செவ்வாய், பிப்ரவரி 02, 2021

மாஸ்டர்

தளபதியின் மாஸ்டர் படத்தை பொறுத்தவரையில், லோகேஷ் கனகராஜ் தனது தரத்தை கெடுத்துக்கொண்டார் என்று தான் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. பிரைமில் கண்டுகளித்தபோது அவ்வாறாகிய சிறு சந்தேகம் கூட வரவில்லை. முதல் படத்தினால் உண்டாகிய மாற்று சினிமா முயற்சியாளர் என்ற எதிர்பார்ப்பை,  தனது இரண்டாவது படத்தில், இயக்குனர் தக்கவைத்து கொள்ளவில்லை. அதுவே அவருடைய கேரியருக்கும் நல்லது. மாற்று சினிமா எடுத்த பல இயக்குனர்கள் இன்று அடுத்த படம் கிடைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போய்விட்டார்கள். ஆதலால் கமர்ஷியலை தனது பாணியில் சொல்ல முயற்சிப்பதை பாராட்டலாம். அவார்ட் வின்னிங்க் சினிமாவைக்காட்டிலும் ஒரு ஜனரஞ்சகமான படமே இயக்குனர்களின் வெற்றியை பறைசாற்றுகிறது; பலதரப்பட்ட மக்களிடத்தில் அடையாளப்படுத்துகிறது. மாநகரத்தை தொடர்ந்து இயக்கிய கைதியில் சில பல லாஜிக் மீறல்கள் இருந்தன. ஹீரோ சென்ட்ரிக்காக படம் செல்வதையும், வலிந்து திணிக்கப்பட்ட தந்தை மகள் பாசம் என சில காம்ப்ரமைஸ்களை உணர முடிந்தது. மாநகரத்தின் ஜானர் கைதியில் இல்லை. கைதியில் உள்ள குறைகள் மாஸ்டரில் ஓரளவேணும் பூசப்பட்டுள்ளன.



லோகேஷ், தளபதி, மக்கள் செல்வன், அனிருத் என இந்த கதம்பம் ஒரு பதமாகவே வெந்திருக்கிறது. சொல்லப்போனால், விஜய் ரசிகர்களுக்கு, இது டபுள் லெக்பீஸ் கிடைத்த பிரியாணி.  ரசிகர்களை அல்டிமேடாக திருப்திபடுத்தியுள்ளார் என்பதில் ஐயமில்லை. பவர்புல்லான வில்லன் கதாபாத்திரம், அதகள'மான BGM மற்றும் சூப்பர் ஹிட்டடித்த இரு பாடல்கள், லோகேஷின் ஸ்கிரிப்ட், விஜய்யின் எல்லாம் என ஒரு பெர்ஃபெக்ட் மூவியாகவே மாஸ்டர் தெரிகிறார்.

விஜயின் எல்லாம் என்பதில், நடனம், பாடல், நடிப்பு, டைமிங், ஏன் க்ளைமேக்ஸ் காட்சியின் சட்டையை களைந்து சண்டை போடுவதுவரை எல்லாமே நூற்றுக்கு நூறு. வாத்தி கமிங்க் சாங் ஒரு பெர்ஃபெக்ட் இண்ட்ரோ. 46 வயது என்றெல்லாம் சொல்லவே முடியாது. நடனமெல்லாம் சொல்லத்தேவையில்லை. டேகன் அவே. அமர்க்களமான ஸ்டைலிஷ் விஜய். அன்லிமிடெட் எண்டர்டெயின்மெண்ட். தனது ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். எம்.ஜி.ஆரின் வெற்றி புகழ் என எல்லாமுமே அவர் கட்டமைத்துக்கொண்டது. படத்தில் நடித்து பெரும் ரசிகர் கூட்டம் கூட்டி, பின் கட்சியில் இணைந்து இணைத்து என  மிகத்துல்லியமாக தனது சாம்ராஜ்யத்தை கட்டமைத்துக்கொண்டார். போலவே, மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட விஜய், இதே பாணியில் இன்னுமொரு ஐந்து வருடங்களில் கட்சி தொடங்கினால்....மார்க் மை வோர்ட்ஸ். தளபதி முதல்வனாகலாம்.


விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதை வரவேற்கலாம். பவானியின் கதாப்பாத்திரம் ஜே டியின் கதாபாத்திரத்திற்கு இணையாக equal ஸ்பேஸ் கொடுத்து உருவகபடுத்தபட்டதற்கு விஜய்யை பாராட்டலாம். வரவேற்ப்புக்குரிய மாற்றம். பவானியின் கதாப்பத்திரம் மட்டுமே மிரட்டியிருக்கிறதே தவிரே விஜய் சேதுபதியிடம் அதே நடிப்பு. கூர்நோக்கு இல்லம், அதை தவறாக பயன்படுத்தும் விதம் போன்றவை தமிழுக்கு புது உருட்டு. அவற்றை திரைமொழியில் படைக்கும்பொழுது, அதுவும் மாஸ் ஹீரோ மற்றும் மாஸ் நடிகர் என எல்லாவற்றையும் சமன் செய்வதில் சில தடுமாற்றங்கள் தெரிகின்றன.


லோகேஷின் இயக்கத்தில் சில பிளஸ் மைனஸ். வலிந்து திணிக்கப்பட்ட மாளவிகா மோகன் கதாபாத்திரம், அதற்கு ஒரு பாடல்,  போலவே ஆண்ட்ரியாவின் பாத்திரம், இறுதி காட்சியில் லாரி பைட் என சில. மாளவிகா சேஸிங் காட்சியில், லொகேஷன் குழப்பம் அன்னாரை திணறடித்திருக்கிறது. நூறு லாரிகளை ஒரு சேர வரிசைபடுத்தி மாஸ்டர் மற்றும் கைதியில் காட்சிபடுத்தியது இயக்குனரின் கிளிஷெவோ?. பிளஸ்சாக பல. கதாபாத்திரத்தேர்வு, விஜய் மற்றும் சேதுபதிக்கு பிறகு மனதில் நிற்கும்படியான நடிப்பை, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து பெற்றுக்கொள்ளும் அர்ஜூன் தாஸ். படம் நெடுகிலும் வரும் சில காட்சிகளின் முக்கியத்துவத்தை கிளைமேக்ஸில் தெளிவுபடுத்துவது என ஸிக்ரிப்டில் டீடைல்ட் மெனக்கெடல்கள் அசரடிக்கின்றன. மக்கள் செல்வன் முஷ்டியால் சுவற்றை குத்தி வலிமைப்படுத்துவதும், தளபதி தனது கைகாப்பை கல்லூரி தேர்தல் மற்றும் கபடி போட்டியில் உபயோகித்து பின் இறுதி காட்சியில் விஜய் சேதுபதியின் முட்டியை உடைப்பதுவரை காட்சியில் தேர்வு மற்றும் தெளிவு.


அயர்ச்சி தராது மூன்று மணி நேரம் படம் எடுக்கும் வித்தையை, மாயாவி விஜயின் உதவியோடு வெற்றிகரமாக நிறைவேற்றிருக்கிறார்.


மாஸ்டர்- தரமான செய்கை..