வர்ஷா அன்று வங்கிக்கு செல்ல வேண்டும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தாள். காலை எழுந்ததும் முதல் வேலையாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே அன்று தான் செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்டுக்கொண்டாள். வெளியே லானில் புற்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பதிக்கப்பட்டிருந்த ஆட்டோமேட்டிக் பௌண்டெனில் தண்ணீர் சரியாக வரவில்லை. பேஸ்மென்டின் நிறுவப்பட்டிருந்த வீட்டிற்கான பெரிய ஹீட்டர் மெஷினில் இரைச்சல் அதிகம் இருக்கிறது. அவ்வப்போது தான் உத்தரவிடுவதை கேட்டுக்கொண்டு சிரத்தையாக வேலையை செய்து முடிக்கும் ‘தாம்சன்’ ரோபோவில் சார்ஜிங் போர்ட் உடைந்து போயிருக்கிறது. இவை மூன்றையுமே அவசியமாக கவனிக்கவேண்டும் என்றாலும் வங்கிக்கு சென்று முடிக்கவேண்டிய வேலைக்கு இன்றே கடைசி நாள். ஆதலால் இவற்றை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று மீண்டும் ஒருமுறை ஒற்றி போட்டாள்.

குளித்து முடித்த பின், தான் எப்போதும்
உபயோகப்படுத்தும் மாய்ஸ்டரைசிங் லோஷனை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டாள். டவலை
வலது கையில் லாவகமாக உடலுடன் இறுக்கிக்கொண்டு, இடது கையால்
வலது காலில் தேய்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ‘பீப் பீப்’ என்ற ஒலி மைக்ரோவேவ் அவனில் உணவு ரெடியாக இருக்கிறது என்பதை
ஞாபகப்படுத்தியது. அன்று புதன்கிழமை மெனுவாக மொட்டை கொம்பன் அரிசியில் போரிட்ஜ். வெள்ளை
அரிசியை சமீப காலமாக அதிகம் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தாள். உடலும்
மனதும் இணைந்திருக்க, உண்ணும் உணவை ரசித்து உண்ண, முழுவதுமாக பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்,
‘மைகார்டிஸ்’ மாத்திரையை சுடுதண்ணீருடன் விழுங்கிவிட்டு, கிச்சன் வழியாக கேரஜை வந்தடைந்தாள். டிரோன் டாக்சியை வாடகைக்கு
எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, பின் போக்குவரத்து நெரிசலை
தவிற்பதற்க்கு சாலை வழியாகவே செல்வது என்று முடிவு செய்தாள். வழக்கமாக வீட்டினுள் நுழைய இந்த வழி எளிதாக
இருப்பதால், வீட்டின் முன் வாசலை அரிதிலும் அரிதாகவே
உபயோகிப்பாள். ரிமோட்டில் கேரேஜின் டோரை அன்லாக் செய்து பின் தனது க்ரே கலர்
கேம்ரியில் ஆரோகணித்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு உற்சாகமாக டிரைவ் செய்ய
ஆரம்பித்தாள். ரியர் வியூ மிரரில், தனியங்கியின் மூலம் மூடிக்கொள்ளும் அவளது கேரேஜ் டோரை
ஒரு முறை உற்று நோக்கி உறுதி செய்துகொண்டாள்.
மைனஸ் ஐந்து டிக்ரீ காற்று, தெர்மலையும் தாண்டி அவளது உடலை
நடுக்க ஆரம்பித்திருந்தது. ஹீட்டர் எல்லா
நேரமும் தேவையாயிருந்தது ஒரு வகையில் அவளுக்கு அசௌகரியத்தை அதிகப்படுத்தியது. ஒண்டோரியோ
மாகாணத்தின் ஸ்கார்போரோவின் எல்ஸ்மீயர் சாலையில் இருக்கும் வெங்கடாசலபதி கோவிலை
கடக்கும்போது, கோவிலுக்கு போக வேண்டும் என்று இருபதாவது
முறையாக நினைத்துக்கொண்டு ஒருகையை கூப்பி நெஞ்சில் ஒருமுறை தொட்டுவிட்டு பின் தனது
கைகளுக்கே முத்தம் கொடுத்துக்கொண்டாள்.
முப்பது நிமிடத்தில் TD என்றழைக்கப்படும் டொரோண்டோ
டொமினியன் வங்கியின் வாசலை வந்தடைந்து கதவில் பொதிந்திருக்கும் கண்ணாடியில்
தெரியும் தன் பிரதிபலிப்பை ஒரு முறை பார்த்துக்கொண்டாள். முப்பத்தி மூன்று என்று மதிக்க
வாய்ப்பில்லை என்று தனக்கு தானே ஷொட்டிக்கொண்டாள். உள்ளே நுழைய எத்தனிக்கும்
வேளையில் அந்த இளைஞனை கண்டாள். இருபத்தைந்து வயது இருக்கலாம். வெளியேறிக்கொண்டிருந்தான்.
இவள் எதிரே வருவது கண்டு, தான் வெளியேற திறந்து வைத்திருந்த
கதவை இவளுக்காக மூடாமல் பிடித்து கொண்டான். இவள் உள் நுழைந்து பின், பரஸ்பர நன்றிகளை பகிர்ந்துகொண்டதும் அந்த இளைஞன் வெளியேறினான். அந்த இளைஞனின் முகம் எங்கோ பார்த்த முகமாக
இவளுக்கு மனதில் பட்டது.
வங்கி சம்பிரதாயங்களை முடிக்க மாலை வரை
எடுத்துக்கொண்டாள். தான் வாங்க வேண்டிய வீட்டு பத்திரத்தை வாங்கிக்கொண்டு
வங்கியிலிருந்து வெளியேறினாள். அந்த இளைஞனது முகமும் அவனது செய்கையும் அவளுக்கு
தேஜா வூ போன்ற உணர்வை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டிருந்தன. நார்த்
யார்க்கின் ஒண்டாரியோ 401 எக்ஸ்ப்ரெஸ் சாலையில் 90 மைல் வேகத்தில்
சென்றுகொண்டிருந்தாள். யார்க்டேல் பூங்காவுக்கு அருகில் வரும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்க ஏதுவாக சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. இந்த
சில நிமிட காத்திருப்புகளைக்கூட ட்ரோன் டேக்ஸி பிடித்திருந்தால்
தவிர்த்திருக்கலாமோ என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் செல்ஃப் டிரைவிங்கின் மீதான ஆர்வம்
இந்த பிறழ்வுகளை புறந்தள்ளியது. இவளது கேம்ரி அங்கு நின்றாலும், ஞாபகங்கள் பதினெட்டு வருடங்கள் பின்னோக்கி ஓடின.
வங்கியில் காலையில் கண்ட முகம் இவளுக்கு இப்பொழுது தெளிவாக பிடிபட
ஆரம்பித்திருந்தது. செபாஸ்டியன் நியாபகத்திற்கு வந்திருந்தான். ஹம்பர் கல்லூரியில்
முதுகலை அறிவியல் பயின்று கொண்டிருந்தபொழுது, வர்ஷாவின் நெருங்கிய நண்பன். ‘லிவ் இன்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு நெருக்கம். ஆறடிக்கு
இரண்டு அங்குலம் குறைவாக இருப்பான். சுருட்டை முடி. இடது புறம் வாகெடுத்து தலைமுடி
அலை அலையாக இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த நாட்களில் அவை காற்றில் பறப்பதை
பார்க்க இவளுக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுதுமே ஒரு ரவுண்ட் நெக் டீ ஷர்ட்
திறந்துவிட்ட டெனிம் ஷர்ட் சகிதம் துறு துறு வென்று உற்சாகமாய் இருப்பான். செபாஸ்டியன்
டெய்லர் அவனது முழுப்பெயர்.
செபாஸ்டியனின் டொரோண்டோ மற்றும் வர்ஷாவின் மதுரை என்று கலாச்சார வேறுபாடுகள் இவர்களை
சற்றே அன்னியப்பட வைத்தாலும், அந்த கலாச்சார வேறுபாடுகளை டீகோட்
செய்வதில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வம் இருவரிடையே நெருக்கத்தை இயற்கையாகவே அதிகபடுத்தியிருந்தது.
படிக்கும் காலங்களில் தனது உதவித்தொகையை மிச்சப்படுத்தவும் மற்றும் மாத செலவை
குறைப்பதற்காகவும் வீட்டிலேயே உணவை சமைக்க ஆரம்பித்திருந்தாள் வர்ஷா. இயல்பாகவே
சமைப்பதிலும் அதை பிளேட்டிங்க் செய்து பறிமாறுவதிலும் ஆர்வம் கொண்ட செபாஸ்டியன், இந்திய உணவு வகைகளை சமைத்து கற்றுக்கொள்ள இவள் வீட்டிற்கு வர
ஆரம்பித்திருந்தான். சமைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் இவள் தங்கியிருக்கும் டவுன்ஹௌஸின்
இண்டீரியர்களை இங்கும் அங்கும் என சிறு சிறு மாற்றங்கள்
மூலம் மறுவடிவமைப்பு செய்து அழகாக்கினான். துணி உலர்த்த, வீட்டை சுத்தம் செய்ய என்று எல்லாவற்றிலும் வர்ஷாவுக்கு
உதவியாய் இருந்தான். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டி இங்கு வந்தபின் ஹோம்
சிக்காக உணர்ந்த வர்ஷாவை ஹோம் அவே ஃப்ரம் ஹோம் என்று உணர வைத்தான். செபாஸ்டியன் மீது
வர்ஷாவுக்கான ஈர்ப்பு அதிகமாகிக்கொண்டே சென்றதில் வியப்பொன்றுமில்லை.
அவ்வப்போது உணவை சேர்ந்து உண்ண ஆரம்பித்தவர்கள், சில
நாட்களிலேயே ஒருவரின்றி மற்றொருவர் உணவருந்த மறுத்தனர். செபாஸ்டியனுக்காக
காத்திருந்த நேரங்கள் வர்ஷாவை வேறொரு கனவுலகிற்கு இட்டுப்போயின. அவள் ராணியாகவும்
செபாஸ்டியன் ராஜாவாகவும் அந்த கனவுலகம் அவளுக்கு மென்மேலும் சுவாரஸ்யத்தை
கூட்டியிருந்தது.
ஞாபகங்கள் செபாஸ்டியன் குறித்து அசை போட்டுக்கொண்டிருந்தாலும் அனிச்சை
செயலாய் கேம்ரி காரை அவளது வீட்டிற்கே ஒட்டிவந்திருந்தாள். கேரேஜில் காரை நிறுத்தியபோது நீல நிறத்தில்
மடித்துவைக்கபட்டிருந்த கேம்பிங்க் கூடாரம் இவளை மீண்டும் பின்னோக்கி இழுத்து சென்றது.
ஒரு முறை glamping பொருட்டு “Algonquin
Provincial Park” சென்றிருந்தபோது, இரவில்
நிலவின் மடியில் எரியும் நெருப்பில் சாலமன் மீனை வாட்டிக்கொண்டே வர்ஷா கேட்டாள்.
“கடல் மட்டத்திற்கு 2000 அடிக்கு மேலே உட்கார்ந்திருக்கும் நம் உடலை
ஊடுருவிச்செல்லும் இந்த குளிரா, ஓயாது ரீங்காரமிட்டு காதுக்குள்
ரகசியம் சொல்லத்துடிக்கும் இந்த அடர்ந்த காடா, தூரத்தில் ‘சட சட’ என விழுந்துகொண்டிருக்கும் அருவியின் ஓசையா, அல்லது ஒளிரும் நிலவின் ஒளியா, எது உனக்கு பரவசத்தை
தருகிறது செபாஸ்டியன்?”
“இவை அனைத்துமே அழகையிருந்தாலும் இவற்றையெல்லாம் விட உனது அருகாமை எனக்கு
விவரிக்கமுடியாத கிளர்ச்சியைத்தருகிறது வெர்ஷ்” என்றான் செபாஸ்டியன்.
எரியும் ரெட்வுட் நெருப்பின் ஒளியில், வர்ஷாவின் கன்னம் வெட்கத்தில்
சிவந்ததை செபாஸ்டியன் கவனிக்கத்தவறவில்லை. அதுவரை கைகோர்த்து நட்பை மட்டும் பரிமாறிக்கொண்டிருந்தவர்கள்
அன்று மெய் கலந்து தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு எடுத்து சென்றனர்.
இண்டெர்ன்ஷிப் முடித்து இருவரும் லிம்னாலஜி துறையிலேயே வேலைக்கு சேர்ந்தனர். சஸ்டைனபில்
இன்லெண்ட் வாட்டர் டெவேலப்மெண்ட். கைநிறைய பணம். அடுத்த கட்டமாக மதுரையில்
இருக்கும் தனது பெற்றோரிடம் செபாஸ்டியனை
குறித்து எடுத்து கூறி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். இரு கலாச்சாரங்களின்
சங்கமமாக அந்தத்திருமணம் நடக்கவிருந்தது. முன்னை விட செபாஸ்டியன் மேலும்
சார்மிங்காக தெரிய ஆரம்பித்தான். செபாஸ்டியனை பட்டு வேஷ்டி சட்டையில் பார்க்கும்
அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள்.
ஆனால் இந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி செபாஸ்டியன் அகால மரணமடைந்தான்.
அந்த விபத்து நடக்கும் வேளையில் வர்ஷாவும் அவனுடன் பயணித்திருந்தாள். உடல்
அயர்வின் காரணமாய் பின் சீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவளை இரு கதவுக்குள்ளும்
இருந்து வெளிவந்த காற்று பை காப்பாற்றியது. ஆனால் ஸ்டீயரிங்க் வீல் பின்னாலிருந்த காற்றுப்பை
செபாஸ்டியன் உடலை மட்டுமே எந்த சேதமும் இன்றி காப்பாற்றியது. விபத்தின்
அதிர்ச்சியில் அவன் மூளையில் இருந்த ரத்த நாளங்கள் வெடித்து ரத்த கசிவு ஏற்பட்டு, அநீரிசியம் பாதிக்கப்பட்டு, ஹிமோரெஜிக்
ஸ்ட்ரோக் வந்து மரணமடைந்தான்.
செபாஸ்டியனின் விபத்து, மருத்துவமனை அலைச்சல்கள், இறுதிச்சடங்கு என்று எல்லாவற்றிலும் நேரடியாக இருந்த காரணத்தினால், அவனைப்பிரிந்த அதிர்ச்சியில் இருந்த மீள வர்ஷாவுக்கு அதிக நாட்கள்
தேவைப்பட்டன. அவளது மனதில் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டைகளின் கற்களை ஒவ்வொன்றாக
பெயர்த்து எடுத்தெறிந்தாள். அது அவளுக்கு உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் பிய்த்து எரியும் அளவுக்கு வலியைத்தந்தன. அவ்வப்போது வரும் செபாஸ்டியனின் ஞாபகங்கள் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அந்த ஞாபாகங்களின் முடிவில் செபாஸ்டியன் நிஜத்தில் இல்லாதது
வர்ஷாவை ஒரு ஹிஸ்ட்டெரிக் பேஷண்டாக மாற்றியது. அவற்றிலிருந்து வெளிவரவும் ஒரு புது
வாழ்க்கையைத் தொடங்கவும் நியூரோ மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தாள். இவளது மனதை
சமநிலைப்படுத்த அவை ஓரளவு உதவின.
ஆனால் இன்று மீண்டும் அவனது ஞாபகங்கள் தலைதூக்கியது
அவளுக்கு மேலும் மனதில் நிலையாமையை ஏற்படுத்தியது. இந்த நினைவுகளே தன்னை மீண்டும்
ஒரு சைக்கிக் பேஷண்டாக மாற்றிவிடாமல் இருக்க வேண்டும் என்று கவலை கொண்டாள். கரையில் நிற்கும்பொழுது
மீண்டும் மீண்டும் காலை நனைத்து செல்லும் கடல் அலைகளைப்போலவே ஞாபகங்கள். அவற்றில் சில
பரவசத்தை கொடுத்தாலும் சில ஊசியால் நகக்கண்ணில் குத்தும் வலியை கொடுக்க வல்லது. உயிரோடு
கலந்திருக்கும் அந்த ஞாபகங்கள் அழிந்து போவது உயிர் பிரியும்போது மட்டுமே.
அதுவரை இவ்வாறு வதைபடுவதை
பொறுக்கமுடியாது என்று முடிவு செய்த வர்ஷா, தனது பெட்ரூம் வார்ட்ரோபில் மூன்றாவது ஷெல்ஃபில் வைத்திருந்த
மருந்து குப்பியை கையில் எடுத்து ஆராய்ந்தாள். நியூராலஜிஸ்ட் Dr. மைக்கேல் செரா கொடுத்த மருந்துகள் அவை. JAN, SEB என்று இரண்டு சிறிய அறைகள் இருந்தன. JAN க்கான அறை எந்த மருந்துகளும் இல்லாமல் காலியாக
இருந்தது. இறந்து போன தனது தோழி ஜானகியுடைய நினைவுகளை அழிக்கும் மாத்திரைகள். SEB என்ற செபாஸ்டியன் சம்பந்தப்பட்ட நினைவுகளை மட்டுமே அழிக்கக்கூடிய
மருந்துகளை கையில் எடுத்தாள். தனிமையில் வருத்தும் அவனது நினைவுகளை இன்றோடு
மறப்பதற்க்கு முடிவு செய்தாள். கவரில் செபாஸ்டியன் 1 மாத்திரை ப்ரேக்ஃபாஸ்ட்
மற்றும் டின்னர், மூன்று நாட்கள் என்று எழுதப்பட்டிருந்தது. மிதமான
வெந்நீரின் உதவியுடன் ஒரு மாத்திரையை விழுங்கினாள். மீதம் 5 மாத்திரைகள் இருந்தன. முதல் மாத்திரை
சாப்பிட்ட அன்றைய தேதியை தனது லிவிங் ரூமில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில்
பார்த்து 12.08.2055 என்று குறித்து வைத்துக்கொண்டாள்.
அதன் பின் மருந்து குப்பியை மூடி வைத்துவிட்டு வர்ஷா
உறங்கச்சென்றாள்.