புதன், ஏப்ரல் 15, 2026

விவசாயம்

விவசாயம் என்பதற்கான விளக்கமே மனிதனால் திரித்து கூறப்பட்டிருக்கிறது. அதிலும் இயற்கை விவசாயம் என்பது மிகப்பெரிய ஏமாற்று. நிலத்தில் இறங்கி மனிதன் உழத்தொடங்கிவிட்டாலே அது செயற்கை தான். பறவைகள் தின்ற பழங்களின் விதைகள் கீழே விழுந்து மரம் முளைக்கிறதே, அது போன்று விளைவதே இயற்கை.

குச்சி, கற்கள் போன்றவை மூலம் தன்னை தற்காத்துக்கொண்ட மனிதன், காலப்போக்கில் மிகப்பெரும் அழிவு தரக்கூடிய ஆயுதங்களை கண்டுபிடித்ததன் மூலம், ஆகப்பெரும் சக்தியாக இந்த உலகில் நிலைநிறுத்திக் கொண்டுவிட்டான். மிருகங்களை மிஞ்சி தற்போது மனிதர்களே மனிதர்களுக்கு எதிரியாகிக் கொண்டிருக்கும் நிலை.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒன்றும் இந்த பூமிக்கு மாசு ஏற்படுத்துபவை. கான்கிரீட் காடுகள், மின் நிலையங்கள், வாகனங்கள், ஆழ் துளைக் கிணறுகள், நெகிழிக் குப்பைகள், அணுக் கழிவுகள், தொழிற்சாலைகள் என கண்ணில் பட்ட எதை வேண்டுமானாலும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றை பூமியால் முழுமையாக கிரகித்துக்கொள்ள முடியாது. அலுமினியம் 200, பிளாஸ்டிக் பாட்டில்கள் 600 என்று தான் கண்டுபிடித்த பொருட்கள் இவ்வளவு நாட்கள் கழித்து பூமியில் மக்கிவிடும் என்று வகைப்படுத்தும் மனிதன், தான் உண்ட உணவு மட்டும் ஒரு நாளில் செரித்துவிட வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு சுயநலம். மூன்று நாட்கள் வயிற்றுக்குள் தங்கி விட்டால் பரலோகம் தான்.

இயற்கை வளம் காக்கிறோம் என்ற பேரில் மரம் நடுவது போன்ற செயல்கள் எல்லாம் புண்ணியம் என்கிற கேட்டகிரியில் சேர்த்தி இல்லை. அவை எல்லாம் மனிதன் செய்யும் பிராயச்சித்தம் என்று தான் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: