திங்கள், மார்ச் 04, 2024

இது ஒரு ஆன்மிகப்பதிவு.



நம்பிக்கையில்லாதவங்க இதுக்கு மேல இத படிக்க வேணாம். தேவையில்லாத கமெண்டும் அவாய்ட் பண்ணிடுங்க.

சின்ன வயசுலேந்தே பிரென்ட். சின்ன வயசுன்னா அஞ்சு அல்லது ஆறு வயசு இருக்கும். தீவிர நாத்திகவாதி. பெரியார் படிச்சிட்டுலாம் நாத்திகம் பேசல. இயல்பாவே நாத்திகம் பேசுற ஒரு ஆள் அவன். அதுக்காக சாமி கும்பிடறவங்கள போய் நோண்டமாட்டான். ஆனா அவனை சாமி கும்பிடச் சொன்னா அன்னைக்கு அட்வைஸ் தான். 

விஷயம் இப்படி இருக்க எனக்கு இவன்கிட்டேந்து மெசேஜ் வருது. என்ன மெசேஜ். முருகன் சம்பந்தப்பட்ட ஒரு மெசேஜ். முருகனுக்கு அபிஷேகம் இல்ல யாராவது முருகன் பத்தி பேசுற மெசேஜா வருது. என்னடா இது? இவன் அக்கௌன்ட்டை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களானு நான் அப்படி யோசிட்டிருக்கேன். சரி போன் பண்ணி தான் பாப்போமேன்னு கால் பண்ணா, 'சொல்லு முருகா' அப்டிங்குறான். டேய் என்ன கிண்டலா அப்டினு கேட்டா, 'இல்ல முருகா. சில சம்பவம் அந்த மாதிரி நடந்துச்சு' அப்டினு சொல்ல ஆரம்பிச்சான்.



கடந்த மாசம் ஒரு நிகழ்வு. நல்லா கவனிச்சுக்குங்க. கிட்டத்தட்ட நாப்பது வருஷம் நாத்திகம் பேசுனவன் நம்மாளு. ஒரு மாசம் முன்னாடி பைக்ல போய்ட்ருக்கும்போது கண்ணுல வேல் வந்து பாய்ஞ்ச மாதிரி ஒரு பீல். க்ராபிக்ஸ்ல வர மாதிரி இவனை க்ராஸ் பண்ணிப்போன ஒரு பீல். இவன் ஒன்னும் பெருசா யோசிக்கல. ஆனா அன்னைக்கு நைட்டும் அடுத்த நாள் நைட்டும் இவனுக்கு கனவு. அதுலேயும் வேல் வந்து காமிக்குது. என்னடா இது நமக்கும் இந்த டிபார்ட்மெண்டுக்கும் சம்பந்தம் இல்லையே அப்டினு யோசிக்கிறான். அடுத்த நாள் வேலைக்கு போறான். போற இதன் முழுக்க வேல் வந்து இவனுக்கு கண்ல காமிச்சிட்டே இருக்குது. ஒன்னும் புரியல. வீட்ல மனைவிகிட்ட பேசுறான். 'ஏதாவது வேண்டுதல் விட்டுப்போச்சா? இதுமாதிரி எனக்கு வேல் வந்து நின்னுட்டே இருக்குது' அப்டினு கேக்குறான். 

அப்பத்தான் வைஃப் சொல்றாங்க. 'நீங்க அன்னைக்கு என்ன சுவாமிமலைல ட்ராப் பன்னிட்டு வேலைக்கு போயிட்டீங்க. நான் கோவிலுக்கு உள்ள போகும்போது சாமியார் மாதிரி ஒருத்தர் வந்து பேசுனார். 

'என்னம்மா, இன்னும் நேர்த்திக்கடன் முடிக்காம இருக்கன்னு கேட்டார்?' எனக்கு ஒன்னும் புரியல. அப்புறம் அவரே சொன்னார். 'பையன் பொறந்த உடனே குடும்பத்தோட வந்து முருகனை பாக்குறேன்னு சொல்லிருந்தல்ல.' 

அப்போதான் எனக்கும் ஞாபகம் வந்துச்சு. 'எங்க சாமி. என் புருஷன் இங்க வரமாட்டார். அவரை எப்படி சம்மதிக்க வச்சி கூட்டிட்டு வரது. அதனால நான் மறந்தே போய்ட்டேன்' அப்டினு சொல்றாங்க. 

'நீ ஒன்னும் செய்ய வேண்டாம். அதிகபட்சம் பத்து நாள். அவரே உண்ட பேசுவார். வெயிட் பண்ணு' அப்டினு சொல்லிட்டு போய்ட்டார். 

அத இப்போ நம்மள்ட்ட அவங்க ஒய்ப் சொல்றாங்க. இவனும் யோசிச்சி பாத்துட்டு, 'சரி, வா. போயிட்டு வந்துடலாம்' அப்டினு சொல்றான். 

கோவிலுக்கு போயிட்டு வந்தப்புறமும் அவனுக்கு இதே எண்ணம் தான். அது எப்படி இந்த மாதிரி வந்துருக்கு. பாக்குற இடம்லாம் வேல் வருது. முருகன் போட்டோ வருது. அதுவும் அத ஒருத்தர் முன்னாடியே கணிக்கிறார். நம்மாளு எல்லாத்தையும் பகுத்தறிஞ்சு பாக்குற ஆள். நீங்களும் நானும் சொன்ன கேக்க மாட்டான். அவனுக்கா தோணனும். சிந்தனை அவனுக்குள்ள ஓடிட்டே இருக்கு. சரி டெஸ்ட் வச்சி பாப்போம்னு டெஸ்ட் வைக்க ஆரம்பிக்கிறான். 

'முருகா, இது உண்மைன்னா இப்போவே என் கண் முன்னாடி வந்துரு'. அப்டிங்குறான். கண்ணை திறந்து பாத்தா வேல் ஸ்டிக்கர் போட்ட சுமோ. சரி பஜார்ல வராம எப்படி இருக்கும் அப்டினு பல இடங்கள்ல கிட்டத்தட்ட ஒரு வாரம் இதே மாதிரி டெஸ்ட் வச்சிட்டே இருக்கான். அதிகபட்சம் ரெண்டு நிமிஷத்துக்குள்ள வேல், இல்லன்னா முருகன் போட்டோ, இல்லன்னா யாமிருக்க பயமேன் சிம்பல். இப்படியே ஓடிட்ருக்கு. 

பாக்குறான். என்னடா இது நமக்கு இப்படி ஒரு அனுபவமா அப்டினு. அவனோட ரேஷனலிஸ்ட் மூளை இத நம்ப மாட்டேங்குது. வேலை முடிச்சிட்டு நைட்டு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு போயிட்டு இருக்கான். இப்ப ஒரு டெஸ்டிங்கை போடவேண்டிதான் அப்டினு யோசிச்சிட்டு 'முருகா. இப்போ நான் உன்ன மனசார நினைக்குறேன். நான் நினைக்கிறது சரின்னா என் முன்னாடி வந்து காமி பாக்கலாம்' அப்டினு சொல்லிட்டு நிமிந்து பாக்குறான். அந்த அகால நேரத்துல  ஒரு ஐயப்பன் சாமி வண்டி இவனை க்ராஸ் பண்ணிப்போகுது. அதுல 'யாமிருக்க பயமேன்' ஸ்டிக்கர். இவனுக்கு உதறிடுச்சு. 

யோசிச்சிட்டே வீட்டுக்கு போய்ட்ருக்கான். ஒரு தெருவுல நுழையும் போது சாமியார் மாதிரி ஒரு ஆள் வந்து எதுத்தாப்புல நிக்குறார். 'தம்பி சாப்பிட ஏதாவது கிடைக்குமா?' அப்டினு கேக்குறார்.  

'அய்யா. என்கிட்டே ரெண்டு பரோட்டா இருக்கு. ஆனா சைவ குருமா இல்லை. அசைவம் தான் இருக்கு. நீங்க சாப்பிடுவீங்களா? அப்டினு இவன் கேக்கும்போது, அவர் மறுப்பேதும் சொல்லாம வாங்கிக்குறார். 

அப்போதான் இவனை அவர் கூப்புடுறார். கேட்டு ஷாக் ஆகுறான். 

'முருகா'

'அய்யா. கூப்டீங்களா.'

'ஆமா. அவனும் கூப்புட்றான். விளையாட்டு ஆரம்பிச்சிருப்பானே' அப்டினு கேக்குறார்.  

இவனுக்கு ஷாக் மேல ஷாக். 'எல்லாம் நல்லதுக்குதான். கஷ்டம் வரும் போகும். மனம் தளராம அவனை பிடிச்சுக்கோ. இந்தா இந்த வேலை வச்சுக்கோ'. அப்டினு சொல்லி அவரோட பைலேந்து ஒரு வேலை அவன் கைல கொடுக்கிறார். கை நீளம்  இருக்குது. பாக்கும்போதே பழங்காலத்துல செஞ்ச வேல் மாதிரி இருக்குது. இவன் வாங்கிட்டு அதை பைல போட்டுட்டு நிமிந்து பாத்தா ஆளை காணோம். தெருத்தெருவா சுத்தி சுத்தி பாக்குறான் ஆள் கிடைக்கல. ஒரு நாளைக்கு எவ்ளோதான் அதிர்ச்சி ஆகுறதுனு வீட்டுக்கு வந்துட்டு அவர் கொடுத்த அந்த வேலை பூஜை ரூம்ல வச்சிட்டு தூங்கிட்டான். 

'நீ ஏன்டா முருகன் வீடியோ அனுப்புன?' அப்டிங்குற கேள்விக்கு இவ்வளவும் பதில் சொல்லிருக்கான். 

'நீயே சொல்லு. இவ்ளோ நடந்துச்சு. அப்புறமும் எப்படி நான் நம்பாம இருக்குறது?. இப்போல்லாம் ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் ஆறு ஏழு தடவை கந்த சஷ்டி கவசம் கேக்குறேன். என்னமோ தெரில அது கேட்டா நிம்மதியா இருக்குது. நடுவுல பழனி போயிட்டு வந்தேன். அவரு பாட்டுக்கு கோவிச்சிக்கிட்டு விறுவிறுன்னு மலைல ஏறி உக்காந்துருக்காரு. நமக்கு தான் ஏற சிரமமா இருக்குது. முருகா முருகான்னு சொல்லி ஏறிட்டேன்.' அப்டின்கிறான். 

போனை வச்சப்புறமும் எனக்கு நம்ப முடியல. என்னடா இது? எப்படி இவ்ளோ மாறினான். என்ன நடக்குதுன்னு புரியலையே அப்டினு யோசிக்கிறேன். அவ்ளோ ஒரு தீவிர நாத்திகவாதி இந்த மாதிரி பேசுறத என்னால நம்ப முடியல. அப்புறம் ஒரு வாரம் கழிச்சி போன் பண்றேன். அப்போதான் எனக்கு இன்னும் அதிர்ச்சி ஆயிடுச்சு. 

கால் பண்ணிட்டு ' என்னடா நீ கும்புடுற கும்புடுக்கு இப்போ முருகனையே பாத்திருப்பியே?' அப்டினு சிரிச்சுட்டே கேக்குறேன். 

'ஆமாடா. பாத்துட்டேன். 17.02.2024 நடந்துருச்சு' அப்டின்னான். 

'என்னடா சொல்ற. என்ன பாத்த?'

'உனக்கே தெரியும் நான் வேலை முடிச்சிட்டு வீட்டுக்குப் போக ராத்திரி பன்னெண்டு மணி ஆகிடும். அன்னைக்கு அது மாதிரி போறேன். ரெகுலரா சுவாமிமலை அடிவாரத்துலே நின்னுட்டு அங்க இருக்குற கணபதியை கும்பிடுவேன். அப்படியே ஒரு மணி நேரம் கூட நிப்பேன். காதுல கந்த சஷ்டி கவசம் ஓடிட்ருக்கும். அன்னைக்கு அப்படி தான் நிக்குறேன். யாருமே என்ன சுத்தி இல்ல. முருகா முருகா அப்டினு மனமார சொல்லிட்டு நிக்குறேன். என்னோட தோள்ல யாரோ அழுத்துற மாதிரி ஒரு பீல். திரும்பி பாக்குறேன். யாருமே இல்ல. ஆனா மறுபடியும் சன்னதி பக்கம் திரும்புறேன். முருகரோட உருவம். வேகமா நடந்து போய் சன்னதில திரும்புறார். அவர் திரும்பறதுக்கு முன்னாடி நின்னு என்னை ஒரு பார்வை பாத்தார் பாரு. முகமெல்லாம் கருப்பா. நல்ல அலங்காரத்துல. அப்படியே சுவாமி மலை முருகன் உயரத்துக்கு. ஒரு ஆறு ஆதி இருக்கலாம்.  இடுப்புக்கு கீழ வெள்ளைய தெரியுது. என்னை கண் கொண்டு பாத்துட்டு வேகமா போய்ட்டார். நான் அப்டியே அதிர்ச்சியாகி முருகா முருகா அப்டினு சொல்லிட்டே நிக்குறேன். அப்போ பக்கத்துல படுத்திருந்த ஒருத்தர் என்ன பாத்துட்டு என் பக்கத்துல வரார். 

'என்ன தம்பி. இந்த நேரத்துல இங்க வந்து இவ்ளோ நேரம் சாமி கும்பிடுற. என்ன கஷ்டம்?' அப்டினு கேட்டார். 

நான் நடந்ததை எல்லாம் சொல்றேன். கடந்த ரெண்டு வாரமா நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்றேன். அவரும் கேட்டுட்டே இருந்தார். 

'தம்பி, உங்க கைல ஒரு வேல் இருக்கணுமே' அப்டினு கேட்டார்.

'ஆமா சாமி. வேல் இருக்கு அப்டினு அன்னைக்கு சாமியார் கொடுத்த வேலை சொல்றேன். அது பூஜை ரூம்ல பத்திரமா வச்சிருக்கேன். இன்னொரு வேல் என் பர்ஸுக்குள்ள இருக்குனு சொல்றேன்.'

'இல்ல தம்பி. உன் கைலேயே ஒரு வேல் இருக்கணும்' அப்டினு ஏன் கைய்ய பிடிச்சி பாக்குறார்.  என்னோட கைரேகைல ஒரு வேல் தெரியுது. இவ்ளோ நாள் அத நானே பாத்தது இல்லை. இப்போ அந்த சாமியார் டக்குனு என்னோட கால்ல விழ வந்துட்டார். நான் பதறிப்போய் அவரை பிடிச்சா,

'தம்பி, இந்த கைய யாருட்டயும் காமிச்சிராதீங்க. சாமியார் வேஷத்துல மாந்திரீகம் பண்றவங்க வரலாம். உங்க கிட்ட இருக்குற நல்ல விஷயம் அங்க போய்டும். இத யாருட்டயும் சொல்ல வேணாம். ஏதோ ஒரு காரணத்துக்காக இதெல்லாம் நடக்குது. நமக்கு புரியல'. அப்டினு சொல்றார். 

நானும் அப்பதான்டா யோசிச்சி பாக்குறேன். இந்த மாதிரி நடக்குதுன்னு ஏன் கடைல வேலை பாக்குறவன் கிட்ட சொன்னேன். அதுல ஒருத்தன் தினம் வந்து என் கையை எடுத்து அவன் தலைல வைக்கச்சொல்லுவான். போடா அப்டினு சொன்ன அவனே என்னோட கைய எடுத்து அவன் தலைல வச்சிட்டு போறான். இது ஒரு பத்து நாளா தொடர்ந்து நடக்குது' அப்டின்னான். இன்னும் மேல சொல்றான். 

அந்த சாமியார் இவ்ளோ சொல்லவும் நான் அவருகிட்ட முருகனை பாத்ததை சொல்றேன். இப்போ அந்த சாமியார் ஒரு விஷயம் சொன்னார். 'தம்பி, நல்லா யோசிச்சி பாருங்க. நாங்களும் (சாமியார்) முருகா முருகா அப்டினு சொல்றவங்க தான். ஆனா இந்த நேரத்துல தூங்கிடுவோம். ஆனா இந்த அகால வேலைல உன்னைத்தவிர இந்த சுற்று வட்டாரத்துல இவ்ளோ மனமுருகி யாருமே வேண்டிருக்க மாட்டாங்க. அதான் முருகன் உனக்கு காட்சி கொடுத்திருக்கார். எல்லாம் நல்ல விஷயம் தான். ஏதும் குழப்பிக்காதே' அப்டிங்குறார். 

அப்போதான் அவர்கிட்ட அவரை பத்தி விசாரிக்கிறேன். 

'தம்பி இங்க பாரு நெத்தில ஒரு தழும்பு தெரியுதா. அது தொழுகைனால வரது. அஞ்சு வேலை தொழுதுகிட்டு இருந்தவன் நானு. உனக்கு ஏற்பட்ட மாதிரி ஒரு அனுபவம் எனக்கும் நடந்துச்சு. அதுனால இப்போ முருகனை நோக்கி போயிற்றுக்கேன். ரிட்டையர் ஆயிட்டேன். பென்ஷன் வருது. என்னோட குரு இப்போ இந்த கோவில் போய்ட்டு வர சொன்னார். வந்துருக்கேன். நாளைக்கு எங்க இருப்பேன்னு தெரியாது. எல்லாம் அவன் செயல். என்னோட பேரு முகம்மது யூசுப்' அப்டினு முடிக்கிறார். அதுக்கப்புறம் நான் பேசிட்டு கிளம்பிட்டேன்.  

நான் இத ஒரு வாரமா யாருகிட்டயும் சொல்லல. நேத்துதான் ஒய்ப் கிட்ட சொன்னேன். பக்குனு எந்திச்சி உக்காந்துட்டா. 'ஏங்க, கோவில் கோவிலா கும்பிட்டுக்கிட்டு சுத்துறேன். எனக்கு தெரியல. இவ்ளோ நாள் நாத்திகம் பேசிட்டிருந்த உங்களுக்கு தெரிஞ்சிருக்கார்' அப்டினு கேக்குறா?. நான் என்ன சொல்ல சொல்லு?' அப்டினு எண்ட கேக்குறான்.

நான் என்ன சொல்றது. 

எல்லாம் அவன் செயல்.