சனி, ஜூலை 24, 2021

சார்பட்டா

வருங்கால முதல்வர் அண்ணன் உதயநிதி அவர்கள், சார்பட்டா படத்தை பற்றி முகநூலில் உள்ளீடு செய்திருக்கும் அதே நாளில் இந்த படத்தை பற்றி எழுதுவதில் உவகையடைகிறேன். 😃



நெகிழியை முதலில் உமிழும், அசை போடும் மாடைப்போல, படம் பார்த்து முடித்த கையோடு, சில செரிக்காத பகுப்பாய்வுகள்.

1. என்னதான் சலிப்பு தட்டவில்லையென்றாலும், இந்த படத்திற்கு மூன்று மணி நேரம் என்பது தேவையில்லாத ஆணி 

2. வலிந்து திணிக்கப்பட்ட எமெர்ஜென்சி காட்சிகள்.  கபிலன் தடம் மாறுவதற்கான காரணமாக பசுபதியை விலக்கி வைக்க வேண்டும் என்றால் அதற்கு எமெர்ஜென்சி தேவையில்லை. கோபத்தில் ஒரு கொழுக் மொழுக் பயில்வானை சொருகியிருப்பது போல கதையை அமைத்திருக்கலாம். கதையின் போக்கோடு ஒட்டாமல் தனித்து நிற்கும் இந்த அரசியல் காட்சிகள் புரியவில்லை. குறியீடோ?

3. அழுவதற்காகவே இரு கதாபாத்திரங்கள் என்பது போல அனுபமா மற்றும் துஷராவையும் பயன்படுத்தியிருப்பது. இரு பாடலுக்கு ஆடிச்செல்லும் கதாநாயகிக்கும் இவர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை. அழுத்தமான பெண் பாத்திரப்படைப்பு மிஸ்ஸிங்.

4. கபிலனை கொல்வதற்கான வாய்ப்புகள் கதை நெடுகிலும் இருந்தாலும், அவற்றை சாசுவதமாக தவிர்த்திருப்பது, கமெர்சியல் வட்டத்துக்குள் இந்த படைப்பை இழுத்து செல்லும் ஒரு அபாய quick sand.

நிறைகள்

1. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. பருப்பு சாதத்துடன் நெகிழ்ந்து கலந்திருக்கும் பசு நெய்யை போல அகழ்ந்து விரவி மணம் வீசுகிறது.

2. முரளியின் ஒளிப்பதிவு. ரிங்கிற்குள் நடக்கும் குத்துச்சண்டையை அலுப்புத்தட்டாமல் பரபரப்புடன் அசரடிக்கும் வகையில் காட்சிப்பதிவு செய்ததில் படத்தின் பெரும்பாலான வேலை முடிந்துவிட்டது 

3. ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் காட்சியை நகர்த்தியதில், தமிழ்ப்பிரபா மற்றும் ரஞ்சித்தின் திரைக்கதை கைகொடுக்கிறது.

4. பழனி படிக்கட்டு போல செதுக்கிவைத்திருக்கும் கபிலன், வேம்புலி, ரோஸ் ஆகியோரின் உடற்கட்டு. அகவை 35 தொட்டுவிட்ட காரணத்தினால் 2k கிட்ஸுக்கான மோட்டிவேஷன் என்று இதிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் 

5. நான் கடவுளுக்குப்பிறகு தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு, ஆர்யாவுக்கு. பக்காவாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.

6. கலை நேர்த்தி என்பது கல்லிடம் இல்லை, செதுக்கும் சிற்பியிடம் என்பதுபோல இயக்குனரின் கையில் எல்லா பாத்திரப்படைப்புகளும், தேர்வுகளும், நடிப்பும் அவ்வளவு நேர்த்தி. சபாஷ்.

6. ரங்கன் கதாப்பாத்திரமும் அதற்கு மிடுக்கு உடல்மொழியுடன் நியாயம் சேர்த்திருக்கும் பசுபதி என இன்னும் பல 

தனது comfort zone ஐ விட்டு வெளியே வந்து ஒரு படைப்பை வெற்றியுடன் பதிவு செய்ததன் மூலம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளியாக ரஞ்சித் உருமாறியிருக்கிறார்.    

 

திங்கள், ஜூலை 12, 2021

முகக்கவஜம்

கொரோனா தொற்றுக்கு முன்னாடி ஒரு மாதம் கொரோனா தொற்றுக்கு பின் மூன்று மாதம் என மொத்தம் நான்கு மாதம் அறுவடை செய்யாத காரணத்தினால் தலை மேல் பாரம் கூடியிருந்தது. மாவட்டத்தில் தொற்று கணக்கு 110 தான் என குறைத்து செய்தி வெளியிட்டிருந்த ஒரு நன்னாளில் தலையில் களை எடுக்க அருகில் இருக்கும் சலூனுக்கு சென்றிருந்தேன். 'வாங்க சார், இங்க உக்காருங்க' என்று சொன்னவர் மாஸ்க்கை, ஒரு வயது குழந்தை ஜட்டி போடும் ஸ்டைலில் போட்டிருந்தார். மூக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தது. இங்கே உவமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள குழந்தை ஆன் குழந்தை என கண்டுபிடித்தோருக்கு ஒரு ஷொட்டு. 

'கட்டிங்கா? ஷேவிங்கா?' என்றவரிடம்,  'முதல்ல மாஸ்க்கை ஒழுங்கா போடுங்க' என்றேன்.

கனமான முறைப்பு, மிதமான அலுப்பு என ஒரு வெரைட்டியாக கருப்பு துண்டை உதறி மேலே போர்த்தினார். 

'அண்ணே, மாஸ்க்கை ஒழுங்கா போடுங்கண்ணே' என்றேன், மறுபடியும்.

வேகாத வெயிலில், புழுக்கத்தில் லுங்கிக்குள் கனத்த ஒரு பட்டாப்பட்டியை போடும் வெறுப்பில் மாஸ்க்கை ஏற்றி விட்டார். அடுத்த ஒரு நிமிடத்தில் மீண்டும் ஒரு வயது ஆன் குழந்தையை நியாபகப்படுத்தியது.

'உங்களை திருத்துறது என் வேலை இல்ல' என்று மனதுக்குள் நான் முனங்கிவிட்டு, முடி வெட்டும்பொழுதும் என்னுடைய N95 மாஸ்க்கை கழட்டாமல் அறப்போர் நடத்தினேன்.     

சுற்றியும் நோட்டம் விட்டதில் கடைக்குள் இருந்த ஒருத்தருமே மாஸ்க் அணியவில்லை. ஏசி வேறு. ஒரு தும்மல் ஊடே இரண்டு இருமல் என்ற இலவச இணைப்பு. 

ஐந்து நிமிடத்திற்கு மேலே இங்கே இருந்தால் காவேரி மருத்துவமனையில் சட்டையை கழட்டி CT ஸ்கேன் எடுக்க விடுவார்கள் என்று தோன்றியதால், ஆன வரைக்கும் போதும் என்று அவசரப்படுத்தி கீழிறங்கினேன்.

கடைக்குள் சென்றதிலிருந்து வெளியே கிளம்பும் வரைக்கும் நான் மாஸ்க்கை கழட்டவில்லை என்று கவனித்த ஒரு மேதகு, 'ரொம்ப பயப்படாதீங்க சார். தைரியமா இருங்க' என்று அறிவுரை சொரிந்தது.

சற்று யோசித்துவிட்டு, 'அதில்லண்ணே, நேத்து தான் எனக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துச்சி. அதான். வேறொன்னுமில்லே' என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

வண்டியை ஸ்டார்ட் செய்யும்பொழுது நிமிர்ந்து பார்த்தால், பொதுக்கழிப்பறையில் உட்கார்ந்துவிட்டு பைப்பில் தண்ணீர் வராத காட்சியை  மிரட்சியுடன் பார்ப்பது போல, அனைவரும் மாஸ்க்கை அணிந்து என்னை வெறிக்க வெறிக்க பார்த்தனர்.   

ஊரு நல்லாருக்க ஒரு பொய் சொன்னா தப்பில்லை என்று கிளம்பிவிட்டேன்.