செவ்வாய், ஜூன் 07, 2022

விக்ரம்

 

மாநகரத்தில் ஆரம்பித்து ஐந்தே வருடங்களில் உலக நாயகனை அவரது  67 வயதில் இயக்கி வெகு ஜனமும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை.  ஒரு நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டராக அல்லது டாக்டராக லோகேஷ் பரிமளிக்கும் இடமிது.

மூவி சற்றே நீளம் தான் என்றாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு இயக்குனர் வெற்றி பெரும் இடம் இதுவே. அதுவும் மூன்று நாயகர்களை அவர்களுக்கென தனி வெளியமைத்து ஒரு நல்ல கதையை ரசிகர்களுக்கு விருந்தாக பரிமாறுவது  என  மெருகேறியுள்ளார்.

விக்ரமின் ஆகப்பெரிய பலம் அனிருத் தான். பின்னணி இசையை அதுவும் திரைக்கதைக்கு தேவையான உயிர்ப்புள்ள இசையை உருக்கி கொடுத்துள்ளார். ஸ்க்ரிப்ட் வலுப்பெறும் இடங்களில் இசை சேர்ந்துகொண்டு அந்த திரைமொழியை வேறு உயரத்திற்கு இட்டுச்செல்கிறது. அப்படி ஒரு இசைக்கோர்ப்பு. டைட்டில் ஆரம்பித்து இறுதிவரை துடிப்புடன் வைத்திருக்கிறது. டைட்டில் கார்டில் அவர் பெயரை மட்டும் போட்டுவிட்டு மிச்சத்தை எண்டு க்ரெடிட்ஸில் பார்த்துக்கொள்ளலாம் என்றளவுக்கு விக்ரமில் இசை பக்கபலம்.


கமல் முழு ஸ்பேசையும் ஆக்கிரமிக்காமல் மற்றவர்களும் இடம் கொடுத்திருக்கிறார்.
அந்த ஸ்பெசை பற்றிக்கொண்டு பக்காவாக ஸ்கொர் செய்திருப்பது பஹத் பாஸில். மிரட்டும்  நடிப்பு. அண்டர்கவர் பாத்திரத்துக்கு அப்படியொரு பொருத்தம். எந்த கதாபாத்திரத்துக்கும் இயல்பாக பொருந்திப்போகிற ஒரு அசகாய நடிகன் பஹத். Trance படம் பார்க்கவும்.

விஜய் சேதுபதி வழக்கம் போல விஜய் சேதுபதியாகவே வருகிறார். அதுவே மிகப்பெரிய குறை. சிறிய நிறை. தெத்துப்பல், சாய்ந்த நடை என வித்தியாசப்படுத்த முயற்சித்தாலும் ம்ஹும், விஜய் சேதுபதிதான் தான் திரைவெளியில் தெரிகிறார். இந்த கார்த்தியை எந்த படத்தில் பார்த்தாலும் 'என்ன சித்தப்பு' என்கிற ரேஞ்சில் நடித்திருப்பாரே. அதுபோல. கார்த்திக்கு போட்டியாக விஜய் சேதுபதி  உருவெடுத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவர் அவராகவே தான் இருக்கிறார்.


விக்ரமின் திரைக்கதை விரியும் பாங்கு அலாதியானது. துப்பு துலக்கும் அதிகாரிகள் அவர்கள் விசாரிக்கும் மாந்தர்கள் என அவர்களின் வாய்மொழியிலேயே கதை நம்மை உள்வாங்கிவிடுகிறது. காட்சி சொல்லல் மற்றும் கேரக்டரைசேஷன் என இரண்டிலும் சொல்லியடித்திருக்கும் லோகேஷ் பல இடங்களில் லாஜிக் உதைப்பதையும் அல்லது இடைவெளியையும் கவனித்திருக்கலாம். உதாரணமாக ரா ஏஜென்ட்டை அசால்ட்டாக டீல் செய்யும் செம்பியன் கதாபாத்திரம் (சுருளி படத்திலிருந்து தெறிக்கவிட்டிருப்பார்), தந்தை கர்ணனாக வரும் விக்ரம் கேரக்டரின் தெளிவின்மை, சற்று முன் வரை DShK 1938 மாடலில் பிளந்து கட்டும் கமல் அதன் பின்பு விஜய் சேதுபதியுடன் குஸ்தி சண்டை இடுவது டெம்ப்லேட் க்ளைமாக்ஸ் போன்ற சில வஸ்துக்களை தவிர்த்து பார்த்தால் ஒகே தான்.


படத்தில் கர்ணன் பேரனாக ஒரு குழந்தை வருகிறது. அதிர்வான சத்தத்தை கேட்டால் இதயம் துடிப்பதை நிறுத்திவிடும் என்ற ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பாதிப்போ இல்லையோ பேஸ் மேக்கர் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக அவாய்ட் செய்யவேண்டிய மூவி இது. ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் டமால் டுமீல் சத்தம் இறுதிவரை கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீம் ம்யூசிக் இதயம் வரை படபடக்க வைக்கிறது. இரைச்சல் என்று சொல்லவில்லை. அதிர்வு.  பத்தலை பாடலில், பேஸ் என்று சொல்லுவார் கமல். அதை படம் முழுக்க ஃபாலோ செய்திருக்கிறார் அனிருத். ஒரு ஆக்ஷன் வகை ஜானருக்கு இது நன்றாகவே இருக்கிறது.

நிரம்பவும் எதிர்பார்த்த அந்த விருந்து சீன் இதில் இல்லை. பட் வில்லெஜ் குக்கிங் சேனலை உள்ளே கொண்டு வந்து ஒரு காட்சியில் திணிக்காமல் சொருகியுள்ளனர். தியேட்டரில் லைட்டாக கலகலப்பு. தவிர சில இடங்களில் பிளாக் காமெடி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பின்னடைவு இறுதியில் வரும் ஐந்து நிமிட காட்சிகள். அந்த டிரக் லார்ட் ரோலெக்ஸ் யார் என்று ஒரு கதாபாத்திரத்தை அப்போதுதான் அறிமுகப்படுத்துகிறார். 'நான் இத சொல்லியே ஆகணும், ஐ ஆம் basically a வாட்ச் மெக்கானிக்' சூர்யா தான் அந்த டமால் டுமீல் ரோலெக்ஸ்.  வ்வளவு நேரம் 240 km ஸ்பீடில் பறந்த திரைக்கதை தொய்வடைந்து நிற்பது இங்கேதான்.  பாய் வீட்டு பிரியாணியில் இறுதியாக கொடுக்கும் பீர்னி பாயாசத்தில் இனிப்பு குறைந்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஒரு மோமென்ட்.

யார் பார்க்கலாம் என்றால் அதிரடி பட விரும்பிகள் தாராளமாக பார்க்கலாம். தமிழில் இது போன்று, இதுவரையில் ஒரு ஃபுல் டைம் ஆக்ஷன் மூவி வந்ததில்லை. நமக்கு அதிரடி ஒத்துவராது, கெக்பெக்கே என்று ஹாசினி போல் தான் பார்ப்பேன் என்றால் ஒரு காத தூரம் ஓடிவிடலாம்.

விக்ரம் 1986 ரிவியு கீழே

https://ithyathigal.blogspot.com/2022/01/1986.html 



திங்கள், ஜூன் 06, 2022

மாடல்

பக்கத்து வீட்டுல இருக்குற ஒருத்தரோட கார்ல் ஸ்பீடோ டயல் கிட்ட ஒரு ரெட் லைட் ப்ளிங்க் ஆகிட்டே இருந்துச்சு. மணி நைட் ஒன்பது இருக்கும். சரி, சாவி எதாவது விட்டுட்டு போய்ட்டாரு போல. பேட்டரி ஏதாவது ட்ரெயின் ஆகிடக்கூடாதுன்னு அவர்ட்ட சொல்றதுக்கு காலிங் பெல் அடிச்சேன். வந்தாரு. விஷயத்த சொன்னதும் 'ஓ, அது கீலெஸ் என்ட்ரி தம்பி. அதுக்கான லைட்டு. அது அப்டி தான் இருக்கும்'. அப்டினாரு.

ஓகே. நம்ம தான் அப்டேட் ஆகல போலன்னு நினைச்சுட்டு நின்னப்போ, ஒரு ரெண்டு நிமிஷம் பொதுவா பேசினவரு, படக்குனு ஜிக்கு தவ்விட்டாரு. அப்டியே மதத்துக்கும். சேர்ந்தே இருப்பதுங்கிற மாதிரி தொடாம போகமுடியாதுல. அதுனால.

கூர்ந்து கவனிச்சீங்கன்னானு ஆரம்பிச்சவரு ஒரு பதினஞ்சு நிமிஷத்துக்கு ராவிட்டாப்புல. அந்த மதத்துக்காரங்கள தீவிரவாதிங்கற ரேஞ்சுக்கு உருவகப்படுத்த ஆரம்பிச்சிட்டாரு. லண்டன்ல பாம் வைக்கிறத சப்போர்டுக்கு இழுக்கிறார். கனடால குண்டு வெடிக்க வச்சத சுட்டி காமிக்கிறாப்புல. வீட்டுல பொம்பளைங்கல எப்படி நடத்துறாங்கனு உள்ள போய் விமர்சனம் செய்றாரு. 

அது அங்க. இங்க என்ன பிரச்சினை சொல்லுங்கன்றேன். இப்படித்தான் தம்பி, உங்கள மாதிரி கொஞ்ச பேரு புரிஞ்சிக்காம இருக்கீங்க. நீங்க மட்டும் புரிஞ்சிகிட்டீங்கன்னா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே ஆட்சின்னு ஆகிடலாம்ன்றார். அதோட விடாம அந்த கடைல போய் பொருள்லாம் வாங்காதீங்க. நம்ம எதிர்ப்பை எப்படி பதிவு பண்றதுங்குறார்.

ஆஹா. நாட்ட என்னடா பண்ணி வச்சிருக்கீங்க. இந்த வாட்சப் பார்வேர்ட்ல பாதி பேர் மூளை கலங்கிப்போய் நிக்கிறான். இதே ரேஞ்சுக்கு போச்சுன்னா ரொம்ப சீக்கிரமே பத்திகிட்டு எரியப்போகுது. 

அந்த ப்ளிங்க் ஆகிட்ருந்த லைட்ட பாக்காமே இருந்துருக்கலாம்ங்கிற அளவுக்கு பீல் பண்ண வச்சுட்டாப்புல. 

ஞாயிறு, ஜூன் 05, 2022

போத்தனூர் தபால் நிலையம்

பிரவீன் என்ற புதுமுகம் இயக்கி நடித்திருக்கும் ஒரு heist வகை த்ரில்லர் genre.

முதல் படம் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்று ஒவ்வொரு புது இயக்குனர்களும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை ஆமோதிக்கும் விதமாக ப்ரவீனின் போத்தனுர் தபால் நிலையம். 2010 இதற்கான வேலையை முடுக்கிவிட்டு, வால்ட் டிஸ்னி மற்றும் கோச்சடையானில் சிறிது அனுபவம் பெற்று 2015 ஷூட்டிங் தொடங்கி 2021 இல் படத்தை முடித்திருக்கிறார்.

ஒரே ஸ்கெட்யூலில் படம் முடிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கலைஞர்கள் முன்னே பின்னே என்று வெயிட் ஏறவும் இல்லை. இறங்கவும் இல்லை. பல ஸ்கெட்யூல்களில் எடுக்கப்பட்ட AYM சிம்பு இதற்கு பக்காவான உதாரணம். ஒரே பாடலில் டயட் சிம்பு வெயிட் சிம்பு என்று கலங்கடித்திருப்பார். போத்தனூர் தபால் நிலையம் பொறுத்தவரையில் போஸ்ட் ப்ரொடக்ஷனில் இழுத்தடிக்கப்பட்டிருக்கலாம்.



சரி, இந்த மாதிரி படம் உனக்கும் மட்டும் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வியை தாண்டி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ஒரு பீரியட் மூவி. பீரியட் என்றால் 1990 தான். பட் அதற்கே பார்த்து பார்த்து வேலை செய்யவேண்டிருக்கிறது. சைக்கிள், தந்தி, சுழற்றி டயல் செய்கிற போன், அம்பாஸடர் கார், 90 மாடல் பென்ஸ், சார்மினார் சிகரெட், mail van என இன்னும் பல. அதிலும் கம்ப்யுட்டர் பிசினஸ் லோன் என்பதல்லாம் அந்த பீரியடுக்கு ஏற்றார் போல பக்காவாக பொருந்திப்போகிற ஒரு சப்ஜெக்ட்.

கதை போத்தனூர் தபால் நிலையத்தை சுற்றியே நடைபெறுவதால் வெம்மை அதிகம் தெரியவில்லை. அதிகமாக போனால் ஐந்து பிராதான கதாபாத்திரங்கள். இவர்களுடன் சேர்ந்து மேலும் ஒரு ஏழு எட்டு பேர். இயக்குனர் தான் கதாநாயகன். ஒரு பெரிய தொகையை கதாநாயகனின் தந்தை தொலைத்துவிடுகிறார். அதற்கான தீர்வு காண கதாநாயகன் துப்பு துலக்கும்போது மெள்ள மெள்ள கதை விரிவடைகிறது. X  axis இல் டைம் மற்றும் Y axis இல் விறுவிறுப்பு என்று எடுத்துக்கொண்டோமானால், இந்த படத்தில் ஆரம்பத்தில் 0 வை ஒட்டியே டைமை தொடரும் கிராப் இண்டெர்வலுக்கு பிறகு சீராக மேலெழும்பி க்ளைமாக்சில் உச்சாணி கொம்பில் நிற்கிறது. அதாவது ஆரம்பத்தில் நிதானமாக செல்லும் திரைக்கதை ஒரு கட்டத்திற்கு மேல் சூடுபிடித்து எண்ட் க்ரெடிட் போடும் வரை சஸ்டெய்ன் செய்கிறது.

சில லாஜிக் சறுக்கல் இருக்கிறதே என்று நாம் யோசிக்கும்பொழுது படம் முடிந்துவிட்டது ஆனால் கதை முடியவில்லை என்று போத்தனூர் தபால் நிலையம் 2 என்று கொக்கி போட்டு முடித்திருக்கிறார்கள். அதுவும் போஸ்ட் ஆபிஸ் டெம்ப்லேட்டிலேயே சொல்லியிருப்பது நல்ல ஒரு கிரியேட்டிவிட்டி. ட்ரைலாஜிக்கும் வாய்பிருக்கிறது போல.

ஆஹா வில் வெளியாகிருக்கும் போத்தனூர் தபால் நிலையம் மிகையில்லாத மற்றும் உறுத்தலில்லாத நடிப்பு, தெளிவான காட்சிகோர்வை, அதிராத பின்னணி இசை என ஒரு வீகென்ட் வாட்ச்சுக்கு ரெகமெண்ட் செய்யலாம்.

வரவேற்கலாம்.

 

 

வியாழன், ஜூன் 02, 2022

திட்ட திருட்டு

இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஒத்துக்க முடியல.

என்னன்னா இந்த தலைவர் தான் இந்த திட்டத்த கண்டுபிடிச்சி தொடங்கி வச்சு இத்தனை பயனாளிகள் நல்லாருக்க இவருதான் காரணம்ங்கற ரேஞ்சுல விளம்பரத்த பாக்கும்போது தான். 

ஒரு திட்டம் அப்டிங்கறது ஆட்சியாளர்கள் கிட்ட உதிக்கிறது கிடையாது அப்படிங்கிறதுல எனக்கு துளி கூட சந்தேகம் இல்ல. 95 சதவீதம் அப்டித்தான் இருக்காங்க. அரசாங்க அதிகாரிகள் தான் திட்ட உறபத்தியாளர்கள். அதாவது அரசாங்கத்தோடு மூளை. இந்த அரசாங்கம் நல்லா செயல்படுறதுக்கும் இந்த அதிகாரிகள் தான் காரணம். காரி உமிழ்ற மாதிரி நடந்துகிறதுக்கும் இந்த அதிகாரிகள் தான் காரணம். உதாரணமா இந்த ஆதார் கார்ட் திட்டத்த சொல்லலாம். இத அறிமுகப்படுத்தும்போது எதிர்கட்சி கடுமையா எதிர்த்தாங்க. ஆனா அவங்களே ஆட்சிக்கு வரும்போது அத வெகு தீவிரமா செயல்படுத்துனாங்க. LPG டைரக்ட் பெனிபிட் ட்ரான்ஸபரும் இதே போல கதை தான். மத்திய அரசு மட்டும் இல்ல. மாநில அரச எடுத்துக்கிட்டாலும் இதே மாடல் தான். அங்க ஹிந்தி பேசுற ஒரு தொலைநோக்கு அதிகாரி. இங்க தமிழ் பேசுற தொலைநோக்கு அதிகாரி. அவ்ளோதான் வித்தியாசம். ஆனா விதை அதிகாரி போட்டதுதான்.

இந்த மாதிரி சூழ்நிலைல இந்த அரசியல்வாதிங்க பேரை மட்டும் போட்டு நாடு சுபிட்சமா இருக்கிறதுக்கே இவங்க தான் காரணம்ங்கற ரேஞ்சுல விளம்பரத்தை பாக்கும்போது கொஞ்சம் இல்லை நிறையவே எரிச்சல் வருது. அப்ப அந்த திட்டத்தை ப்ரோபோசல், எஸ்டிமேஷன், EC, பிளானிங், ஸ்கெட்யூல்லாம் போட்டு அதை செயல்படுத்தறதுக்கு அவருக்கு மேல இருக்குற அதிகாரி மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஒவ்வொரு தடவையும் சளைக்காம புளி போட்டு விளக்கி எடுத்து சொல்லி அப்ரூவல் வாங்குற அந்த அதிகாரி என்ன தொக்கா. எத்தனை தடவை ஆட்சி மாறினாலும் திட்டங்கள் உற்பத்தியாகறதும் வெற்றிகரமா செயல்படுறதும் அதிகாரிகள் கைல மட்டும் தான் இருக்கு. அதை ரெககனைஸ் பண்ணினாலே மற்ற இன்டெர்மீடியேட் அதிகாரிகளுக்கு ஒரு வினையூக்கியா இருக்கலாம்.

அதவிட்டுட்டு புது புது சொக்காயா போட்டுக்கிட்டு கைய  மேல தூக்கிட்டு 210 டிகிரிக்கு பல்ல காமிச்சிட்டு போஸ் கொடுத்து விளம்பரபடுத்துறத நிறுத்திக்கிட்டா செலவு மிச்சம்.