வெள்ளி, நவம்பர் 29, 2013

ஆச்சி

அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு வளைந்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள். கைய்யில் ஒரு பழைய பை. அருகில் யாரும் இல்லை. எப்பொழுதும் வாய் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்து கொண்டிருக்கிறது. கண் நிலைகுத்தி வானத்தை நோக்குகிறது. ஒவ்வொரு தடவை பார்க்கும்போதெல்லாம் எனது ஆச்சியை(பாட்டி) ஞாபகப்படுத்துகிறாள். நான் பிறந்த பிறகு பார்த்த ஒரே ஆச்சி- மூக்கம்மாள் ஆச்சி. அப்பா வழி பாட்டி மற்றும் தாத்தா கல்யாணத்திற்கு முன்பே கிடையாது. தாத்தா வின் ஒரே ஒரு போட்டோ பல குழந்தைகள் சூழ ஒரு பெஞ்சியில் அமர்ந்து எடுத்த போட்டோ.கிளாசிக். அதை தவிர அந்த தலைமுறையை எடுத்து சொல்ல வேறு எதுவும் பாதுகாக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை. அம்மா வழியில் தாத்தா கல்யாணத்திற்கு ஒரு வருடம் முன்பே இறந்துவிட்டார். தாத்தாவின் பல போட்டோக்கள் உண்டு. அதிலும் ஒரு போட்டோவில் அதிகமாக தலைமுடி தாடி எல்லாம் வளர்த்து ஒரு வெள்ளை துண்டை சால்வையாக சுற்றி ஒரு போஸ். பார்பதற்க்கு சந்நியாசம் வாங்கியது போல.தன்னிலை தெரிந்தவர்களுக்கு தன் நிலை விட்டு போகும் நாளும் தெரியும் என்பர். அது போல ஒரு நாள் வயலுக்கு சென்றவர் அங்கேயே மாரடைப்பில் இறந்தார். அம்மா அடிக்கடி சொல்லுவாள்.‘உங்க தாத்தா கடைசி காலத்துல சாமியாரா வாழ்ந்தவர்டா. இன்னைக்கு நான் போய்டுவன்னு சொல்லிட்டு போனவர். வரலை. சித்தர்டா’ என்று.

எந்த ஒரு பெண்ணுக்கும் தன் தந்தை சித்தனாகத்தான் தெரிவான். எந்த ஒரு மகனுக்கும் தன் தாய் தெய்வமாகத்தான் தெரிவாள். இல்லையெனில் ‘தெய்வங்களெல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே’ என்றும் ‘நேரில் நின்று பேசும் தெய்வம்’ என்றும் கவிபாடி ஆலாபித்திருக்க முடியாது.

மூக்கம்மாள் ஆச்சி. ஒடிசலான தேகம். அந்த வயதில் கிட்டதட்ட அனைவருமே ஓடிசாலகத்தான் தெரிகிறார்கள். காதில் தொங்கும் நீண்ட பாம்படம். அதை பார்க்கும்பொழுதே அவ்வளவு கனமாகத்தெரியும்.

‘வலிக்காதா ஆச்சி?’

‘போல கிறுக்கு பய புள்ள’ என்பாள்.

ரவிக்கை இல்லாது சேலை கட்டியிருப்பாள். அந்த வயதில் அந்த காலத்தில் ரவிக்கை போட்ட பாட்டிகளெல்லாம் வெக்கப்படும். நன்றாக ஞாபகமிருக்கிறது. ஊருக்கு போகும் நாட்களெல்லாம் கொண்டாட்டம் தான். தன் சேலையின் முந்தியில் சில காசுகளை முடிந்து வைத்திருப்பாள். அது தான் அவளுடைய பர்ஸ். ஊருக்கு வந்த பிற்பாடு பஸ்சிலிருந்து இறங்கி ஆச்சி வீட்டிற்கு ஓடி சென்று உள் நுழையும் போது தூணில் சாய்ந்து கால் நீட்டி உட்காந்துகொண்டு ‘வந்துட்டீயால, என்ன பெத்த அப்பாரே’ என்று அவள் அள்ளி முத்தமிட்டது இன்றும் ஒரு மேகமூட்டமாக நினைவில் தேங்கி நிற்கிறது.

வந்தது வராதும் உடனே, ‘ஆச்சி என்ன வச்சிருக்கிற?’ என்பேன். ஐந்து வயது.

முந்தியில் முடிந்திருக்கும் சில்லரை காசுகளை கையில் அள்ளி கொடுப்பாள்.

‘போய் ராமசாமி கடைல மிட்டாய் வாங்கிக்கல. ஆச்சி சொன்னேன்னு சொல்லு, என்பாள்.

அந்த ஆச்சி சொன்னேனு சொல்லுவில் பல அர்த்தம் தொணிந்திருக்கும். காசு குறைவாயிருந்தாலும் நான் கேட்கும் மிட்டாய்களை கொடுப்பதற்கோ அல்லது கேட்காமலையே முட்டாய்களை அள்ளிதருவதற்கோ ராமசாமி பழகியிருந்தான். ஆரஞ்சு வில்லைகள்,தேன்மிட்டாய், பொரிஉருண்டை என எனக்கு பிடித்ததை நான் வாங்கி வருவதை ஆச்சியுடன் பங்கு போட்டு தின்றிருக்கிறேன். ஒருவேளை அந்த கணங்களுக்காக கூட ஆச்சி மாதாமாதம் எனக்காக காத்துக்கொண்டிருந்தாள் என்று இப்பொழுது வரையறுக்க முடிகிறது.

அடுத்த வருடத்திலேயே ஆச்சியின் கால் எழும்பு முறிந்து படுத்த படுக்கையானாள். வீட்டின் முற்றத்தில் அவளது வாழ்க்கை முடக்கப்பட்டது. உணவு, தூக்கம், குளியல், கட்டிலுக்கு அடியில் வைக்கப்படும் வாஷிங் பேன் என சகலமும் அந்த முற்றத்திற்குள்ளாக நடந்தது. சில நாட்கள் கழித்து பார்க்க போன பொழுது சகல விஷயங்களுடன் மாத்திரை மருந்து டெட்டால் என்று ஒரு விதமான நெடி பரவியிருந்தது.
‘இங்க வாடா’ என்றழைத்தாள்.

அந்த நிமிடம் மிகப்பெரிய தவறை செய்தேன்.

‘நான் போமாட்டேன். பயமா இருக்கு’

அம்மா, ‘போடா ஆச்சி தான. உன்னை பாக்கணும்னு நினைக்கிறா. எப்டியிருக்க ஆச்சினு கேளு, என்றாள்.
‘ம்ஹூம். மாட்டேன். பயமா இருக்கு’

இன்று வரை பிடிபடவில்லை. எதற்கு பயந்தேன். ஏன் பேசவில்லை என்பது. ஆனால் அன்று ஒரு முறை கை பிடித்து ‘நான் இருக்கேன் ஆச்சி. ஒண்ணும் பயப்படாத’ என்று ஒரு வார்த்தை பேசியிருந்தால் நிச்சயமாக அவளது உடல் நிலையும் மன நிலையும் சிறிது தேறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கும்.. அடுத்த மாதமே கூட ராமசாமி கடைக்கு போக பணித்திருப்பாள். ஆனால் ஆறு வயதில் அந்த பக்குவத்தை வளர்த்து கொள்ள இயலவில்லை.

விதி வலியது. அடுத்த மாதமே ஒரு மாலை நேரம். பாவயாமி ரகுராமத்தை உருகி உருகி எம்.எஸ். பாடிக்கொண்டிருந்தார். ஜன்னலோரத்தில் உள்ள திண்டில் உட்கார்ந்துகொண்டு ஒரு கிண்ணத்தில் பொரிகடலையுடன் சர்க்கரை சேர்த்து வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். கதவு தட்டப்படும் சப்தம். போஸ்ட்மேன் தந்தி கொடுத்து சென்றிருந்தார். ‘MOTHER EXPIRED. START SOON’ என்ற ஒற்றை வரியில் மாமாவின் தந்தி. அத்தனை வருட ஞாபகங்களும் ஒரு சேர தாக்க அம்மாவில் கண்ணில் பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. அவள் அழுவதை பார்த்து எனக்கு பயம் எழுந்து ஆழ ஆரம்பித்துவிட்டேன். நான் பயந்ததை பார்த்து அம்மா அழுகையை நிறுத்தினாள். அப்பா வந்தவுடன் உடனே ஊருக்கு கிளம்பினோம்.அந்த பயணம் மட்டும் அம்மாவிற்கு நீண்டதாக முடிவில்லாத பயணமாக தோன்றியிருக்க வேண்டும்.

வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்க, புறக்கடை வாயிலாக உள் சென்றேன்.அக்கா கூப்பிட்டு உக்காரவைத்தாள்.

‘காபி குடிக்கிறியாடா?’

‘வேணாம்க்கா’

‘ஆச்சிய கடைசியா ஒருதடவ பாத்துக்கோ.அப்புறம் முடியாது.

பயமாக இருந்தது.உள்ளே எட்டி பார்த்தேன். சுவற்றின் மூலையில் ஒரு மர நாற்காலியில் ஆச்சியை உட்கார வைத்து நாடியை தலையுடன் சேர்த்து வெள்ளைத்துணியில் கட்டியிருந்தார்கள். நெற்றியில் பட்டையாக விபூதி. நடுவில் காசு.அதற்கடுத்த இரண்டு மணிநேரத்தில் ஆச்சி மீளா பயணத்திற்கு கிளம்பியிருந்தாள்.அம்மாவோடு பெரியம்மா சித்தி அக்கா என்று ஜன்னலோரத்தில் கம்பியை பிடித்தபடி அழுதது இன்றும் நினைவிலிருந்து அகலவில்லை.

அந்த நாளை அவ்வளவு எளிதாக அன்று எப்படி கடக்க முடிந்தது என்று இன்றும் வியப்பாக இருக்கிறது, குலுங்கி அழவில்லை. கண்ணில் சொட்டு நீர் இல்லை. ஆச்சி வாங்கி கொடுத்த மூங்கில் நாற்காலி, குட்டியாக அழகாக வீட்டை பல வருடம் அலங்கரித்து கொண்டிருந்தது. அதில் உட்கார வீட்டை சுற்றிலிருக்கும் அத்தனை வாண்டுக்களும் போட்டி போடும். வீட்டை மாற்றும்பொழுது சில சேதாரங்களை சந்தித்தது. பின்பு ஒரு நாள் அது தூக்கியெறியப்பட்டது. அது காணாமல் போனபின்பு ஆச்சி அதிகமாக ஞாபகம் வர ஆரம்பித்தாள்.

சிறு வயதில் அதிகமான மோகத்தையும் வேடிக்கையையும் கொடுத்த பலூன், பொம்மை, கார் எல்லாம் வயதான பின்பு அதே சந்தோஷத்தை தர இயலாதது. அது தர இயலாதது என்பதை விட அதற்குள் சந்தோசமடைய மனது விரும்பவில்லை என்று கொள்ளலாம். பொருள் அன்று எவ்வாறிருந்ததோ இன்றும் அவ்வாறே இருக்கிறது. பார்க்கும் பார்வை சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. என் மட்டும் சிறு வயதில் மிட்டாய் வாங்கித்தரும் சந்தோஷமாக, பயமுறுத்திய நோயாளியாக விவரம் தெரிந்த பின்பு ஆச்சியாக தன் நிலை அடைந்திருக்கிறாள்.

ஆச்சி தாத்தாவோடு வளரும் அனைத்து பேரக்குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகள். கள்ளம் கபடமில்லாமல் கை பிடித்து அழகாக கூட்டி போகத்தெரிந்தவர்கள். அதிலும் பேரக்குழந்தைகளின் கல்யாணம் வரை இருந்து மணமேடையில் நின்று அட்சதை போட்டவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து திருப்தியடைந்தவர்களாக இருப்பர். அட்சதை போட்டு ஆசீர்வாதம் வாங்கிய பேரக்குழந்தைகள் அதனிலும் அதிர்ஷ்டசாலிகள்.

இத்தருணத்தில் அதிகம் இழந்திருக்கும் துரதிர்ஷ்டசாலி நானே. இப்பொழுது கூட,சாலையில் தாத்தா கையை கோர்த்து கொண்டு செல்லும் நடை பயலும் பேத்தியையோ, பாட்டி கையை கோர்த்து கொண்டு நடக்கும் பேரனையோ பார்க்கும்பொழுது அவர்களை அழைத்து உரக்க சொல்ல வேண்டும் போலிருக்கிறது.‘ நீங்கள் பிடித்திருக்கும் கையை இன்னும் இறுக்கமாக பற்றி கொள்ளுங்கள்’ என்று.

வெள்ளி, அக்டோபர் 18, 2013

சென்னை



மற்றைய கம்பெனிகளுக்கு அப்ளை செய்து காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில், மத்தியாகைலாஷ் கோவிலில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பிள்ளையாரிடம் சென்று வேண்டும் போதெல்லாம், ‘சாமி உன்னை நான் இதுக்கப்புறம் பாக்கக்கூடாது. இந்த கோவிலுக்கு வரக்கூடாது. நான் சென்னைலயே இருக்கக்கூடாது’ என்று தான் வேண்டிக்கொண்டேன். அப்பாய்ண்ட்மண்ட் ஆர்டர் அடித்தாரோ இல்லையோ, ஒரே போடாக நாக்பூருக்கும், குஜராத்திற்கும் தூக்கி அடித்தார். சென்னை வந்த புதிதில் ‘சென்னைலாம் ஒரு ஊராடா? எப்டித்தான் குப்பை கொட்டுரானுங்களோ?’ என்ற நண்பனிடம் மல்லுகட்டிய பிளாஷ்பேக் கொசுவார்த்து சுருளாக விரிந்தது. ஹோம்ஸிக்காகி, காலை உணவாக ஆலு சமோசாவை ஈஸ்ட்மன் கலர் சட்னியில் முக்கிச்சாப்பிட பழகி, மதிய உணவில் அரைகிலோ வெல்லம் கலந்த சாம்பாரை (குஜராத் ஸ்டைல் !!! ) ஊற்றி குழப்பியடித்து, இரவில் வரட்டி போன்ற ரொட்டியுடன் மிளகாய் ஊறுகாய் என்று தொட்டு சாப்பிட்டு பசியை போக்க முயற்சித்ததில் செலவே இல்லாமல் உடல் எடை குறைந்து வாடி வதங்கி, ‘இட்லி, சட்னி என்று புலம்பி மயங்கி விழுந்த போதுதான் மத்தியாகைலாஷ் பிள்ளையாரின் குசும்பைப்புரிந்துகொள்ள முடிந்தது. 



எங்கு நோக்கினும் சக்தியடா என்கிற பாணியில், எங்கு நோக்கிலும் எச்கிலடா என்பதுபோல் கையில் வைத்து பதமாக கசக்கிய கைனியை (சுபாரி) வாயில் அதக்கி துப்பிக்கொண்டே இருந்தனர். அசந்தால் மூஞ்சியில் கூட ஒரு ‘புளிச்’ விழலாம். குக்கரில் வைத்த அரிசி மற்றும் தேநீரைத்தவிர மற்ற எல்லா பதார்த்தங்களிலும் ஆலுவை (உருளை) கலந்து சமைத்து கலவரப்படுத்தினர். சுற்றிலும் ‘கியா?, அச்சா, டீக் ஹை, எய்சா ஹை கியா?’ என்று ஒரே ஹிந்தி மயம். சுந்தரத்தமிழ் காணவில்லை. தமிழோ தமிழ் சார்ந்த வஸ்து ஏதேனும் கண்ணில் பட்டால் மின்சார கம்பியை பார்த்து காலை தூக்கும் நாய் போல் உவகை பெருகியது. ஆச்சி மசாலாத்தூள் பாக்கெட்டை சூப்பர் மார்கெட்டில் பார்த்தது, வதோதரா ஸ்டேஷன் வாசலில் தினகரன் நாளிதழின் ஒரு துண்டு பறந்து போனதை பார்த்தது இவற்றில் அடங்கும். தமிழ்நாட்டில் 15 ரூபாய், வெளி மாநிலங்களில் 17 ரூபாய் என்ற போடப்பட்டிருந்த மாத இதழ்களை பார்க்கும்போதெல்லாம், இதெல்லாம் போயி மத்த ஸ்டேட்ல எவன் வாங்குவான்? என்று நினைத்து பின்னொருநாள் வதோதராவில் 17 ரூபாய் குடுத்து மாத இதழை வாங்கியபோது யாரோ தலையில் குட்டியது போன்றும் கண்ணின் ஓரத்தில் நீர் துளிர்த்தும் இருந்தது. ‘சாப்பிட்டியா?’ என்று கேட்கவோ,’ ஏலே மக்கா’ என்று தோளில் கை போட்டு பேசவோ ஆளில்லாது வாடித்தான் போனேன்.

ஹைபர்நேஷன் மோடில் இருந்த மத்திய கைலாஷ் பிள்ளையார் மீண்டும் கண்ணைத்திறக்க, ஒன்ஸ்மோர் சென்னை. MRTS ரயிலில் அதிகம் பயணம் செய்து (ஜனம் கம்மி) பழகியிருந்த எனக்கு தாம்பரம் பீச் வண்டியை பார்த்தாலே இரண்டு மாத கர்ப்பிணி போல் வயிற்றை புரட்டியது. அதுவும் சைதாபேட்டையில் எப்படித்தான் குடியிருக்கிறார்களோ என்று அங்கலாய்த்து அடுத்த ஒரே வருடத்தில் சைதாபேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் குடிபெயர்ந்து, தாம்பரம் பீச் வண்டியில் முதல் முறை ஏறி போனபோது மீண்டும் தலையில் குட்டி லார்ட் கணேஷா பேக்ரவுண்டில் சிரித்தார். காரணி கிராமம் என்றழைக்கப்பட்ட சைதையில், புராதனமான காரணீஸ்வரர் கோயில் போதும், சைதையை கெட்டியாக பிடித்து கொள்வதற்கு. எந்த ஒரு விழாவாகினும் சரி, விமரிசையாக, இல்லை இல்லை, மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். மாதந்தோறும் திருவிழா.

புத்தருக்கு போதி மரம் என்றால், சென்னைக்கு தாம்பரம் பீச் மின் தொடர் வண்டி. எத்தனை எத்தனை மனிதர்கள். எவ்வளவு பயணங்கள். விதவிதமான உணர்ச்சிகளை வெளிபடுத்தும் முகங்கள். பலதரப்பட்ட வர்க்கங்கள். ரயில் பயண நட்புகள். இன்னும் பல. ஒவ்வொரு நாளும் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு விஷயங்களை பொதிந்து வைத்துக்கொண்டு பறக்கிறது சபர்பன் மின் தொடர் வண்டி.
கைகளால் தடவிக்கொண்டே ரயில் பெட்டியில் சரியாக ஏறி, பாப்கார்ன், முறுக்கு, செல்போன், ரேஷன், பாஸ்போர்ட் கவர்கள், எர் பட்ஸ், விளையாட்டு பொம்மைகள், விசில், ஊக்கு, ஊசி, பாசி என்று விற்று பிழைக்கும் கண் தெரியாதவர்கள் போதும், நம்மிடம் நம்பிக்கை விதையை ஆழமாக ஊன்ற. கால்கள் முற்றிலும் செயலிழந்த் இளைஞனை நெல்லூர் வண்டியில் தினமும் பார்த்திருக்கிறேன். ஊனம் என்று கை ஏந்தாமல் ஒரு அழுக்கு துணியை வைத்துக்கொண்டு பெட்டி பெட்டியாக கைகளால் துடைத்து சுத்தம் செய்து முடிந்தால் கொடு என்று அடுத்த பெட்டிக்கு நகருகின்றான். கண் தெரியாத பல பேரை இன்றும் ராகதேவன் இளையாராஜா கௌரவமாக வாழ வைத்துக்கொண்டிருக்கிறார். எண்பதுகளின் மெலடி பாடல்களை இவர்கள் பாடும்போது தங்கள் பால்யத்தில் கரைந்து தொலைந்து விடும் 40+ ஆசாமிகள் தட்டில் அதிக காசுகளை போடுவதை கவனித்திருக்கிறேன்.

ஏறியது முதல் இறங்கும் வரை கொஞ்சம் கூட டிஸ்டர்ப் ஆகாது தூங்கியே பயணம் செய்யும் ஆசாமிகள், காலை ஐந்து மணிக்கே எழுந்து சமைத்து குழந்தைகளை வழியனுப்பி டிபன் பாக்ஸில் ரொப்பி எடுத்துக்கொண்டு ஈரமான கூந்தலை கூட துவட்ட நேரமில்லாது மூச்சிறைக்க ஓடி வரும் நடுவயது இல்லத்தரசிகள், ஐம்பது மணி நிமிட பயணத்தை கீரை ஆய்ந்தும், காய்கறி நறுக்கியும், பூ கட்டியும் உபயோகமாக செலவழிக்கும் பெண்கள், ஸ்ரீ தேவி மகாத்மியம், ரிக் வேதம், கந்தரனுபூதி என்று படித்து பாராயணம் செய்து வரும் ஐயராத்து மாமாக்கள், தூக்கவே முடியாத தலையணை போன்ற பேராசைக்காலஜி, ஹியூமன் அநாட்டமி புத்தகங்களை படித்து வரும் மருத்துவ மாணவர்கள், ரயிலில் தொடங்கி தண்டவாளத்தில் காதலை பலி கொடுக்கும் இளந்தாரிகள் எனப்பலபல ரகங்கள்.

எத்தனை கொடூரமான வெயிலையும் கூட சென்னை சமாளித்துவிடுகிறது. ஆனால் சிறிது அதிகமாக மழை பெய்தால் மட்டும் மூக்கொழுகுவது போன்று ஜல்ப் பிடித்துவிடுகிறது. அதனால் தான் என்னவோ சென்னை இரண்டே இரண்டு க்ளைமேட்டை மட்டும் தனதாக்கி கொள்கிறது. ஒன்று சம்மர். இன்னொன்று ஹாட் சம்மர். பத்து நாள் மட்டுமே மழை பெய்கிறது (இந்த வருட கணக்கு வேற) அந்த பத்து நாளிலும் கூட சாலையெல்லாம் குளம்போல் தேங்கி போட் விட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது.
என்னோடு அலுவலகத்துக்கு ரயிலில் பயணம் செய்யும் ஒருவர், பார்க் ஸ்டேஷன் வந்தவுடனேயே, ‘ஹாரிபிள்’,’பேத்தடிக்’,’சாகடிக்கிறாணுங்க’ என்று புலம்பித்தள்ளிவிடுவார். வருடத்தின் 365 நாட்களும், நாள் தவறாது புலம்புவார். நாணையத்தின் இரு பக்கங்களைப்போல சென்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று பிதுங்கிவழியும் கூட்டம், மற்றொன்று வேர்வை நாற்றம் (அதிக ஹியுமிடிடி ஒரு காரணம்), இந்த இரண்டையும் சகித்துக்கொண்டோ, அலட்சியப்படுத்தியோ நம் பயணத்தை தொடர்ந்தோமானால் சென்னை ஒரு சொர்க்கம். இல்லையெனில் ஒவ்வொரு நாளும் நகரம் தான்.

நான் வேலைப்பார்த்த கட்டுமானத்தொழில் கற்றுக்கொடுத்தவை பல. வெறும் நூற்றி நாற்பது ரூபாய்க்கு பீஹார், ஒரிசா, பெங்கால் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து கொத்தடிமைகள் போல் வேலை செய்து, ஆறு மாதம் ஒரு வருடம் என்று குடும்பத்தை கூட பாராது இங்கேயே தங்கி தாங்களே சமைத்து, உண்டு, வெயில் மழை என்று பாராது புழுதியிலும் சகதியிலும் வேலை செய்து, சொச்ச சம்பளத்தில் இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்புவதை பார்க்கும்பொழுது, நம் நிலையை நினைத்து நித்தம் நித்தம் இறைவனிடம் நன்றி கூறத்தோன்றுகிறது. அதுமட்டும் இல்லாது வேலை செய்யும் நாட்களில் ஏதேனும் நோய் தாக்கினாலோ, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிர் இழந்தாலோ, உயரத்தில் இருந்து கீழே விழுந்து உடல் சிதறி இறந்துபோனாலோ, அடுத்த நாளே உடற்கூறு பரிசோதனை செய்து உடலை துண்டு துண்டாக்கி ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வெல்டிங் அடிக்க அவசரபடுத்துவார்கள். சிதை எரிந்த தணல் அடங்குவதற்கு முன்னரே வேலை ஆரம்பித்தாக வேண்டும். துக்கம் அனுஷ்டித்து ஆசுவாசப்படுத்துவதற்கு கூட நேரமில்லாது ஓட வேண்டும். உயிருக்கு சற்றேனும் மதிப்பில்லை. ஒரு மணி நேர வெயிலுக்கு வேர்வையும் களைப்பும் அடையும் பொழுது வெயில் மழை என்று பாராமல் புழுதி மணலில் அழுக்குடன் போராடும் கூலித்தொழிலாளர்களை நேர்கொள்ளும்போது தலை குனிந்து வெக்கம் கொள்ளச்செய்கின்றன.

நூறு பேர் கொண்ட குழுவில் இரண்டு மூன்று பேராவது அத்திபூத்தாற்போல் நல்லவர்கள் இருக்கிறார்கள். அருகில் இருந்தே குழிபறித்து புதைத்துவிட்டு மீண்டும் தோண்டி பார்த்து உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் மீதமிருக்கும் தொன்னூற்றியெழு பேருடன் இணைந்து இயங்கி வேலை பார்க்கும் சர்வைவல் டெக்னிக்கை கற்றுக்கொடுத்திருக்கிறது. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்று நினைக்கும் குதர்க்கமானவர்களை பார்க்கும்பொழுதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ரெட்டை நாக்கு கொண்டவர்களை பார்க்கும்பொழுதும் அருவருப்பை காட்டாது புன்சிரிப்புடன் அவ்விடத்தை கடந்துபோகும் முதிர்ச்சியை கற்றுத்தந்துள்ளது.

உண்மையான அன்பை காட்டும் அன்னையைத்தவிர மற்ற
எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க முடிகின்ற சென்னையில் புத்தங்களுக்கும் பஞ்சமில்லை. எத்தனை புத்தகங்கள். எத்தனை எழுத்தாளர்கள். கடந்த ஆறு வருடத்தில் குறைந்தது ஐநூறு புத்தகங்களாவது கடந்திருக்கும், வலியை மறக்கவைக்கும் லாகிரி வஸ்துவாக, சந்தோஷத்தை ரெட்டிப்பு ஆக்குபவையாக, துக்கத்தை பகிர்ந்து கொண்டு பாதியாய் குறைப்பவையாக, உபதேசிக்கும் தந்தையாக, கற்றுக்கொடுக்கும் ஆசானாக, மடி மீது தலை வைத்து தூங்க முயற்சி செய்யும் காதலியாக, ஒரு மாலை நேர மழை நாளில் தேநீர் அருந்திக்கொண்டே அளவளாவி மனதை லேசாக்கும் உற்ற தோழனாக எத்தனை எத்தனயோ பாத்திரங்களை சுமந்து கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. புத்தகச்சந்தை, புத்தகத்திருவிழா என்று தேடித்தேடி படிப்பதற்கு ஊக்கப்படுத்தியிருக்கிறது.

வாத்தியார் சுஜாதா சொல்வதைப்போல் பெருநகரங்களில் ஒருவித அனானிமிட்டி கிடைக்கிறது. அது வெட்கத்தை விட்டொழித்து எல்லாவித சந்துஷ்டிகளையும் முயற்சி செய்து பார்ப்பதற்கோ, ஈடுபடுவதற்கோ தூண்டுகோலாக அமைகிறது. கடந்த ஆறு வருடங்களில் அதீத ஜனத்தொகை கொண்ட இந்த பெருநகரத்தில் முகவரி தெரியாதவனாய் தொலைந்து போவதில் உள்ள சுகம் அலாதியாகவும் அதிகமாகவும் ஆகிக்கொண்டே செல்கிறது. சென்னையின் மீதுள்ள காதலை மென்மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது.

வெள்ளி, அக்டோபர் 11, 2013

Children of Heaven

ஈரானிய மற்றும் கொரிய மொழிப்படங்களுக்கு எப்பொழுதுமே உலக சினிமா வரிசையில் தனி அங்கீகாரம் உண்டு. அந்த வரிசையில் மஜீத் இயக்கிய ‘Children of Heaven’ என்ற ஒரு படம் போதும், ஈரானிய படங்களாகத்தேடித்தேடி பார்க்க வைக்க. எடுத்தாளப்பட்டிருக்கும் கரு மிக எளிமையானது. தவறுதலாக தன் தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்துவிடுகிறான். அண்ணன் தங்கை இருவரும் இத்தவறை ஏழையான தங்கள் அப்பாவிடமிருந்து சாதுரியமாக மறைத்து எப்படி அன்பை... பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதை படு சுவாரசியாமாக சொல்கிறார் மஜீத். 

 


முதல் காட்சியிலேயே கதைக்கு வந்துவிடுகிறார் இயக்குனர். ஷூவை தைக்கப்போகும் இடத்தில், அலி (அண்ணன்) அதை தொலைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் அலியிடம் சாரா (தங்கை) தன் ஷூவை கேட்கிறாள். தொலைந்துவிட்டது என்பதை நம்ப மறுக்கிறாள். தந்தையிடம் சொல்லாதே, இந்த மாதம் அப்பாவிடம் பணம் போதவில்லை என்று அலி கெஞ்சுகிறான். அலி தன்னுடைய ஷூவை வைத்து இரண்டு பேரும் சமாளித்துக்கொள்ளலாம் என்று தைரியம் அளிக்கிறான். இந்த உரையாடல் முழுவதுமே தங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கு தெரியாமல் நோட்டில் மாற்றி மாற்றி எழுதி பேசிக்கொள்கின்றனர்.

காலையில் பள்ளிக்கூடம் செல்லும் சாரா, அலியின் அழுக்கான ஷூவைப்போட தயங்குகிறாள். வேறு வழியில்லாமல் அதை போட்டு பள்ளிக்கு செல்கிறாள். பள்ளி முடிந்ததும் வேகுவேகமாக ஓடி வந்து ஷூவை காத்துக்கொண்டிருக்கும் அலியிடம் கொடுக்கிறாள். ‘ஏன் தாமதம்?’ என்று அண்ணன் கேட்க, ‘முட்டாள், நான் மூச்சிறைக்க வேகமாக ஓடி வந்தேன்’ என்கிறாள் சாரா. தாமதமாக பள்ளிக்கு செல்லும் அலி, தலைமையாசிரியரால் கண்டிக்கப்படுகிறான்.

இதற்கிடையில் தன் பள்ளியில் பிரேயர் அஸ்ஸெம்ப்ளியின் போது ஒரு மாணவி தன் தொலைந்துபோன ஷூவை அணிந்திருப்பதை சாரா பார்த்துவிடுகிறாள். பள்ளி முடிந்ததும் அவள் பின்னே சென்று அவள் வீட்டை கண்டுபிடிக்கிறாள். அடுத்த நாள் தன் அண்ணன் அலியுடன் அந்த வீட்டிற்கு வருகிறாள். அந்த பெண்ணின் தந்தை பார்வையற்றவர் என்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிடுகின்றனர். ஒன்றும் பேசாமல் குழந்தைகள் திரும்பிவிடுகின்றனர்.

ஒரு மராத்தான் ஒட்டப்பந்தைய போட்டியில் மூன்றாவது பரிசாக ஷூ அறிவிக்கப்படுகிறது. தங்கைக்கு எப்பாடு பட்டெனும் அந்த ஷூவை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று அலி அந்தப்போட்டடியில் கலந்து கொள்கிறான். பாதி தூரம் கடந்து சோர்ந்து விடும் நேரத்தில், ஒரே ஷூவை வைத்து இரண்டு பேரும் சமாளிக்கும் போது தங்கை வேகுவேகமாக ஓடி வந்தது வாய்ஸ் ஓவரில் ஞாபகம் வருகிறது. பிறகென்ன? உத்வேகத்துடன் ஓடி மராத்தானில் முதல் பரிசை வென்று விடுகின்றான். மூன்றாவதாக வந்து ஷூவை வெல்லாதது அவனுக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. சந்தையில் இருந்து வீட்டிற்கு பொருட்களை வாங்கி வரும் அவன் அப்பா, அலி சாரா இருவருக்குமே ஒரு ஷூவை வாங்கி வருகிறார். இது தெரியாது வீட்டிற்கு வரும் அலி, முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டே சாராவிடம் வருகிறான். சாரா ஏமாற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி விடுகிறாள். மராத்தானில் ஓடி புண்ணான கால்களுடன் குளத்தில் காலை வைக்கிறான். மீன்கள் கடிக்க ஆரம்பிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டது அலி, சாராவின் வீடு. மூன்றாவதாக ஒரு குழந்தையை பெற்றடுத்து பலவீனமாக இருக்கும் தன் அம்மாவிற்கு சாரா அனைத்து உதவிகளையும் செய்கிறாள்.

படம் முழுவதும் குழந்தைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். சந்து, பொந்து, தெரு, சாலை, வீட்டிற்குள் என்று எல்லா இடத்திலும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். எங்கேனும் வாகனத்தில் முட்டி விழுந்து கதையை டிராஜேடியாக மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நல்லவேளை அவ்வாறு ஒன்றும் ஏற்படவில்லை.

குடும்பத்தில் வறுமை என்று காமித்தாலும் பார்ப்பவர்களை அழுது மூக்கு சிந்தவைக்கவில்லை. மாறாக நெகிழ வைக்கின்றனர்.

குழந்தைகள் ஒரு முறை போட்ட உடையை மீண்டும் உடுத்துவது ரசிக்கத்தக்க யதார்த்தமாகத்தெரிகிறது. பல காட்சிகள் கவிதைத்துவம்.

இரு குழந்தைகளின் பரிபாஷானைகள் ஏதோ இரண்டு கடவுள் பேசிக்கொள்வது போல் அன்பை கொட்டி கொட்டி காமிக்கிறது.

படத்தில் அந்த சிறுவயதிலேயே அண்ணன் தன் தங்கையிடம் காமிக்கும் பாசம் நெகிழ்ச்சி, குழந்தைகளின் அப்பாவித்தனம், பரிசுத்தமான அன்பு என அனைத்துமே நம்மை பால்யத்துக்கு அழைத்து செல்கின்றன அல்லது ஏங்க வைக்கின்றன. இதற்காவே மூன்று நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து பார்த்து கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

திங்கள், அக்டோபர் 07, 2013

Peter Weir

மார்கன் ஃப்ரீமேனை அடுத்து நான் மிகவும் விரும்பும் ஒரு நடிகர் ராபின் வில்லியம்ஸ். ‘Good WillHunting’ என்ற ஒரு படம், ஒரு பருக்கைச்சான்று. பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த ‘Bicentennial Man’ ராபின் வில்லியம்ஸின் முதல் தரமான நடிப்பை இன்...றும் பறைசாற்றும் படம். கிரிஸ்டபர் நோலனின் ‘Insomnia’ வில் அல்பேசினோவின் நடிப்பை Underplay செய்து ஸ்கோர் செய்திருப்பார். பத்தி அவரைப்பற்றியது அல்ல.அவர் நடித்து பலராலும் பாராட்டப்பட்டு ‘Most Critically Acclaimed’ என்ற உன்னதமாக போற்றப்படும் ஒரு படம் ‘Dead Poets Society’. இயக்குனர் ‘’Peter Weir’’. மிகவும் பாரம்பரியமிக்க ஒரு பள்ளியில் offbeat ஆங்கில ஆசிரியராக தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு ‘Poetry’யை கற்றுத்தரும் ஒரு கதாபாத்திரம். பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இதுபோல் ஒரு ஆசிரியர் கிடைக்கமாட்டாரா என்றும் இதே போல் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு வலிமைமிக்க பாத்திரப்படைப்பு. 

 


இயக்குனரின் மற்றுமொரு முக்கிய படம் ‘Witness’. 1985 இல் வெளிவந்திருக்கும் இந்த படத்தில் ஹாரிசன் ஃபோர்ட் நடித்திருப்பார். ஏர்போர்ட் கழிவறையில் நடக்கும் ஒரு கொலையை பார்த்த ஒரே சாட்சி ஒரு சிறுவன். அவனையும் இளம் விதவையான அவன் அம்மாவையும் தாக்க கொலைகார கும்பல் தேடுகிறது. கும்பலிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பை ஃபோர்ட் தன்னையறியமாலையே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். முதல் இருபது நிமிடங்கள் திரில்லராக பயணிக்கும் படம் அதன் பின்பு ஃபோர்டுக்கும் சிறுவனின் அம்மாவிற்கும் இடையில் ஏற்பேடும் உறவை மென்மையாக எடுத்து சொல்கிறது. அமிஷ் (Amish) மக்களின் வாழ்க்கை முறை, வீடு, சிறு கிராமம், ஒரு குழுவாக இயங்கும் பண்பு, அவர்களின் தொழில் என்று பயணிக்கும் படத்தினூடே நாமும் அமிஷ் மக்களில் ஒருவராக உருமாறியது போன்ற ஓர் பிரமிப்பு. சிறுவனின் நடிப்பும் அழகும் அபாரம். கதை எங்கோ கேள்விபட்டது போல் இருக்கிறதா? வழக்கம் போல் உலகநாயகனின் 1988 இல் பட்டி டிங்கரிங் செய்து வெளிவந்த சூரசம்ஹாரம்.

2010 இல் இவர் இயக்கிய ‘The Way Back’ இன்னுமொரு மைல்கல். இரண்டாம் உலகப்போரின் போது கைதிகளாக அடைபட்டிருக்கும் சிலர் சைபீரியா முகாமிலிருந்து தப்பித்து பனிப்ரதேசம், ஏரி, காடு, பாலைவனம், மலை என்று 4000 மைல் கால்நடையாக தப்பித்து இந்தியா வந்து சேருகின்றனர். சைபீரியாவில் அவர்களை நடுக்கும் குளிர் நம்மைத்தாக்குகிறது. பாலைவனத்தில் சுடுமணலில் நடந்து ஒரு பாம்பை கொன்று உண்ணும்பொழுது குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் தருணத்தில் நமக்கும் நா வரண்டு விடுகிறது. நடக்க முடியாது கால் வீங்கி ஒரு சிலர் இறந்துவிடுகின்றனர். (கடைசியாக இதுபோன்று பாலைவனத்தின் வெயிலை பார்க்கும் நமக்கும் வெப்பத்தை உணரச்செய்தது ‘Lawrence of Arabia’வில் தான்). எஸ்.ரா. அடிக்கடி சொல்லும் இலக்கற்ற பயணம் போல் ஒரு முடிவற்ற பயணமாக தொடங்கி இறுதியில் இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் முடிவதோடு படம் நிறைவடைகிறது. மூன்றுமே ‘Feel Good Movie’ யை பார்த்த திருப்தியை தருகின்றன.

வெள்ளி, செப்டம்பர் 13, 2013

BE A WITNESS

பெக்குலியரான இரண்டு கேரக்டர்களை என் மகளிடம் கவனித்திருக்கிறேன். ஒன்று எதை கைய்யில் எடுத்தாலும் கொடுத்தாலும் முகர்ந்து பார்ப்பது. அல்வா, பிஸ்கட், பூரி, கேக், என எதுவானாலும் சரி. ஒரு தடவை மூக்குக்கு போகும். அங்கு ஓகே என்றால் அதன் பிறகு வாய்க்...கு போகும். தாத்தாவின் (அப்பா) பழக்கம். இரண்டாவது எதை எடுத்தாலும் தூக்கி எறிவது. பொதுவான ஒன்றுதான் என்றாலும் ஒரு வயதிலேயே ஆரம்பித்துவிட்டாள். அப்பாவின் (நான்) பழக்கம். தூக்கி எறியும் பழக்கத்திற்காகவே வீட்டிலிருந்து அலுவலகம் நண்பர்கள் வரை பலரிடம் திட்டு வாங்கியிருந்தாலும் அந்த பழக்கம் போவதாய் இல்லை. இப்போது மகளுக்கு தொற்றியிருக்கிறது. இன்னும் பல இருக்கலாம். இதெல்லாம் அவளுடைய ஜீன், DNA போன்ற சமாச்சாரங்களில் பதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், சேமிப்பது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆன்மிகத்தில் நாட்டம், மனைவி அம்மாவை மதிப்பது அல்லது மிதிப்பது, முன்கோபம், சார்ந்திருத்தல், முடிவெடுக்க அதிக குழப்பம், பயம், படிப்பு. விளையாட்டு, வாசித்தல், அதிகாரம், வளைந்து கொடுத்தல், பணிவு, பொறாமை, சுயக்கட்டுப்பாடு, சந்தேகம், பரோபகாரம் எனப்பல குணங்களை குழந்தைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொடுக்கும் கர்த்தாவாய் இருப்பது பெற்றோர்களே.  

 


 அலுவலக நண்பருடன் இது சம்பந்தமான ஒரு விசாரணையுடன் கூடிய ஆரோக்கியமான விவாதம் அன்று ஓடிக்கொண்டிருந்தது. சான்றாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க சார். இந்த காலத்து பசங்க எந்த அளவுக்கு கவனிக்குறாங்கங்கறது ஆச்சர்யமா இருக்கு?’

அவர் வயது நாற்பத்திரெண்டு. இரண்டு மகன்கள். பத்து மற்றும் ஏழு.

‘என்ன நடந்தது சார்?’ என்று விசாரித்தேன்.

‘எங்க அப்பா அப்பப்போ கோப்பபடுவார். இங்க இருக்குற கோவத்த அங்க கொட்டுவார். அங்க காமிக்க வேண்டிய கோவத்த இங்க கொட்டுவார். ரிசண்டா ஒரு நாள் இதேபோல என்ன நார் நாரா கிழிக்க ஆரம்பிச்சிட்டார். என் மேல தப்பே கிடையாது. என்ன நினைச்சாரோ தெரியல என் மேல அன்னைக்கி அவ்ளோ கோவம். ஆனா, ஒரு மகனா, நான் என்னோட பேரண்ட்ஸ்ஸ எதிர்த்து பேசினதே இல்ல. இந்த ஹாபிட் என்னோட ஸ்கூல் brought up. நினைவு தெரிஞ்ச நாள்ளேந்து ஒரு வார்த்த எதிர்த்ததே கிடையாது. அவர் கோவப்பட்டு முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்தேன், அதுக்கப்புறம் அவர் போய்ட்டார். என் வைஃப், பசங்கல்லாம் என்னோட ஹால்லத்தான் இருந்தாங்க.’

‘உங்க மேல தப்பு இல்லேன்னா நீங்க பொறுமையா கூட எடுத்து சொல்லிருக்கலாமே.?

‘சார்ர்ர். ஒண்ணு புரிஞ்சிக்கங்க. எல்லா கேள்வியும் பதிலே எதிபார்த்து கேக்கப்படுறது கிடையாது. அதே போலத்தான் கோவமும். அத விடுங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு என்னோட சின்ன பைய்யன் என்கிட்ட வந்து சொன்னதுதான் ஆச்சர்யம்’ அவன் சொல்றான்.

‘உன்ன மாதிரி நானும் உன்னைய நல்லா வச்சுப்பேன் டாடி’

‘என்னடா சொல்ற?’

‘நீ ரொம்ப கிரேட் டாடி. நீ தப்பே பண்ணல. தாத்தா உன் மேல கோவப்படுறது நியாயமே இல்ல. இருந்தாலும் நீ எவ்ளோ அமைதியா இருந்தே. நானும் அதே மாதிரி உன்ன பாத்துப்பேன் டாடின்றான்’ என்று சிலாகித்து சொன்னார்.

ஒரு ஏழு வயது பைய்யனுக்கு அப்பா மகன் என்ற உறவைத்தாண்டி தாத்தா அப்பா என்ற உறவு வரை பகுத்து பார்த்து அந்த உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது என்பது குழந்தைகளின் மெட்சுரிட்டியையும் பெற்றோர்களின் குணநலன்களையும், சீரான வளர்ப்பையுமே காட்டுகிறது. ‘உங்கள உரிச்சு வச்சிருக்குறான் சார் உங்க பைய்யன்.’ என்று அவருக்கு ஓர் சபாஷ் சொன்னேன்.

கவலைப்படும்போதோ அல்லது அதீத சந்தோசத்தின் போதோ, ‘BE A WITNESS’ என்ற புத்தரின் பொன்மொழி ஞாபகத்திற்கு வரும். அதனுடைய சாராம்சம் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாமல் சாட்சியாய் மட்டும் இரு. சுக துக்கங்களுக்கு நீ காரணம் என்று நினையாதே. நடக்கும் அனைத்து செயல்களிடமிருந்தும் தூர விலகி ஒரு பார்வையாளனாய் மட்டும் இரு என்பதே. அதுபோல் ஒரு WITNESS ஆக இருக்க முயற்சி செய்யும் அதே தருணத்தில் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு WITNESS, உங்கள் அருகிலேயே உங்களை ஒட்டியே உங்களுடனே வளருகிறது என்பதை நினைவில் இருத்தி கொள்ளுங்கள்.

உங்களின் புற அழகை காண வேண்டுமானால் கண்ணாடியைப்பாருங்கள் அக அழகு தெரிய வேண்டுமானால் உங்கள் குழந்தையை உற்று கவனியுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள். .

வியாழன், செப்டம்பர் 12, 2013

மேக் மை ட்ரிப்.காம்

‘மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே’ என்பது போன்ற ஒரு பயணம் சமீபத்தில் வாய்த்தது. ரம்ஜானை ஒட்டிய விடுமுறையின் போது, ஊருக்கு செல்வதற்காக டிக்கட் புக் செய்ய ரயில்வேயின் தட்கல் சேவாவை நம்பி கொண்டிருந்தேன். காலை ஒன்பது மணியிலிருந்தே மூன்று நான்...கு பேஜ்களில் லாகின் செய்து கிளிக்கி கொண்டிருந்தேன். பத்து பத்துக்கு வெயிட்டிங் லிஸ்ட் விழுந்தது. வேறு வழியில்லாது ரெட் பஸ்ஸில் தஞ்சமடைந்தால் எல்லா டிக்கட்டும் காலி. டிக்கட் கூஸ் அதிலும் ஸ்வாஹா. கூகலிட்டு ஒருவழியாக மேக் மை ட்ரிப்.காம் பஸ் சர்வீஸ்ஸில் ஒரு சீட் கிடைத்தது. ‘ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ்’. பேரை கேள்விபட்டதே இல்லை. அப்போவே யோசிச்சிருக்கணும். சரி கிடைத்ததை ஏன் விடுவானேனென்று அதை புக் செய்தேன். வண்டி CMBT யிலிருந்து கிளம்புகிறது. அங்கு செல்ல நேரமில்லாத காரணத்தினால் Guindy ஆசர் கானாவில் போர்டிங். அடுத்த நாள் சரியாக டிக்கட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது போல ஆறு முப்பதிற்கு ஆசர் கானா சென்றடைதேன். ஒரு முறை உறுதிபடுத்திக்கொள்ள அந்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் நம்பருக்கு கால் செய்தேன். 

 


‘வண்டி அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடும் சார்.’

‘சீட் நம்பர் ஒண்ணு என்னோடது. நான் கிண்டில போர்டிங் சார்’

‘என்ன நம்பர் சொன்னீங்க?’

‘ஒண்ணு. சீட் நம்பர் ஒண்ணு.’

‘சீட் நம்பர் ஒண்ணு ரெண்டுல கவிதா, ரமணினு ரெண்டு பேரு இருக்காங்க’

இன்னும் கொஞ்ச நேரம் கிளறியதில் கிருஷ்ணா டிராவேல்ஸ், ரெட் பஸ்ஸில் மட்டுமே புக் செய்யமுடியும் என்றும், மேக் மை டிரிப்பில் டீலிங் கிடையாது என்றும் விளக்கம் வந்தது. ஒரு அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அவர்கள் விடாப்பிடியாக நிற்க

‘சார் நீங்க ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் பேர மாத்திடுங்க’

என்னணு’?

‘சுந்தர டிராவேல்ஸ்னு’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

நானாவது தனியாக நின்றிருந்தேன். எனக்கருகில் இன்னொரு ஃபேமிலி கைக்குழந்தையோடு(பைய்யன் ங்கா ங்கா என்று கத்தி கொண்டிருந்தான்) இரண்டு முதியவர்களுடன் நின்றுகொண்டிருந்தனர். மேக் மை டிரிப்பில் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு புக் பண்ணினோம் சார். பாவமாக இருந்தது. அங்கு ஏதும் வண்டி நிற்காததால் தாம்பரம் சென்றேன். அங்கு பத்து பதினொரு மணிக்கு மேல் தான் வண்டி வரும் என்பதால் ஒரு ஓபன் டிக்கட் எடுத்து ஒன்பது ஐம்பதுக்கு வந்த பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் தொற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தது பெரும் தவறு என்று அப்போது விளங்கவில்லை. அன்ரிசர்வ்ட் முழுவதும் கூட்டம் அம்மிக்கொண்டிருந்தது. படியில் அரிசி போடக்கூட இடமில்லை.

அதன் அருகிலிருந்த S12 பெட்டியில் ஏறினேன். என்னோடு ஒரு பத்து பேர் வேறு ஏறிக்கொண்டனர். எதிர்பார்த்தது போல் டி‌டி‌ஆர் வந்து கத்த ஆரம்பித்தார். கெஞ்சி கூத்தாடி ஒவ்வொரு பெட்டியாக மாறவும், ‘விடாது கருப்பு’ போல் துரத்திக்கொண்டே இருந்தார். ஒரு நூறு ரூபாய் தாளை நீட்டினே...... என்னாது என்று முறைக்கவும், சார் பைன் கட்டிடுறேன். இப்படி ஓரமா நின்னுட்டே வந்துட்றேன்’ என்று எவ்ளோ சொல்லியும் கேளாது கழுத்து பிடித்து தள்ளாத குறையாக விழுப்புரத்தில் எல்லோரையும் இறக்கி விட்டார்.

அன்ரிசர்வ்ட் படியில் ஏறுவதற்கு மட்டும் இடமிருந்தது. படியில் இருந்து சௌச்சால்யா வரை மட்டுமே ஒரு முப்பது பேர் நின்று கொண்டிருந்தனர். டாய்லெட்டில் எட்டி பார்த்தால் அதற்குள் ஒரு ஐந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். தமிழகம் மெதுவாக பீஹார் ஆகி கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் இடுப்பில் இருந்து ஒரு பன்னீர் பாட்டீல் போன்ற வஸ்துவை கைய்யில் எடுத்தான். தலையில் தட்டி பிளாஸ்டிக் டம்ப்ளரில் ஊற்றினான். பன்னீர் இல்லை. தண்ணீர் பாக்கெட். சட்டை பைய்யில் மாங்காய் ஊறுகாய். ஐந்தே நிமிடத்தில் நிற்கக்கூட இடமில்லாத இடத்தில் காலுக்கடியில் படுத்துக்கொண்டான். இடையில் வேறு ஒரு பத்து பெண்கள் வரிசையாக ‘எப்பா எந்த்ரிப்பா பாத்ரூம் போனும்’ என்று உள்ளிருந்தவர்களை காலி செய்து, சென்று வந்து கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து மீண்டும் அதே ஐந்து பேர் உள்ளே உட்கார்ந்துகொண்டு பயணம். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணி தாண்டியும் நின்று கொண்டே இருந்ததால் காலில் வெரிகோஸ் வெயின்ஸ் வந்தது போல் ஒரே வலி. கால் மாற்றி மாற்றி அபிநயம் பிடித்தாலும் வலி குறைந்தபாடில்லை. அரியலூர் தாண்டியபோது அதே காரிடாரில் குத்த வைக்க இடம் கிடைக்கவும், அந்த சௌச்சால்யா அருகில் மூக்கை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த போது ஒரு SMS மேக் மை டிரிப்பிலிருந்து.

‘Dear Sir, We would like to hear from you? How was the travel? என்று.

மரணப்படுக்கையிலும் மறவாது என் கண்மணியே என்று ரிப்ளை அனுப்பினேன். .

புதன், செப்டம்பர் 04, 2013

ஆந்த்ரா மெஸ்

சம்பவம் நடந்த இடம் – சுப்ரியா ஆந்த்ரா மெஸ், TCS எதிரில், வேளச்சேரி.

சம்பவம் நடந்த நேரம் – 2008 இல் வெயில் கொளுத்தும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் ஒன்று முப்பது.
 


நான், பாண்டி மற்றும் ஒரு நண்பன்(இப்போதைக்கு ஒரு பேச்சுக்கு சிங்கம் என்று பேர்... வைத்துக்கொள்ளலாம்) தே.மு.தி.க. கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் M.S.மேன்ஷனில் ஒரே ரூமில் அடைக்கலாமாயிருந்தோம். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவரை சனி ஞாயிறு என்று இரண்டு நாள் விடுமுறை கிடைத்தது ஒரு வகையில் மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் அந்த இரண்டு நாட்களும் மதிய வேலை உணவுக்காக அல்லோலப்படும் சிரமம் ஒரு தனிக்கிளைக்கதை. காலை மற்றும் இரவு பக்கத்தில் இருக்கும் முருகலெக்ஷ்மி அல்லது சக்தி மெஸ் அபயமளித்தது. ‘பரோட்டா சூடா இருக்கா?’ என்ற முருகலெக்ஷ்மி மெஸ்ஸில் கேட்ட கேள்வியை பாண்டி மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மதியவேளை புல் மீல்ஸ் சாப்பிடுவதுதான் ஒரு பெரிய அறப்போராட்டம்(!!!). நாங்கள் தங்கியிருந்த தரமணியில் (சரியாக சொல்லவேண்டும் என்றால் கானகம்) நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ ஒரு 360 டிகிரி என்று எந்த பக்கம் திரும்பிபார்த்தாலும் பேருந்து நிலையத்திற்கோ இந்திரா நகர் MRTS ஸ்டேஷன் போவதற்கோ குறைந்தது இரண்டு கிலோமீட்டர் நடந்தே ஆகவேண்டும். வண்டி கிடையாது. அதுவும் சாயங்கால வேலையென்றால் பராக்கு பார்த்துக்கொண்டே வேர்க்கடலை சாப்பிட்டுவிட்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடக்கும் ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டே நடந்து விடலாம். எனினும் சுட்டெரிக்கும் மதிய வேளையில் சற்றே சிரமம் தான். இந்திரா நகர் MRTS ஸ்டேஷனுக்கான ஓவர் பிரிட்ஜில் ஒரு முறை ‘MGR இல்லைங்க நம்பியாரு இல்லைங்க நாங்களெல்லாம் நடுவில’ என்று ஒரு பாடலை ஜீவா மற்றும் குழுவினர் கம்பியை பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். ‘யுத்தம் செய்’ படத்தில் சேரன் ஒரு பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சண்டைக்காட்சி எடுக்கப்பட்டதும் இதே பிரிட்ஜ் தான் என்பது இதன் தனிச்சிறப்பு. நிற்க!!!

40 டிகிரி வெயிலில் குடைபிடித்து நடந்து ஸ்டேஷன் வந்து டிக்கெட் எடுத்து (கவனிக்க) பின்பு பெருங்குடி ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் ஒரு கிலோமீட்டர் நடந்து வெளேச்சரி மெயின் ரோட்டை கிராஸ் செய்தால் நான் முன்பு அடிகோடிட்ட சுப்ரியா மெஸ். ஒரு சாப்பாட்டிற்கு இத்தனை அக்கப்போரா என்றால் உரக்க சொல்வேன். ஆமாம்.

பலதரப்பட்ட ஆந்திரா மெஸ்ஸில் கபளீகரம் செய்திருந்தாலும் சுப்ரியா மெஸ்ஸின் டேஸ்ட் அலாதி. தலை வாழை இலையும், பூப்போன்ற சாதமும், பப்பு பொடியுடன் ஆயில் அப்பளம், வெஜிடபிள் ஃப்ரை (மை பேவரைட்), பருப்பு, அவியல், ஏதேனும் காய் போட்ட சுவையான சாம்பார், ரசம், மஜ்ஜுக புளுசு என்று அழைக்கப்படும் மோர்க்குழம்பு, கட்டியான தயிர், ஆவக்காய் அல்லது வடுமாங்காய் ஊறுகாய். இதனுடன் இடையிடையே கோங்குரா சட்னி, புலி துவையல் என்று ஆந்திரா ஸ்டைலில் செய்து ஒரு கிண்ணத்தில் டேபிளில் வைத்திருப்பார்கள். அதுவும் இறுதியாக அந்த கட்டித்தயிரில் சாப்பிட்டபின் வருவது தூக்கமே அல்ல, ஒரு மயக்கம். இதற்காகவே ஏழுகடல் ஏழுமலை ஜம்பலாம்..
சம்பவத்திற்கு வருகிறேன். அன்று மதியம் நாங்கள் மூவரும் ஒரு டேபிளை பார்த்து அமர்ந்துவிட்டோம். கொலைப்பசி. பொறுமையில்லை.

அப்போதுதான் டேபிளில் இருந்த அந்த கிண்ணம் எங்கள் பார்வையில் பட்டது. பருப்பு பொடி, புளிக்காய்ச்சல், கோங்குரா இதை தவிர்த்து நாலாவதாக ஒன்று. ஆனால் என்னவென்று தெரியவில்லை.

சிங்கமும் இதை கவனித்தது.

இலை போடப்பட்டது. தண்ணீர் தெளித்து சாதம் வைக்கப்பட்டு,
என்னடா இது புதுசா இருக்கு என்று பாண்டி கொளுத்திபோபோட ஆமால்ல என்று நான் அதில் எண்ணையை ஊற்றினேன்.

ஒருவேளை சிக்கன் குழம்பு மாதிரி வைச்சு எல்லா டேபிள்ளையும் ப்ரீயா சாப்பிடுங்கன்னு வச்சிட்டாங்ளோ? சிங்கம் அதன் சிறு மூளையை கசக்கி பிழிந்து யோசித்து பார்த்து சீரியசாக சொன்னது

ஆமா அப்படித்தான் இருக்கும் போல என்று நாங்களும் தலையை ஆட்டினோம். சரி சும்மா சாப்பிட்டு டேஸ்ட் பாரேன் என்றோம்.

சிங்கம் ஒரு ஸ்பூனை எடுத்து அந்த கிண்ணத்தில் போட்டு நக்கி பார்த்தது. ம்ம்ம். டேஸ்ட் சூப்பரா இருக்குடா. புது ஐட்டம் போல. ஐ. நான் இதையே போட்டு சாப்பிடப்போறேன் என்று சாதத்தில் போட்டு பிசைய ஆரம்பித்து சாப்பிட ஆரம்பித்தது.

எனக்கும் பாண்டிக்கு சந்தேகம் வர, சர்வரை கூப்பிட்டோம்.

‘இது என்னதுங்க. புதுசா இருக்கு?’

‘ஓ. சாரி சார். உங்களுக்கு முன்னாடி உக்காந்து சாப்பிட்டு போனவங்க வச்சிட்டு போன சிக்கன் கறி சார். எச்சி கப்பு.(!?!?) எடுக்க மறந்துட்டேன். இப்போ எடுத்துடுறேன் சார்’ என்றான்

சிங்கத்தை பார்த்தால், அதன் முகத்தில் ஈயாடவில்லை. ‘ஏண்டா கொஞ்ச நேரம் முன்னாடியே இத கேட்டிருக்கலாமே?’ என்று முழி பிதுங்கி விழித்தது.

முன்னாடியே கேட்ருந்தா நீ சாப்ட்ருக்க மாட்டியே என்று சொல்லிவிட்டு பப்புபோடி பிசைய ஆரம்பித்தோம்.

அந்த சிங்கக்குட்டி வேறு யாருமில்லை, இந்தியாவின் திமிங்கலம், கோபியர்களின் கண்ணன், மிஸ்டர்.ரோமியோ தமிழகத்து பெண்களின் தூக்கத்தை கெடுப்பவன், அமெரிக்க ஆணழகன், GCE இன் கலாபக்காதலன் என்று பலதரப்பட்ட பாத்திரங்களை அனாயாசமாக சுமக்கும் நண்பன் Ramesh Kumar Balasubramanian

திங்கள், செப்டம்பர் 02, 2013

The Intouchables


‘The Intouchables’ எனும் ஒரு ஃபிரெஞ்சு மொழி படம் காண வாய்ப்பு அமைந்தது. படத்தை பற்றிய ரிஷி மூலம் ஆராய்ந்ததில் உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் IMDB அதனை சிறந்த 250 படங்களும் 61 ஆவது படமாக தெரிவு செய்து அடையாளப்படுத்தியது. படத்தின் முதல் பதினைந்து நிமிடம் அதிகளவில் ஈர்க்கவில்லையென்றாலும் ஒமர் எனும் கறுப்பின நடிகரின் அலட்டிலில்லாத அசாத்திய நடிப்பு நம்மை சிறுக சிறுக படத்தினுள் இழுத்து கட்டிப்போடுகிறது.
 
கதை மிகவும் எளிமையானது. மிகப்பெரிய ஒரு செல்வந்தரின் கேர் டேக்காரக வேலைபார்க்கும் ஒமருக்கும் அந்த கனவானுக்கும் ஏற்படும் நட்பே படத்தின் பிரதானம். பாரா கிளைடிங்க் பயிற்சியின் போது ஏற்படும் விபத்தில் கழுத்து முதல் பாதம் வரை செயலிழந்து Tetraplegica ஆக முடங்கிப்போகிறார் செல்வந்தர் பிராங்க் க்லுசே. கேர் டேக்காருக்கான நேர்காணலின் போதே குறும்பு செய்யும் ஒமரின் கேரக்டர் அவருக்கு பிடித்துபோய் விடுகிறது. Selected. வேலையில் சேரும் ஒமர் தன்னை ஒரு வேலையாளாக பாவிக்காமல் பிராங்கின் நண்பராக அவரை ஆளுமைபடுத்துகிறார். மனைவியை இழந்து தவிக்கும் பிராங்கிற்கு அந்த உறவு ஒரு வடிகாலாக தோன்றுகிறது. செல்வந்தரின் செக்ரெட்டரியை கரெக்ட் செய்யத்துடிக்கும் ஒமரின் நடிப்பு Subtle Comedy.  நூற்றிபதினைந்தாவது நிமிடத்தில் பிராங்கின் காதலியையும் தேடிப்பிடித்து அவர் கைய்யில் ஒப்படைத்து பிரிந்து போகிறார். Blue Streak இன் Martin Lawrence மற்றும் Senseless இன் Marlon Wayons ஐ மிஞ்சும் ஒரு அசாதாரண நடிப்பை போகிற போக்கில் உதிர்த்து செல்கிறார் Omar Sy. பிராங்க் க்லூசோவை எங்கோ பார்த்தது போல் இருக்கவே கூகுளிட்டதில் ‘Dustin Hoffman’ என்ற விடை கிடைத்தது. படம் ஒரு ஆஸ்காருக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லையென்றாலும் ஒரு ‘Feel Good Movie’ யை பார்த்த திருப்தி உறுதி.

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

முகநூல் பதிவுகள்-5

கடந்த வாரத்தின் ஒரு நிகழ்வு. அது பீச் முதல் தாம்பரம் செல்லும் மின்தொடர் வண்டி. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரவும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறிக்கொண்டார். ஏறிய வேகத்தில் கீழ் காணுபவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருந்தார்.

 ‘சார் இத...ு பர்ஸ்ட் கிளாஸ். முதல் வகுப்பு பெட்டி. தயவு செஞ்சு மஞ்சள் டிக்கட் வச்சிருக்கவங்க கீழ இறங்கிடுங்க. பிடிச்சா 500 ரூபா அபராதம். யாரும் கோவப்படாதீங்க. தவறா எடுத்துக்க வேண்டாம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.

கூட்டம் முழுதும் அவரை திரும்பி பார்த்தது. அவர் தொடர்ந்தார்.

அய்யா படியில நிக்காதீங்க. உங்களுக்கும் நல்லதில்ல உங்களுக்காக வீட்டில காத்திட்ருக்கிற மனைவி, அம்மா, அப்பா, மகன், மகள், நண்பர்கள் என யாருக்கும் நல்லதில்ல. தயவு செஞ்சு உள்ளவந்துடுங்க. இங்க நிறைய இடம் இருக்கு.

படியில் நின்றுகொண்டு ஆம்ஸ் காட்டிய சிங்கங்கள் பார்த்தன. சில முறைத்தன. ஒன்றாவது நகரவில்லை. கிறுக்கன் என்ற வசவு கூட கேட்டது. வண்டி கிளம்பிய சில நொடிகளில்,

அய்யா எல்லாரும் ஒரு அரை அடி நகந்துக்குங்க. படியில் நம்ம நண்பர்கள் தொங்கிட்டுவராங்க. அவங்க வீட்ல அவங்கள எல்லாரும் எதிர்பார்பாங்க. சிரமம் பாக்காம ஒரு அரை அடி நகந்து வாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் என்று ஒவ்வொருத்தராய் கேட்டு கொண்டிருந்தார்.

கூட்டம் நகரவே மனசில்லாமல் அவரது வெங்கலக்குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கமுடியாமலும் முனகி கொண்டே நகர்ந்தது. அவர் தொடர்ந்தார். எவனோ மெண்டலா இருப்பான் போல என்று கமெண்ட் அடித்தனர், சத்தமில்லாமல்.

காதுல ஹெட்போன் மாட்டிருக்கவங்க தயவு செஞ்சு அத களட்டிடுங்க. வீட்டுல போயி போட்டு கேளுங்க. உங்க கவனம் மின்தொடர் வண்டி மேல இருக்காது. கோவிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு சென்னைல மட்டும் நாலு பேரு போன் பேசிட்டே தண்டவாளத்த கடக்கிறதுனால இறக்குறாங்க. கவனம் தேவை. ப்ளீஸ்

ஹெட்போன் மாட்டியது எதுவும் திரும்பக்கூட இல்லை. அடுத்ததாக பக்கத்து சீட்டை எட்டிபார்த்தவர்

சார் ப்ளீஸ் எதிர் சீட்ல கால வைக்காதீங்க. அடுத்தவங்க உக்காரனும். கொஞ்சம் மதிப்பு கொடுங்க என்றார்.

இதற்கு முன் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரின் கணீரென்ற குரலும் படபடப்பான பேச்சும் சிறிது எரிச்சலை கொடுத்தால் கூட அவர் சொல்லிய ஒவ்வொன்றும் தனிமனித ஒழுக்கங்கள். பல் தேய்த்தபின் வாய்கொப்பளிக்க வேண்டும் என்று பிறர் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதில்லை அது போலவே இதுவும் படுகின்றது. ஏதேனும் விபத்தில் தன் சொந்தங்களை பரி கொடுத்துவிட்டு அந்த வலியை பிறர் உணரக்கூடாது என்ற அக்கறையில் அவர் பேசியதாகத்தான் எனக்கு தோன்றியது. அடுத்தவரின் மீது அக்கறை எடுத்து கொள்பவர்கள் தானே இப்பொழுதெல்லாம் பைத்தியமாகத்தெரிகின்றனர். மாம்பலத்தில் அவர் இறங்கும் நேரத்தில், அவருக்கு கை கொடுக்கலாம் என்று தோன்றியது. கையை நீட்டினேன். அழுத்தமாக குலுக்கிவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினார். ‘அய்யா படியில நிக்காதீங்க.’ என்ற சத்தம் வண்டி கிளம்புமுன் கேட்டது.
See More

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

எஸ்.ராமகிருஷ்ணன்


சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து குறைந்தது பத்து வருடங்களாவது கடந்திருக்கும். அநேகமாக அவர் எழுதி புத்தகமாக வெளிவந்ததில் தொண்ணூறு சதவீதம் கடந்தாகிவிட்டது.. கல்லூரியின் எந்த ஒரு பருவ தேர்வின்போதும், வாத்தியார் புத்தகம் அருகில் இல்லாமல் படித்தது இல்லை. அதற்கென்றே சில புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிடுவேன். விஞ்ஞானச்சிறுகதைகள், கணேஷ் வசந்த் சிறுகதைகள் போன்ற தொகுப்புகள் ஏதோ ஒரு உற்ற நண்பன் அருகில் இருந்துகொண்டு சொலவாடுவதை போன்ற ஒரு மயக்கநிலையை தரும் உணர்வைக்கொடுக்க வல்லது. அவரின் மொழி நடை, எழுத்து வசியம், கடினமான் அறிவியல் வார்த்கைகளைக்கூட அநாயசமாக உபயோகப்படுத்தும் பாங்கு, என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இங்கு சொல்ல வந்தது வேறு.  அவரின் எழுத்துக்களைத்தவிர்த்து  அவ்வப்போது ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், கல்கி, ரங்கராஜன், வேணுகோபாலன், எம்.ஜி.சுரேஷ், அசோகமித்திரன், இந்திரா சௌந்தராஜன், கி.ரா, வண்ணதாசன், சு.ரா, ஜெயகாந்தன், எஸ்.ரா என்று சமகாலத்தைய எழுத்தாளர்கள் சிலரின் புத்தகங்களை படித்திருந்தாலும், வாத்தியாரின் எழுத்துக்களை தொடர்ந்து அதிகம் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமே.
 

பொதுவாக நாமே தேடி எடுத்ததை விட இதை படித்து பாருங்களேன் என்று பரிந்துரைக்கபட்ட புத்தகங்கள் பலவும் ஆதியோடு அந்தமாக வாசிக்கபட்டும் ரசனைக்கு ஒருவாறு தீனி போடுவதை போலவும் அமைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறில்லாமல் நானே தேடி எடுத்ததில் முத்தாக அமைந்த ஒரு சில புத்தகத்தில் முக்கியமானது  தேசாந்த்ரி. ஏனெனில் அதுவே எனக்கு எஸ்.ராவை அடையாளம் காட்டியது. தலைப்பிற்கேற்றார் போல் தான்தோன்றியாக தான் மேற்கொண்ட பயணங்களை பற்றியான கட்டுரையே தேசாந்த்ரி. இதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அப்படிக்கப்படியே மௌசையும் லேப்டாப்பையும் அதே இடத்தில் வைத்துவிட்டு, கையில் எவ்வளவு காசிருக்கிறது என்றோ, சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டதா என்றோ, எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் ஒரு பயணத்தை உங்களால் தொடங்க முடியுமா? ஆனால எஸ்.ரா. இதேபோன்று தொடங்கிய பல பயணங்கள், காடு, மலை, நெடுஞ்சாலை என்று சுற்றித்திரிந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒரு மலை வாழ் மக்களின் வீட்டில் எதிர்பாரா உறவினராக ஓர் அன்னியனாக நுழைந்து இரவு உணவருந்தி பின் அதே இரவில்  அவர்களிடம் ஒரு நண்பனாக அளவளாவி என திகைக்கவைக்கிறார்.  
 
இந்த போக்கே முதலில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையயும் அதன் பின் அவரின் பாலுள்ள மதிப்பையும் கூட்டுகிறது, ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதின் அடியாழத்திலிருந்து துளிர்த்து எழுந்தவை என்பதை அறுதியிட்டு கூறமுடியும். அவரின் சொல்லாடல், அழுத்தமான வார்த்தைப்ப்ரயோகம், அடர்த்தியான அர்த்தம் கொண்ட கருத்துக்கள் எனப்பல அவரின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் அடையாளங்கள்.

அவருடைய மற்றைய தொகுப்புகளான சிறிது வெளிச்சம்’, மலைகள் சப்தமிடுவதில்லை’, அதே இரவு அதே வரிகள்’, விழித்திருப்பவனின் பகல்’, துணையெழுத்து என ஒவ்வொன்றும் ரத்தினங்கள். ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்தெடுத்த சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள். சில சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும், சில வலிகளோடு போராடுவனவாகவும், சில துக்கத்தின் பாடலாகவும் சில உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆதார உணர்ச்சிகளை வெளிக்கொணருபவையாகவும் நம்முள் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டும் முகத்தில் உறைந்தும் விடுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்கள் அள்ளி அள்ளி விழுங்கிவிடுகின்றன. வாழ்க்கையின் உன்னதங்களை பட்டியிலுடுகின்றன. ஆறாத ரணத்தையும் ஆற்றுபடுத்துகின்றன. உணர்வுகள் ஊற்று போல் பீறிடுகின்றன.

சுஜாதாவிற்கு அடுத்து இப்பொழுது எஸ்.ரா என்ற பெயர் கொண்ட புத்தகங்களை எங்கு பார்த்தாலும்  வாங்கிவிட வேண்டும் என்று ஆவல் முற்படுவதை தவிர்க்கமுடிவைல்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

த்ரில்லர்


ஆதிகாலம் முதலாய் மனிதனை பயம் கொள்ளச்செய்ய பல்வேறு சாத்தியக்கூறுகள் புற உலகில் விரவி கிடந்தாலும் த்ரில்லர் வகை படங்களை இயக்கும் ஜாம்பவான்கள் நம்புவது ஒரே கோட்பாட்டைத்தான். அது, உங்களுள் இருக்கும் பயத்தை வெளிக்கொணரச்செய்வது மட்டுமே. இதுநாள் வரை மனிதன் தீய சக்திகளை புறவெளியில் கண்டு பயந்ததை விட, தன் மனத்தினுள் அதெற்கென தான் கொடுத்து வைத்த பிம்பத்தை கண்டு பயந்ததே நிஜம். அதுவே நிதர்சனமும் கூட. சற்று நிதானமாக யோசித்து பார்க்கையில், பேய் பிசாசு, கொலைகாரன், சைக்கோ, திருடன், கற்பழிப்பவன், என்று பலரது பிம்பங்கள் திடமானதொரு உருவம் கொடுத்து நம் மனதினுள் ஆழ பதித்துள்ளோம். குளத்தில் கல்லெறியும்பொழுது மேலெழும்பி வரும் கலங்களை போல, நம் மனதினுள் இருக்கும் இப்பிம்பங்களை எழுப்பும் ஏதேனும் ஒரு திகில் காட்சியில் அடங்கியிருக்கிறது இயக்குனரின் அப்படத்திற்கான வெற்றி.
 

 ‘The Descent’, ‘Identity’, ‘Vacancy’, ‘Wrong Turn’ போன்ற த்ரில்லர் படங்களை பார்த்திருந்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால் சமீபத்தில் பார்த்த ‘Rec’, ‘Rec 2’, ‘Ils’, ‘Session 9’ ஆகிய நான்கு படங்களும் த்ரில்லர் பிரியர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தரும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறேன். ‘Rec மற்றும் Rec 2 ஸ்பானிய மொழி பேசும் படம். ஒரு பெண் ரிபோர்டர் அந்த வார கவரேஜுக்காக தீயணைப்பு படை வீரர்களை பேட்டி காணச்செல்கிறாள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு வீட்டிலிருந்து உதவி கேட்டு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு பின் வரும் பல காட்சிகள் மயிர்க்கூச்செறியும் விதத்தில் படமாக்கபட்டிருப்பதை ஒரு ISD போட்டாவது பாராட்டியே ஆக வேண்டும். படமாக்க உதவியிருக்கும் ஹேன்ட் ஹெல்ட் கேமராவின் பங்கு அளப்பரியது. ‘ILS’ ஒரு ஃபிரெஞ்சு மொழிப்படம். தனியாக வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியினர் சில நேரம் கழித்து தாம் தனியாக இல்லை என்று உணர்வதிலிருந்து வேடிக்கை ஆரம்பிக்கிறது. இவையெல்லாவற்றையும் விட அதிகம் ரசித்தது ‘Session 9’ சுத்தமான அக்மார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ஒரு பாழடைந்த மனநல மருத்துவமனையை செப்பனீடு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு வருகிறது. மருத்துவமனையின் பல இடங்களை நுட்பமாக காட்சியமைத்தும் அதன் பழைய கோரமான வரலாற்றை கதாபாத்திரத்தின் வழியாக மிக மெதுவாக மற்றும் அழுத்தமாக நம்மீது திணிக்கிறார் இயக்குனர். படத்தின் பின் பாதி நம்முடைய பல்ஸை எகிற வைக்கிறது. சமீபத்தில் பார்த்த ஆக சிறந்த த்ரில்லர்.
இவை அனைத்து படங்களையும் இரவில் தனியாக ஹெட்செட் மாட்டிக்கொண்டு முதுகெலும்பில் ஏற்படும் ஒரு ஜில்லிப்பு உணர்வுடன் பார்த்து பயந்த அனுபவம் உண்டு.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘The Conjuring’ பலத்த வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்றிருப்பதை கண்டு, அதை ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தில் காணலாம் என்று முடிவெடுத்தது பெரும் தவறு என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். திகில் நிறைந்த காட்சிகள் வருகிற ஒரு இடத்தில், ‘வாங்கன்னா வணக்கங்கன்னா’ என்ற அருகிலிருந்தவரின் ரிங்டோன் மூடை சரியாக சொல்லிவைத்தார் போல் கெடுத்து வைத்தது. போதாக்குறைக்கு லேஸ் பாக்கெட்டின் சலசலப்பு, குழந்தையின் அழுகை, முந்தின ரோ கப்புள் சீட்டில் உட்கார்ந்திருந்த ஜோடியின் சில்மிஷம் என்று, அதுவும் இருட்டாக காட்சி வரும்போதெல்லாம் அவன் அவளை முத்தமிட முயல ‘டேய் என்னடா பண்ற’ என்று சில இடங்களிலும்,’ எந்த படத்தை பார்ப்பது என்று சில இடங்களிலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. ஒரு முறை பார்த்த த்ரில்லர் படத்தை மறுமுறை பார்ப்பது திரில்லருக்கு செய்யும் துரோகம் என்பதலால், தியேட்டரில் இதன் பிறகு த்ரில்லர் படங்களை பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
See More

சனி, ஜூலை 20, 2013

குறுங்கதை – அன்றே கொல்லும்


நேர்மையின் சிகரமாய் கடந்த ஐந்து வருடங்கள் தொழிலாளர் நலனுக்காக பணியாற்றி தேர்தலிலும் தொழில் சங்கத்தலைவராக வெற்றி பெற்ற நல்லசிவத்தை தீர்த்து கட்ட முடிவெடுத்திருந்தான் சண்முகம்.

காலை எழுந்ததும் கோடை விடுமுறைப்பயணமாக மலைவாசஸ்தலம் போகின்றோம் என்ற நினைப்பே, பத்தாம் வகுப்பு படிக்கும் நகுலனுக்கு பெரும் உவகையாக இருந்தது. மரத்தின் மேல் அமைக்கபெற்றிருந்த ‘Tree Hut’ டில் ஏணியில் மூச்சு வாங்க ஏறுவதாக கனவு கண்டு கொண்டே வாயில் கோழை வடிய தூங்கிப்போனான்.

பிசாசு கூட உறங்கிருக்கும் நேரமான அதிகாலை மூன்று மணியை சண்முகம் தேர்தெடுத்திருந்தான். எட்டு பரோட்டாக்களையும் மூன்று ஆம்லேட்டுகளையும் முழுங்கிய பிறகு தெரு முனையின் பாய் கடையில் வாங்கியிருந்த பட்டன் கத்தியை சரவணா ஸ்டோர்ஸ் கவரில் சுருட்டி வைத்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்திருந்தான். கே.கே.நகர் விஜயாவில் அந்தரங்கம்என்று ஒட்டபட்டிருந்த போஸ்டரை ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.

நகுலன் வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தனர். 23’c என்று காமித்து கொண்டிருந்தது வோல்டாஸ் ஏ.ஸி.

ஒரு மணல் மூட்டையின் முன் நின்று கொண்டிருந்த சண்முகம், பட்டன் கத்தியால் இரண்டு முறை குத்திபார்த்தான். மணல் சரிந்து தரையில் கொட்டியது. சிரித்துக்கொண்டான். மீண்டும் குத்தி மணல் சரிந்து சிரித்தான். மீண்டும்....

பன்னிரெண்டு மணிக்கு எழுந்திருத்து, நகுலன் அப்பா ஒரு முறை மூத்திரம் போனார்.

இரவு இரண்டு மணிக்கு களைத்து போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். Teachers Whiskey மற்றும் 100 கிராம் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிக்கன் 65 இரண்டையும் ஒரு முக்காலியில் வைத்தான். ஒரு ரூபாய் பிளாஸ்டிக் டம்ப்ளரில் மிக்ஸிங் செய்ய ஆரம்பித்தான்.

நகுலனின் அம்மா மூன்று மணிக்கு எழுந்து எதற்கும் இருக்கட்டும் என்று காலை சாப்பாட்டிற்கு இட்லி ஊற்றி வைத்து ஒரு பழைய பிரஷ்ஷில் பல் துலக்க ஆரம்பித்தாள்.

சண்முகம் இந்த ரகசிய காரியத்தை தான் ஒருவனே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இரண்டு பேர் செய்தால் அது ரகசியமாயிராது என்பது மஷ்ரூம் கட் அடித்திருக்கும் அவன் தலைக்குள் இருக்கும் மூளை நியாபகப்படுத்தியது.

நகுலனின அப்பா டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அருகில் நகுலன், தம்பி அகிலன் மற்றும் அம்மா பின் சீட்டில் உட்கார தெரு முனைவரை கௌசல்யா சுப்ரஜாஎன்று பக்தியுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிக்கொண்டிருந்த்.......நகுலன் சிடியை மாற்றி என்னமோ ஏதோஎன்று ஆலப் ராஜூவை கூப்பிட்டான்.

மூன்று மணி இருபது நிமிடம் கழித்து நல்லசிவத்தின் வீட்டிற்கு நடந்தே வந்திருந்தான் சண்முகம். உள்ளே சென்றிருந்த Teacher லேசாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். அவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என்பது முக்கியமில்லை என்பதால். அவன் இப்போது கதவை திறந்திருந்தான்.

எப்டியும் ஆறு மணிக்கு போயிடலாம் என்றார் நகுலனின் அப்பா. அந்த அகால வேளையில் லேஸ் ஸ்பானிஷ் டொமாட்டோ பாக்கெட்டை உடைத்திருந்தான் அகிலன்.

Rigar Mortis வந்த பிணம் போல் கை காலை நீட்டி நெற்றியில் மூன்று பட்டையுடன் விரைப்பாய் படுத்திருந்தார் நல்லசிவம்.  அவர் படுத்திருந்த கோலத்திற்கு வேஷ்டி சிறிது விலகி உள்ளே ஏதூம் போடவில்லையோ என்று தனக்கு எழுந்த சந்தேகத்தை தூர வைத்து பட்டன் கத்தியை வெளியே எடுத்தான் சண்முகம்.  

இன்னும் ஸ்பீட் இன்னும் ஸ்பீட் என்ற நகுலனிடம், இதற்கு மேல் வேகமாக போக முடியாது என்று அம்பதை தொட்டு கொண்டிருந்தார். அடுத்த லேஸ் பாக்கெட்.

தான் கொண்டு வந்திருந்த கைக்குட்டையால் அவர் வாயை மூடி வயிற்றில் ஒரு குத்து. இரண்டு சதக் கேட்டது. கழுத்தில் ஒரு குத்து. மீண்டும் இரண்டு சதக்.

மூன்று பேரின் ஒருமித்த கருத்தால் நகுலனின் அப்பா காரை ஓரங்கட்டி நகுலனிடம் ஓட்ட கொடுத்தார். தேநீரில் சிநேகிதம்என்று ஜேம்ஸ் வசந்தன் பீட்டை அதிகரிக்க ஆக்சிலேட்டரில் ஒரு காலால் ஏறி நின்று நூற்றியிருபதை தொட்டு அனைவரையும் பரவசபடுத்தினான். லைசென்ஸ் இல்லை.

நல்லசிவம், நல்லசிவம் என்று குனிந்து காதுக்கருகில் கூப்பிட்டான். தன் சுபரிசோதனையில் திருப்தியுற்று நிமிர்ந்த சண்முகம், கடமுடா என்ற சத்தம் போட்ட தன் வயிற்றை தடவி அபான வாயுவை சத்தமில்லாமல் வெளியேற்றி, திரும்பி மணி பார்த்த பொது நாலு பத்து என்று காட்டியது.

கார் அதே நூற்றியிருபது.

வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு, அரவமில்லாமல் தெருவை கடந்து வந்தான். விழித்திருந்த தேநீர் கடையில் டீ குடிக்கலாமென்ற யோசனையை ‘’குடி (டீ) குடியை (Teacher) கெடுக்கும் என்பதால் விட்டுவிட்டான். Teacher அதிகமாக வேலை செய்ய, நடையில் அதிகம் தள்ளாடினான்.

அந்த ஹைவேயின் குறுகலான திருப்பத்தை கட்க்க தள்ளாடிக்கொண்டே சாலையை அளந்தான். திருப்பம் வருகிறது என்று தெரிந்தும் நூற்றியிருபதை குறைக்காத நகுலன் காரை திருப்பவும் சண்முகம் சாலையை கடக்கவும், கன நேரத்தில் இருவரும் இருவரை கவனிக்கமுடியாது போய், லப்டப் சத்தம் காது வரை கேட்டு காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டான். லப்டப் நின்றிருந்தது. நூற்றிநாற்பதில் போ என்றார் நகுலனின் அப்பா, படபடப்புடன்.

 

 

 

 

புதன், ஜூலை 10, 2013

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா


பன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய...ற்சியே இந்த நூல். வழக்கம் போல சுஜாதா தன் பாணியில் போற போக்கில் க்வாண்டம் சயின்ஸ், காஸ்மலஜி என்று விளக்குவது ஸ்வாரஸ்யம்.
 

 ஆழ்வார்களை படித்தவரை, நாராயணன் தவிர வேறொரு தெய்வம் இல்லையென்று கூறும் ஒரு adamancy தெரியவருகிறது. இங்கிருப்பவனும் அவனே, இல்லாதிருப்பவனும் அவனே என்று யாதும் யாதுமாகி போற்றி புளகாங்கிதம் அடையும் ஒரு அற்பணிப்பு. நாலாயிர திவ்விய பிரபந்தமாகட்டும், திருவாசகமாகட்டும் இவை எல்லாவற்றிலும் காணப்படும் உவமை கற்பனைக்கெட்டாதது. பிடித்த அல்லது வியந்த சில Genre களை கீழே தருகிறேன்.

'கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்'

திருமழிசை ஆழ்வாரும் அவர் தம் சிஷ்ய பிள்ளை கனிகண்ணனும் ஒரு கிழவியை குமரியாக்குகிறார்கள். இதை தெரிந்துக்கொண்ட அரசன், தன்னையும் குமாரனாக்க வேண்டும் என்று திருமழிசை ஆழ்வாரை பணிக்கிறான். முடியாது என்கிறார் ஆழ்வார். இருவரையும் நாடு கடத்துகிறான் அரசன். வெகுண்டெழுந்த திருமழிசை ஆழ்வார், கனிகண்ணனும் கிளம்பிவிட்டான், புலவன் நானும் கிளம்புகிறேன், மாதவா நீயும் இங்கு கிடக்க வேண்டா, உன் பாம்பு பாயை (ஆதிசேஷன்) சுருட்டிக்கொண்டு கிளம்பு என்கிறார். திருமாலும் கிளம்ப. லக்ஷ்மியும் பின் செல்ல, மற்ற பூதகனங்களும் கிளம்பிவிடுகின்றன. அதன் பின் நாடே சுபிக்ஷமற்று போய்விடுகிறது. இதை உணர்ந்து அரசன், ஆழ்வாரிடம் மன்னிப்பு கோர, பின் திருமாலை,

'கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டா
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்'

நீ திரும்ப வந்து படுத்துக்கொள் என்று பணிக்க, அவரும் வந்து தான் அனந்த ஷயணத்தில் படுத்துக்கொள்கிறார். தன் பக்தன், கிளம்பு என்றால் கிளம்பவும், வந்து படுத்துக்கொள் என்றால் படுத்துக்கொள்ளவும், திருமால் செவி சாய்க்கிறான் என்று ஒரு friendly attribute கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.

உவமைக்கு எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வாரின்,

'வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே'

(பிரித்து படிக்கவும்). வாளால் அறுத்து சூடு போட்டாலும் வைத்தியன் பால் நோயாளி கொண்ட நீங்காத அன்பு போல், நீ பல வித துன்பங்களை கொடுத்தாலும், உன்(திருமால்) மேல் உள்ள காதல் மாறாது என்கிறார்.

அடுத்ததாக பெரியாழ்வாரின்.

'சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே'.

வயதான காலத்தில் சுற்றம் சூழ நின்று, சொத்து எங்கிருக்கிறது எங்கிருக்கிறது என்று வினவ, தன் தள்ளாத வயதின் காரணத்தினால் அதற்க்கு கூட பதில் கூற முடியாத நிலை வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே உன் நெஞ்சில், திருமாலுக்கு ஒரு கோவிலெழுப்பி மலரினால் அர்ச்சனை செய்யக்கடவாய் என்கிறார்.

ஆழ்வார் பாசுரங்களிலேயே ஆண்டாளுக்கு தனி சிறப்பு உண்டு. திருமாலையே தன் கணவனாக எண்ணி, பல பாசுரங்களை பாடியவர் இவர். தன் தந்தையார்(பெரியாழ்வார்), திருமாலுக்கு தினம் பூத்தொடுக்க, அந்த மாலையை தனக்கு சூடி அழகு பார்த்து பின் திருமாலுக்கு அணிவிக்கிறார். இது ஒரு நாள் தந்தைக்கு தெரிந்துவிட, இதை தடுக்கிறார். ஆண்டாள் அணிந்து பின் கொடுக்கும் மாலையே தனக்கு உவப்பானது என்று பெரியாழ்வாரின் கனவில் திருமால் கூற, ஆண்டாளை அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கம் செல்ல, ஆண்டாள் நேராக கருவறையை அடைந்து இறைவன் திருவடி சேர்கிறார்.

ஆண்டாளின் அனைத்து பாடல்களிலும், தன்னை கடவுளுக்கு முழுதும் அர்ப்பணித்த ஒருவகை pure dedication தெரிகிறது. அவரின் ஒரு பாடல்,

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே'

திருமாலின் வாயிலிருக்கும் வெண்சங்கை பார்த்து, அவரின் வாய்ச்சுவையை சொல்லமாட்டாயா என்று கேள்வி கேட்குமாறு அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை ஆண்டாள் தினமாக மாற்றலாம் என்று கூறுமளவுக்கு சுஜாதா மேற்கொளிடுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’ திரைபடத்தில் வரும், ‘உனை காணாத’ என்ற பாடலில் வரும் பல வரிகள் (அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவெண், இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாலடி) கூட ஆண்டாள் பாடிய genre போல ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. பிர்ஜு மஹாராஜின் நடனம், தப்லாவின் இசை, கமலின் நளினம் என் இந்த பாடல் ஆண்டாளை முன்னிறுத்துகிறது என்றால் மிகையல்ல.

வெண்பா, திருச்சந்த விருத்தம் சந்தம், எட்டு சீர், ஆசிரியப்பா, கலியவிருத்தம் என்று சுஜாதா, அவ்வப்போது தட்டிவிடுகிறபொழுது, இது தெரியாமல் முழித்து கொண்டு, ஒரு விதமான shame feeling வருவதை தவிர்க்கமுடியவில்லை.

எவ்வாறாகினும்,ஆன்மிகம், திருமால், பக்தி இத்யாதி போன்ற காரணங்களை தவிர்த்து தமிழின் சுவைக்காகவாவது நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஒரு முறை முயற்சி செய்யலாம்.

வெள்ளி, ஜூன் 21, 2013

சமீபத்தில் பார்த்து ரசித்த சில படங்கள்.

Taken & Taken 2
கதாநாயகன் Ex-CIA. பிரான்ஸிர்க்கு தன் நண்பியுடன் செல்லும் அவள் மகளை விபச்சார கும்பல் கடத்துகிறது. கடத்தபடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, தந்தையிடம் தன் நிலையை போனில் விவரிக்கிறாள். கும...்பலில் ஒருவன் அவளிடமிருந்து போனை பிடுங்கவும், கதாநாயகன் ‘Leave her. I still don’t know you. Throughout my carrier I have developed some techniques, which will help me to find you. Not only will I find. I will come and kill you’ என்ற சொல்வதிலிருந்து படம் சூடு பிடிக்கிறது. சொல்வதை போலவே தன் புத்திசாலித்தனத்தால் கும்பலையும் கண்டுபிடித்து கூண்டோடு ஒழித்து மகளையும் மீட்கிறார். படம் முடியும் வரை திரைக்கதையில் சற்றேனும் சுவாரஸ்யம் குறையாமல், காட்சியமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். இரண்டாவது பாகத்தில், கடத்தல் கும்பலில் தன் மகனை பறிகொடுத்த தந்தையின் பழிவாங்கல். கதாநாயகனின் குடும்பத்தை கடத்துகிறார்கள். முதல் பாகத்தை ஒப்பிடும்பொழுது இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு கம்மி என்றாலும் இரண்டு படமுமே த்ரில்லர் பிரியர்களுக்கு நல்ல ஒரு தீனி.




Insomnia
அல்ஃப்ரெடோ ஜேம்ஸ் அல் பசினோ என்ற மாபெரும் நடிகனின் மற்றுமொரு முத்திரை படம் தான் Insomnia. கிரிஸ்டபர் நோலனின் மூன்றாவது படம். ஆனால் இது நார்வீஜியன் படத்தின் ரீமேக். ஒரு பெண்ணின் கொலை சம்பந்தமாக துப்பறிவதற்காக அலாஸ்கா வருகிறார்கள் அல் பசினோவும் அவரது சகாவும், ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்று, பூமியின் விசித்திரம் அலாஸ்கா நகரம். அந்த பெண்ணை கொலை செய்தவர் ராபின் வில்லியம்ஸ். கொலையாளியை பிடிக்கும் நேரத்தில் Mistaken Identityயாக தன் சகாவையே சுட்டுவிடுகிறார் அல் பசினோ. இதை அலாஸ்கா போலீசிடமிருந்து மறைத்துவிடுகிறார். ஆனால் குற்ற உணர்வு அவரை வதைக்கிறது. இதற்கிடையில் அல் பசினோவின் உண்மையை தெரிந்துகொண்டு ராபின் வில்லியம்ஸ், அல்பசினோவை மிரட்டுகிறார். 24 மணிநேரமும் மறையாத சூரிய வெளிச்சத்தின் காரணமா அல்லாத தன் குற்ற உணர்வின் காரணமா என்று தெரியாமலேயே ஐந்து நாட்கள் தூங்காமல் கண்கள் வீங்கிப்போய் படத்தில் வாழ்ந்திருக்கிறார் அல்பசினோ. அலாஸ்கா நகரம், அல்பசினோ கண்கள், ராபின் வில்லியம்ஸின் அசாதாரண நடிப்பு, அல்பசினோ பயன்படுத்திய SUV கார், நோலனின் இயக்கம் என படம் இறுதிவரை ஒரு வகையான சைக்காலஜிக்கள் திரில்லராக கதை செல்கிறது. ரீமேக் படம் என்ற காரணத்தினாலோ என்னமோ, கிரிஸ்டபர் நோலன் டச் மிஸ்ஸிங்.

The Skeleton Key
மிக நேர்த்தியான திரைக்கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம். வாதத்தில் படுத்திருக்கும் ஒரு முதியவர் ஒருவரின் caretakerஆக எஸ்டேட் பங்களாவில் வேலைக்கு செல்லும் செவிலியாக கேட் ஹட்சன். இதற்கு முன்னர் பலர் அங்கு வேலை செய்து பாதியில் நின்றுவிடுகிறார்கள். காரணம் பங்களாவின் மர்மம். இது தெரிந்தும், இளம் வயதிலேயே தன் தந்தையை இழந்த காரணத்தினால் அந்த முதியவருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற உறுதியில் அந்த பங்களாவில் வேலைக்கு சேருகிறார் கேட். அந்த முதியவரும் பாட்டியும் மட்டுமே அங்கு குடியிருக்கிறார்கள். Skeleton Key எனப்படும் பங்களாவின் எல்லா கதவுக்கும் பொதுவான ஒரு சாவியை அந்த பாட்டி, கேட்டிடம் தருகிறாள். அங்கு ஆராம்பிக்கிறது கதை. எந்த அறைக்கு செல்ல வேண்டாம் என்கிறாளோ, அந்த அறையை கேட் திறந்து பார்க்கிறாள். வூடூ மாஜிக்கின்(ஒரு வகையான மாந்திரீகம்) சமாச்சாரங்கள் அங்கு விரவி கிடக்கின்றன. ஒரு சில நாளிலேயே முதியவர் ஒரு போர்வையில் ‘HELP ME’ என்றெழுதி கேட்டிடம் காண்பிக்கிறார். ஏதேனும் அமானுஷ்யத்தின் வேலையா என்று குழம்பும் சமயத்தில் பாட்டியிடமே கேட்டிற்கு சந்தேகம் எழுகிறது. முதியவரின் நிலைக்கு காரணமே அந்த கிழவி தான் என்று முடிவிற்கு வரும் கேட், அவரை காப்பாற்றும்பொழுது தான் அந்த வலை தனக்காக விரிக்கபட்டிருக்கிறது என்று கண்டுபிக்கிறாள். அதுவரை இரண்டு மணி நேரம் படத்தை பார்த்து நாம் யூகித்து வைத்திருந்ததை, கடைசி ஐந்து நிமிடங்கள் தகர்த்தெரிக்கின்றன. மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழுகின்றன. படம் பார்க்கும்பொழுது பார்ப்பவர் மனதில் எழும் பல கேள்விகளுக்கு, இறுதியில் கதையின் முடிவிலிருந்து பதில்களை Interpret செய்யவைப்பதிலிருந்து இயக்குனர் திரைக்கதையை எழுத எடுத்திருக்கும் சிரத்தையை உணரவைக்கிறது. Mystery/Thriller அல்லது Surprise Ending வகையை சேர்ந்தது. Most Recommended.See More

முகநூல் பதிவுகள் -4

சமீபத்தில் அகஸ்மாத்தாக நடந்த இரு சம்பவங்கள் நினைவுக்கு வரவும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒன்று, சில மாதங்களுக்கு முன்னாள் எங்கள் கம்பெனியிலிருந்து வேறு ஒரு கம்பெனிக்கு தாவியவர். இங்கிருந்து கழன்று சென்ற பின் ஒரு முறையேனும் போன் காலோ, மெய்லோ இல்லை. சில நாட்கள் கடந்த பின்பு அவரை பற்றிய ஞாபகம் குறைந்து போனது. நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். ஒரு மூன்று நாட்களாக அவருக்கு போன் செய்ய வேண்டும்... என்ற ஒரு எண்ணம் எழுந்திருந்தது. நினைவு வரும்பொழுது கால் செய்ய முடியாத சூழலிருக்கும். தோதுவான நேரம் வரும்பொழுது கால் செய்யும் ஞாபகம் இராது. சரியாக மூன்றாவது நாள் ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினால் அதே நண்பர்.

‘என்ன சார். உங்களுக்கு தான் போன் பண்ணணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா நேரம் சரியா அமையல.’

‘அதே தான் பாஸ். ஒரு மூணு நாளா உங்க ஞாபகம் வந்தது. சரி எப்டி இருக்கீங்கனு கேக்கலாம்னு போன் பண்ணினேன்’ என்றார்.

பரஸ்பர விசாரிப்புகளுடன் உரையாடல் முடிந்தது.

சம்பவம் இரண்டு. துபாய்க்கு வேலை சென்ற மறு நாளே போட்டோ, மெசேஜ் என்று வாட்ஸ் அப்பில் கலக்கிய உறவுக்காரப்பைய்யன் கடந்த ஒரு வருடமாக அட்ரெஸ் இல்லாமல் இருந்தான். பேஸ்புக்கிலாவது தேடி பிடிக்கலமென்று கொஞ்ச நாளில் அதிக சிரமமில்லாமல் மறந்தே போனேன். இரு நாட்களுக்கு முன் பழைய ஆல்பங்களை புரட்டி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டான். போன் பண்ணலாமென்று நினைக்கையில் துபாய் நம்பர் தெரியவில்லை. வாட்சப்பில் மெசேஜ் செய்யலாமேன்றால் போனை சமீபத்தில் தான் ரீசட் பண்ணிருந்தேன். இதே நினைவாக அந்த நாள் ஓடிவிட, மறு நாள் போனில் ஒரு ISD அழைப்பு. எடுத்து பேசினால் துபாய் பைய்யன்.

இந்த இரு சம்பவங்களும் அண்மையில் நடந்தது, முன்னொரு காலத்தில் படித்த ‘மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி’ மற்றும் தொலைவில் உணர்தல் புத்தகங்களை ஞாபகமூட்டின. ஆசிரியர் மறைமலையடிகள். புகழ்பெற்ற தமிழறிஞர். ஆய்வாளர். டெலிபதி மூலமாக தனது சிஷ்யனிடம் மற்றொரு நாட்டிலிருந்து தகவலை பரிமாறிக்கொண்டவர். அவரது இவ்விரு புத்தகங்களை படித்தால் மனிதன் தமிழாராய்ச்சி செய்தாரா அல்லது மாந்திரீகத்தில் ஆராய்ச்சி செய்தாரா என்று சந்தேகமெழுமளவுக்கு எழுதியிருப்பார்.

இப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசிட்ருந்தா பக்கத்தில இருந்த அந்த பக்கி, ‘மச்சான் ஒரு மூணு நாளா எனக்கு பராக் ஒபாமா நினைப்பாவே இருக்குது. அவரு எனக்கு கால் பண்ணுவாரானு?’ கேக்குது.

என்னா ஒரு வில்லத்தனம். நீயெல்லாம் என் ஆஃபிஸ் கேண்டீன்ல போடுற பொங்கல் சாப்டே செத்துபோய்டுவனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.