வெள்ளி, ஜூன் 30, 2023
நட்பு
செவ்வாய், ஜூன் 27, 2023
பாவக்கதைகள்
கொஞ்சம்
லேட் தான் என்றாலும் worth watch.
OTT வந்தது தான் வந்தது. ஊர்பட்ட வெபசீரிஸ்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
அத்தனவற்றையும் பார்க்காமல் குற்ற உணர்ச்சி வேறு மேலிடுகிறதை தவிர்க்க
முடியவில்லை.
அந்த
வரிசையில் பாவக்கதைகள் பேசப்படவேண்டிய ஒன்றுதான்.
நான்கே
நான்கு எபிசோட் தான். ஒவ்வொன்றும் பிரபலமான இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கிறது.
சுதா கோங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன்.
சுதா
கோங்குராவின் கதை ஒரு திருநங்கையை பற்றியது. திருநங்கையாக காளிதாஸ் ஜெயராம். எந்த
காரணமும் இன்றி திருநங்கையாக உணர ஆரம்பித்த தருணம் முதல் ஊரே அவனை
ஒதுக்கிவைக்கிறது. அவன் மீது நட்பாக இருக்கும் சாந்தனுவையும் ஊர் கேலி பேசுகிறது.
சாந்தனு ஊரில் இல்லாத நாளில் அவனை கொன்றுவிடுகிறார்கள். பெற்றோர் உட்பட இதற்கு
உடந்தையாக இருப்பது நமது சமூகம் திருநங்கைகள் மீது கொண்டுள்ள பேதத்தை பிரகடனம்
செய்கிறது. திருநங்கையின் நட்பை, உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இது ஒரு
முக்கியமான படைப்பாகிறது.
விக்னேஷ்
சிவனின் எபிசோட் ஜாலியாக சென்றாலும் அப்பாவே மகளை கொள்ளும் அந்த ஒரு நிமிடம்,
சாதி வேரூன்றிருக்கும் ஆழத்தை அகழ்ந்து
காணிக்கிறது. எப்பொழுதும் போல ட்விஸ்ட் எண்டிங் க்ளைமாக்ஸ். சுவாரஸ்யமான
கதாபாத்திரங்கள் என கலகலப்பான ஒரு எபிசோட். கல்கி கோச்செலின் தன் பெயரை சொல்லும் நேரம் குபீர் சிரிப்பு
கியாரண்டி.
கௌதம்
மேனனின் கதை கொஞ்சம் சென்சிடிவ் சப்ஜக்ட். இயக்கி நடித்திருக்கிறார்.
கடைக்குட்டியான ஏழாம் வகுப்பு படிக்கும் பொன்னுத்தாயி மேல் உயிராய் இருக்கிறார்.
ஒரு கும்பலால் அந்த சிறு குழந்தை கற்பழிக்கப்படுகிறது. என்னவென்று விவரம் அறியாத
வயதில் ஏற்படும் இந்த ரணத்தை களைய குடும்பம் தடுமாறுகிறது. 'அவள் முன்பு நிர்வாணமாக நிற்பதைப் போன்று உணர்கிறேன்' என்று கெளதம் சொல்லும் இடம் இன்னும் இறுக்கமாகிறது. இரண்டு காலுக்கு
நடுவில் இல்லை கௌரவம், அது சிறகை விரித்து உயர்ந்து
பிறப்பதில் தான் இருக்கிறது போன்ற காத்திரமான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
வெற்றிமாறனின்
'ஓர் இரவு' எபிசோட் நம்பிக்கை துரோகத்திற்கு அத்தாட்சி. காதல் திருமணம்
செய்துகொண்ட மகள், சாதி பெருமை பேசும் தன் வீட்டை விட்டு
ஓடிவிடுகிறாள். சந்தோஷமாய் காலம் தள்ளும் மகள் சாய்ப்பல்லவியைத் தேடி தந்தை
பிரகாஷ் ராஜ் வருகிறார். பழசை மறந்து தன்னோடு வீட்டுக்கு வா என்கிறார். நிறை மாத
கர்ப்பிணிக்குபிறந்த வீட்டில் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று அழைக்கிறார்.
தயக்கத்துடன் வரும் சாய்ப்பல்லவிக்கு அவள் பிறந்த வீட்டிலேயே நேரும் துயரம்
கொடூரமானது. நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்
மேலதிக பதைபதைப்பை நமக்குத் தருகிறது.
நான்கு
எபிசோடில் எது மேல் கீழ் என்று பார்க்க மனமில்லை. ஏனெனில் ஒவ்வொரு எபிசோடும்
எடுத்துக்கொண்ட பேசுபொருள் நீங்களும் நானும் அவதானித்து விவாதிக்க வேண்டிய ஒன்று
தான்.
10/10
ரெட் புல் - டாரின் - இளையராஜா
என்னடா மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று தானே பார்க்கிறீர்கள். விஷயம் இருக்கிறது.
Taurine என்று ஒரு வஸ்து இருக்கிறது. அமினோ ஆசிட் என்று சொல்லலாம். காளைகளின் விந்தணுக்களில் இது அபிரிதமாய் உண்டு. Taurine ஸ்பேஷாலிடிட்டியே அது ஒரு எனர்ஜி பூஸ்டர் என்பது தான்.
ரெட் புல்லில் Taurine இருக்கிறது. அதற்காக காலைகளிடம் இருந்து அது பெறப்பட்டது என்று திகைக்க வேண்டாம். ஆராய்ச்சி கூடத்தில் சிந்தசைஸ் செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் கண் விழித்து வேலை பார்ப்பவர்கள் இதனை குடிப்பார்கள். தூக்கம் அவ்வளவு எளிதாக வராது. Caffeine சமாச்சாரம் அதிகம் உண்டு என்ற காரணத்தினால் இன்னும் அதிகமாக உற்சாகம் கொள்ள வைக்கும்.
அதற்கு சற்றும் குறைவில்லாத எனர்ஜி மற்றும் உற்சாகத்தைத் தருவது இளையராஜா இசை. இரவு நேரங்களில் மட்டும் கேட்டுவிட்டால் அவ்வளவுதான். தூக்கம் கெட்டது. சாமக்கோழி போல் முழித்து கொண்டு இருக்க வேண்டிதான். என்ன ஒரு composition. ஒவ்வொன்றும் ஒரு ரகம். ராகம்.
ராஜா ராஜா தான்.
சனி, ஜூன் 17, 2023
மாலை நேர மல்லிப்பூ
#malaineramalipoo #Ashwin #vinithramadhavanmenon
வியாழன், ஜூன் 15, 2023
2018
படத்தின் பெயரும் 2018. அந்த வருடம் கேரளா மிகப்பெரும் மழையை
எதிர்கொண்டது. மிகப்பெரும் என்றால் 100 ஆண்டுக்குப் பிறகு அப்படி ஒரு பேய் மழை. சாதாரணமாகவே
நன்றாக மழை பெய்யும் கேரளாவில் 100 சதவீதம் அதிகம் மழை பெய்தால் எப்படி இருக்கும்? விளைவு...
3000த்துக்கும் அதிகமான முகாம்கள், 12 லட்சம் மக்கள் அகதிகளாக, கிட்டதட்ட 500 பேர் வரை உயிரழப்பு. கேரளாவின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு சதவீதம் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருக்கின்றனர். பல மாகாணங்களில் ரெட் அலர்ட் சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1924க்குப் பிறகு இப்படி ஒரு பேரழிவு.
படம் இதைப்பற்றி தான் என்றாலும் ஒரு பாசிடிவ் நோட்டுடன் படத்தை
கொடுத்திருக்கிறார்கள். படத்தின் டேக் லைன் மிகவும் ஈர்த்துவிட்டது. Everyone is a Hero. ஆமாம்.
உண்மையில் வெள்ளம் வந்தபோது தன்னுயிரையும் மதிக்காமல் இறங்கி சக மனிதர்களை மீட்ட ஒவ்வொருவரும்
ஹீரோ தான்.
குஞ்சக்கோ போபன், கலையரசன், நரேன், லால், டொவினோ தாமஸ், வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, சுரேந்திரன் என ஒரு நச்த்திரப் பட்டாளமே
ஈகோ இன்றி நடித்திருக்கிறது. இந்தப்படம் கேரளா மக்களுக்கு ஒரு சமர்ப்பணமாக எடுத்திருக்கிறார்கள்
என்றே புரிந்து கொள்ள முடிகிறது.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மழை பெய்துகொண்டே இருக்கிறது.
ஊரெல்லாம் வெள்ளம். இதில் எதைக் காட்சிப்படுத்துவது? வெள்ளத்தால் ஏற்படும் பேரழிவை கிராபிக்ஸ்
போட்டு ஒரு பிரம்மாண்ட படமாக காமித்திருக்கலாம். ஆனால் ஜுட் அந்தோனி ஜோசப் அதை செய்யவில்லை.
மாறாக அப்படி ஒரு பேரழிவை சமூகம் சந்தித்துக்கொண்டிருந்த வேளையில் மலர்ந்த மனிதநேயத்தை
மிக நெருக்கமாக நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தைக்கொண்டும்
ஒரு தனி சினிமாவாக எடுக்கலாம் என்று சொல்லுமளவுக்கு மிக நேர்த்தியான கேரக்டரைசேஷன்.
நெகிழ்வு, நெகிழ்வு மற்றும் நெகிழ்வு தான் படம் முழுவதும். நாம்
பத்த்தில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் அவ்வளவு நெகிழ்வாக இருக்கின்றனர். பார்த்தவுடன்
பற்றிக்கொளும் ஒரு உற்சாகத்துடனே உலாவுகின்றனர். ஒரு நிறைமாதப் பெண்ணை எர்லிஃப்ட் செய்யும்
காட்சி அவ்வளவு தத்ரூபமாக. காலுடைந்த மன வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனை மீட்கும் காட்சி, மண்ணில் புதைந்த ஒரு குடும்பத்தையே மீட்பது, படகுகளையெல்லாம்
ஒரே இரவில் லாரியில் ஏற்றி மீட்புப் பணிக்காக அனுப்பி வைப்பது, கலையரசன் தான் குழந்தையிடம் அன்பாகப் பேசும் தருணம் என இன்னும் எல்லாமே அவ்வளவு
அன்பு ததும்பும் காட்சிகள்.
‘நான் இருக்கிறேன்’ என்ற ஒரு வார்த்தையில் மனித சமுதாயம்
மீண்டெழுந்து வருகிறது என்பதை தத்ரூபமாய் நம்மிடம் நிரூபிக்கிறது இந்த 2018.
அவசியம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சினிமா.
செவ்வாய், ஜூன் 13, 2023
ரியல் ஹீரோ
ஒவ்வொரு
முறை சோர்ந்து போகும்பொழுதும் அத்தியாவசிய பணியில் தினமும் வேலை செய்து கொண்டு
இருப்பவர்களைப் பார்த்து துவண்டு விடாமல் தாராளமாக உற்சாகம் கொள்ளலாம்.
தூய்மைப்பணியாளர்கள் கூட வாரத்தில் ஒரு முறை விடுமுறை எடுப்பது போல் தெரிகிறது.
ஆனால் பால் மற்றும் தினசரி நாளிதழ் போடுபவர்கள் வருடத்தில் ஒரு முறையேனும்
விடுப்பு எடுத்து கண்டதில்லை.
போட்டோவில்
இருப்பவர் தான் தினசரி பேப்பர் போடும் நபர். பேப்பர் போடுவதற்காகத் தெரு
தெருவெல்லாம் சுற்றுவார்கள் என்று மட்டும் புரிதல் இருந்தது. ஆனால் அதை கண்கூடாக
பார்க்கும்பொழுது....
மிதிவண்டியில்
தான் பேப்பர் போடுகிறார். ஒரு நாள் அதிகாலை எங்கள் வீட்டிற்கு பேப்பர்
போட்டுவிட்டு சென்றார். அன்று ஒரு வேலை நிமித்தமாக எங்கள் வசிப்பிடத்திலிருந்து
ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் மற்றொரு இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கும்
பேப்பர் போட்டு கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் மிதிவண்டி
அழுத்திக்கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் புன்னகைத்தார். அருகில் சென்று
உங்களுக்கு எந்த நோயும் வராது சார் என்று முறுவலித்துவிட்டு கடந்துவிட்டேன்.
அதுமட்டுமில்லாமல் காலை எட்டுமணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை கம்பெனிக்குள் காண்ட்ராக்ட் தொழிலாளராக பணிபுரிகிறார்.
பிறிதொரு
நாள் யோசித்துப்பார்க்கையில் இவர் கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் இதை எவ்வாறு தினப்படி
செயகிறார் என்று ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு நாள் பணம் வாங்க வந்தவரைப் பிடித்து
உட்காரவைத்து கேட்டே விட்டேன்.
'காலைல
அஞ்சு மணிக்கு கிளம்புவேன் சார். வீட்டம்மா
நைட்டே சாப்பாடு கட்டி வச்சிடும். தோசை, இட்லி கட்டி வச்சிருக்கிற அன்னைக்கு மட்டும் பேப்பர் போட்டுட்டு
கம்பெனிக்குள்ள போய் கேன்டீன்ல சாம்பார் சட்னி வாங்கி சாப்பிடுவேன். கூழ்
இருந்துச்சுன்னா உப்பு போட்டு குடிச்சிடுவேன். வீட்லேந்து இந்த ஏரியா வரதுக்கு ஏழு
கிலோமீட்டர். பேப்பர் போடுற ஏரியா பாத்தோம்னா சுத்தி சுத்தி ஒரு பத்து கிலோமீட்டர்
வந்துடும். ஒரு நாளைக்கு 25லேந்து 30 கி.மீ. வரைக்கும் சைக்கிள் ஓட்டுவேன்.
கம்பெனிக்குள்ள சொல்ற வேலை செய்றேன். சாயந்தரம் போகும்போது பத்து பதினைஞ்சு
வீட்டுல பேப்பர் கணக்கு பண்ணி பணம் வாங்கிட்டு போயிடுவேன். ரெண்டு பொண்ணு சார்.
ஒன்னு இன்ஜினியரிங். இன்னொன்னு BCA. ரெண்டு
பேரும் கல்யாணம் பண்ணி கொடுத்து இப்போ மூணு பெயரன் பேத்தி இருக்காங்க. வயசான
காலத்துல முடிஞ்சா நம்மள வச்சி கூழ் ஊத்தட்டும். பெருசா ஒன்னும் தேவை இல்லை.
ரெண்டு தோசை சுட்டு கொடுத்தா போதும். சொந்த வீடு தானே. முப்பது வருஷம் ஓடிடுச்சு'
என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.
எனக்கு
'பக்' என்று
இருந்தது. வெகு சாதாரணமாக ஒரு வாழ்வாங்கு வாழ்க்கையை கையாண்டு கொண்டிருக்கிறார்.
முப்பது வருடமும் இதே ரொட்டின் வேலை என்றால் ஒரு மாதத்திற்கு 750கி.மீ சைக்கிள்
மிதிக்கிறார். இந்த முப்பது வருடமும் சேர்த்தால் 2,70,000 கி.மீ. ஒரு பேச்சுக்கு
2,00,000 கிலோமீட்டர் என்று எடுத்துக் கொண்டால்
கூட அசாதாரணமான எண்ணிக்கை தான். உடல் நலத்திற்கு உடல் நலம். மன நலம் என
ஆரோக்யமான ஒரு lifestyle. எளிமையான எந்த வித பெருத்த
எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு வாழ்க்கை. தினம் தினம் உத்வேகம் அளித்து
அசரடிக்கின்றனர் இதுபோன்ற எம்மக்கள்.
நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்து
பார்க்க வேண்டிய களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். கோடி
தூரம் ஓடி களைத்தாலும் ஆற அமர உண்டு களிக்கிறோமா என்பதை நிதானித்து உறுதிபடுத்திக்
கொள்ளவேண்டிய நொடி இது.
குறை
கூறாமல் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இணைந்து பயணிப்போம்.
திங்கள், ஜூன் 12, 2023
டெல்லி இன்பச் சுற்றுலா
2001வது வருடம் என்று நினைக்கிறேன். பதினோராம் வகுப்பு. ஜான்ஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. பாளையம்கோட்டை.
பள்ளியில்
படித்து கொண்டிருந்த காலத்தில் சுற்றுலா அழைத்து செல்வர். பக்கத்திலேயே பார்க்
சென்று ராட்டினம் ஏறி
பாப்கார்ன் கொரித்துவிட்டு வருவோமே. அதுபோன்று
இல்லை. முதலில் திருப்பரப்பு அருவி வரைக்கும் இட்டுச்சென்றவர்கள். பரவாயில்லை. இவர்களைத்தேற்றிவிடலாம்
என்று நம்பிக்கை வந்த பின் அடுத்ததாக ஒன்பதாம் வகுப்பு
படிக்கும்பொழுது சென்னை, ஹைதராபாத் என்றனர். அடுத்த வருடம்
கோவா. பத்தாம் வகுப்பு என்பதால் அடியேன் புறக்கணித்துவிட்டேன். அதற்கு அடுத்த
வருடம் ஆக்ரா டெல்லி என்று களைகட்டியது. எல்லாமே ரயில் பயணங்கள் தான்.
என்னுடைய
ஞாபகத்தின் பேரில் சொல்வதென்றால் ஹைதராபாத்க்கு தோராயமாக 800 ரூபாய் மற்றும் டெல்லி சுற்றுலாவுக்கு 2000 ரூபாய். பயணம், தங்குமிடம் ஒரு சில எண்ட்ரன்ஸ்
டிக்கட்டுகள் சேர்த்தி இந்த காசு.
கிட்டத்தட்ட 100 அல்லது 120 பேர் இருக்கும். டூர் போன அனைவருமே பத்திரமாகத் திரும்பி வந்திருக்கிறோம். இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
மொபைல் போன் இல்லாத காலம். லேண்ட்லைன் போன் அரிதிலும் அரிது. GPSக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா தான். எப்படி இவ்வளவு தூரம் பிசிரில்லாமல் ஒருங்கிணைக்க
முடிந்தது வாத்தியார்களால் என்று ஆச்சர்யம்
தான் இன்றும்? ஒவ்வொரு டூரும் குறைந்தபட்சம் நான்கு
முதல் பத்து நாட்கள் வரை இருக்கும். பள்ளியில் இருந்து கிளம்பி பேருந்தில் சென்று
ரயிலேறி அங்கு ஒரு பேருந்து பிடித்து தங்குமிடம் சென்று மற்றொரு பேருந்து பிடித்து லோக்கல்
சுற்றிபார்த்து பின்பு அடுத்த ஊருக்கு.
இப்படியே ஊர் ஊராகச் சென்று கண்டு களித்து மீண்டும் ரயில் பிடித்து ஊருக்கு
திரும்பி பள்ளியில் வந்து இறக்கி விடுவார்கள். ஒரு வாத்தியரிடமும் மொபைல் போன்
கிடையாது. இப்பொழுது இருக்கும் கம்யூனிகேஷன்ஸ் வசதியை ஒப்பிட்டால் அன்று பத்து
சதவீதம் கூட கிடையாது. இருந்தும் perfect arrangements.
டெல்லி
டூர் என்றது ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. பத்தாம்
வகுப்பு வரை அரை ட்ரவுசர் தான். சில பேர் ஸ்கூல் வாசல் வரை பேண்டுடன் வந்து கால்
சட்டையை கழட்டி புத்தகப் பையில் வைத்து கொண்டு வருவதுண்டு. டூர் போகும்போது கண்டிப்பாக யூனிபார்ம் தான்.
அப்பொழுதெல்லாம் ஐடி கார்ட் கிடையாது என்பதால். நினைத்துப் பாருங்கள். கிட்டத்தட்ட நூறு பேர். காஃபி கலர் கால் சிராய்
அணிந்துகொண்டு நகர் முழுவதும் வலம் வருவோம். ஏதோ பேரணி போல. அதுவும் மெட்ரோ நகரில். தொடை தெரிவதனால் கூச்சமாக
பலர் நெளிவர்.
சென்னையிலிருந்து
டெல்லிக்கு குறைந்த பட்சம் முப்பது
மணி நேரம் என்று நினைக்கிறன். இரண்டு மூன்று கம்பார்ட்மண்டுகளில் உட்கார்ந்து இருப்போம்.
ஸ்லீபர் கோச் தான். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அந்த சிறு சௌச்சால்யவில் காலைக்கடன்
முடித்து வாஷ் பேசினில் தன்னர் பிடித்து அங்கேயே குளித்து எப்படி? ஹமாம் சொப் போட்டு குளித்து
தண்ணீரை காலி செய்திருப்போம். மற்ற பயணிகள் எழுந்து பார்க்கும்போது தண்ணீர் இருக்காது.
நாங்கள் எல்லாம் பிரேஷாக. சில பேர் பாக்கெட்டில் இருக்கும் விபூதி பொட்டலத்தை எடுத்து
நெற்றியில் திருமண் எல்லாம் வைத்து கோச்சே ரகளையாக இருக்கும்.
டூரை என்ஜாய் செய்வதற்கு உடல் நிலை எவ்வளவு முக்கியம் என்பது
அன்று புரிந்தது. நண்பன் ஒருவனுக்கு காய்ச்சல். கொஞ்ச நஞ்ச காய்ச்சல் அல்ல. அப்படி
ஒரு அனல். கண்களெல்லாம் சிவப்பாக ‘இருப்பானோ மாட்டானோ’ என்கிற ரேஞ்சில் இருந்தான். மற்றொருவன்
ஸ்டேஷனில் இருந்த தண்ணீரைப்பிடித்து குடித்து பின்பக்க குழாய்யை திறந்து விட்டிருந்தான்.
டூர் முடியும் வரை லோபரமைட் மாத்திரையும் டீ பன்னும் தான். ஊருக்கு வந்த பின்பு தான்
பொற்றல் அடைபட்டது என்றால் பார்த்துக்கொள்ளலாம். ஸ்பஷ்டமாக ஞாபகமிருக்கிறது ‘கே டிவி’ அப்பொழுதுதான் தொடங்கினார்கள். புதுப்புது
படங்களாக எட்டு மணிக்கு. ஒரு தமிழர் ஹோட்டலில் ‘செங்கோட்டை’ படம் பார்த்தது அலையலையாகத் தெரிகிறது.
ஜந்தர் மந்தர் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சுற்றிப்பார்த்து
வரச்சொல்லிவிட்டனர். ஒரு ரவுண்ட் அடித்து வந்து பார்த்தால் கையில் இருந்த சோனாட்டா
வாட்ச் காணோம். 650 ரூபாய். பரீட்சை எழுதுவதற்க்காக அப்பா வாங்கி கொடுத்தது. எனக்கு
அழுகை வார ஆரம்பித்துவிட்டது. நண்பனிடம் கூறினேன். ஷெர்லாக் போல் ‘கடைசியா எப்போ பாத்த?’ என்றான். ஒவ்வொரு இடமாகத்தேடினோம். கழிவறையில் இருந்து வெளியே வரும்போது நெரிசலில்
ஒருவன் கை என் கைய்யை பிடித்தது ஞாபகம் வந்தது. அங்கு விழுந்திருக்கலாம் என்று உள்ளே
சென்று மூக்கைப் பொத்திக்கொண்டே துழாவினோம். கிடைக்கவில்லை. பார்க்கில் கிடந்த மரக்குச்சி
ஒன்றினை வைத்து யூரினல் குழாயின் உள்ளே கிளறி, ஒரு நிமிடம் என்ன
செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் பெருத்த அசௌகர்யமாக இருந்தது. கையைப் பிடித்த
நொடியில் கழற்றி விட்டான் என்பது மெதுவாகத்தான் புரிந்தது. ரேடியமெல்லாம் இருக்கும்.
இரவு நேரம் ஒளிரும். மீதி டூர் சற்றே சோகமாகத்தான் கழிந்தது.
அந்த சோகத்தை விட ரொட்டி பருப்பு வேறு இன்னும் கவலையளித்தது.
அந்த கவலையை போக்கும் விதமாக ‘ஹோட்டல் தமிழ்நாடு’ என்னும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச்
சென்றனர். சாம்பார், ரசம் என்று களைக்காட்டியது. கட்டுரையின்
நோக்கத்திற்கு வருகிறேன். உம்மென்றிருந்த என்னை mood lift செய்தது
அங்கு பரிமாறப்பட்ட பொரியல்தான். கோவக்காய் பொரியல். இல்லை. வறுவல்
என்று சொல்லலாம். இதுவரை கோவக்காயே சாப்பிட்டது கிடையாது. ஆனாலும் சுவையாக இருந்தது.
காய்கறியின் பெயர் கூடத்தெரியவில்லை. பரிமாறுபவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதன்
பிறகு எங்குமே அதுபோல் ஒரு கோவக்காய் பொரியல் சாப்பிட்டதில்லை. ‘ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன்’ என்பது போல் அது
கனன்று கொண்டே தான் இருந்தது.
கடந்த வாரம் அந்த கனல் பற்றி எரிந்து அருகில் இருக்கும் காய்கறி
கடை வரை சென்று ஒரு கிலோ கோவக்காய்யை வாங்க வைத்தது. ‘கோவக்காய் சாப்பிடுவியா?’ என்று கேட்டதற்கு குழந்தைகள் ‘உவ்வே’ என்றனர். கற்பூர வாசனை தெரியவில்லை என்று செறுமிக்கொண்டு, கெமிக்கல் போக நன்றாக கழுவி நீள நீளமாக அரிந்து ஒரு வாயகன்ற வாணலியில் என்னை
ஊற்றி முழுவதையும் சலசலப்பு அடங்கும் வரை பொரித்து எடுத்தேன். வாயகன்ற வாணலி என்பது
முக்கியம். எண்ணை போக வடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டேன். இரும்பு கடாயில்
சிறிதளவு எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை
போட்டு தாளித்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். வெங்காயம் வெட்கம்
கொண்டு சிவந்தபின் பொரித்து வைத்த கோவைக்காய்யை அதனுடன் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு
சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பை அணைத்துவிட்டேன்.
ஹோட்டல் தமிழ்நாட்டில் பார்த்த அதே டெக்ஸ்டர். சுவைத்துப்
பார்த்தேன். பொரித்தும் வதங்கியும் புளிப்பும் கொதப்பலுமாக கோவக்காய் வேறு ஒரு தினுசில்
பிரமதாமாக வந்திருந்தது. ‘குளித்து குடி’ என்னும் சொல்லுக்கேற்ப குளித்துவிட்டு
வந்து பார்த்தால் சட்டி காலி. நீ முந்தி நான் முந்தி என்று கபளீகரம் செய்துவிட்டனர்.
ஞாயிறு, ஜூன் 11, 2023
குடிமகான்
டீடோட்டலர் ஹீரோவுக்கு எதாவது ஜங்க் food சாப்பிட்டாலே போதை தலைக்கேறிவிடும் ABS நோய். அதாவது ஆட்டோ ப்ருவரி சின்ரோம். இந்த சுவாரஸ்யமான ஒன் லைனர் பிடித்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே போதை தலைக்கேறிவிட 100 ரூபாய் நோட்டுக்கு பதில் 500 ரூபாய் நோட்டுக்களை நிரப்பிவிடுகிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதில் இருந்து மீண்டாரா எனபது தான் படம்.
ஹீரோ புதுமுகம். முதல் பாதி முழுவதும் பிரெஷ்ஷான காட்சிகள். மனோஜ் பாரதிராஜா ஏன் ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருந்தேன். படம் பார்த்த பிறகு தேடி பார்த்ததில் தான் தெரிகிறது அவர் சுரேஷ் சக்கிரவர்த்தி என்று. அவ்வளவு உருவ ஒற்றுமை. ஒரு சில இடங்களில் மிகை நடிப்பு என்றாலும் படம் முழுவது கலகலப்பாக்குவது இவர்தான். என்னா அலப்பறை. பிள்ளை இருக்கும் வீட்டிலும் துள்ளி குதிக்கிறார். வீடு இருக்கும் இடம் 'அரியவன்' படத்தில் வரும் அதே காம்பவுண்ட் வீடு.
தெளிவான ஓட்டத்தில் இருந்த முதல் பாதியை முட்டுச்சந்துக்குள் சென்று மோத வைப்பது இரண்டாம் பாதி தான். தடம் புரண்ட ரயில் போல் கதை பயணிக்கிறது. இருந்தும் சில சுவாரஸ்யமான பாத்திரங்கள் மூலம் இறுக்கி பிடிக்கிறார். எப்பொழுதுமே கதை எழுதும் ஒரு அடியாள், பாவாடை பையன், திருமண கலாட்டா என கொஞ்சம் கலகலப்பு எட்டிப்பார்க்கிறது.
மிக முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் ABS நோய் தாக்கும்போதெல்லாம் வரும் BGM. இன்றைய இளசுக்களுக்கான perfect காலர் ட்யூன்.
ஒரு சண்டே மதியம் பார்க்கலாம்.
வியாழன், ஜூன் 08, 2023
சமத்துவம்
தினமும் அலுவலகத்தில் பார்க்கும் மனிதர் அவர். ஆபிஸ் முழுவதும் கூட்டி பெருக்கி மொழுகி, குப்பைகளை உடனுக்குடன் களைந்து, கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பணி அவருடையது. மிகவும் சின்ஸியரானவர்.செய்யும் வேலைகளைத் திருத்தமாகச் செய்பவர். OP அடிப்பதில்லை. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம். நம் தந்தையை நியாபகப்படுத்தும் வயது முதிர்வு.
எங்கேனும் எதிரில் தென்பட்டால் 'வணக்கம் சார்' என்பார். இந்த 'சார்' என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்தது இல்லை. அதுவும் அத்தனை வயது முதிர்ந்தவர் சிறு வயதினரிடம் 'சார்' என்று விளிப்பது சற்று அல்ல அதீத தர்மசங்கடமான ஒன்று . வேலை செய்யும் இடத்தில் அப்படித்தான் என்று என்ன தான் நாம் சால்ஜாப்பு சொன்னாலும் மனது ஏற்க மாட்டேன் என்கிறது. வயத்துக்குண்டான மரியாதையம் கண்ணியமும் மிகவும் அவசியம். இதே சிறு வயதுக்காரர் பதிலுக்கு அவரை 'சார்' என்று விளிப்பாரா என்றால் கண்டிப்பாக இல்லை. அவர் பேரைச் சொல்லி விளிக்கின்றனர். இது என்னளவில் ஏற்புடையதன்று.
இதை விட ஒரு உறுத்தலான விஷயம். 'வணக்கம் சார்' என்று கூறும்போது அவர் என்றுமே என் கண்ணை நோக்கியதில் இல்லை. கை உயர்ந்து தலைக்கு அருகில் சென்று 'வணக்கம்' சொல்லும். அவரது கண் என்னை நோக்காது தரையில் நிலை குத்தி நிற்கும். தலையும் கவிழ்ந்தே இருக்கும். அந்த ஒரு கணம் இதுகாறும் இந்த சமூகம் பயிற்றுவித்து கொண்டிருக்கிற பல சமூக ஏற்ற தாழ்வுகளை என்னுள் மீளூட்டி மிரள வைக்கிறது.
கண் நோக்கி பேச இயலாத நிலைமைக்கு காரணமாக, கல்லாதோர் என்ற எண்ணத்தை காட்டிலும் அல்லது பொருளாதாரத்தில் நலிந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை காட்டிலும் அவரை துரத்திக்கொண்டிருப்பது சாதி பாகுபாடு மட்டுமே. அவருடைய 'வணக்கம் சார்' இதுபோன்ற பல கேள்விகளை களைத்துப் போட்டு என்னிடம் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவரது தயக்கத்தை போக்கும் பொருட்டு அவரை காணும் இடங்களில் எல்லாம் இயல்பானதொரு உரையாடலை ஆரம்பிப்பேன். முதலில் ஓரிரு வார்த்தையில் பதில் கூறி ஒதுங்கியவர் நாளாக நாளாக தன்னியல்பில் பேசத் தொடங்கினார்.
இப்பொழுதெல்லாம் அவர் எதிர்படுகையில் வணக்கம் வைப்பதில்லை. மாறாக மெலிதானதொரு புன்னகை செயகிறார்.
மலரட்டும்.மனிதம்
சனி, ஜூன் 03, 2023
அயல்வாசி
மலையாள படங்கள் அதியசைக்கவைக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.








