பால்ய வயதில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் அருள்மொழி, உறவுகள் தான் உலகம் என்று வாழும் மெய்யழகனுடன் ஒரு இரவு கழிக்க நேர்கிறது. அந்த ஓர் இரவில், மெய்யழகுனுடனான பயணத்தில் 'அன்பே இறை அன்பே நிரை அன்பே மறை' என்று அருள்மொழியுடன் நாமும் தெளிந்து கொண்டால் அது தான் 'மெய்யழகன்'
அருள்மொழியாக அர்விந்த் சாமி, மெய்யழகனாக கார்த்தி. படத்தின் 95 சதவீதம் இந்த இருவர் தான். இவர்கள் இருவருடன் இளவரசு, ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, கருணாகரன், தேவதர்ஷினி என கொஞ்சமே கொஞ்சமாக வந்திருந்தாலும் அனைவரும் நெஞ்சில் நிற்கும் அளவுக்கு கனம்..
பிரேம்குமாரின்
இரண்டாவது படம். ஒரு சிலரின் உலகில் மட்டுமே அனைவரும் அன்பிற்குரியவர்கள்
ஆவார்கள். பிரேமிடம் அப்படி ஒரு அன்பு மிதமிஞ்சி கிடக்கிறது. தந்தை கட்டிவிடும்
கைக்கடிகாரத்தில் தொடங்குகிறது பிரேமின் நெகிழ்வு. பேருந்தில் கூடை தூக்கி விட்டு
ஒரு கொய்யா கொடுத்து டாட்டா சொல்வது, இந்துமதி அரவிந்த் சாமியை தொட்டுச்செல்வது, வாஞ்சையாக சோறு பரிமாறுவது, வரவேற்பில் பரிசளிப்பு, விருந்து சாப்பாட்டில் என ஒவ்வொரு
பிரேமிலும் அவ்வளவு அன்பை தெளித்திருக்கிறார் பிரேம். மேடையில் அமர்ந்து அந்த
கொலுசு போடும் சீன் அவ்வளவு அழகு மற்றும் உணர்ச்சிகளை கடத்தி விடுகிறது. சிறந்த
இயக்குனர் மட்டுமல்ல, தான்
ஒரு நல்ல ரசிகன், எழுத்தாளன்,
மனிதன் என்று
காட்சிக்கு காட்சி பறை சாற்றி விடுகிறார். ❤️❤️❤️
பாத்திரத்தின் கனம் உணர்ந்து அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் அர்விந்த் சாமியும், கார்த்தியும். கார்த்தி வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பு மற்றும் உயிர் துடிப்பு. ஜல்லிக்கட்டு தடை மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கு மன உளைச்சல் தான் என்று காட்டிய விதம் வெள்ளி திரைக்கு புதிது. வேண்டாம் என்று கொடுத்த சைக்கிளில் ஒரு குடும்பம் எப்படி தழைத் தோங்குகிறது என்று கார்த்தி சொல்லும் விவரணையில் ஒரு குறும் படமே அவ்வளவு நெகிழ்வாக எடுத்திருக்கிறார் பிரேம். பிரேம் எழுதிய உணர்வை பிசாகாமல் கடத்தியதில் கார்த்தி மிளிர்கிறார். வீட்டில் 'பெரியவன்' என்று அழைப்பதற்கு பின் இப்படி ஒரு பரிணாமம் இருக்கிறது என்பது இன்று தான் புரிகிறது 👌. அடேங்கப்பா, எத்தனை 'அத்தான்'😊😊.
அர்விந்த் சாமி கொள்ளை வெள்ளை. கொள்ளை handsome. 54 வயதிற்கே இப்படி என்றால், ரோஜா பம்பாய் படங்களின் போது ஏற்பட்டிருக்கும் craze கேட்கத் தேவையில்லை. எந்த உடை என்றாலும் அவருடலில் அது மெருகேறிக் கொள்கிறது. இறுதிக் காட்சியில் ஓடி வரும் அர்விந்த், திறக்காத காட்டுக்குள்ளே அர்விந்தை ஞாபகப் படுத்துகிறார். ❤️❤️❤️
கோவிந்த் வசந்தாவின் இசை பிரேமின் எழுத்திற்கு அவ்வளவு உறுதுணை. பாடல்கள் அனைத்தும் இதம். அதுவும் கமலின் குரலில் 'யாரோ' பாடல் பதம். என்ன ஒரு depth. காதில் ரீங்கரித்து கொண்டே இருக்கிறது.
நெற்களஞ்சியமாக உணவளிக்கும் தஞ்சாவூரும் நீடாமங்கலம் மகேந்திரன் கேமராவில் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. எடிட்டர் கோவிந்தராஜின் இன்னும் சில இடங்களில் கத்தரித்திருக்கலாம். தமிழினப் படுகொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, சேரன் நடுகல் போன்ற நிகழ்வுகள் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் அது தான் நம் வரலாறு. 'இதைத் தெரிந்து கொள்ளாமல் battle of Panipat தெரிந்து என்ன பயன்?', 'இறந்த காலம் இல்லை. கடந்த காலம். Glorious past', 'நல்லவனா இருக்கலாம் ஆனா நல்லவனா நடந்துக்க மட்டும் கூடாது' போன்ற வசனங்களில் இன்னும் ஈர்க்கிறார் பிரேம்.
படம் மெதுவாகச் செல்கிறது என்ற முணுமுணுப்புகள் கேட்டது. வேகமாய் சென்று எதை அடையப் போகிறோம்? குறைந்த பட்சம் படம் பார்க்கும் பொழுதாவது கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்வோம்.
நிரம்ப நாள் கழித்து ஒரு ஃபீல் குட் மூவி.
#meyyazhagan #karthi #ArvindSwami



