செவ்வாய், நவம்பர் 30, 2021

மாரடைப்பு

 அதிகாலை வேளையில் உறவினரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு என்றாலே கொஞ்சம் பதற்றம் தான். அதுவும், 'ஹலோ' என்று சொல்லுக்கு பிறகு, 'என்னாச்சு? எப்போ?' என்ற இரண்டு வார்த்தைகள் வந்தது என்றால் உறுதிப்படுத்திவிடலாம். உறவினர் மரணம். பெரும்பாலும் மாரடைப்பின் காரணமாக. 

இந்த மாரடைப்பு அதிகாலை வருவதன் காரணம், நல்ல உறக்கத்தில் இருக்கும்பொழுது 'வெடுக்' என்று படுக்கையை விட்டு எழுவதின் காரணத்தினால். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நாற்பத்தைந்து அல்லது அம்பது என்று இருக்கும் இதயத்துடிப்பு நாம் விருட்டென்று எழும்போது, ரத்தத்தை உடல் முழுவதும் உடனடியாக பம்ப் செய்யும் பொருட்டு வேகமாக இயங்கத்துவங்குகிறது. ஐந்தே செகண்டில் 160 km வேகத்தில் காரை இயக்குவதைப்போல. சற்றே அதிகம் வேலை பார்த்து ஓய்ந்து போன இதயம் 'முடியலப்பா, கொஞ்சம் ரெஸ்ட்' என்று நம்மை போட்டுத்தாக்கி விடுகிறது. பெரும்பாலும் வயதானவர்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைப்பதற்கான முதற் காரணம் இயற்கை உபாதையை கழிக்க. அவ்வாறு ஒரு உணர்வு வந்ததானால், முழித்தவுடன் படுக்கையிலேயே ஒரு நிமிடம் அசையாமல் படுத்திருந்து, பின் ஒரு நிமிடத்திற்கு உடலை ஒரு பக்கம் சாய்த்து படுத்து, பின் ஒரு நிமிடம் எழுந்து உட்கார்ந்து என் மூன்று நிமிடங்கள் கழித்துதான் எழுந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சற்றே நிற்க.





கடன் திருப்பி கொடுக்கவேண்டுமே, பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டுமே, பெயரன் பெயர்த்தியை கொஞ்ச முடியமா, வீட்டுக்கடன் தீருமா, மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுமே, குடும்ப சச்சரவுகள் தீர வேண்டுமே போன்ற எந்த கவலைக்கும் இடம் கொடுக்காமல் தூக்கத்தில் ஏற்படும் மரணம் நல்ல இறப்பு என்று மற்றவர்களால் அறியப்படுகிறது. 'அவனுக்கென்னப்பா, நிம்மதியா போய் சேந்துட்டான்' என்று வயதானவர்கள் பொறாமைக்கூடப்படுகிறார்கள்.  


ஆனால், இந்த மாரடைப்பு எப்பொழுது யாருக்கு எந்த அளவில் பாதிக்கும் என்று தெரியாத நிலையில் தான் இன்றைய வாழ்வு முறை உள்ளது. சரி, என்ன மாதிரியான முன்னேற்பாடுகள்(!!!) செய்து கொள்ளலாம்?


மணமாகாதவர் மற்றும் முப்பது வயதிற்கு கீழே என்றால் தன்னுடைய கடன் (கொடுக்கல் வாங்கல்) மற்றும் சேமிப்பு தகவல்களை நண்பர்களிடம் பெற்றோரிடம் எப்பொழுதுமே தெரிவித்து வைத்திருப்பது நல்லது. வாங்காத கடனை வாங்கினான் என்றோ, வாங்கிய கடனை மறைப்பதோ போன்ற இடர்பாடுகளை அஸ்தி கரைந்த பின்பு நாம் இல்லாத நேரத்தில் எழும் சச்சரவுகளை தவிர்க்க உதவலாம். மேலும் ஒரு டைரி போட்டு தன் குறிக்கோள் மற்றும் ஆசைகள் என்ன போன்ற இத்யாதிகளை எழுதி வந்தால் பின்னாட்களில் அதை படிப்போர் 'அடேடே', 'உச்', 'நல்ல மனுஷன்' என்று இறந்த பிறகு மட்டும் மனதார பாராட்டும் மக்களிடமிருந்து அவர்கள் கண்களில் வேர்வை துளிர்க்க வைக்கலாம். 


முப்பது முதல் ஐம்பது வயதுடையவர்கள் என்றால் சற்றே ஹை ரிஸ்க். கைக்குழந்தை முதல் பதினைந்து வயது வரை குழந்தைகள் இருப்பார்கள். முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளை துணையிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நலம். இன்சூரன்ஸ் கட்டும் பணம் தெண்டம் என்று நினைத்தாலும், டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை குடும்பத்தை நிர்கதியாக்காமல் உதவிடும்.  ஷேர் மார்க்கெட், ம்யூஷுவல் பண்ட், எல்.ஐ.சி பாலிசி, PPF, பாண்ட் பாத்திரங்கள்,  சீட்டு போன்ற எந்த வகையான சேமிப்பு வழிகளில் பணத்தை சேமித்து வைத்திருந்தாலும் தெளிவாக அட்டவணை போட்டு சொல்லிவிடுவது உத்தமம். போலவே, எந்தெந்த வங்கியில் அக்கவுன்ட், அதற்கான கடவுச்சொல், ATM கார்ட் பின், நெட் பேங்கிங்க்  போன்றவற்றையும் பகிர்ந்துவிடவேண்டும். ஏனெனில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் தற்போதைய தேதியில் உரிமை கோரப்படாத பணம் மட்டும் தோராயமாக ஒன்றரை லட்சம் கோடி.  


ஐம்பது அறுபது வயதுடையவர்கள் என்றால் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் அவர்களின் திருமணத்திற்கான செலவு போன்றவை முன் நின்று பயமுறுத்தும். குழந்தைகள் வயது மற்றும் மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கும் காரணத்தினால், நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் மனதளவில் மீண்டு வந்தாலும், சரியான நிதி திட்டமிடல் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால கனவுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு அமையும்.  முன்சொன்னது போல எங்கெங்கு சேமிப்பு செய்திருக்கிறோம் என்பதை துணையிடமோ உற்ற நண்பர்களிடமோ பகிர்ந்துகொண்டுவிட வேண்டும்.


இருபது வயது கீழே உள்ளவர்களை பாதிக்கும் அளவுக்கு மாரடைப்பு இல்லை என்றாலும்  அன்றன்றைக்கு பிரவுசிங் ஹிஸ்டரியை மட்டும் க்ளியர் செய்து வைப்பது, 'இவனா இப்படி?' போன்ற புறம்பேச்சுக்களை தவிர்க்க உதவும்.  


எது எப்படியோ,  இந்நாளே கடைசி நாள் என்பது போல மகிழ்ச்சியாகவும் மற்றவர்களிடத்தில் அன்பைப்பரிமாறியும் நடந்து கொள்வது உகந்தது.  




ருத்ரதாண்டவம் - விகடனுக்கு கண்டனம்

விகடனின் ஆகப்பெரும் வாசகன் என்ற முறையில் எனக்கு பெருமைதான் என்றாலும் இரண்டு மாதங்கள் முன்பு வந்த 'ருத்ரதாண்டவம்' சினிமாவின் விமர்சனம் சற்றே அந்த நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது. 

நண்பர்கள் சிலரின் கண்ணோட்டத்தில் 'ருத்ரதாண்டவம்' படம் நன்றாகவே இருக்கிறது என்று அறிந்திருந்த வேளையில், வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே விகடன் கொடுத்திருந்த அதிர்வில் சற்று குழம்பித்தான் போயிருந்தேன். என்னுடைய To Do லிஸ்டில் ஓரிரு தினங்கள் முன்பு டிக் அடிக்கப்பட்டது.

படத்தை பார்த்த வரையில் அதன் கதையாக நான் புரிந்து கொள்வது இதைத்தான். மாநில கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார். வட சென்னையின் ஒரு பகுதியில் போதைப்பொருள் பரிமாற்றத்தை தடுக்கும் பொருட்டு அங்கு மாற்றாலகிப்போகும் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் (கதாநாயகன்), பஜாரில் போதைப்பொருள் விற்கும் இரு சிறுவர்களை விரட்டி பிடிக்கிறார். அந்த நிகழ்வின் விபத்தில் சிறுவர்களுக்கு அடிபடுகிறது. அவர்களுக்கு மருத்துவச்செலவும் செய்து போதைப்பொருள் கேஸில் FIR  போடாமல், பெட்டி கேஸில் அவர்கள் சார்பாக ஸ்டேஷனில் அபராதமும் கட்டி அறிவுறுத்தி பெற்றோர்களுடன் அனுப்பிவிடுகிறார். ஆனால் ஒரு சில நாட்களில், புது போதை பொருளை முயன்று பார்க்கும் முயற்சியில் ஒரு சிறுவன் வலிப்பு வந்து இறந்து விடுகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கட்சியின் மாநிலத்தலைவர் இன்ஸ்பெக்டரை பழி வாங்கும் பொருட்டு, அவர் தாக்கிய காரணத்தினால் தான் அந்த சிறுவன் இறந்தான் என்று வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியசெய்கிறார்.  இதனால் ரிச்சர்ட் கைது செய்யப்பட்டு வேலையும் இழந்து மனைவியையும் பிரிந்து சிறையில் துன்பப்படுகிறார். அந்த பொய் வழக்கிலிருந்து வெளிவரும் பொருட்டு ரிச்சர்ட் மற்றும் தம்பி ராமையா ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று துலக்குகின்றனர். இறந்துபோன அந்தச்சிறுவன் ஞானஸ்தானம் பெற்றிருப்பதினால் இந்துமதத்தின் கீழ் வரும் சாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தமுடியாது என்ற வாதத்தை முன்னிறுத்தி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை முறியடிக்கிறது. மேலும் இதுபோன்று ஞானஸ்தானம் பெற்று இருபக்கமும் கிடைக்கும் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் மக்களை கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது சான்றிதல்களில் முருகன் என்றிருக்கும். ஆனால் ஞானஸ்தானம் பெற்ற பிறகும், தங்கள் அடையாளத்தை பகிரங்கமாக துறக்கமாட்டார்கள். (மேலதிக விவரத்திற்கு தனிப்பெட்டியில் வரவும்) 



விகடனின் விமர்சனத்தில் 'ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாக நிற்கும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மீது போலி பிம்பம் கட்டமைக்கும்போதுதான் சட்டம் மீதான அவரின் அக்கரையிலுள்ள உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிறது' என்று வெளிவந்திருக்கிறது. PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத்தான் தவறு என்று இயக்குனர் கூறியிருக்காரே ஒழிய அந்த சட்டமே தவறு என்று எங்குமே கூறவில்லை. தவிர ரிச்சர்டுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல் கூட தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் தான் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். மேலும் நாடே கொண்டாடப்படவேண்டிய சட்ட மேதை அம்பேத்காரை ஒரு சாரார் மட்டுமே அரசியல் லாபநோக்கங்களுக்காக தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டது எப்படி நியாயமாகும் என்ற தர்க்க ரீதியான வாதத்தை முன்வைக்கின்றார். மேலும் கடந்த தலைமுறையை காட்டிலும் தற்கால இளைஞர்களிடம் போதை மருந்து எந்த அளவுக்கு பரவலாக கிடைக்கிறது என்றும் அதன் தாக்கத்தினால் இன்றைய இளைய சமுதாயம் எப்படி சீர் கெட்டுப்போகின்றது என்றும் காட்சிப்படுத்தியுளார். 

வசனங்கள் மற்றும் மிகை நடிப்பு போன்ற சில குறைகள் இருந்தாலும் படம் பார்க்கும் எவருமே படம் சொல்ல வந்த கருத்தை தவறாக கருதக்கூடிய அளவில் எங்குமே காட்சிகள் இல்லை. அண்ணாத்தே படத்திற்கு 39 மதிப்பெண்கள் கொடுத்திருக்கும் நேரத்தில் இதற்கு சற்றேற்குறைய 40 மதிப்பெண்களாவது கொடுத்த்திருக்கலாம். வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்திருக்கும் விகடனின் விமர்சனக்குழுவின் உள்நோக்கம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது. 

லோ காஸ்டிங் லோ பட்ஜட் சினிமாவை இந்த அளவுக்கு ஒரவஞ்சனையுடன் கொஞ்சமும்  முதிர்ச்சி இல்லாமல் விமர்சித்திருக்கும் விகடனுக்கு பொன் மகள் வந்தாள், மற்றும் சூரரை போற்று போன்ற படங்களின் காட்சிப்படுத்தபட்டிருக்கும் தற்குறித்தனங்களை விமர்சிக்கும் தைரியம் இருக்கிறதா?

வெள்ளி, நவம்பர் 26, 2021

அண்ணாத்த ஸ்டோரி டிஸ்கஷன்

சிவா: வணக்கம் சார்.

ரஜினி : வணக்கம். வாங்க. விஸ்வாசம் படம் தூள். பிரமாதம் பண்ணீட்டிங்க.

சிவா : ரொம்ப நன்றி சார். உங்களுக்கும் ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருக்கேன். நீங்க விருப்பபட்டீங்கன்னா படம் பண்ணிடலாம்.

ரஜினி : ஓ அப்படியா. ஆனா சிவா எனக்கு என்னன்னா பாருங்க, இந்த ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் அப்டி இவங்க கூடலாம் புதுசா ஒர்க் பண்ணி வித்தியாசமா ஒரு டிராக்ல படம் போய்ட்ருந்துச்சு. வயசுக்கு ஏத்த ஒரு கேரக்டர் மாதிரி கதை கொண்டுவந்தாங்க. பரவால்ல. படம் ஓகேனு சொல்லலாம். அதுக்கப்புறம் இந்த டுப்பாக்கி எடுத்தாரே முருகதாஸ், அவர்ட்ட ஒரு படம் பண்ணலாமான்னு கேட்டேன். வேஷ்டிய பின்னாடி கிளிச்சிவிட்டுட்டு என் இடுப்புல கட்டி விட்ட மாதிரி ஒரு படம் எடுத்து கொடுத்தார். இப்போ என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்ருக்கேனா, அதான் யோசனையா இருக்கு.

சிவா: அப்டிலாம் பயப்படாதீங்க சார். உங்க ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு எப்பவுமே கொடுப்பாங்க. அவங்கள நமபி தைரியமா ஒரு படம் எடுக்கலாம். அதுபோக இல்லாம, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் னு நாலு படத்துல கத்துகிட்ட வித்தைய மொத்தமா இதுல இறக்கலாம்னு இருக்கேன் சார்.

ரஜினி: அப்டின்றீங்க. சரி கதை சொல்லுங்க. கேப்போம்.

சிவா ரஜினியிடம் கதை சொல்லுகிறார். அந்த பாவத்தை இங்கு எழுதுவது கபீம் குபாம் தண்டனையை பெற்று தந்து விடும் என்பதால் தவிர்க்கபட்டிருக்கிறது.

கதை கே(கெ)ட்ட பிறகு,




ரஜினி: ஒர்க் அவுட் ஆகுமா. போன படமா தான் அப்பா பொண்ணு செண்டிமெண்ட் . இப்ப திரும்பவுமா?

சிவா : அதுல அப்பா பொண்ணு. இதுல அண்ணண் தங்கச்சி. கீர்த்தி சுரேஷ்  இப்போதான் உடம்ப குறைச்சிருக்காங்க. அவங்கள புக் பண்ணிடலாம்.

ரஜினி : ஐ. அவங்க தான் எனக்கு ஜோடியா. பேஷ். பின்றீங்க.

சிவா : ஐயோ சார். அது தான் உங்க தங்கச்சி.

ரஜினி: ஓஓ. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அப்போ ஹீரோயின் யாரு?

சிவா: போன படத்துல நடிச்ச நயன்தாரா போட்டுக்கலாம் சார். ஆனா வயசு வித்தியாசம் காரணமா அந்த படத்துலேயே நயன்தாராவ போட்டதுக்கு கதைக்குள்ளேயே ஒரு சீன் வச்சி ஒட்டிருப்பாங்க. நான் அந்த அளவுக்கு பங்கம் வைக்கல. ஒரு பிரென்ட், பேமிலி பிரென்ட் மாதிரி, ஒரு குழப்பமா கதைல கொண்டு வந்துடலாம். என்ன ரோல்னு யாருக்கும் தெரியாத மாதிரி. கடைசில கீர்த்திய காப்பாத்தும்போது கூட, சூரிய ஒரு தொட்டி ஆட்டோ கொண்டு வந்து இடிச்சி அப்டியே கண்டுக்காம கழட்டி விட்டுரலாம்.
   
ரஜினி : பென்டாஸ்டிக் சிவா. அப்புறம் என்ன ஸ்பெஷல்.

சிவா: குஷ்பு, மீனா இவங்க ரெண்டு பேரையும் கூப்ட்ருக்கேன்.

ரஜினி: மார்வெலஸ். சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா கொடுக்கறீங்க. அவங்களுக்கு என்ன ரோல்.

சிவா: அது எனக்கே தெரியாது சார். கூப்டு வந்து சேலை கட்டி வுட்டு, ஒரு பாட்டுக்கு டான்ஸ் மாதிரி எதாவது அப்டி இப்டி ஆடி, படத்த இன்னோரு அரை மணி நேரம் ரொப்பிரலாம் சார். அப்டியே படத்த ரிச்சா காமிக்கிறோம். கலர் கலரா வராங்க போறாங்க. அவ்ளோதான்.

ரஜினி : செம. வேற என்ன ஸ்பெஷல் சொல்லுங்க.

சிவா : சூரிய காமெடிக்கு கூப்டுக்கலாம்.

ரஜினி: போன படத்துல யோகி பாபு. இந்த படத்துல சூரி. செம யூத்தா இருக்கும்ல.

சிவா : உங்களையே யூத்தாதான் காமிக்கிறோம். அவரு வழக்கம்போல டங்கிலிஷ் பேசிட்டு கடுப்படிச்சிட்டு இருப்பார். சாரி. காமெடி பண்ணிட்ருப்பார்.

ரஜினி : வேற என்ன ஸ்பெஷல்.  

சிவா: செமயா ஒன்னு யோசிச்சிருக்கேன். குப்புலி லீலானு ஒரு ஆர்ட்டிஸ்ட். உங்களோட ஒரு நாலு வயசு கம்மி.

ரஜினி : நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன். அவங்கதான என்னோட அம்மா கேரக்டர் பண்ணப்போறாங்க. கரெக்டா?

சிவா : இல்ல சார். அதையும் தாண்டி. பாட்டி கேரக்டர். இது எப்படி இருக்கு?

ரஜினி: பத்த வைக்குறீங்களே சிவா. பட்டைய கிளப்புறீங்களே. வேற வேற சொல்லுங்க.

சிவா ஸ்டண்ட் சீன்களை வரிசையாக விளக்குகிறார்.

ரஜினி : படம் புல்லா ச்சும்மா பத்திக்கிட்டு எரியும் போல. அந்த லாரிலாம் எப்படி வெடிக்குது?

சிவா: எனக்கே தெரியாது சார். வெடிக்க வைக்கிறோம். தீபாவளில. எதையாவுது எரிப்போம்.  

ரஜினி: அப்புறம் வில்லன் பில்டிங்க்குள்ளேயே போய்ட்டு இந்த 9.50, 10.10 மணிக்கு அலாரம் வச்சிட்டு கொல்றேனே. அது எப்படி. என்ன லாஜிக். எப்படி நான் வில்லனோட இடத்துல சேஃபா இருக்குறேன். ரசிகர்கள் கேக்கமாட்டாங்களா?

சிவா: லாஜிக்கா. என்ன ஜோக் சார். அதலாம் நாம பாக்கலாமா. சும்மா அப்புடியே படம் எடுக்க வேண்டிதான் சார். கதைல ஒரு விறுவிறுப்பு எப்படி கொண்டு வர்றது. நீங்க ஒரு பவுன் விஷயத்த மறந்துட்டீங்க.

ரஜினி:   கரெக்ட். கரெக்ட். சரி, அந்த பில்டிங் மேல நின்னுட்டு கையிறு கட்டி ஒரு அடியாள தொங்க வைக்கிறோம். பட் நான் மேல கயிற இழுத்தா அந்த ஆளு வெளில போனுமே. எப்படி கண்ணாடில வந்து மோதுறான்.

சிவா: சார். நீங்க சொல்றது லாஜிக். பட் நம்ம பண்ணப்போறது மேஜிக். கயிறு கைல இழுக்கும்போது நீங்க வாய கோணிட்டு சூப்பரா ஒரு எக்ஸ்ப்ரெஸன் குடுப்பீங்க. பாருங்க. அப்டியே க்ளாப்ஸ் அள்ளும் சார்.

ரஜினி : ஜமாய்ச்சுடலாம்   போங்க.அப்புறம் சிவா இன்னோனு கண்டுபிடிச்சிட்டேன்.அந்த லீலா கேரக்டர் எனக்கு பாட்டியா நடிக்கறதுனால தான் காண்டாகி கீர்த்தியோட லவ்வ எண்ட சொல்லாம வேற ஏதோ பொய் சொல்லி அப்டியே கதை வேற எங்கெங்கோ போய், செம ட்விஸ்டு சிவா

சிவா: ஆமா சார். பாய்ண்ட புடிச்சிட்டீங்க.  தவிர முத பாட்டா நம்ம SPB யோட பாட்டு. நாலு ஹீரோயின். ரெண்டு வில்லன். காமெடி அதகளத்துக்கு சூரி, ரெண்டு வில்லன். கொல்கட்டால சூட்டிங். அங்கங்க ஃபைட். உங்க அதிரடி டான்ஸ். 60 ஷாட் மாதிரி லாரிய வெடிக்க வைக்கிறோம். இந்த கிழி போதுமா சார்.   

ரஜினி : போன தடவ வேட்டிய பின்னாடி கிழிச்ச மாதிரி படம் எடுத்தாங்க. இந்தத்தடவ நீங்க அண்டர்வெரோட ரோட்ல  ஓடுற மாதிரி படம் பண்ணப்போறீங்க.  அப்டிதானே

சிவா : ஆமா சார். ஆமா.

ரஜினி: ஒரு நூறு கோடி சம்பளம் போதும்.

சிவா: அவ்வளவுதான் சார். சன் பிக்சர்ஸ் உள்ள வந்தாச்சு. மொக்கப்படம்னாலும் ஓட்டிடுவாங்க. கவலையே வேண்டாம்.

எ பிலிம் பை சிவா  .அண்ட் டீம். 

 

வியாழன், நவம்பர் 25, 2021

முதல் மரியாதையும் தமிழ் புலவரும்

 https://twitter.com/iParisal/status/1463394870064680963?t=w6zHqcY2Q1oWbnT8vwEjVw&s=09

முதல் மரியாதையை வேறு கோணத்தில் அணுகிய இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேசிய விருதெல்லாம் வாங்கி எல்லோரும் கொண்டாடி அலுத்து சலித்தப்பிறகு, தூசி தட்டி மாற்றுப்பார்வையோடு தமது கருத்துக்களை முன் வைக்கிறார் விமர்சகர். வடிவுக்கரசிக்கு வக்காலத்து வாங்கலாமா இல்லையா என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில், சுமார் 23 வருடங்களுக்கு முன் நான் பள்ளியில் படித்தபொழுது எழுதிய கட்டுரை நினைவலைகளில் வந்து போகிறது. 

பத்து மார்க் கேள்வி என்று நினைக்கிறேன். தமிழ் பாடப்புத்தகத்தில் கதைகள் இடம்பெறும். புத்தகத்தின் கடைசி கதை அது. கதையின் கரு இதுதான். ஒரு தமிழ் புலவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தமிழின் பால் தீரா பற்றுடையவர். ஆதலினால் தமிழை நேசிக்கும் பொருட்டு தனது மனைவி மக்களை கூட மறந்துவிடுகிறார். வீட்டை பொருளாதார ரீதியில் மற்றும் இறையாண்மையோடு(!!!) வழிநடத்தி செல்வது அவரது மனைவி. அப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு புலவர் தமிழை நேசித்து வளர்த்தார் என்று கதை முடிவுறும். இதை பற்றி இரு பத்திகள் மிகாமல் ஒரு கட்டுரை வரைக என்பது அந்த இறுதியாண்டு பரீட்சையின் கேள்வி. 


எனக்கு அந்த கதை போன போக்கே பிடிக்கவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்த கேள்வி கேட்கப்படாமல் இறுதி பரீட்சையில் அந்த கேள்வி கேட்கப்பட்டது, காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல ஆகிவிட்டது. வீட்டில் குடும்பத்தை கவனிக்காமல், உன்னை நம்பி வந்தவளுக்கு சோறு போட யோக்கியதை இல்லமால், இரு உயிர்களின் உணர்வுகளை மதியாத புலவருக்கு திருமணம் ஒரு கேடா என்கிற ரீதியில் நாகரீகமாக(!!!) இருபக்கத்திற்கு பொரிந்து தள்ளிவிட்டேன். எரிகிற தீயில் என்னை ஊற்றுவது போல அந்த கதையில் ஒரு வரி கோபத்தை இன்னும் கிளறியிருந்தது. புலவர் வீட்டை விட்டு வெளிவரும்பொழுது வாசலில் இருக்கும்  ரோஜாச்செடி வாடியிருக்கும். மலர்கள் தலை கவிழ்ந்து காய்ந்து போய் நிற்கும். அதை கண்டவுடன் புலவருக்கு ஒரு கவிதை தோன்றும் என்றெல்லாம் வயித்தெரிச்சலை கிளப்பியிருப்பார்கள். புலவரின் பொறுப்பற்ற இல்லற வாழ்க்கைக்கு ஒரு சோறு பதம் போல இந்த காட்சி வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறது என்கிற ரீதியில் இரண்டாம் பக்கத்தில் இதற்கென்றே தனியாக ஒரு பத்தி விலாவரியாக கிளறிவிட்டிருந்தேன். தமிழ் வாத்தியார் திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் முழு ஆண்டு தேர்வின் திருத்தப்பட்ட பின்னூட்டங்கள் எப்பொழுதும் நமக்கு அளிக்கப்படுவதில்லை. அந்த பாடத்தில் தேர்ச்சியா தோல்வியா என்பதுடன் சஸ்பென்ஸ் முடிந்துவிடும். தேர்ச்சி. அவ்வளவுதான்.  

முதிர்ச்சியடையாத நாட்களில் எழுதப்பெற்ற என்னுடைய முதல் விமர்சனம் என்பதால், அந்த தேர்வின் விடைத்தாளை யாரேனும் ஒரு நகல் பெற்று கொடுத்தால், கருமாத்தூர் காட்டுக்குள்ளே கறிவிருந்து அளிக்கலாம் என்ற உறுதியளிப்பை இங்கு நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.   


ஞாயிறு, நவம்பர் 21, 2021

ஜெய் பீம்

எழுத்து, ஓவியம், தெருக்கூத்து, நாடகம், பாடல், சினிமா என கலை  எந்த பரிமாணத்தில் இருந்தாலும் அது இயல்வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வந்துள்ளது. மகிழ்ச்சி, துக்கம், பெருமை, கோரிக்கை என  உணர்வுகளை ஒத்திசைத்து வெளிப்படுத்தும் ஆயுதமாகவே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஒளியும் ஒலியும் இணைந்த நாட்கள் முதல் சினிமா அதில் முன்னோடியாகிவிட்டது. ஏலக்காய் அறுவடை செய்யும் குடும்பத்தின் எளிமையான வாழ்க்கையை, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை அருகில் இருந்து பார்க்கும் உணர்வை சினிமாவைத்தவிர அவ்வளவு அழுத்தமாக நமக்கு வேறு எதுவும் கடத்தியிருக்க முடியாது.    

அதுபோலவே வரலாறும். இன்னும் சொல்லுவதென்றால் வரலாற்றின் சாட்சியாகவே பல சிறந்த படைப்புகள் சினிமாவில் இருக்கிறது. அதுபோன்ற மறந்துவிடக்கூடாத ஒரு வரலாற்றின் சாட்சி தான் 'ஜெய் பீம்'. நல்ல படைப்பாளியை, மனிதர்களை அடையாளப்படுத்தி காட்டுவதிலும் வெகு ஜனத்திடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் விகடன் என்றுமே நம்பர் ஒன். நீதியரசர் சந்துரு ஒய்வு பெற்ற போது அவரை பற்றி, அவரது சாதனைகளை எடுத்துரைத்து ஒரு கவர் ஸ்டோரியுடன் பிரியாவிடை அளித்திருந்தது. அந்த  கட்டுரை வராவிட்டால் என்னளவில் அவர் மற்றுமொரு நீதிபதியாகவே  இருந்திருப்பார். எளிய மக்களுக்கு உதவும் நீதியரசியராக எனக்கு அறிமுகமாயிருக்கமாட்டார்.


ரியல் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா. கதையின் முக்கியத்துவம் கருதி தயாரிக்க முன்வந்து காத்திரமான நடிப்பையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். இருளர் ராஜ்கண்ணுவாக மணிகண்டன் கச்சிதமான தேர்வு. திரைக்கதையின் சுவாரசியம் பொருட்டு வழக்கின் முக்கிய முடிச்சுகள் சாட்சிகள் விசாரிக்கப்படும் வரிசையிலேயே அவிழ்க்கப்படுகின்றன. மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு விறுவிறுப்பான ஒரு கோர்ட்ரூம் டிராமா. அதுவும் நிஜ நிகழ்வுகள் என்பது நம்மை கலங்கடிக்கின்றது.

படத்தின் ஆரம்ப வசனங்களே பார்வையாளராகிய நம் மீது அணுகுண்டை எரிகிறது. ஆதிக்க சாதி மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி பெயர்களை வெளிப்படையாக பேசிய அளவில் கவனம் ஈர்க்கிறது. போய் கேசுக்காக போலீஸ் நடத்தும் பேரம், அரசாங்க கட்டமைப்பின் அவலம். "குடிசையை கொளுத்த எவ்வளவு நேரம் ஆகும்" போன்ற வசனங்கள் ஆதிக்க சாதியின் மனோபாவத்தை தைரியமாக துகிலுரிக்கின்றன. வீட்டில் ஒளிந்திருக்கும் பாம்பை பிடிக்க தேவைப்படும் இருளர்கள் தோளைக்கூட தொடக்கூடாது, திருட்டு வழக்குகளில் முகாந்திரம் இல்லாமல் இருளர்களை பிடித்துப்போடுவது காவல்துறைக்கு ஒரு வழக்கமாகவே இருந்துள்ளது என்பதும், சாதியை மேற்கோள்காட்டி திருட்டுப்பட்டம் கட்டுவது, மேலும் கேட்க நாதி இல்லாத காரணத்தால் இருளர்கள் மீது பொய் வழக்கு போடுவது போன்றவையும் சகிக்க முடியாத சமூக அவலங்கள். அதை எதிர்த்து எதிர்வினையாற்றாமல் மெளனமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அந்த குற்றங்களுக்கு துணை போனவர்கள்தாம். வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்த இவர்களின் வரலாற்றை மறந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டிய செய்தி. இதுபோன்ற சமூக   அவலங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்துவதில் முனைவர்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் மிகவும் பயன்டுகின்றன.

சட்டம் மட்டும் இயற்றப்படவில்லையென்றால் சமூதாயத்தில் இன்றளவும் பலமக்கள் சாதனை புரிய வழியில்லாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களாகவே இருந்திருப்பார்கள். நீதிபதி சந்துரு போன்ற பல தனிப்பட்ட மனிதர்களின் அர்பணிப்பான உழைப்பே மக்களுக்கு தைரியம் அளிக்கும் ஆயுதமாக இருக்கிறது. 1995இல் இருளர் வாழ்வுரிமை காக்கும் சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. எங்கெங்கெல்லாம் மக்கள்  ஒடுக்கப்பட்டார்களோ அங்கெங்கெல்லாம் தங்களை போராடி மீட்டெடுக்க சங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக போராடுவதற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் உழைப்பை நன்றியுடன் நினைவுகூறும் பொருட்டே 'ஜெய் பீம்' என்கிற தலைப்பு. தமிழ் மொழியில் கதைக்கேற்ற தலைப்புடன் வெளிவந்த  சினிமாவில் ஆகச்சிறந்த தலைப்பாக இதை கொள்ளலாம். 

சட்டத்தின் மூலம் நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையை தூவியிருப்பது இந்த வழக்கின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை காட்சிப்படுத்தி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த விதத்தில் ஜெய் பீம் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிபெற்றிருக்கிறது

 மதமும் சாதியும் ஒழிந்து மனிதம் மலரட்டும்.   

 ஜெய் பீம்!!!

கனவு மெய்ப்படவேண்டும்

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செய்தி அவ்வளவு எளிதில் ஜீரணிக்கமுடியாதது. நண்பியின் தாத்தா என்றெல்லாம் குறிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பேத்தியின் சக தோழியை, தன் பெண்ணைப்போல பள்ளிக்கு கல்வி பயில வந்த மாணவியை போகப்பொருளாக பார்த்த பார்வை நமது சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை பறைசாற்றி முகத்தில் அறைகிறது. தற்கொலை முடிவை எடுக்கும் முன் பெற்றோர், பள்ளி தாளாளர் என்று அனைவரிடத்திலும் தன் இன்னல்களைத்தெரிவித்திருக்கிறார். எங்குமே தீர்வு கிடைக்காத விரக்தியில் அந்தத்தளிர் தன்னை தானே பொசுக்கிகொண்டுள்ளது.

மூன்று மாதத்திற்கு முன் கல்வி அமைச்சரின் நெருங்கிய சகா ஒருவர், இதுபோன்ற பள்ளியில் நிலவும் குறைகளைத்தெரிவிக்க ஒரு Toll Free நம்பரை நிறுவும் ஆலோசனையில் அமைச்சர் ஈடுபட்டிருப்பதாகத்தெரிவித்திருந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரைத்தொடர்பு கொண்டேன். Toll Free அழைப்பில் புகார் அழைப்பு மற்றும் குரல் பதிவு செய்யப்படுவதால் இந்த செயல்பாடு வரவேற்பைப்பெறுமா என்ற ஆலோசனையில் காலம் தாழ்ந்துவிட்டது என்று வருந்தினார்.
என்னைப்பொறுத்தவரை இரண்டே தீர்வுகள். ஒன்று, இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை பகிரங்கமாக தண்டிப்பது. இதற்கு அரசின் ஒத்துழைப்பும் சட்டசீர்திருத்தமும் செயல்படுத்தப்பட வேண்டும். இரண்டாவது மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கையில். குட்டக்குட்ட குனியாமல் மனதில் பயத்தை அகற்றி துணிவுடன் வெளிப்படையாக எதிர்ப்பது. கீழ்த்தரமாக நடக்கும் ஒரு உயிரினத்திற்கே இந்த வையகத்தில் வாழ வழி இருக்கும்பொழுது, பார் வியந்து போற்றும் சாதனைகளை புரிய காத்திருக்கும் மாணவர்கள், தற்கொலை தான் நிரந்தரத் தீர்வு என்ற முடிவை கைவிட்டு தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பிதாகரஸ் தியரத்துடன் ஆளுமைத்திறன் பயிற்சி கட்டாயமாக்கப்படவேண்டும். கல்விக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, அதற்குத்தானே பள்ளி என்ற கற்பிதங்களை களைந்துவிட்டு, குழந்தைகளின் குறைகளை அருகில் அமர்ந்து செவிமடுக்க, மறுவினை புரிய, உறுதுணையாக இருக்கிறோம் என்று நம்பிக்கையூட்ட பெற்றோர்கள் முன் வரவேண்டும்.
கனவு மெய்ப்படவேண்டும்

ஞாயிறு, நவம்பர் 07, 2021

அவங்க வீட்டுபிள்ளை

ஒரு பக்க அளவில் உள்ள கற்பனையான 200 வார்த்தைகளால் என்ன கொடுத்துவிடமுடியும்?

ஆண்டாண்டுக்கும் ஏன் தலைமுறை தாண்டியும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய, காலச்சக்கரத்தில் உறைந்துபோன உண்மைச்சரித்திரத்தை பரிசாக கொடுக்க முடியும். 

5 வார்த்தைகள். அதை கோர்வையாகத்தொடுத்து 200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு புனைவு வரையும் போட்டி. பதினைந்து நிமிடங்களில் புனைந்தது. போட்டியில் முதல் பரிசை தட்டி வந்துள்ளது. பரிசாக 'காவல் கோட்டமும்,  வால்கா முதல் கங்கை வரை' புத்தகங்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேர்வர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். 

இந்த ஐந்து வார்த்தைகளை தொடுத்து சமைத்த கதை கீழே. 

அவங்க வீட்டுபிள்ளை 

தமிழழகனுக்கு அந்த காலை அவ்வாறு விடியும் என்று அவனே எதிர்பாராதது. இரவு அவனோடு படுத்து உறங்கிய இளைய மகன் நேயனை காணவில்லை. அவனது குடும்பமே அந்த நடைபாதையில் தான் படுத்து உறங்கும்.  பக்கத்து தெருவில் இருந்த பாழடைந்த பங்களாவை  உறைவிடமாக்கிக்கொள்ளாலாம் என்று கூறியபோது அது அவனது மனைவி இலக்கியாவுக்கு பிடிக்கவில்லை. ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் மீனாட்சி கோடு கிழித்தபின் சுந்தரேஸ்வரர் அதைத்தாண்டுவதில்லை எனும்போது தமிழழகன் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வழியாக செல்வோர் போடும் மீந்த உணவை உண்டுதான் அந்த குடும்பமே உயிர் வாழ்ந்தது. பெரிசாக சொல்லிக்கொள்ள உறவுகள் ஏதும் இல்லாததால் அந்த நடைபாதையே கதி என்று அந்த குடும்பம் கிிடந்தது.

இருந்தாலும் இளைய வளவல் என்ற காரணத்தினால், நேயனை முழு அன்போடு அந்த குடும்பம் நேசித்தது. மனைவி இலக்கியாவுக்கு இதுவரை மூன்று முறை பிரசவம் ஆகியிருந்தது. எல்லாமே இதே நடைபாதையில் நடந்த சுகப்பிரசவம். அதிலே நேயன் தான் கடைக்குட்டி. பிறந்ததிலிருந்து பாலைத்தவிர வேறு எதுவும் குடிததில்லை. அதுவும் ஒரு பெரியவரின் கரிசனத்தில் கிடைக்ககும் வேதா பாக்கெட் பால். ஜில்லென்று இருக்கும் பாக்கெட்டை பல்லாலேயே கடித்து குடித்துவிடுவான் நேயன். குடும்பமே எச்சில் உணவுகளை உண்டாலும், நேயனுக்கு எப்போதுமே இந்த பாக்கெட் பால் தான்.  அவ்வளவு அன்புடன் சீராட்டி வளர்த்த நேயனின் பிரிவு அந்த குடும்பத்தையே அந்த காலை வேளையில் புரட்டி போட்டிருந்தது.

தமிழழகனும் இலக்கியாவும் நாலு கால் பாய்ச்சலில் நேயனைத்தேட ஆரம்பித்தனர். எதிரில் தென்பட்ட இளங்கிள்ளி மற்றும் எழில்வேந்தனிடம் விசாரித்தனர்.  வயதான அந்த இருவர் தான் ஒருவகையில் அந்த தெருவுக்கே பாதுகாப்பு.  இருவரும் தெரியாது என்று சொல்லவும் இலக்கியா ஓடாது நிற்கும் காருக்கு அடியில் உறங்கி கொண்டிருக்கும் உணர்வுக்கினியாள் மற்றும் குணமங்கையிடம் நேயனின் பிரிவை தாளாது அரற்றினாள். ஆனால், தமிழழகன் அவனது உள்ளுணர்வின் பேரில் அந்த பாழடைந்த பங்களாவை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் வேகமாக ஓடினான். அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு நேயன் கிழிந்து போன பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். 

நேயன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ‘லொள், லொள்’ என்று உரக்க குறைத்துக்கொண்டே அந்த நாய்கள் குடும்பம், மீண்டும் நடைபாதையை நோக்கி  ஓடத்தொடங்கியது.


அந்த ஐந்து வார்த்தைகள் - "குடும்பம்-உறவு-அன்பு-பிரிவு-மகிழ்ச்சி"


வியாழன், நவம்பர் 04, 2021

SOP - Four Lane - நிலையான வளர்ச்சி

கடந்த மாதம், என்னுடன் முந்தைய நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு நண்பர் reference லெட்டர் எழுதிக்கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். Reference லெட்டர் எழுதுற அளவுக்கு எனக்கு வயது ஆகவில்லையே என்ற அதிர்ச்சியில் என்ன ஏது என்று விசாரித்தபொழுது வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கப்போவதாகவும் அதற்கு படிப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்டவர்கள் reference கொடுக்க வேண்டும் என்றும் விளக்கினார். நீங்கள் என்னுடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் என்னைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இந்த படிப்புக்கு நான் எவ்வாறு உகந்தவனாக இருப்பேன் என்பதையும் எழுதலாம் என்றும் கூறினார். மேலும் எதற்காக அந்த படிப்பை நாம் தேர்ந்தெடுத்தோம் என்று ஒரு SOP (Statement of Purpose), இந்த படிப்பினால் என்ன வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுவீர்கள், இந்த படிப்பின் மூலம் உங்கள் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு உதவிகரமாக இருப்பீர்கள், என்ன முன்னேற்றத்தை கொடுப்பீர்கள் என்று பல கேள்விகள்; அதற்கு தோராயமாக 500 வார்த்தைகளில் கட்டுரை எழுதி விண்ணப்பபடிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விளக்கினார். அடேங்கப்பா என்றிருந்தது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று கூறும் நாம் அவர்களை நெறிப்படுத்த என்ன முயற்சிகளை எடுத்தோம் என்று யோசித்திருக்கிறோமா?. அதுகூட வேண்டாம். நாம் படிக்கும் படிப்பை விரும்பிதான் தேர்ந்தெடுக்கிறோமா?, அந்தத்துறையில் என்ன முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறோம் என்று குறிக்கோளுடன் தான் நாம் நம்முடைய கல்லூரியில் காலடியெடுத்து வைத்தோமா என்றால், 99 சதவீதம் இல்லை என்றே பதில் வரும். 

நிற்க. 



கடந்த வாரம் எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஒரு விபத்து நடந்தது. நால்வழிச்சாலையில் மீடியனை தாண்டும் நேரத்தில் கவனக்குறைவாக எதிர்புறமாக பார்த்தது சாலையைக்கடக்க இறங்கியபோது டேங்கர் லாரியில் அடிபட்டு ஒரு பெண் இறந்துவிட்டார். மிக வருந்தத்தக்க இந்தத்துயரச்செய்தியால் வட்டாராமே சோகத்தில் மூழ்கியது. இதுசம்பந்தமான செய்தி வாட்சப்பில் வந்ததால் விழிப்புணர்வு பொருட்டு வீட்டுக்கருகில் குறுக்கு மறுக்காக சாலையில் ஓடி விளையாண்டுகொண்டிருந்த சுட்டிகளை கூப்பிட்டு கொஞ்சமே கொஞ்சமாக விளக்கிக்கூறினேன். சேர்ந்தாற்போல் எல்லோரும் 'உச்' என்று வருத்தப்பட்டனர். அதில் ஒரு வாண்டு கூறியது, "ஏன் நாம வேகமாக போற வண்டிக்கு தனியா, பஸ்ஸுக்கு தனியா, இதுமாதிரி நடக்கிறவங்களுக்கு தனியா ரோட் போட்ருக்கலாமே. அப்புறம் இந்த மேல ஏறிப்போவாங்களே, அது மாதிரி இரும்புல ஒரு பாலம் போட்டா இந்தமாதிரி ஆக்சிடென்ட் நடக்காதுல்ல" என்று கூறியது. வயது ஏழிருக்கலாம். ஒரு விபத்து, அந்த நிகழ்வை எதிர்கொண்டு வருந்தி கடந்தவிதம், பின் அதற்கு BRTS (Bus  Rapid  Transit  System), Foot over Bridge என அதற்குத்தெரிந்த மொழிகளில் ஒரு தீர்வையும் இரண்டு நிமிடத்தில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது அந்த சுட்டி. 

என்ன ஜாதி, என்ன கேட்டகிரி, என்ன மதம் என்று அப்பிளிக்கேஷன் பாரத்தில் நாம் நிரப்பும் வரையும், குழந்தைகளின் திறமை எதில் உள்ளது? அதில் அவனை/ளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று பெற்றோர்கள் யோசிக்காத வரையிலும் நாட்டின் முன்னேற்றம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.  

குழந்தைகள் என்னவோ இந்த சமூகத்தின் பிரச்சினைக்கான தீர்வுகளையும், நாட்டின் வளத்தை முன்னேற்றும் திட்டங்களையும் இயற்கையாகவே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் பணித்து முளையிலேயே கருக்கிவிடுகிறோம்.

என்னங்க சார் உங்க சட்டம்

இந்த ஹோட்டல் புதுசா இருக்கே? சாப்டீங்களா? நல்லாருக்கா? அப்டினு கேட்டா, அந்த நண்பர் சொல்ற பதில் சுவாரஸ்யமா இருக்கும். "அது எப்படி இருக்குன்னே தெரில. அதுல நம்ம போய் முதல்ல சாப்பிடறத விட யாரவது ஒருத்தர் சாப்பிட்டு நல்லாருக்கா நல்லால்லைய்யான்னு சொல்லுவாங்க. அப்ப போய்க்கலாம்" அப்டின்னுவார்.

அது மாதிரி "என்னங்க சார் உங்க சட்டம்?" படத்தோட ட்ரைலர் பாத்தபோது, இந்த படத்த யாராவது பாத்துட்டு நல்லாருக்கா? இல்லையானு சொல்லுவாங்கனு வெயிட் பண்ணி பார்த்தேன். சுக்கிரன் உச்சத்துல இல்ல போல. ட்ரிக் ஒர்க் அவுட் ஆகல. OTT  ல பார்த்தாச்சு.

இவ்ளோ அனல் தெரிக்கிற வசனங்கள் கொண்ட இந்த படத்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தால் கண்டிப்பாக போராட்டம் வெடித்திருக்கும். OTTயில் வெளியானதால் கவண் ஈர்க்க தவறிவிட்டது. 



ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் படம் எடுத்த விதம் மற்றும் பேசுபொருள் இரண்டுமே அதகளம்.

முதல் பாதியில் ஹீரோவின் கலகலப்பான அலப்பறைகள். ஒவ்வொரு சீனுமே ப்ரெஷ். அதுவும் ரோகிணியின் ஜெனிலியா காமெடி சற்றும் எதிர்பார்க்காத ஆயிரம் வாலா சரவெடி. ஜாலியா ப்ரெஷ்ஷா ஒரு படம் எடுக்கமுடியுமா என்ற சவாலுக்கு பதிலாக முதல் பாதியை இயக்குனர் படைத்திருக்கிறார். இரண்டாவது பாதி முழுவதும் அரசு மற்றும் சமூகத்திற்கான சாட்டையடி. முதல் பாதியில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் இரண்டாவது பாதியில், ஆனால் முற்றிலும் வேறொரு பரிணாமத்தில், அதுவும் கனகச்சிதமாக. 

ஒரு பக்கம் ஏழை சவுண்டி பிராமணன் சமூகத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களும் மறுபக்கம் பட்டியல் வகுப்பினர் சமூகத்தில் வதைபடும் காட்சிகள் என கொஞ்சம் சறுக்கினாலும் ஏதாவது ஒரு பக்கம் எல்லை மீறிவிடும் என்பது மாதிரியான cat on the wall திரைக்கதை. ஆனாலும் இரு பக்கமும் perfect balance. "குரல்ல தெய்வீகம் னா" என்றும் "நீ என் பிரென்ட் டா, உனக்குனா செய்றேன் கண்டாவாக்கெல்லாம் செய்ய முடியாது" என்ற இரண்டுமே தரமான கிச்சுகிச்சு சீன்ஸ். நடுவில், "உங்களுக்கும் சேர்த்துதாண்டா அவன் போராடறான்" என்று OBC க்கு ஒரு குட்டு.

ஏழை பிராமணன் என்றால் மற்றவரைக்காட்டிலும் உயிரைக்கொடுத்துதான் படிக்கவேண்டும், நாங்க போடுற காச மட்டும் ஏத்துக்குற கடவுள், நாங்க அர்ச்சனை பண்ணினா ஏத்துக்காதா, கருவறைக்கு உள்ள இருக்குறது மட்டும் தான் சாமி, மத்தவங்கள சாமின்னு கூப்பிட்றத நிறுத்துங்க, சாதிய ஒழிக்க முடியாது, அது சாமியோடு கலந்துடுச்சு போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலம். அதுவும் ரோகிணியின் பேரன் கேட்கும் "ஸ்விம்மிங் கத்துக்கிட்டவங்களாம் கடுப்பாக மாட்டாங்களா?" என்ற அந்த ஒரு கேள்விக்கு அரசாணை இயற்றிய அரசே விழிபிதுங்கும். 

பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் இயக்குனர் முன்வைக்கிறார். அதாவது கோட்டா சிஸ்டத்தை பயன்படுத்தி பலனடைந்த பின்பு தங்கள் வாரிசையும் அதே கோட்டா சிஸ்டத்தில் பலனடைய செய்யக்கூடாது. அதே சாதியில் உள்ள மற்றொருவருக்கு அந்த வாய்ப்பைத்தர வேண்டும் என்பதே அது. எப்படி கடவுளுடன் சாதி கலந்துவிட்டதோ, அதுபோலவே ஆட்சியிலும் சாதி வேரூன்றிவிட்டது. சாதிமத வாரியாக கணக்கெடுத்து நடத்தப்படும் இந்த ஓட்டரசியலில் இது இந்தியாவில் எட்டாக்கனி தான். 

ஒரு சில குறைகள் தெரிந்தாலும், முதல் படத்திலேயே சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லியதற்கு அதுவும் அரசுக்கு ப(பா)டம் எடுத்ததற்கு, புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராமனுக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம்.  

EWS மட்டுமே கோட்டா சிஸ்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குனர் மற்றும் நம்முடைய அவா.