ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

EV

இந்தியாவிற்குள் 1960 முதல் பரவலாக மோட்டார் ஸ்கூட்டர் உபயோகப்படுத்தபடுகிறது. பரவலாக என்றால் இப்பொழுது இருப்பது போல் வீட்டிற்கு ஒன்று கணக்கில் கிடையாது. கிட்டத்தட்ட 60 வருடங்கள் கழித்து டூ வீலரே இல்லாமல் முடியாது என்ற அளவில் வளர்ந்துவிட்டோம். தோராயமாக 35 கோடி தனியார் வண்டிகள் (இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) சாலைகளில் ஓடுகின்றன. மத்திய மாநில அரசு வாகனங்கள் தனி. இத்தனை கோடி வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் உமிழ்வை கணக்கில் கொண்டால் அதிர்ச்சி அளிக்கக்கூடிய எண்களாக இருக்கிறது. இப்பொழுது இந்த தருணத்தில் நாம் இதை கட்டுப்படுத்தவிட்டால், நமது வருங்கால சந்ததிகளுக்கு வாழத்ததகுதியற்ற ஒரு புவியை விட்டுச்சென்ற துரோகத்தை இழைத்தவர்களாகி விடுவோம்.

இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாகனங்களின் மூலம் வெளிப்படும் கார்பன் உமிழ்வுகளை இவை பெருமளவில் கட்டுப்படுத்தும் என்றாலும், இந்த வாகனங்களுக்கான மின்சாரதத்தேவைக்கான உற்பத்தியை ஏதன் மூல நிறைவேற்றப்போகிறோம் என்பது முக்கிய கேள்வியாகிறது. மீண்டும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் தான் என்றால், இந்த மாற்றத்திற்கான அர்த்தமே தகுதியிழந்து விடுகிறது. மேலும் இந்த பேட்டரி குப்பைகளை எவ்வாறு கையாளப்போகிறோம் அல்லது மதுசுழற்சி செய்யப்போகிறோம் என்பது முக்கியம். 

இது ஒரு புறமெனில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடு பிடிக்க தடையாய் இருப்பதாக நான் கணிக்கும் காரணங்கள்.

1. பெட்ரோல் நிரப்புவது போல ஓரிரு நிமிடங்களில் வண்டியை ரீசார்ஜ் செய்யமுடியாது, 

2. தற்போதைய அதிகபட்ச EV  mileage என்று கருதப்படுவது 450 KM தான். இதுவே பரீட்சார்த்த முறையில் தான் இருக்கிறது. ஆதலால் 500, 600 KM தாண்டி ஊருக்கு செல்வது என்பது அத்தனை எளிதல்ல. குறைந்தபட்சம் சில வருடங்களுக்கு. 

3. அது போலவே, பெட்ரோல் போட்டுவிட்டு இரண்டு மாதம் கழித்து கூட வண்டியை ஓட்டலாம். அனால் EV யில் அதுபோன்று வாய்ப்பில்லை. ஸ்டாண்ட் பை டைம் என்று ஒன்று இருக்கிறது. மொபைல் சார்ஜ் போல. இறங்கி கொண்டே இருக்கும்.

4. பாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்ஸ் இல்லை. 30 நிமிடத்தில் 50% கெபாசிட்டி சார்ஜ் பண்ண வேண்டுமென்றால் அதற்கென ப்ரத்யேகமாக நிறுவப்பட்டிருக்கும் அந்த காருக்கான ஷோரூம் செல்லவேண்டும். வீட்டில் முழுமையாக சார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் 15 மணி நேரம் பிடிக்கும். 

ஆக, குறைந்த நேரத்தில் முழு சார்ஜ் மற்றும் நீண்ட நேர ஸ்டென்ட் பை என ஒரு டெக்நாலஜி தேவைப்படுகிறது. இதை தற்போது R&D செய்து கண்டுபிடித்திருப்பார்கள். அனால் பேடென்ட் செய்வதில் தகராறு நடந்து கொண்டிருக்கும். யார் அதிகம் சம்பாதிப்பது என்று?

www.copyright.gov.in இல் சென்று சில கீவ்ர்டு மூலம் எந்த பேட்டரி கம்பெனி இதை காப்பிரைட் செய்வதற்கு முயற்சித்திருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி வைத்து கொண்டால், ஐந்தாறு வருடங்களில் பலமடங்கு லாபம் பார்க்கலாம்.

ஆனால் அப்படியே அந்த டெக்நாலஜியை இவர்கள் கண்டுபிடித்தாலும், காப்பிரைட் செய்வதற்கு இந்தியாவில் முயற்சி செய்ய மாட்டார்கள் என்று அனுமானிக்கிறேன்.    

எது எப்படியோ, எலெக்ட்ரிக் வாகனங்களின் மின்சக்தி தேவைக்கான உற்பத்தியை தன்னிறைவு செய்வதில் மிகப்பெரிய போராட்டத்தை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். வெகு விரைவில்.


புதன், ஏப்ரல் 20, 2022

RRR

தந்தையுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுமளவுக்கு தந்தை விஜயேந்திர பிரசாத், தனையன் ராஜமௌலிக்கு பக்கபலமாக இருக்கிறார். சந்திக்கவே இல்லாத இரண்டு வரலாற்று நாயகர்கள் சந்தித்துக்கொண்டால் இல்லையில்லை மோதிக்கொண்டால் எவ்வாறு இருக்கும், அதுவும் தங்களது புஜபல பராக்கிரமங்களை வேண்டுமளவுக்கு தங்களுக்குள்ளாகவே சோதித்துவிட்டு, இறுதிக்காட்சியில் இணைந்து எதிரிகளை வதம் செய்தால் என்ற ஒன் லைனை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையை செதுக்கியிருக்கின்றனர்.

ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் தேஜா என இருவருமே தெலுங்கில் முன்னணி நாயகர்கள். இரண்டு பேருக்குமே சரிசமமான ஸ்பேஸ் கொடுத்து அதை லாவகமாக கையாளுவதற்கே ஒரு திறமை வேண்டும். அந்த மெனக்கெடல் இருவரின் இண்ட்ரோ காட்சிகளில் தெரிகிறது. 

எல்லாவற்றையும் விட ஆச்சர்யம் ராஜமௌலியின் திரைக்கதை. மனிதன் எப்படி இப்படியெல்லாம் யோசித்து காட்சிகள் அமைக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது. உதாரணமாக தவறே செய்யாத பீமை கைது செய்யும் ராம் வில்லனாக இருக்க முடியாது. அவ்வாறெனில் ஒரு அப்பாவியை ஏன் இவர் கைது செயகிறார் என்பதற்கு உறுதியான முன்கதை வேண்டும். ராமுடைய முன்கதை எவ்வாறு இருக்கப்போகிறது என்பதில் இருந்த ஆர்வம், சஞ்சய் தத் வரும் முன் கதையில் தன்னிறைவு பெறுகிறது. ஒற்றை ஆளாக பிரிட்டிஷ் படையை எதிர்க்கும் சஞ்சய்தத்துகு அவர்களை சுடமுடியாத படிக்கு காயமேற்படுகிறது. துப்பாக்கியை, குழந்தையாக இருக்கும் ராமிடம் கொடுக்கும் அந்த ஹீரோயிச காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. அடுத்த முப்பது வினாடியிலேயே தன் தம்பியையும் தாயையும் இழக்கும் செண்டிமெண்ட் காட்சி என ராஜமௌலியின் திரைமொழி வேறு லெவலில் உணர்வை கடத்துகிறது.  

எரியும் நெருப்புக்கு மத்தியில் தண்ணீரில் தவிக்கும் சிறுவனை காப்பாற்றும் யுக்தி மற்றும் இரண்டாவது கதவை உடைத்து கோட்டைக்கு உள்ளே செல்லும் லாரியிலிருந்து கட்டவிழ்க்கப்படும் காட்டு விலங்குகள், வில்லில் சொருகி அனுப்பப்படும் கையெறிகுண்டுகள் என காட்சிகள் அனைத்தும் பிரெஷ். 

புலி, ஓநாய் போன்ற விலங்குகளின் அனிமேஷன் காட்சிகள் அவ்வளவு தத்ரூபம். குறைந்தபட்சம் இந்த க்ராபிக்ஸ் காட்சிகளுக்கு நூறு கோடியாவது செலவு ஆகியிருக்கலாம். மேலும் படத்தை 550 கோடி செலவு செய்து எடுத்தாலும், தொந்தியில் முகம் வரைவது, மேம்பாலத்தில் பெயிண்ட் அடிப்பது போன்ற எந்த காட்சியும் தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு புகாரில்லை. எழுத்தாளரை இழந்த இங்குள்ள பிரமாண்ட இயக்குனர்கள் ராஜமௌலியிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். 

புலியை கட்டிப்போடும் காட்சியில் தொய்விழந்த கயிறு, தீரவே தீராத அம்புகள், உடைந்த முட்டியை சரி செய்ய உதவும் பச்சிலை சாறு என்று சில பல குறைகள் இருந்தாலும், காட்சியில் இருக்கும் ப்ரமாண்டத்தில் அவையெல்லாம் கண்ணனுக்கு உறுத்தவில்லை. திரைமொழிக்கு உறுதுணையாக கீரவாணியின் BGM.

pan india  சினிமாவாக எடுக்கும் முயற்சியில் எல்லா வுட்டிலுமிருந்து ஓரொரு நடிகர்கள். ஒரேயொரு பிளேடை மட்டுமே கொடுக்கும் சீனில் சமுத்திரக்கனியை உபயோகப்படுத்தியிருப்பதை தமிழ் சமுதாயம் வன்மையாக கண்டிக்க கடைமைபட்டிருக்கிறது.

கொசுறு தகவலாக, ஒரு புல்லட்டின் எடை 200 கிலோ எனபதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.   

வெள்ளி, ஏப்ரல் 15, 2022

நண்பன்

நண்பன் ஒருவனை விடாக்கொண்டான்  போல தேடிய  சம்பவம் இது. மேலும் நமது விவரங்கள் இன்டர்நெட்டில் எவ்வாறு விரவிக்கிடக்கின்றன என்பதற்கான ஒரு சான்று. 

சுமார் இருபது வருடங்களுக்கு முன் அவனுடனான தொடர்பு அறுந்துபோனது. ஏழு வருட நட்பு. எனக்கு பலதரப்பட்ட நூல் அறிமுகப்படுத்தியது மற்றும் வாசிக்க வைத்ததற்கு முக்கியமான காரணீ அவன்.  மேற்படிப்பு காரணமாக வேறு வேறு திசையில் பயணமாகியதில் மறந்தேவிட்டேன். செல்போன் இல்லாத ஒரு நிம்மதியான காலம் அது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஞாபகம் வந்தாலும் தொடர்பு கொள்ள வழியில்லை. 


கடந்த வருடம் இரண்டாவது அலை கொரோனா தாக்கத்தில் தப்பி பிழைத்த நேரம். அதாவது ஆறு வயது மகளிடம் பேங் யூசர் id மற்றும் பாஸ்வர்டை சொல்லிவிடலாமா என்ற ஒரு கலக்கமான தருணமது. பார்க்க வேண்டும் என்று நினைத்து பார்க்க முடியாத நண்பர்களை மீண்டும் பார்க்க வழியில்லாமல் போய்விடுமோ என்ற கவலை. அவனை மையப்படுத்தி ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். இறுதியில் அவனை கண்டுபிடித்ததும் பேசமுடியாத நிலைமை என்று முடித்திருந்தேன். முடிவை வாசித்து அன்றிரவே வேறு ஒரு நண்பன் என்னை விளித்து, தயவு செய்து பேசிவிடு என்றான். நம்பர் இல்லை என்று கூறினாலும் விடவில்லை. இவனுடைய அழைப்பிற்கு பிறகு, அவனை எப்பாடு பட்டாவது கண்டுபிடித்தே தீருவது என்று முடிவு செய்தேன்.


ஏற்கனவே முயற்சி செய்தது தான். மீண்டும் ஒருமுறை facebook, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவனது பெயரை தேடினேன். வைக்கப்போரில் ஊசியை தேடுவது போல இருந்தது. நண்பனது வீடு எனக்கு ஞாபகம் இருந்தது. நான் இருபது வருடத்துக்கு முன் வசித்த ஏரியாவுக்கு அருகில் நண்பன் ஒருவன் போலீசாக வேலை செய்து கொண்டிருந்தான். அவனை விளித்து அடையாளங்கள் சொல்லி விசாரித்து சொல்லுமாறு உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் விசாரித்து விட்டு பதிலனுப்பினான். அவர்கள் வெகு காலம் முன்பே அந்த வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர் என்பதும் மேலதிக தகவல் இல்லை என்றும் கூறினான்.


என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில், அதே ஏரியாவில் வசித்த மற்றுமொரு நண்பனை அழைத்து தகவல் சொல்லி விசாரிக்க சொன்னேன். அவனது நண்பன் அமெரிக்காவில் இருப்பதாகவும் அவனிடம் தொடர்பில் இருக்கிறான் என்றும் அன்றிரவே ஒரு நம்பரை அனுப்பிவைத்தான். ஆர்வமாக உடனே அழைத்தேன். சுவிட்ச் ஆப். இரண்டு மூன்று நாட்கள் முயற்சித்தும் சுவிட்ச் ஆப். இந்த நம்பர் உபயோகப்படுத்தாத நம்பர் என்று தெரிந்துவிட்டது. ஆனால் ட்ரு காலரில் அவனது பெயரை காண்பித்தது. அவனது பெயரில் ஒரு extra 

 k இருந்தது. மேலும் அவனது அப்பா பெயரும் இணைத்து காண்பித்தது. அதுதான் முதல் லீட்.


அதில் காண்பித்த அதே பெயரை facebook இல் தேடிப்பார்த்தேன். சிக்கிவிட்டான். ப்ரொபைல் லாக் செய்யப்படவில்லை. அதற்கு முதல் நாள் போஸ்ட் செய்திருந்தான். ஆக்டிவான ப்ரொபைல் தான். பிடித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. உடனே மெசேஜ் அனுப்பி காத்திருந்தேன். இரண்டு நாட்கள் கழித்தும் பதிலில்லை. ஒருவேளை unknown request இல் இருக்கிறதோ என்று நினைத்து அவனது போஸ்டை லைக் செய்த நண்பர்களுக்கு மெசேஜ் செய்து தகவல் சொல்லச்சொன்னேன். மேலும் நம்பர் இருந்தால் பகிருமாறு கேட்டேன். அவர்கள் கொடுத்ததும் அதே பழைய நம்பர்.  இரு மாதங்கள் கடந்த பின்பும் அதே நிலை.  சற்று தொய்வு ஏற்பட்டிருந்தது. மேலும் ப்ரோபைலை ஆராய்ந்தபோது அவனது மனைவிபோன்ற ஒரு ப்ரொபைல் கிடைத்தது. ஆனால் அது லாக்ட். நம்பர் கேட்டு மெசேஜ் அனுப்பி காத்திருந்தேன். பதில் வரவில்லை. 


மீண்டும் தொய்வு. இப்படியே மூன்று மாதம் ஓடிவிட்டது. ஒருவித குறிக்கோளே இல்லாமல் அவனது மனைவி பெயரை கூகிளில் தேடினேன். சிக்கிவிட்டது. அரசு மருத்துவமனையில் பணிநியமன ஆணை. அதில் அவர் பெயர் இருந்தது. எந்த மருத்துவமனை என்று கண்டுபிடித்து அந்த மருத்துவமனையின் வெப்சைட்டில் அவரது பெயர் இருப்பதை உறுதிப்டுத்திவிட்டேன். இப்பொழுது அங்கு வேலை பார்க்கும் மற்றுமொரு நண்பனிடம் அவனது போட்டோவை பகிர்ந்து பேசியபொழுது அவனது அம்மாவும் அதே மருத்துவமனையில் வேலைபார்த்துள்ளார் என்பது தெரியவந்தது. அடுத்த நாளே அவன் மனைவியிடம் பேசி நம்பரை வாங்கிவிட்டான். 


கிடைத்த மறுநிமிடமே அழைத்தேன். ஊஹூம். பதிலில்லை. இரண்டு மூன்று நாட்கள் அதே நிலை. வெறுத்துவிட்டது. இதற்கு மேல் எப்படி என்று. நான்காவது நாள் வேறொரு நம்பரிலிருந்து கால். அவனே. 'ஏண்டா போன் பண்ணா எடுக்க மாட்டியா?' என்று உரிமையாக கடிந்துகொண்டேன். முந்தைய பிசினஸில் இருக்கும்போது இவனது நம்பர் வெளியே பல பேரிடம் போய்விட்டது. ஒரு நாளைக்கு நூறு ராங் கால். அதற்கு பதில் சொல்லியே மாளவில்லை. ஆதலால் இரண்டு மூன்று முறை விளித்தால் மட்டுமே மீண்டும் விளிப்பேன் என்று ஒரு அரிய கோட்பாட்டை விவரித்தான். சரிதான் என்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழங்கதைகள் எல்லாம் பேசிவிட்டு அவனை ஒரு கேள்வி கேட்டேன். 


'இவ்ளோ முயற்சி பண்ணி உன்ன கண்டுபிடிச்சிருக்கேனே, நீ என்ன ஏன் தேடலை?'


'ஙே' என்று முழித்தான். மேலும் அவனை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை. 


காலம் கரைபுரண்டு ஓடினாலும் அவனிடம் நான் கொண்டிருந்த நட்புணர்வு என்றும் மாறாதது.   














வியாழன், ஏப்ரல் 14, 2022

கிராஃபிக்ஸ்

இண்டஸ்ட்ரியில் முழுமையான சப்போர்ட் மற்றும் பணபலம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு படத்தை வெளியிட்டு தமிழ் திரையுலகின் வரலாற்றையே சற்று தலைகீழாக மாற்றியமைத்த ஒரு சம்பவம் இது. 

எவ்வளவு தான் ஷார்ட் ஸ்டின்ட் ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அவர்களது ஞாபகம் வந்தால் ஒரு முறையாவது விளித்து கதைத்துவிடுவேன். பகிர்ந்து அளவளாவி மகிழ்ச்சியை தெரிவிப்பதை விட வேறென்ன பெரிய வேலை செய்து கிழித்து விடப்போகிறாம். அவ்வாறான ஒரு நண்பரின் ஞாபகம் வந்தது. பத்து வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தேன். பக்கத்து அறை. அவர் ஒரு பைன் ஆர்ட்ஸ் நிபுணர். நாங்களெல்லாம் காலையே கல்லெறிந்த நாய் போல் பரபரப்பாக கிளம்பி வேலை முடித்து, பிழிந்து போட்ட கரும்பு போல் இரவு வீடு திரும்பும் நெகிழி குப்பைகள். இவரோ காலை சாவகாசமாக எழுந்து வரைவதற்காண கான்செப்டை வெளியில் சென்று கேமராவில் பதிவு செய்து பின்னிரவில் தனது படைப்புகளை மெருகேற்றும் ஒரு படைப்பாளி. தேர்ந்த வித்தைக்காரர். அவர் தத்ரூபமாக வரைந்திருந்த ஒரு அல்லி மலர் இன்றளவும் எனது நினைவில். இது போன்ற படைப்புகளை அவ்வப்போது வரைந்து கண்காட்சியில் அதை விற்றுவிடுவார். என்னளவில் அவரை இவ்வாறே தெரிந்து வைத்திருந்தேன். 

ஆனால் அன்று அழைத்து பேசிய போதுதான் அவர் இதற்கு முன் ஒரு கிராஃபிக்ஸ் ஹெட் ஆக வேலை செய்தது தெரியவந்தது. மேலும் ஒரு படத்தை பாதிவரையில் முடித்துவைத்திருந்திருக்கிறார். அது வரைக்கும் செலவழிக்கப்பட்ட தொகை 14 கோடி. ஒப்பீட்டளவில் சொல்வதென்றால், அந்த காலகட்டத்தில் ரிலீசான வெயில் படத்தின் பட்ஜெட் 1 கோடி மட்டுமே. இப்படிப்பட்ட சூழலில் தான் 'இது ரஜினின்னு சொன்னா லதாவே நம்ப மாட்டாங்க' என்ற விமர்சனத்திற்கு புகழ் பெற்ற 'கோச்சடையான்' ரிலீஸ் ஆகியது. கதை திரைக்கதை இசை என் எல்லாமே பிரமாதமாக இருந்தாலும் படம் நெடுகிலும் உறுத்திய கிராபிக்ஸ் காட்சிகள் உலகளவில் மிக மோசமான விமர்சனத்தை சந்தித்தன. இதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் இவருக்கு தெரிந்து தயாரிப்பு தரப்பில் தொந்தரவு செய்யாத நல்ல கிராபிக்ஸ் வல்லுநர்கள் இருந்தும், ஆறேழு ப்ராஜெக்ட்கள் அப்படி அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் தயாரிப்பாளர்கள் கிளம்பிவிட்டார்கள். தோராயமாக இன்றைய மதிப்பில் 500 கோடி மதிப்புள்ள தொகை முதலை வாயில் மாட்டிக்கொண்டது. காரணம் இந்த 3d படங்கள் ஒர்க்கவுட் ஆகாதோ என்ற அவநம்பிக்கை தான். வேலை செய்து கொண்டிருந்த கிராபிக்ஸ் ஆட்களுக்கு வேலை பறிபோய்விட்டது. விரக்தியில் வேறு வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டார்கள்ஏ. எனது நண்பர் மீண்டும் பைன் ஆர்ட்ஸை கையில் எடுத்திருக்கிறார். ஒரு வேளை இவரது படங்கள் வெற்றிகரமாக வெளிவந்திருந்தால் இவர் அடைந்திருக்க வேண்டிய உயரம் சர்வதேச அளவில். மற்றவர்களின் தவறுகளால் பகடையாக்கப்பட்ட இவரை போன்ற சிலர் மீண்டும் துளிர்த்தெழுந்து செட்டில் ஆவதற்கு சில காலம் பிடித்துள்ளது. இன்னும் பலர் இன்றும் போராட்டத்தை சந்தித்து கொண்டுதானிருக்கின்றனர். ஏன், தமிழ் திரையுலகில் இன்றளவும் ஒரு நல்ல முழு நீள 3d படம் வெளிவரவே இல்லை என்பதற்கான விதை இங்கு போடப்பட்டுள்ளது. பண்படுத்தி மீண்டும் கை கூடிவர  காலம் உதவி செய்யட்டும்.  

இதுவரை தான் சம்பாதித்த பேரை வைத்து கொண்டு 'முதன்முதலில்' என்ற பேரை பெறுவதற்காக, அரைகுறையான கிராபிக்ஸ் உடன் வெளியிடப்பட்ட ஒரு திரைப்படம், கெயாஸ் தியரி போல் பின்வைளைவுகளை ஏற்படுத்தி எத்தனை பேரின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது என்பதற்கான சான்று இது.  

 

வியாழன், ஏப்ரல் 07, 2022

கொஞ்சம் பேசுங்க

 வீட்டுக்கு முன்னாடி நிக்கிற வாதாங்கொட்டை மரத்துல, வெள்ளை ஈக்கள் னு சொல்லப்படுற ரூக்கோஸ் சுருள் பூச்சிகள் வந்துருச்சி. ஒரு இலை விடாம எல்லா  இலையையும் பதம் பாத்துருச்சி. போதாகுறைக்கு  பனி பொழியிற மாதிரி வெள்ளை பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சி ஒரே தொந்தரவு. மருந்து அடிக்க மனசில்லாம எல்லா கிளையையும் கழிச்சி விட்டுட்டோம். கீழே கிடந்த அந்த கிளை எல்லாமே காய்ஞ்சு நல்ல காய்ஞ்ச விறகா மாறிடிச்சு. அடுப்புல நின்னு எரியும். அந்த 1.5’C எரிடக்கூடாதேங்க்றதுக்காக (குளோபல் வார்மிங்) காரணமா, நம்ம விறகு எரிக்கிறது கிடையாது, பின்னாடி வீட்டுல கேட்டுப்பாக்கலாமேனு தோணுச்சு.


அங்க ஒரு பாட்டி இருக்காங்க. வீட்ட சுத்தி முளுசாவே மூத்த குடி மக்கள் தான்.  நீங்க விறகு எரிப்பிங்களா பாட்டினு கேட்டேன்.

நமக்கு வயசாயிடுச்சு பா, இப்போ லாம் எரிக்கிறது இல்லனு சுருக்கமா முடிச்ச பாட்டிகிட்ட, அடுத்ததா ஒரு கேள்வி கேட்டேன்

 

“உங்க பக்கத்து வீட்டுல விறகு எரிப்பாங்களானு”. அவ்ளோதான்.


"அந்த அம்மா வென்னி போடும். சில சமயம் போட மாட்டாங்க. மேல தண்ணி தொட்டிலேந்து தண்ணி நிரம்பி இங்க தான் கொட்டுது, ஈரமாய்டும். எப்படி இப்போ எரிக்கிறாங்கனு தெரில? அந்த அம்மாவுக்கு இப்போ தான் ஒரு குழந்தை பிறந்துருக்கு. மூணு வயசாவுது. ஆனா அது வேலைக்கு போகுது. அதுங்க வீட்டுல வேல பாக்க ஒரு வயசான ஆள  வீட்டோட வச்சிருக்காங்க. அந்த ஆளுக்கு மூணு பொண்ணுங்க. மாசம் 15000 சம்பளம் கொடுக்குறாங்க போல. அந்த வேலையாளோட பொண்ணு இந்த அம்மாவுக்கு எப்பவும் போன் பண்ணி, சம்பளம் போடா சொல்லிட்டே இருக்கும். அந்த ஆளு கடைக்கு போறது, பிள்ளைங்கள பாக்குறது அப்டி இப்டினு எடுபிடி வேல மாதிரி செய்யுறாரு. இதுக்கு முன்னாடி ஒரு அம்மாவ வேலைக்கு வச்சிருந்தாங்க. ஆனா அது காதுல கம்மல் போடாது. பாக்க பொம்பள மாதிரியே இருக்காது. இந்த குழந்தைய அது அடிச்சிருச்சி. அதனால இந்த குழந்தை அந்த அம்மாட்ட போகாது. பாத்தாலே அழும் போல. அதனால அந்த அம்மாவை நிப்பாட்டி இந்த ஆள வேலைக்கு வச்சிருக்காங்க. இந்த வீட்ல இருக்குற அந்த அம்மாவோட புருஷன் சிவில் காண்ட்ராக்டர். கூட பொறந்தவங்க 5 பேர். அதுல ஒரு அக்காவோட வீடு தான் இது. இவரு இப்போ குடியிருக்கார். மாச வாடகைலாம் வாங்க மாட்டாங்க. அப்பப்போ அம்பதாயிரம் ஒரு லட்சம்னு கொடுப்பாங்க போல. இவரு கட்டியிருக்குற பொண்ணு மூத்த அக்காவோட பொண்ணு. அடிக்கடி சொந்தக்காரங்க வருவாங்க. எப்போ வராங்க போறாங்கன்னு தெரியாது. இந்த மாதிரி வந்துட்டு போறது இடைஞ்சலா இருக்கக்கூடாதுனு தான் அவரோட சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டார்னு நினைக்கிறேன். நமக்கு எதுக்குப்பா வீண் பொல்லாப்பு" அப்டினு முடிச்சிகிட்டாப்ல.

விறகு எரிப்பாங்களானு கேட்ட ஒரு கேள்விக்குத்தான் இவ்ளோவும்.

ஆனா ஒரு வகைல பாத்தோம்னா, இப்போ இந்த மாதிரி ஆட்கள் இருக்கிறது அபூர்வம். குறைஞ்சிட்டே வராங்க.

இப்போல்லாம் மூணு நாளுகப்புறமும் பக்கத்து வீட்டு கதவு திறக்கலான கூட நாம கண்டுக்கிறது இல்ல. அதையும் மீறி ஒரு துர்நாற்றம் வந்துச்சுனா மட்டும் தான் ஏதோ வாடை அடிக்குதேனு தான் பக்கத்துவீட்ல என்ன ஆச்சுனு யோசிக்கிற ஒரு மோசமான சூழல வளத்துக்கிட்டு வர்றோம்.

கொஞ்சம் பேசுங்க.