கதை
மற்றும் திரைகதைக்கென்றே தனி ஆசிரியர் இருந்தார்களா அல்லது எப்போதிருந்து என்று
தமிழ் சினிமா வரலாற்றைத் துழாவினால் 1916இல் நடராஜ முதலியார் ஆரம்பித்த இந்தியன் பிலிம் கம்பெனியில்
இருந்து ஆரம்பிக்கப்பட்ட புராணக் கதைகளை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்பொழுது ரைட்டர் என்று தனியாக தேவைப்படவில்லை. மோஸ்டலி புராணக் கதைகள் தான்.
கதையை உருவி உருவி ஒரு திரைக்கதை மட்டும் எழுதி விட்டால் ஸ்டார்ட் கேமரா ரோலிங்
ஆக்ஷன் தான். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இது போல் தான் உருண்டு
ஓடிக்கொண்டிருந்தது.
சுதந்திரத்திற்குப்
பிறகு இந்த
சினிமா என்கிற களத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது திராவிடக் கழகம் தான்.
அண்ணாதுரை மற்றும் கருணாநிதி போன்றோர் தமது சித்தாந்தங்களை பரப்புரையாக்க இந்த
களத்தை அருமையாக உபயோகப்படுத்திக் கொண்டார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு அங்கிருந்து
அவர்களின் ஜாகை அரசியலுக்கு மாறிய பிறகு ஸ்ரீதர் போன்றோர் தமது கதை சொல்லும்
திறமையை வெளிக்காட்டிக்கொள்ள சினிமாவை பயன்படுத்திக் கொண்டனர்.
அதன்
பிறகு சிவாஜி மற்றும் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் கோலோச்ச, கதை எழுதும்பொழுது இவர்களை
மைய்யப்படுத்தியே எழுத வேண்டியிருந்தது. ரைட்டரெல்லாம் தேவையில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று
இயக்குனர்களே புது அவதாரம் எடுத்து விட்டார்கள். ஒரு வழியாக எம்ஜிஆர் அரசியலுக்கு
இண்டிகேட்டர் போட்டு வண்டியை திருப்ப, அதுவரை இருந்த ஸ்டிரியோ டைப் கதைகளை கடாசி வீசிவிட்டு
மாற்றுக்கதைகளை எடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றனர்
நமது இமயமும் சிகரமும். அனந்துவை பாலச்சந்தர் பிடித்துக்கொள்ள பாக்கியராஜை
பாரதிராஜா பிடித்துக்கொண்டார்.
ஜெயகாந்தன்
சில கதைகளை படமாக்கி வெற்றியை ருசித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இதுவரை
கண்டிராத வெற்றியை ருசித்தவர் என்று சுஜாதாவை சொல்லலாம். கமலின் வற்புறுத்தலுக்கு
இணங்கி விக்ரமில் வெற்றிக்கொடியை நாட்டியவர் 2கே கிட்ஸின் பேவரைட்டான சிட்டி ரோபா
எந்திரன் வரை அசரடித்தார். தற்போது ஜெயமோகன்
முயன்றுகொண்டிருக்கிறார்.
என்ன
விஷயம் என்கிறீர்களா?
வாசகர்களின்
மனதை கவர்ந்து அவர்களிடமிருந்து ஒரு நாலு வார்த்தை பாராட்டு பெற்றுவிடுவதென்பது
எந்த ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் அவாதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த அவாவை
அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு மீடியமாக வெள்ளித்திரையைப்
பார்க்கிறார்கள். ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டு ரோம் என்பது போல் அனைத்து எழுத்தாளரும்
சொல்லி வைத்தாற் போல் அங்கு தான் போய் முட்டிக்கொள்கிறார்கள். தவறில்லை தான்.
மலையாள
சினிமா போல் இங்கு எழுத்தாளர்களுக்கு வேலையில்லை. லார்ஜர் தென் லைஃப் சைஸ்
ஹீரோக்களுக்கும் அவர் தம் ரசிகர்களுக்கு கதை சாரி காட்சிகள் அமைத்துவிட்டால்
போதும். வைப் என்கிற ஒற்றைச்சொல் தமிழ் சினிமாவை அதள பாதாளத்திற்குத்
தள்ளியுள்ளது. அதனையும் மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் முனைந்து படம்
எடுக்கிறார்கள். பெர்லினில் பேர் வாங்கிய பிறகு தான் நமக்கும் புரிய வருகிறது இது
நல்ல படம் என்று. இந்த சந்தடியில் எழுத்தாளர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தனி.
தற்போதிருக்கும்
சூழலில் திரைக்கதை ஆசிரியர் என்று ஒரு தனி இலாகாவே தமிழ் சினிமாவில் இல்லை.
அப்படியே ஒருவரை கூப்பிட்டுக் கொண்டாலும் பேசிய சம்பளம் கிடைப்பதில்லை. எனக்குத்
தெரிந்த ஒரு எழுத்தாளர், சமீபத்தில்
வந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்திருந்தார். படம் ஓரளவு வெற்றியும் பெற்றது.
இருந்தும் மனம் குமுறி அழுதார். கொஞ்சம் நேரம் எடுத்து அவரிடம் பேசி
விசாரித்தபொழுது தான் தெரிந்தது. அத்தனை அலைச்சல். இருந்தும் காசு
கிடைக்கவில்லை. மிஞ்சியது அவமானம் தான்.
அதற்குத்தான்
சொல்ல விழைகிறேன். ஒரு எழுத்தாளனாக தான் அமர்ந்திருக்கும் அரியசானத்தை விடுத்து
கற்பூர வாசனை தெரியாத கழுதை போன்ற ஒருவரிடம் போய் முகமன் கூறி வாய்ப்பு கேட்க
வேண்டியதன் கைய்யறு நிலை தான் என்ன. ஒரு ஜான் வயிற்றுக்காகவா? எனில் இறுதி வரை நல்ல ஒரு எழுத்தாளனை
வறுமையில் தான் வாட வைக்கிறதா இந்த தமிழ் கூறும் நல்லுலகம்?
சமீபத்தில்
பார்த்த ஒரு சினிமாவில் வந்த காட்சி இந்த மனக்குமுறலை மேலும்
அதிகப்படுத்திவிட்டது. பிரபல எழுத்தாளர் அவர். கதை சொல்லி. எத்தனை பேர்
நாடிச்சென்றாலும் அரவணைத்துச் செல்லும் ஒரு உள்ளம். பிக் பாசில் கலந்து கொண்டு
அங்குள்ள கன்டென்ட் கிறுக்கு அரசியலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவமானப்பட்டு
வெளியேறினார். தற்பொழுது பார்த்த சினிமாவில் ஒரு இளைஞனிடம் செவுளில் அரை வாங்கும்
காட்சி. இரண்டே இரண்டு காட்சிகள் தான். அப்படியொன்றும் தாக்கம் ஏற்படுத்தாத ஒரு
ஸீன் தான். இவர்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. வயதான யார் நடித்திருந்தாலும்
எடுபட்டிருக்கும். இருந்தும் இப்படி நடிக்க வேண்டிய சூழல். ஊரே மதிக்கக் கூடிய
எழுத்தாளர்.
ஓவியன்
இறக்கும் வரை அவனை வறுமை சூழ்ந்திருக்கும். இறந்த பிறகு பார் போற்றும் புகழடைவான். அந்தச்
சாபம் எழுத்தாளனுக்கும் சேர்த்தி தான் போல்.
#tamilcinema #scriptwriter #writer