வெள்ளி, செப்டம்பர் 23, 2022

கவர்ன்மென்ட் வேலை

கவர்ன்மென்ட் வேலை

 

லைஃப்ல செட்டில் ஆகணும்னுட்டு எப்படியாவது அடிச்சி பிடிச்சி கவர்ன்மென்ட் வேலைக்கு போயிடறாங்க.  அதே மாதிரி கவர்ன்மென்ட் வேலை பாக்குற வரன் உசிதம் அப்டினு விளம்பரம் பண்ணி கலயாணமும் பண்ணிடறாங்க. அதுக்கப்புறம் தான் கச்சேரியே ஆரம்பிக்குது.

 

ஒரே ஊர்ல வேலை பாக்குற மாதிரி ரெண்டு பேருக்கும் அமையறது அப்படிங்கிறது 15 லட்சம் பேங்க் ல டெபாசிட் ஆகற மாதிரி அபூர்வமான காரியம். ஒருத்தரு தெக்க இன்னொருத்தர் வடக்கனு வாழ்க்கை போகும். பல பேரு அப்டி தான் ஓடிட்ருக்காங்க.

 

எனக்கு தெரிஞ்சி ஒரு கேசுல அந்தம்மா கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில நர்ஸா வேலை பாக்குறாங்க. இவரு அரசு பேருந்து கழகத்துல வேலை பாக்குறாரு. ரெண்டு பேரு வேலை பாக்குற இடமும் கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர் தூரம். ரெண்டு பேரும் அலைய வேண்டாம்னுட்டு நடுவாந்திரமா ஒரு லொகேஷன பாத்துட்டு வீடு எடுத்துகிட்டாங்க. இப்போ அந்தம்மா 50 கிலோமீட்டர், அவரு 130 கிலோமீட்டர்ன்னு போய்ட்ருக்கு. அதுவும் எப்படி. அப் அண்ட் டவுன் அவரு 260 கிலோமீட்டர் தினம் போய்ட்டு வராரு. அந்தம்மா வீடு வந்து சேர 7 மணி, அவரு 8.30 மணி. சாப்பிட்டு தூங்கி மறுநாள் ஓட்றதுக்குத்தான் டைம் இருக்கும். ஒரு மாசத்துக்கு 5000 கிலோமீட்டர் மேல டிராவல் பண்ணுனா எப்படியிருக்கும்.

 

இதுவாச்சும் பரவால்ல. ஒருத்தரு 400 கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் வேல பாப்பாரு. எப்படின்னா அவங்க கன்யாகுமரி, இவரு திண்டுக்கல் பக்கம். மாசத்துக்கு ரெண்டு முறை பாத்துக்கிட்டாலே அதிசயம்தான். இதுல எங்கேந்து ஒரு நார்மலா லைஃப லீட் பண்ண. ஊருக்கு வந்துட்டு போறதே ஒரு போராட்டம் தான். மாசத்துக்கு ரெண்டு வாட்டி வந்துட்டு போறாரே அந்த அங்கிள் யாருமா ங்கிற ரேஞ்சுல தான் புள்ளைங்க இருப்பாங்க. குடும்பமா சேர்ந்து கோவிலுக்கு போறது, கடைக்கு படத்துக்கு போறது, ஷாப்பிங் பண்றது, அன்னன்னைக்கி குழந்தைகள் பேச வேண்டிய விஷயங்கள் அப்டினு பல ஐட்டம் இந்த மாதிரி லைஃப் ஸ்டைல்ல மிஸ்ஸிங்.

 

இந்த ஸ்டேட் கவர்ன்மென்ட் வேலை இப்டி இருக்குன்னா சென்ட்ரல் நிலைமை கேக்கவே வேணாம். அவரு வேற ஸ்டேட். இவங்க வேறே ஸ்டேட். வருஷத்துக்கு ரெண்டு தபா தான். என்னதுனு கேக்கப்பிடாது.

 

கவர்மெண்ட் வேலையாச்சே அப்படின்னு யோசிச்சிட்டு வேலையை விட்டு வெளியே வர முடியாது. வரவும் தோணாது. இருந்து அனுபவிக்கவும் முடியாது. ஒரே ஊர்ல ரெண்டு பேருக்கும் வேலை கிடைக்காதான்ற ஏக்கத்திலேயே கடைசி வரைக்கும் ஓடிப்போயிடும். எது எப்டியோ, மாசம் பொறந்தா துட்டு வருதுல்ல. அப்புறம் என்ன புலம்பிகிட்டுனு சொன்னா நாம அதுக்கு எவ்ளோ விலை கொடுக்குறோங்கிறதும் ரொம்ப முக்கியம்.

 

கால் காசானாலும் கவர்ன்மென்ட் வேலைனு எவனாவது சொல்லிட்டு வரட்டும்.

செவ்வாய், செப்டம்பர் 13, 2022

தலித் சினிமா

 

முதல் கட்டமாக தலித் சினிமா என்று அழைக்கலாமா என்பதே என்னளவில் கேள்விக்குறியாகிறது. தனியொரு அங்கீகாரம் அளித்துவிட்டோம் என்பதே ஒதுக்கிவைத்ததை பிரகடனபடுத்துவதற்காக மட்டுமே என்று கொக்கரிக்கும் ஒரு ஆதிக்க எண்ணமாகவே புரிந்துகொள்கிறேன். இந்த பதிவின் காரணம் கர்ணன் சினிமாவின் தாக்கம்.

 

ஒரு சிறிய கிராமம். அந்த ஊரிற்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. பேருந்தில் ஏற வேண்டும் என்றால் அருகிலிருக்கும் மேலூருக்கு செல்ல வேண்டும். மேலூர் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். மேலூருக்கும் இந்த சிறிய கிராமத்திற்கும் ஆகாது. பேருந்து நில்லாமல் போவதினால் குழந்தைகளின் படிப்பு எவ்வாறு பாதிப்படைகிறது, மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் எத்தனை பேர் அவதிப்படுகின்றனர், அயலூருக்கு வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார ரீதியாக மக்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றனர் போன்ற பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக கிளை பரப்புகிறது. இறுதியாக அந்த ஊரில் பேருந்து நின்றதா? கர்ணனின் பங்கு இதில் என்ன? என்று கண், காது, வாய் மூடி ஒதுங்கி நிற்கும் சமூகத்திடம் அறைந்து சொல்கிறது.

 


திருநெல்வேலி வட்டார வழக்காடல் வெகு இயல்பாக இந்த படத்தில் விளைந்திருக்கிறது.
தேனினிமையிலும். குறியீடுகள் என்று குதிரையையும் கழுதையையும் தூண்டிலில் சிக்கும் மீனையும் பயன்படுத்தியிருக்கின்றனர். இவற்றை நேரடியாக புரிந்துகொள்ளமுடிந்தாலும் அதற்கு மேலும் படைப்பாளி ஏதும் சொல்ல விளைகிறாரா என்பது பிடிபடவில்லை. 'என் பெயர் துரியோதனன், கர்ணன் என்றிருப்பதிலும், நேராக நிமிர்ந்து பார்த்து பேசுவதிலும், தலையில் கட்டியிருக்கும் தலைப்பாகையிலும் தான் உனக்கு பிரச்சினையாக தெரிகிறதே தவிர எங்களது அடிப்படை தேவைகள் உனக்கு புரியவில்லையா?' என்ற ஒற்றை உணர்வில் இந்த கதை விருட்சமாகியிருக்கிறது. அந்த ஒற்றை உணர்வை இதுகாறும் நீங்களும் நானும் இந்த சமூகமும் அங்கீகரிக்காமல் இருப்பது வெட்கக்கேடானது. அப்பத்தா கேட்கும் முத்தம் கரிசல் காட்டு கவிதை. இறுதியில் சோகத்தை களைந்து அந்த ஊரே திரண்டு ஆடும் அந்த ஒரு ஆட்டம் பார்வையாளனையும் வெற்றி களிப்பில் ஆடச்சொல்கிறது.

 

காட்சிப்படுத்துதல் என்ற ஒன்று இல்லாத காலத்தில் இயல், இசை, நாடகம் என்று முப்பிரிவாக இருந்த தமிழ், இன்று முக்கலவையாகி முப்பரிமானத்தில் திரைப்படமாக உருமாறியிருக்கிறது. புத்தகம் எவ்வாறு ஒரு வாழ்வின் சாட்சியோ அதைப்போலவே சினிமாவும் ஆவணம் தான். இதை ஒரு கருவியாக பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட குரலை ஓங்கி ஒலிக்க செய்து அதில் வெற்றியும் கண்டிருப்பது பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் அணி. இவர்களுக்கு முன்னால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை பறைசாற்றும் முழு நீள திரைப்படம் என்பது தமிழ் சினிமாவில் இல்லை. புதிதாக ஒரு புள்ளியும் வைத்து கோடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

 

காலா, கபாலி, அசுரன், ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன் என ஆரோக்கியமான ஆவணப்படுத்தும் நீட்சியாக இது தொடர்கிறது. தற்சமயம் மீள் நினைவில் வரும் இரு வேறு காட்சிகள். 'என்னங்க சார் உங்க சட்டம்?' திரைப்படத்தில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற காட்சியில், அர்ச்சகர் தேர்வுக்கு வரும் ஒரு தாழ்ந்த சாதி மாணவனை, OBC என்று வரையறுக்கப்பட்ட ஒருவன் இழித்து பேசவும், அங்குள்ள ஒருவர்  'உனக்கும் சேர்த்துதான்டா அவன் போராடுறான். இதுகூடவா உனக்கு புரியல',  எனபதும், கபாலியில் நான் முன்னுக்கு வர்றதுதான் உனக்கு எரிச்சலா இருக்குன்னா, கோட்டு சூட்டு போடறது தான் உனக்கு எரிச்சலா இருக்குன்னா, நான் முன்னுக்கு வருவேண்டா, கோட் சூட் போட்டு கால் மேல கால் போட்டு உக்காருவேண்டா, ஸ்டைலா, கெத்தா' என்பதும் நினைவலைகளில் ழும்பி வருகிறது. இந்த இரு வேறு வசனங்களையும் அதன் பின் உள்ள தாக்கங்களையும் புரிந்துகொள்ள நமக்கு கர்ணனும், ஜெய் பீமும் இன்னும் பல காட்சிகளும் தேவைப்பட்டிருக்கிறது.

 

மேடைகளில் பேசும் வைகோ துண்டை இழுத்து இழுத்து போட்டுக்கொள்வதற்கும், நாதஸ்வரம் வாசிக்கும் வித்வான்கள் அந்த வேர்வையிலும் விடப்பிடியாக பட்டு சட்டை அணிவதற்கும் வரலாறு உண்டென்பதை நாம் அறிவோமா?

 

ஆவணப்படுத்தல் ஆங்காரமாய் தொடரட்டும். பறை எட்டு திக்கும் ஒலிக்கட்டும்.

 

 

 

 

 

 

 

 

திங்கள், செப்டம்பர் 12, 2022

கமர்சியல் மூவி

 

வித்தியாசமான ஜானர்ல படம் பண்றேன் அப்படிங்கற பேர்ல கடைசி பத்து வருஷமும் விதம் விதமான டைப்புல தமிழ் சினிமால படம் எடுத்து வச்சிருக்காங்க. ரியாலிட்டி மூவி, ஆர்ட் மூவி, ஹாரர் காமெடி மூவி, திரில்லர் மூவி, டிடெக்டிவ் மூவி, பிளாக் காமெடி மூவி இப்படி பல ஜானரில படம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க இதெல்லாம் நல்லா இருக்கு அப்படிங்கறதுல எந்தவிதமான டவுட்டுமில்ல. ஆனா இந்த படங்கள் எல்லாம் வந்தபிறகு கமர்ஷியல் படங்களுக்கான மரியாதை ரொம்பவே குறைஞ்சிடுச்சு. வரத்தும் கம்மி ஆகிடுச்சு. தியேட்டருக்கு போனோமா அஞ்சு பாட்டு அஞ்சு ஃபைட்டு நடுநடுல காமெடி என்ஜாய் பண்ணமோ, கூட சேர்ந்து அழுதோமா அப்படின்ற மாதிரியான ஒரு கமர்சியல் மூவி இப்பலாம் வரதே இல்ல.

 

அந்த மாதிரி ஒரு படம் பார்க்கலாம் அப்படின்னா இப்ப சமீபத்தில் வந்த 2 படம் நல்லா இருக்குன்னு சொல்லலாம். ஒன்னு விருமன். ஏகப்பட்ட கேரக்டர்கள். ஆனா ஒவ்வொரு கேரக்டருக்கும் தெளிவா கேரக்டரைசேஷன் பண்ணி இருக்காங்க. படம் ஸ்டார்டிங்லேயே அப்பாவும் எதிர்க்கிற, அதுவும் கொலை காண்டுல இருக்கிற பையன் கேரக்டர் அப்படிங்கறது கொஞ்சம் வித்தியாசமாகவும் ஈஸியா அட்ராக்ட் பண்ண மாதிரியும் அமைஞ்சிருக்கு. அதுலயும் அவங்க அப்பன ஒருத்தன் அடிச்சிடான் அப்படிங்கறதுக்காக அவனுக்கு மோதிரம் போட்டதெல்லாம் லந்துலேயும் பெரிய லந்து.  

 



திருச்சிற்றம்பலம் படத்தில தனுஷ் அவங்க அப்பா கூட பேச மாட்டார். அதுவும் பத்து வருஷம். ஏன் அப்பா கிட்ட பேசவே இல்ல? என்ன காரணமா இருக்கும் அப்படின்னு நமக்கு குடைச்சலா இருக்கும். பிளாஷ்பேக் பார்த்தோம்னா அந்த காரணம் அந்த அளவுக்கு ஜஸ்டிபை பண்ற மாதிரி இருக்காது. ஏன்னா ஆக்சிடென்ட் பண்ணுனதற்கான காரணம் இவங்க அப்பாவே இல்லை. அதுக்காக இவ்வளவு நாள் பேசாம இருந்தது அப்படிங்கிறது கொஞ்சம் ஒட்டாது. அதே மாதிரி விருமன் படத்திலேயும் கார்த்தி அவங்க அப்பா கிட்ட பேசமாட்டார். என்னடா இங்கேயும் இதுதானா? இங்க என்ன ரீசன் இருக்குமோனு யோசிக்கும் போது ஒரு பிளாஷ்பேக் செம எமோஷனலா வரும். அதுவும் அவங்க அப்பா மேல நமக்கு கோவம் வர்ற அளவுக்கு இருக்கும்.

 

வின்னர் படத்துக்கு வடிவேலுகிட்ட டேட்ஸ் கேட்கும் போது அவரால் கொடுக்க முடியல. ஏன்னா அவரோட கால்ல அடிபட்டு நடக்க முடியாம இருந்தாரு. அதனால சுந்தர் சி என்ன பண்ணிறுப்பார்னா ‘நீங்க வந்து நடிச்சுக் கொடுங்க. உங்களை நடக்க முடியாத ஒரு கேரக்டர்தான் எழுதிருக்கேன் அப்படின்னு சொல்லி அந்த படத்தில அவரை நடிக்க வைத்திருப்பாரு. படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதே மாதிரி இதுல சூரிக்கு ஏதும் அடிபட்டுச்சான்னு தெரியல. நொண்டி நொண்டி நொண்டி நட்ப்பாரு. டைமிங் காமெடி ஓரளவுக்கு தான் ஒர்க் அவுட் ஆகிருக்கு.

 

இதே மாதிரி இன்னொரு படம் யானை. ஹரிய பத்தி சொல்லவே தேவையில்லை. இந்த காலத்து sp முத்துராமன்னு சொல்லலாம். அப்டி ஒரு பக்க கமெர்சியல் கேரக்டர். அவருடைய ஸ்கிரிப்ட் அவ்வளவு வேகமா இருக்கும். ஸ்டார்டிங்ல ஒரு சீன் இருக்கு பாருங்க. சுமோ காரோட ஸ்டியரிங்கை காருக்கு உள்ளிருந்து காமிப்பாங்க. அப்படியே ரேயர் சீட், அப்டியே சுமோவோட ரியர் கண்ணாடி, கொஞ்சம் ஸும் அவுட் பண்ணி ரோடு, அப்டியே இன்னும் கொஞ்சம் சூம் அவுட் பண்ணுனா ரோட்ல நூறு வண்டி ஓடும், பாம்பன் பாலத்தையே முழுசா காமிச்சிருப்பாரு. அதுவும் ரெண்டே செகண்ட்ல இந்த சீன் ஓடும். படம் முடியுற வரைக்கும் இதே வேகம்தான். சும்மா சொல்லக்கூடாது அருண்விஜய் நல்லாவே நடிச்சிருக்காரு. அப்புறம் ஏன் தான் கிளிக் ஆகமாட்டேக்குதுணு தெரில. அதே மாதிரி இந்த படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள். எந்த கேரக்டரையும் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்னு சொல்ல முடியாது. அதுமட்டுமில்லாம அவங்க வீட்டுக்குள்ளே எப்பவுமே இந்த கூட்டம் இருக்கும் அப்படிங்கற மாதிரியான ஒரு ஃபீல் இருக்கும். ஹரியோட டச். ரெண்டு பைட் சீனு. எல்லாமே சிங்கிள் ஷாட். திரும்பி திரும்பி அடிசிட்டே இருக்காரு. அருண் விஜயோட built க்கு அந்த பைட் சீன் நம்புற மாதிரி தான் இருக்கு. சென்டிமெண்ட் எமோஷனல் வசனத்துக்கு கொஞ்சம் கூட கொறச்சல் இல்ல.

 

இந்த இரண்டு படமுமே ஞாயித்துக்கிழமை மத்தியானம் சாப்பிட்டு முடிச்சு ரிலாக்ஸ்டா குடும்பத்தோட டைம் பாஸ் பண்ணலாம் அப்படிங்கற மாதிரியான படங்கள்.

 

 

 

எனக்கு வேலை சரியா தெரியல

வீடோ ஆபிஸோ, கூட கூடப்பிறந்தவங்களோ இல்ல கூட வேலை பார்க்கிறவங்களோ, கணவனோ மனைவியோ, அக்காவோ தம்பியோ, மருமகளும் நாத்தனாரும் இப்படி எந்த மாதிரியான ஒரு காம்பினேஷன் இருந்தாலும் ஒரு ஆளு வேலை பார்க்கும் இன்னொரு ஆள் வேலை பார்க்காது. ஆனா இந்த வேலை பார்க்காத ஆளுங்க கிட்ட நம்மளால வேலை வாங்க முடியாது இல்லன்னா தெரியாது. அதுக்கும் சேர்த்து வேலை பார்க்கிறவங்க கிட்ட தான் வேலை வாங்குவோம். 

 

இந்த வேலை பார்க்காத ஆளுங்க 'எனக்கு வேலை சரியா தெரியல' அப்படின்னு சொல்லிட்டு முழுசா டிமிக்கி கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிடுவாங்க. இந்த வேலை பாக்குற ஆளுங்க வேலையும் செஞ்சுட்டு வேலையில் செஞ்ச தப்புக்காகவும் திட்டு வாங்கிட்டு உழைக்கும் வர்க்கமாகவே கடைசி வரைக்கும் இருக்காங்க. இதுக்கு ஒரு முடிவு அப்படின்னு யோசிச்சா இந்த வேலை பாக்காம ஓபி அடிக்கிற ஆளுங்க கிட்ட வேலை வாங்க நம்ம கத்துக்கணும். அதை விட்டுட்டு எதிர்த்து பேசாதவன் கிட்ட நம்ம திறமைய காட்டக்கூடாது.

 

அதே சமயம் பேசா மடந்தைகளும் எதிர்த்து பேசணும். இல்லன்னா வேலை ஆனா போதும் அப்படின்னு அவங்க பாட்டு போயிட்டே இருப்பாங்க.

திருச்சிற்றம்பலம்

ரெண்டு வயசான ஆளுங்க இருக்காங்க, ஆடியன்ஸ்க்கு எமோஷன கடத்தனும், சென்டிமென்ட் சீன் பத்தல, அப்படின்னு யாரையாவது ஒரு ஆள அவுட் ஆக்கிடுவாங்க அப்படின்னு பார்த்தேன். அப்படி எல்லாம் நடக்காம சுபம் மங்களம் அப்படின்னு சொல்லிட்டு படத்தை முடிச்சிருக்காங்க. 

 


அதே மாதிரி அப்பாவை அடிச்ச உடனே, பயம், பயம் அப்படின்னு பயந்துட்டு இருக்க பையனுக்கு டென்த் ஸ்டாண்டர்ட்ல படிச்ச ஜூடோ கராத்தே அது மாதிரியான மார்ஷியல் ஆர்ட்ஸ் ஞாபகம் வந்து, கைய முறுக்கி நரம்ப சுருக்கி வில்லன அடிச்சு வெளுக்க போறான் அப்படின்னு நினைச்சா, பரவால்ல ரொம்ப பிராக்டிகலா அந்த சீன ஹேண்டில் பண்ணி இருக்காங்க. இதுக்கு முன்னாடி தமிழ் சினிமால இந்த மாதிரி குடும்பத்தோட பாக்குற மாதிரி மூவி வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு தெரியல. ஆனா கடைசி நேரம் வரைக்கும் பக்கத்தில் இருக்கிறவங்க கிட்ட லவ்வ சொல்லாம கடைசில சொல்ற மாதிரியான கதை உள்ள ஒரு படத்தை எங்கேயோ தமிழ் சினிமாலையே பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. சரி எது எப்படியோ ரொம்ப நாள் கழிச்சு ஒரு பீல் குட் மூவி.

 


ஆரோக்கியம் ஒரு பிளேட்


மக்களுக்கு இப்ப ஓரளவு சிறுதானியங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கிடைச்சிருக்கு அப்படின்னா அதுக்கு முக்கிய காரணம் மருத்துவர் கு.சிவராமன். தாராளமா இவரோட போட்டோவ நீங்க உங்க பூஜை அறையில் வச்சு கும்பிடலாம். அந்த அளவுக்கு செயற்கையான உணவுகள், உணவு நிறமிகள், உணவில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள்னு கடந்த 10 ஆண்டுகள்ள ஒரு பெரிய விழிப்புணர்வு புரட்சியவே செஞ்சிருக்காரு. அது மட்டும் இல்லாம ஆறாம் திணை, மருந்தென வேண்டாவாம் அப்டினு ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

 



அந்த வரிசையில விகடன்ல இப்போ மருத்துவர் அருண்குமார் ஒரு தொடர் எழுதிட்டு வரார். எத்தனையோ ஆரோக்கியம் பற்றிய தொடர்கள் படிச்சிருந்தாலும் இந்த தொடர் எல்லாத்திலிருந்தும் ரொம்ப வித்தியாசப்பட்டு இருக்கு. எப்டினா உணவுனு நாம் சொல்ற வியஷயங்கள்ள என்னவெல்லாம் (macro, micro nutrients) இருக்கு. அது உடலுக்குள்ள போய்ட்டு எப்டி செரிமானம் ஆகுதுனு தெளிவா ஒரு பாமரனுக்கும் புரியரா அளவுக்கு சொல்றார்.

 

முட்டை நல்லதா கெட்டதானு ஆரம்பிச்ச இவருடைய தொடர், புழுங்கல் அரிசி மற்றும் பச்சை அரிசி, மாவுச்சது சம்பந்தப்பட்ட கோதுமை, மைதா, ரவை மற்றும் சிறுதானியங்கள், அதை சாப்பிடவேண்டிய முறைகள், குளிர்ந்த் நீர், வெள்ளை சக்கரை, பால், உப்பு சத்துனு நாம வச்சிருக்குற பல நம்பிக்கைகள ஆதாரப்பூர்வமா தெளிவுபடுத்துறது இந்த கட்டுரைகளோட சிறப்பு. நீயா நானா ப்ரோக்ராம்லா குழந்தைகள் மதிய உணவு சம்பந்தப்பட்ட எபிசொடுக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்திருப்பார். இன்னொன்னு முக்கியமா என்ன சொல்றாருன்னா எதை சாப்பிட்டாலும் அளவா சாப்பிடுங்க அப்படின்னு தான் சொல்றாரு. எதையும் ஒதுக்கி வைக்க தேவையில்லை அப்படிங்கறது அவருடைய வாதம் 

 

மிஸ் பண்ணக்கூடாத தொடர். இன்னும் சில நாட்கள்ள புத்தகமா தொகுத்து வெளியிடுவாங்க. அவசியம் வாங்கி படிங்க ‘ஆரோக்கியம் ஒரு பிளேட்’.