வியாழன், ஏப்ரல் 29, 2021

காவல்துறை

 

வருடம் 2000

பங்குனி வெயில் படுத்தி எடுத்துக்கொண்டிருந்த ஒரு நற்பகல். நண்பன் அவனுடைய அப்பாவின் TVS Champ வண்டியை எடுத்துக்கொண்டு நெல்லை ஈரடுக்கு மேம்பலாத்தில் இறங்கி உருட்டிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே டூட்டி பார்த்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் இவனை நெருங்கி, லைசன்ஸ் இருக்கா? வண்டி RC புக் இருக்கா? என்று கறாராக பேசியிருக்கிறார். நண்பனோ, “சார், வண்டி ஒட்டிட்டு வரும்போது சாவி குதிச்சு கீழே விழுந்துடுச்சு. அப்புறம் பெட்ரோல் வேற இல்ல. அதான் நானே உருட்டிட்டு போய்ட்ருக்கேன்” என்றிருக்கிறான். நான் என்னமோ கேட்டா நீ என்னமோ சொல்றியே, “நூறு ரூபா காசு எடு இல்லனா வண்டிய நாளைக்கு கோர்ட்ல ஃபைன் கட்டி வாங்கிக்கோ” என்று  அவனை உருட்டி மிரட்டியிருக்கிறார். நண்பனோ சிங்கக்குட்டி. “எண்ட நூறு ரூபா காசு இருந்தா பெட்ரோல் போட்டுட்டு வண்டி ஒட்டிருக்க மாட்டேனா சார், என் பாக்கெட்ல ஏழு ரூபா அம்பது காசு தான் இருக்கு” என்றிருக்கிறான். இன்னும் இவனிடம் பேருமா என்று இரண்டு நிமிடம் முயற்சி செய்து விட்டு, அந்த ஏழு ரூபாய் ஐம்பது காசை வாங்கிக்கொண்டு நடையை கட்டியிருக்கிறார் அந்த போலீஸ்காரர். 

வருடம் 2009

வீட்டிற்கு போலீஸ் வந்து மிரட்டல் தொனியில் என் பெயரைச்சொல்லி விசாரித்ததும், பெருமாள்புரம் பீட்டில் லைசென்சுக்காக வண்டி மறித்து காசு வாங்கிக்கொண்டிருந்த காவலரை மனசுக்குள் ஏசியது நியாபகம் வந்து போனது. மனதின் குரல் 2014 க்கு பிறகுதான் பொது வெளியில் ஒழிக்க (ழ, கரெக்டுதான்) ஆரம்பித்த காரணத்தினால், எனது மனதின் குரல் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று முடிவு செய்து, சற்று தைரியமாக நான் தான் என்று சொல்லி அவரை எதிர்கொண்டேன். பிறகுதான் தெரிந்தது அவர் பாஸ்போர்ட் வெரிபிகேஷன் பொருட்டு விஜயம் செய்திருக்கிறார் என்பது. கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் கேட்டுவிட்டு, அப்புறம் தம்பி வரட்டுமா? என்று தலையை சொறிந்துகொண்டே நின்றுகொண்டிருதார். வீட்ல பெரியவங்க இல்லையா என்று கேட்டு, 500 ரூபாய் டிமாண்ட் செய்தார். ஏட்டு, எஸ்.ஐ. என்று எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்று அங்கலாய்த்தார். 

வருடம் 2021

அலுவலக வேலை காரணமாக ஒரு வண்டி அமர்த்தி பயணம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு போலீஸ்காரர் மறித்தார். உஷாராக மாஸ்க் அணிந்திருந்தோம். “சார் ஃபைன் கட்டனும்” என்றார். என்ன ஃபைன், எதுக்கு என்று விசாரித்தால், “இறங்கி அய்யாவை பாருங்கள்” என்று அடுத்த வண்டியை மறிக்க போய்விட்டார். இங்கு எங்கேடா அய்யா சரத்குமார் வந்திருப்பார் என்று திரும்பி பார்த்தால் எஸ்.ஐ. குடை நிழலில் பில் எழுதி வசூல் செய்துகொண்டிருந்தார். அருகில் சென்று நின்றோம். குனிந்தவாறே ஃபைன் கட்டுங்க என்றார். பின்பு சற்று நிமிர்ந்து அலுவலக சீருடையை பார்த்ததும், மரியாதையாகப்பேச ஆரம்பித்தார். நான், “மாஸ்க் போட்ருகோமே? பின்ன எதுக்கு ஃபைன்?” என்றதும், “சார், இணைக்கு இவ்ளோ டார்கட். வேற எதுவும் கேக்காதீங்க. சமூக இடைவெளி 500 ஃபைன் 500 ரூபா. நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்றார். அருகில் இருசக்கர வாகனத்தில் வந்திருந்தவர் அவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஃபைன் கட்டிவிட்டு விலகிவிட்டோம்.

நகரத்திற்குள்ளோ அல்லது நகரத்திற்கு வெளியேவோ, ஹெல்மெட் அல்லது சீட்பெல்ட் மாட்டிக்கொண்டு பயணம் செய்யும் பொழுது, தூரத்தில் போலீஸ்காரரை கண்டால் மனதில் ஒரு முறை திக் என்று அடித்துக்கொள்ளாமலில்லை. திருடனை பார்த்தால் அல்லது ஒரு அரசியல்வாதியை பார்த்தால் வரவேண்டிய இந்த திடுக் உணர்வு, எங்ஙனம் காவல்துறையை கண்டால் வருகிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.  ஒரு சமூகமாக நாம் தோற்றுபோன இடம் இங்கேதான். 

சரி, காவல் துறையில் இருப்போர் எல்லோருமே இப்படித்தானா என்றால் இல்லை. அவர்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கிறது. நம்மைப்போல சக மனிதர்கள் தான். காலை வேலைக்குச்சென்று பிறகு மாலை வீடு திரும்பி குழந்தைகளை கொஞ்சி, இல்லாளோடு நடை பயின்று ஒரு சரசாரியான வாழ்வு வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தான்.  கல்லுக்குள்ளேயே ஈரம் இருக்கும் பொழுது அவர்கள் மனதில் ஈரம் இல்லாமலில்லை. ஆனால் இவர்கள் கல்மாணதுக்காரராக உருமாறியது எதனால்

காவல்துறை நண்பர்களுக்கு வார விடுமுறை என்பதே  கிடையாது. மற்றவர்களெல்லாம் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினரோடு வெளியே செல்கிறோம் என்றால் இங்கே இருப்பவர்களுக்கு எல்லா நாட்களுமே திங்கட்கிழமை தான். குழந்தைகளின் பள்ளி ஆண்டு விழா, மனைவியின் பிரசவ வேதனை, தங்கை கல்யாணம் என் எந்த நல்லது கெட்டதுக்கும் விடுப்பு எடுக்க முடியாது. மேலதிகாரியிடம் தொங்க வேண்டும். 

வாரத்திற்கு ஒரு நாள் கூட விடுமுறை இல்லை. சரி ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் தான் வேலை என்ற வரைமுறையும் கிடையாது. கூப்பிட்ட நேரம் கூப்பிட்ட இடத்திற்கு சென்றாக வேண்டும். அது நடு இரவு என்றாலும் விதிவிலக்கில்லை. பண்டிகை கால நாட்களில் அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடும் போது காவல்துறைக்கு விடுப்பு கிடையாது. சொல்லப்போனால் அவர்கள் உன்னிப்பாக கடமை செய்வதினாலேயே நாம் இங்கு நிம்மதியாக பண்டிகை கொண்டாட முடிகிறது. ஒருபக்கம் பாதுகாப்பு வேலையில் இருப்பதனால் செய்யும் வேலையில் திருப்தி ஏற்பட்டாலும், மறுபக்கம் முக்கியமான தருணங்களில் குடும்பத்தை விட்டு விலகி நிற்பது அவர்களுக்கு மனச்சிக்கலையும், உறவுசிக்கலையும், ஏற்பத்தி உளவியல் ரீதியாக அவர்கள் குடும்ப வாழ்வை சிதைத்து விடுகிறது.  

தற்போது உள்ள சூழ்நிலையில் காவலரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், இருப்பில் இருக்கும் காவலர்கள் விடுப்பு கூட எடுக்கமுடியாமல் அதிக பணிச்சுமைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இட ஒதுக்கீடு அடிப்படையில் பெண்கள் அதிகமாக தேர்வு செய்யப்படுவதால் தற்போது அனைத்து இடங்களிலும் பாதிக்குப் பாதி பெண் காவலர்களை பரவலாக காண முடிகிறது. ஆனாலும் பல்வேறு விதமான காவல் பணிகளில் பெண் காவலர்களை அமர்த்த முடியாத நிலை உள்ளது. உதாரணமாக இரவுப்பணிகள். இதனால் ஆண் காவலர்கள் நேரம் கடந்தும் அந்த பணியைத்தொடர வேண்டியதாகிறது. 

சம்பளம் அன்றி இந்த கிம்பளம் வாங்கும் பழக்கத்தை பற்றி ஒரு முறை காவலரிடம் விசாரித்துகொண்டிருந்தபோது அவர் கூறியவை. அந்தந்த எல்கைக்குட்பட்ட விசாரணைகளை விசாரிப்பதற்கு அவர்கள் பல முறை அலைய வேண்டியுள்ளது. மேலும் கைதாகியோ விசாரணையில் இருக்கும் நபருக்கோ உணவு கொடுப்பது போன்ற பல விஷயங்களுக்கு உண்டான உரிய படி அவர்களுக்கு கிடைக்காது. பெட்ரோல் போடுவதற்காக நீட்டிய கை இப்போது பல காரணங்களுக்காக மேலும் நீண்டிருக்கிறது. காவலர் என்றாலே இவ்வாறுதான் என்ற அழுக்கு பிம்பம் சமூகத்தின் பொதுபுத்தியில் நன்றாக உறைந்துவிட்டது. செய்யும் தவறு தரும் குற்ற உணர்வை, இந்த சமூகம் தங்கள் மீது வைத்திருக்கும் கொடிய அபிப்ராயத்தினால்  அவர்கள் மனது மேலும் இறுகி அந்த தவறை நியாயமாக்குகிறது. இவர்களின் இந்த இரந்து பட்டு வாழும் நிலைக்கு அரசு முக்கிய காரணியாகிவிட்டது.

நாங்கள் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறோம் என்று வரிந்துகட்டிக்கொண்டு வரும் சினிமாவும், காவல்துறையை மிகக்கேவலமாக சித்தரிக்கிறது. காவல்துறையின் மீதான இந்த பிம்பத்தை கட்டமைத்ததில் சினிமாவின் பங்கு அதிகம். மற்ற துறைகளை தவறாக சித்தரித்தால் கொடி பிடித்து அறப்போராட்டம் மேற்கொள்கின்றனர். ஆனால்  காவலர்களுக்கு இதுபோல சங்கமும் இல்லை. குரல் கொடுப்பதற்கு ஆளும் இல்லை.

இதுபோன்ற எண்ணற்ற பிரச்சினைகள் காவலர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. மேலும் படித்து காவல் வேலைக்கு வரும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை இந்த அரசியல் வியாதிகள் நடத்தும்  விதம் வேதனைக்குரியது. தண்ணீரின் போக்குக்கு ஏற்ப நெளிந்தோடும் மீன் போல சிலர் இதை சகித்துக்கொண்டாலும், பலரால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிகாரிகளிடம் வெளிபடுத்தமுடியாத கோபத்தை, எதிர்ப்பு செய்யாத தங்கள் குடும்பத்தாரிடம் காட்டிவிடுகின்றனர். தனக்கு மேல் வேலை பார்ப்பவர்களை அய்யா என்று அழைப்பது எழுதாத சட்டம் ஆகிவிட்டது. இவை அனைத்தும் பிரிட்டிஷார் நமது நாட்டை ஆண்ட போது இந்திய காவலர்களுக்கு ஏற்படுத்தியிருந்த சட்டங்கள். 1947இல் சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தியாவுக்கு மட்டுமே அன்றி இன்னும் கண்ணுக்கு தெரியாத சிறையில் அடைபட்டிருப்பது நமது காவல்துறை மட்டுமே. 

இன்று வெயிலில் நின்று போக்குவரத்து நெரிசலை சரி செய்துகொண்டிருந்த ஒரு காவலருக்கு, ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி கொடுத்தபோது, அவர் ஒரு  புன்முறுவல் செய்து அதை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து மிகவும் உற்சாகமாக இன்முகத்தோடு பணியைத்தொடர்ந்தார். அன்பை பரிமாறிக்கொள்வோம்.

ஒரு அவசர சட்டம் மூலம் காவல்துறைக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை விட்டாலே, காவல்துறையில் வேலைபார்ப்பவர்கள் மட்டுமில்லை, அவர்கள் குடும்பமும் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.  ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று கூறுவதை சமூகம் உணர்வுப்பூர்வமாக உணர வேண்டுமென்றால், அது அரசின் கையில் மட்டுமே இருக்கிறது.

 

செவ்வாய், ஏப்ரல் 27, 2021

கொரோனா இரண்டாம் அலை

கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா நோய் மக்களிடையே பாகுபாடின்றி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் போடப்பட்ட லாக்டௌன் போல இந்த முறையும் அந்த அறிவிப்பு எப்போது வரும் என்பது அனைத்து பிரிவு மக்களிடம் மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது. லாக்டௌன் போடப்பட்டால் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பது ஒரு சில மக்களின் எதிர்பார்ப்பு. மீதம் இருக்கும் பெரும்பான்மையான மக்களிடம் கடந்த லாக்டௌனில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், புலம்பெயர்ந்தவர்களின் துயரம், அன்றாடம் உழைத்து வயிற்றை நிரப்புவர்களின் பரிதாப நிலை, வேலையிழப்பு, தற்கொலை, கொலை, கொள்ளை, சுப அசுப காரியங்கள், திருவிழாக்கள் முடக்கப்பட்டதினால் சமூகத்தில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற பல எதிர்மறையான அனுபவங்கள் படபடப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

கொரோனா என்ற நோயே இல்லை; இது இலுமிநாட்டிகளின் சதிவலை, தடுப்பூசி மூலம் உலக மக்கள் தொகையை குறைப்பதற்கான பில்கேட்சின் முயற்சி என்று ஒரு சாரார் பிதற்றி கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. ஆனால் கண்முன்னே நமது அன்புக்குரியவரை இழந்து வருகிறோம் என்பதே உண்மை. பிரபலங்கள் முதல் அண்டை அயலார் வரை இந்த திடுக்கிடும் சோகங்கள் தொடர்கின்றன. 



மக்கள் கூடும் இடமான கோவில்கள், விளையாட்டு அரங்குங்கள், மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றை முடக்குவது பலன் தருமென்றால், தேர்தலுக்கான பொய்யுரைகளை பொழிக்கும் அரசியல் கூட்டங்கள் கூடுவதற்கு முன்பும் இந்தத்தடையை நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும்.

பத்துக்கு ஐந்தடி கரும்பலகையில் மூன்றாம் வாய்ப்பாட்டை எழுதி அதை முன்னூறு முறை கோரசாக குரல் தேய உரக்க கத்தி மனனம் செய்தே அதே முப்பது குழந்தைகள், ஆன்லைனிலும் முழு ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் படிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்த அரசு, இந்த தேர்தல் கூட்டங்களையும் ஆன்லைனில் நடத்த முயற்சி செய்யாதது ஏன்?  அரசுப்பள்ளி மாணாக்கனுக்கு வாட்ஸப்பில் பாடங்களை அனுப்பிவிட்டு மாணவர்கள் படித்துவிடுவார்கள், விட்டார்கள் என்று தேர்வையும் ரத்து பண்ணி முழு தேர்ச்சி செய்யும்போது, இந்த பொய்யுரைகளையும் அதுகாறே வாட்சப்பில் அனுபியிருக்கலாமே. அவ்வாறு செய்யவில்லை.  ஏனெனில் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கடைக்கோடி மனிதனை சென்றடைய முடியாது. அந்த கடைக்கோடி மனிதனின் ஓட்டை ஒன்பது பொய்கள் சொல்லி சுவீகரிக்க முடியாது. ஒரு ஓட்டையும் விட்டுவிடக்கூடாது என்று எடுக்கப்பட்ட இந்த அபாய அக்கறை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவனை கற்க வைப்பதில் காட்டப்படாதது ஏன்?

போலவே, அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்படுத்தி இந்த தீய நுண்மியை ஒழிப்பதற்கு மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள் என்பதும் கேள்விக்குறியே? நாம் Asymptotic கேரியராக இருக்கும்பட்சத்தில் முதலில் பாதிக்கப்படப்போவது நமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே. வெவ்வேறு மக்களை அவர்களின் உடல் எதிர்ப்புசக்திக்கு ஏற்ப வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தீ நுண்மியை நாம் சரியாகப் புரிந்திரிக்கிறோமா  என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளி விட்டு தகவல் பரிமாறிக்கொள்வதும் இன்றியமையாததாகிவிட்ட இத்தருணத்தில் அதை கடைபிடிப்பதும் அதிலிருந்து வழுவாதிருப்பதும் நமது கடமையாகிறது. தனி மனிதனின் உயிரையும் ஒழுக்கத்தையும் அபராதம் மற்றும் கண்டிப்பின் மூலம் மட்டுமே நடைமுறைபடுத்தி சாத்தியமாக்கமுடியும் என்ற ஒரு கோட்பாடே நமது சுய ஒழுக்கத்தின் மீதான பிம்பத்தையும் சித்தாந்தத்தையும் உடைத்தெறிகிறது. மற்றைய நாடுகளிலிருந்து பாரதம் வெகுவாக பின்தங்கியிருப்பது இந்த தனிமனித ஒழுக்கத்தில் மட்டுமே.

இதுமட்டுமில்லாது, போர்க்கால நடவடிக்கையாக நமது ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்கும் இந்த வேக்சினும் காவி முத்திரை குத்தப்படுவது மிகவும் வருத்ததிற்குரியது. உ.பி, குஜராத்போன்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கொரோனோ மரணங்களையும் மற்றைய மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் கொரோனோ மரணங்களையும் ஒப்பீட்டு செய்து, அங்கு நடப்பிலிருக்கும் அரசை ஆதரிப்பதும் அவமானப்படுத்துவது நாகரீகமற்ற அருவருக்கத்தக்க செயல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் அசாத்திய தேவையான ஆக்ஸிஜனை அரசு பல இடங்களில் கொள்முதல் செய்வதை பாராட்டலாமே தவிர அதை அரசியல் உள்நோக்குடன்  பெருமைக்குரிய விஷயமாகக்கருதுவது கண்டனத்திர்க்குறியது. இதுபோன்ற தேவைகளைப்பூர்த்தி செய்யவே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது வலது சாரியோ இடது சாரியோ, யாருக்கென்றாலும் பொருந்தும். மேலும் போர்க்கால நடவடிக்கையாக ஆக்ஸிஜன் போன்றத்தேவைகளை பூர்த்தி செய்வது ஆட்சிப்பணி அலுவலர்களும் முன்கள செயவீரர்கள் மட்டுமே. இந்த நன்றியும் பெருமையையும் அவர்களுக்கே உரித்ததாக வேண்டும். நதிமூலம் ரிஷிமூலம் அறியாது பகிரப்படும் போலி வாட்ஸப் பார்வேர்டுகள் ஒன்று போதும் இந்தியாவை பிளவுபடுத்த. இதை மெத்தப்படித்தவர்களே மேற்கொள்ளுவது மிகவும் ஆபத்தானது. சுற்றிலிருக்கும் உலகம் மற்றும் அதிலிருக்கும் அனைத்து மனிதர்களும் நேர்மறையானவர்கள் என்பதை கற்றுத்தராமல் நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு சாதி மற்றும் மதத்தின் பேராலான துவேஷத்தை பழக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

மீடியாக்களும் தங்கள் பங்குக்கு கொரோனாவை பரப்புகின்றன என்றால் அது மிகையாகா. நியூஸ் சேனல்களை பார்க்காதிருந்தால் கொரோனா நம்மை பாதிக்காது போல. விழிப்புணர்வு வேண்டும் தான். ஆனால் அவை மனதளர்வில் தளர்வடையச்செய்யும் அளவுக்கும் வேண்டா.

லாக்டௌன் என்பது நிரந்தரத்தீர்வல்ல. இந்த வைரஸ் தொடர் சங்கிலியை உடைப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டம் வைரசுக்கும் மருத்துவருக்குமானது மட்டுமில்லை என்பதை மானுடம் உணரும் தருணமிது.


வெள்ளி, ஏப்ரல் 23, 2021

துணைவி

மூன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது அந்த குட்டி ஊரக நூலகத்திற்கு பெரிய சைக்கிளில் டக்கடித்துகொண்டே அடியெடுத்து வைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. அங்கு தொடங்கி பின்பு மஹாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஒரு சிறிய அறையில் உள்ள நூலகம், பின்பு சேவியர் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய நூலகம் என பரப்பளவும் முன்னேறி படிப்பளவும் மெருகேரியது. அரசு உதவி பெரும் நூலகங்களில் உள்ள ஒரே குறை, புது புத்தகங்கள் உடனடியாக வாங்கமாட்டார்கள், பெரும்பாலும் பைண்ட் செய்யப்பட பழைய புத்தகங்கள் தான். ஒருமுறை விறுவிறுப்பான நாவல் ஒன்றை 455 பக்கங்களுக்கு படித்து பின் பார்த்தால், கடைசி ஐந்து பக்கங்கள் காணவில்லை. கொலையாளி யார் என்று இன்றளவும் தெரியவில்லை !!!

புதுபுத்தகங்கள் இல்லா குறையை போக்க, தேடிச்சென்றது லெண்டிங்க் லைப்ரரியைத்தான். வருடத்திற்கு பத்துரூபாய் கொடுத்து படித்தது என்பது மாறி, படிக்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதன் விலையில் 10% என்று கண்ணை உருட்டி மிரட்டியது. இருந்தாலும் VFM என்ற காரணத்தினால் நூலகத்தில் இணைந்து படிக்க ஆரம்பித்தேன். அவ்வாறான ஒரு நூலகம் தான் பெருமாள்புரத்தில் உள்ள “SHIKSHA” லெண்டிங்க் லைப்ரரி. ஒரு வயதான அம்மா, அவரது கணவர், பிள்ளைகள் இருவரும் US வசிப்பு, வீட்டின் ஒரு பகுதி நூலகமாக செயல்படுமாறு வைத்திருந்தனர். சுஜாதாவையும் தாண்டி அந்த லைப்ரரி அம்மா பரிந்துரைத்து படித்ததுதான் பாலகுமாரனின், மெர்குரிப்பூக்கள்’, இரும்புக்குதிரைகள்’, பயணிகள் கவனிக்கவும்’. மூன்றுமே அழுத்தமான நாவல்கள். மேலும், தமிழையும் தாண்டி ஆங்கிலத்தில் சில நாவலாசிரியர் பெயர்கள் (Michael Crichton, Wilbur Smith, Sidney Sheldon) இன்னும் நியாபகத்தில் இருக்கிறது என்றால் அது அவர்கள் தயவு தான்.



நெடு நாட்களுக்குப்பின், கடந்த முறை ஊருக்கு போயிருந்தபோது, மூளையின் ஹிப்போகேம்பஸ் வழிகாட்டுதலின் பேரில் யாருடைய தயவும் குறிப்பாக கூகிள் மேப் தயவின்றி அந்த ‘SHIKSHA’ நூலகத்தை அடைந்தேன். தோராயமாக பதின்மூன்று வருடங்களுக்குப்பின். லைப்ரரி பூட்டியிருந்தது. வீட்டின் படிக்கட்டில் முன்னமே கூறிய அந்த வயதான் பெரியவர் அமர்ந்திருந்தார்.,

“சார், லைப்ரரி பூட்டிருக்கே?”

“ஆமா பூட்டிக்கிடக்கு. தம்பி நீங்க?

அறிமுகத்துக்குப்பின்,

“அந்த மேடம் இருக்காங்களா?”

“யார கேக்றீங்க?”

“லைப்ரரில அவங்கதான புக்லாம் கொடுப்பாங்க. அந்த மேடம்”

“அவ இல்ல. போயி சேந்துட்டா” என்று மேலே கையை காண்பித்தார்.

திடுக்கென்றிருந்தது.

மேலும், இப்போ வீட்லையும் யாரும் இல்லை. தனியாத்தான் இருக்கேன் என்று கீழே கோலம் இல்லாத வாசலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார்.

வேறு ஏதும் பேசாமல் திரும்பிவிட்டேன்.

நான் புத்தகம் எடுக்க வரும்பொழுது, சில நேரங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிகொண்டோ, காய்கறியை நறுக்கிக்கொண்டோ இருந்ததைப்பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது தோராயமாக எழுபது இருக்கலாம். குறைந்தபட்சம் நாற்பது வருட இல்வாழ்க்கை. சட்டென்று முடிவுக்கு வருவது என்பது செரிக்கக்கூடிய விஷயம் இல்லை. கணவனை இழந்த துணைவி கூட பெயரன் பெயர்த்தி என்று ஒரேனும் மனதை தேற்றிக்கொள்கிறாள்.

ஆனால் பெண் துணை இழந்த ஆணின் மனம் சொல்லிலடங்காது, சொல்லிமுடியாது. அதுவும் முதுமையில் மிகச்சோகம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கை செல்லும் வரை குழந்தை போல் தாத்தாக்களைப்பார்த்துக்கொள்ளும் பாட்டிகள் பல வீடுகளில் இன்றும் காணலாம். சுடுதண்ணீர் கூட வைக்கத்தெரியாமல் எழுபது வயதை தொட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். துணையை இழந்த அந்த வயதானவரிடம்   காஃபியோ, உணவோ தேவைக்கு உண்டார்களா என்று கனிவாய் கேட்பது என்பது கல்லைவிட்டெறிந்த நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் மிகவும் அருகிவிட்டது.

எவ்வளவுதான் சுற்றம் இருந்தும் பெண் துணையை இழந்த வயோதிக ஆண், மறுநிமிடமே அனாதையாய் உணர்கிறான். கணவனை இழந்த பாட்டிமார், மகன் அல்லது மகள் குடும்பத்துடன், பழைய நினைவுகளை அசைபோட்டு வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள். ஆனால் பணி ஓய்வு பெறும் வரை பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கையை வீட்டிற்கு வெளியே கழித்த (தொலைத்த) ஆணுக்கு இந்த ஒட்டுதல் அவ்வளவு எளிதில் கைகூடிவிடாது. ஆணோ பெண்ணோ, தன் மகவோடு தோள்தொட்டு வளராத தந்தைக்கு, மீதம் இருக்கும் சொச்ச நாட்கள் நரகமே. இறந்த பிறகு, “இன்னும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாமோ” அல்லது “அந்த பாத்திரத்தை பிறகு துலக்கிக்கொள்ளலாம், இப்போது வா வாக்கிங் போகலாம்” என்று முழுமதி இரவில் நடை பயின்றிருக்கலாமோ, அல்லது உன் உறவுகளை விட்டு என் உறவுகளோடு, சுகிக்கவில்லையென்றாலும் சகித்துக்கொண்டு வாழ்ந்திருந்தாயே, ஒரு தடவையாவது சாப்பிட்டாயா? என்று கேட்டிக்கலாமோ போன்ற எண்ணங்கள் நீரில் தவழும் எண்ணை போன்று இறுதிவரை மிதந்து கொண்டே இருக்கும். கவலை விட்டொழிக்க ஒன்று ஞாபகங்கள் அழிக்கப்படவேண்டும் அல்லது மீளாத்தூக்கம் கொள்ள வேண்டும். இது இரண்டுமே வாய்க்கவில்லையென்றால் அது கர்ம வினை.

அதனால்தான் கவிப்பேரரசின் வரியில், மனைவியின் அருமை மறைவில்” என்று ஒரு பாடல் வரும். இல்லையென்றால் தன் மனைவி இறந்த பின்பும், அவளை புதைக்கக்கூட மனமில்லாமல் இரு நாட்கள் அவளுடன் இருந்து, துர்நாற்றத்தினால் அக்கம்பக்கத்தார் தலையிட்டு, இறுதிசடங்கு செய்யும்பொழுது  மனமுருகி “ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ” என்று அந்த ஓய்வுபெற்ற IIT பேராசிரியரால் பாடியிருக்க முடியாது.

 


புதன், ஏப்ரல் 21, 2021

மண்டேலா

முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை விறுவிறுப்பை கூட்டி கொண்டே சென்றால், அதுதான் மண்டேலா.  90களில் ஒரு படம் எடுத்துமுடித்து பின்பு ரஷ் பார்க்கும்பொழுது, இந்த படம் ஒடுமா ஓடாத, கையை கடிக்குமா அல்லது ஸ்ட்ரைட்டா திருவோடா என்றெல்லாம் ஆருடம் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தேறாத படம் எனில், சில்க்கை வைத்து “பொன்மெணி உருகுதே” போன்று ஒரு பாடலை ஷூட் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பித்த தயாரிப்பாளர்கள் நிறைய உண்டு. அவ்வாறு கால்ஷீட் நெருக்கடியில் சிக்கித்தவித்த பெருமை சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்து இப்போது யோகி பாபுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக யோகி பாபு நடிக்காத படம் இவைதான் என விரல் விட்டு என்னும் அளவுக்கு எல்லா படத்திலும் நடித்திருப்பார். சில படங்களில் வந்துபோயிருப்பார்.  அது அவரது குற்றமில்லை!!! சமீபத்தில் காமாசோமாவேன்று எடுத்து  வெளியிடப்பட்ட ட்ரிப் திரைப்படம் கூட இவரது ஒன் லைனர்களால் காப்பாற்றபட்டிருக்கும்.



அப்படிபட்ட யோகி பாபுக்காகவே ஒரு கதை எழுதி கொண்டிருப்பதாக ஜெயம் ரவி கூறியிருக்கிறார். ராஜ்கிரணை மையமாக வைத்து எவ்வாறு தனுஷ் “ப.பாண்டி” என்றொரு சுவாரஸ்யமான படம் எடுத்து வெளியிட்டாரோ அதே போல, ஜெயம் ரவியின் யோகி பாபு படத்திற்காக காத்துக்கொண்டிருக்கும்பொழுது தொக்காக “மண்டேலா” வந்திருக்கிறது.

இதுவரை தலித் சினிமா என்ற பெயரில், சாதிக்கு எதிராகப் பேச முயன்ற படங்களை மிக அழுத்தமாகவே திரையில் காட்சிபடுத்தியிருந்தார்கள். இந்திரா, காலா, பரியேறும் பெருமாள், அசுரன் என காட்சிப் பிம்பங்களின் வழியான குறியீடுகள் ஒவ்வொன்றும் முன்வைத்த கருத்தியல் வெவ்வேறானவை. அதே வரிசையில் வெளியாகிருக்கும் மற்றொரு படம் மண்டேலா என்று அவ்வளவு எளிதாக வரிசைபடுத்திவிட முடியாது. காரண கர்தாக்கள் இயக்குனர் மற்றும் இயக்குனரின் நாயகன். காரணீக்கள் பகடி செய்து விளையாடும் வசனம் மற்றும் நடிப்பு. நகைச்சுவையையும் தாண்டி தன்னால் மிளிரமுடியும் என்று சாதித்து காட்டியிருக்கிறார் யோகிபாபு.

பொது கழிப்பிடம் ஒன்றை கட்டி திறப்புவிழாவுக்கு பஞ்சாயத்து என்றால் கூட பரவாயில்லை, முதலில் யார் போவது, வடக்கூரா? தெக்கூரா? என்பதில் ஆரம்பிக்கிறது அளப்பறை. ஸ்மைல் என்ற முடிதிருத்தும் பாத்திரத்தில் இயல்பாகவே பொருந்திப்போகிறார் யோகிபாபு. மற்ற படங்களில் பார்த்த அதே முகபாவம் தான் என்றாலும் யோகிபாபுவுக்கு இது காட்சியுடன் பொருந்திப்போகிறது. தபால் நிலையத்தில் பின்பக்க வழி இல்லையா என்று யோகி பாபு திணறும் அந்த ஒரு காட்சி, ஒட்டுமொத்த சமூகத்தின் மீது விழும் அடி. பெயரில்லாமல் ஊராரால், இளிச்சவாய் என்றழைக்கபடும் யோகிபாபு, பின்பு மண்டேலா” என்ற பெயரைத்தெரிவு செய்த பின் கிருதாவிடம் கேட்பார். “இது உயர்சாதி பெயராய் இருந்தால் என்ன செய்வது?” என்று. போலவே முணுக்கென்றாலே செருப்பைத்தூக்கும் கேரேக்டர் என படம் நெடிகிலும் பல காட்சிகளை துள்ளாலான எல்லளுடன் கோர்திருக்கிறார் இயக்குனர். பாடல் மற்றும் பின்னணி இசை, காட்சி கோர்ப்பு போன்றவை படத்தின் சுவாரஸ்யத்தை கூட்ட உதவுகின்றன.

இடைவேளை வரை ஒடுக்கப்பட்டவர்களின் உடல் - நிலம் - வாழ்க்கை எவ்வாறு சித்திரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகக் கறாரான விமர்சனப் பார்வையுடன், மற்றும் சுய எள்ளலுடன் பகடி செய்யும் இத்திரைப்படம் சறுக்கிய இடம், அந்த ஒற்றை ஓட்டை வைத்துக்கொண்டு ஊருக்கு சாலை போடுவது, தெருவிளக்கு அமைப்பது போன்ற மிகைபடுத்தப்பட்ட கற்பனை காட்சிகளில் தான். அந்த ஒற்றை ஒட்டுக்காக அரசியல்வியாதிகள் (எழுத்துப்பிழையில்லை)  எந்த அளவுக்கு கீழ்தரமாய் போவார்கள் என்பது, கிருதாவை காப்பாற்றத்துடிக்கும் நேரத்தில் சத்தியம் வாங்கும் காட்சியில் உக்கிரம் காமிக்கிறது. இறுதிவரை நம்மை படபடப்ப்பாகவே திரைக்கதை இழுத்து செல்கிறது. மாற்றம் ஏமாற்றம் என்று காத்திராமல், அந்த மாற்றத்துக்கான விதை நம்மிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்ற மென்புரிதலோடு படம் நம்மை கட்டிப்போடுகிறது. சிறு குறைகள் இருந்தாலும், படத்தின் பேசுபொருள் காரணமாக அவை நாம் கண்ணை விட்டு மறைந்து நம்முனே புதுப்பரிமானத்தில் மிளிர்கிறது.

 


திங்கள், ஏப்ரல் 12, 2021

சின்னக்கவுண்டர் - DJ - 40



.
x













“அந்த வானத்தை போல மனம் படைத்த” என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் 2005ல் கொண்டாடிய ஹாஸ்டல் டேவைமூளையில் இருக்கும் நியூரான்கள் நினைவுபடுத்தாமல் இருப்பதில்லை. காரணம்மெக்கானிக்கல் பிரிவில் படித்துக்கொண்டிருந்த நண்பன் குமார்சின்னக்கவுண்டர் போன்று  வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து தோளில் ஒரு துண்டு  போட்டுக்கொண்டு விஜயகாந்த் போலவே நடந்து வருவான். இதில்  கவனிக்கவேண்டியது யாதெனில், “மன்மத ராசா மன்மத ராசா” என்று பாடலுக்கு சரசாரியாக 180 கலோரியை ஆடியே கரைக்கும் விதத்தில் குத்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் பொழுது இடைவெளியில் இவனது என்ட்ரி இருக்கும். ஒலிம்பிக் ஜோதியை கைமாற்றி விடும் ரிலே ரேஸ் போல நுழைவு வாயிலில் இருந்து சிக்னல் கொடுத்தவுடன், AKS சவுண்ட் சர்வீசின் DJ, டேப்ரிக்கார்டரில் கேசட்டை உடனே மாற்றி விடுவார். “மன்மத ராசா” நின்று “அந்த வானத்தை போல” ஒலிக்க ஆரம்பித்துசின்ன கவுண்டர் கூட்டத்தின் நடுவே கைகளை கூப்பி நடந்து வருவார். இந்த காட்சி முடிந்ததும் மீண்டும் “மன்மத ராசா” தொடரும். ஷண நேரத்தில் டேப்ரிக்கார்டரில் தேவையான பாட்டை மாற்றி விடும் அந்த யுக்தியை இப்பொழுது காணமுடியவில்லைஎல்லாமே கணினி மயமாகிவிட்டன. To the top of it, கையடக்க ஆண்ட்ராய்ட் செல்பேசிகள்கணினிகளை துவம்சம் செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

நிற்க.

மனிதனின் சராசரி வாழ்நாள் எவ்வளவு என்று ஆண்டவரிடம் கேட்டால் 60 வருடம் என்று கூறுகிறார். கூகிளின் இந்த தேடுதலுக்கான விடையை sanctum ஆக எடுத்துக்கொள்ளவும் தற்காலத்தில் நம்மை பழக்கப்படுத்திவிட்டார்கள். இந்த கூகிள் தேடல் குறித்து விளையாட்டாக சொல்லப்படும் ஒரு பகடி உண்டு. கொலை செய்தவனை கூகிள் தேடலின் இரண்டாம் பக்கத்தில் ஒளித்து வைத்தால், ஸ்விஸெர்லாந்து காவல் துறையே வந்தாலும் அவனை கண்டுபிடிப்பது கடினம் என்று. ஏனென்றால் மக்கள், கூகிள் தேடலின் முதல் பக்கத்தில் அதுவும் முதல் வரியில் தேடலுக்கான கிடைக்கும் பதிலை தமது தேடலுக்கான விடை என்று ஏற்றுக்கொண்டு சமாதானமாகி விடுகிறார்கள்.  எனவே தான், கூகிள் Ad சக்கை போடு போடுகிறது.

தொடர்க.

ஆக, ஷண நேரத்தில் டேப்ரிக்கார்டரில் பாடலை மாற்றி விடும் தொழில் திறமையை, கணினிமயமாக்கல் மூலம் நாம் வசதியாக கடந்து மறந்துவிட்டாலும், 2கிட்ஸ் ஆகிய நமக்கு, இந்த அபிரிதமான வளர்ச்சி உணர்த்துவது மற்றும் உரத்து கூறுவது யாதெனில், “ Buddy, You are nearing 40 எனவே, வன்மத்தை ஒழித்து கோவத்தை மறந்து, அன்பு செலுத்த மறந்த பெற்றோரிடமோ, துணையிடமோ,  குழந்தைகளிடமோ அல்லது எந்த உறவாயினும் திகட்ட திகட்ட அன்பு செலுத்த நியாபகப்படுத்துகிறது. கல்லெறிந்தால் ஓடும் நாய்போல தெறித்தோடிக்கொண்டிருக்கும் வாழ்கையில், ஆறமர நின்று சுவாசிக்க நிணவூட்டுகிறது. பார்க்க மறந்த சிட்டுக்குருவிகளை, சிறகடிக்காமல் வானத்தில் வட்டமிடும் பறவைகளை, அன்று மலர்ந்த ரோஜா பூக்களை, கைபிசைந்து சுவைக்கும் மதிய உணவை, பரிமாறும் கைகளில் உள்ள அன்பினை, நிசப்தமான நட்சத்திர இரவுகளை என வாழ்வில் நாம் அன்றாடம் தொலைக்கும் பல தருணங்களை நின்று ரசிக்க வாய்ப்பளிக்கிறது.

போலவே ஆறறிவு அறிவு ஜீவிகளைத்தவிர இந்த பூவுலகை கழிவு குப்பையாக்கும்  எண்ணம் வேறு எந்த மிருகத்திற்கும் இல்லை. நின்று நகர்ந்தாலும், இருந்து கிடந்தாலும், மண்ணை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணற வைக்கும் நெகிழி கழிவுகளையும் காங்க்ரீட் குப்பைகளையும் மனிதன் மட்டுமே, இந்த பூமிக்கு பரிசாகத்தருகிறான். நுகர்வு கலாச்சாரத்தில் அதீத மோகத்தில், நம்மால் இயன்ற மட்டும் இயற்கை வளங்களை சூறையாடி அடுத்த தலைமுறையை நிர்கதியாக்கிவிட்டு செல்கிறோம். 

உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே பெரிய உபகாரம் என்பது போல, வாழ்வின் அடையாளமாய் ஏதேனும் சாதனையையோ அரிய கண்டுபிடிப்பையோ செய்ய முடியாவிட்டாலும்,  மண்ணுக்கும் மனதிற்கும் காயங்களை பரிசளிக்காமல் அன்பை மட்டும் விட்டுச்செல்வோமாக.