புதன், ஏப்ரல் 15, 2026

குட்டிக்கதை

சூப்பர் மார்க்கெட்டின் சாய்வு தளத்தில் ஏறுவது கூட பெரும் மலைப்பாக இருந்தது. ஓய்வு பெறும் நாளில் கூட எனக்கு இந்த வலி இருந்ததாக நினைவில்லை. இரண்டு மாதங்கள் கூட தாண்டவில்லை. அதற்குள் முட்டி வலி மிகவும் பாடாய்ப் படுத்துகிறது. இல்லாள் காய்கறி பிரிவிக்குள் நுழைந்துவிட, நான் ஒரு ஸ்டூலைத் தேடி அதில் உட்கார்ந்து கொண்டேன்.

ஒரு இளம் தம்பதி தங்கள் குழந்தையை டிராலியில் அமரவைத்து வந்துகொண்டிருந்தனர். ஒரு வயது இருக்கலாம். பிரமாண்டமான அந்த சூப்பர் மார்க்கெட்டில் எதை கவனிப்பதெனத் தெரியாமல் அதன் கோலிக்குண்டு கண்கள் அலைபாய்ந்தது. பஞ்சு போன்ற கன்னங்களில் மை இட்டிருந்தனர். இதே போல் என் மகனை அமர வைத்து அழைத்துச் சென்றது என் நினைவுக்கு வந்தது.


PG படிக்கச் சென்றவன் படித்து முடிந்தவுடன் வந்துவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் விசா எக்ஸ்டெண்ட் செய்து கொண்டான்.

டிராலியில் இருந்த குழந்தை என்னை பார்த்துச் சிரித்தது. இரு பற்கள் தெரிந்தன. இதே போல் தான் ராகவன் சிரித்தபோது தோளின் மேல் வைத்துச் சுற்றினேன். கூடவே ஆறு வயது மகள் 'என்னையும் தூக்கு' என்று கேட்டதும் நினைவில் உள்ளது. மீண்டும் அதே நாட்கள் வந்துவிடாதா?என்று மனம் ஏங்கியது. ஆசைதீரத்தான் அந்த நாட்களை வாழ்ந்து கடந்திருக்கிறேன். ஆனாலும் இன்னொரு முறை. இல்லையெனில் அதே தருணத்தில் உறைந்துவிட முடியாதா என்று எழுந்த ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

ராகவனை நினைவுபடுத்திய அந்தக் குழந்தையைத் தூக்க வேண்டும் என்று தோன்றியது. தயக்கத்துடன் அந்த டிராலியை நெருங்கியதும், அந்த இளம் தம்பதியினர் விருட்டென்று திரும்பி வேகமாகச் சென்று விட்டனர்.

கருத்துகள் இல்லை: