புதன், ஆகஸ்ட் 30, 2023

மத்தகம் - web series


மத்தகம் என்ற சொல்லுக்கு பொருள் - யானையின் நெற்றி. எந்த காரணத்திற்க்காக இந்த பெயர் வெப் சீரிஸிற்கு சூட்டப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஊரில் உள்ள அனைத்து ரவுடிகளும் பர்த்டே பார்ட்டிக்காக ஒன்று கூடும் இடத்தில் சுற்றி வளைத்து போலீஸ் நின்றால் மத்தகம் வெப் சீரிஸ். சுற்றி வளைத்த பிறகு என்ன செய்யப்போகிறார்கள் என்பது பார்ட் 2 போல.

மிடுக்கான துடுக்கான DC யாக அதர்வா. கேங்ஸ்டராக மணிகண்டன். இவர்கள் இருவருக்குள் நடக்கும் எலியும் பூனையும் விளையாட்டே மத்தகம்.

அது என்னவோ தெரியவில்லை. கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருக்கிற காவல் அதிகாரி என்றாலே மனைவியின் அன்பை புரிந்து கொள்ள முடியாத அல்லது எமெர்ஜென்சி காலை கூட அட்டென்ட் பண்ண முடியாத புரிதலுடன் தான் பாத்திரத்தைப் படைக்கிறார்கள். அது போன்ற 999வது காவல் அதிகாரியாக அதர்வா.



மணிகண்டன். ரவுடி படாளம் சேகர் கதாப்பாத்திரம். ட்ரிம் செய்யப்படாத தாடி. குட் நைட் படத்தில் கூட இதுபோன்று தான் இருந்தார். ஆக இதில் மிரட்டும் வில்லனாக நம்மை நம்பவைப்பதற்கு இரண்டு மூன்று எபிசோட் வரை ஆகிறது. முதல் எபிசோடில் இருந்து ஊரில் உள்ள அனைத்து ரவுடிகளையும் பர்த்டே பார்ட்டிக்கு வருமாறு அழைக்கி இல்லை இல்லை மிரட்டுகிறார். எல்லோரும் நவகிரக சுற்றுலா செல்வது போல டெம்போ ட்ராவலரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மற்ற ரவுடிகளுக்காக வெய்ட் செய்கிறார்கள். பள்ளி சுற்றுலாவில் எல்லா பிள்ளைகளும் பஸ்ஸில் ஏறி விட்டதா என்று கணக்கெடுப்பது போல் ஒரு லிஸ்ட் எழுதி டிக் வேறு.

சிட்டி கமிஷனராக ஒரு பெண் கதாபாத்திரம். மிடுக்கான தோரணை மற்றும் கட்டளைகளுக்கு இயல்பாக பொருந்திப் போகிறார் இராணி. அமைச்சருக்கு நிகராக சரி சமமாக எதிர்த்து பேசும் சீன்கள், அதர்வா மற்றும் இராணி காம்பினேஷன் சீன்கள் ஆகியவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

ஊழல் மற்றும் ரவுடியிசம் செய்யும் அமைச்சர் கதாப்பாத்திரத்தில் அளவெடுத்தது போல் நச் என பொருந்திப் போகிறார் இளவரசு.

ஐந்து எபிசோட்கள். ஒவ்வொன்றும் நாற்பது நிமிடங்கள். ஒவ்வொரு எபிசோடிலும் இரண்டு மூன்று ரவுடிகள் அறிமுகம் மற்றும் அறிமுகப்படுத்தும் விதம் எல்லாமே விறுவிறுப்பாக இருக்கிறது. அந்த இருநூறு நிமிடங்களும் அதர்வா மற்றும் மணிகண்டன் நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தாலும் காட்சிகள் வேகமாக நகரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பது சலிப்படையாமல் இருக்க உதவுகிறது.

திவ்யதர்ஷினி, வடிவுக்கரசி என துணை கதாப்பாத்திரங்கள். முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் DC இரானியின் கணவனாக வருகிறார். 200 நிமிடங்களில் இரண்டு மூன்று வசனங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் என்று அதிர்ச்சியடையும் நேரத்தில் இனி நான் நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக இறுதி எபிசோடில் சூளுரைப்பதுடன் சுபம் போட்டு விடுகிறார்கள்.

மொத்தத்தில் பொலிட்டிக்கல், த்ரில்லர், கேங்ஸ்டர் வகையறாக்களை மிக்ஸ் செய்துவ வித்தியாசமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பார்க்கலாம். 3.5/5

 

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2023

பாதுகாப்பாக பயணிப்போம்

இரண்டு நாட்களுக்கு முன்பு படித்த இந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளித்தது.

சந்திராயன் மூன்று நிலவில் தரையிறங்கிய அதே கணத்தில் திருநெல்வேலியில் இருந்து மூன்று நபர்கள் அது சம்பந்தமாக மேலும் தகவல்களை பெறுவதற்காக நம்பினாராயணனை பேட்டி காணும் பொருட்டு அன்று இரவே கிளம்பி இருக்கிறார்கள். பேட்டி எல்லாம் முடிந்து இரவு 12 மணிக்கு மேல் திருநெல்வேலி நோக்கி காரில் திரும்பி இருக்கின்றனர். அதிகாலை இரண்டு முப்பது அளவில் ஒரு சுங்கச்சாவடியின் அருகே ரோட்டில் இருக்கும் மீடியனில் இடறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. காரை ஓட்டி வந்த கேமரா மேன் ஸ்பாட்டிலேயே இறந்திருக்கிறார். மீதி இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இறந்து போன கேமராமேனுக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. 



கேட்கவே சற்று பதைபதைப்பாக இருக்கிறது அல்லவா?

காரோ டூவீலரோ எதுவாகினும் இரவு பயணத்தை தயவு செய்து தவிர்த்து விட வேண்டும். நாம் ஒன்றும் ப்ரொபஷனல் டிரைவர் அல்ல. இரவில் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு முன்பாக சேர்ந்து விடக்கூடிய தூரம் என்றால் ஒட்டிச்செல்லலாம். அதையும் தாண்டி இரவு பன்னிரண்டு அதிகாலை மூன்று மணிக்கு எல்லாம் போயே தீருவேன் என்று காரை கிளப்பிக் கொண்டு செல்லக்கூடாது.

காலை ஆறு மணி முதல் இரவு ஏழு மணி வரைக்கும் அயராது வேலை செய்து கொண்டு இருக்கும் நமது மூளை மிகவும் களைப்படைந்து இருக்கும். மனம் கிளம்பு கிளம்பு என்றாலும் உடலும் மூளையும் சோர்வாக இருப்பதை உணர முடியும். அது போன்ற நேரங்களில் எல்லாம் தயவு செய்து இரவு பயணத்தை தவிர்த்திடுங்கள். போயே ஆகா வேண்டும் எனில் உடன் ஒருவரை அழைத்துச் செல்லலாம். இருவரும் மாற்றி மாற்றி ஓட்ட வேண்டும். அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து நிமிடங்கள் ஒய்வு எடுத்துச் செல்ல வேண்டும். எங்கள் அலுவலக சீனியர் ஒருவர் அறிவுரை இதுதான். இரவு வண்டி எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்பு நான்கு மணி நேரம் தூங்கி விடுவார். தவிர கார் ஓட்டும்பொழுது அயர்ச்சியாக இருந்தால் நிப்பாட்டி டீ. அல்லது ஒரு குட்டித் தூக்கம். முழித்த பின் முகம் கழுவி தலைவாரி குட்டிகுரா பவுடர் அடித்துவிட்டுத்தான் கிளம்புவார். பிரெஷாக இருக்கும் என்பது அவரது கூற்று. 

அதேபோன்று பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை மணிக்குள் இந்த இடத்தை அடைந்து விட வேண்டும் என்ற இலக்கை தயவு செய்து மூளைக்குள் இருந்து அழித்து விடுங்கள். பல காரணங்களை ஒட்டி நாம் பயணம் செய்யும்பொழுது தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இத்தனை மணிக்குள் செல்ல வேண்டும் அல்லது செல்ல வேண்டிய தூரத்தை நாம் இன்னும் கடக்க வில்லையே என்று இன்னும் வேகமாக ஓட்ட ஓட்ட எந்த கணத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. அரை நொடி கண் அயர்ச்சி வாழ்நாளையே புரட்டிவிடும். ஆகவே டார்கெட் டைம் வைத்து டிரைவிங் செய்வதை தயவு செய்து அவாய்ட் செய்து விடுங்கள்

இறந்து போனவருக்கு அந்த நொடி மட்டுமே துயரம். ஆனால் அவரை சுற்றி உள்ளவர்கள் அதற்கடுத்த ஒவ்வொரு நொடியும் நரகம் தான்.  

பாதுகாப்பாக பயணிப்போம் 

ராம்குமார் - ஸ்டாண்ட் அப் காமெடி

ஸ்டாண்ட் அப் காமெடியை ரீல்ஸிலும் ஷார்ட்ஸிலும் கண்டதுண்டு. இதுவரை நேரில் பார்த்ததில்லை. அந்த குறை இன்று தீர்ந்தது.

பட்டர்கப் ஈவென்ட்ஸ் முன்னெடுப்பில் கல்யாணி கவரிங் மற்றும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கோ ஸ்பான்சர் செய்த ராம்குமாரின் காமெடி கலாட்டா கண்டு களித்தோம். 



திருநெல்வேலியில் பிறந்தவர் ராம்குமார். தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் பயின்று, திருநெல்வேலி அரசு பொறியியற் கல்லூரியில் டிகிரி முடித்து Ford, hexaware போன்று கிட்டத்தட்ட ஆறேழு கம்பெனிகளில் பணிபுரிந்த பின் 'this is not my cup of tea' என்று புரிந்து கொண்டு  தனது உயிர் நாடியான பேச்சையே தொழிலாக தகவமைத்துக்கொண்டுள்ளார் என்றால் சாலப்பொருந்தும். ஆமாம். பள்ளியில் இருந்தே பட்டிமன்ற பேச்சில் ஆவல் கொண்டு, கலோரியில் அதை கூர்தீட்டியுள்ளார். IT கம்பெனியில் பணிபுரிந்தாலும் ஆங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் என்பது போன்ற அந்த கனல் இவரைத் தூங்க விடாமல் துரத்திக்கொண்டே இருந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு இடங்களில் தலை காட்டினாலும் ஒரு கட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்த பணியைத் துறந்து முழு நேர stand up comedian ஆக வளம் வருகிறார். 

ஷோவைப்பற்றி சிலத் துளிகள். 

நாங்கள் கண்டு களித்தது ஒரு மணி நேர ஷோ. ஷோ ஆரம்பித்தது முதல் இறுதிவரை வாய் பிளந்து வெடிச்சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தோம் என்றால் மிகையில்லை. 

அனைத்து வயதினரும் கலந்து கொண்டிருந்தனர். எட்டு வயது முதல் எழுபது வயது வரை. அனைவரும் ரசித்து சிரித்தனர்.

பொதுவாக stand up comedy ஷோக்களில் ஆடியன்ஸை கேள்வி கேட்டு அவர்களையே கேலி செய்து சில நேரங்களில் சங்கடத்துக்குள்ளாக்கி விடுவார்கள். ராம்குமாரும் ஆடியன்ஸை engage செய்தாலும் எவரையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கவில்லை. மாறாக அவர்களும் ரசித்து சிரித்தனர். 

முக்கியமாக தற்பொழுதுள்ள stand up comeidanகளில் இவர் ஒருவர் மட்டுமே clean family entertainer என்று சொல்லலாம். டபிள் மீனிங் ஜோக் இல்லவே இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் ஒருவர் கூட முகம் சுளிக்கவில்லை.

தாய்மார்கள் கூட்டம் சரிபாதிக்கு மேல். கூட்டத்தை கெட்டியாகப் பிடித்துவிட்டார். 

கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சென்னை, பெங்களூர்ம் ஹைதராபாத், சிங்கப்பூர் என்று பல ஊர்களில் இவர் ஷோக்கள் நடந்துள்ளது. எங்கு நடந்தாலும் அந்த ஊரின் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னை தயார் செய்துகொண்டு மக்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் யுக்தியில் தெரிகிறது அவரின் கடும் உழைப்பு.  உதாரணமாக IT base இல்லாத ஊர்களில் IT சம்பந்தப்பட்ட ஜோக்குகளை குறைத்துக்கொண்டு ஜனரஞ்சகமான மற்ற ஜோக்குகளை விசிறிவிடுகிறார். மக்களுடன் இவர் கனெக்ட் ஆகிக்கொள்ளும் பாங்கே அலாதியானது.

ஷோ முடிந்த பின் அத்தனை பெரும் காத்திருந்து இவருடன் selfie எடுத்துக்கொண்டது உணர்த்துகிறது இவரின் வெற்றியை. 

எத்தனை பேருக்கு தன்னுடைய வேட்கையே தொழிலாக அமையும் வாய்ப்பு கிட்டும்? இருகப்பற்றிக்கொள்ளுங்கள். 

எங்களுடைய உடலையும் மனதையும் லகுவாக்கும் அற்புதப் பணியை மேற்கொண்டிருக்கும் தாங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் ராம்குமார்.   

சனி, ஆகஸ்ட் 26, 2023

புருஷன் பொண்டாட்டி

புருஷன் பொண்டாட்டி விவகாரத்துக்குள்ள போகவே கூடாது இல்லனா இவனுங்க நம்மள பைத்தியம் ஆக்கிடுவானுங்கனு இந்த சம்பவம் மூலமா புரிய வந்துச்சு.

ஆபிஸ்ல கூட வேலை பாக்குற ஒருத்தர். அரேன்ஜ்ட் மேரேஜ். வெகுளி. நினைக்கிறத பேசுற டைப்பு. எங்கேயுமே. எப்போவுமே. மலையாளத்துல ஒரு பழமொழி உண்டு. 'சுத்தன் துஷ்டண்டே பலஞ்செய்யும்'. அதாவது ரொம்ப நல்லவனா இருக்குறவன் கிட்ட சகவாசம் வச்சுக்கிட்டா கெட்டவனால நடக்குற அளவுக்கு பிரச்சினை நமக்கு உண்டாகும் அப்படிங்கிறது தான் அது. யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்மாளுக்கு நூறு சதவீதம்.
ஒரு நாள் ஆபிசுக்கு வரும்போதே செம கோவத்துல வந்தார். வழக்கமா வீட்டம்மா கிட்ட வாங்கி கட்டிருப்பாரு போலன்னு நினைச்சுகிட்டு இருந்தோம். ரொம்ப பதட்டமா வேர்த்து கொட்டுற மாதிரி இருந்தோடனே போய் கேட்டோம்.
'என்ன ஆச்சு சார்?'
'வீட்ல சண்டை'
'அது ஒன்னும் புதுசு இல்லையே'
'இந்த தடவ ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சுங்க'
'என்ன ஆச்சு?'
'அடிச்சுட்டேன்'
எங்களுக்கெல்லாம் காது சரியா கேட்டுச்சானு ஒரு டவுட்டு.
'கரெக்டா சொல்லுங்க. அடி வாங்கினீங்களா, அடிச்சீங்களா?'
முறைச்சுக்கிட்டே, 'அட, நான் தான் சொல்றேன்ல. அடிச்சிட்டேன்னு'
கூட இருந்த ஒருத்தன், 'அப்டி தான் சார். நல்லா மொத்தனும். இவளுக தொந்தரவு தாங்க முடியல. எப்ப பாத்தாலும் நம்மள டார்ச்சர் பண்ணிக்கிட்டு, அப்டியே தலையை புடிச்சி கதவுல ரெண்டு சாத்து..'
'யோவ், நீ வாங்குற தர்ம அடிக்கு ஒன்னும் பண்ண முடியாம இங்க வந்து புலம்பிட்ருக்க. கொஞ்சம் சும்மாரு. இவரு மேட்டர் என்னனு பாப்போம். நீங்க சொல்லுங்க சார்'
'காலைல ஒரு பிரச்சினை. ரொம்ப பெரிசாயிடுச்சி. என்ன என் புள்ள முன்னாடி அடிச்சிட்டா. ஒரு மூணு நாலு தடவ இருக்கும்'. கன்னத்தை தடவிகிட்டாரு.
'என் பைய்யன் முன்னாடி அடிச்சது எனக்கு பொறுக்கல. அதான் திருப்பி ஒன்னு வச்சிட்டேன்'
அதாவது பார்ட்டி எப்பவும் வாங்கிட்டு தான் இருக்கு. ஆனா இன்னைக்கு பைய்யன் முன்னாடி அடிச்சதுனால டென்ஷன் ஆகி முத்த தடவையா திருப்பி கொடுத்துருக்கப்புல. அதாவது buy 4 get 1 மாதிரி.
'சரி, விடுங்க. சார். இதெல்லாம் சகஜம் தான். சரி ஆயிடும்'
'அது தெரியும் சார்.'
'அப்புறம் ஏன் இவ்ளோ டென்சன்?'
'இதுவரைக்கும் நான் அவளை அடிச்சது இல்ல. அடிச்சதுனால ரொம்ப டென்ஷன் ஆகி சத்தம் போட ஆரம்பிச்சிட்டா. பக்கத்து வீட்டுல வந்து வேடிக்கை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.'
'மெயில் அனுப்பும்போது CC ல போடுற பாஸ் பேரு மாதிரி தான்யா பக்கத்து வீட்டுக்காரங்க. வெறுமினே வேடிக்கை பாப்பானுங்க. அது நடக்கறது தானே'
'எல்லாரும் பாக்குறதுனால இன்னும் ஹிஸ்டெரிக் பேஷண்ட் மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டா. நானும் டென்சன் ஆகி 'சாயங்காலம் வரும்போது உயிரோடவே இருக்காத. செத்து தொலை' அப்டினு சொல்லிட்டேன். அதான் பயமாயிருக்கு. இப்போ போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறா'
நாங்கெல்லாம் பதறிப்போய் அவங்களுக்கு போன் போட்டா அவங்க லபோ திபோனு கத்துறாங்க. என்ன பண்றதுன்னு தெரில. 'சார். இது கொஞ்சம் சீரியஸ் தான். தயவு செஞ்சு வீட்டுக்கு போய் என்ன ஆச்சுன்னு பாருங்க. ஏதாவதுனா உடனே போன் பண்ணுங்க'
பார்ட்டி உடனே கிளம்பி விட்டது.
அவரு போய்ட்டாலும் எங்களுக்கு எல்லாருக்குமே பதட்டம். ஏதாவது ஆகிடுமோ அப்டினு. ஒரு ரெண்டு மூணு மணி நேரம் கழிச்சி போன் பண்ணி பாக்குறோம். எடுக்கல. பார்ட்டி இப்போதான் புதுசா வீடு மாறியிருக்கு. அதனால ஏரியா தெரிஞ்சாலும் அட்ரஸ் தெரில. ஒவ்வொருத்தர் நம்பர்லேந்து போன் மாத்தி மாத்தி போடுறோம். எடுக்கல. நைட்டு தூங்குற வரைக்கு இதான் வேலையா இருந்துச்சு. 'save சோபிக்கண்ணு' அப்டினு க்ரூப் மட்டும் தான் ஆரம்பிக்கல. மத்தபடிக்கு எல்லாருமே சாட்ல மாத்தி மாத்தி அப்டேட் கேட்டுட்டு இருந்தாங்க. விடிஞ்சா பெரிய சம்பவம் தான் போலனு தூங்கியாச்சு. ரெண்டு பேரு தூக்குல தொங்குற மாதிரி கனவு வேற. ஒரே பீதி.
காலைல ஆபிஸ் வந்தோம். நம்மாளு ஒண்ணுமே நடக்காது மாதிரி உக்காந்துருக்காரு. சரி ஒன்னும் ஆகல. அவரே கூல் டவுன் ஆயிட்டு வரட்டும் அப்டினு விட்டாச்சு. மதியம் வரைக்கு ஆளு வரல. சரி நம்மளே கேப்போம் அப்டினு போய்,
'என்ன சார். பிரச்சினை சரி ஆயிடுச்சா?'
'எது சார்?'
'என்னது எதுவா? நேத்து புலம்பினீங்களே. அதான்'
'ஓ அதுவா. அது ஒன்னும் பிரச்சினை இல்ல சார்.'
'அப்புறம் ஏன் போன் எடுக்கல'
'சத்தத்துல ஒண்ணுமே கேக்கல சார்'
'என்னது. திரும்பவும் சண்டையா?'
'இல்ல இல்ல. Yuvan live in concert போய்ட்டோம். அதான்' அப்டின்னாரே பாக்கலாம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 13, 2023

அப்பாஸ்


காதல் தேசம் தான் இவரோட முதல் படம். 97ல வெளிவருது. அதாவது அவரோட 22 வயசுல. 2014 வரைக்கும் பீல்ட்ல இருக்குறாரு. கிட்டத்தட்ட 35 படங்கள் தமிழ்ல பண்ணிருக்கார்.

சினிமா கேரியர்லேயே அதிக multistarrer நடிச்ச ஒரே ஹீரோ இவர்தான்னு நினைக்கிறேன். அதனாலேயோ என்னவோ இவரோட நடிப்புனால பெரிய தாக்கம் இருந்ததில்லை.

ஆனா கடந்த வாரம் இவரு விகடன்ல கொடுத்த பேட்டி இவர் மேல மதிப்பை ரொம்ப அதிகப்படுத்திருச்சி.



ரெண்டு விஷயம்.

இவ்ளோ பெரிய இடைவெளி எதுக்கு அப்டிங்கற கேள்விக்கு ரொம்ப ஓபனா பதில் சொல்லி்ருந்தார். ' படம் இங்க சரியா போகலை. தவிர என்னோட பசங்க கூட இருக்கிற ஸ்பேஸ் கம்மியாயிடுச்சி. அதனால ஒரு ப்ரேக் தேவைபட்டுச்சு. நியூசிலாந்து கிளம்பிட்டேன். அங்க போய் பெட்ரோல் ஸ்டேஷன்ல வேலை பாத்தேன். கார் மெக்கானிக்கா ஒர்க் பண்ணினேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினேன் ' அப்டின்னு சொல்றார். நம்ம கூட படிச்ச பயலுவ அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா அப்டின்னு போய் ஆரம்பத்துல சோத்துக்கு சிங்கி அடிச்சாலும் உண்மைய சொல்லமாட்டனுங்க. ஆனா இவரு ஒபனா சொன்னது ரொம்பவே பிடிச்சிருந்தது. 

ரெண்டாவது, மேனேஜர் மூலமா எல்லா படங்களையும் பாத்துகிட்டதால பல நல்ல படங்கள் மிஸ் பண்ணிருக்கார். அதனால உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையானு கேட்டதுக்கு ' எனக்கு கிடைக்கில அப்டிங்கற வருத்தத்தோட மத்தவங்களுக்கு அது மூலமா ஒரு நல்ல ப்ரேக் கிடைச்ச சந்தோஷம் இருக்கு ' அப்டின்னு சொல்றார்.

தவிர அப்பாஸ்னாலே 'ஹார்பிக்' அப்டிங்கறது தான் ஞாபகம் வரும். படம் இல்லாத சமயங்கள்ல எனக்கு ஹார்பிக் மூலமா வந்த வருமானம் ரொம்ப உதவிகரமா இருந்துச்சுனு சொல்லிருக்கார்.

சக மனிதனாக வீ லவ் யூ அப்பாஸ் ❤️

#விகடன் #Vikatan Vikatan EMagazine #actorabbas

சில பீல் குட் மூவிஸ்

 1. அப்பத்தா

 
ப்ரியதர்ஷன் இயக்கம். ஊர்வசி நடிப்பு. ஊறுகாய் போட்டு வியாபாரம் செய்து பிழைப்பை ஒட்டி கொண்டிருக்கிறார் ஊர்வசி. ஊறுகாய் என்றுபள்ளியில் கிண்டல் பண்ணுவதினாலேயே அவரது மகன் அவரை வெறுக்கிறான். ஒரு கட்டத்தில் மேல் படிப்புக்காக ஊரிலிருந்து கிளம்பியவன் கிளம்பியவன் தான். ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொருமுறை என்று ஊர்வசியை அழைத்து கடமைக்கு பேசுகிறான். இப்படிப்பட்ட நிலையில் ஊர்வசிக்கு அவனது மகனிடமிருந்து அழைப்பு வருகிறது. குதூகலமாக ஊருக்கு செல்லும் ஊர்வசிக்கு அங்கு காத்திருப்பது பேரதிர்ச்சி. பாசத்தினால் அழைத்திருப்பான் என்ற எண்ணத்தில் மண் விழுகிறது. சிறுவயதில் இருந்தே பார்த்து பயப்படும் நாயை பார்த்துக்கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறாள். மகன் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் அந்த பதினைந்து நாட்களும் அவள் நாயை பார்த்துக் கொள்ளவேண்டும்.


 

ஏமாற்றம் அவளுக்கு மட்டுமில்லை நமக்கும் வருகிறது. முதலில் பயந்து ஒதுங்கி ஓடினாலும் இரண்டு மூன்று நாட்களில் நாயிடம் அன்பு ஏற்படுகிறது. அவரது கலகலப்பான பேச்சு, கரிசனம், ஊறுகாய் ரெசிப்பி என பல காரணங்களால் அபார்ட்மெண்ட் வாசிகளுக்கு நெருக்கமாகிறார். சுற்றுலாவில் இருந்து திரும்பி வரும் அவரது மகன், நாயுடன் மல்லுக்கட்டி முதல் நாளில் கந்தகோலம் ஆகியிருக்கும் அபார்ட்மெண்ட் பார்த்து இவரிடம் கடுமையாக நடந்து கொள்ள ஊர்வசி வருத்தத்துடன் கிராமத்துக்கு திரும்புகிறார்.

 
கொஞ்சம் சோகமான கதையாகத் தெரிந்தாலும் படம் முழுவதும் மெலிதான புன்னகை நமது உதட்டோரத்தில் தேங்கி நிற்கிறது. காரணம் ஊர்வசியின் கலகலப்பான நடிப்பு. நாயுடன் அவர் மல்லுக்கட்டும் சீன்கள் யதார்தத்துக்கு சற்று தொலைவில் நின்றாலும்  சிரிப்பை வரவழைக்கின்றன.  அங்கங்கு சென்டிமென்ட் சீன் எட்டிப்பார்க்கிறது. கண்ணில் வேர்வை வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் பத்மஸ்ரீ வரைக்கும் சென்று காதில் பூ சுற்றியிருக்கிறார்கள்.

 
என்றாலும் குடும்பத்துடன் குதூகலமாய் பார்க்க இந்த அப்பத்தா ஒரு நல்ல சாய்ஸ் தான்.

 

2. உடன்பால்



பெற்ற பிள்ளைகள் கடன் தொல்லை தாங்காமல் மற்றும் வியாபாரம் செய்வதற்கு தேவைப்படும் முதலீட்டுக்கான பணத் தேவைக்காக தந்தையின் இறந்த உடலை வைத்து அடிக்கும் கூத்தே உடன்பால். இறந்த பிறகு உறவினர்கள் வந்து ஊற்றும் பாலிற்கு பெயரே உடன்பால். சார்லி தான் அந்த தந்தை. தனது மகன் மருமகள் மற்றும் பேரனோடு காமிக்கும் பாசத்தில் நாமே உருகிவிடுவோம். கலகலப்பாக இருக்கிறார்.

 
கதையின் கரு இவ்வளவு சோகமாயிருந்தாலும் அவ்வளவு கல் நெஞ்சக்காரர்களான வாரிசுகளின் செயல்களை எள்ளி நகையாடியிருக்கும் ஒரு வாசிப்பாங்கான படம் தான் உடன்பால். மேக்கிங் அருமையாக இருக்கிறது. ஒரு வீட்ற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தாலும் அலுப்பு தட்டவில்லை. அத்தனை பிள்ளைகள் இருந்தும் அவர்களது சுயநல பண வெறிக்காக எங்கோ ஒரு இடத்தில் நாடு ரோட்டில் அநாதை பிணமாக கிடக்கிறார் சார்லி. எவ்வளவுக்கெவ்வளவு கலகலப்பாக நடித்தாரோ அந்த அளவுக்கு இறுதி காட்சியில் கண் கலங்க வைத்து விடுகிறார். தாராளமாக குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு (பா)டம் தான் உடன்பால்.



3.
எறும்பு

 
மீண்டும் சார்லி. முதல் தாரத்திற்கு பிறந்த இரு குழந்தைகள்அத பின்பு மறுமணம் முடித்து ஒரு சிறு குழந்தை என மூன்று குழந்தை மற்றும் மனைவி அம்மாவுடன் வாழும் ஒரு கடனாளி. கூலி விவசாயி. படத்தின் முதல் காட்சியில் இருந்து ஈர்க்க துடங்கி விடுகிறார் இயக்குனர். குழந்தைகளை வெறுமனே சாப்பிட ஹோட்டலில் விட்டுள்ளேன் என்று சார்லி கூறும் டயலாக் சொல்லாமல் சொல்லிவிடுகிறது அவள் இரண்டாம் தாரம் என்று.


37500
கடனை அடைப்பதற்காக பேசாத பேச்செல்லாம் பேசும் வட்டிக்காரராக பட்டாபி பாஸ்கர். இரு குழந்தைகளில் அக்காவாக மோனிகா மற்றும் தம்பியாக சக்தி. இருவருமே சிறந்த தேர்வு. சொல்லப்போனால் இரண்டு பேர் மட்டுமே இந்த கதையில் பிரதான கதாப்பாத்திரங்கள். டைட்டில் சாங் மற்றும் கதையினூடே வரும் மூன்று பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. சித்தி இல்லாத நேரத்தில் மோதிரத்தை தன் மூத்த பேரனுக்கு போட்டு அழகு பார்க்கும் ஆயா, மோதிரத்தை தொலைத்துவிடும் தம்பி, தன் சித்திக்கு விவரம் தெரிவதற்குள் எப்படியாவது மோதிரத்தை வாங்குவதற்கு காசு சேர்க்கத் துடிக்கும் அக்கா, வெள்ளேந்தியான சிட்டு கேரக்டரில் ஜார்ஜ் மரியான் என எல்லோருமே பாசத்தை டன் கணக்கில் பொழிந்திருக்கின்றனர்.  


முயல் பிடிக்கும் காட்சி, சிட்டுவின் பொம்மை போன், மல்லாட்டை உரிக்கும் காட்சி, உண்டியல் திருட்டு, பேபி மோனிகா அம்மா என்று வெடித்து அழும் இடம் என படம் முழுவதும் கவிதை போல நிறைய காட்சிகள் ததும்பி வழிகின்றன. பணத்தை புரட்டுவதிலேயே சார்லியின் வாழ்க்கை நகர்வது ஒரு சராசரி விவசாய கூலியின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. சித்தி வீட்டிற்கு திரும்ப வருவதற்குள் மோதிரத்தை வாங்கி விட வேண்டும் என்கிற பதைபதைப்பு மாஸ்டர் சக்திக்கு மட்டுமல்ல நமக்கும் தொற்றிக்கொள்கிறது அல்லவா, அதுதான் இயக்குனர் சுரேஷின் வெற்றி. அக்கா தம்பி பாசம், ஆயாவின் அன்பு, தந்தையின் அனுசரணை, மாற்றாந்தாய் கொடுமை இதற்கு நடுவில் இருக்கும் ஒரு அழகிய வாழ்க்கை என்று நம்மை ரசிக்க வைத்திருக்கிறது இந்த எறும்பு.


பெஸ்ட் பீல் குட் மூவி