ஒரு கதையையோ அல்லது சிறு பத்தியையோ படிக்கும்பொழுது, ஆதியோடந்தமாய் அதன் இணக்கத்தையும் சுவாரஸ்யத்தையும் சுவை கூட்டுவதில் இந்த ஷைலியானது, தாமரை சந்தானபாரதி?!!’ (கண்டுபிடிங்கோ) போல் முக்கிய பங்குவகிக்கிறது. போலவே ஒரு திரைப்படத்தை பார்க்கும் ரசிகனை, தொடக்கம் முதல் இறுதி வரை கட்டிபோடுவதற்கு, ஒரு நல்ல திரைக்கதை அல்லது காட்சியமைப்பு இன்றியமையாததாகிறது. அந்த வகையில்  GVM, ‘எனை நோக்கி பாயும் தோட்டா வில் சொல்லி அடித்திருக்கிறார். By far the best screenplay written by gvm (Imho).



இருவருடங்களுக்கு முன்பு அறிமுகபடுத்திய மறுவார்தை பேசாதே பாடல் வெளியீட்டில் தொடங்கிய ENPT க்கான எதிர்பார்ப்பு தங்கம் விலை போல ஏற்றத்தில் இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களில் வெளியீடு, தள்ளிவைப்பு, போசன் மோஸ்டர், டீசர், டிரைலர், டிராக்டர் என்று y=sinx சைனுசாய்ட் கர்வ் போல் ஏற்ற இறங்கத்துடன் உருமாறியது. மறுவார்தை பேசாதே என்ற இந்த ஒரு பாடலை மட்டுமே தனியே எடுத்து கூராய்வு செய்து Doctorate பட்டமே வாங்கலாம். அவ்வளவு மெனக்கெடல்கள். விசிறி க்கு ஒன்று, எதுவரை போகலாம் க்கு ஒன்று என்று மொத்தம் மூன்று டாக்டரேட் !!!. மறுவார்த்தை பேசாதே பாடலிற்கு தர்புகா சிவா கொடுத்த உழைப்பை, காட்சிபடுத்துதலில் GVM கோட்டை விட்டிருக்கின்றார். UnJustified. இந்த பாவியை மன்னியும் பிதாவே.

படம் வெளியீட்ட பின்பு, பரவலான ஒரு நெகடிவ் கருத்தாக வாய்ஸ் ஓவர் கான்செப்ட் சொல்லப்பட்டது. ஆனால் என்னை பொருத்தவரை படத்திற்கான மிகப்பெரிய பிளஸ் இந்த வாய்ஸ் ஓவர் தான். அதுவும் சிம்மக்குரலோன் (??!!!) கௌதமின் குரலை விடுத்து தனுஷின் குரலை தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக கர்த்தர் உம்மை ஆசீர்வதீப்பாராக”.

நான்லீனியர் ஸ்டைலில் படத்தை பிசிரில்லாமல் கோர்த்து காட்சிபடுத்திய விதத்தில் இயக்குனருக்கு ஒரு ராயல் சல்யூட். படம் முழுவதுமே தனுஷ் தான். ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசம். எதுவரை போகலாம் என்ற பாட்டில் வரும் ஏரியல் ஷாட், மற்றும் விசிறி பாடலின் தொடக்கத்தில் தனுஷ் போடும் ஸ்டெப் என அவ்வளவு(ம்) க்யூட்.

ஆரம்பத்தில் லேகாவிடம் வழிவதும் பின்பு வரும் பாடல்களில் எல்லாம், காதலியிடம் தான் கற்ற அறுபத்தினான்கு வித்தைகளையும் காட்டுவதும் என ரொமாண்டிக்கில் ரியல் லைப் தனுஷ்  போல (சுச்சி-மலேஷியா-மூனுஷா) அதகளம் செய்திருக்கிறார். ஆக்ஷன் ஸீக்வன்சில் ஆட்டோ பைலட் மோட், பீஸ்ட் மோட், டெத் விஷ் மோட் என்று வாய்ஸ் ஓவருடன் வெரைட்டி விருந்து. 4 க்கு 4 கேரவன் டாய்லட்டாகட்டும் அல்லது மும்பை பிளாட்டில் இருக்கும் லிப்ட் ஆகட்டும், அதரலாக் மற்றும் கத்திக்குத்து சண்டையை காட்சிபடுத்திய விதம் அருமை.

கார்த்திக் சுப்புரஜ்ஜுக்கு கைகூடாதது, சுந்தர்சிக்கு கைகூடாதது GVMக்கு கைகூடியிருக்கிறது. மேகா ஆகாஷையே அழகாக காட்டியிருக்கிறார்.  வேல ராமமூர்த்தியை ஐ.ஏ.எஸ். அதிகாரியை போல் அண்டர் யூஸ் செய்திருக்கின்றனர்.  

காம்பவுண்ட் கேட் காதல், VTV கேரளா குளம், சென்னை மத்தியாகைலாஷ் FOB, GVM வீடு என பழைய படங்களின் டெம்ப்ளேட் காட்சிகள் நமது மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியில் நினைவுக்கு வந்தாலும், தர்புகா சிவாவின் கவர்ந்திழுக்கும் பின்னணி இசை அதை மறக்கடிக்கின்றது.

எனை நோக்கி பாயும் தோட்டா - The finest creation from GVM.

திங்கள், ஜனவரி 06, 2020

கரையெல்லாம் செண்பகப்பூ


வாத்தியார் (சுஜாதா) “கற்றதும் பெற்றதும்” தொடரில் ஒருமுறை தனது நாவலான “கரையெல்லாம் செண்பகப்பூ” பற்றி குறிபிட்டிருந்தார். அந்த குறிப்பின் சாராம்சம் இதுவே. இனி எந்த இயக்குனர் வந்து கேட்டாலும் என் கதையை யாருக்கும் தருவதாயில்லை. நாவலில் கூறப்பட்ட கதை வேறு. அதை எடுத்த விதம் வேறு. இறுதியில் அந்த படத்தை பார்த்தபொழுது, ஒரு கதையை திரைக்கதையாய் மாற்றுவதால் அது எவருக்காகவெல்லாம்  சமரசம் செய்யப்பட்டு எவ்வாறு அகால மரணமடைகிறது, என்று மிகவும் வருந்தியிருப்பார்.  வாத்தியாரே வருத்தப்பட வைத்த அந்த கதையை படிக்கும் ஆவல் ஈசானிய மூலையில் ஒன்னரை டன் அழுத்தத்தில் மனதில் பதிந்திருந்தது.


அந்த அழுத்தம் ஒருவாறாக வெளிப்பட்டு ஒரு புனித புதனில் சுக்கிர ஹோரையில் அந்த நாவலையும் படத்தையும் அடுத்தடுத்து படிக்கவும் பார்க்கவும் வாய்ப்பமைந்தது. ஒரு அருமையான த்ரில்லர் நாவலை காசு போட்டு கரிசட்டியாக்குவது எப்படி என்று “Discovery Channel-How do they do it” சீரிசில் ஒரு எபிசோட் ஆக இதை எடுக்கலாம். அவ்வளவு டேமேஜ்.

நாவலின் ஆதி முதல் அந்தம் வரை விறுவிறுப்பாய் வைத்திருப்பதில் முக்கிய காரணியாகத்திகழ்வது வெள்ளி கதப்பாத்திரத்தின் உடல் கட்டமைப்பை பற்றிய வர்ணனையும், அதை கண்டு மோகிக்கும் கல்யாணராமனின் (கதாநாயகன்) எண்ணங்களும் தான். நாவலின் முதல் பக்கத்தில் போனால் போகுதென்று திருநீலத்தில் நிற்கும் ரயிலிலிருந்து இறங்கும் கதாநாயகனிடம் சுமை தூக்க பேரம் பேசும் வெள்ளியின் அழகை ?!! வர்ணிப்பதில் ஆரம்பிக்கும் வாத்தியார், முடிவில் 224வது பக்கத்தில் கல்யாணராமனை ரயிலேற்றி விடுவதற்கு வழியனுப்ப வரும் வரை வெள்ளியின் அழகை வர்ணித்திருப்பார். தலைவர் இன் ஃபுல் ஃபார்ம். வருடம் 1983.

இந்த வர்ணனையில் மயங்கி வாசகர்கள் வெள்ளியை ஒரு கருப்பு ஜெயமாலினி போன்றதொரு தோற்றத்தை மதியில் நினைத்துவைத்திருப்பர்.  திரைக்கதை சறுக்கிய இடம் இங்குதான். வெள்ளியின் கதாபாத்திரமாக தேர்ந்தெடுக்கபட்டு ?!! நடித்த நடிகை ஸ்ரீப்ரியா. அந்த காலத்து 14.2 KG சமையல் சிலிண்டர். முகம், கழுத்து, இடுப்பு என்று எல்லா விட்டமும் 40 இன்ச். இது இவ்வாறிருக்க, கதாநாயகன் தேர்வில் collateral டேமேஜ். நாய்கன் (எழுத்து பிழையில்லை) பிரதாப் போத்தன். “சார், உங்களுக்கு ஆம்பள குழந்தை பிறந்திருக்கிறது” என்று சொன்னாலும் சரி, “சார், நீங்க ஆம்பளையே இல்லை” என்று சொன்னாலும் சரி, மனுஷனிடம் ஒரே ரியாக்ஷன் தான். Such a முட்ட கலக்கி face. இவர்களுக்கு துணையாக!!! தங்கவேலு, மனோரமா, பீலி சிவம் போன்றோர் தங்களால் முடிந்த பங்களிப்பை !!! படத்திற்கு செய்துள்ளனர். கூடவே ஸ்நேகலதா என்றொரு மாடெர்ன் பொண்ணு கதாபாத்திரம். கிராமத்து வெள்ளியையே பலமாக வர்ணித்தவர், ஸ்னேகலதாவை எவ்வாறு சித்திரபடுத்தியிருப்பார் என்பதை வாத்தியாரின் விசிறிகள் புரிந்துகொள்ள முடியும். இந்த ஸ்னேகலதாவாக சுமலதா. இது இன்னொரு பஞ்சகவ்வியம்.

நாவலில் ஒன் லைனருக்கு பஞ்சமிருக்காது.
(உதாரணத்திற்கு ஜமீந்தாரிணி டைரி கண்டுபிடிக்கப்படும் இடத்தில்,
ஸ்நேகலதா, “நான் ஒரு திறந்த புத்தகம், படிக்கிறீங்களா?
கல்யாணராமன், “டைரியை மட்டும் படிக்கிறேன்”)

ஜமீன் பங்களா, புழுதி படிந்த கிராமம், வில்லுபாட்டு, ஆலமரப்பஞ்சாயத்து, ஈர மார்பு, என வர்ணனையில்  ஹெலிகாப்டர் ஷாட் ஆடியிருப்பார் சுஜாதா. அதை அப்படியே தரையில் போட்டு தேய் தேய் என்று தேய்த்து டரியிலாக்கியிருக்கின்றனர் நம்மவர்கள்.

நாவலின் ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் திகிலாக முடிந்து அடுத்த அத்தியாயத்தில் விடை, என்று ஒரு ரேஸ் குதிரை போல் அடுத்தடுத்து நகரும். அதை அவ்வாறு விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கதையை போஸ்ட் மார்டம் செய்தே தீருவது என்று வைத்து செய்திருக்கும் பெருமை மரியாதைக்குரிய இயக்குனரையே சாரும்.

இந்த திரைபடத்தை பார்த்தபின்புதான் சுஜாதா அவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக ஒரு கேள்வி !!!