புதன், டிசம்பர் 18, 2024

நந்தன்

 

கிராமங்களில் வளர்ச்சியிலேயே நாட்டின் வளர்ச்சி உள்ளது எனபது காந்தியின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனை ஸ்திரப்படுத்தும் முனைப்பில் கொண்டுவரப்பட்ட ஊராட்சி அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் எப்படி பொம்மை போல ஆதிக்க சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் என்ற தற்கால சமூகத்தின் சாட்சியாக நந்தன் திரைப்படம். ரிசர்வ் தொகுதியை எடுத்து களமாடிய விதம் கூரையில் நின்று உரக்க கூவியது போல் உள்ளது. அருமை. வாழ்த்துக்கள்.

இவ்வளவு பட்டவர்த்தனமாக ஆதிக்கச் சாதியை எள்ளி நகையாடி குற்றம் சாற்றி ஒரு படம் வந்ததில்லை என்றே தோணுகிறது. ஒரு துணை கதாபாத்திரத்தின் பெயரை படத்திற்கு பெயராக வைத்திருப்பது இதுவே முதல் முறை.

எழுத்து இயக்கம் தயாரிப்பு என்று அனைத்தையும் ஒருங்கே செய்திருக்கிறார் இரா சரவணன். கதையின் வீரியம் கருதி இதனை தயாரிக்க மற்றவர்கள் முன்வராது போயிருக்கலாம். சசிகுமார் போன்றதொரு பிம்பம் இந்த படத்திற்கு துணை நில்லாதிரிந்திருந்தால் இந்த மட்டும் கூட கவனிமின்றி போயிருக்கும். இடைவேளையில் ஊராட்சித் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்து பின் பழி வாங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், நாற்காலியில் உட்காருவதே இங்கு முதல் வெற்றி தான் என்று யதார்தத்துக்கு அருகாமையில் படமாக்கிய சரவணனுக்கு பூங்கொத்து.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் வெறும் ஒரு சதவீதம் தான். அவர்களுக்காக பொது வெளியில் பேசப்படவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

அதே 20 திகதி செப்டம்பரில் வெளிவந்த லப்பர் பந்தின் சூழலில் நந்தன் கவனிக்கப்படாமல் போயிருந்தாலும், இதுபோன்ற படைப்புகள் சமூக அநீதிகளை மேலும் வெளிக்கொணரட்டும். தோள் கொடுப்போம். 

பிரைமில் காணக்கிடைக்கிறது

 


வீட்டில எலி வெளியில புலி.

 


அலுவலகத்துல வேலை பாக்கிறவர் அவர். 

உயர் அதிகாரி. பெரிய பெரிய மேலாளர். பாக்குறவனே பார்வையாலேயே மிரள வைக்கிற டைப். சொன்னா சொன்னதுதான். கட்டளையே சாசனம் டைப். எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. அப்படி ஒரு டெரர். வேலைலையும் exceeding expectation கேட்டகிரி தான். ஒரு கெத்தா வந்துட்டு போயிட்டு இருந்தார்.  

அவரு பைய்யனுக்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் கழிச்சி தான் தெரிய வந்துச்சு விஷயம். கத்திரிக்காய் முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தான ஆகணும். வந்திருச்சு. இவரும் பெரிய இடம். பொண்ணு எடுத்த இடமும் பெரிய இடம் தான். அதாவது ஸ்டேட்டஸ் மெயின்டெய்ன் பண்ணி எடுத்துட்டாங்க. ஆனா மனுஷத்தன்மையா கொஞ்சம் கூட நடந்துக்கல. 

ஒத்தைப் பொண்ணா செல்லமா வளர்ந்த புள்ளைய மகளா பாக்கலைனாலும் கூடப் பரவால்ல. மனுஷியா கூட மதிக்கல. மருமகப்புள்ளைய படாத பாடு படுத்திருக்கு அந்த அம்மா. அதாவது டெரரொட சம்சாரம். சமைக்க வீடு கூட்ட துணி துவைக்க தோட்டம் அப்படி இப்படின்னு எல்லா வேலையும் இது மேல கட்டிருக்கு. இத்தனைக்கும் கவர்ன்மென்ட் குடுக்குற வேலையாள் ரெண்டு பேரு வீட்டுல உண்டு. அவங்க ரெண்டு பேரையும் சும்மா நிக்க வச்சி இந்த பொண்ணை வேலை வாங்கிருக்கு. மதிய வேளைல செருப்பு போடாம மொட்டை மாடிக்கு துணி காய போட சொல்லிருக்கு. எல்லாரும் சாப்டு முடிச்சப்புறம் தான் இந்த பொண்ணு சாப்பிடணும். கீழ உக்காரணும் அது இதுனு ஏகப்பட்ட ரூல்ஸ். கொஞ்ச நாள் பொறுத்த இந்த பொண்ணு அப்புறம் ஃபோன் போட்டு அழுக, அவரு அப்பா உடனே வந்து கூட்டிட்டு போயிட்டார். 

சமரசம் பேச வந்திருக்காங்க. இத்தனைக்கும் அந்த பைய்யன் ஒரு வார்த்தை கூட சப்போர்ட் பண்ணலை. சமரச பஞ்சாயத்துல தான் அந்த பொண்ணு சொல்லிருக்கு அவன் ஒரு ஆம்பளையே இல்லைனு. கழுத்துல கிடந்த தாலியை கைல கழட்டி குடுத்துட்டு 'போ வெளியேனு' விரட்டிடுச்சு.  

நம்ம டெரர் ஆசாமி என்ன பண்ணாருனுதான கேக்குறீங்க. அவ்வளவு களேபரம் நடந்தும் ஆளு ஒரு வார்த்தை கூட பேசாம மிக்சர் சாப்டுட்டு இருந்திருக்கார். வீட்டுல அந்த அம்மா நில்லுன்னா நிப்பாராம். உக்காருனா உக்காருவாராம். மொத்தத்துல மாடர்ன் கட்டப்பாவா இருந்திருக்கார். ஆனா வெளில என்னமோ டெரர் ஃபேஸ். தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு. 

இப்போ ரிட்டையர் ஆகி போயிட்டார். போனப்புறம் தானே புறம் பேசணும்.  

வீட்டில எலி வெளியில புலி.


பிரத்யேகப் பாதை

 

விழிச்சவால் கொண்டவர்களுக்கான நடைபாதை இது. 

நீட்டமான சிறு சிறு கோடுகள் இருந்தால் நேரே செல்லலாம். அதுவே கோடுகள் முடிவில் புள்ளிகள் இருந்தால் பாதை முற்றுப்பெருகிறது அல்லது பாதை வலது இடது பக்கம் திரும்புகிறது என்று பொருள். 

பல இடங்களில் சாலையில், அரசாங்கம் அமைத்த நடைபாதையும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டது. அந்த ஆக்கிரமிப்பே பார்வைச்சவால் பிரத்யேகப் பாதையையும் சௌகரியமாக விழுங்கிவிட்டது.  

அதீத வருத்தம் என்னவென்றால், பார்வைச்சவால் கொண்டவர்களுக்கு இதுபோல் பிரத்யேகப் பாதை இருக்கிறது என்பதும் தெரியாது. அது இந்த ஆக்கிரமிப்புகளால் விழுங்கப்பட்டிருப்பதும் தெரியாது.

 

ராஜ் கௌதமன்

 


 

சமீபத்தில் எழுத்தாளர் ராஜ் கௌதமனை பற்றி வாசிக்க வாய்ப்பு அமைந்தது. ஈர்த்த ஒரு விஷயம், இவருடைய நூலான "தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு" என்று சங்க இலக்கியம் பற்றிய ஒரு மாற்று பார்வை கொண்ட நூல். 

என்ன பார்வை என்றால் 'மேல்தட்டு பெண்கள் கடவுளை அடைய எடுத்துக்கொண்ட பிரயத்தனங்களை காட்டிலும் விளிம்பு நிலை மக்கள் கடவுளை அடைய மேற்கொண்ட துன்பம் அதிகம்' என்பதாகும். உதாரணமாக காரைக்கால் அம்மையார் தலைகீழ் நடந்தது, நந்தனார் தீயில் சுடப்பட்டது, கண்ணப்பநாயனார் கண்களை பிய்த்து கொண்டது என ஏராளம். இதே புராணங்களில் தான், சம்பந்தருக்கு அம்மை பால் கொடுத்தது என்பது முரண்.  

மாற்று பார்வைகள் எத்தனை எத்தனை சிந்தனைகளை வெளிக்கொணருகின்றன. 

இதையேதான் தமிழ் சினிமாவிலும் வேறு ஒரு வகையில் பிரித்தாண்டிருக்கிறார்கள். எண்பது தொன்னூறுகளில் வந்த படங்களில் முக்கால்வாசி ஏன் முழுவதுமே வீட்டு வேலை, வயல் வேலை என்று விளிம்பு நிலை பெண்கள் மட்டுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். கற்பழிப்பு, முகம் சுழிக்க வைக்கும் விமர்சனம் என எது வேண்டுமானாலும் வரும். ஆனால் அதே படங்களில் வரும் உயர் மட்ட/முதலாளி குடும்பப் பெண்களை அதுபோல் சீண்டுவதோ, கண்ணியம் குறைவாக காண்பிப்பதோ கிடையாது. எஜமான், முத்து, முதல் மரியாதை, சந்திரமுகி, யூ செலக்டட் ரிஜெக்டட் காமெடி, ஏன் பொன்னியின் செல்வனில் பூங்குழலி vs நந்தினி இன்னும் பல படங்களில் இந்த நுண் அரசியலை காணலாம். 

இலக்கியத்திலேயே இடம் இல்லை. பின்பு எங்கு மனதில்...?

 

நேமிக்கம்

  

நெடு நாள் கழித்து வாசித்த 'நேமிக்கம்' சிறுகதை ஒரு வித பரவசத்தை கடத்தியுள்ளது. தனக்கும் தன் மகனுக்கும் இருக்கும் மொட்டை போடும் நேர்த்திக்கடன் பொருட்டு, சுற்றம் சூழ ஒரு லாரியில் ஏறி சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நோக்கிய ஒரு பயணம் தான் இந்த சிறுகதை. 

நேர்கோட்டில் பயணிக்கும் பங்கு தான் இந்த சிறுகதையின் சிறப்பு. பத்திரிக்கை வைக்காமல் அழைப்பதற்காக 'தப்பா எடுத்துக்காதீக' என்பதில் தொடங்கும் கதை போகிற போக்கில் பல கதை மாந்தர்களை உள் வாங்கி ஒரு கிராமத்துத் தெருவில் நடக்கும் உணர்வை நம்மிடம் கடத்திவிடுகிறது. கிடா ஆடுகள், முத்து மாமா, முத்திலியம்மா, நெல் அண்டா முருகன், எட்டயபுர உலகம்மாள் லாரி, இருக்கன்குடி ஆறு, கோவில் ஓவியங்கள், தண்ணி போட்டு பந்தியில் சலம்பும் பங்குகள், தேற்றும் மனைவி மாரி என இவர்களின் ஊடே ஊடாடுவது மாடசாமி மட்டுமல்ல. நாமும் தான். ட்விஸ்ட் எண்டிங் க்ளைமேக்ஸ் வைத்தே ஆகவேண்டும் என்று காலகட்டத்தில் 'சுபம்' என்று கதை முடிந்த பாங்கு அருமை.  

வெரைட்டி தேடித்தேடி சலித்த மனது ஒரு விதத்தில் எதிர்பார்ப்பது இதுபோன்ற நேர்கோட்டு பயணத்தைத்தான். 

மனதிற்கு நெருக்கமான ஒரு வாசிப்பு. நன்றி Mahendra Babu   

Ananda Vikatan

திரையெல்லாம் செண்பகப்பூ

 

ஜா. தீபா Deepa Janakiraman அவர்களின் 'திரையெல்லாம் செண்பகப்பூ' 21வது அத்தியாயத்தை நெருங்குகிறது. 

பெண்களை, அவர்களின் மனதை, உணர்வுகளை தான் கண்ட திரை மொழியின் வழியாக அணுகுவதே இந்தத் தொடர். சினிமாவை துணைக்கு இழுத்துக்கொண்டு எத்தனை பிம்பங்களை பிரதிபலிக்கமுடியும் என்ற கேள்வியை அனாயசமாக வாராவாரம் உடைத்தெறிந்து கொண்டு இருக்கிறார் எழுத்தாளர். அத்தனை உணர்வுகளை, பெண்களின் மொழியை, வலியை தமிழ் சினிமா கையாண்டிருக்கிறது. கொண்டு இருக்கிறது. புரிந்துகொள்ளும் மன நிலை தான் இத்தனை ஆண்டுகள் இல்லை. ஒருவர் தலையில் கொட்டி சொல்ல வேண்டிருக்கிறது. 

ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு. சந்தோசம், துக்கம், அழுகை, பிரிவு சோகம் எனப் பல உணர்வுகளின் ஊடே மிதக்கும் இந்தத் தொடரின் 19 தாவது அத்தியாயம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெண்களின் மௌனம் அல்லது இறுக்கம். கொட்டுக்காளி, அமரன், மெட்டி, குட்நைட் என்று படங்களின் சாட்சி வழியாக பெண்களின் இறுக்கத்திற்கு பின் இருக்கும் அந்த ஆறாத வடுவை முன்னெடுத்து காட்டியிருக்கிறார். 

பெண்களின் இறுக்கம் அல்லது மௌனம் என்பது இதற்கு மேல் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அடங்கி விட்டாள் என்பதல்ல. சமநிலை தவறிய அறிவிலி கூட்டத்தின் மத்தியில் 'இனியும் நீ என்னைப் புரிந்து கொள்ள இயலாது' என்ற மோன நிலையின் வெளிப்பாடு. சிம்பிளாக சொல்வதென்றால் ஆணாதிக்கத்தை சுண்டுவிரலால் 'சீ அந்தாண்டப் போ' என்பது போல். 

வாழ்த்துக்கள். கல்லுக்குள் ஈரம் சுரக்க இன்னும் பூக்கள் மலரட்டும். 

Ananda Vikatan

ர், ங்க

 

நம்ம பசங்களை பத்தி சொல்லும்போது மத்தவங்ககிட்ட எப்படி சொல்லுவோம்

'என் பையன் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். என் பொண்ணு டிராயிங் கிளாஸ் போயிருக்கா,' அப்படித்தானே சொல்லுவோம். 

இந்த சாதனை பெற்றோர் என்னடான்னா, பேட்டி கொடுக்கும் போதெல்லாம் 'என் பையன் படிச்சுட்டு இருக்கார். அப்படி இருப்பார், இப்படி இருப்பார். பொண்ணு சொல்லிருக்காங்க, செய்றாங்க' அப்டின்னு ஏகபோகமா அடிச்சி விடுறது. தமிழ் தாய் மொழியா  இல்லாதவங்க தான் தமிழ்ல பேசும் போது இது மாதிரி பேச டிரை பண்ணுவாங்க. ரஜினி ஓர் எடுத்துக்காட்டு. பூனை சூடு போட்ட கதை மாதிரி...அதை பாத்திட்டு. 

ரீசெண்ட்டா, நாலு மாசக் கைக் குழந்தைய செரெலக் கூட சாப்பிட விடாம டார்ச்சர் பண்ணி லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் பண்ண வச்சிருக்காங்க. இன்னும் ஒரு படி மேலே போய் பேட்டில அந்த அம்மா சொல்லுது. ' அவங்க வயித்தல கருவா இருக்கும் போதே இன்டலிஜென்ட்' அப்டின்னு. 

போற போக்குல 'எங்கிட்ட  ரெண்டு லட்சம் அணு இருக்கார். ஒரு முட்டை இருக்காங்க'னு சொன்னாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை போல.