செவ்வாய், மார்ச் 30, 2021

ராமும் அம்ஜத்கானும்

கொரொனா காலத்தில் டீம்ஸ், ஜும், வெபெக்ஸ் போன்ற டெக் உபயத்தில் பேருந்துநிலையம், மளிகை கடை, வீட்டு மொட்டைமாடி, ரயில் பயணம், மரத்தடி, சமையல் நேரம் என எல்லா இடமுமே அலுவலகமுமாகவும் பள்ளியாகவும் செயல்படவும் செயல்படவைக்கவும் முடிந்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எவருடனும் எந்த நேரத்திலும் விவாதிக்கவோ, தரவுகளை பரிமாறிக்கொள்ளவோ முடிகிறது. நேரம் காலமறியாது மீட்டிங் மற்றும் வகுப்புகள் அல்லது தேர்வுகள் வைப்பது ஊழியர்கள் மற்றும் மாணாக்கருக்கு மன உளைச்சல் மற்றும் தொந்தரவுதான் என்றாலும், இதன் மூலம் அடையும் ஆதாயத்தை கூட்டாக மறுத்து ஒதுக்கிவிடமுடியாது. வேகமான அலைக்கற்றை மற்றும் உயர்தர டெக் அபிவிருத்தியின்  அளப்பரிய ஒருங்கிணைந்த சாதனை இது. இவ்வாறிருக்க, ஒரு வதந்தி வேகமாக பரவ வேண்டும் என்றால் அதை வாட்சப்பில் அனுப்பிவிட்டால் போதும் என்பது தற்காலத்தில் அதுவும் தேர்தல் நேரத்தில் மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது.  அரசியல்வாதியின் பெயரையும் அவர் சொல்லாத சாதி மத கருத்தையும் நிரப்பி, ஏதேனும் நியூஸ் சேனலின் டெம்ப்ளேட்டில் போட்டுவிட்டால், அந்த நாளுக்கான பொழுது போக்கு ரெடி.


இது பள்ளிக்கான வாட்சப் க்ரூப்பிலும் பங்கம் வைத்ததுதான் விஷயமே. 150 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயிற்றுவித்து பலரை முக்கியமான பதவியில் உயர்த்தி அமர வைத்திருக்கும் பெருமை எமது பள்ளிக்கு உண்டு. அதுமட்டுமில்லாமல், மொஹம்மத் அலியோடும், இம்மானுவேலோடும் என்னை சாதி மத வேறுபாடின்றி, இம்மட்டும் உரையாட வைத்திருக்கும் பெருமையும் எமது பள்ளிக்கு உண்டு.


கடந்த சில நாட்களாக பள்ளியின் வாட்சப் குழுவில் நடந்த விவாதத்தில் பல நண்பர்கள் கலந்துகொள்ள தகுதியற்ற நிலையில் உரையாடல்கள் இருந்தன. நடந்தவற்றை கூராய்வு செய்வதில் பயனில்லை. ஆயினும், சாதியை குறிப்பிட்டும் மதத்தின் பெயரால் என, வசைபாடல்கள் அச்சில் ஏற்ற முடியாத அளவில் அரங்கேறின. பகிர்ந்துண்ட மதிய உணவுகள், சாம்பல் புதனில் வேட்டையாடிய பிரியாணி, PTA ஹாலில் கண்டு மகிழ்ந்த மலையாளப்படங்களையும், PET பீரியடில், பள்ளியில் களித்து கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துகொள்ளவே அந்த குழு தொடங்கப்பட்டது. பேனா  மை தீர்ந்தபோது மேஜையில் மை ஊற்றி அதை உறிந்து எழுதிய நட்பை துவேஷ விதைகள் முழுங்கிவிட்டன. பகிர்ந்துண்ட நட்பே சிதறிகிடக்கும்பொழுது பள்ளிக்கு வெளியே மற்றவர்கள் பிரிந்துகிடப்பதில் ஆச்சர்யமில்லை.



தனியாய் இருக்கும் ஈர்க்குச்சியை காட்டிலும் துடைப்பத்தில் இணைந்து நிற்கும் ஈர்க்குச்சிக்கு வலிமை அதிகம். இதன் பொருட்டே சிங்கம்
, கூட்டமாய் நின்ற நான்கு எருதுகளை  பிரித்து வேட்டையாடிய கதையை மூன்றாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் வடித்து வைத்தனர். உண்டு பல வருடங்களாய் ஆகிவிட்டபடியால் வடித்த சாதம் செரித்துவிட்டதோ எனும் எண்ணும்படியாய் இருக்கிறது நம்மவர்களின் நடவடிக்கை. “Divide and Rule” என்பது ஆங்கிலேயருக்கு மட்டும் வெற்றி தரவில்லை, எங்களுக்கும் தான் என பல சாதி, மத அடிப்படையிலான கட்சிகள் கறை படிந்த பல்லை காண்பித்து கொக்கரிக்கின்றன.


பிறந்தது முதல் இன்றுவரை பல கிறித்துவ முகமதிய நண்பர்கள் என்னுடன் பயணிக்கிறார்கள். வாழ்வின் பல முக்கிய தருணங்களில் உடனிருந்திருக்கிறார்கள் மற்றும் இருக்கிறார்கள். தர்காவில் மந்திரித்ததும், பள்ளி சேப்பலில் மண்டி போட்டு சிலுவையிடம் பிரார்த்தித்ததும் பசுமையான மற்றும் அழகான நியாபகங்கள். பதினெட்டு வருடங்களுக்கு பிறகு ஒப்பீட்டளவில் இந்த பரிமாற்றங்கள் மிகவும் குறைந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் காலூன்ற வழியறியாது ஒன்றாய் இருந்த மக்களை பிளவுபடுத்த மதத்தை கையில் எடுத்திருப்பது மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் மலிவான தேர்தல் உத்தி. ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை நிதர்சனமாக நாம் காணமுடிகிறது. நேர்மறையாய் தெரிந்தவர்கள் மறையின் பெயரால் இப்போது எதிர்மறையாய் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு இலக்கற்ற பயணம். ஆனால் அதை ஒரு கானல் நீருக்கு பின்னால் ஓடவைத்துள்ளார்கள். இந்த துவேஷம் நம் தலைமுறை மட்டுமில்லாது அடுத்தடுத்த தலைமுறையின் முகத்திலும் ரத்தத்தை உறைய வைக்க முயற்ச்சிக்கிறது. இதன் மூலம் வெற்றி முரசு கொட்டப்போவது முதலாளிகள் மட்டுமே. 

 

ஆனால் பிளவுண்டு கிடப்பது ராமும் அம்ஜத்கானும் தான் என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது.  

 

உண்மையைச்சொல்வேன்

ஆங்கிலத்தில் anecdote’ எனப்படும். தமிழில் துணுக்கு என்பர். பத்திரிக்கை உலகில் துணுக்குச்செய்திகள் என்ற சொல்லாகராதி மிகப்பிரபலம். ‘Anecdote’ என்பதின் அர்த்தம் என்று கூகிள் ஆண்டவர் கூறுவது, “ஒருவரை அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய ஆர்வமூட்டும் அல்லது கருத்தை ஈர்க்கும் நொடிக்கதை”.

ஏதேனும் பத்திரிக்கையை புரட்டும்பொழுது, “இரண்டாவது கணவரை விவாகாரத்து செய்த நடிகைஅல்லது சூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கம் காட்டும் நடிகர்போன்ற இலக்கியச்செய்தி தொகுப்பை வாசித்து புளகாங்கிதம் அடைந்து அதற்கு அடுத்த பக்கத்தை திருப்பும்பொழுது, எம்.ஜி.ஆரை பற்றி அவரது மெய்க்காப்பாளர்
ராமக்ரிஷ்ணன் எழுதிய செய்தியோ அல்லது அன்று வந்ததும் அதே நிலாபாடல் காட்சியை படமாக்கும் போது நடந்த சுவாரசிய நிகழ்வை நடிகை சரோஜா தேவி பகிரும் செய்தியையோ கண்டோமானால், அதுவே துணுக்கு. இந்த துணுக்குசெய்தி வாசிப்பதில் அடையும் பேரின்பத்தை விவரிக்க இயலாது. அதுவும் அரசியல் துணுக்கை விட சினிமா துணுக்குகள் பரவசமூட்டுபவை.




விகடனில் இதுபோன்ற துணுக்கையே தொடராக எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ‘பாஸ் என்கிற பாஸ்கரனில்ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்திருக்கும் சுப்பு பஞ்சுவின் தந்தையே திரைக்கதை ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலம். எண்பதுகளில், ஒரு இயக்குனர்இவர் எழுதும் திரைகதைக்காக எந்த அளவு காத்திருந்து பிரயத்தனப்பட்டிருக்கிறார் என்றும் ரஜினிக்காக, சூப்பர் ஸ்டார் இமேஜை எவ்வாறு கட்டமைத்து கொண்டு வந்தார், பின் அந்த இமேஜை தூக்கி நிறுத்த, திரைக்கதை எவ்வாறெல்லாம் சுவையூட்டி
எழுதப்பட்டது போன்ற பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்திருந்தார். வாசகர்களின் போதாத நேரம், அந்தத்தொடர் எழுதிக்கொண்டிருக்கும்போதே இவர் இறைவனடி சேர்ந்தார்.

ஆனால் தற்போது, கலைப்புலி தாணு எழுதும், ‘உண்மையைச்சொல்வேன்' படு சுவாரஸ்யமாக இருக்கிறது. பொதுவாகவே உயிரோடிருப்பவரை பட்டவர்த்தனமாக பொதுவில் குறை சொல்ல யோசிப்பார்கள். அல்லது நாசூக்காக இலை மறை காயாக குறிப்புணர்த்துவார்கள். அதை பற்றியெல்லாம் சற்றேனும் கவலை இல்லாது சிக்சர்களாக விளாசித்தள்ளுகிறார்.  வைகோ, ராஜீவ் மேனன், கமல், கலைஞர், வைரமுத்து, இளையாராஜா என்ற எல்லோரிடமும் தனக்கேற்பட்ட நிறை குறைகளை சற்றும் மெழுகு பூசாமல் உள்ளதை உள்ளபடியே உரைப்பது இதுநாள் வரையில் இவர்கள் பால் நாம் கொண்டிருந்த புரிந்துணர்வில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறது. ஆளவந்தான் படப்பிடிப்பு சமயம் தாணுவுக்கும் கமலுக்கும் ஏற்பட்ட பிரச்சினை ஊரறிந்ததே. ஆயினும் தேர்தல் நேரத்தில் இவை யாவும் கமலின் பிம்பத்தை பாதிக்கக்கூடாதே என்று நாகரீகம் கருதி தவிர்த்திருப்பது வரவேற்புக்குரியது. ஆச்சர்யம் என்னவெனில் இவர் கூறும் கருத்துகளுக்கு எவரும் இது வரை மறுப்பு தெரிவிக்காததே, இதெல்லாம் உண்மை என்று உரத்துச்சொல்கிறது.

நாம் வாழ்வோடு பிரிக்கமுடியாதபடி இன்றியமையாததாகிவிட்ட சினிமாவின் வரலாறு பிடிக்குமானால், தாராளமாய் இதை படிக்கலாம். ஹைலி ரெக்கமெண்டட் ஃபார் 2k கிட்ஸ்

2021 புத்தக கண்காட்சி

 

வழக்கமான

புத்தக கண்காட்சியை போல அல்லாது
, இந்தமுறை எனக்கு மிகவும் தனித்துவுமான புத்தக கண்காட்சியாக அமைந்தது.

எப்பொழுதும் புத்தகம் வாங்க செல்லும் என்னை, இந்த முறை எழுத்தாளனாக அறிமுகப்படுத்தியது 2021 புத்தகத்திருவிழா.

'ஆச்சி' என்ற சிறுகதை தொகுப்பும், 'இத்யாதிகள்' என்ற கட்டுரை தொகுப்பும், என
இரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

படைப்பாளியாக மாற்றி அழகு பார்த்த ஜீவா படைப்பகத்திற்கும், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி க்கும் ஆயிரம் நன்றிகள்.

எழுத்தாளர் Araathu R வுடன் க்ளிக்கிய ஒரு தருணம்.

விற்பனைக்கான லிங்க் கீழே.

வாழ்த்துக்களுடன் வாங்கி ஊக்குவிக்குமாறு அன்புடன்...





https://secure-web.cisco.com/15nWE74wSv-wRx8GGTrhgG73nJJyMCpFBGtTm-aWXyCbau7DvlyCeE6HfY9_zD3pHlzE4KkfaGKm7vCEBO8cGEgvwDPNDiMfNukrWmlC3_UZ-lNVCRjuBC5FZ6YCrTyr-2w5v9gcIhJoW5OoBJ0-1NioAM3pGLPuhVsMaOy3WD3hHTtjS_Li7jRzHeZWKY5QqA0dMbf-xcXSBmwIPHpDjY_ZDvDXF6HihXgzLbaerft8/https%3A%2F%2Fwww.amazon.in%2Fdp%2FB08YQWVBGX%2Fref%3Dcm_sw_em_r_mt_dp_V55NT86JZ3BFC72ZP9JN

http://secure-web.cisco.com/13ILgxXPjhDgwTcPjpByOW1-4w3VdiGSYayPIqOEacM1CyWt0j0I4K4L2aQP1wwwsy_LMAby7cOMPfLX6jWB6csvku8qakAdnujkfAjTVfFV6hS1JUeyUFlg-cQbspIMbhcWULHQVA5ygGcjq1q2yWwVQE5cysShk4zXKPKRql4zYqDmnR1xgMSjxGdWMzM9S-4iBWLv2ELIojKTfVdfChfZGVpMdjN8o-JF3DrnsoBE/http%3A%2F%2Fovisbooks.com%2Fdetail%2FMVUhzWgpXr1Byo5dfnE

http://secure-web.cisco.com/1yUwKjuNGtAhzZ79Oeej8hQhfxRTKjtAEEk-bEr0gKxRZPTGoEepFUSQDRuscv0vGNLG1hDgjqVQ6YZGKwQHVcLMfeNl_qgVuYWmVaLp7uP7K8IzR6WApbWAT6JM09sbb6jp3zB2GqeboWGDRIEvuKoRB4Q4DdHVhTg3L2jLJPr2n3TlOeqwghoJ2051XoTkNyMRh0sYJmpK-xuPqTplXQvgYuIoIkisC5fNrPUI_I60/http%3A%2F%2Fovisbooks.com%2Fdetail%2FMVUiLdy6MHsuMJGCpgw