செவ்வாய், அக்டோபர் 26, 2021

டாக்டர் 2021

ஆறு மெழுகுவர்த்திகள் பேசுபொருளும் டாக்டர் படத்தின் கருவும் ஒன்றே. ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில், தொலைந்துபோன மகனைத்தேடி ஷ்யாம் செல்லும் அந்த பயணம் எவரையும் புரட்டிபோட்டுவிடும் வலி நிறைந்தது. இறுதிவரையோ அல்லது மறுமுறையோ பார்க்கும் தைரியம் இல்லாதது. அதேபோலத்தான் டாக்டரில் தொலைந்துபோன சிறுமியைத்தேடி சிவகார்த்திகேயன் மற்றும் டீம் தேடலைத்தொடங்குகிறது. தொலைந்துபோன நிமிடம் முதல் மீளப்படும் தருணம் வரை உடைந்துபோகும் மனக்கிளர்ச்சியைத்தரும் பல காட்சிகளில் குபீர் சிரிப்பு வரவைத்து ஆச்சர்யப்படுத்தினால் அதுதான் டாக்டர். 



இயக்குனர் நெல்சனின் முதல் படமான 'கோலமாவு கோகிலா' படத்தில் வந்த பல கதாப்பாத்திரங்கள் இதிலும். அதிலும் ஆரம்ப காட்சிகளிலேயே கிங்ஸ்லியை களத்தில் இறக்கிவிட்டு அவரை வாள் வாள் என்று கத்த வைத்தது எரிச்சலைத்தந்தாலும் சில நிமிடங்களிலேயே அவருடைய நடிப்பு பாணிக்கு நாம் accustom ஆகிவிடுகிறோம். "வாரண்ட் இருக்கா?" என்ற முதல் டயலாக்கிலிருந்து இறுதியில் சிலுவையில் தொங்கும் வரை யோகி பாபு வயிற்றை புண்படுத்துகிறார். நியாய தர்மமே இல்லாமல், தொலைந்து போன குழந்தை எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கும் இடத்தில் கூட நம்மை சிரிக்கவைத்துவிடுகிறார்கள். இந்த படத்தில் "கடைசி வரை மருந்துக்குக்கூட நீங்கள் சிரிக்க கூடாது" என்று சொல்லித்தான் சிவகார்த்திகேயனை கூட்டி வந்திருப்பார்கள் போல. மனுஷன் 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் பங்கேற்கும் போட்டியாளர் போல இறுதி வரை ஒரு சிறு புன்முறுவல் கூட இல்லை. "செண்டிமெண்ட் சீன்லேயே சிரிக்க வைச்சாச்சு, நடுவுல இந்த ஒரு டூயட் வுட்டா ஒன்னும் தப்ப நினைக்க மாட்டாங்க" என்றெல்லாம் எண்ணாமல், அந்த 'செல்லம்மா' பாடலை இறுதியில் வைத்ததற்கு இயக்குனரின் இளகிய மனதை மனதார பாராட்டலாம். "என்னது, இளமை புதுமை அர்ச்சனா ஹீரோயினோட அம்மாவா?", என்று சற்று ஷாக்கான நேரத்தில் அண்ணி தான் என்று ஆற்றுப்படுத்தியிருக்கிறார். 

இதயமே அதிரும் வகையில் BGM. பல இடங்களில் இரைச்சல். ராணுவ டாக்டராக கதாநாயகனை எதற்கு வடிவமைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு சில ரவுடிகளை ஊசி போட்டு பிடித்தது போல அந்த இரட்டையர்களை பிடித்திருக்கலாம். மெட்ரோ tunnel பைட்டுக்காக ஊசி குத்தும் ஐடியாவை பரணில் தூக்கிப்போட்டுவிட்டார்கள். இரண்டாம் பாதியில் வில்லன் வினைய்யை எப்பொழுதோ மடக்கியிருக்கலாம். குழந்தைகளையும் எப்பொழுதோ காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இதுபோன்ற பல 'லாம்'களை தவிர்த்துவிட்டு பார்த்தால், ஆரம்பம் முதல் இறுதிவரை வெடிச்சிரிப்பிற்கு நூறு சதவீதம் கியாரண்டீ. பிளாக் காமெடி வகையறாவில்  கோலமாவு கோகிலா பவுண்டரி என்றால் டாக்டர் படம் சிக்ஸர். இதுபோன்ற ஒரு சீரியசான கதை களத்திற்கு சற்றும் எதிர்பாராத வகையில் பிளாக் ஹ்யுமரை நிறைவாக அள்ளித்தெளித்திருக்கும் நெல்சனின் திரைக்கதையில் அவரது உழைப்பு மிளிர்கிறது. 

டாக்டர் ஒரு தரமான பேமிலி என்டர்டைனர். 









ஞாயிறு, அக்டோபர் 24, 2021

வினோதைய சித்தம்

V.K ராமசாமி, எஸ்.எஸ். சந்திரன் போன்ற குணச்சித்திர நடிகர்களை தற்போது மிஸ் செயகிறேன் என்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு  ஒரு பதிவு இட்டிருந்தேன். சோகத்தில்(!!!) ஆழ்ந்திருந்த என்னை தேற்றும் விதமாக ஓவியாவின் கண்ணன், அண்ணன் ramkumar "அதுக்குத்தான் பட்டாபி பாஸ்கர், ஜெயப்ரகாஷ், தம்பி ராமையா இவங்கல்லாம் இருக்காங்கல்ல", என்று ஆறுதல் கூறியிருந்தார். 

தற்போது அந்த பதிவை மீண்டும் நினைவுகூரும் காரணம் "வினோதைய சித்தம்" மற்றும் அதில் பரசுராமாக வாழ்ந்திருக்கும் தம்பி ராமையா. 




தனி ஆளாக படத்தை தோளில் சுமந்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து காட்டும் மிடுக்காகட்டும், இறந்த பின் காலத்தோடு உரையாடும் போது காட்டும் கலவரமாகட்டும், மகள் பிரிந்து செல்லும் போது வெளிப்படும் கோபம், மனைவியிடம் சொல்லாமல் சொல்லும் காதல், பொது மேலாளராக நியமிக்கடப்படாமல் ஏற்படும் ஏமாற்றம், அதுவே கம்பெனியின் MDயாக மாறியவுடன் தொற்றும் உற்சாகம் என நடிப்பின் எல்லா ரசங்களையும் ரசிக்கவைக்கும் cosmetic இல்லா அரிதிலும் அரிதான performance. முழுமையான கலைஞன். இவருக்கு விருது கொடுத்து தேசிய விருதுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள் என்றால் என்னைப்பொறுத்தவரையில் மிகையில்லை.

"மேகா"வில் "புத்தம் புது காலை" ஒலிக்கும் திருமண நிகழ்வில், பார்க்கும் யாராயிருந்தாலும் விழியோரத்தில் நீர் துளிர்க்க வைக்கும் ஒரு நெகிழ்வான காட்சி வரும்.  அதுபோன்றதொரு தருணம் நெடுநாள் கழித்து "வினோதய சித்தம்" படத்தில். மிடுக்காக காரில் இருந்து இறங்கி 'மாப்பிள்ளை' என்ற நெஞ்சார அழைத்து கன்னத்தை வருடும் அந்த ஒரு க்ஷணம், ஒரு சோறு பதம். எல்லோருக்கும் உணவு பரிமாறும் காட்சியில் தம்பி ராமையாவின் நடிப்பு அதகளம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இதில் அறிவுரை வழங்கும் கதாப்பாத்திரமாகவே சமுத்திரக்கனி வந்தாலும் அலுப்பு இல்லை. அளவான அழகான அர்த்தமுள்ள வசனங்கள் திரைக்கதைக்கு பக்கபலம்.  முதல் நிமிடத்திலேயே கதைக்குள் பயணிக்கவேண்டும். கதை போகிற போக்கிலேயே கதாபாத்திர அறிமுகம் செய்யப்படவேண்டும், பின்னணி இசை, சமரசம் இல்லாத மேக்கிங் என் எல்லாமே இயல்பாக அதனதன் இடத்தில் சரியாக அமர்ந்திருக்கிறது. 

'டைம் இல்லை' என்று சொல்லுகிறவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ப(பா)டம்.

10/10


வெள்ளி, அக்டோபர் 15, 2021

தலைவி



தமிழக சினிமா மற்றும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் அதில் தவிர்க்கமுடியாத பிம்பம் ஜெயலலிதாவினுடையது. 

அரசியலுக்குள் பிரவேசித்த ஆரம்பகாலத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கையை இரு நபர்கள் வெகுவாக influence செய்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். ஒன்று அவரது அம்மா சந்தியா. மற்றொன்று MGR. முதலாவது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இரண்டாவது அவரே தனது கட்டுப்பாட்டினை இழந்து இழந்தது. அதுபோலவே தனக்கு பிடிக்காத இரண்டு பயணத்தை அவர் தனது வாழ்க்கையில் மேற்கொண்டார். முதலாவது நடிப்பு. அவர் அம்மாவின் உந்துததலில் அவருக்கே விருப்பமின்றி நடந்தது. இரண்டாவது அரசியல். MGRன் ச(க்)தி. இரண்டுமே அவர் சுதாரிப்பதற்குள் அவரை ஆரத்தழுவி கொண்டது. 

சரி, தலைவி படம் அவரது வாழக்கையை எந்த அளவுக்கு வெளிச்சமிட்டிருக்கிறது என்று பார்த்தோமென்றால் ஏமாற்றமே. சாவித்ரியின் வாழ்க்கையை பேசிய 'மகாநடிகை' வெற்றி வேற முக்கிய காரணம், அந்த கதை திரையில் எடுத்திருக்கும் நடுநிலைமை. ஜெமினியை சாடிய அதே நேரத்தில் சாவித்ரியின் தவறையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. தலைவி ஏமாற்றிய இடம் இந்த நடுநிலைமையை வசதியாக மறந்ததினால். அனுதாபத்துக்காக எடுக்கப்பட்ட சினிமா போல நம்மிடம் அதன் பேசுபொருளை முன்வைக்கிறது. 





ஆனாலும் பல காட்சிகள் அவரது வாழ்வில் நா(ம்)ன் அறிந்திடாதவை. உதாரணத்திற்கு, ஆரம்பகாலத்தில் சரோஜாதேவி MGR உடன் நெருங்கி பழகியதை RMV கண்டிப்பது, MGR  மேல் உள்ள தனக்கிருக்கும் உடைமைத்தன்மையை நிலைநாட்ட ஜெயலலிதா உட்பட யாரையும் நெருங்கவிடாமல் செய்தது, வைகோவின் டெல்லி செல்வாக்கு, MGR மேல் ஜெயலலிதாவிற்கு இருக்கும் ஈர்ப்பு, MGRன் சுயநலம் என நிறைய காட்சிகள் அரசியல் ஈர்ப்பு அற்ற பொதுவெளி மக்களுக்கு புதியவை. 

வேதா இல்லம், ராமாவரம் தோட்டம், RMV வீடு, ஸ்டூடியோ, காலத்திற்கேற்ப மாறிய MGR மற்றும் ஜெயலலிதாவின் கார் என retro  நினைவுகளை மீட்டுகொண்டுவந்தாலும், ஜெயலலிதாவின் பழைய பாடல்களை இன்னும் நிறைய மீளுருவாக்கம் செய்திருக்கலாம். அவரின் ரசிகர்களுக்கு virtual  விருந்தாக  அமைந்திருக்கும். படத்தில் இருக்கும் இரண்டு புதிய பாடல்கள் மருதாணி மேல் போடப்பட்ட நகப்பூச்சுக்கள் போல படத்தினுள் ஒட்டவில்லை. மேலும், ஜெயலலிதாவாக கங்கனா எந்த அளவுக்கு பொருந்திப்போகிறாரோ இல்லையோ, MGR கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி கனகச்சிதமானத்தேர்வு.   

படம் நெடுகிலும் அதிகமாக அவருடன் பயணிப்பது அவரது அம்மா மற்றும் MGR மட்டுமே. அதுதான் அவரது வாழ்வின் கசப்பான உண்மை. இந்த இருவரைத்தவிர இவரது வாழ்வில் அதிகம் பயணித்தது சசி. ஆனால் இவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக எப்போது எதனால் ஸ்திரமானார் என்பது இங்கு தெளிவுபடுத்தப்படவில்லை. சோபன் அவர்களின் இடத்தையும் நாசூக்காக தவிர்த்திருக்கிறார்கள். MGR மேல் இருக்கும் ஈர்ப்பை இவ்வளவு தைரியமாக பட்டவர்த்தன படுத்தியிருக்கும் விஜய், அவர் உயிருடன் இருந்தபோதே படம் வெளியிடப்பட்டிருந்தால் இதே காட்சிகள் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே. வாழ்நாள் முழுவதுமே விமர்சனத்திற்கு உட்பட்டிருந்த அவரது வாழ்க்கையை சர்ச்சைகள் இன்றி திரைவெளியில் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் மற்றும் குழுவைப்பாராட்டலாம்.

ஆனால் ஜெயலலிதாவை இத்தனை விமர்சனத்துக்குள்ளாக்கும் நாம், அவரும் ஒரு சராசரி பெண் தான் என்பதையும், அவருக்கும் தனியாக ஆசாபாசங்கள் இருந்தன என்பதையும் நமது சுயநலத்தேவைக்காக மறந்துவிடுகிறோம். சந்தியா அவரை சினிமாவிற்கு இழுக்காவிட்டால், MGR  சினிமா மற்றும் கட்சியின் சுயநலத்திற்காக அவரை பயன்படுத்ததாதிருந்தால், அவரும் தனக்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கலாம். மாறாக நமக்குத்தான் இரும்புபெண்மணி முதலமைச்சராக கிடைத்திருக்கமாட்டார்.    

ஆணவக்காரி, A1, திமிர்பிடித்தவர் என்று நாம் அவரை சொல்லிக்கொல்லும் (லகரம் தவறாக பயன்படுத்தவில்லை) அதே நேரத்தில், சட்டசபையில் காட்டுமிராண்டிகளால் அவர் அவமானப்படுத்தப்பட்டதை வசதியாக மறைத்துவிடுகிறோம். இன்னும் மாட்டிக்கொள்ளவில்லை என்றே ஒரே காரணத்தினால் நிரபராதியாக பல பசுந்தோல் போர்த்திய புலிகள் வெளியே சுற்றிக்கொண்டிருக்கின்றன. மோடியா லேடியா என்ற சவால் விடும் யோக்கியதையம் தைரியமும்  இன்று எந்த ஆண் அரசியலவதிக்கும் இல்லை. இறந்த மறு வருடமே மூன்று மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றியதில் இவர்களின் வீரத்தை உலகறியும். இந்திய வரலாற்றிலேயே ஏன் உலக வரலாற்றிலேயே தன்னை எதிர்த்து நின்ற ஆண்களை மண்டியிடவைத்து, தாள் பணியச்செய்து, வாகனத்தின் சக்கரத்திற்கு வணக்கமிடச்செய்து தனது கண்ணசைவில் வைத்திருந்த அந்த ஆளுமையை, புரட்சித்தலைவி என்னும் அம்மாவை வரலாறு ஆச்சர்யமாகத்தான் பார்க்கும்.  

சினிமாதானே என்று 'தலைவியை' தட்டிவிட்டுச்செல்லமுடியவில்லை. 

ஞாயிறு, அக்டோபர் 03, 2021

லிப்ட்

உழைப்புச்சுரண்டல். இந்த ஒற்றை வார்த்தையை மையமாய் வைத்து ஒரு சினிமா. லிப்ட்.

டாகுமெண்ட்ரியாக எடுத்திருந்தால் கவன ஈர்ப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதையே கொஞ்சம் த்ரில் கலந்து திரைக்கதையாக படைத்தால் வெகுஜனமும் ரசிக்கலாம். புரிந்துகொள்ளலாம். IT  வாழ்க்கை என்பது ஒரு கானல் நீர் என்பதை வாழ்ந்து பார்த்தால் மட்டுமே புரியும் என திரையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த லிப்ட். 



கரும்பை பிழிவது போல் வேலையை வாங்கிவிட்டு பின் 'ஒரு பேட் நியூஸ்' என சாதாரணமாக வேலையை விட்டு தூக்கிய காரணத்தினால் தற்கொலை செய்துகொள்ளும் ஒருவரின் ஆவி, இவர்களை பழிவாங்குவதே கதை. இரண்டு மணி நேரம் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, அதுவும் அதிகம் அறிந்திராத முகங்களாக, ஒரே பில்டிங்கில், மீண்டும் மீண்டும் அதே லிப்ட் என போர் அடிக்கும் அனைத்து காரணீக்கள் இருந்தாலும் திரைக்கதையில் 'exceeding expectations', நடிப்பில் 'meeitng  expectations' என படத்தை மறுகரைக்கு கொண்டு சேர்த்திருக்கும் அறிமுக இயக்குனரை பாராட்டலாம். 

இரு பாடல்கள். இரண்டுமே IT லைஃபை உள்ளது உள்ளபடி பறைசாற்றும் வகையறாக்கள். ஒளிப்பதிவு, திரைக்கோர்ப்பு இரண்டிற்குமே சவாலான திரைக்கதை. குறையொன்றுமில்லை. அதீத மனச்சுமையில் வாழும் IT  ஊழியர்களின் பிரச்சினைகளை ஒரு முழு நீள படமாக பேச முயன்றதை வரவேற்கலாம். 

நெற்றிக்கண் - Spoiler Alert


அரை மணி நேரத்திற்கு ஒரு முறை டீயும் மிளகாய் பஜ்ஜியும் சாப்பிட்டுக்கொண்டு வளவள பேச்சும் மசமச வேலையும் என ஸ்டேஷனுக்கு ஒரு போலீஸ்காரர் இருப்பார். அந்த போலீஸ் வேடத்திற்கு அளவெடுத்து தைத்தார் போல தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று கேரக்டர் இருக்கிறது. உதாரணத்திற்கு காக்கி சட்டை படத்தில் வரும் E.Ramdoss. 'என்னய்யா...என்ன நடந்துச்சுனு சொல்லு' என்று கேட்கிற ரைட்டர் கேரக்டரா?..கண்ணை மூடிக்கொண்டு அவரை கூப்பிடலாம். துணை கதாப்பாத்திரங்களில் பொருந்தி வருவது ஒரு கலை. மிதமான சுவையும் கூட. அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை பார்த்து (பேர் கண்டுபிடிக்க முடியவில்லை 17:34 இல் பார்க்கவும்) நிமிர்ந்து உட்கார்ந்த நேரத்தில் அந்த இடத்தை கவ்விக்கொண்டு போய் விடுகிறார் SI மணிகண்டன். ஸ்டேஷனில் தனது மரியாதையை காப்பாற்றும் பொருட்டு ஒரு கேஸையாவது வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்ற ஏக்கமும் விறுவிறுப்பும் கூடிய கதாப்பாத்திரத்தில் கனகச்சிதம்.




நயன்தாரா நடிப்பை விமர்சிக்க தேவையில்லாத அளவுக்கு 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று டைட்டில் கார்டிலேயே வந்துவிடுகிறது. அனால் படம் முழுக்க நயன்தாராவையே நம்பி திரைக்கதையில் பல இடங்களில் பொத்தல்கள். வீடியோ காலிங்கை ஸ்க்ரீன் ரெகார்ட் செய்வது, GPS கருவிகள், நயன்தாராவின் கால் ரெகார்ட் என பலவற்றை வசதியாக ஒதுக்கிவைத்துவிட்டு படத்தை வம்படியாக இழுத்திருக்கிறார்கள். கேம் ஓவர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கால் ஒடிந்திருக்கும் டாப்ஸியை கொல்லவரும் போது இருந்த பரபரப்பை விட கண்தெரியாத நயன்தாராவை கொல்லவரும் போது பார்வையாளருக்கு கடத்தப்படவேண்டிய பரபரப்புக்கு ஸ்கோப் அதிகம். ஆனாலும் பூர்த்திசெய்யவில்லை . இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால் ஒரு த்ரில்லர் என்பதில் குறையில்லை.

நயன்தாராவுக்கு பார்வை கிடைத்தது விடும் என்று ஊகிக்க முடிகிறது. அனால் யாரை காவு கொடுப்பார்கள் என்பதை கணிக்க முடியவில்லை. ஏற்கனவே தம்பியை கொன்ற பாவத்தில் இருப்பவரை, மீண்டும் தம்பியின் கண்களை பொருத்தினால் இரட்டைப்பாவம் ஆகிவிடும் என்று அப்பாவி மணிகண்டனின் மண்டையை பிளந்துவிடுகிறார்கள். காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெறவேண்டியவரை போட்டோவில் அடைத்து மாலை போட்டுவிடுவது மட்டும் செரிக்கவில்லை.

பார்த்துக்கொண்டே இருப்பதால் கிளர்ச்சி ஏற்படவில்லை என்ற ஒற்றை வரியில் எழுந்த கேள்விக்கான பதிலே இந்த திரைக்கதை. ஒரு உளவியல் சிக்கலை கையாண்ட விதம் சற்று விமர்சனத்துக்கு உள்ளாகும் அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது படத்தின் நோக்கத்தை சிதைத்திருக்கிறது.

OTT Disney Hotstar

இளையராஜா


ஹம்சத்வனி ராகத்தை பற்றி ஒருவரிடம் விவாதித்து கொண்டிருந்தபோது பேச்சு எங்கெங்கோ சுற்றி இசை ஞானியை பற்றி வலம் வந்தது. வலம் வந்தாலாவது இசை இடம் வருமா என்று முயற்சித்தோம்.

இசை என்று பேச ஆரம்பித்தாலே ராஜாவின் மேஜிக்கை பற்றி வியக்காமல் இருக்க முடியாது.

என்னுடன் விவாதித்து கொண்டிருந்தவர் 80களில் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் சிலருடன் ராஜாவின் ட்ரூப்பில் வாசித்து கொண்டிருந்தவர். அவருடைய விவரணையில்,

இளையராஜாவுடைய பாட்டை ஒரு வாத்தியக்கருவில வாசிக்கிறதுங்கிறது அவ்ளோ சுலபம் இல்லை சார். அப்டி ஒரு முறை வாசிச்சிட்டோம்னா ஜென்மத்துக்கும் அது உங்கள விட்டு போகாது. ஏன்னா அவருடைய இசை அந்த மாதிரி ஒரு பாதிப்பை உங்க வாழ்க்கைல ஏற்படுத்திருது.

கண்ணதாசனுக்கு எப்படி வார்த்தை அருவி மாதிரி வந்து விழுமோ அதுமாதிரி இவருக்கு ஸ்வரங்கள் வந்து விழுகும்.

பிரசாத் ஸ்டுடியோவே கதின்னு இருப்பார். காலைல 6.30 மணிக்கு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்துருவார். நாங்கெல்லாம் ஒரு ஆறேகால் மணிக்கு அங்க ஆஜர் ஆயிடுவோம்.

ஒரு முறை விஜயகாந்த்தோட படத்துக்கு ரீரெக்கார்டிங் செஷன் நடக்குது. திரைல ஒலி இல்லாம ஒளி மட்டும் வருது. விஜயகாந்த் வரப்புல நடந்துட்டு போறாரு. அதை மறைஞ்சிருந்து பாக்கிற வில்லன் அவரை வெட்றத்துக்கு அரிவாளை தூக்கிட்டு வரான். சமயம் பார்த்து அரிவாளை விஜயகாந்த நோக்கி வீசும்போது, ஹீரோயின் அங்க வந்து அந்த வெட்ட, தன்னோட கழுத்துல வாங்கிக்கிறாங்க. இதான் சீன். ஒரு பத்து நிமிஷம் ஓடுது. இதை அந்த பெரிய திரைல ராஜா பாத்துட்ருக்காரு. பாக்கும்போதே கைல இருந்த பென்சிலால அங்கே இருக்குற ஒரு சின்ன பேப்பர்ல அப்டியே ஸ்கெட்ச் போடுற மாதிரி நோட்ஸ் எழுதுறாரு. சீன் முடியவும் இவரு அந்த பேப்பரை ட்ரூப்ல இருக்குறவங்க கிட்ட கொடுக்குறாரு. அந்த நோட்ஸ அவங்க பிராக்டிஸ் பண்ணவே ஒரு மணி நேரம் எடுத்துக்குறாங்கன்னா நீங்க பாத்துக்கலாம். அந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோக்குலேயே இன்னொரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ. ராஜாவை சொல்றேன். அப்புறம் ட்ரையல் பாக்கும்போது சில கரெக்ஷன்ஸ். அடுத்த அரை மணி நேரத்துல அந்த சீனுக்கான BGM முடிஞ்சிருச்சு. அதெல்லாம் நேர்ல பாக்குறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்.




இளையராஜா சரஸ்வதியோட அவதாரம்னு சொன்னாலும் தப்பில்லை சார் என்று முடித்தார்.

அதை பறைசாற்றும் விதமாக எங்கிருந்தோ புத்தம் புது காலை பாடல், ஜானகியின் குரலில் காற்றோடு கலந்து வந்தது மனதை கரைத்துக்கொண்டிருந்தது.

PS

ஹம்சத்வனிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் தற்போது ஹம்சத்வனியை ஏன் விவாதித்தோம் என்று கண்டுபிடித்தவர்களுக்கு ஷொட்டு. 

தமிழ் நெடுஞ்சாலை

தமிழ் நெடுஞ்சாலை 


சந்திக்க விரும்பிய பிரபலமான ஆளுமைகளின் பட்டியலில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முதலில் இருப்பவர் வாத்தியார்(சுஜாதா) தான். கல்லூரியின் ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும் பாடப்புத்தகம் கையில் இருக்கிறதோ இல்லையோ, வாத்தியாரின் கதைகள் கைகளில் தவழும். அதுதான் ஸ்ட்ரெஸ் பஸ்டர். சென்னையில் வேலைக்கு சேர்ந்தபோது சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் அவர் வசிக்கும் முகவரி வரை தேற்றிவைத்தபோதுதான், 2008 பிப்ரவரி 27 திகதியில் அவர்  இறந்த அந்த துயரச்செய்தி இடியென இறங்கியது. வாய்ப்பு தவறிவிட்டது.



அவருக்கு அடுத்த இடத்தில் நான் பெரிதும் மதிப்பது, வாள் போன்ற கூரிய வார்த்தை வீச்சுகளின் சொந்தக்காரர் பாலகுமாரன் அவர்களை.  எண்பது தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல் அதிகமாக விற்பதற்கு ராஜேஷ்குமாரோடு இவரும் ஒரு காரணாமாயிருந்தார். முன்னவர் க்ரைமில் முதலாவது என்றால், இவர் குடும்ப கதைகளில் ப்ரதமையாக இருந்தார். பெண்களை  மட்டுமே மையபடுத்தி  எழுதப்பட்ட குடும்ப நாவல்களில், இருப்பாலர்களின் நிறை குறைகளையும் சமன்படுத்தி ஆண்களையும் குடும்ப நாவல்களை படிக்க வைத்த பெருமைக்குரியவர். இவரது அசாதாரண கதை சொல்லலுக்கு இன்றளவும் உதாரணமாக இருப்பது, 'இரும்புக்குதிரைகள்', 'மெர்குரிப்பூக்கள்' மற்றும் 'பயணிகள் கவனிக்கவும்' நாவல்கள். பிடிக்குமென்றால் முயன்றுபார்க்கலாம். 2000த்திற்கு பிறகு இவர் எழுதிய கதைகள் அனைத்தும் ஒரு ஆசானை போல் அருகில் இருந்து கற்றுக்கொடுக்கும் வகையறாக்கள். தனக்கென்று ஒரு குருவைத்தேடி பின்பு தானும் குருவாக பரிமளித்தார். இவரை எங்கேனும் நேரில்  பார்த்தால் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காலன் வென்றுவிட்டான்.

ஆனால் எஸ்.ராவை ஒரு புத்தக கண்காட்சியில் கண்டு அரை மணி நேரம் அளவளாவி ஒரு புகைப்படம் எடுத்தது மட்டுமே ஆறுதல்.

தற்போது வாராவாரம் விகடனில் பிரசுரமாகி வரும், தமிழ் நெடுஞ்சாலை தொடரின் ஆசிரியர், இ.ஆ.ப. பாலகிருஷ்ணன் அவர்களின் எழுத்துக்கள் மிகவும் கவருகின்றன. அனுபவத்தை பகிரும் ஆதாமார்த்தமான வார்த்தைகள் இவரது பலம். சிந்து முதல் வைகை நாகரீகத்திற்கு ஒரு பயணம் என்ற ஒரு புத்தகமே இவரது இலக்கிய அர்பணிப்பிற்கு ஒரு சான்று. புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். தன்னம்பிக்கையாளர். இரு விதங்களில் கவருகிறார். ஒன்று, இ.ஆ.ப. மீது நமக்கு ஆவல் வரும் பொருட்டு இவரது நடவடிக்கைகளினால் ஏற்படும் நேரடிப்பயன்கள். உதாரணமாக தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குனராக இவரது பணிகள் அளப்பரும் ஆற்றல் மிக்கவை. 34 வாக்காளர்களின் வாக்கை சேகரிக்கும் பொருட்டு தன்னந்தனியாக நக்சலைட் இருக்கும் காட்டுக்குள் சென்று  தேர்தலை நடத்தி காண்பித்தது, மற்றும் புயல் போன்ற பேரழிவு மேலாண்மையில் முன்மாதிரியாக இருக்கும் ஒடிசாவில் இவரது செயற்பாடுகள் என அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கின்றன. அதன் காரணமாகவே முதல்வர் பட்நாயக்கின் செல்லப்பிள்ளை. எல்லையில்லா அதிகாரம் கொண்ட இந்திய ஆட்சி பணி மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம் என்ற இவரின் ஒவ்வொரு வருட பணியையும் ஒவ்வொரு புத்தகமாக பதிப்பிக்கும் அளவிற்கு முன்மாதிரி செயல்கள். வயதிருந்தால் ஐ ஏ எஸ் அகாடமியில் சேர்ந்திருக்கலாம். அப்படி ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை. இரண்டாவதாக இவர் கவருமிடம், தமிழ் மீது தனக்கிருக்கும் அதீத காதலால். தேர்ந்தெடுத்த வார்த்தை பிரயோகங்கள், வாசகனை அருகில் அமரச்செய்யும் சொல்லாடல் என மீண்டும் மீண்டும் படிக்க ஆர்வம் ஏற்படுத்துகிறார். தமிழ் மொழியிலேயே கல்லூரி வரை பயின்று, கிங்மேக்கர் காமராஜரால் கவர்ந்திழுக்கப்பட்டு தமிழில் தேர்வெழுதி தனது முதல் முயற்சிலேயே வென்றவர். விசாலமான பார்வைக்கும், அனைத்து துறைகளிலும் அறிவைப்பரப்பும் பரந்து விரிந்த கட்டுக்கரைகளுக்கும் இவருக்கு நன்றிகள். நம்மவரில் ஒருவராக வரவேற்கலாம்.   

சமூகத்தின்பால் மற்றும் தமிழ் மீது அக்கறை கொண்டு திறமையானவர்களை உலகத்திற்கு அடையாளபடுத்தும் சமுதாய அக்கறையுள்ள சஞ்சிகைகளில்  விகடன் என்றுமே நம்பர் ஒன்.