புதன், ஏப்ரல் 15, 2026

பைசன்

புழுதிக்காட்டில் இருந்து வரும் ஒவ்வொரு இளைஞனுடைய கதை தான் பைசன் என்று மாரி செல்வராஜ் சொல்லிவிட்டார். தகுந்தாற் போல் எழுத்தும் இயக்குமும் நிரூபித்து விட்டது. காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளனிடம் பரந்துபட்ட உணர்ச்சிகளையும் படபடப்பையும் கடத்துகின்றன. அந்த வித்தையில் ஒரு தேர்ந்தெடுத்த கதைசொல்லியாக இயக்குனர் மிளிர்கிறார். 



சாதிய பிரச்சினைகளுக்குள் பகை ஊறி முடை நாற்றமடிக்கும் குக்கிராமத்தில் பிறந்து வாழும் ஒரு சிறுவனின் கபடி விளையாடும் ஆசைகள் கண்ணுக்கு தெரியாத பல மாயக்காரனீகளால் எப்படி பந்தாடப் படுகின்றன என்பதை பைசன் எந்த ஒரு சமரசமுமின்றி பிரதிபலிக்கிறது. 'பிரச்சினை என்ன என்பதை விட அந்த பிரச்சினை யாருக்கும் யாருக்கும் என்பது தான்' போன்ற வசனங்கள் ஒரு சோறு பதம். 

எனக்கு பிடித்த மூன்று காட்சிகள் 

1. துருவ். தன்னைச் சுற்றி நடக்கும் பகையின் பின்புலத்தை உணராத அப்பாவி விடலைப் பையனாக பரிமளிக்கும் அதே வேளையில் கபடி ரெய்டில் காளை மாடாய் சீறவும் தவறவில்லை. திரை முழுவதும் பல இடங்களில் தந்தை விக்ரமின் மேனரிசங்களை நினைவு படுத்துகிறார். அது தானே இயல்பு. திரையில் பார்க்க நன்றாகவும் இருக்கிறது. உதாரணமாக கந்தசாமியுடனான கடைசி பேச்சு. 

2. கண்முன்னே தன் பையனை வெட்டிச் சாய்க்கப் போகிறார்கள் என்று உணர்த்தவும், துடி துடிக்க வெட்டிக் கொள்ளும்போதும் அந்த பெரியவர் ஓலம் இடும் காட்சிகள் கல் மனதையும் அசைத்து விடும். 

3. அர்ஜுனா விருதை துருவிடமிருந்து பசுபதி வாங்கிய பிறகு துருவை ஆரத் தழுவி உச்சி முகர்ந்த கணம். கண்களும் பெருமிதம் கொண்டு கொண்டாடும் நடிப்பு.

கருத்துகள் இல்லை: