ஹாட்ஸ்டார் OTT. பேட் கேர்ள் நாயகி அஞ்சலி சிவராமன். புது முகம் போல் தெரிந்தாலும், அஞ்சலி மலையாளத்தில் நாயகியாக நடித்துள்ளார். அத்தினி சித்தினி, அக்கா வருவாக, நேந்துகிட்டேன் போன்ற பாடல்களைப் பாடிய சித்ரா ஐயரின் மகள். இயக்குனர் வர்ஷா பரத் புது வரவு தான் என்றாலும் வெற்றி மாறன் பட்டறையில் உதயம் NH4 தொட்டு உதவி இயக்குனராக இருந்துள்ளார். வெற்றி மாறன் மற்றும் அனுராக் தயாரித்துள்ளனர். எவ்வளவு திறமையிருந்தாலும் கனவுத் தொழிற்சாலை மட்டும் அல்ல எந்தத் துறையிலும் தூக்கி விட, அறிமுகம் கிடைக்க என ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது. நெட்வொர்க்கிங் இஸ் அன் ஆர்ட். 'ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கிட்டேன். நம்ம அம்மா, ஆச்சி எல்லாருக்கும் அவங்களுக்கு போட்டிருந்த சங்கிலியை உடைக்கத் தெரியலைனா அதை நமக்கும் போட்டு விட்டுடுவாங்க'. பேட் கேர்ள் பேச விரும்பும் கரு இதுதான்.
மடி ஆச்சாரம் என்று கட்டுப்படுத்தும் வீட்டில் இருந்து ஒரு பெண் தனக்கான வாழ்வைத் தான் விரும்பும் போக்கில் சுதந்திரமாக வாழ நினைக்கிறாள். பல பிரேக் அப்களுக்கு பிறகு தான் விரும்பித் தேடி அலைவது ஒரு ஆத்மார்த்தமான துணையே என்பதை அவளது அனுபவம் மூலம் புரிந்து கொள்கிறாள். பிரேக் அப் எதனால் நடக்கிறது என்ற சப்ஜெக்ட் இங்கில்லை. அது படத்தின் கருப்பொருளை மடைமாற்றிவிடும். Taboo என்று நாம் எதை எல்லாம் வரையறுத்து வைத்திருக்கிறமோ அந்த மாயத் திரைகளை இங்கு உடைத்தெறிகிறாள் ரம்யா.
இப்படிதான் வாழ்க்கை அல்லது இப்படிக் கூடாது எனும் பாடம் சொல்லாமல் ரம்யாவின் வாழ்க்கையை அவள் அருகில் இருந்து பார்ப்பது போல் ஒரு உணர்வைத் தருவதில் இயக்குனர் வர்ஷா பரத் முழு நேர்த்தி கொண்டு வந்திருக்கிறார். இறுதி வரை தனக்கு பூட்டப்பட்டிருக்கும் சங்கிலியை உடைத்தெறிய முடியாமல் அது தான் உண்மையான வாழ்க்கை அல்லது மகிழ்ச்சி என்று ஆற்றுபடுத்திக் கொண்டு வாழ்ந்து ஓய்ந்து போகும் கேரக்டரில் ரம்யாவின் அம்மா இன்றைய சமுதாயத்தின் அச்சு அசலான பிரதிபலிப்பு. 'ஷெண்பகமே' பாடல் நினைவிருக்கிறதா? அந்த நிஷாந்தி தான் இங்கு ரம்யமாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். தீர்த்தம் கொண்டு வா, சட்னி போடுமா என்று ஆணாதிக்க மனோபாவ அன்புக்கணவர். first கிளாஸ் பாத்திரப்படைப்பு. 'ஐஐடி இல்ல nit போய் படிக்கணும். நாங்க காமெர்ஸ் குரூப் மிஸ். அப்போ அங்க படிச்ச பையனை பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க'. போன்ற வசனங்கள் போகிற போக்கில் சிரிப்பை வரவைக்கின்றன.
மீண்டும் மீண்டும் திரைக்கதை திருத்தி எழுதப்பட்ட காரணத்தால் படத்தில் ஒரு பிரேம் கூட சலிப்பு தட்டவில்லை. வித விதமான கேமரா கோணங்கள், சூழ்நிலைக்கு ஏற்ற அமித் த்ரிவேதியின் துள்ளலான இசை, அஞ்சலியின் மெருகேறிய நடிப்பு, வர்ஷாவின் வசனங்கள் என ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. இறுதி காட்சியில் அம்மாவை கட்டி அனைத்து 'லவ்யூ மா, நீ மாஸ்' என்று ரம்யா சொல்லும் இடம், girls will be girls படத்தின் க்ளைமேக்ஸை ஞாபகப் படுத்துகிறது. பதின்ம வயது பெண் எங்கெங்கோ அலை பாய்ந்து இறுதியில் அம்மாவின் தோளில் வந்து சாய்ந்து கொள்ளுவாள். ஒருவேளை ஒரு பெண்ணின் உற்ற தோழி அம்மா தானோ? பிராமணக்குடியைத் தேர்ந்தெடுத்தது இங்கு சர்ச்சையைக் கிளப்பியது. எந்தக் குடியாய் இருந்தாலும் சமுதாயத்தில் பெண்ணின் நிலைமை இதுதான் என்பதுதான் உண்மை. அதே நிலையில், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று bad girl கூறவில்லை.
ஒரே விஷயத்தை நீங்கள் பிடித்து செய்வதற்கும் பணித்து செய்வதற்கும் இடைப்பட்ட அந்த மனநிலையில் இருக்கும் ரம்யாவின் கதை இது. அவ்வளவே. வர்ஷா பரத் ஒரு குழந்தை (பேட் கேர்ள்) போதும் என்று கூறுகிறார். நிறைய குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் வர்ஷா.
An Awesome Movie in each Frame after a long time.
#badgirl #anjalisivaraman #VarshaBharath

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக