ஞாயிறு, மே 29, 2022

இறை



ஆஹா ப்ரொடக்ஷனோட மற்றொரு படைப்பு இறை. விலங்கு பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தேன்.  அது டீசெண்டான திரில்லர் வகை ஜானர். அதே போல இறை pedophile  பற்றியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். மூணு வெல்வேறு பீரியட் நடக்குற கதைக்களம். நான் லீனியரா சொல்லிருக்காங்க. அதுவும் சிக்கலில்லாம. Birds  of  prey அப்படிங்கற ஒரு நாவல வெப்சீரிஸா மாத்திருக்காங்க. இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா. இவரு கமலோட அபிமானி. விஸ்வரூபம், தூங்காவனம், உத்தம வில்லன் படங்கள்ல கமலோட அசோசியேட் ஆகிருக்கார். அதே போல இவரோட கடைசி நாலு படங்களுக்கு இசை அமைச்ச கிப்ரான் தான் இதுக்கும் ம்யூசிக் டெரெக்டர். சொல்லப்போனா இறை வெப் சீரிஸ் இந்த அளவுக்கு நல்லா கொண்டு வந்ததுல பிஜிஎம் ம்யூசிக்குக்கு ஒரு முக்கிய பங்கு உண்டுன்னு சொல்லலாம். 


கிறிஸ்டோபர் நோலன் 'இன்சோம்னியா'னு ஒரு படம் இயக்கியிருப்பார். அது அவரோட ஒரிஜினல் கிடையாது. ரீமேக் படம். நார்வேல நடக்குற மாதிரி கதைக்களம் இருக்கும். துப்பறியும் கதை தான். நார்வேங்கிறதுனால ஆறு மாசம் இரவுங்கிறதே கிடையாது. ஏற்கனவே தூக்கம் வராம அவதிப்படுற ஹீரோவை (அல்பசினோ) இந்த கேஸையும் துப்பறியுறதுக்காக நார்வே கூட்டிட்டு வருவாங்க. நார்வேல முழு சூரியன் காரணமா அவரு தூங்க முடியாம அவதிப்படறது பார்த்தா நமக்கும் கண்வழி வர்ற அளவுக்கு இருக்கும். அதே போல படத்துல வர்ற SUV கார் அதிகமா நம்மள கவர்ந்திழுக்கும். 'லாரன்ஸ் ஆப் அரேபியா'  அப்படிங்கிற படத்தை பாக்கும்போது நமக்கு உடம்பெல்லாம் எரியுற மாதிரி ஒரு பீல் உண்டாகும். அந்தளவுக்கு டெசர்ட்ட படம் பிடிச்சிருப்பாங்க. ஏன் இத சொல்றேன்னா, இறை படத்தோட லொகேஷன் முழுக்க முழுக்க கொடைக்கானல். பாக்கும்போது நமக்கே ஒரு பிளசண்டான சில்னஸ் பீலிங் வருது. காஸ்ட்யூம், ஆர்ட், செட்டிங், மலைப்பாதைகள், fire houses எல்லாமே அந்த மாதிரியான ஒரு மூட செட் பண்ணுது. 

மோக முள் படத்துலேந்தே நம்ம அபிஷேக்கு இதே வேலை தான். பொருந்தா காமம். விறுவிறுப்பான திரைக்கதை, சரியான கதாபாத்திர தெரிவு, மிகையில்லாத நடிப்புனு வெப்சீரிஸ் நல்லாவே இருக்குது. 67 வயசுலயும் இப்பவும் அவர் mr. madras னு சொல்லிக்கிற அளவுக்கு பிட்டா வர்றார் நம்ம சுப்ரீம் ஸ்டார். ஆறு பாகங்கள் தான். ஜெனெரலா ஒவ்வொரு பாகமும் சஸ்பென்ஸ் கேள்வியோட முடியும். இதுல ஒவ்வொரு பாகமும் ஒரு பதிலோட முடியுது. அதுவும் உறுத்தலில்லாம இருக்குது.

என்ன ஒரே குறைன்னா pedophile சம்பந்தப்பட்ட இந்த கதைக்களத்தை வெறுமனே ஒரு த்ரில்லர் விரும்பிகளுக்காக எடுத்த மாதிரி இருக்குது. இதையே குழைந்தைகளும் பாக்குற மாதிரி எடுத்திருந்தா இன்னும் நல்லாவே அவார்நஸ் கிடைச்சிருக்கும். அதாவது சமூக பொறுப்புள்ள ஒரு படைப்பா வெளிவந்திருக்கும். 

ஜுராசிக் பார்க் படங்கள்ல படம் முடிஞ்ச உடனே மூடிருக்குற கதவை ஒரு ஜுராசிக் குட்டி வந்து எட்டிப்பார்க்கும். அது அடுத்த படம் எடுக்கப்போறதுக்கான லீட். அதுமாதிரி இதுலயும் நெஸ்ட் சீரிஸ் எடுக்கிறதுக்கான லீடோட கதையை முடிச்சிருக்காங்க. 

நல்ல ஒரு வீக்கெண்ட் டைம்பாஸ். 

 


வெள்ளி, மே 27, 2022

விலங்கு டாணாக்காரன்

விலங்குனு ஒரு வெப் சீரிஸ் OTTல இருக்கு. OTTல ரிலீஸ் பண்றதுல என்ன வசதினா, எந்தவித தணிக்கையும் கிடையாது. என்ன வேணாலும் பேசலாம். எத வேணாலும் காட்டலாம். பால சரவணன்லாம் ஏகத்துக்கும் பேசிருக்காப்பல. முனீஸ்காந்துக்கும் அதுல கொஞ்சம் ஷேர் உண்டு. குட் காப் வேடத்துல நம்ம யுனிவர்சல் ஸ்டார் விமல். நடிப்புல உறுத்தல் இல்லை. இயல்பா பண்ணிருக்காரு. மனைவியா இனியா. மனைவி பிரசவ வலில துடிச்சிட்ருக்கும்போது கூட பக்கத்துல நிக்க முடியாத போலீஸ் வேலைய தோலுரிச்சு காமிச்சிருக்காங்க. பேத்திக்கு குலதெய்வ கோவில்ல மொட்டை போடும்போது DSP வராருனு நடுவுலேயே கிளப்பி விடுறதுனு காவல் துறையை ஒரு அடிமை மாதிரியே நடத்துறாங்க. அதனால தான் அரைச்சு வச்ச காஷ்மீரி டிக்கா லால் மிளகா மேல உக்காந்தா மாதிரி அவங்க உர்ருனு இருக்குறாங்க.

கிச்சாவா நடிச்சிருக்குற ரவி செம. அவருக்கு இது முத படம் வேற. நடிப்பு தேடித்தேடி அலுத்துபோய் ஒதுங்கி நீக்கும்பொழுது வந்த வாய்ப்பாம். 'ஒரு தப்பு பண்ணிட்டேன் சார்'னு சொல்லும்போதே விமலுக்கு மட்டும் இல்ல, நமக்கும் கூட வேற என்னத்தடா பண்ணி வச்சங்கிற மாதிரி பக்கு பக்குனு இருக்குது. போலீஸ்காரங்க சஸ்பெக்ட விசாரிக்கிற தோரணையே வேற லெவல். பாத்துட்ருக்கற நமக்கே முதுகுல தோல் உரியற மாதிரி ஒரு பீலிங். லத்திய வச்சி அப்படி ஒரு விளாறு. இவங்க ஏன் இப்படி அடிக்குறாங்கனு தெரியலேன்னு முழிச்சிட்ருந்தேன். அதுக்கான விடை அடுத்ததா பாத்த படத்துல கிடைச்சுது. 

ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்சிடிருந்த நிறைய பெரு ரெக்கமென்ட் பண்ணின டாணாக்காரான் பார்க்கறதுக்கு கொஞ்சம் டைம் கிடைச்சுது. ஏற்கனவே காவல் துறை மேல கொஞ்சம் அனுதாபம் உண்டு. ஒரு நாள் கூட லீவ் கிடையாது. கூப்பிட்டா ஓடணும். நாள் கிழமைனு பாக்க முடியாது. மொத்தத்துல ஒரு நார்மலான லைஃப் கிடையாது. இதனாலேயே அவங்க டெர்ரர்ரா இருக்காங்கனு நினைச்சிடிருந்தேன். ஆனா என்ட்ரி ஆகும்போதே இந்த மாதிரி ஒரு ட்ரைனிங்னு பாக்கும்பொழுது இவங்க நார்மலா நடந்துக்கிட்டாதான் அத அப்நார்மலா எடுத்துக்கணும். அந்த அளவுக்கு ஒரு கொடூரமான ட்ரைனிங். அத ட்ரைனிங்ன்னு சொல்றத விட தண்டனைனு சொல்லலாம். அதில விழற ஒவ்வொரு அடியும் இடிமாதிரி இருக்குது. சுதந்திரத்துக்கு முன்னால ஈஸ்ட் இந்தியா கம்பெனியை எதிர்க்கிற இந்தியர்களை அடக்கிறதுக்காக இந்தியர்களை வச்சே செயல்படுத்தப்பட்ட ஒரு நூதன துறைதான் இந்த காவல்துறை அப்டிங்கிறதுல ஆரம்பிக்குது இந்த படம். சுதந்திரம் அடைஞ்சு தன்னிறைவு கிடைச்ச பிறகும் இந்த மாதிரி ஒரு அடக்கு முறையை கற்பிக்கிற கவாத்து பயிற்சி தேவையா அப்படிங்கிற கேள்வியோட படம் முடியுது. 

லால் சேட்டன் பிரிச்சி மேய்ஞ்சத பார்த்தா, ட்ரைனிங் முடிஞ்சு கடைசி சீன்ல சிவாஜி பேரன் அவரை அடிச்சி துவம்சம் பண்ணிருவாரோன்னு பயந்துட்ருந்தேன். நல்ல வேளையா அந்த மாதிரி எந்த அசம்பாவிதமும் இல்லாம யதார்த்தமான ஒரு க்ளைமேக்ஸ் கொடுத்திருக்காரு அறிமுக இயக்குனர். 

அவங்களுக்கும் வாரத்துக்கு ஒரு நாள் லீவு, எட்டு மணிநேர டூட்டினா நல்லாருக்கும். 


வியாழன், மே 26, 2022

சும்மா சொன்னாங்க

அருகருகே இருந்த அப்பல்லோவா மெட்ப்லெஸ்ஸா என்று இங்கி பிங்கி போட்டு பார்த்ததில் அப்பல்லோ என்று வந்தது. கெட்டிச்சட்னியுடன் கூடிய இட்லி சாப்பிட்டு இறக்கும் வாய்ப்பு அதிகமிருப்பதால் அப்பல்லோவை தவிர்த்துவிட்டு மெட்ப்ளஸுக்குள் நுழைந்தேன்.

நான் உள்ளே நுழைந்து கேட்டவுடன், 'அந்த பிராண்ட் இப்போ ஸ்டாக் இல்லன்னா. இதுதான் இப்போ இருக்கு.'  என்று ஒன்றை எடுத்து கொடுத்தார் அந்த இளைஞர்.

'என்னங்க இது? பேரே கேள்விப்பட்டதில்லையே' என்று திகைத்தேன். பின்ன எவன் போய் டாக்டரிடம் பல்லை காட்டிக்கொண்டு நிற்கிறது. ஏற்கனவே தெரிந்த நண்பர் ஒரு வாரம் பத்து நாள் பட்ட அவஸ்தையான அனுபவங்களை பகிர்ந்திருந்தார். 'படிச்சிருக்கீங்க தானே' என்று வேறு டாக்டர் கேட்டுச்சாம். 'நல்லா படிக்கலாமேன்னுதான்' என்று தலையை சொரிந்துகொண்டே அவரும் வழிந்திருக்கிறார். 

நான் சந்தேகிப்பதை பார்த்த அந்த இளைஞர் சற்றும் யோசிக்காமல், ' இது நல்லாருக்கும்னா' என்றார். 

குபீர் என்று சிரித்துவிட்டேன். கடைக்குள் இருந்த மூவரும் கூட. ' என்ன ப்ரோ. காட்டன் டீ ஷர்ட் எடுக்க வந்த மாதிரி சொல்றீங்க. தண்ணில நெனைச்சா சுருங்காதுனு கூட சொல்லுவீங்க போலேயே'. என்றேன்.

அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு ப்ரோ இந்த ப்ரோவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார். 

'ஜி'

'அவரு இன்னைக்கு சென்னை வந்தாரே'

'அதில்ல ஜி. இப்போதைக்கு இதான் ஸ்டாக்குல இருக்கு. நல்ல பாஸ்ட் மூவிங் தான். யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணதில்ல. அதைதான் அவன் அப்படி சொல்லிட்டான். 

'இதுல எப்படி பாஸ் கம்ப்ளெய்ண்ட்லாம் சொல்லுவாங்க'

'அதெல்லாம் இருக்கு ப்ரோ. மாத்திரை சாப்டுட்டு எபெக்ட் இல்லைன்னு சொல்றதுக்கு ஒரு கூட்டமே இருக்கு.'

'ஓஹோ'

'மூணு வெரைட்டி பாஸ். எது வேணும். சொல்லுங்க.'

இந்த ஒன்று மட்டும் போதும். மீதி இரண்டையும் உள்ளே வைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன். 

நல்லாருக்கும் என்ற சொன்ன அந்த ப்ரோ ஒவ்வொரு வெரைட்டியையும் தொட்டு இதில் என்ன வித்தியாசம் அதில் என்ன ஸ்பெஷல் என்று ஒண்ணொன்னாய் கேட்டு விளங்கிக்கொண்டார். 

'பாஸ். இதுவே தெரிலன்றீங்க. பாக்கெட்டையாவது ஒடைச்சி பாத்துருக்கீங்களா இல்லையா' என்றேன்.

'இல்ல ப்ரோ. நான் பாக்கெட்டை உடைச்சு என்ன பண்றது. இன்னும் கம்பெனி கிடைக்கல' என்றார்.

'அப்புறம் உள்ள நுழையும்போதே நல்லாருக்கும்னு வேற ஒரு சர்டிபிகேட் கொடுத்தீங்க'

'மன்த்லி டார்கட் ப்ரோ' என்று மைய்யமாய் சிரித்து வைத்தார்.

கடைக்குள் எனக்கருகே மருந்து சீட்டை காண்பித்துக்கொண்டு ஏதோ ஒரு மாத்திரையின் விலை ஏறிவிட்டதா என்று ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார். நான் ஜிபே செய்துகொண்டே அவரை திரும்பி பார்க்கவும்,

'என்னோட பேரனுக்கு தம்பி. அஞ்சாவது பொண்ணோட பையன்'

'ஓஹோ. சரிங்க சார்'

'பரவால்ல தம்பி. இப்போ இருக்குற பசங்கெல்லாம் மெடிக்கல்ல வந்து ஈஸியா கேக்குறீங்க. ரொம்ப கேசுவலா கலகலப்பா ஹேண்டில் பண்ணிக்கிறீங்க. எங்க பீரியட்ல ஒளிஞ்சி ஒளிஞ்சி தான் வாங்குவோம்'

'அஞ்சாவது பொண்ணுதான் கடைசியா'.

'இல்ல தம்பி. கடைசில ஒரு மவன் பொறந்தான். ப்ளஸ் டூ படிக்கிறான்' என்றார்.

'அப்போ பொய் சொல்லாதீங்க'

'என்ன தம்பி'

'அந்த காலத்துல நீங்க யூஸ் பண்ணீங்கன்னு'

ஞாயிறு, மே 22, 2022

சும்மாவா சொன்னாங்க

வேலைக்கு நடுவுல அரட்டை அப்டினா ஓகே. ஆனா அரட்டைக்கு நடுவுல தான் வேலை அப்டினு சில பார்ட்டிங்க இருக்கும். அந்த மாதிரி ஒரு பார்ட்டி அவரு. அடிக்கடி என்னோட இடத்துக்கு வந்து அவரும் வேலை பாக்காம என்னையும் வேல பாக்க விடாம ரோதனை பண்ணுவாரு.

அதுவும் பேசறது அந்த அளவுக்கு அறுவையா இருக்கும். நம்ம இன்ட்ரெஸ்ட் காமிக்கிறோமா இல்லையானு கூட பாக்க மாட்டாரு. ரம்பம் மாதிரி வச்சி செய்வாரு. முக்காவாசி மேட்டர் 'அதுல பாத்தீங்கனா', அந்த காலத்துல' அப்படிங்கிற மாதிரி ஸ்டார்ட் ஆகி அவரே டயர்ட் ஆகுற வரைக்கும் விடமாட்டாரு.

'சார், நீங்க ரொம்ப அறுக்குறீங்க. கொஞ்சம் வேலை பாருங்க இல்ல என்ன வேல பாக்க விடுங்க' அப்டினு என்னால மூஞ்சிக்கு நேரா சொல்ல முடில. நம்ம டிசைன் அப்படி. 'learn to say no" அப்படின்ற புக்கல்லாம் புரட்டி பார்த்தேன். வேலைக்கு ஆகல. ரொம்ப நாளா என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

அந்த பார்ட்டி ஒரு நாள் வந்துச்சு. 'இப்போல்லாம் தம்பி' அப்டினு அறுக்க ஆரம்பிச்சாப்ல. உடனே நிப்பாட்டி 'சார், ஒரு சின்ன உதவி' அப்டினேன்.

'சொல்லுங்க தம்பி. உங்களுக்கு பண்ணாம யாருக்கு?' அப்டினாரு.

'யாரட்ட கேட்டாலும் இல்லைன்றாங்க. உங்கள தான் மலை போல நம்பி இருக்குறேன். உடனே ரெண்டு லட்சம் தேவைப்படுது. ஒரு பத்து நாள்ல கொடுத்துட்றேன்' அப்டினு சொல்லிட்டு அவரை பாக்குறேன்.

அடுத்த செகண்டே, காலே வராத செல்போன தூக்கி பேசிட்டே எந்திச்சி போய்ட்டாரு.

அப்ப போனவருதான். இப்போ வரைக்கும் நம்ம பக்கம் வரல.

சும்மாவா சொன்னாங்க, பணம் பத்தும் செய்யும்னு.

சனி, மே 21, 2022

கதண்டு

 

அருகில் இருக்கும் தெருவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கான தனிப்பயிற்சி (tution) ஒன்றை நடத்துகிறார்கள். இரண்டு டீச்சர்கள். ஒரு டீச்சர் அந்த வீட்டின் ஓனர்.

காலை எட்டு மணியளவில் அந்த வீட்டின் அருகில் குடியிருப்பவர் அவரை அழைத்து 'இது என்ன?' என்று மரத்தில் இருக்கும் கூட்டை ஒரு முறை பார்க்க சொல்லியிருக்கிறார். அங்கு ஆரம்பித்தது வினை. அந்த கூடு வெள்ளியை போல 'ஜக ஜக' வென்று ஜொலித்துள்ளது. டீச்சருக்கும் அது என்ன என்று பிடிபடவில்லை. தென் கூடு போன்று தெரிந்திருக்கிறது. ஆனால் தேன்கூடு இல்லை. எட்டு அடி உயரத்தில் கூடு கட்டியிருக்கிறது. பரோபகாரியான டீச்சர், சரி வயதானவர்கள் கேட்கிறார்களே என்று அது என்னவென்று பார்த்துவிடலாமென ஒரு அலுமினியம் லேடரில் ஏறியிருக்கிறார். ஏறி சன்ஷேடில் நின்றுகொண்டு அது என்னவென்று ஒரு குச்சியால் தொட்டதும்தான் தாமதம். சரசரவென்று ஒரு ஐம்பது கதண்டுகள் அவரை மொய்த்துள்ளது.

கதண்டு என்பது ஒரு வகை பூச்சி. ராணி தேனீயைவிட 100 மடங்கு வீரியம் அதிகமுள்ளது. இரண்டு மூன்று கொட்டினாலே சுற்றத்தாருக்கு தகவல் சொல்லிவிடலாம் எனுமளவுக்கு விஷப்பூச்சி.

உச்சந்தலை முதல் எங்கெங்கெல்லாம் உடை மறைக்கவில்லையோ அங்கெல்லாம் கொட்ட ஆரம்பித்திருக்கிற்றது. கொட்டுவது என்றால் குடைந்து கொட்டுவது. ஒவ்வொன்றையும் உருவி பிடுங்கி எடுத்துப்போடும் அளவுக்கு கொட்டும். கேஎஸ்ஹீ திரும்பி பார்த்தால் அழைத்தவரை காணவில்லை. ஜூட். லேடரில் இறங்கும் அளவுக்கு பொறுமையில்லை. கதண்டுகள் மேலும் மேலும் படையெடுக்கின்றன. எட்டடி உயரத்திலிருந்து குதித்துவிட்டார். வேகமாக குளியலறை சென்று ஒவ்வொரு கதண்டாக பிய்த்து தண்ணீரில் எரிந்து வேகா வேகமாக மருத்துவமனை செல்வதற்கு வெளியே வந்திருக்கிறார். கூப்பிட்டவரை வண்டியை ஸ்டார்ட் செய்ய சொல்ல அவர் எதோ அரை மயக்கத்தில் பிதற்ற இவரே வண்டியை ஸ்டார்ட் செய்து அருகில்  இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அங்குள்ளவர்களோ கதண்டு கடித்தால் வைத்தியம் கிடையாது. அதுவும் 36 கதண்டு கொட்டியிருக்கிறது என்று சொல்கிறீர்கள்; இன்னும் நீங்கள் இரண்டு மணி நேரம் பிழைத்திருந்தாலே அதிசயம். அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று விரட்டாத குறையாக அனுப்பியிருக்கிறார்கள். நான் நன்றாகத்தான் இருக்கிறேன், முதலுதவியாவது செய்து அனுப்புங்கள் என்று சொன்னதற்கும் மசியவில்லை.

வேறு வழியின்றி 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னோரு அரசு மருத்துவமனைக்கு தான் வண்டியை ஒட்டிக்கொண்டு விரைந்திருக்கிரார். கை கழுத்து என எல்லா இடங்களிலும் வீக்கம் அதிகமாகிவிட்டது. அந்த அரசு மருத்துவமனையிலும் அதே பதில் கிடைத்துள்ளது. சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லிவிடுங்கள் என்று வேறு பதறியிருக்கிறார்கள்.

தேனீ கொட்டுவது போன்ற வலியை மட்டும் உணர்ந்துகொண்டிருப்பவர் மருத்துவமனையின் இந்த பதில்களை கேட்டு இப்பொழுது சற்று கலக்கமாகியிருக்கிறார்.  மீண்டும் மனம் தளராமல் வண்டியை தானே ஒட்டிக்கொண்டு அடுத்த மருத்துவமனைக்கு சென்று உதவி கேட்க அவர்களும் இதே பதில் சொல்ல என களேபரமாகியிருக்கிறது. டீச்சரின் வயதான மாமியார் அந்த மருத்துவமனையில் முன்பே வேலை  பார்த்தவர். 86 வயது. அவர் வீட்டில் இருந்த படியே மருத்துவமனை ஊழியரிடம் பேச அவர்கள் முதலுதவிக்கு சம்மதித்திருக்கிறார்கள். ஒரு பெயின் கில்லர் கொடுத்து பல்ஸ், BP, ECG போன்று வஸ்துக்களை சோதிக்க ஆரம்பித்திருக்கார்கள். இதற்கிடையில் 36 கதண்டு கடித்த பெண்மணி இன்னும் உயிரோடிருக்கிறார் என்ற அதிசய செய்தியை கேட்டு ஒவ்வொருத்தராக வந்து பார்த்தது சென்றிருக்கிறார்கள். வேறொருவர் மூலம் கணவருக்கும், சென்னையிலிருக்கும் தன்னுடைய மகளுக்கும் விஷயத்தை கூறியிருக்கிறார். இறுதியாக தன் தாயை பார்க்க வருகிறோம், தன் மனைவியை பார்க்க வருகிறோம் என்ற பதட்டடத்துடன் இருவரும் கிளம்ப ஒரு மிகப்பெரிய உச்சகட்ட மனப்போராட்ட்டம் அங்கு நடந்திருக்கிறது.

இந்த பிரச்சினைகளை கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் தன்னுடைய கணவருக்கு போன் போட்டு தருமாறு டீச்சர் கேட்க அவரோ நெட்ஒர்க் இல்லை, சிக்னல் இல்லை என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து ஜூட். டீச்சருக்கு ஏதுனும் ஆகிவிட்டால் இவரை தூக்கி உள்ளே வைத்துவிடுவார்களோ என்ற பயம். ஆதலால் டீச்சர் யாரிடமாவது போனில் பேசிவிட்டால் இவர் கூப்பிட்டுதான் கதண்டு கொட்டிவிட்டது என்று தெரிந்துவிடும் என்கிற எண்ணத்தில் டபாய்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எஸ்.

அதுமட்டுமில்லாமல் தாங்கள் எவ்வளவளோ தடுத்தும் கேட்காமல் டீச்சர் சன்ஷேடில் ஏறிவிட்டதாக மற்றவர்களிடம் கூறியிருக்கிறார். முத்தாய்ப்பாக அவர்களுக்கு அது கதண்டு என்று தெரிந்துதான் டீச்சரையே அழைத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை அந்த வீட்டில் வேலை பார்ப்பவர் இவர்களிடம் பின்னர் கூறியிருக்கிறார்.

DNAவோ இல்லை இவர் கும்பிட்ட சாமியோ அல்லது பெற்றோரின் ஆசிர்வாதமோ ஏதோ ஒன்றின் காரணமாக ஒரு மாதம் தாண்டியபிறகும் தற்போது நலமாயிருக்கிறார். 

நெறி யாதெனில்,

1. தேனீக்கும் கதண்டுக்கும் அவசியம் நாம் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும்.  (கதண்டின் வீரியம் தெரியாதவர்கள் ஒரு முறை கூகுளிடம் கேட்டுப்பார்க்கலாம்)

2. நாமே நம்மை கைவிடாதவரை நாம் தோற்கவில்லை என்பது சர்வ நிச்சயம். 

3. நாம் அழைக்காமல் நம்மை அழைக்கும் எந்தவொரு அழைப்பும் நமக்கு துன்பம் தருபவையே. ஒருத்தனும் கூப்டு ஒரு கோடி கொடுக்கப்போறது கிடையாது. பிரச்சனைல இழுத்துவிடத்தான் கூப்பிடுவான்.


ஞாயிறு, மே 08, 2022

பீஸ்ட்


ரஜினிக்கு அடுத்த மாஸ் ஹீரோவாக வெகு ஜனத்தை கவரும் திறமை விஜய்க்கு உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. 

ரஜினி என்ற பிம்பத்தை மிக பிரமாண்டமாக வளர்த்ததில் முக்கிய பங்கு பஞ்சு அருணாச்சலம் மற்றும் எஸ்.பி. முத்துராமனுக்கு உண்டு. பிற்காலங்களில் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா போன்ற கமெர்ஷியல் ஜாம்பவான்கள் வழி இன்றைய தலைமுறையையும் கவர்ந்தார். ஆனால் இரண்டே படங்கள், அதாவது அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் என்ற இரண்டு படங்கள் எடுத்த ரஞ்சித், ரஜினியை  இயக்க முடியுமா என்ற ஆச்சர்யம் தொக்கி நின்றபோது, தான் ஒரு சிறந்த கதாசிரியர் மற்றும் தனது படத்திற்கு தான்தான் கேப்டன் என்று சொல்லாமல் சொல்லியடித்தார். கபாலி மற்றும் காலா மூலம் தன்னுடைய உள்ளக்கிடக்கையை ஒரு மாஸ் ஹீரோ வழியாக திரையில் முன்வைத்தார். அவருடைய கதையும் எடுபட்டது. ரஜினியின் நடிப்பும் (முள்ளும் மலரும் போன்ற) சிலாகிக்கப்பட்டது. அதாவது ஒரு மாஸ் ஹீரோவை இயக்குவதால் தான் தடுமாறவில்லை என்பதை பறைசாற்றிய படங்கள் அவை.


அதே போல் இரண்டு படங்களை இயக்கிய நெல்சன், விஜய்யை இயக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தபோது கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என்ற அவருடைய முந்தைய இரண்டு படங்கள், இவராலும் ஒரு மேஜிக் செய்ய முடியும் என்ற நமபிக்கை விதைத்தது. ஆனால் ஸ்க்ரிப்ட்டை சல்லடையாகி தானும் தோற்று ரசிகர்களையும் முட்ட்டாளாக்கி விட்டார். வெடித்து சிரிக்க காமெடியும் இல்லை. ரசித்து பார்க்க லாஜிக்கும் இல்லை. ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே. நடிப்பு, நடனம் என 47 வயதில் செம எனெர்ஜி அண்ட் இன்ஸபிரேஷன். 

விஜய்க்கு என்று பெரிதாக இன்ட்ரோ சீன் இல்லை என்று தெரியவந்தபொழுது, இது நிச்சயமாக நெல்சன் என்ற ஒரு இயக்குனரின் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்த இரண்டே காட்சிகளில் அதனை தவிடுபொடியாக்கி நினைப்பில் மண்ணை அள்ளி தூவிவிட்டார். மாஸ் ஹீரோ என்கிற இமேஜை ஹேண்டில் செய்யும் பரபரப்பில் லாஜிக், ஸ்க்ரிப்ட் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டுவிட்டுட்டார். உதாரணமாக கண்ணாடியை உடைத்து கயிறை அறுக்கலாம் என்ற ஐடியா ஓகே. பட், அது ஒரு fibre கண்ணாடி. தங்கம் வாங்கும் காட்சிக்கு பதிலாக ஒரு மூக்கு கண்ணாடி கடையில் தன்னுடைய glaas கண்ணாடியை மாற்றுவது போன்ற ஒரு காட்சி, இதற்கு வலு சேர்த்திருக்கும். முதல் சண்டை காட்சியிலிருந்து இறுதி காட்சி வரை கொஞ்சம் கூட கூறே இல்லாத லாஜிக் மீறல்கள். படு கேவலமான fight சீக்வன்ஸ்கள். தளபதி ரசிகர்களே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் அளவுக்கு ஒரு படு மொக்கையான படம். சொந்தக்காரரிடம் பேசுவது போல டெர்ரரிஸ்ட்டிடம் பேசும் போன் கால்கள், ரபேல் ஏவுகணைகள் என இஷ்டத்திற்கு பூ சுத்தியிருக்கிறார். டாக்டர் டீமை அதே காஸ்ட்யூமில் பார்ப்பது மேலும் ஒரு கொடுமை. 

ஏன், இரண்டாவது படம் கிடைத்த அட்லீ கூட தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை ஓரளவுக்கு ரசிகர்களையம் வெகுஜனத்தையும் கவரும் வண்ணம் எடுத்து தன்னை ஒரு மாஸ் இயக்குனராக நிலை நாட்டிக்கொண்டார். இப்பொழுதோ பாலிவுட் பாட்ஷாவான ஷாரூக்கை இயக்குகிறார். லோகேஷ் கூட மாஸ்டர் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். நன்றாக அமைந்த அந்த வாய்ப்பை நெல்சன் தவற விட்டுவிட்டார் என்று சொல்லுவதை விட 'நல்லவேளை, சாணியை நான் மிதிக்கல' என்ற மொமெண்ட். 

சொல்லுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை.

சுருக்கமாக சொன்னால் 140 ரூபாய் மிச்சம். ஆனால் மூன்று GB டேட்டா, 2 யூனிட் மின்சாரம் மற்றும் 3 மணிநேரம் தெண்டம். 

இன்னும் ராவாக சொன்னால் 'ஸ்ட்' என்ற வார்த்தையை விடுத்திருக்கலாம். 

வெரி சாரி நெல்சன்.  

புதன், மே 04, 2022

கள்ளக்காதல்


குறைந்தது எட்டு மணி நேரம், அதிகபட்சம் பன்னிரெண்டு மணி நேரம் என்று நாம் ஒரு வாரத்தில் அலுவலகத்தில் வேறு வழியின்றி செலவிடும் நேரம் மட்டுமே 40 முதல் 60 மணி நேரங்கள். உறங்குவதற்கு தோராயமாக 7 மணி நேரம் என்று எடுத்துக்கொண்டோமேயானால் 35 மணி நேரம் அதில் செலவிடப்படுகிறது. ஆக, ஒரு வாரத்தில் 80% நேரம் நாம் வீட்டில் இல்லை. அல்லது இருந்தாலும் இல்லை என்ற நிலை. மீதம் இருக்கும் 20% நேரம் கூட தம்பதிகள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்ளும் க்வாலிட்டி டைமா என்றால் கிடையாது. குழந்தைகள், உறவினர் பஞ்சாயத்து, நண்பர்களுடன் அரட்டை, அண்டை அயலாரோடு விதண்டாவாதம், வயதானவர்களின் மருத்துவ கவனிப்பு என ஒரு ஐந்து சதவீத தனிமையான நேரம் கூட இவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் கூட, பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பின் அழுத்தம் காரணமாக, துணையை அலட்சியமாக கையாளும் நிலையே இங்கு மிகுந்து காணப்படுகிறது. அலுவலகங்களில் இங்கிதம் காரணமாக வெளிமனிதர்களின் மேல் கொப்பளிக்க முடியாத உணர்வுகள் அனைத்தும் வெடித்து சிதறுமிடமாக உறைவிடம் பரிமாணம் கண்டுவிட்டது.. குளித்து, உணவருந்தி தூங்குவதற்கு மட்டுமே வீடு என சூல்நிழை கைதியாக மாறிவிட்டோம். புரிந்துகொள்ளமுடியாத இந்த இடைவெளியை நிரப்பும் கானல் நீராக இன்று அலுவலகம் உருமாறியிருக்கிறது.  

 

நேரத்தையும் இன்ன பிறவனவற்றையும் விராயமாக்குவதற்கு போக்கிடம் இல்லாத காரணத்தினால் நமக்கு முந்தைய அதற்கும் முந்தைய தலைமுறைகள் இந்த கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவிகள் துணைவிகள் என்று மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியதை நாம் பார்த்தும் கேட்டுமிருக்கலாம். இவர்களுக்கு இருந்த மற்றுமொரு சௌகரியம் டெக்னாலஜிகள் அட்வான்ஸ்மெண்ட் இல்லாத காலம் அது என்கிற காரணம் கூட இருக்கலாம். ஒரே நொடியில் போட்டோ எடுத்து வாட்சப்பில் பரப்பிவிட முடியாது. மூன்றாவது கண் போன்று CCTV கேமராவோ, நிழல் போலத்தொடரும் GPS போன்ற சாதனங்களோ கண்டுபிடிக்கபடவில்லை. கொள்ளிவைக்கும் பொழுதுதான் வண்டவாளம் தெரியும் என்ற அளவுக்கு டபாய்த்துள்ளார்கள்.

 

இது இவ்வாறிருக்க, தற்காலச்சூல்நிலையில் இன்ஸ்டா ரீல்ஸ், யூட்ய்ப் ஷார்ட்ஸ், முகநூல், ட்விட்டர் இதுபத்தாதென்றால் சாதி, மதம், சூரியன், தாமிரை, காவி, பச்சை என மைய்யமாக வம்பள(பிழு)க்க பல விஷயங்கள் விரவிக்கிடந்தாலும் நம்மவர்கள் அதையும் தாண்டி மாற்றான் தோட்டத்து மல்லிகையிடம் இன்பம் துய்க்க விழைவதை காணும்போது, இது தலைமுறைகள் தாண்டிய மேனுபேக்சரிங்க் டிஃபக்ட் என்றே எண்ணத்தோன்றுகிறது.  விதைப்பைகள் வெடித்துச்சிதரும் அளவுக்கும் நசுக்கி பிழியும் ஒரு வேலையில் இருந்துகொண்டு இந்த தில்லாலங்கடிகளை அரேங்கேற்றும் இளைஞர்(ஞி)களை கண்டால் ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் மறுபக்கம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மல்டிடாஸ்கிங் மச்சான்கள். என்னளவில் தெரிந்த இருவேறு சம்பவங்கள்.

 

நண்பரா, உடன் வேலை புரிந்தவரா, உறவினரா என்ற கதைக்குள் போக விரும்பவில்லை. 35 வயது. பார்க்க கருகருவென்று கோலிவுட் பட அடியாள் போல இருப்பார். மனைவி அதற்கு நேர்மாறாக. கருத்த மச்சான் செய்யாத சேட்டையில்லை. இவர் கைநீட்டிய இடங்கள் எல்லாமே இவருடன் பள்ளியில் மற்றும் கல்லூரியில் படித்தவர்கள். தொடர்பை தூண்டிக்காமல் நீட்டித்திருந்தார்.  அங்கிருந்து இங்கு ஊருக்கு வரும் வேளையில் பல நர்த்தன அரேங்கேற்றங்கள் உண்டு. அரசல் புரசலாக தெரிந்து வீட்டில் மனைவி கண்டித்துள்ளார். இல்லை நான் ஆர் ஈ எம் ஓ வாகத்தான் (ரெமோ) இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார். ஓரளவுக்கு மேல் மல்லுக்கட்ட முடியாமல் கண்டும் காணாமல் விடவும் வெள்ளம் கரை புரண்டுவிட்டது. உடன் வேலை பார்க்கும் கைம்பெண் ஒருவரிடம் வலை விரித்து, விரித்த அதே வலையில் தானும் சிக்கிக்கொண்டார். நோட்டீஸ் ஒட்டாத குறையாக அலுவலகம், குடும்பம் என எல்லோருக்கும் தெரிந்து இப்போது அது விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இவரது இந்திரிய பசிக்கு ஒரு இளம்பெண்ணும் அவர்களது மூன்று வயது பெண் குழந்தை தன்னுடைய இயல்பான வாழ்க்கையை தொலைத்துவிட்டது.  

மற்றுமொரு சம்பவம். அவரும் 37 வயது ஒத்தவர். இரு குழந்தைகள். இவருடன் வேலை பார்க்கும் சக ஊழியையும் குடும்பம் குட்டி என்றிருப்பவர். வேலை காரணமாக பேச ஆரம்பித்து கிட்டதட்ட நாள் முழுவதும் போனிலே கழிக்கும் அளவுக்கு நாய் காதல். இந்த நாய் காதலில் கல்லெறியும் விதமாக இன்னொரு ஊழியர். அவர் தான் பங்குக்கு லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு பார்க்க அதற்கும் ஒகே என்று அந்த ஊழியையிடமிருந்து சிக்னல். இருவரும் கொஞ்சம் இணக்கமாக, இப்போது முதலாமவருக்கு பொறுக்கவில்லை. மூன்று பேருமே மணமானவர்கள். தங்களுக்கென்று ஒருகுடும்பம் குட்டியென்று இருப்பவர்கள். அதையும் தாண்டி திருட்டு மாம்பழத்தை ருசிப்பதில் ஒரு கிளுகிளுப்பு. முதலாமவர் பொறுக்காமல் செய்த விஷயம் தான் ஹைலைட்டே. ஒரு வாரம் பொறுத்து பார்த்திருக்கிறார். இவரது வழிக்கு அவர்கள் வரவில்லையென்றதும் நேராக மேலாளரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அதுவும் எப்படியென்றால், சார், இன்னொருவருடைய மனைவி என்னிடம் இவ்வளவு நாட்களாக பேசிக்கொண்டிருந்தார். இப்பொழுது வேறு ஒருவர்  இடையில் புகுந்து கொண்டதால் அவர் என்னிடம் சரிவர பேசவில்லை. நீங்கள் தான் அந்த இரண்டாமவரை கூப்பிட்டு கண்டிக்க வேண்டும். அவர் மீண்டும் என்னிடம் பேச வேண்டும்” என்று முறையிட்டிருக்கிறார். அந்த மாத டார்கெட்டை முடியென்றால் இவனுக்கு இது ஒன்று தான் குறைச்சலா என்று கடுப்பானாரோ என்னமோ, “போய், சர்ஜிக்கள் கிரேட் ஸ்‌டெய்ன்லஸ் ஸ்டீல் டங் கிளீனர் வாங்கிக்கொள்” என்று அனுப்பிவிட்டார்.


அலுவல் தொடர்பாக பேசுவது தவறில்லை தான். ஊடே அன்றன்றைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல் தவிர்க்கமுடியாதுதான். ஆனால் அந்த உறவை தனித்தெடுத்து வளர்க்க விரும்புவதும் மேலும் சுகதுக்கங்கள்  போன்ற உணர்ச்சிகளை குழுவாக இல்லாமல் தனித்து பகிரும்பொழுதுதான் அந்த உறவு வேறு ஒரு களஅளவை எட்டுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். விழுவது புதை குழி என்று தெரிந்தே விழுவது போல். அலுவலக உறவுகளை இருமுனை கொண்ட கத்தியை போல் லாவகமாக கையாள வேண்டியது முக்கியம். திருமண உறவுகள் என்றுமே கண்ணாடி போன்று. விரிசலை ஓட்ட முயன்றாலும் விரிசல் தெரிந்துகொண்டேதானிருக்கும். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தோமேயானால் உண்மையான உறவுகளை இழந்து தவிக்க வேண்டியதுதான்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா.