அந்த புத்தக கண்காட்சியை விட்டு அவன் வெளியே வரும்போது ஒரு கட்டைப்பை முழுவதும் புத்தகத்தை நிரப்பியிருந்தான். இருந்தும் வெளியே செல்ல மனமில்லாமல் மெதுவாக நடந்தான். காருக்கருகில் வரும்போது பைய்யை லாவகமாக கைமாற்றி டோரை அன்லாக் செய்து வாங்கிய புத்தக மூட்டையை, பின் சீட்டில் வைத்தான். ஏதோ முடிவெடுத்தவன் போல, காரை லாக் செய்துவிட்டு, மீண்டும் புத்தக கண்காட்சிக்குள் நுழைந்து, கடைசி வரிசையில் இருந்த மூன்றாவது புத்தக கடையில் காலச்சுவடு பதிப்பகத்தின் “மோக முள்” புத்தகத்தை வாங்கிக்கொண்டான். “கிளாசிக் நாவல் வரிசை” என்றிருந்ததை ஒரு முறை கண்குளிர பார்த்துவிட்டு உள்ளே பக்கங்களைத்திருப்பி, “அணைக்கரை பஸ் ஆணையடியைக்கடந்து வந்து டவுன் ஹைஸ்கூல்” என்று முதல் அத்தியாயத்தில் சில வரிகளை வாசித்தான். அப்பொழுது அவனது மனது, காய்கறிக்கடையில் கொசுறு மல்லி தழை வாங்கியவனையொற்றிய சந்தோஷ சமநிலையை அடைந்திருந்தது. கார் சாவியை எடுத்துக்கொண்டு முன்னோக்கி நடக்க ஆரம்பித்திருந்த அவனது ஞாபகங்கள், 20 வருடங்கள் பின்னோக்கி அசைபோட்டன.
“இது தப்பில்லையாடா?”.
“உலகத்தில நீ யாரையும் மனசால உடம்பால துன்புறுத்ததாவரை எதுவுமே தப்பில்லை” என்று ரகு பதிலுரைத்தான்.
திருக்குறள் மாதிரியான இரண்டு வரியில் அவனது பதிலிருந்தாலும் கருத்தில் அத்துணை ஆழமிருக்கும்.
“மாட்டிக்கிட்டா?”
“என்னை மாதிரி இப்படி சொருகி வை. புக் கீழேயே விழாது” என்று சட்டையை தூக்கிக்காண்பித்தான். உள்ளே “தூண்டில் கதைகள்” என்று சுஜாதா சிரித்துக்கொண்டிருந்தார்.
“அந்த மேடம் கண்டுபிடிச்சிருவாங்க” என்று பயந்தான்.
“எதுவுமே பண்ணாத மாதிரி வா”. என்று கூறிவிட்டு ரகு முன்னே நடக்க, இவன் பின்னால் நடந்தான். இவனது இடுப்பில், “வென்று வா பரத்” என்று பட்டுக்கோட்டை பிராபகர் புத்தகம்.
லைப்ரரி மேடத்திடம் சென்று அந்த இரண்டு புத்தகங்களை கொடுத்தனர், இருவருக்கும் இரண்டு புத்தகங்களையும் என்ட்ரி போட்டுவிட்டு புத்தகத்தை கையில் கொடுத்தார். இடுப்பில் கைய்யை வைத்துக்கொண்டே இவன் வெளியே செல்ல யத்தனிக்கையில்,
“என்ன ஏமாத்தலாம்னு பாக்குறீங்களா”. என்றார் லைப்ரரியன்.
இவனக்கு ‘பக் பக்’ என்று அடித்துக்கொண்டது. புக்கைத்திருடியவன் என்று போலீஸில் புகார் கொடுத்து வீட்டில் அப்பா பெல்ட்டால் விளாறுவது வரை கண்ணில் வந்து போயிற்று. ஆனால் ரகு சற்றும் அசராமல் திரும்பி,
“என்ன மேடம்?” என்றான் சிரித்துக்கொண்டே.
“வருகை நோட்ல கையெழுத்து போடுங்கப்பா. நானும் கணக்கு சொல்லனும்ல” என்றார்.
போன உயிர் திரும்பி வந்தது போல நிம்மதி பெருமூச்சுடன் இவன் கையெழுத்து போட்டுவிட்டு வெளிவந்தான். ரகு வீட்டிற்கு கிளம்ப சைக்கிளில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தான்.
“ஏண்டா, உனக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா?”
“என்னடா பயம். நம்ம என்ன அப்படி பெரிய தப்பு பண்ணிட்டோம். பதினஞ்சு நாளைக்கு நாம ரெண்டு பெரும் சேத்து எடுத்த நாலு புக் நமக்கு பத்தல. சில புக் நினைக்ற அளவுக்கு நல்லால்ல. அதான் இன்னும் ஒரு புக் சேத்து எடுக்கலாம்னு பாத்தா தரமாட்டேங்றாங்க. அடிக்கடி நாம இங்க வர முடில. தூரமாயிருக்கு. அதனால நாம அந்த எக்ஸ்ட்ரா புக்க தெரியாம எடுத்துட்டு போயி படிச்சிட்டு தெரியாம கொண்டு வந்து வச்சிடுறோம். இதுல எங்க தப்பு இருக்கு. அதுக்கும் மேல இந்த லைப்ரரி இவ்ளோ சுத்தமா இருக்க நாம எவ்ளோ வேலை பாத்துருக்கோம். உனக்கு தூசி அலர்ஜியாகி காய்ச்சல் கூட வந்துச்சு. அதெல்லாம் ஒண்ணும் தப்பு இல்ல. நீ படிச்சிட்டு அடுத்த வாரம் எண்ட கொடு” என்று லெக்ஷர் அடித்துவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.
புத்தகம் என்றால் இருவருக்கும் உயிர். அம்புலிமாமா, மாயாவி, கோகுலம், சிறுவர்மலர் என்று படித்துக்கொண்டிருந்த இவனை, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிராபகர் என்று க்ரைம் பக்கம் இழுத்து, சந்திரவதனா, நான் க்ரிஷ்ணதேவராயன் என்று சரித்திரம் வரை வாசிப்பில் பிரோமோஷன் செய்த பெருமை ரகுவையேச்சேரும். எடுத்த புத்தகத்தை மூன்றே நாளில் படித்துவிட்டு அடுத்தது என்ன என்ற அரிக்கக்கூடிய வகையறா இருவரும். சிறுவயதிலேயே தந்தையை இழந்திருந்த
ரகு பார்த்த மற்றும் பார்க்கும் உலகம் வேறு. மிகவும் பக்குவப்பட்டிருந்தான்.
திருமண வயதில் அக்கா என்று அவன் அம்மாவோடு அந்த இரண்டு ரூம் மட்டுமே உள்ள வீட்டில்
வசித்துவந்தான்.
இருவரும் வேறு வேறு பள்ளியில் படித்தாலும், பள்ளியைத்தாண்டிய நட்பை வளர்க்க புத்தக வாசிப்பு மட்டுமில்லாது ஹிந்தி வகுப்பும் கோவிலும் பெரிதும் உதவின. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுதே இருவரும் கதை எழுதினர். அன்ரூல்ட் பேப்பரில் ஒரு பன்னிரெண்டு பக்கத்திற்கு எழுதி வார பத்திரிக்கைக்கு அனுப்பினர். புற்று நோய் காரணமாக இளம் வயது தம்பதி தங்களது துணையை இழக்கும் ஒரு சோகக்கதை. கதையை இரண்டு மணி நேரத்தில் எழுதி
முடித்து ஒற்றுப்பிழைகள் சரி செய்து அனுப்பினர். இன்றும் கூட அதில் எழுதிய வரிகள் அவனுக்கு
நன்றாக நியாபகம் இருந்தது.
“குளிர் அதிகமா
இருக்குதே. போர்வை எடுத்துக்கொடுங்க”
“நான் இருக்கும்போது
போர்வை தனியா வேணுமா?”
ஒன்பதாம்
வகுப்புக்கு இந்த வரிகள் ஏற்றதா என்று பலமுறை யோசித்திருந்தாலும் அந்த வரிகளை
மாற்றாமல், கையெழுத்து பிரதியை அனுப்பி வைத்தனர். பிரசுரமும் ஆகவில்லை.
பிரதியும் இவர்கள் கையில் மீண்டும் கிடைக்கவில்லை.
மற்றொமுறை, தூய சவேரியார் பள்ளியில் முதல் மாணவனாக அவன் தேர்ச்சி பெற்றதை ஒட்டி
மதுரம் என்று புதிதாக தொடங்கிய ஹோட்டலில் ரகு இவனுக்கு விருந்தளித்தான். இப்பொழுது
போல் பர்ஸையும் வயிற்றையும் பாழாக்கும் விமரிசையான விருந்து கிடையாது. ஒரு செட்
பரோட்டா. தொட்டுக்கொள்ள பார்டர் டைப் சால்னா. அன்றைய தேதியில் ஹோட்டல் உள்ளே
உட்கார்ந்து சாப்பிட்டாலே விருந்துதான். இரண்டு பரோட்டாவுக்கு கப் கப்பாக சால்னா வாங்கி இருவரும்
சாப்பிட்டதில் சர்வர் அண்ணாச்சி கேட்காமலேயே பில்லை கொண்டுவந்து வைத்து நின்று முறைத்துப்பார்த்து
போய்விட்டார். இவர்கள் சாப்பிட்ட பில்
தொகை நாற்பது ரூபாய். பக்கத்து டேபிளில் சாப்பிட்ட ஒருவர் டிப்ஸாக ஐம்பது ரூபாய்
வைத்துவிட்டு போயிருந்தார். அந்த டேபிளின் சர்வர் அதை இன்னும் எடுக்க வரவில்லை. சத்தம்
போடாமல் அந்த ஐம்பது ரூபாயில் நாற்பது ரூபாய் பில்லை கட்டி சர்வருக்கு பத்து
ரூபாய் டிப்ஸ் கொடுத்தான் ரகு. அந்த காலத்தில் பத்து ரூபாய் டிப்ஸ் அதிகம்.
சற்றுமுன் முறைத்த சர்வர், இவனுக்கு சல்யூட் செய்து
வழியனுப்பிவைத்தார். தேமே என்று இவன் ரகுவைப்பின்தொடர்ந்தது ஸ்பஷ்டமாக ஞாபகம்
வந்து தனக்குள்ள சிரித்துக்கொண்டான்.
பத்தாம் வகுப்பு
முடிந்த பின் இவன் ரகுவை அதிகமாக பார்த்ததில்லை. பாதைகள் மாறியிருந்தன. ரகு
பாலிடெக்னிக். இவன் பன்னிரெண்டாம் வகுப்பு. இருவரும் தத்தமது படிப்பில்
மும்முரமாயிருந்த காரணத்தினால் நேரில் அளவளாவும் வாய்ப்பு அருகிப்போனது. கல்லூரி, வேலை, திருமணம், குழந்தை, குட்டி என்று சௌகரியமாய் மறந்து போன ரகுவை இவனுக்கு இந்த புத்தக
கண்காட்சி நினைவுபடுத்திவிட்டது. ஊருக்கு
போகும்பொழுது அவனை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு காரைக்கிளப்பி
வீட்டை நோக்கிச்செலுத்த ஆரம்பித்திருந்தான்.
டைடல்
சிக்னலில் புகையை நஞ்சாக கக்கிக்கொண்டிருந்த போக்குவரத்து நெரிசலுக்கு இடையில், புகைமூட்டத்தில் தொந்தியுடன் டிராஃபிக் போலீஸ் காணக்கிடைத்தார். ஊரில் வேலைப்பார்க்கும் காவல்துறை நண்பனை
நினைவுகொண்டான். உடனே ஒகே கூகிள் என்று நண்பனை விளிக்கச்செய்து, விவரங்களைக்கூறி தொலைபேசி எண்ணை பெற்றுத்தர முயற்சி செய்யுமாறு
வேண்டுகோள் விடுத்தான். வீட்டை அடைந்து களைப்பில் நித்திரை கொண்டான்.
செல்பேசியில்
உள்ள டிஜிட்டல் கோழி இவனை காலை சீக்கிரமே எழுப்பிவிட்டது. எழுந்ததும் ஒரு சொம்பு
நிறைய தண்ணீரை குடித்து பின் உப்பிருக்கா பேஸ்டை வைத்து பல்துலக்கிக்கொண்டே வாசலைத்திறந்தான்.
நேற்று மலர்ந்திருந்த தாமரை வாசலில் இலையுடன் கருகிக்கிடந்தது. அழுகியதை எடுத்துபோட்டுவிட்டு
கிழக்கு நோக்கி உதிக்கும் கதிரவனை கைகூப்பி தொழுதான். அடுத்த நிமிடம் செல்பேசி
அழைத்தது. ஊரிலிருந்து இவனின் காவல்துறை நண்பன்.
“டேய்
விசாரிச்சுட்டேன். இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ள ஆளு அந்த தெருல ஒருத்தர்
தான் இருந்தாரு.”
“என்னாச்சு.
ரகு இருக்கானா அங்க?”, இவன் பரபரத்தான்.
“இல்லடா. அவங்க
எட்டு வருசத்துக்கு முன்னாடியே காலி பண்ணி போய்ட்டாங்களாம். எங்கனு தெரியல.”
‘ஓ. நான் எதிர்பார்த்தேன். வேறு எதுவும் தகவல் கிடச்சுதா?”
“அவங்க காலி
பண்ணி போய்ட்டலும் அந்த ரகு இங்கதான் ஆட்டோ ஒட்டிற்றுக்கான் அப்டினு அங்க உள்ளவர்
சொன்னாரு. ஆனா அவர்ட்ட நம்பர் இல்லை. நான் கொஞ்சம் ஆட்டோ ஸ்டாண்ட்லாம் தேடிப்பாத்து
கண்டுபிடிச்சிட்டேன். நம்பர் உனக்கு வாட்சப் பண்ணிருக்கேன் பாரு. நம்பர எதுக்கு
கேக்றேனு சொல்லல. போலீஸ் கேக்றதுனால அவனும் கேக்கல.” என்று போனை வைத்துவிட்டான்.
வாட்சப்பை
திறந்து தனக்கு வந்திருந்த நம்பரை சொடுக்கி டயல் செய்தான். இவனுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகவும்
அதிக அதிர்ச்கியாகவும் இருந்தது. ஆட்டோ ஓட்டுவதை குறைத்து மதிப்பீட முடியாது
என்றாலும் ரகு படித்தது IT டிப்ளோமா. அப்புறம் BE அல்லது வேறு ஏதேனும் படித்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் சுழல் நாற்காலியில்
அமர்ந்து கோடிங் செய்து கொண்டிருப்பான் என்று நம்பியிருந்தான். அவனது பொது
அறிவுப்புலமையும் சம யோசித புத்தியும் அந்த அளவுக்கு வியாபித்திருந்தன. ஆனால் ரகுவின் இந்த நிலையை இவன் சற்றும்
எதிர்பார்க்கவில்லை.
கரை புரண்டோடும்
காட்டாறை போன்றது வாழ்க்கை. எவற்றை எங்கு கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. சிலரை
மேட்டிலும் சிலரை பள்ளத்திலும் தள்ளி விடும். இப்பொழுது இவனை அழைத்து குசலம்
விசாரிப்பது ரகுவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றாலும் கூடவே படித்த நண்பனை
ஒப்பீட்டு பார்க்கும்பொழுது ரகு வருத்தப்படலாம். விதியின் பிடியில்
உருமாறியிருக்கும் ரகு அவனது நிலைக்கு காரணீயாக இல்லாமலிருக்கலாம். தன்னை மறந்து
வேறொரு உலகத்திலிருக்கும் ரகுவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று
முடிவெடுத்திருந்தான். காலை கட் செய்யும்
நேரத்தில் மறுமுனையில் “ஹலோ” என்று கேட்டது. ரகுவின் குரல் தான்.
இவன். “சாந்தி
நகர் வரை ஆட்டோ வருமா?”
“இல்லைங்க சார், இப்போ வேற சவாரில இருக்கேன்”
இவன், “ஓகே” என்று சொல்லிவிட்டு தொடர்பைத்துண்டித்தான்.
