திங்கள், ஏப்ரல் 06, 2020

அந்தாதுன்


மோட்டு வளையை நோக்கி பொழுதை கழிப்போருக்கான பரிந்துரையாக சிறு பட்ஜெட்டில் எடுக்கபட்ட இரண்டு தவறவிடக்கூடாத  சமீபத்திய திரைச்சித்திரங்கள. ஒன்று வெல்வெட் நகரம். முதல் ஐந்து நிமிடங்களில் மலை வாழ் சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படமோ என்று நினைக்கவைத்து மீதி தொண்ணூறு நிமிடங்களும் கான்க்ரீட் காட்டுக்குளே அதுவும் ஒரு டுப்ளெக்ஸ் ஹௌசில் நடக்கும் த்ரில் கதையே வெல்வெட் நகரம். ஆரம்பம் முதல் முடிவு வரை திடுக் திடுக் என்று பல திருப்பங்கள். அனைவரின் மிகையில்லாத கச்சிதமான நடிப்பு பங்களிப்பு, ஒரு ஹால், ஒரு ரூம் என்று கேமரா சுற்றி சுற்றி வந்தாலும் ஒரு நொடியேனும் சலிப்பு தட்டாத திரைக்கதை என் 120 ரூபாய்க்கு செம ஒர்த்.

மற்றொன்று காத்ஃபாதர். நட்டி என்ற நட்ராஜின் நடிப்பில் வெளிவந்த கங்க்ஸ்டர் மூவி. ஒரு அபார்ட்மெண்டு. அதிலுள்ள பத்து மாடி, லிஃப்ட், ஃபயர் வெல், என்று படத்தை முடித்திருக்கிறார்கள். அப்பா, பயமா இருக்குப்பா என்று ஒவ்வொரு முறை அந்த சிறுவன் அழும்போதும் நமக்கும் பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது. இறுதியில் சுபம் என்று முடிவுற்றாலும் டைனசோர் படத்தில் இறுதியில் ஒரு குட்டி தப்பியோடி பார்ட் 2க்கு அங்கேயே ஒரு  பிள்ளையார் சுழி போடுவார்கள். அதுபோலே இங்கும் ஒரு சுழி போடப்படுகிறது. 35 வயதே ஆகும் நட்டி ஒரு பிரபலாமான பாலிவுட் ஒளிப்பதிவாளர். ரசிகர்களை முட்டாளாக்காத வகையில் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்ற நம்பிக்கை விதைத்திருப்பதே அவரின் முதல் வெற்றி.

இந்த பத்தியின் கதாநாயகன் அந்தாதுன் திரைப்படம்.

16 ஆகஸ்ட் 2019 இல் ஆயுஷ்மான் குரானுவுக்காக விகடன் இரண்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கும்போதே பக்கெட் லிஸ்ட் தாயாராகிவிட்டது. அதில் முதல் படமாக அந்தாதுன் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. மிக சாதாரணமாக திருப்பத்தின் மேல் திருப்பம் என்று இயக்குனர் ஸ்ரீனிவாச ராகவன் பார்வையாளர்களை வாய் பிளக்க வைக்கிறார். ஆய்ஷ்மானின் லென்ஸ் டப்பா, பிரமோதின் பிளாட்டில் ஆயுஷ்மான் பாத்ரூம் சீன், தபுவின் பேய் மாஸ்க், கிட்னி டாக்டர், தப்பியோடும் முயல், இறுதியில் எட்டி உதைக்கப்படும் கோக் டப்பா என் அனைத்து காட்சியுமே அதகளம். திரைக்கதைக்கு மட்டுமே ஒரு வருடத்திற்கு மேல் உழைத்திருக்க வேண்டும். படம் முழுவதும் ஆய்ஷ்மான் ராஜ்யம். உருத்தலில்லாத நடிப்பு. ஒவ்வொரு மணியாக சேர்த்து கட்டிய முத்து மாலை போன்ற காட்சி வடிவமைப்பு. திரைக்கதைக்கு இலக்கணம். தவறவிடக்கூடாத சித்திரம்.