இத்யாதிகள்
புதன், ஏப்ரல் 15, 2026
கீழடி அருங்காட்சியகம்
LGBTQ+
நீயா நானா
கடந்த வார நீயா நானா பார்த்துக் கொண்டிருந்தேன்.
Hotspot 1& 2
ஒருசேர இரண்டு படங்களையும் பார்த்தாகிவிட்டது.
வத்தல்
எங்கள் ஊரகத்தில் அவ்வப்போது மகளிர் சுய உதவிக்குழுவின் கண்காட்சி நடைபெறும்
குட்டிக்கதை
கிருஷ்ணன் ஏதும் பேசாமல் அந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். மூக்குக் கண்ணாடி கழட்டி மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. முழங்கைகளை மேஜை மீது ஊன்றி இரு பெருவிரல்களால் நெற்றியை தாங்கிக் கொண்டிருந்தார்.
குட்டிக்கதை
சூப்பர் மார்க்கெட்டின் சாய்வு தளத்தில் ஏறுவது கூட பெரும் மலைப்பாக இருந்தது. ஓய்வு பெறும் நாளில் கூட எனக்கு இந்த வலி இருந்ததாக நினைவில்லை. இரண்டு மாதங்கள் கூட தாண்டவில்லை. அதற்குள் முட்டி வலி மிகவும் பாடாய்ப் படுத்துகிறது. இல்லாள் காய்கறி பிரிவிக்குள் நுழைந்துவிட, நான் ஒரு ஸ்டூலைத் தேடி அதில் உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு இளம் தம்பதி தங்கள் குழந்தையை டிராலியில் அமரவைத்து வந்துகொண்டிருந்தனர். ஒரு வயது இருக்கலாம். பிரமாண்டமான அந்த சூப்பர் மார்க்கெட்டில் எதை கவனிப்பதெனத் தெரியாமல் அதன் கோலிக்குண்டு கண்கள் அலைபாய்ந்தது. பஞ்சு போன்ற கன்னங்களில் மை இட்டிருந்தனர். இதே போல் என் மகனை அமர வைத்து அழைத்துச் சென்றது என் நினைவுக்கு வந்தது.
விவசாயம்
விவசாயம் என்பதற்கான விளக்கமே மனிதனால் திரித்து கூறப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கை விவசாயம் என்பது மிகப்பெரிய ஏமாற்று. நிலத்தில் இறங்கி மனிதன் உழத்தொடங்கிவிட்டாலே அது செயற்கை தான். பறவைகள் தின்ற பழங்களின் விதைகள் கீழே விழுந்து மரம் முளைக்கிறதே, அது போன்று விளைவதே இயற்கை.
Not all movies are the same Dual & Simple Manushan
குட்டிக்கதை
பள்ளியில் பேச்சு போட்டிக்காக தன்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றாள் மகள். 'ஆளும் அரசின் கல்வி திட்டங்கள்-2025' என்பது தலைப்பு.
குட்டிக்கதை
குங்குமம்
புரிதல்
ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்
இந்த வாசிப்பு என்பது பெரும்பாலும் அன்றைய நாளிதழாகத்தான் இருக்கும். டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து, தினமலர், தமிழ் இந்து போன்று. இரண்டு அல்லது மூன்று ரூபாய் விலை தான் இந்த தினசரி நாளிதழ். 7.40க்கு பீச் ட்ரைனில் பார்க் ஸ்டேஷன் வந்திறங்கி ஓடோடி 7.48க்கு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்தடைந்து இந்த இரண்டு ரூபாய் நாளிதழை வாங்கி 8.00 மணி கும்மிடிப்பூண்டி ரயிலில் இடம் பிடித்துவிட்டால் அதற்கப்புறம் இந்த வாசிப்பு தான். ரிட்டயர்டு ஆன தாத்தாக்கள் எல்லாம் வீட்டின் நடுவில் ஒரு ஊஞ்சல் கட்டி பரீட்ச்சைக்கு வாசிப்பது போல் இந்துவை வாசிப்பார்களே அது போல், ஒரு மணி நேரம் கடும் வாசிப்பாக இருக்கும். கொஞ்சம் நாள் பேசிப்பழகிய பின் இதை கவனித்து ஒருவர் கேட்டார்.
'இதுல என்ன உபயோகம் இருக்குனு இப்படி வாசிக்கிறீங்க?'
'நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கத்தான் சார்'
'எல்லாமே குப்பை. இதுல வர நியூஸ் எதுவுமே தேவை இல்லாதது. இது உங்க மண்டைக்குள்ள போய் தேவையில்லாத ஸ்பேஸ் பிடிச்சுக்குது, படபடக்க வைக்குது, anxiety depression எல்லாம் ஜாஸ்தி ஆயிடும். பூரா நெகடிவிட்டி'.
'என்ன பண்ணச் சொல்றீங்க?'
'புத்தகம் வாசிங்க' என்றார்.
பள்ளி கல்லூரி காலங்களில் நூலகம் நூலகமாக சென்று வாசித்து, பின்பு வேலைப் பளு காரணமாக வாசிப்பு அறவே நின்றிருந்த நாட்கள் அவை. அவர் கூறியது உள்ளுக்குள் ஒரு பொறி தட்டியது போல் இருந்தது. நாளிதழ்களை தூக்கியெறிந்து ஆர்யகவுடா முருகன் லெண்டிங் லைப்ரரி வந்து தஞ்சமடைந்தேன். நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் மேல் வாசித்தேன். மனதிற்குள் குப்பையாக எதுவும் சேரவில்லை. சரியான அறிவுரை. நிற்க.
இப்பொழுது வசிக்கும் இடம் ஒரு சிறு ஊரகம். டவுன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் மூன்று பேர் என்று எடுத்துக்கொண்டால் கூட கிட்டதட்ட 30000 பேர். அதிகபட்சம் 50000 பேர். ஒரே இடத்தில். பல தரப்பட்ட மனிதர்கள். வெவ்வேறு வயத்தைச் சார்ந்தவர்கள். பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி பயிலும் இளைஞர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள், பெற்றோர்கள், நடுத்தர வயத்துக்கார்கள், ஒய்வு பெற்றவர்கள், முதிர்ந்த பெரியவர்கள் என அத்தனை பேர். குடும்பங்கள் என்று எடுத்துக்கொண்டால் பலவகையாக இருக்கிறது. இதிலே நேர்கோட்டில் எந்த வித விவகாரமும் இன்றி பயணிக்கும் குடும்பங்கள் உண்டு. அதற்கு நேர் எதிராக டிவோர்ஸ் ஆனவர்கள், மறுமணம் ஆகாதவர்கள், சிங்கிள் பேரன்ட்ஸ், தினமும் சண்டை போடும் குடும்பம், ரெட்டை வால் குருவி குடும்பம் என பல வெரைட்டிகள் இங்கு உண்டு. அலுவலகம் என்று எடுத்துக்கொண்டால் நம் மீது உண்மையான அக்கறை எடுத்துக்கொள்ளும் 0.02% மக்கள், மீதம் பொறாமையிலேயே பொருமித்தள்ளும் கனவான்கள், கிறுக்கு பிடித்த மேலதிகாரிகள், சைக்கோ டீம் மேட்கள், அறுந்த வால் ஜென z ஜூனியர்கள், கீழே என்ன நடக்கிறது என்றே தெரியாத உயர் உயர் மேலதிகாரிகள் என ஒரு மினி நேட் ஜியோ வைல்ட் சேனல் நடத்தலாம். இது இல்லாது இந்த 10,000 குடும்பங்களைச் சார்ந்து இயங்கும் நேரடி அல்லது மறைமுக வியாபாரங்கள், வியாபாரிகள், அவர்தம் குடும்பங்கள் என அவ்வளவு நிகழ்வுகள் ஒரு நாளில் அல்ல ஒரு நொடியில்.
அதனால் என்ன என்று தானே உங்கள் கேள்வி? இந்த அத்தனை நிகழ்வுகளும் விரும்பியோ விருப்பம் இல்லாதோ எப்படியாவது காதில் வந்து விழுந்து விடுகின்றன. வாட்சப் முதல் காரணீ. ஆபிஸ் கிசுகிசுக்கள் இரண்டாம் காரணீ. இவற்றையெல்லாம் தவிர்த்து அன்றாட வேலைகளை மனத்தாங்கல் இன்றி பார்ப்பதே ஒரு பெரும் போராட்டாமாக இருக்கிறது.
உதாரணத்துக்கு, இந்த வருட ஆரம்பத்தில் அதாவது ஜனவரியில், எங்கள் ஊரகத்தில் ஒரு துர் சம்பவம் நடந்தது. தன் அண்ணனை பள்ளிக்கு அழைத்து போக வந்த வேனின் சக்கரத்தில் மாட்டி ஒரு வயது குழந்தை இறந்துவிட்டது. ஒரு வருட விடுப்பு முடிந்து முழு நேர வேலைக்கு ஒருவரை அமர்த்திவிட்டு அப்பொழுது தான் அந்த குழந்தையின் அம்மா வேலைக்குச் செல்கிறார். ஆற்ற முடியாத துயரம். இன்னொரு சம்பவம். அடுத்த மாதம் என்று நினைக்கிறேன். எங்களுடன் பணிபுரியும் ஒருவர் அலுவலகத்தின் மாடியில் இருந்து குதித்து
தற்கொலை செய்துகொண்டார். நிதி சார்ந்த முதலீட்டில் ஒரு பெரிய தொகையை ஏமாந்து விட்டார். பெரும் துக்கத்தில் இருந்தார் போல். ஆனால் ஒருவரிடமும் பேசியதில்லை. மனைவி மற்றும் இரு குழந்தைகள் என நிராதரவாகிவிட்டனர். மார்ச் மாதம், ஒரு உயரதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். காரணம் தெரியவில்லை. ஒரு பெண் குழந்தை மற்றும் மனைவி. இவை மட்டும் இல்லை. ஊரகத்தில் மாடு முட்டி கீழே விழுந்து கோமாவில் இருப்பவர்கள், நாய் குதறிய குழந்தைகள், தற்கொலை, குடும்ப பிரச்சினைகள், பள்ளி நிகழ்வுகள், கல்லூரி கலாட்டாக்கள், மைதானத்தில் அத்துமீறல்கள் etc etc என அனைத்து செய்திகளும் அடுத்த நொடியே வந்தடைந்து விடுகிறது.
ஒழுக்கமாக இருக்கும் குடும்பங்கள், அவர்தம் பிள்ளைகள், படிப்பு, மேற்படிப்பு, திருமணம், குழந்தைகள், வெளிநாடு செல்லுதல், இங்கிருந்து பிள்ளைகளை பார்க்க அவர்களும் வருடத்திற்கு ஓரிருமுறை பயணம், ஒய்வு காலம், ஒரு நன்னாளில் மீளாப் பயணம். இதுவே தந்தை அல்லது தாய் சரியில்லாத குடும்பம், அவர்கள் நித்தமும் படும் இன்னல்கள், குடியினால் ஏற்படும் திடீர் மரணங்கள், தாய் சேய் என இருவரும் வீட்டு வேலை செய்வது என இது மற்றொரு பக்கம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் குழந்தைகள், இங்கு தன்னந்தனியாக நிற்கும் அவரது பெற்றோர்கள். ஏதேனும் ஒரு எமெர்ஜென்சி என்றால் அண்டை அயலார் தான். கால் ஒடிந்தாலும் கூட வரத்தயங்கும் அல்லது வர முடியாமல் போகும் குழந்தைகள். இறந்த பின்பு கூட இரண்டு நாட்கள் கழித்து வரும் குழந்தைகள், துணையை இழந்து தன்னந்தனியாக வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் தெருவில் பொழுதை போக்கும் பெரியவர்கள் என இவர்களை பார்க்கும் பொழுது ஒரு கணம் மிகவும் திகிலாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை இப்படித்தான் செல்லும் என்பது சுற்றி இருக்கும் இந்தப் பெரும்பான்மையானவர்களை கவனிக்கும் பொழுதே தெரிந்து இந்த டெம்ப்லேட் வாழ்க்கையின் மொத்த சுழற்சியும் அத்துபடியாகிவிட்டது. அசுவாரஸ்யமானதொன்று.
நற்செய்திகளை விட இந்த கெட்ட செய்திகள் பல மடங்கு வேகத்தில் காட்டுத்தீ போல் பரவுகின்றன. இந்த அதீத குப்பைகளால் ஒரு நெகட்டிவிட்டி சூழ்கிறது என்று தெரியாமலேயே மனம் சோர்ந்துவிடுகிறது. நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் புத்தனின் 'அத்தனைக்கும் சாட்சியாயிரு' என்பது இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
அன்று ரயில் பேசின் பிரிட்ஜ் தாண்டியபோது அவர் கொடுத்த அறிவுரை தான். 'உங்களுக்கான விஷயம் என்றால் அதுவே தானாக உங்களை வந்தடைந்து விடும். விழிப்போடு அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடிக்கு இந்த குப்பைகளுக்கு உங்களுடைய மனதிலும் மூளையிலும் இடம் கொடுத்து வீணடிக்காதீர்கள்' என்றார்.
நூற்றுக்கு நூறு சதவீதம் சரி. இந்த குப்பைகளில் இருந்து விலகி நடக்கும் போராட்டத்தினூடே தான் இந்த அழகான வாழ்க்கையைத் தேடி பயணிக்க வேண்டிருக்கிறது. இன்று கிடைக்கும் இந்த நொடியும், சூழலும் நாளை அமையுமா என்பது தெரியாது.
ஆதிலினால், நேர்மறை எண்ணங்களோடு ஒவ்வொரு நொடியையும் ஆசை தீர கொண்டாடி வாழ வேண்டிதான்.
லீடர்
லெஜெண்ட் சரவணனின் .இரண்டாவது படம். லெஜெண்ட் படத்தில் அவரது தோற்றம் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டது.
லீடரில் அதை சரி செய்திருக்கிறார்கள். அது மட்டும் தானா? படத்தின் இறுதி வரை எந்த ஒரு காட்சியும் சலிக்கவில்லை. சொல்லப்போனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. காட்சிகள் குதித்தோடுகின்றன. சரவணன் subtle ஆக நடித்திருக்கிறார். ஓவர் ஆக்டிங் கிடையாது. ஆதலால் அவரது நடிப்பில் குறையேதும் இல்லை. ஆக்ஷன் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.
வெளிநாடு காட்சிகள், ட்ரெயின் சண்டை காட்சிகள் எல்லாம் பரபரவென்று ஓடுகின்றன. செண்டிமெண்ட் காட்சிகளும் உறுத்தாமல் எடுத்திருக்கிறார்கள். இண்டெர்வெலில் சோகமாகும் ரசிகர்களை, க்ளைமேக்ஸ் காட்சி மீட்டெடுத்துவிடுகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள், சண்டைக்காட்சிகள், எடிட்டிங், திரைக்கதை என எல்லா ஏரியாவிலும் சொல்லி அடித்திருக்கிறார்கள். ஒரு பக்காவான மாஸ் கமெர்சியல் சினிமா. கேப்டன் ஆப் தி ஷிப்பாக துரை செந்தில்குமார் ஜெயித்திருக்கிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன், காக்கிச்சட்டை இயக்குனர்)
குடும்பத்துடன் தாராளமாக தியேட்டரில் கண்டுகளிக்கலாம். #leadermovie #LegendSaravanan
நீளிரா
ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் தான் படத்தின் நீளம். ஆனால் அதன் தாக்கம் ஒரு முழு நீளப் படத்தை விட அதிகம். அடுத்த நாள் திருமண நிகழ்வுக்காக ஒரு ஈழத் தமிழ் குடும்பம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த இரவில், இந்தியாவின் ஒரு ராணுவக்குழு அந்த வீட்டில் பதுங்கிக் கொள்ள வருகிறது. அந்த ஓர் இரவு தான் படம். IPKF (இந்திய அமைதிப் படை) அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அப்போது பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடைக்கு மேல் ஆண்களின் சட்டைகளை அணியும் அந்த ஒரு காட்சி, ஈழத் தமிழிர்களின் அன்றைய போர்க்கால அவல நிலையை முழுவதுமாக பறைசாற்றி விடுகிறது.
படம் முழுக்க அந்த ஒரு வீடுதான். அலுப்பில்லாமல் இறுதி காட்சி வரை திக் திக் என நகர்கிறது. காட்சிகளின் தாக்கம் உணர்ந்து பின்னணி இசை மூலம் நம்மிடம் பதைபதைப்பைக் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ்ணக்குமார். ரத்தம் தெரிக்காமல், ஆபாசமில்லாமல் உண்மைக்கு நெருக்கமாக கதை எழுதி காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் சோமீதரன்.
#Neelira
தாய் கிழவி
மிகக் கவனமாகத்தான் காசு போடுகிறார்கள். நடிகர்களைக் கூறுகிறேன். வேறு ஒருவர் தயாரிப்பில் நடிக்கும்போது இந்த அளவுக்கு சிரத்தை எடுப்பது போல் தெரியவில்லை. சொந்தத் தயாரிப்பு எனும்போது கதை, இசை, நடிகர்கள் என அனைத்துமே அம்சமாக உட்கார்ந்துவிடுவது, அதுவும் கையடக்கமான பட்ஜெட்டில் என்பது அதிசயம் தான்.
தாய் கிழவி எப்படி இருக்கிறது?
வட்டிக்கு விட்டு பிழைப்பை நடத்தும் பவுனுத்தாயி சாகக் கிடக்கிறார். திடீரெனே அவர் 160 பவுனுக்கு சொந்தக்காரர் எனத் தெரியவருகிறது. அதன் பிறகு அவரை காப்பாற்றத் துடிக்கும் களேபரமே தாய் கிழவி. பவுனுத்தாயாக ராதிகா. இந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை யோசிப்பது சிரமம் தான்.
பிராஸ்தடிக் மேக்கப்புடன் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டு மணி நேரப் படத்தில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். ஆனாலும், அந்த 20 நிமிடமும் சரவெடி தான். பவுனுத்தாயின் மகன்களாக பாலசரவணன், சிங்கம்புலி மற்றும் அருள்தாஸ். கோல்ட் குமாராக இளவரசு, மகளாக ரேச்செல், மூன்று மருமகள்கள், மருமகன் முத்துக்குமார், பென்னி குயிக் முனீஸ்காந்த், டாக்டர் ஜார்ஜ் மரியான் என அனைவருமே பாத்திரம் அறிந்து பிரமாதமான நடிப்பை நல்கியிருக்கிறார்கள்.
பாலசரவணனின் பூமாலை கட்டும் காட்சி கலகலப்பு. தாய்கிழவியின் பேரன் கவனிக்க வைக்கிறார். கருப்பு கோவில் அணையா விளக்கு காட்சிகள், கங்காரு அடிகளார் சாமிகள் என அதகளம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு பக்கபலம். காமெடி காட்சிகள், எமோஷன், நையாண்டி என பின்னணி இசையில் பெரும் பங்காற்றியிருக்கிறது. கதையோட்டத்தினூடே வரும் பாடல்கள் மிகவும் உயிர்ப்பு. மேலும், ஆங்காங்கே ஒலிக்கும் கமலின் திரைப்படப் பாடல்கள் ஒரு கதாப்பத்திரமாகவே வருவது புதுமை மற்றும் சிறப்பு. மரணப்படுக்கையில் இருக்கும் தாய் கிழவியை சுற்றித் தான் கதை என்றாலும், காட்சிகள் ரிப்பீட் மோடில் வருவது சற்று சலிப்பைத் தட்டுகிறது. எடிட்டர் லோகேஷ் இங்கு தயவு பார்க்காமல் கத்தரித்திருக்கலாம்.
படம் முழுக்க டார்க் ஹியூமர் தான் என்றாலும், அதனூடே அலுப்புத் தட்டாமல் வாழ்க்கைப் பாடமும் எடுத்துள்ளார் இயக்குனர் சிவகுமார் முருகேசன். நடுரோட்டில் நடக்கும் ஆம்புலென்ஸ் வெண்டிலேட்டர் காட்சி, சுருளியை வளர்த்த விதம், அதை சுருளியே மருமகள்களுக்கு புரியவைத்த இடம், பவுனுத்தாயின் பல்லாங்குழி விளையாட்டு காட்சிகள் எனப் பூமாலையில் இடையிடையே கட்டப்பட்டிருக்கும் மரிக்கொழுந்து வாசம் போல படத்தின் பேசுபொருளாக மணக்கின்றன. ‘காசு இல்லையென எந்தப்பெற்றோரும் குழந்தையைக் கைவிடுவதில்லை. ஆனால் பெற்றோரின் நிலைமை அதுபோல இல்லை’ போன்ற வசனங்கள் சிந்திக்கவைக்கின்றன. என்னதான் இறுதிக்காலத்தில் கூடவே இருந்து கவனித்துக் கொண்டாலும், இறுதியாகப் படுக்கையில் இழுத்துக்கொண்டிருக்கும் அம்மாவை அப்படியே விடுவதா அல்லது காப்பாற்றுவதா என எந்த முடிவும் எடுக்க முடியாத கையறு நிலையில் தான் சகோதரனோடு பிறந்த மகள்கள் இருக்கிறார்கள் எனும் உண்மையை நுட்பமாக பேசியிருக்கிறது சுருளி கதாபாத்திரம்.
படபடவென இறுதியில் எடுக்கப்படும் முடிவுகளில் பவுனுத்தாயி மிகக் கம்பீரமாகத் தெரிகிறார். பெண் சுதந்திரம், சுய மரியாதை என நெருடலில்லாத வசனங்கள் பளிச். யாரும் தூக்கிவிட இல்லாத அநாதரவான நேரத்தில், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு, கவிழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தை இழுத்துப் பிடித்து ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்து நிப்பாட்டிய உங்கள் பாட்டியின் கதைதான் இந்த தாய்கிழவி குடும்பத்துடன் சிரித்து மகிழவேண்டிய படம்.
#ThaaiKizhavi #sivakarthikeyan #SivakumarMurugesan #RadhikaSarathkumar #NivasKPrasanna
அவதார் பயர் அண்ட் ஆஷ்
முதல் பாகம் வந்தபொழுது ஒரு புது உலகத்தை ஜேம்ஸ் கேமரூன் படைத்திருந்தார். பத்து அடி உயர மனிதர்கள், நீல நிற உடல், அவர்களை சுமந்து செல்லும் பறவைகள் என 3டி இல் பார்ப்பது பரவசமாயிருந்தது. இரண்டாவது பாகத்தில் கடல் சார்ந்த காட்சிகள் புதுமையாக இருந்தன. அதைத்தாண்டி மற்றவை ஈர்க்கவில்லை. இப்பொழுது இன்னும் பாதகம். எந்த ஒரு புதுமையும் இல்லை. எல்லாமே பழையது. பார்த்து சலித்தது. 'வா மாப்பிளை. ஒரு டீ அடிச்சிட்டு வருவோம்' என்கிற ரீதியில் சண்டை போடுகிறார்கள். ரெட் டாக்சி புக் செய்து போவது போல் அந்த பறவைகளை பிடித்து எல்லா இடமும் பறந்து, ரிப்பீட் மோடில் காட்சிகள் நம்மை கழுத்தறுக்கின்றன.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக படம் ஓடுகிறது. தவிர பல வருடங்கள் கழித்து மூன்றாம் பாகம் என்பதால் முதல் இரண்டு பாகத்தில் நடந்தவை ஞாபகத்தில் இல்லை. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கடந்த வாரம் என்று ரீகேப் போடுவது போல் செய்திருக்கலாம். 3டி கண்ணாடி வேறு இம்சிக்கிறது. அதற்கு தனியாக 30 ரூபாய் தெண்டம்.
2029 மற்றும் 2031 இல் நான்கு மற்றும் ஐந்தாம் பாகம் வர இருக்கிறதாம். சோதிக்காதீங்க கேமரூன்.
#AvatarFireAndAsh #AvatarFireAndAsh
டீசல் 2025
படத்தை 2023ல முடிச்சுட்டாங்க. யாரு கண்ணு பட்டுச்சோ படம் பொட்டிக்குலேயே ரெம்ப நாள் கடந்துருக்கு. ரெண்டு வருஷம் கழிச்சி 2025ல ரிலீஸ் பண்ணிருக்காங்க. பொட்டிக்குள்ளேயே இருந்துருக்கலாம்.
க்ரூட் ஆயில் கொண்டு போறதுக்காக கடற்கரை ஓரமா ஒரு ராட்சச பைப் லைன் போடுறாங்க. அங்க இருக்குற மீனவர்களுக்கு இது பிரச்சினையா இருக்கு. தங்களோட வாழ்வாதாரம் பாதிக்குதுனு இந்த பைப்ல கையை வச்சி க்ரூட் ஆயில் திருடி இவங்களே லாரி புடிச்சி மும்பைக்கு அனுப்பி அதை சுத்திகரிச்சி ரிட்டர்ன் சென்னைக்கு கூட்டியாந்து பங்குல ரொப்பிடுறாங்க. எப்படி தலை சுத்துதா? இதுக்கே இப்டினா? இந்த க்ரூட் ஆயில் ப்ரியர்களுக்குள்ள கேங் வார் வருது. அதுல DSP வினய் மேல நம்ம தம்பி ஹரிஷ் கையை வச்சிடுறாரு. அவர போடறதுக்கு ஊரு முழுக்க தேடுறாங்க.
ஆனா தம்பி 'இடியாப்பம் இடியாப்பம்'னு விக்கிற மாதிரி தெருத்தெருவா சுத்துறாரு. நடுவுல கோர்ட்டுக்கு வந்து 'hollow man' மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம ஒரு பைட் வேற. ஆனா போலீஸ் கண்ணுல படமாட்டேங்குறாரு. திருப்பியும் கடல்ல ஹைட் அவுட். வெயிட் வெயிட். இப்போவே டயர்ட் ஆனா எப்படி? இந்த க்ரூட் ஆயிலை எதிர் கும்பல் திருடி பதுக்கி வச்சிருவாங்க. எவ்ளோ. 2 கோடி லிட்டர். எங்க அப்டினா பக்கத்துல குடிதண்ணிக்கு போடுற பைப்ல. அங்க தண்ணி விடலையாம். அதனால அங்க ஒளிச்சு வச்சிருவாங்க. இதன் காரணமா பெட்ரோல் இல்லாம சென்னையே ஸ்தம்பிக்குது. சென்டர்ல ப்ரெஷர். பூரா பயலுவளும் தேடுறாங்க. இப்போ நம்ம தம்பி தைரியமா வெளில வந்து 'எனக்கு இந்த க்ரூட் ஆயில் இருக்குற இடம் தெரியும்'னு உதார் விடுறாரு. போதாக்குறைக்கு
இவரு பொளந்த DSP தான் இவருக்கு ப்ரொடெக்ஷன் கொடுக்கணுமாம். எப்படி? இன்னும் முடியலை. 'எங்க நைனாவை வெளில கொண்டு வா. இடத்தை காமிக்குறேன்'னு கண்டிஷன் போட, அவங்க இவரு நைனாவை வெளில விட, புல்லிங்கோ நைனாவை போட்ருவாங்க. இதுக்கு அவரு உள்ளையே இருந்துருக்கலாம். இப்போ தான் ஹைலைட்டே. இவரு அந்த பைப்ல பதுக்கி வச்சிருந்த க்ரூட் ஆயில் ஒரே ராத்திரில பேரேல்ல மாத்தி (சைன்டிஸ்ட் காளி வெங்கட் உதவி) மீனவர்கள் படகு மூலமா கடலுக்கு கொண்டு போய், ஜனம் எல்லாத்தையும் கூட்டி படகைல்லாம் ஹார்பர் ரூட்டை ப்ளாக் பண்ண வச்சி, எந்த ஒரு கப்பலையும் வர விடாம ஸ்டேட், நேஷனல், இன்டர்நெஷனல் பிரச்சினையா மாத்தி, 'ஓகே ஓகே பைப்பை தூக்குறோம்'னு ஒத்துக்குறாங்க. அப்பப்பா. ஒரு 2000 கோடி பட்ஜட் படம் சாமி இது. 12 கோடில முடிச்சிட்டாங்க. அதான் ப்ராபளம்.
ஹீரோயின். அதுல்யாரவி. 'கனவுல கடல் கன்னி வருது. ஹரிஷோட அம்மா தான் அதுனு' அது ஒரு பக்கம் பினாத்திக்கிட்டு. 'எம்மா. நீங்கதான் ஹீரோயின். தம்பி எங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் ஒன் சைட் ஷால் போட்டுட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடங்க. அப்பப்போ அழுவனும்னு சொல்லிருப்பாங்க போல. இந்த வருட தேசிய விருது நிச்சயம். காமெடி கேரக்டர் ரோல் பண்ணிட்ருந்த விவேக் பிரசன்னாவை இங்க வில்லனாக்கிருக்காங்க. வாய் முழுக்க சோறை திணிச்சு வச்சா எப்படி இருக்குமோ அது மாதிரி படம் முழுக்க ஒரு தினுசா முழிச்சிட்டே வராரு. செம டெரருங்க. இரண்டாவது தேசிய விருது. அப்பாவியா ஊருக்கே நல்லது செஞ்சிடிருக்குற கேரக்டரை பிடிச்சி கொடூரமா கொல்லுவாங்கல்ல. அது மாதிரி இதுல ரமேஷ் திலக்கை க்ரூட் ஆயில்ல முக்கியே கொன்றுவாங்க. பழி வாங்குறேன்னு விவேக் பிரசன்னாவை ஹரிஷ் தம்பி இப்டி தான் சாகடிப்பாரு.
டைரெக்டரு நம்மளை அதே மாதிரி கொல்றாரு. ஆக மொத்தம் இது டீசல் இல்லை. க்ரூட் ஆயில்.
#dieselmovie #HarishKalyan #athulyaravi
ஓஹோ எந்தன் பேபி
எவ்ளோ நாள் தான் கொலை, கொள்ளை, மர்டர், அடி தடி படமா பாத்துட்டே இருக்கிறது.
ஒரு நல்ல லவ் ஸ்டோரியா பீல் குட் படம் இருக்கானு கேட்ட இதோ 'ஓஹோ எந்தன் பேபி'.
பைவ் ஸ்டார் கிருஷ்ணா டைரக்ட் பண்ணிருக்குற முதல் படம். அத்தனை படங்கள் நடிச்சிட்டு தன் கிட்ட இருக்கிற அந்த டெரெக்டர் ஆசையை இந்த படம் மூலமா தீர்த்துக்கிட்டார்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடி மாடர்ன் லவ் சென்னை வெப் தொடர்ல 'காதல் என்பது கண்ணுல ஹார்ட்டுல வர ஒரு எமோஜி' எபிசோட். எடுத்துருக்கார். அதுவும் துள்ளலான லவ் ஸ்டோரி தான். அதே போல ஓஹோ எந்தன் பேபி படமும் பாக்குறதுக்கு நல்லாருக்கு. சிம்பிளா எந்த ஒரு குழப்பமும் இல்லாத லவ் ஸ்டோரி. பாக்குறாங்க. பேசுறாங்க. பழகுறாங்க. கோவத்துல பிரிஞ்சிடுறாங்க. அப்புறம் ஒரு கட்டத்துல சேந்துடுறாங்க. அவ்ளோதான்.
காதலர்களும் புதுசு. காட்சிகளும் புதுசு. ருத்ரா, மராத்தி பொண்ணு மிதிலா, விஷ்ணு விஷால், மிஸ்கின், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், பாலாஜி சக்திவேல் இவங்க எல்லாரோட சேர்த்து 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதினு ஒரு பெரிய பட்டாளம் இருக்குது. எல்லோருக்கும் அழகா அளவா ஒரு ஸ்பேஸ். ரெண்டு மூணு லிப் கிஸ் உண்டு. டிஸ்க்ளைமர் சொல்லிடறேன். ம்யூசிக்லேந்து ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை கேஸ்டிங்னு எல்லாமே குட். ரைட்டிங் மட்டும் தனியா ரெண்டு பேர் பண்ணிருக்காங்க. முகேஷ் மஞ்சுநாத் மற்றும் ஷாரதா ராமநாதன். தமிழ் சினிமாவுக்கு இது ஒரு நல்ல விஷயம்.
நெட்பிளிக்ஸ்ல ரிலீஸ் ஆகிருக்குற இந்த ரொமேன்டிக் லவ் ஸ்டோரிக்கு தாராளமா ஒரு ஹாய் சொல்லலாம்.
#OhoEnthanBaby #mithilapalkar #VishnuVishal @[1824306148:2048:Krishnakumar Ramakumar] Sharada Ramanathan
சரண்டர்
நொடிக்கு நொடி பக்காவான அட்ரீனலின் ரஷ். ஒவ்வொரு சீனும் பதட்டத்தை கூட்டிட்டே இருக்கு. தேவையில்லாம ஒரு சீன் கூட இல்ல. முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. கடைசி நேர க்ளைமேக்ஸ் பைட் மட்டும் தான் ரத்தம் தெறிக்குத்து. நிறைய சீன்கள் இருட்டுலே எடுத்தாலும் பளிச்சுனு இருக்கு. அதிலையும் அந்த தீம் ம்யூசிக். வயலின்ல இந்த பக்கம் ஒரு இழுப்பு. அந்த பக்கம் ஒரு இழுப்பு. அப்படி படபடக்க வைக்குது. லால், முனீஸ்காந்த் தவிர பெரிய கேஸ்டிங் இல்லை.
அப்படி இருந்தும் ஒவ்வொரு நடிகரும், நடிப்பும் தரம். எல்லாமே அந்த மாயாஜால திரைக்கதை அப்புறம் காட்சி கோர்ப்பு தான். ஒரு த்ரில்லர் மூவி எப்படி எடுக்கணும்னு ஒரு இலக்கணம் கொடுத்துருக்கார் அறிமுக இயக்குனர் கௌதமன். சன் நெக்ஸ்ட்.
#surrender
வா பார்ப்பது
'ஏலே அங்கன என்ன வா பாத்துட்டு இருக்க' என்ற சொலவடையை நெல்லை வட்டாரத்தில் கேட்கலாம்.
வா பார்த்தல் என்பது அடுத்தவன் வாயை பார்ப்பது. அதாவது பராக்கு பார்ப்பது. இந்த வா பார்த்தல் என்பது தற்போது மிகவும் அருகி வருகிறது. எப்பொழுது பார்த்தாலும் கல்லெறிந்த நாயைப் போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் இந்த வா பார்த்தல் என்பது வழக்கொழிந்து போய்விட்டது என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இந்த இலக்கற்ற வா பார்க்கும் தொழிலை தற்போது மொபைல் போன் பிடுங்கிவிட்டது நன்றாக வா பார்த்தது எப்பொழுது என்று யோசித்தால், இரண்டாம் வகுப்புக்கு இட்டுச் செல்கிறது.
திருநெல்வேலி மகாராஜநகர் ஹவுசிங் போர்டில் சி பிளாக் முதல் மாடி வீடு. ஒரு ஹால் ஒரு கிட்சன் ஒரு சின்ன பால்கனி. அவ்வளவு தான் வீடு. அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல் ரோட்டை பார்த்து இருக்கும். ஜன்னலை ஒட்டி உள்பக்கம் ஒரு சிறு திண்டு உண்டு. அந்தத் திண்டில் எக்கி ஏறி உட்கார்ந்து விட்டால் ரோட்டை பார்த்து ஜாலியாய் பொழுதை போக்கிக் கொண்டிருக்கலாம். கூடவே ஒரு சிறு கிண்ணத்தில் பொரிகடலையும் சீனியும். அது தானே தீனி. ஒவ்வொரு கரண்டியாய் ரசித்து ருசித்து சாப்பிட்டு கீழே விளையாடுவதை, போவோர் வருவோரை பார்த்து கொண்டிருந்தது நினைவிலிருக்கிறது.
அதற்குப் பின் எட்டயபுரம் மாற்றல் மீண்டும் திருநெல்வேலி என்று ஓட்டமும் ஆட்டமுமாக இன்று வரை ஓடி விட்டது. ஆனால் அது போல் ஒரு நாள் உட்கார்ந்து வா பார்த்தல் என்பது அமைந்ததில்லை. பின்னே நாய் போல் ஓடிக்கொண்டே இருந்தால்.
இந்த பராக்கு பார்த்தல் எங்கு வேண்டுமானாலும் நிகழ வேண்டும். இரைச்சலாய் நிறைந்திருக்கும் பேருந்து நிலையம், கல்லூரி, வேலை பார்க்கும் இடம், ஒரு ஆலமரத்தின் நிழலில், கற்கோவிலின் குளிர்ச்சியில், ஆற்றங்கரையில், பாறை முகட்டில், புள்ளினங்கள் ரீங்காரம் துள்ளும் அத்துவான காட்டில், ஓவென இரையும் கடலில், சாலையில், மொட்டை மாடியில், மைதானத்தில், ரயில் பயணத்தில், கல்யாண வீட்டில் என எங்கு வேண்டுமானாலும். அங்கு நடக்கும் மனிதர்கள், கால்நடைகள், அசையும் புற்செடிகள், பறக்கும் பறவைகள், தேமே என்று கிடைக்கும் கற்களை என ஏதேனும் ஒன்றை அல்லது எல்லாவற்றையும் எந்த ஒரு பிரதிபலனும் இன்றி வெறுமே காட்சியாய், பார்க்கும் காட்சிக்கு சாட்சியாய் மட்டும் இருக்க வேண்டும்.
எந்த ஒரு முன் அனுமானமும் இன்றி, பார்க்கும் நபர்களை பற்றி எந்த ஒரு கருத்தும் இன்றி, நடந்தவற்றை எண்ணி வருத்தப்படாமல், நடக்கினறவற்றை எண்ணி குழம்பிக்கொள்ளாமல், நடக்கப்போவனவற்றை பற்றி பயம் கொள்ளாமல் வெறுமே பார்த்துக்கொண்டிருத்தல். கண்முன்னே கரைந்து போகும் காட்சிகளும் காலுக்கு அடியில் ஒளிந்து ஓடும் காலத்தின் பிரக்ஞை இல்லாது ஒரு பராக்கு பார்க்கும் சூழ்நிலையும் மனநிலையம் ஒருங்கே அமைய வேண்டும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் வேலைக்குச் செல்லும் நேரங்களில் ஒய்வு எடுக்கும் ஏக்கமும், ஒரு விடுமுறை நாளில் வானத்தையே வில்லாக வளைத்து வேலை செய்ய நினைக்கும் திராணியும் நமக்கு அமைந்திருப்பது நகை முரண்.
படபடவென்று ஓடிக்கொண்டே இருக்காமல் கொஞ்சம் ஆற அமர சுற்றியும் பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். வேகமாக போய்கொண்டிருப்பது ஓய்வெடுக்கத்தானே. அந்த ஓய்வை வாழும்போதே எடுத்துக் கொள்வோம். Slow down to Slow down your ageing process. பராக்கு பார்த்தல் என்பது அவ்வளவு எளிதல்ல. எல்லோருக்கும் அது வாய்த்தும் விடுவதில்லை.
ஏனெனில் பராக்கு பார்த்தல் ஒரு மோன நிலை.
தலைவன் தலைவி
எதற்கும் துணிந்தவன், பசங்க 1 &2, கதகளி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை மூலம் தனக்கென ஒரு தனி ரசிக பட்டாளம் வைத்திருக்கும் பாண்டிராஜின் மற்றுமொரு படைப்பு இந்த தலைவன் தலைவி. அவரது படைப்பில் என்னை பொறுத்த வரையில் என்றும் முதலிடம் நம்ம வீட்டு பிள்ளை. கிரிஞ்ச் என்று கூறினாலும் நம்ம வீட்டு பிள்ளை ஒரு முழுமையான படைப்பு. வெகுஜனமும் ரசித்திடும் வகையில் அது ஒரு மைல்கல்.
தலைவன் தலைவி எப்படி இருக்கிறது ?
'தன்னோட குடும்பத்துக்கிட்ட தோக்கிறதுக்கு துணிஞ்சவன் வாழ்க்கைல என்னைக்கும் தோக்கமாட்டான்' இந்த டையலாக் எழுதுனவனே அடிக்கனும் எனும் இன்ட்ரோ சீனில், ஸ்டோரி ஸ்க்ரீன்ப்லே டெரெக்ஷன் - பாண்டிராஜ் என கார்ட் போடுகிறார். தன்னைத் தானே எள்ளி நகையாடும் சுய எள்ளலுடன் தைரியமாக களமிறங்கியிருக்கிறார் பாண்டிராஜ். டாம் எண்டு ஜெரி போல் சண்டை போட்டுக்கொள்ளும் புருஷன் பொஞ்சாதி கதை தான் இந்த தலைவன் தலைவி. குல தெய்வ கோவிலில் முதல் மொட்டை போடும் சீனில் ஆரம்பித்து இறுதியில் சுபம் போடும் வரை பொருத்தமான இடங்களில் பிளாஷ் பேக் மூலம் கதை சொல்லியிருக்கும் வித்தை ஈர்க்கிறது.
அதே கணவன் மனைவி உரசலுக்கிடையில் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரிய வைக்கிறார்கள் தீபா, ஜானகி சுரேஷ் மற்றும் நாத்தனார் ரோஷினி. எந்த வித உறுத்தலுமில்லாமல் மருமகளை பங்கம் செய்யும் கேரக்டரில் தீபா பக்காவான தேர்வு. அதுவும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் பாங்கு...ஆஹா. ஸ்க்ரிப்டின் நாயகி சத்தியமாக அவர் தான். காளி வெங்கட், சரவணன், செம்பன், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, மைனா, சென்ராயன், சித்ரா லக்ஷ்மணன், அருள்தாஸ், வேட்டை முத்துக்குமார் என ஒரு பட்டாளமே இருக்கிறது. அத்தனை பேர் இருந்தாலும் யாரையும் டம்மியாக்காமல் ஒவ்வொருத்தரும் ஒரு இடம் என கதாசிரியராக மிளிர்கிறார் பாண்டிராஜ். நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் குறையேதுமில்லை. சொல்லப்போனால் ஒரு நாணயத்தின் இருதுருவமாக சேர்ந்தும் இருக்கிறார்கள். எதிர் எதிராகவும் நிற்கிறார்கள். அதுதான் இயல்பு எனும் பாடம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.
சில பல இடங்களில் வளர்ந்தும் குறைந்தும் வருகிறார் நித்யா மேனன். ADகள் கவனிக்கவும். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ஒரே இடத்தில் படம் பிடித்திருந்தாலும் அலுக்காமல் கத்தரித்திருக்கிறார் பிரதீப். யானை மலை, ஹோட்டல் என சுகுமாரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு கடுமையாக உழைத்திருக்கிறது. சின்ன சின்ன மெனெக்கடல்கள் தான் ஒரு படைப்பை மெருகேற்றும். உதாரணமாக டம்பளருடன் கல்லில் மீண்டும் சூடாகும் டீ, அதே டீ டம்பளரில் தலைக்கு ஒத்தடம் கொடுக்கும் காட்சி என இயல்பாக ஆனால் மதுரை மண்ணுக்கேற்ற டீடைலிங் சூப்பர். பாதி மொட்டையுடன் குழந்தை க்யூட்.
எப்படித்தான் படம் பிடித்தார்களோ. ஆரம்ப காட்சியில் நித்யா மேனன் சாப்பிடும் பரோட்டா வகைகள் மதுரை மண்ணின் ஸ்பெஷல். நா ஊர வைக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள், செண்டிமெண்ட் சீன்ஸ், ரோமேன்ஸ், காமெடி என வழக்கம் போல் பாண்டிராஜின் எல்லாமும் கதம்பபமாக இருக்கிறது இந்த தலைவன் தலைவியில். எல்லாமே நிறைவாக இருந்தும் இந்த திருஷ்டி பொட்டாய் விஜய் சேதுபதி ஹை பிட்ச்சில் கத்துவதை மட்டும் சகித்துக் கொண்டால் தலைவன் தலைவிக்கு நாமும் ஒரு கொடி பிடிக்கலாம்.
2022இல் பாண்டிராஜ் பற்றி எழுதிய பத்தி கீழே.
https://www.facebook.com/share/p/19T9w7wzqy/
#thalaivanthalaivii #vijaysethupathy #NithyaMenen #santhoshnarayanan #YogiBabu #Pandiraj
டிடி நெக்ஸ்ட் லெவல்
டிடி நெக்ஸ்ட் லெவல் FDFS .
இது தான் முதல் முறை. பெரிய பெரிய நடிகர்களுக்குக் கூட இந்த FDFS சென்றதில்லை. நேபோட்டிசம் இல்லாத ஒரு நடிகர். அத்தனை ஹீரோக்களுக்கு மத்தியில் தானும் ஒரு கதாநாயகன் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்துவதே பெரிது. தனக்குண்டான கிரௌண்ட் இதுதான் என்று ஒரு வட்டத்துக்குள் ஆடி அந்த பிம்பத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். அதற்கே வாழ்த்துக்கள் சாண்டா. நெக்ஸ்ட் லெவல் பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன்.
டிடி ரிட்டர்ன்ஸ் அளவுக்கு இல்லை. ஆனால் மோசமில்லை. பளிச் சந்தானம். மஷ்ரூம், டபிள் சைட் என்றெல்லாம் கலந்துகட்டி ஒரு தினுசான ஹேர் ஸ்டைலில் அசத்தலாயிருக்கிறார். லூஸ் பேண்ட் ஷர்ட் கேன்வாஸ் சகிதம் உடலை குறுக்கி கைகளை ஆட்டி ஆட்டி என தற்காலத்து புள்ளிங்கோ மற்றும் யோ யோ கதாபாத்திரத்தில் கனகச்சிதம். ஹீரோயின் கீத்திகா. எங்கிருந்துதான் அள்ளி வருகிறாரோ? இதுவரை கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களிலும் நவாம்சங்களுடன் ஹீரோயினை செலெக்ட் செய்திருக்கிறார்.
தங்கையாக யாஷிகா ஆனந்த். என்னடா நைட்டி அணிவித்து தண்ணீர் குடம் தூக்கி வர சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தால், அடுத்த காட்சியிலேயே ஜீன்ஸ் ட்ரவுசர் கொடுத்து இங்கிட்டும் அங்கிட்டும் திரிய விட்டிருக்கிறார்கள். அதற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் நடிகை கஸ்தூரி. 51 வயதில் யாஷிகாவிற்கே டப் கொடுக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் மேல் என்ன காண்டோ தெரியவில்லை. வித்தியாசமான கதாபாத்திரம் என்று கோமாளி போல் ஒரு வேடம். செல்வராகவன் சிறப்பு.
தவிர நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன், லவுட் ஸ்பீக்கர் ரெடின் கிங்ஸ்லி என்று ஒரு பட்டாளம். கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். லொள்ளு சபா மூலம் கோலிவுட்டில் விசிட்டிங் கார்ட் கொடுத்த சந்தானம் இதில் கையில் எடுத்திருக்கும் கரு மூவி ரிவியூவர்ஸ். பஸ்ட் ஹாப் மொக்கை செகண்ட் ஹாப் போர் என்று சகட்டு மேனிக்கு அடித்துவிடும் மூவி ரிவ்யுவர்களை ஸ்பெஷல் ஷோ வைத்து சினிமா பேரடைஸ் எனும் தியேட்டரில் செல்வராகவன் பேய் கொலை செய்கிறது. ரேப் பாடல் மூலம் மூவி ரிவியூ செய்யும் சந்தானத்தையும் அது போல அழைக்க அவர் குடும்பமே அதில் மாட்டிக் கொள்கிறது. அதிலிருந்து தன் குடும்பத்தை மீட்டாரா இல்லையா என்பது தான் நெக்ஸ்ட் லெவல்.
கேம் ஸ்டார்ட் செய்வதற்கே கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி விடுகிறது. அதுவரை மெதுவாக செல்லும் படம் கேம் ஆரம்பித்தவுடன் சற்றே டாப் கியர் எடுக்கிறது. சொகுசு கப்பல், மிஸ்டரி பங்களா, பாழடைந்த பேக்டரி என்று மூன்று லொகேஷன்கள். காமெடி என்கிற பெயரில் பல நேரம் வாங்கிக்கட்டிக் கொள்ளும் சந்தானம் இந்த முறை அளவாக வாசித்திருக்கிறார். படத்தை ஓரளவேனும் கலகலப்பாக வைத்திருப்பது மாறன் மற்றும் ராஜேந்திரன். இந்த பாகத்தில் பேய் இடம்பெறும் காட்சிகள் குறைவு. அதனாலேயே சுவாரசியம் கம்மி. டெக்ஸ்சாஸ் செயின் சா மாசாக்கர் படம் போல் கேனிபல்ஸ் தான் வில்லன். ஹாரர் ஜானரை கையில் எடுத்திருக்கிறார்கள். சில நேரங்களில் இல்லை பல இடங்களில் ரிப்பீட் மோட் போல் போர் அடிக்கிறது. ஒளிப்பதிவு, இசை, பட்ஜட், நடிகர்கள், கதை, செட் என அனைத்தும் கை கூடி வந்தாலும் காமெடி DD ரிட்டர்ன்ஸ் அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனாலேயே இதை நெக்ஸ்ட் லெவலாக கொண்டாட முடியவில்லை.
இந்த எதிர்பார்ப்பை ஒத்தி வைத்தால் இது ஒரு நல்ல முயற்சி தான்.
#DDNextLevel #santhanam
டூரிஸ்ட் பேமிலி
ஒரு நல்ல பீல் குட் மூவி என்று பார் போற்றிவிட்டது. இதற்கு மேல் இதில் என்ன கூற?
என்னை மிகவும் கவர்ந்தது மற்றும் ஆச்சர்யப்படவைத்தது இதன் திரை மொழி. ஒரு நல்ல நாவல் வாசிப்பாளனை முதல் பக்கத்தில் இருந்து கட்டிப்போட வேண்டும். அதே போன்று ஒரு நல்ல சினிமா முதல் காட்சியிலிருந்து பார்வையாளனை தன்னுள் ஈர்க்க வேண்டும்.
'மீன் பிடிக்கும்பொழுது திசை தெரியாமல் வந்துவிட்டோம், நல்லாருக்கீங்களா அண்ணா?' என்று ஆரம்பம் முதல் இறுதி வரையில் அந்த லாவகம் நன்றாக கூடி வந்திருக்கிறது. அபிஷன் ஜீவித்தின் முதல் படம் என்கிறார்கள். எப்படி முதல் படத்திலேயே இவ்வளவு செய்நேர்த்தி?. அதுவும் பல காட்சிகள் படம் நெடுகிலும் ஆங்காங்கே முன்னும் பின்னும் கோர்க்கப்பட்ட விதம் ஆச்சர்யம். உதாரணமாக, ஜெனி நாய், லெமன் ஜூஸ், ஆம்புலன்ஸை கூப்பிடு, தம்பி சாப்பிட்டியா? போன்ற காட்சிகள் ஒரு சோறு பதம். அதுமட்டுமா? ஒரு நல்ல திரைக்கதைக்கு உதாரணமாக காட்சிக்கு காட்சி திருப்பங்கள். ஒரு பக்கம் லாக்கப்பில் போலீசின் லத்தியும் அதிகாரமும் நீண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு நேர் மாறாக தாஸின் அன்புக்கரங்கள் கேசவ் நகரில் அதை விட இன்னும் அதிகமாக நீளுகின்றன.
பாராட்டப்படும் நேரத்தில் ஒரு நெகிழ்வான தருணம், சிரிப்பு என திரைமொழியில் நல்ல இலக்கணம். கொசுறு தகவலாக கேசவ் நகர் காலனியேவெறுக்கும் அந்த குடிகார இளைஞன் தான் படத்தின் டெரெக்டர் அபிஷன் ஜீவிந்த். படம் நெடுகிலும் நெகிழ்வான காட்சிகள். பார்க்கும் நமக்கு கண்களில் நீர் கோர்க்கவில்லையென்றால் ஆச்சர்யம் தான். அவ்வளவு நெகிழ்ச்சி. அகதியாக ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை சோக டெம்ப்ளேட்டில் அடைக்காமல் கிட்டத்தட்ட டார்க் காமெடி ஜானரில் (ஒரு பாதி) பரிமாறியிருக்கிறார்.
சசிகுமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் காட்சியில் எங்கே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல் குடும்பத்திற்குள் ஒரு கலகம் எழப்போகிறதோ என்று பதைபதைப்பு நம்மிடையே தொற்றிக்கொள்ளும் நேரத்தில் ஆற்றாமை, சோகம், பெருங்கோபம், விரக்தி, அரவணைப்பு, பாசம், காதல், நெகிழ்வு, உற்சாகம் என பல உணர்வுகளை கடத்துகிறது.
அபிஷனின் எழுத்துழைப்பு. இறுதியில் ஒரு சீரியல் போல டிராமா டெம்ப்ளேட்டில் அடக்கியது ஒரு நெருடல். ஆனால் பீல் குட் மூவி என்றாகிவிட்டது. இதை விட வேறு என்ன நல்ல முடிவை எழுதி விட முடியும். எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே நிதானித்து அக்கம் பக்கம் அருகிலிருப்பவரிடம் அன்பைப் பகிருங்கள் என்று கூறும் டூரிஸ்ட் பேமிலிக்கு யோசிக்காமல் ஒரு டூர் செல்லலாம்.
#TouristFamily #AbishanJeevinth
குடும்பஸ்தன்
காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் மிடில் க்ளாஸ் இளைஞன் ஒருவன், ஒரு கட்டத்தில் வேலையிழந்து வெளியில் சொல்லாமல் கழுத்தை நெறிக்கும் வரை கடன் மேல் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துவதில் வெற்றி கண்டாணா என்பதை டார்க் ஹ்யுமர் பாணியில் சொல்லியிருக்கிறது இந்த குடும்பஸ்தன். மணிகண்டன். படத்தின் போஸ்டரிலேயே, மணிகண்டன் in குடும்பஸ்தன் என்று போட்டிருந்தார்கள்.
அசுர வளர்ச்சி.
ஒரு வசனகர்த்தாவாக உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னை தகவமைத்துக்கொண்ட மணிகண்டன், ஒரு நடிகனாக குறுகிய காலத்தில் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானது. எட்டு தோட்டாக்கள் ஜெய், காலா லெனின்,ஜெய் பீம் ராஜ்கண்ணு, குட்நைட் மோகன், லவ்வர் அருண் மற்றும் குடும்பஸ்தன் நவீன் என மணிகண்டன் ஏறி வந்த இந்த படிகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் செல்லுலாய்டு ஓவியங்கள். அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளை அனாயசமாக கடத்துகிறார். ரொமான்ஸாகட்டும், பதட்டம், அழுகை, சோகம், கோபம், இயலாமை என நவரசமும் ததும்பி வழிகிறது. சுற்றி கடன்காரர்கள் துரத்த, யாருமே நுழைய முடியாத வெகு நாள் அடைப்பு எடுக்கப்படாத நாற்றமடிக்கும் பப்லிக் டாய்லட்டுக்குள் அடைக்கலம் தேடி நுழையும் மணிகண்டன் காட்டும் உணர்ச்சிகள் ஒரு பானை சோறு பதம். காட்சியும் தான். என்னை பொறுத்தவரையில், நெகட்டிவ் உணர்ச்சிகளான, கோபம், இயலாமை, அழுகை, பதட்டம், படபடப்பு போன்றவற்றில் மணி ஸ்பெஷலான ஒரு உயரம் தொட்டிருக்கிறார். கலைஞன்.
நாயகியாக சான்வெ மேகனா. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கென்று அளந்து வைத்திருக்கும் ரோலில் கனகச்சித பொருத்தம். லவ்வராக, மனைவியாக, மருமகளாக என மூன்று ரோல்களில் தனக்கென்று கொடுக்கப்பட்டதை செவ்வெனே செய்திருக்கிறார்.
குருசோமசுந்தரம். நிறை குடமாக நிற்கும் அவரிடம் இருந்து வெகு குறைவாகவே தமிழ் சினிமா உபயோகித்துக்கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுத்த கூத்து பட்டறைக் கலைஞன். ஜோக்கர் படத்திற்கு முன்னும் பின்னும் அவரை முழுதாய் உபயோகித்தவர் இல்லை எனலாம். அக்காவின் கணவனாய் வரும் குரு செய்யும் அலப்பறைகள் அதகளம். டைம்டேபிள் போட்டு மனைவியை சமைக்கச்சொல்லும் சாவனிச ரோலாகட்டும். கீழே குனிந்து சலாம் போடும் ஆபிஸ் ரோலாகட்டும், மச்சானிடம் மட்டம் தட்டி எள்ளி நகையாடும் மாப்பிளை ரோலாகட்டும், எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். இந்த குரு என்னும் அக்ஷய பாத்திரத்திடம் எடுத்துக்கொள்ள தமிழ் கலையுலகத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
சுந்தரராஜன். 'அதுல ஒன்னும் இல்ல. கீழ போடுங்க' என்று ஒரு பழைய காமெடி உண்டு. அதே ரவுசான ரோலில் சுந்தரராஜன். மணிகண்டனின் அப்பாவாக வருகிறார். இதுபோன்ற குணச்சித்திர நடிகர்களை தமிழ் சினிமா பெரிதும் மிஸ் செய்கிறது. திரையில் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.
மணிகண்டனின் அம்மாவாக கனகம். ஜெய ஜெய ஜெய ஹே மாமியார். ரவுசு டு தி கோர். மதுப்பிரியர்களாக வரும் நக்கலைட்ஸ் பிரசன்னா, ஜென்சன் திவாகர் காமெடி திரையில் சரவெடி. தனம், சாவித்திரி, நிவேதிதா என நக்கலைட்ஸ் யூட்யூப் பட்டாளம் இங்கு ஆஜர். அனைவருமே கொடுத்த பாத்திரத்தில் நச்சென்று பதிந்துபோயிருக்கிறார்கள். வீட்டிற்கு வீடு வாசப்படி என்று அன்றாடம் நடக்கும் காட்சிகளைத் தான் கோர்த்து பூமாலையாக்கியிருக்கிறார்
அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர். அவருடன் உறுதுணையாக பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் இந்த கூட்டணி அமர்க்களப்படுத்தியிருக்கிறது. யூட்யூப் சேனல் அனுபவம். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து பதமாக பரிமாறியிருக்கிறார்கள். கடன் மேல் கடன் வாங்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கஷ்டத்தில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை இந்த அளவுக்கு டார்க் ஹ்யுமராக வெகு ஜனமும் ரசித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் எழுதி இயக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த அளவுக்கு எழுத்து மற்றும் நடிப்பு பரிமளிக்கிறது. முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை தியேட்டரில் வெடிச்சிரிப்பு. கிடைக்கும் இடங்கள் எல்லாம் காமெடி தான். சொல்லப்போனால் முதல் பாதி முழுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒரு நொடி கூட தவற விடாமல் கவனித்தால் பல இடங்களில் கன்னி வெடி போல் சிரிப்பை புதைத்திருக்கிறார்கள். 'பக்கத்து வீட்டுல கர்ரன்ட் இருக்கா, பிரேக் வேண்டாம். கண்ட எண்ணைல பொரிச்சிருப்பாங்க, 'செருப்பை பாத்துக்கோங்க. ஐயோ இவர் பொண்ணோட தம்பி. அப்படியா அப்ப பத்திரமா பாத்துக்கோங்க', கார் எங்க கிடந்துச்சு?, வச்சி மட்டும் சாப்பிடாதீங்க, பிராடு வேலைக்கு ஏண்டா மோட்டிவேஷன்?, இல்ல இன்னைக்கு மாமியார் பெர்த்டே. விசுக்கு விசுக்குனு கேக்கணும், மூடிய ஆர்கானிக் வழியா எடுக்க முடியுமான்னு பாக்கறேன், தேவி சில்க்ஸ் & brand ஷூ புறம் பேச்சு, காந்திநகர், என்ன சொன்னீங்கன்னு FM சவுண்ட் குரைக்கிறது என படம் முழுக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடி கதக்களி.
காரில் தெரியும் available balance tag நல்ல ஈர்ப்பு யுக்தி. அதே நேரத்தில், 'SC கேட்டரிங், சோறு தான சமைச்சேன்' போன்ற வசனங்களில் சாதித்திமிரை சாடத் தவறவில்லை. போலவே, 'எந்த பக்கம் இருந்து பாக்கறோம்ங்கிறது தான் பாய்ண்ட்', 'இயந்திரத்துக்கு இதயம் இல்லை.
எத்தனை தடவை போட்டாலும் அதைத்தான் காமிக்கும்', 'பணம் கடவுள், compromise வழிபாடு' போன்ற வசனங்கள் வாழ்க்கைப்பாடமாக விரிகின்றன. என்னதான் செய்தாலும் நிமிர்த்த முடியாத வாலாக இருக்கும் குரு சோமசுந்தரம் ஆபிசில் நடக்கும் துரோகத்தில் ஒரேடியாக மாறுவது, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மகனின் தட்டை தாய் எடுத்துச் செல்வது, குடும்பமே நடுத்தெருவில் நின்றாலும் மன்னிப்பு கேட்காத தன்மானமிக்க ஒருவன் மானமிழந்து ஊரு முழுக்க கடன் வாங்குவது, ஒரே மாதத்தில் எல்லாக்கடனையும் அடைத்தது (சான்வெயின் நிறைமாத வயிறு சாட்சி) என நெருடல்கள் சில இருக்கின்றன.
சுஜித்தின் ஒளிப்பதிவு, கண்ணனின் கத்திரி மற்றும் வைசாகின் இசை, படத்தின் டெம்போவை ஜானரை நேர்கோட்டில் பயணிக்கவைக்கிறது. அதிலும் லேசா லேசா பாட்டு பயன்படுத்தப்பட்ட இடங்கள் எல்லாம் 1000 வாலா சரவெடி. வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் வயிறு வெடிக்க சிரித்து மகிழும் ஒரு பிளாக் பஸ்டர் மூவி தான் இந்த குடும்பஸ்தன்.
#Kudumbasthan #Manikandan #rajeshwarkalisamy #sanvemeghana #nakkalaites #GuruSomasundaram @[100003041747039:2048:Prasanna Balachandran] @[100001910746726:2048:Rajeshwar Kaliswamy]
ஜீன்ஸ் 1998
சிறு வயதில் பார்த்த ஞாபகம். கடந்த வாரம் மேற்கொண்ட ஒரு நெடுந்தூரப் பயணத்தில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.
சந்தேகமில்லாமல், படம் முழுக்க பிரஷாந்த் ஆக்கிரமித்திருக்கிறார். அவ்வளவு கரிஷ்மா. இரண்டு பிரசாந்த்களும் நெட்டி சோம்பல் முறிக்கும் காட்சி தான் ஹீரோ இண்ட்ரோ ஷாட். சிரித்தபடியே ராமுவை எழுப்புவார். Slightly Feministic. இருந்தாலும் அழகு தான். உள்ளாடையுடன் குளிக்கும் ஒரு காட்சியில் பிரசாந்தின் ஜிம்னாஸ்டிக் பாடியை காமித்திருப்பார்கள். இதுபோன்ற காட்சிகள் எந்த ஹீரோவுக்கும் அன்றுமட்டுமல்ல, இன்றுவரை தமிழ் சினிமாவில் அரிதானவை. மேலும், அமெரிக்கன் ஸ்லாங்கில் ஆங்கில உச்சரிப்பு எல்லாம் வேற லெவல். அதுவும் ராமு அடிக்கடி சொல்லும், ‘ஐ லைக் இட் வெரி மச்’ டையலாக். ஸ்டைல் மட்டுமின்றி, காதல், கோபம், பரிதவிப்பு, சோகம் என நடிப்பிலும் வெரைட்டி காண்பித்திருப்பார். இந்தப் படத்தில் கம்மிட்டாகிய காரணத்தினால் பிரசாந்த் ஏழு படங்கள் தவறவிட்டார். முதலில் அப்பாஸ் நடிப்பதாக இருந்தது.
ஐஸ்வர்யா ராய். கேட்கவா வேண்டும். 1994 மிஸ் வேர்ல்டு. இந்தியனில் நடிக்கக் கூப்பிட்டு வரமுடியாத காரணத்தினால், அடுத்ததாக வந்த ஜீன்ஸை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மதுமிதா மற்றும் வைஷ்ணவி என்று டபிள் ட்ரீட். ULA ஹாஸ்பிட்டலில், மினரல் வாட்டர் வைத்து முகம் கழுவிய அழகை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன?
டைட்டில் கார்ட் சீனில் கழுகுப் பார்வையில் காண்பிக்கப்படும் அமெரிக்கா, அதுவும் இரவு நேரத்தில், அத்தனை உயரிய கட்டிடங்களில் ஒளிரும் விளக்குகள், அதனுடன் ‘நிசரிச’ பின்னணி இசை என எல்லாம் சேர்ந்து ஒரு மோன மயக்கம் தரும். வாய்ப்பிருந்தால் டைட்டில் கார்ட் சீன் மட்டும் மீண்டும் ஒருமுறைப் பாருங்கள். மோஷன் கேப்ட்சரிங்கில் இரண்டு ஐஷ்வர்யா ராய் ஆடும் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடல், முப்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு அதிசயம். ஏன்? இன்றும் பல கோடி செலவில் எடுக்கப்படும் படங்களிலேயே VFX சொதப்பும் போது, 1998-லேயே இதைச் சாத்தியப்படுத்தியது மிகப்பெரிய சாதனை. ரெட்டையர் நாசர் மற்றும் ரெட்டையர் பிரஷாந்த என இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் எந்த காட்சிகளிலும் பிசிறு இருக்காது. இந்த செய்நேர்த்திகளுக்காத்தான் இந்தியாவிலிருந்து ஜீன்ஸ் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
வாராயோ தோழி, ஹைர ஹைரப்பா, அதிசயம், கொலம்பஸ் எல்லாமே ஃப்ரஷாக இன்றும் நம் பிளேலிஸ்டில் உள்ளன. கொலம்பஸ் பாடல் மாகாபலிபுரத்தில் தான் படமாக்கப்பட்டது என்பது கொசுறுத் தகவல்.
சில காட்சிகள் தான் என்றாலும், ‘சுந்தாராம்பாள்’ எனும் கேரக்டரில், தனது 36வது வயதில் ராதிகா ஒரு முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருப்பார். பாகுபலி ராஜமாதாவிற்கு ரம்யாக்ருஷணனை விட்டால் வேறு யாரும் இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், சந்தேகமே இல்லாமல், ராதிகாவும் ஒரு போட்டியாளர் தான்.
படத்தின் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். ஆம். டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் தான். டென்னிஸ் விளையாடி முடித்த பின் அமெரிக்காவில் செட்டிலாகி, கிட்டதட்ட 125 பதங்களுக்கு மேல் தயாரித்துவிட்டார். 20 கோடி தயாரிப்பில், அன்று ஜீன்ஸ் தான் இந்தியாவின் மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் மூவி.
பட்ஜெட்டில் மட்டும் பிரம்மாண்டமில்லை, பார்க்கும் ஒவ்வொரு பிரேமிலும் 'அதிசயம்' தான் இந்த ஜீன்ஸ். ராமு பாணியில் சொல்ல வேண்டுமானால்... I like it very much!
எத்தனை எத்தனை மனிதர்கள்
பேருந்து நிறுத்தத்தில் அவரை தினமும் பார்ப்பதுண்டு. கடந்த ஒரு வருடமாக கவனித்து வந்திருக்கிறேன். 60 வயதுக்கு குறையாமல் இருக்கும். சேர்ந்தாற்போல் இரண்டு நிமிடம் மேல் நிற்க மாட்டார். அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்து கொள்வார். பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட வருவார். ஒரு நாள் கூட தவறியதில்லை.
பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு பேச்சு கொடுத்தேன்.
‘யாரு சார்?’ ‘பேத்தி, பொண்ணோட பொண்ணு’ என்றார் சிறு புன்னகையுடன்.
‘ஓ. பரவால்லையே. பேத்தியோட ரொம்ப அட்டாச்டா. நீங்களே தினமும் கொண்டு வந்து விட்டுறீங்க’
‘அதில்லை தம்பி’ என்று அவர் சொன்ன கதை சோகமானது.
அவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். பையன் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனும் அளவில் சந்திப்பு நடக்குமாம். மற்றபடிக்கு எல்லாமே வாட்சப் கால் தான். பெண்ணுக்குத் தான் பிரச்சினையே. திருமணமாகி ஒரு சில வருடங்களில் மாப்பிள்ளையின் திருமணம் தாண்டிய உறவுகள் தெரிய வந்திருக்கிறது. கண்டித்தும் பலனில்லை. விவாகரத்து வாங்கி பிரிந்துவிட்டனர். ஒரு பெண் குழந்தை உண்டு. பிரியும்போது இவர் பெண்ணின் கஸ்டடியில் வந்துவிட்டது. சற்று நொடிந்துபோனவர், மிகவும் சிரத்தை எடுத்து இரண்டாம் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் அந்தப் பெண் குழந்தையை தன் சொந்த மகள் போல் தான் நடத்தியிருக்கிறார் அந்த இரண்டாவது மாப்பிள்ளை. ஆனால் சில மாதங்களிலேயே அந்தக் குழந்தையின் மீது எரிந்து விழுவது, காரணமில்லாமல் திட்டுவது என வன்மம் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வந்தால் தான் வாழ்க்கை என்று மிரட்டியிருக்கிறான்.
பெண்ணுடைய வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று, இவர் தன் பேத்தியை கூட்டி வந்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் அக்கறையும் பாராமல் வளரும் அந்தக் குழந்தையை நினைத்தால் வருத்தமாகத்தான் இருந்தது. பதினாறு வயதுக்குள் எத்தனை உளவியல் சிக்கலை கடந்திருக்கும். பெற்றெடுத்த தன் குழந்தையை பார்க்க முடியாமல் வேறொரு ஊரில் இருக்கும் தாயின் மனநிலை? இரண்டாம் கணவருக்கு பிறந்த அந்த குழந்தையுடன் மூத்தப் பெண்ணின் உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
முதல் கணவரின் ஒழுக்கம் கெட்டுப்போனது தான் இத்தனை ரணங்களுக்கும் காரணம்.
‘சரி. விடுங்க சார். ரிட்டயர் ஆனப்புறம் யாருமே இல்லாம இருக்குறதுக்கு கடவுளா உங்களுக்கு ஒரு குழந்தை கொடுத்துருக்கார்னு நினைச்சுக்குங்க. இல்லைன்னா தனியாவே இருக்கனும்ல’ என்று சமாதானபடுத்தினேன்.
‘ஒரு வகைல நீங்க சொல்றது சரிதான். ஆனா என் ஒய்ஃப் கேன்சர் பேஷன்ட். எனக்கு பேஸ் மேக்கர் வச்சிருக்காங்க. தினம் இந்த டைமுக்கு சாப்பாடு கட்டி கொடுத்து, இங்க நேரத்துக்கு கொண்டு வந்து விடுறதுங்கறது எனக்கு சிரமமாத்தான் இருக்கு’ என்றார்.
ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை. அமைதியாக நின்றேன்.
‘படிச்சு முடிச்ச உடனே, இன்ஜினியரிங் சேக்கலாம்னு இருக்கேன். காலேஜ் பீஸ் எவ்ளோ வரும்?’ என்றார். அப்போது தான் தெரிந்தது, பேத்திக்கான முழுச் செலவையும் இவர் தான் செய்து கொண்டிருக்கிறார் என்பது.
ஸ்கூல் ஃபீஸ் மற்றும் இதரச் செலவுகள் என அவரது ரிட்டயர்மண்ட் கார்பஸ் ஓடும் நீரரிக்கும் மணல் போல கரைந்துகொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருந்திருப்பார்கள்.
ஓய்வு பெற்ற பிறகாவது கிடைக்கும் சொற்ப ஓய்வுப் பணத்தில் நிம்மதியாய் மீதிப் பொழுதை கழிக்கலாம் என்று நினைக்கும் எத்தனை முதியவர்கள் இதுபோல் சிரமப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.
பேத்தி பஸ் ஏறிய பின் தன் வண்டியை நோக்கித் தளர்வாக நடந்துச் சென்றார்.
மேட் இன் கொரியா - 2026
ப்ரியங்கா மோகன் நடிப்பில், கார்த்திக் (நித்தம் ஒரு வானம் இயக்குனர்) இயக்கத்தில் வெளிவந்துள்ள நெட்ப்லிக்ஸ் திரைப்படம் என்ன ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நல்ல ஃபேமிலி மூவி.
சில்லறையை கீழே போட்டு பொறுக்கச் சொல்லாமல் குடும்பத்துடன் கூடிப் பார்க்கலாம். துளி கவர்ச்சி இல்லை. நல்ல இசை. இன்னும் அந்தத் தீம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் VTV சாயல். கொரியா காட்சிகள் அற்புதம். அழகான கொரியாவை மேலும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். நேர்மறை கொரிய கதாபாத்திரங்களின் வடிப்பு. என்ன நெகட்டிவ்? காதலன் கதாபாத்திரம் குழப்பம். எதற்காக விட்டுச் செல்கிறான் என்பதில் தெளிவில்லை. அதுபோல் இறுதிக்காட்சியில் மன்னிப்பு கேட்பதிலும் உயிரில்லை.
அதுபோல், கிராமத்தில் இருக்கும் அம்மாவை விட்டுட்விட்டு எங்கோ கொரியாவில் இருக்கும் வயதான பெண்மணியிடம் உருகுவது நெருடல். அதுபோல், கொரியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு, செண்பகம், தான் சிறு வேலைகள் மூலம் சம்பாதித்த காசை கொடுத்து உதவுவது என்பது போங்கு. கொரியாவின் கலாச்சாரம், உணவு, கொண்டாட்டங்கள் போன்றவற்றை இன்னும் அதிகமாகக் காட்சிபடுத்தியிருக்கலாம். நல்ல வாய்ப்பிருந்தும் இயக்குனர் தவறவிட்ட ஒரு கோல்டன் சான்ஸ். படம் மேலும் மெருகேறியிருக்கும். இவையெல்லாம் சிறு சிறு குறைகள் தான். பெரும் பட்ஜெட்டில் pan India மூவி என்று தற்போது கொட்டப்படும் கழிசடை படங்களுக்கு இது ஆயிரம் மடங்கு மேல். தாராளமாய் Indo-kimchi பிரைட் ரைஸ் சாப்பிட்டு வரலாம்.
கொசுறு செய்தி : படத்தின் இறுதி காட்சி வரை, கதாநாயகி ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா என்று தான் நினைத்திருந்தேன். #madeinkorea #Priyankamohan
Madraspaper
https://madraspaper.com
Pa Raghavan சார் அவர்கள் முன்னின்று நடத்தி வரும் ஒரு சர்வதேச தமிழ் நாளிதழ். மெட்ராஸ்பேப்பர் இதழுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சமூகம் கலை இலக்கியம் தொடங்கி நம் வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து குறித்தும் இந்த பத்திரிகை பேசும். சார்புகளோ சமரசமோ அற்ற மெட்ராஸ் பேப்பரில் பலதரப்பட்ட பார்வைகளுக்கு கோணங்களுக்கும் எப்போதுமே இடமுண்டு.
விசேஷம் என்னவெனில், இன்று எனது கட்டுரை (US போர்க் கப்பல் குறித்து) முதல் முறையாக madrasapaperல் வெளிவந்திருக்கிறது. வாய்ப்பளித்த ஆசிரியர் பா ரா சாருக்கும் குழுவிற்கும் நன்றிகள் பல 🙏🙏
வாக்குறுதி
மிகப்பெரிய வாக்குறுதிகள் எல்லாம் வேண்டாம். அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, நெரிசல் இல்லாத போக்குவரத்து, நியாய விலைக்கடையில் தரமான பொருட்கள், அனைவருக்கும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சரியான விலையில் விவசாய உற்பத்தி கொள்முதல். இத்துடன் பூரண மதுவிலக்கு மற்றும் போதை இல்லாத் தமிழ்நாடு. இதை யார் வாக்குறுதிகளாகத் தருகிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு.
அர்ஜுன்
பிரபலங்களின் ஒளிவுமறைவு இல்லாத பேட்டிகள், ரசிகர்களிடம் அவர்களை இன்னும் அணுக்கமாக்கி விடும். சமீபத்தில் கோபிநாத் பேட்டி கண்ட அர்ஜுன் வீடியோ ஒன்று கண்ணில் பட்டது. பிட்னஸ் ரகசியம் கூறுங்கள் என்ற கேள்விக்கு அர்ஜுனின் கூறிய பதில் மிகவும் பிடித்திருந்தது. அவர் கூறியது சுருக்கமாகக் கீழே.
1. Discipline and Consistency. தினமும் தேகப்பயிற்சி செய்யவேண்டும்
2. No Shortcuts. உடல் நலத்தைப் பேணுவதில் எந்த குறுக்குவழியும் இல்லை. ப்ரோடீன் பவுடர், இன்ஜக்ஷன், மாத்திரைகள் போன்றவை வேண்டவே வேண்டாம்.
3. டயட் என்று தனியாக எதுவும் இல்லை. இயல்பான மற்றும் அளவான சாப்பாடு. 'ஒரு மணி நேரம் உன் உடலை நீ பரார்த்துக் கொண்டால் மீதி 23 மணிநேரம் அது உன்னை கவனித்துக் கொள்ளும்'.
மேலும் எவ்வளவு பிசியாக இருந்தாலும், எப்பொழுதும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது மற்றும் இண்டஸ்ட்ரியில் அவருக்கு நண்பர்களே இல்லை போன்ற விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன.
#arjunsarja








