புதன், ஏப்ரல் 15, 2026

குட்டிக்கதை 2

'நான் ஒண்ணு சொல்லட்டுமா?' என்று கேட்டான் கௌதம். என் கணவன். 'ம்‌ம்‌ம்‌' என்றேன் 'டூர் போனதுல உனக்கு என்ன பிடிச்சதுனு கேட்டல்ல. அந்த மலை, அருவி, க்ளைமேட், சாப்பாடு எல்லாத்தையும் விட, நீ என்னோட கைகோர்த்து தலை சாஞ்சு நடந்தல்ல. அதுதான்' என்று என்னை ஏறிட்டுப் பார்த்தான். உனக்கு என்ற கேள்வி தெரிந்தது. 'ம்‌ம்‌ம்‌. வீட்டுக்கு திரும்ப வந்தோடனே டோனி ஓடி வந்து என் மடில உக்காந்துச்சுல. அப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு' என்றேன். 



கௌதம் திரும்பிக் கொண்டான். எனக்கு ஏன் டோனி பிடித்தது? யோசித்து பார்த்தேன்.என்னை மட்டுமே சுற்றி வரும். உணவு கேட்கும். வெளியே அழைத்துச் செல்ல மன்றாடும். விளையாடும். நான் சோகமானால் துக்கம் கொள்ளும். அதனுடைய உலகம் நான் மட்டும் தான். வளர்ப்பு நாய் ஒரு சுதந்திர விலங்கு அல்ல. ஒருவேளை இதே டோனி என்னை உதாசீனப்படுத்தினால் ? இப்பொழுது போல் அதை விரும்புவேனா? நான் விரும்புவது டோனியை அல்ல. அதனுடைய விசுவாசத்தை. என் மீது இருக்கும் சார்புத்தன்மையை. 'கௌதம்' திரும்பினான். 

 'நான் உன்னுடைய டோனி' என்றேன். அவன் முகம் மலர்ந்தது.

கருத்துகள் இல்லை: