திங்கள், டிசம்பர் 19, 2022

Beast of Bangalore: Indian Predator



90களில் பெங்களூரில் நடைபெற்ற தொடர் கொலை மற்றும் அந்த கொலையாளியை பற்றிய டாகுமெண்டரி.

சில எண்ணங்கள் 

1. தனியாக இருக்கும் பெண்கள் மட்டுமே உமேஷ் ரெட்டியின் டார்கட். இவன் ஒரு CRPF ஊழியன். வெளியே பயிரை மேய்ந்த கதை. கற்பழித்து கொலை செய்வது மட்டுமே இவனது பாணி. முதல் முறை சிக்கியது முதல் தப்பிப்பது மீண்டும் மாட்டுவது மீண்டும் தப்பிப்பது என்று இதுவே ஆறு முறை நடந்திருக்கிறது. பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள். கொலைக்கான மோட்டிவ் என்பது சரியாக தெரியவில்லை. ஒரு வித சைக்கோ மனநிலை என்று மட்டுமே தெரிகிறது 

2. இவன் காரணமாத்தான் வீட்டு வாசலில் க்ரில் கேட் வைக்க ஆரம்பித்தனர் என்று ஒரு போலீசார் சொல்வது நம் முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. 

3. மூன்று எபிசோட்கள். மிக மெதுவாக செல்கின்றன. 1.5x ஸ்பீடே மெதுவாகத்தான் இருக்கிறது. 

4. பத்திரிக்கைக்கே தெரியாத பல விஷயங்களை டாகுமெண்டரிக்காக சேகரித்திருக்கின்றனர். அது சுவாரஸ்யமாக இருக்கிறது. 

5. கொலைகாரனை rarest of rare என்கிற கேட்டகிரியில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இருபது வருடங்களுக்கு மேல் நடந்த அந்த கேஸில் கடந்த மாதம் முப்பது ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டிருக்கிறது. 

6. இரண்டு விஷயங்கள் ஈர்த்தன. ஒரு ஆண் விசாரணை அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறுகிறார். கொலைகாரன் எப்பொழுதுமே கற்பழித்து மட்டுமே கொலை செய்கிறான். கொலையான பெண்களை கூராய்வு செய்யும்பொழுது இதை உறுதி செய்கின்றனர். அனால் இவனிடமிருந்து தப்பித்த பெண்கள் இவன் கற்பழிப்பு செய்ததை மறைத்து திருட்டு கேஸ் என்று மட்டுமே கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கின்றனர். இரு பெண்களின் பிறழ் சாட்சி இவனின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது. ஏன் பெண்கள் அந்த உண்மையை சொல்ல தயங்குகின்றனர் என்று கேட்கிறார். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வியையும் வைக்கிறார்.

7. பெண்கள் அந்த உண்மையை வெளியில் சொல்ல தயங்குவது ஏன் என்று ஆண்களிடம் தான் கேட்க வேண்டும்? சமுதாயம் அந்த சுதந்திரத்தை பெண்களுக்கு அளித்திருக்கிறதா? மற்றும் தீர்ப்பு எழுதிய ஒரு ஆண் நீதிபதியின் இந்த கேசின் மீதான பார்வை ஆணாதிக்க மனோபாவத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது என்று ஒரு பெண் மனோதத்துவ நிபுணி விவரிக்கிறார். 

8. டாக்குமென்டரியின் மற்றுமொரு சிறப்பு, கொலையுண்ட பெண்ணின் 7 வயது சிறுவனை பேட்டிகண்டது. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளருகிறான் சிறுவன். பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவன் விளையாட மைதானத்திற்கு செல்கிறான். சிறிது நேரத்தில் வீடு திரும்பும் அவன் ரத்த வெள்ளத்தில் அவனது தாய் கீழே கிடப்பதை காண்கிறான். கொலையாளி மிக சாந்தமாக இவனது தாயிற்கு உடல் நலன் சரியில்லை. ஆதலால் மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று இவனை காவல் வைத்துவிட்டு தப்பித்திருக்கிறான். ஒன்றுமறியாத சிறுவனோ அவனது தாயின் அருகில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருந்திருக்கிறான். அண்டை அயலார் வந்து பார்த்து போலீசுக்கு தெரிவித்து பின் அந்த சிறுவனை ஒரு கான்ஸ்டபிள் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று வளர்த்தது, அதன் பிறகு அவனை ஒரு ஹோமில் சேர்த்தது, ஒரு தம்பதி தத்து எடுத்தது, மற்றும் அந்த சிறுவன் வளர்ந்து தற்போது இருபத்தைந்து வயதில் அவனை பேட்டி கண்டது என்று விக்டிமின் கிளை கதை வரை விரிகிறது இதன் சிறப்பு. 

9. என்ன மாதிரியான மன நிலை அந்த மனிதனை இவ்வாறு செய்ய தூண்டியது என்று அறிந்து கொள்ள முற்படுவது தான் சமுதாயத்தின் பிணியை போக்கும் ஒரே வழி 

10. சற்று சஞ்சலப்படுத்தும் டாகுமெண்டரி தான். 

ஞாயிறு, டிசம்பர் 18, 2022

முதுமையில் வறுமை



ஐம்பது ஐம்பத்தைந்து வயதை ஒத்த பெரியவர்களிடம் பேசினீர்கள் என்றால் ஜம்பமாக தங்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள் அல்லது செட்டில் ஆகிவிட்டார்கள் என்று சொல்வதை பார்க்கலாம். சாரி. கேக்கலாம். இந்த ஜம்பங்கள் பொதுவாக கல்யாண வீட்டில் அல்லது ஏதேனும் விசேஷத்தில் நடக்கும்.

இந்த பெருமை பீதாம்பரம் எல்லாம் ஒரு வயது வரை தான். சிலருக்கு ஐம்பத்தி எட்டு. சிலருக்கு எழுபது. ஏன் ஐம்பத்தி எட்டு என்றால் வேலையிலிருந்து ஒய்வு பெரும் வயது அது. அதற்குப்பிறகு மாத சம்பளம் என்பது கிடையாது. பென்ஷன் என்பது 2005க்கு முன் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான். அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு மூவாயிரம் சொச்சம் போல தான் வரும். அடுத்ததாக ஏன் எழுபது வயது என்கிறேன் என்றால் அந்த வயதில் உடல் தளர்ந்துவிடும். பென்ஷன்தாரராகவோ அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவோ இருந்தாலும் அதாவது வெல்திற்கு (wealth) பஞ்சமில்லை என்றாலும் ஹெல்த் தன் வேலையை காட்டும் மூப்பு அது. உடலில் வலுவிருக்காது. யோகாசனம் உடற்பயிற்சி ஆரோக்யமான உணவு என இதையெல்லாம் பின்பற்றுகிற ஆள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தில் 'தன் உடல் பேணல்' என்னும் ஒரு சங்கதியே யாரிடமும் இல்லை. ஆகையால் அந்த தள்ளாத வயதில் ஓட்டம் எல்லாம் ஓடி முடிந்த பிறகு தன்னுடைய பிள்ளைகள் தன் அருகில் இருந்தால் தேவலாம் என்று தோன்றும். பெயரன் பெயர்த்திகளை கொஞ்சலாம் என்ற எண்ணம் தலைதூக்கும். ஆனால் நடப்பது என்ன?

உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒரே ஊரிலேயே படித்து அங்கேயே வேலை தேடி திருமணம் செய்து உற்றார் உறவினர் என்று சொந்தபந்தத்துடன் வாழ்ந்தோம் என்ற கொடுப்பினை 80க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இல்லை. படிப்பிற்கும் பரதேசம் செல்ல வேண்டும். திரவியம் தேடுவதற்கும் திரைகடல் ஓட வேண்டும். மணம். அது மனம் போன போக்கில். பெற்றோரின் நிலைமை? ஊனிற்கே ஊன்றுகோல் இல்லை எனும்போது மற்றவை கேள்விக்குறியாய் நிற்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

இது நம் தலைமுறையின் எழுதப்படாத நியதி. குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எந்த பெற்றோரானாலும் தமது பிள்ளைகள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். ஆகையினால் தற்போது பெற்றோரை விட்டு பிரிந்திருப்போர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம். மாறாக ஓரிரு நாட்களுக்கு தொலைபேசியில் ஒரு உரையாடல் அல்லது குழந்தைகளை அவர்களிடம் வீடியோ காலில் அடிக்கடி காணித்தல் போன்று சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் பெற்ற கடனை முடிந்த வரை தீர்த்தல் நலம்.

ஆனால்,

ஆனால்,

இனிமேல் வெகு கவனமாக இருக்க வேண்டியது நீங்களும் நானும் தான். அதாவது நாற்பதை தொடும் பெற்றோர்கள் தங்களது ஆழ்மனதில் அச்சாரமிட்டு கொள்ளவேண்டியது இதைத்தான். உங்களது குழந்தைகள் முதுமையில் உங்கள் அருகில் இருக்காது. அட இது தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் கேட்கலாம்?

தெரிந்தது தான். இல்லை என்று சொல்லவில்லை. இன்று நீங்கள் பரதேசம் சென்றிருப்பது உங்களது திறமையினால். அல்லது உங்களது முயற்சியினால். வெகு சிலர் மட்டுமே நமது தலைமுறையில் படிப்பிற்காக வெளியே சென்றிருப்பர். மற்றவரெல்லாம் பணியின் பொருட்டே உள்ளூரில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் நாளை உங்கள் பிள்ளை வெளியில் சென்று படிக்க போகிறது என்றால் அது உங்களது இருபது இருபத்தைந்து வருட உழைப்பின் ஊதியத்தில் தான். மெரிட் மற்றும் ஊக்கத்தொகை கேஸ்களை இதில் புறந்தள்ளி விடலாம். படிப்பதற்காக டாட்டா காட்டிவிட்டு செல்லும் பிள்ளைகள் மீண்டும் வருவது என்பது அவர்களுக்கு இயலாத காரியம். நாக்கில் தேன் தடவி விட்ட பிறகு சுவை தெரியாமல் இருக்குமா என்ன? தவிரவும் எப்பொழுதேனும் அவர்களை பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்களை ஒருவேளை நீங்கள் அழைத்தால் 'யாரையும் சார்ந்து இருக்காமல் தைரியமாக தனித்து வாழுங்கள். முதுமையை என்ஜாய் செய்யுங்கள்' என்ற நமக்கே வாழும் கலையெல்லாம் சொல்லித் தருவார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். என்னுடன் பணிபுரியும் ஒருவர் தான் ஒய்வு பெரும் நேரத்தில் தன் பிள்ளையை கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுவும் எப்படி என்றால் தனது முப்பது வருட சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி அனுப்பினார். கிளம்பிய அந்த பிள்ளையோ படித்து முடித்த பின் குடியுரிமை கிடைக்கும் பொருட்டு அங்குள்ள வெளிநாட்டு பெண்ணை மணம் புரிந்து கொண்டான். மருந்துக்கும் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை. கடனை வட்டியுடன் இவர் கட்டிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு ஒரு முறை மாரில் வலி வந்தபோது உடன் பணிபுரிந்த ஒய்வு பெற்ற ஊழியர்களின் பொருள் மற்றும் உடல் உதவியுடன் பிழைத்துக்கொண்டார். இது போன்றவைகள் உங்களைச்சுற்றியும் நடந்துகொண்டிருக்கும். அவசரகதியில் இதை உணரக்கூட நமக்கு நேரமில்லாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருப்போம்.

சரி. என்ன [பண்ண வேண்டும்?

1. உண்ணாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சேர்த்த செல்வத்தை முழுவதும் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கிவிடாதீர்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும். என் குழந்தை என் ரத்தம் என்ற ஈர வெங்காய செண்டிமெண்டெல்லாம் வேண்டாம். நாளை வயதான காலத்தில் துணையின்றி மகனோடோ மகளோடோ தள்ளாத வயதில் ஒரு வேளை உணவுக்கு கூச்சத்துடன் நிற்பதை மனதில் இருத்தி பாருங்கள். அவ்வாறெல்லாம் என் குழந்தை செய்யாது என்று நினைத்தால் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அவர்களது கடைசி காலத்தில் என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு முறை நிறுத்தி கவனித்து பாருங்கள். இதில் பன் மடங்கு பெருகித்தான் நாளை நமக்கும் வரும் என்ற நிதர்சனத்தை அவதானியுங்கள். கர்மா ரிட்டர்ன்ஸ் போன்ற வஸ்துவுக்கே நான் போகவில்லை. தலைமுறை இடைவெளி அந்த அளவுக்கு இருக்கிறது.

2. ஓய்வுக்கு பின் மாத பென்சன் வந்தால், இறக்கும் வரை நீங்களும் உங்கள் துணையும் மூன்று வேளை உணவு, கோவில் மற்ற போக்குவரத்து செலவுகள் என ஒப்பேற்றிவிடலாம். தனியாரில் தான் வேலை பார்க்கிறேன் என்று நீங்கள் சொன்னால், ஓய்வுக்குப்பின் செலவழிப்பதற்காக இன்றே உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தபட்சம் முப்பது சதவீதத்தை சேமித்து வைத்து விடுங்கள். இன்று மாதச்செலவு முப்பதாயிரம் என்றால் முப்பது வருடத்தில் மூன்று லட்சம் ஆகலாம். வெறுமே பணத்தை வைக்காமல் ம்யூச்சுவல் பண்ட், ஸ்டாக், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். 6% முதல் அதிகபட்சம் 15% தான் வட்டி கிடைக்கும். ஒன்றை இரண்டாக்குகிறேன் என்று வேறு எதிலாவது போட்டு ஏமாந்துவிடாதீர்கள். முதலுக்கே மோசம்.

3. முன்பே சொன்னது போல், பேங்க் பாஸ்வர்ட், பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை துணையிடமோ உற்ற நட்புகளிடமோ சொல்லி வைப்பது மிக நன்று. எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் இந்த தகவல் அவர்களை காப்பாற்றும். இன்றைய தேதியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அனாமத்தாக இந்திய வங்கிகளில் கோரப்படாமல் கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

4. அறுபது வயதில் ஓய்வுபெற்ற பின் அதுவரை அறக்க பறக்க ஆறாவது கியரில் ஓடிய வாழ்க்கையாக இல்லாமல் மிக மெதுவாக நகரும் வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்ளுவது என்பது சிரமமான ஒன்று தான். செய்து தான் ஆக வேண்டும். அதுவரை அர்த்தம் இல்லாமல் பேசிய பேச்சுக்களை கேட்பதற்கு அலுவலகத்தில் ஒரு கூட்டம் இருந்திருக்கும். ஆனால் சாய்வு நாற்காலியில் நீங்களும் அருகில் உங்கள் துணையும் தான். இதுநாள் வரை உங்கள் துணையிடம் நீங்கள் எந்த அளவுக்கு அன்பு செலுத்தியிருக்கிறீர்கள் என்பதை ஓய்வுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஒய்வு பெற்ற ஒரே வாரத்தில் சூசைட் அட்டெம்ப்ட் செய்தார்.

5. 'காஃபி போடவா?' என்று கேட்க யாரும் இல்லாமலோ அல்லது 'கிழம் இன்னும் இழுத்துட்ருக்கு' போன்ற வசவுச்சொல்லோ கேட்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உயிருடன் இருக்கும்பொழுதே சொத்தை வாரிசுக்கு எழுதி வைத்து விடாதீர்கள். 'என்னுடைய இறப்புக்கு பின்' என்று தெளிவாக உயில் எழுதி வைத்துவிடுங்கள். அன்பு கின்பு என்றெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வாரிசுகளின் வாழ்க்கைத்துணையை பொறுத்துதான் அதெல்லாம்.

6. ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக துணை நம்முடன் இல்லையென்றால் மிச்ச சொச்ச வாழ்க்கையை தனிமையில் கழிக்க முடியாது. அது ஒரு கொடிய சாபம். முதுமையில் தனிமை என்பதைத்தான் வறுமை என்று குறிப்பிடுகிறேன். ஆதலினால் இப்பொழுதிருந்தே ஒரு ஆத்மார்த்தமான நட்பை மெனெக்கெட்டு வளர்த்து கொள்ளுங்கள். வயதான காலத்தில் பொலபொலவென்ற பேச்சுத்துணைக்கு உதவும். பேங்கில் ஏன் வயதானவர்கள் கூட்டம் என்று புரிகிறதா? அல்லது தனியே இருக்கும் போது படிப்பது, வரைவது படம் பார்த்தல் அல்லது தூங்குவது என ஏதேனும் ஒன்றை பழக்கி உங்கள் மனதை திசை திருப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் கடிவாளம் போடுவது என்பது கடினம். உதாரணத்திற்கு சேர்ந்தாற்போல் உங்களால் இரண்டு பக்கம் எந்தவித டைவெர்சனும் இல்லாமல் வாசிக்க முடிகிறதா?

7. இந்த ஸ்ட்ரெஸ் டென்ஷன் போன்ற நோய்களில் இருந்து தப்பித்தால் நாம் அறுபது வயதில் இருந்து அதிகபட்சம் தொண்ணூறு தொண்ணூற்றைந்து வரை உயிருடன் இருக்கலாம். இப்பொழுதிருந்தே செலவை முடிந்த மட்டும் சுருக்கிக் கொள்ளலாம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழலாம். தலையை அடமானம் வைத்து வேண்டாம். ஆகையால் வருமானம் இல்லாமல் அந்த முப்பது வருடத்தை சமாளிக்க இப்போதே சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும்.

8. அதிக நாட்கள் உயிரோடிருந்தாலும் எவ்வாறு வாழ்கிறோம் என்பது அதி முக்கியம். ஆதலால் கொஞ்சம் உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு, தியானம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி என்று உங்கள் உடலுடன் உரையாடி வலு சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதி வரை நம்முடன் பயணிக்க போவது நம்முடைய உடல் மட்டுமே. Wealthy health is a must.

9. இறுதியாக உங்கள் வீட்டில், வீட்டுக்கு அருகில் அல்லது நீங்கள் சந்திக்கும் வயதானவர்களுடன் அவ்வப்போது பத்து பதினைந்து நிமிடம் நேரம் செலவழியுங்கள். யாராவது பேச மாட்டார்களா என்று நாமே பின்னால் தேடப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

செவ்வாய், டிசம்பர் 13, 2022

மாமி கடையும் மார்க்கும்



கையேந்திபவன்களில் சுத்தம் என்றுமே கவலைக்கிடம் தான். பாத்திரம் கழுவுவது முதல் இலையில் பரிமாறப்படும் உணவு வரைக்கும் மனதிற்கும் உடலிற்கும் அதில் தொந்தரவு செய்யும் சமாச்சாரங்கள் அதிகம். அதையெல்லாம் கடந்து தான் நம்மவர்கள் உண்டு திரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்க ஊரகத்தில் இருக்கும் பி செக்டர் மாமி கடையில் கூட்டம் என்றுமே அலைமோதும். எந்த வகையில் கூட்டம் இருக்கிறது என்றால் இரவு 8 மணிக்கு மேல் சென்றால் சாம்பார் வாளியை நம்மீது கோரி ஊற்றாத குறையாக ' எல்லாம் காலி. இன்று போய் நாளை வா ' என்பார்கள். மறுநாள் சென்றால் மட்டும் உடனே கிடைத்துவிடுமா என்ன ? திருவிழாக்களில் இலவசமாக கொடுக்கப்படும் ஜூஸ் பாக்கெட்டுக்கு மல்லு கட்டுவது போல கூட்டம் அம்மும். அவர்களையெல்லாம் தாண்டி ' அண்ணே , ஹாஃப் பொங்கல் , ஒரு மெது வடை ' என்று சொல்லி அவர்களுக்கு கேட்டு உடனே தட்டை நீட்டிவிட்டால் போதும் , உங்களுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார் என்று மார் தட்டிக் கொள்ளவும். அதுவும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். ஊரகத்து இல்லத்தரசிகள் அனைவரும் விடுமுறை. ஏழு மணி வாக்கிலே லுங்கியை மடித்து விட்டு மேலே ஒரு டிஷர்ட்டை மாட்டிக்கொண்டு ஒரு கூடையில் டிபன் பாக்ஸும் தூக்குவாளியையும் கொண்டுவந்து ஜபர்தஸ்தாக அந்த கரும்பலகையில் இறக்கி வைப்பார்கள் கனவான்கள் (கணவர்கள்). போதாக்குறைக்கு அன்று மட்டும் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்துவிடும் வாண்டுகளை இவர்கள் தலையில் கட்டிவிடுவார்கள்.

உணவின் ருசிக்கோ உடலின் ஆரோக்யத்துக்கோ என்றுமே அந்த உணவகத்தில் பங்கம் இல்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு கூட்டமும் வந்திருக்காது , ' கடையை சாத்தியாச்சு. கிளம்புங்கோ ' என்றும் அவர்களும் சொல்லியிருக்க முடியாது.

பிரச்சினை அதுவல்ல. ஒரு நாள் இரவு 7 மணியிருக்கும். கோடைகாலமாதலால் போகலாமா வேண்டாமா என்று சூரியன் தயங்கிக்கொண்டிருக்கும் ஒரு விதமான அந்திவேளை. அந்த வழியாக வந்தபொழுது மாமி கடையின் மார்க்கை பார்த்தேன். மார்க் என்பது அவரது அடைமொழி. மார்க்கை எந்த கோலத்தில் பார்த்தேன் என்றால் , அவர் எக்லவ் கடையின் பின்புறம் உள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார். மனிதன் காலையிலிருந்து பரிமாறி பரிமாறி ஓய்ந்துவிட்டாரோ என்று சந்தேகித்த நேரத்தில் உற்று கவனித்தால் அவரது இடது கை இடுப்பிற்கு கீழே இருக்கிறது. சுவற்றில் ஈரம் தெரிகிறது. சிறுநீரை பெருநீராக கழித்துக்கொண்டிருந்தார். இது எப்போது பொதுக்கழிப்பிடமாக மாறியது என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் கிராதக புத்தி வேறு மாதிரி யோசிக்க வைத்தது. ஆண்களில் பெரும்பாலோருக்கு சிறுநீர் கழித்து கை கழுவும் பழக்கம் இருப்பதில்லை. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் இது செல்லும். எவருடைய செல்பேசியையும் பொருளையும் தொடுவதற்கு முன் யோசித்துக் கொள்ளுங்கள்.

அந்த சந்தேகத்துடனேயே மார்க்கை பாலோ செய்தேன். மருந்துக்கும் அவர் பேண்ட்டில் கூட கையை துடைக்கவில்லை. வெகு வேகமாக பின்வழியாக உள்ளே சென்றவர் , ' அண்ணே ரெண்டு இட்லி ' என்றவருக்கு *ஞ்சை தோட்ட கையால் பரிமாறிக்கொண்டிருந்தார். போதாக்குறைக்கு இவர் கையால் தான் பில்டர் காஃபி சாப்பிடுவேன் என்று ஒரு ஓய்வு பெற்ற மேலாளர் ஒற்றைக்காலில் தவம் புரிந்து கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை அங்கு சென்றதே இல்லை. மேலும் அந்த காட்சி மனக்கண்ணை விட்டு அகல மறுக்கிறது. இருபாதயிரம் மக்கள் நம்பி வரும் ஒரு உணவுக் கூடத்தில் ஒரு குறைந்தபட்ச தன் சுத்தத்தையாவது பேண வேண்டாமா ?

இது அந்த கடையில் மட்டுமல்ல. ஊரகத்தில் உள்ள எல்லா உணவகங்களுக்கும் இதே நிலை தான். ஊரகம் ஏன் ? ஊரில் உள்ள ஒளிர்ந்து மிளிரும் படோடோப கடைகளிலும் இதுதான் நிலைமை.

என்ன செய்யலாம் ? முடிந்தவரை வீட்டிலேயே உண்டு பணத்தையும் ஆரோக்கியத்தையும் மிச்சப்படுத்தலாம் அல்லது கண்டும் காணாமல் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்.

புதன், நவம்பர் 30, 2022

UTP-5


 

அலுவலகம் நிமித்தம் தினமும் மேற்கொள்ளும் மூன்று மணி நேர புறநகர் ரயில் பயணத்தில் தான் அவரை அவனுக்கு பழக்கமாகியிருந்தது. இந்த அவன் கேசவன். அந்த அவர் கோபாலன்.


பரிச்சயமில்லாத மனிதரிடம் பேசுவது கேசவனுக்கு மிகவும் பிடிக்கும். தெரிந்த மனிதர்களை விட தெரியாத மனிதர்களின் அணுக்கம் இவனுக்கு அலாதியானது. காரணம் இவர்கள் இவ்வளவுதான் என்ற முன் முடிவில் கேசவன் கெட்டிக்காரன். இதற்கு மேலும் இவர்களிடம் தெரிந்துகொள்ள சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்பதால் புது மனிதர்களின் சகவாசத்தை நாடுவான்.


தினமும் மூன்று மணி நேர ரயில் பயணம் என்பதை இவனுடன் பயணிக்கும் பலர் நொந்துகொள்ளவதுண்டு. ஆரம்பத்தில் அவர்களுடன் சேர்ந்து இவனுக்கும் நொந்துகொள்ளத்தான் பிடித்திருந்தது. இரண்டரை ஜான் வயிற்று பிழைப்புக்கு எல்லாவகையான குட்டிகரணமும் போட்டுத்தான் ஆகவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் ஏற்று ஓடிக்கொண்டிருந்தான். இவனுக்கு ஒன்றரை, மனைவிக்கும் மகனுக்கும் சேர்த்து அரை அரை ஆக இரண்டரை ஜான் வயிறு என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.
ஆரம்பத்தில் அன்றைய செய்தித்தாள்களை வாங்கி மோந்து மேய்ந்து பார்த்தான். அவை செய்திகளாக இல்லாமல் கருத்துக்களை திணிப்பவையாக இருந்தன. 'நீ இப்படி யோசிக்காதே, மாறாக இது போல் அவதானி' என்று ஒவ்வொரு செய்தித்தாளும் இவனை இடது வலம்
நடுப்புறம் என்று பாடய்படுத்தி குழப்பின.


பொதுவாகவே யாருடைய கருத்துக்களிலும் உடன்படாதவன் கேசவன் என்பதால் இரண்டு மூன்று வாரங்களில் அவனுக்கு இந்த செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மிகவும் அயர்ச்சியை கொடுத்து பயணத்தை மேலும் களைப்பாக்கியது. அலுவலகம் முடிந்து வந்த ஒரு நன்நாளில் ஆரியகௌடா சாலையில் இருக்கும் முருகன் வாடகை புத்தக நிலையத்தில் தன்னுடைய
தகவல்களை பதிந்து கொண்டு புத்தகங்களை வாடகைக்கு எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தான். மாவட்ட கிளை நூலக நூல்களை விட இந்த வாடகை புத்தகத்தின் புதுப்புது வரவுகள் இவனுக்கு கிளர்ச்சியை கொடுத்திருந்தன. அதை விட நாற்பது ஐம்பது ஆண்டு கால் பழைய சிற்றிதழ்களின் பைண்டிங் தொகுப்பு இவனை புது உலகிற்கே இட்டுச்சென்றது. அந்த புராதன
புத்தகங்களின் பக்கத்தின் கீழ் மற்றும் மேல் விளிம்பில் இருக்கும் துணுக்குச்செய்திகள் ஏனைய விளம்பரங்கள் அந்த காலத்திற்கு இவனை லகுவாக கடத்தின. ஆனால் இந்த அரத பழசான பைண்டிங் செய்யப்பட புத்தகம் தான் இவனது தலையெழுத்தை மாற்றிப்போடும் என்று அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

இவன் படித்துக்கொண்டிருந்த 'பொம்மை' என்ற ஒரு பழைய நாளிதழின்
தொகுப்பை பார்த்துதான் முதல் பத்தியில் நமக்கு அறிமுகமாகிய கோபாலன் இவனுக்கும் அறிமுகமானார்.


'இப் யூ டோன்ட் மைண்ட், என்ன புக் சார் இது?' என்றார்.



ஏறிட்டு பார்த்தவன் அருகில் அவர் ஆர்வமாக அந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து அதன் விவரங்களை கூறினான்.



பொக்கிஷம் சார். முந்தின பக்கத்துல ஒரு தொடர்கதையோட பேரு வந்தது
பாத்தீங்களா? 'வானம்பாடிக்கு ஒரு விலங்கு'னு ஒரு நாவல். அது லக்ஷ்மி எழுதினது. அப்போல்லாம் அத விடாம வாராவாரம் எதிர்பார்த்து உக்காந்து படிச்சிருக்கேன். இந்த புத்தகத்த பாத்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்துச்சு’.



கேசவன் அவர் கேட்காமலேயே அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்தான்.



தொட்டாலே உடஞ்சிடும் போல இருக்குல்ல’ என்றவர் உடனடியாக அந்த புத்தகத்தை கையில் ஏந்தி முகர்ந்து பார்த்தார். இந்த வாசனைலாம் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது சார். அம்பது அறுபது வருஷம் இருக்கும்ல?’



புத்தகத்தை வாங்கி படித்தவர் பிறகு சிறிது நாளில் கொஞ்சம் கொஞ்சமாக இவனுடன் ஐக்கியமாகி விட்டார். பரஸ்பர புத்தக தகவல்களை பரிமாறிக்கொண்டனர். 1950ஆம் வருடத்திய சூப்பர் ஹிட் தொடரான பொன்னியின் செல்வனில் ஆரம்பித்த வரலாற்று தேடல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி இழுத்தது. நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுக்கட்டுரைகள், மொகலாயர்களின் படையெடுப்பு, பாண்டியர்கள், களப்பிரர்கள், ஓலை சுவடிகளின் பெயர்ப்புகள் அதன் முன் வந்த கிறிஸ்துவின் பிறப்பு அதற்கு முந்தைய சங்ககால பாடல்கள், இராமாயணம் மற்றும் ஆதியை விளக்கும் மகாபராதம் என பேரு வெடிப்பு காலம் வரைக்கும் அலசினார்கள். ரயில் பயணம் அவனுக்கு போதிமரம் போல் ஆகியது.

ஒருமுறை கடவுளின் இருப்பை பற்றிய சம்பாஷணை மிக நீண்டு ஓடியது.

'சொல்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது'



உரையாடல்களின் அதுவும் தர்க்கம் நடக்கு இடங்களில் போடப்படும் இந்த பீடிகை பெரும்பான்மையான நேரங்கள் தவறாகத்தான் எடுத்துக்கொள்ளத்தூண்டும். ஆனால் கேசவனுக்கு இந்த முறை அப்படி அமையவில்லை.

'இன்னும் உங்களுக்கு முதிர்ச்சி வரலைன்னு சொல்லுவேன்'



அவரது பேச்சு அன்று வெடுக்கென்றிருந்தாலும் கேசவன் பொறுமையாக இருந்தான்.

'ஒரு பொருளை அல்லது கொள்கையை பார்த்த பின் நம்புவதை விட, நம்பிக்கையுடன் பார்க்கத்தொடங்க வேண்டும். See and Believe கிடையாது. Believe and See' என்றார்.



கேசவனுக்கு அந்த சித்தாந்தம் எதனுடனும் ஒத்துப்போவது போலத்தான் தெரிந்தது.

'நீங்க புட்டபர்த்தி சாய் பாபாவை பத்தி என்ன நினைக்கிறீங்க'



எனக்கு அவரை போட்டோல பாத்துதான் தெரியும். வேறு ஒன்னும் அவரைப்பத்தி தெரியாது என்றான்.



எனக்கு முப்பத்தஞ்சு வயசு இருக்கும். குடும்பத்துல சொல்லொண்ணா கஷ்டம். எங்கயாவது கருப்பு துளைக்குள்ள போய் தொலைஞ்சி போயிடலாமானு யோசிக்கிறேன். ஒரு ஆறுதல் வார்த்தை சொல்றதுக்கு கூட யாரும் இல்லை. இருந்தாலும் தோணலை. ஏதோ ஒரு சக்தி என்னை புட்டபர்த்தி நோக்கி இழுத்தது. அங்க போனேன். கூட்டத்துல உக்காந்துருக்கேன். அப்போ பாபா என்னை நோக்கி கைய காமிச்சு பக்கத்துல வா அப்டின்னு சைகைல கூப்புடுறார். என்னைய எதுக்கு
கூப்புடுறார்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. பக்கத்துல போன உடனே என்ன அவருக்கு பக்கத்துல உக்கார வச்சிக்கிட்டு தோள்ல தட்டிக்கொடுத்து நான் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறேன்னு அவரே சொல்லறார். அவருக்கு எப்பிடி தெரிய வந்துச்சுன்னு எனக்கு ஒன்னும் புரியல. எல்லாம் சரியாயிடும்னு ஒரு தீர்வையும் சொல்றார். எனக்கு மனசு அமைதியாயிடுச்சு. அப்படியே கொடில போட்ருக்க துணி போல ரொம்ப லேசா உணர ஆரம்பிச்சேன். ஒரு பரிபூரணம் கிடைச்ச மாதிரி பீலிங். அவரு
சொன்னது போல கஷ்டம் எல்லாம் விலகிடுச்சு. அன்னைலேந்து இணைய வரைக்கும் நான் தீவிர சாய் பக்தனா இருக்குறேன்.’

'ஓகே புரியுது சார். இதேமாதிரி எல்லாருக்கும் நடந்துரும்னு சொல்ல முடியாதுல'

 

'அதைத்தான் கேசவன் சொல்றேன். நீங்க ஆரம்பத்திலேயே சந்தேகப்படறீங்க. அப்புறம் மிராக்கிள் நடந்தாலும் எதேச்சையா நடந்துதான்னு சப்பைக்கட்டு கட்டுவீங்க'

 

'யதேச்சை தான். சப்பைக்கட்டு தான். அதுல ஒன்னும் சந்தேகம் இல்லையே'

 

'பாத்தீங்களா. நம்பிக்கை இருந்தான் உணர முடியும்'

 

'இப்டியே எவ்ளோ நாள் தான் சொல்லுவீங்க. நான் நம்புறேன். எப்படி உணரணும் அத சொல்லுங்க பாக்கலாம்'.

 

'உங்களுக்கு நம்பிக்கை வரலை. நம்பினா உணர முடியுமான்னு டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க. அது அது உணர்வுபூர்வமா நடக்கணும். உங்களுக்கு இடது பக்க மூளை ரொம்ப வேலை செய்யுது. அதான் அதிகப்படியா தர்க்கம் பண்றீங்க'.

 

'தர்க்கம் பண்ணாம விட்டுட்டா உண்மை எப்பிடி வெளில தெரியும்'

 

'சரி. விடுங்க. நான் என்னமோ சாமி பூதத்துக்கு ப்ராண்ட் அம்பாசிடர் மாதிரி உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். அப்புறம் நமக்குள்ள மனஸ்தாபம் வந்துடும்'.

 

கேசவனுக்கு பொறி தட்டியது

 

'கோபாலன் சார். நீங்க தான் சாமி பத்தி சொல்லிட்டீங்க. பேய் பூதம் பத்தி ஏதும் உணர்ந்திருக்கீங்களா?'

 

'என்ன கேசவன். ஏன் வாய் பிடுங்கிறீங்களே'

 

'அப்போ ஏதோ அனுபவம் இருக்கு. சொல்லுங்க சார். இன்னைக்கு புக்க மூடி வச்சிடறேன்'.

 

'விடமாட்டிக்கிறீங்க'

 

'இல்ல. இதுக்கும் என்ன நம்பிக்கையோட தான் பாக்கணுமா? இல்ல. வேற ஏதும் இருக்கா?'

 

'நீங்க கடைசி வர சந்தேகத்தோடதான் பாப்பீங்க போல?'

 

' இல்லை இல்லை சார். நான் நம்புறேன். நீங்க சொல்லுங்க'

 

'சொல்றேன். என்னோட அனுபவமும் இருக்கு. என்னோட நண்பனோட அனுபவமும் இருக்கு. ஒன்னொன்னா சொல்றேன். கல்லூரி படிப்பை முடிச்சிட்டு இளந்தாரியா சுத்திக்கிட்ருந்த வயசு அது. எதுக்கும் பயம் கிடையாது. வந்து பாருன்னு நிக்கிற கோஷ்டி. ஒரு நாள் நைட்டு இரண்டாவது ஆட்டம் சினிமா பாத்திட்டு வரலாம்னு கிளம்பி போறோம். அப்போல்லாம் எங்க ஊர்லேந்து யாரும் ரெண்டாவது ஆட்டத்துக்கு போகமாட்டாங்க. ஏன்னா சுடுகாட தாண்டி தான் தியேட்டருக்கு போகணும். சில நாள் எரிஞ்சிட்டு  இருக்கும். வெடப்பா எந்திச்சி நிக்கிறத பாத்தே நிறைய பேருக்கு ஜன்னி வந்திருக்கு. அன்னைக்கு ரெண்டாவது ஆட்டம் படம் பாக்க போனதே ஒரு வீம்புக்கு தான். என்ன ஆகுதுன்னு பாக்கலாமேன்னுட்டுதான். திரும்பி வந்திட்டு இருக்கோம். சுடுகாட தாண்டுற சமயம் தான் அந்த குரல் கேட்டுச்சு. என் கூட வந்த கண்ணன் தான் எவ்ளோ சொல்லியும் கேக்காம திரும்பி பாத்தான்.  ஒரு சமாதி மேல ஒரு உருவம் ஒன்னு உக்காந்திருக்கு. அலை அலையா தெரியுது. தலை நிறைய பூவு. முகதத்துல மஞ்சள் தடவி அந்த நேரத்துல எப்பிடின்னு எங்களுக்கு லேசா உதர ஆரம்பிக்குது. எங்களுக்கு அதுக்கும் ஒரு பத்தடி நீளம் இருக்கும். அது அங்க நின்னுட்டே அதோட கைய்ய பத்தடிக்கு மேல நீட்டி கண்ணனோட கழுத்த பிடிச்சது. கண்ணன் கத்துறான். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரில. கண்ணனை பிடிச்சி நாங்க இந்த பக்கம் இழுக்குறோம். ஒரு ரெண்டு நிமிஷம் இந்த போராட்டம் நடந்துருக்கும். அந்த உருவம் தன்னோட இன்னொரு கைய்யால எங்க எல்லாரையும் வேகமா அறைஞ்சிது. அவ்ளோ தான் தெரியும். அடுத்த நாள் பெரியவங்க வந்து எழுப்பின பின்னாடி தான் எந்திரிச்சோம்.  சொல்லி வச்ச மாதிரி எல்லோரோட கன்னத்திலேயும் அஞ்சு விரல் பதிஞ்சிருந்தது. எங்களுக்கு மந்திரிச்ச தாயத்தை கட்டி விட்டாங்க.

 

"இது உண்மையா நடந்துச்சா என்ன?'

 

'பாத்தீங்களா இதனால்தான் நான் யார்கிட்டையும் சொல்றது இல்ல. ஏன்னா சொன்னா நம்ப மாட்டாங்க. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் அப்படிங்கிறது எனக்கு ரொம்ப பொருந்திப்போகுது'

 

'சரி சார். நன் சந்தேகப்படல. வேற எதுனாச்சும் இதே மாதிரி அனுபவம் இருக்கா?'

 

'எதுக்கு. திரும்பவும் என்ன கிண்டல் பண்றதுக்கா?'

 

'சும்மா சொல்லுங்க சார்'.

 

'சொல்றேன். வேலை கிடைச்சு நான் புதுசா ஜாயின் பண்ண டைம் அது. நான் ஜூனியர் அப்டிங்கிறதுனால என்ன ஆந்திரால ஒரு அத்துவான காட்டுல இருக்குற சுகர் பாக்ட்ரிக்கு அனுப்பி விட்டுட்டாங்க. கஸ்டமர் கிட்ட பில்ல காமிச்சு காசு கலெக்ட் பண்றதுக்கு. ஆனா அதுல வேறோ ஒரு பிரச்சினை இருக்குங்கிறது எனக்கு அப்போ தெரியாது.'

 

'என்ன பிரச்சினை சார்?'

 

'நான் அங்க போய் சேந்தோடனே எனக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் கொடுத்தாங்க. சுத்தி கரும்பு காடு தான். ரெண்டாளு உயரத்துக்கு இருக்கும். பகல்ல ஒன்னும் தெரில. நைட் ஆச்சுன்னா வெளில பாத்தா கும்மிருட்டு. அந்த கரும்போட தோகை அசைறது காதுல ஒரு மாதிரி சத்தத்தை உண்டு பண்ணும். போதாக்குறைக்கு சோளக்கொல்ல பொம்மை வேற. நைட் கதவ சாத்தினா அடுத்த நாள் தான் திறப்பேன். ரெண்டு நாள் ஒன்னும் தெரில. நார்மலா தான் போச்சு. மூணாவது நாள் ஆபிஸ்லேந்து வரதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. என்ன ஜீப்ல வந்து விட்டுட்டு போறாங்க. வாசல்ல ஒரு குண்டு பல்ப் மட்டும் தான். வேற வெளிச்சம் ஏதும் இல்ல. உள்ள வந்து கதவ சாத்திட்டு கட்டில்ல படுத்திருக்கேன். புக் படிச்சிகிட்டே தூங்கி விழப்போறேன். அந்த சமயத்துல கட்டிலோட தலைப்பக்கத்தை பிடிச்சி அப்பிடியே மேல யாரோ தூக்குற மாதிரி ஒரு உணர்வு. முழிச்சி பாத்தா கட்டிலோட ஒரு பகுதி மேல தூக்கி நிக்குது. எனக்கு எப்படி இருக்கும் பாருங்க. கட்டில்ல இருந்து எறங்குனேன்னு சொல்ல முடியாது. அப்பிடியே கீழ விழறேன். கட்டிலும்  யாரோ பிடிச்சி இறக்கி வச்ச மாதிரி கீழ இறங்குது. எனக்கு உடம்பல்லாம் உதர ஆரம்பிச்சிடுச்சு. கத்த முயற்சி பண்றேன். சத்தம் வரல. என் சூட்கேசுலேந்து சாமி படத்தை எடுத்து நெஞ்சுப்பக்கமா கையில பிடிச்சி அப்பிடியே குத்த வச்சிட்டு உக்காந்துட்டேன். சரியா அந்த நேரம் பாத்து கரண்ட் போய்டுச்சு. அழுதுட்டே உக்காந்திருக்கேன். கரும்பு தோகையோட சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு. அப்பிடியே உக்காந்த மாதிரியே எப்போ தூங்கினேன்னு தெரியல. முழிச்சி பாக்கும்போது விடிச்சிருச்சு. கோணல் மாணலா இருந்த கட்டில்ல சரி பண்ணிட்டு குளிக்க போய்டேன். தலைக்கு தண்ணி ஊத்திட்டு வெளில வந்து பாக்குறேன். நான் நேர போட்ட கட்டில் திரும்பவும் கோணலா கிடக்குது. எனக்கு என்ன பண்றதுன்னே. தெரியல. கட்டின துண்டோட சூட்கேசை தூக்கிட்டு வெளில ஓடி வந்துட்டேன். சுத்தியும் கரும்பு. தெரிஞ்ச பாதைல ரோட்டை நோக்கி ஓடுறேன். 'ஊ ஊ னு பின்னாடியே துரத்துர சத்தம். தலை தெறிக்க ஓடுறேன். என்ன பிக்கப் பண்ற வண்டி எனக்கு எதுத்தாப்புல தெரிஞ்சப்புறம்தான் நிம்மதி வந்துச்சு. அதை நோக்கி வேகமா ஓடுறேன். நான் ஓடி வந்ததுல துண்டு அந்த நேரமா பாத்து அவுத்து விழுந்து ஒரே அவமானமா போயிடுச்சு. உயிர் பிழைச்சது புண்ணியம்னுட்டு அன்னைக்கே பொட்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். ஆபிஸ்க்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது ஏற்கனவே அவங்களுக்கு அதுபோல அனுபவம் இருந்துருக்குன்னு. ஆனா நான் ஜூனியர்ங்கிறதுனால என்ன ஏமாத்தி அனுப்பிச்சிருக்காங்க.

 

கேக்கவே பயங்கரமா இருக்கே சார்’.

 

இதுலாம் என்ன பிரமாதம். எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் லக்ஷ்மி உபாசனம் பன்றவன். தேவையில்லாம யச்சினி உபாசனை பண்றேனுட்டு ஆரம்பிச்சு இப்போ வாழ்க்கையே தொலைச்சிட்டு நிக்குறான்'.

 

'அது என்ன சார். லக்ஷ்மி உபாசனை, யச்சினி உபாசனைனு சொல்றீங்க. ஒண்ணும் புரியலேயே'.

 

'லக்ஷ்மி உபாசனைங்கறது நல்ல தேவதைய ப்ரீத்தி பண்றது. அதாவது அதுங்களுக்கு பூஜை பண்ணி அவங்ககிட்ட நமக்கு என்ன வேணுங்கறத கேக்குறது. இதுல உபாசனைக்கான நேரம் அதிகமா இருக்கும். பலனும் லேட்டாத்தான் கிடைக்கும். ஆனா தொந்தரவு கிடையாது. ஆனா யச்சினி உபாசனைங்கறது இந்த மாதிரி இல்லை. சடங்குக்கான நேரம் கம்மியாத்தான் இருக்கும். சீக்கிரமா ப்ரீத்தி பண்ணிடலாம். ஆனா அதுங்க என்ன கேக்கும்னு தெரியாது. கேக்குரத குடுக்கலனா என்ன நடக்கும்னும் சொல்ல முடியாது. ஒரு விதமான ஷார்ட் கட். ரொம்ப டேஞ்சர். லைஃபே காலியாய்டும். அதுல ஒரு வகையான கர்ண பிசாசினி மந்திரத்த சொல்லித்தான் என் பிரெண்டு பைத்தியமாய்ட்டான்'.

 

'ஓ. கேக்குறதுக்கே பயமா இருக்கு சார்' என்று சொன்ன கேசவன் மண்டையில் விபரீதம் ஓடியது.

 

அன்று இரவே அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் இணையத்தில் கர்ண பிசாசினி மந்திரம் என்றால் என்ன என்பதை தேடினான். விவரங்களை இவன் அதிகம் தேடாமலேயே அள்ளிக்கொடுத்தது. சொல்ல வேண்டிய முறைகளை தெரிந்துகொண்டு நான்கு வரி இருந்த மந்திரத்தை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொண்டான். பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைத்து தூங்கினான். மனைவியும் மகனும் நன்றாக உறங்கி கொண்டிருந்த நடுச்சாமத்தில் எழுந்தான். மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்தான். நிலவொளி மட்டுமே இருந்தது. கைகளை கூப்பி அந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான். பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அந்த மந்திரம் அவனுக்கு மனனம் ஆகியிருந்தது. கண்களை மூடிக்கொண்டு உச்சாடனம் செய்தான். கோபாலன் கூறியிருந்தது போல அவன் அந்த செய்கையில் முழுதாக நம்பி இறங்கியிருந்தான். ஒரு அரை மணி நேரம் சென்றிருக்கும். இவனது காதுக்கருகில் குரல் கேட்டது.

 

'கேசவா'

 

இவனுக்கு உலுக்கிவிட்டது. பயத்தை வெளிக்காட்டாமல் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

 

'கேசவா'

 

'என்ன?'

 

'என்ன எதுக்கு இங்க வரவச்ச? உனக்கு என்ன வேணும்னு சொல்லு?'

 

கேசவனுக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. கண்ணை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான். தைரியத்தை வரவழைத்து கனகளை திறந்து பார்த்தான். எதிரில் எதுவும் இல்லை. இவனுக்கு பக்கவாட்டில் ஒரு உருவம் தெரிந்தது. அப்சரஸ் போல இருந்தது. கண்களை மீண்டும் மூடிக்கொண்டான்.

 

கேசவா. பயப்படாத. நான் உன்கிட்ட கேக்குறத நீ கொடுத்தீன்னா உனக்கு எல்லாமே கிடைக்கும்'

 

'நான் என்ன பண்ணனும்?'

'நீ என்ன பண்ணணும்னு நான் சொல்றேன். நான் உனக்கு என்ன செய்வேன்னு சொல்லவா?'

 

கேசவன் சகஜமாக 'சொல்லு' என்றான்.

 

'உன்னோட காதுல என்னோட குரல் எப்போதுமே கேட்டுட்டே இருக்கும். உனக்கு எதிர்ல யாரு இருந்தாலும் அவங்கள பத்தி முழு விவரத்தையும் உன்கிட்ட சொல்லுவேன். அவங்க யாரு? அவங்க எங்கேந்து வந்திருக்காங்க? என்ன பண்ணப்போறாங்க? அவங்க கிட்ட என்ன சொன்ன நீ நினைக்கிறது நடக்கும்னு எல்லாத்தையும் சொல்லுவேன். அதனால உனக்கு எங்க போனாலும் வெற்றி தான். நீ சொல்றது நடக்கும். நினைக்கிறது கிடைக்கும். பதிலுக்கு நீ என்ன பண்ணனும் தெரியுமா?'.

 

'நான் என்ன பணணும்னு சொல்லு?'

 

'உன்னோட மனைவியோட உயிர்' என்றது

 

கேசவன் திடுக்கிட்டு கண்ணைத்திறந்து பக்கவாட்டில் திரும்பி பார்த்தான். அங்கே பார்க்கவே சகிக்க முடியாத அளவுக்கு ஒரு கோரமான உருவம் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

 

தவிரவும் மிக மோசமான ஒரு துர்நாற்றம் அங்கே பரவியது. விக்கித்துநின்ற கேசவனக்கு நா எழவில்லை. விளையாட்டாக ஆரம்பித்தது வினையாக முடிந்துவிட்டதே என்ற பதைபதைப்பில் மொட்டைமாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் தலை தெறிக்க ஓடினான். உள்ளே படுக்கை அறையில் அவன் மனைவி  வாயில் ரத்தம் வழிய இறந்து கிடந்தாள். ''வென்று கதறவும், காதுக்கருகில் 'இனி நான் உன் அடிமை' என்ற குரல் கேட்டது. பித்து பிடித்தவன் போல வெளியே ஓடிவந்தவன் மொட்டைமாடிக்கு சென்றான். மீண்டும் 'கேசவா, நான் உன் அடிமை' என்றொரு குரல் கேட்டது. காதை பொத்திக்கொண்டே மாடியின் கைபிடிச்சுவரில் ஏறி நின்று அருகில்  கம்பியின் மேலே குதித்தான். க்ஷண நேரத்தில் உடல் பொசுங்கவும் அவன் காதில் கேட்ட குரல் அடங்கவும் சரியாக இருந்தது.

 

இவ்வாறு கேசவன் இறந்தது வரை எழுதியபின் லேப்ட்டாப்பை அணைத்துவைத்தான் கார்த்திக். இளம் எழுத்தாளன். இணைய மாத இதழில் அமானுஷ்ய பகுதிக்காக வாராவாரம் கதை எழுதுபவன். மணி இரவு இரண்டைத்  தாண்டியிருந்தது. எழுதுவதில் உள்ள சுவாரஸ்யத்தில் பசி, தாகம் தெரியவில்லை என்பதை உணர்ந்தவன் பிரிட்ஜிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்தான். மந்திரம் என்று மட்டும் தான் எழுதினோமே, என்ன மந்திரம் என்ற பார்க்கவில்லையே என்ற கூகிளை சொடுக்கியவன் ஒரே நொடியில் பல தகவல்களை கண்டான். கர்ண பிசாசினி மந்திரம் என்று தெளிவாக  எழுதியிருந்த ஒன்றை படித்து பார்த்தான்.  அந்த ஹ்ரீம் க்லீம் போன்ற சொற்களுக்கு அர்த்தம் புரியவில்லை. மற்ற சொற்களும் பரிச்சயமாக இல்லை. மீண்டும் ஒருமுறை சொல்லிப்பார்த்தான்.

 

அசதியால் டேபிளில் தலைசாய்த்து கண்ணயர்ந்து உறங்க சென்ற நேரத்தில் அவன் காதுக்கருகில் 'கார்த்திக்' என்றொரு குரல் கேட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திங்கள், நவம்பர் 28, 2022

கற்க. கற்ற பின் நிற்க அதற்கு தக.


பதினைந்து வருடங்களுக்கு முன்பு.

மங்கை மேடம். கல்லூரியின் இரண்டாமாண்டு faculty advisor. வகுப்பில் யாரேனும் ஒழுக்கம் குறைவாக நடந்துகொள்ளும் நேரங்களில் எல்லாம் அவர் இதை கூறுவதுண்டு. 'நீ செய்யும் காரியத்தினால் உன்னுடைய பெற்றோர்கள் பெருமைப்படுவார்களா அல்லது தலைகுனிவார்களா என்று யோசித்துக்கொள். பெற்றோர் எதிரில் இருப்பதாக நினைத்துக்கொண்டு எந்த செயலையும் செய்யுங்கள்' என்பார். காலத்துக்குமான ஒரு அறிவுரை. நமக்கே இடரும்போதெல்லாம் இதை யோசித்துப்பார்த்து முடிவெடுத்துக்கொள்ளலாம். அப்படியான ஒரு eternal logical advise. ஒழுக்க கோட்பாடுகளில் முன்வைக்கவேண்டியது. ஆழ்மனதில் வேரூன்றிவிட்டது.



 தற்போது.

மிகவும் பிடித்த ஒரு அறிவுரை என்பதால் அதை குழந்தைகளிடம் அவ்வப்போது கூறுவதுண்டு. ஏறுகிறதோ இல்லையோ, என் கடமை என்ற பாணியில் அதை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

 கடந்த பீரியாடிகள் டெஸ்டில் மகள் அசரடித்திருக்கிறாள்.

'நீ ஆசிரியரானால் மாணாக்கரிடம் எதை முன்னிறுத்துவாய்?' என்ற கேள்விக்கு நீங்கள் எடுக்கும் முடிவு உங்களின் பெற்றோர்களை மகிழ்ச்சிக்குள்ளாகிக்கிறதா அல்லது வேதனைக்குள்ளாக்குகிறதா என்ற போதனையை முன்னிறுத்துவேன் என்று எழுதியிருக்கிறாள். மகளின் ஆசிரியரும் வெகுவாக பாராட்டி மூன்று நட்சத்திரங்கள் கொடுத்துள்ளளார்.

தலைமுறை கடந்து இந்த போதனை கடத்தப்பட்டிருக்கிறதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஆசிரியர் போற்றுதும்

மாணவர்களின் எதிர்காலத்தில் உபாத்யார்களின்  பங்கு அளப்பரியது.

 

பெற்றோர் சொல்லுக்கு வீட்டில்  செவிமடுக்காத பிள்ளைகள் கூட பள்ளியில் வாத்தியாரின் சொல்லை தட்டாமல் கேட்பதுண்டு. பள்ளிக்கு சென்ற இளம்பிராயம் முதல் அலுவலகத்தில் வேலை செய்து ஒய்வு பெரும் வரை நமக்கு ஆசான்கள் ஆங்காங்கே அமைவதுண்டு. எண்ணிலடங்கா ஆசிரியர்களில் மறக்க முடியாதவர் ஐசக் சாலமோன்.

 

மூன்றாமாண்டு பொறியியல் பயிலும்போது எங்கள் கல்லூரிக்கு வந்தவர். மாணவர்களை அவர் ஹேண்டில்  செய்யும் விதமே அனைவரையும் அவரிடம் அன்பு கொள்ள வைக்கும். சேரில் உட்காரமாட்டார். ஒற்றை காலை தொங்கவிட்டு டேபிளில் தான்  உட்காருவார். மாணவர்கள் லேட்டாக வகுப்புக்கு வரும்பொழுது தயங்கி வெளியே நிற்பர். மற்ற ஆசிரியர்களென்றால் அப்படியே திருப்பி அனுப்பிவிடுவதுண்டு.

 

ஆனால் ஐசக் சார் அவ்வாறு செய்வதில்லை. 'தம்பி. இது உன்னோட க்ளாஸ். உனக்கு எப்போ வரணுமோ வா. நான் ரொம்ப அறுக்குறேனா. வெளியே கிளம்பி போய்டலாம். ஒன்னும் சொல்ல மாட்டேன். இன்டெர்னல்ஸ் கைய வைக்க மாட்டேன். ஆனா ஒரே கண்டிஷன். க்ளாஸ்ல கவனிக்கிறவன டிஸ்டர்ப் பண்ண கூடாது.

 

இவரின் இந்த அணுகுமுறைக்கு முதலில் உள்குத்தாக இருக்குமோ என்று பயந்த மாணவர்கள் அதன் பின் சொல்லாமலேயே வகுப்பில் டான் என்று ஆஜர் ஆகினர். எளிதாக அவரிடம் பழகினர்.  அவரும் இயல்பாக இருந்தார். இருவருக்குமிடையே இடைவெளி குறைந்து அணுக்கம் அதிகமாகியது.

 

இதுபோன்று தோளில் கை போட்டு வழிநடத்தும் ஆசிரியர்கள் மிக ,மிக அபூர்வம். அவர்களிடம் கல்வி கற்கும் மாணாக்கர்களும் அதே பண்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்கின்றனர். நல்வழிப்படுத்துகின்றனர்.

அவரின் உயர்வான சித்தாந்தமாக நான் இன்று வரை கருதுவது, 'Accept the Fact and Move On'.

 

ஆசிரியர் போற்றுதும்.

சனி, நவம்பர் 19, 2022

UTP-4

 

வீடே விழாக்கோலம் போல கலகலத்துக்கொண்டிருந்தது.

 

கடந்த இரண்டு முறை இதே போல இவர்கள் கூடிய போது இத்தனை சிறப்பாக இருக்கவில்லை. மருத்துவம் கைவிரித்த பெரியவர் எப்போது மண்டையை போடுவார் என்ற அளவிலே ஒரு தினுசான துக்கத்தை அனுஷ்டித்தனர். இழுத்து கொண்டிருக்கிறது என்று ரங்கபாஷ்யம் கூறும்போதெல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தனர். இந்த முறை அதுபோல இல்லை.

 

நான்கு அக்கா மற்றும் மூன்று அண்ணன்கள். பாஷ்யத்தின் அம்மா எப்போதோ தவறி விட்டாள். பாஷ்யம் பத்தாவதாக பிறந்தவன். மீதம் உள்ள இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. முதல் குழந்தைக்கும் அதாவது இவனது மூத்த அக்காவுக்கும் இவனுக்கும் உள்ள வயது வித்தியாசம் முப்பது. இவனுடைய வயசு தற்போது முப்பத்தெட்டாதலால் வாசகர்கள் இவனது மூத்த அக்காவின் வயது அறுபத்தெட்டு என்பதையும் இறக்கும் தருவாயில் இவரது தந்தையின் வயதை தொன்னூறு என்பதையும் எந்தவொரு மின்னணு சாதனங்கள் இன்றியும் கணித்திருக்கலாம்.

 

பாஷ்யத்துக்கு பத்து வயது இருக்கும்போதே இவனது அம்மா இறந்துவிட்டாள். அதன்பிறகு இவனை வளர்த்தது எல்லாம் இவனது அக்காக்கள்  தான்.ஒவ்வொருத்தராக திருமணம் ஆகி வெளியேற அடுத்த அக்கவை பிடித்துக்கொள்வான். ஒரு கட்டத்தில் விவரம் புரிந்தவுடன் தனியே தூங்க ஆரம்பித்துவிட்டான். இவன் எந்த நிலைமையில் இருக்கிறான் என்று அக்கறையாக கூட இவனது அப்பா கண்டுகொண்டதில்லை. அதனாலெல்லாம் இவனது அப்பா மீது இவன் வருத்தமாக இருக்கிறானா என்றால் இம்மியளவும் மரியாதை குறைவின்றி தான் நடத்துகிறான். சொல்லப்போனால் ஒவ்வொருத்தரும் திருமணம் மற்றும் வேலை விஷயமாக ஜாகை மாறி விட இவன் மட்டுமே இவரை அந்திம காலம் ஏன்னு இவர்கள் கணித்து கூடியிருக்கும் இத்தருணம் வரை கவனித்து கொண்டிருக்கிறான்.

 

அவனது அப்பாவுக்கு முதல் குழந்தை மேல் இருந்த பிரியம் பாஷ்யம் பிறந்தபோது இல்லை. வதவதவென்ற குழந்தை பெற்றெடுத்தலும் அதன் பின் பின்னிரவு போன்ற அகால நேரங்களில் கேட்கும் இவரது குழந்தையின்   அழுகுரலும் அவரை களைப்படையச்செய்திருந்தன. இதுமட்டுமில்லாது திருமணமாகி சென்ற பெண் பிள்ளைகளின் குழந்தைகள் என இவருக்கு ஒரு வகை சலிப்பையே கொடுத்தன. ஆனாலும் ஒரு குறையில்லாது மக்கமார்களை வளர்த்தவர் தான்.

 

பாஷ்யத்தின் அப்பா ஒரு காலத்தில் திடகாத்திரமாக இருந்தவர். கொல்லையிலிருந்த ஆட்டுரலை நகர்த்த பாஷ்யம் தன அண்ணனை அழைக்க உள்ளே போயிருந்த கண நேரத்தில் இவரே அதை ஒரு மூச்சாக தூக்கி வைத்தவர். அந்த ஓட்டம் அவர் கீழே விழும்வரைக்கும் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு படியிறங்கியவர் அதிலிருந்த தண்ணீரை கவனிக்கவில்லை. க்ஷண நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது. படுத்த படுக்கையாகிவிட்டார். தண்ணீர், உணவு, உடம்பு துடைத்துவிடுதல், மூத்திரம் என் சகலமும் படுக்கையில் என்றாகிவிட்டார். பாஷ்யம் தான் பார்த்து கொண்டிருந்த வேளையில் விடுப்பு கேட்டு சமாளித்து கொண்டிருந்தான். பிறகு நிர்வாகத்தின் கெடுபிடியில் அதையும் விடவேண்டிதாயிற்று. VAO ஆக வேலை பார்க்கும் மனைவி மற்றும் அவனது அப்பாவின் தயவில் குடும்பத்தை ஒருவாறு ஒட்டிக்கொண்டிருந்தான்.

 

பாஷ்யமின் இரண்டு குழந்தைகளில் மூத்தவளான தேஜஸ்வினிக்கு கடந்த இரண்டு நாட்களாக கொண்டாட்டமாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு அத்தை குடும்பம், லக்சம்பர்கிலிருந்து பெரியப்பா குடும்பம் மற்றும் இந்தியாவின் முக்கிய தலைநகரங்களிலிருந்து வந்த இவளது சொந்தக்காரங்கள் எல்லாம் சேர்ந்து முன்னமே சொன்னது போல ஓஹோவென்றிருந்தது.

 

தேஜஸ்வினிக்கு அத்தை  தான் என்றாலும் வயது மிகுதியாக இருப்பதால் அத்தை என்று சொல்லாமல் குழம்பி பாட்டி என்றாள். தன்னை அத்தை என்று கூப்பிடுமாறு அத்தனை முறை அவள் தேஜுவிடம் மன்றாடியது மற்ற அனைவருக்கும் கலகலப்பாய் இருந்தது.

 

பாஷ்யத்தின் இரண்டாவது அக்காதான் இந்த பேச்சை ஆரம்பித்துவைத்தாள்.

 

'ரங்கா, சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அப்பாவுக்கும் கஷ்டம் தானே. எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையா இருப்பாரு?'

 

'அதுக்கு என்னக்கா பண்ண சொல்ற?'

 

'இல்லடா. நம்ம ஊர்ல இருக்கறவங்கள கூப்டு செய்வாங்களே. அது மாதிரி செஞ்சிடலாம் டா'

 

'இல்லை புரியலைக்கா. நேராவே சொல்லேன்'.

 

'அதான் இந்த காலையிலேயே எந்திச்சி தலைல நல்ல எண்ணெலாம் தேய்ச்சிவிட்டுட்டு இரண்டு மூணு இளநீர் கொடுப்பங்கள்ள. அது மாதிரி'

 

'அக்கா. உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? அப்பாவை கொல்ல சொல்றியா?. அவரு என்ன தூக்கி கொஞ்சினதுகூட இல்லேன்னாலும் நான் தான் அவரை கடைசி காலத்துல பாத்துட்ருக்கேன்'

 

'நாங்க யாருமே இல்லேனு சொல்லலியே பாஷ்யம். அவங்க அவங்களுக்கு அவங்க சூழல் அந்த மாதிரி. என்ன கல்யாணம் பண்ணிட்டு பிறந்த வீட்டுல இருக்க சொல்றியா?'

 

'உன்னைய சொல்லல. அண்ணனுங்களுக்கெல்லாம் என்ன?. அவங்க பத்துக்கலாம்ல. என்னால முடியலன்னு நான் சொல்லல. ஆனா நம்மள அவரு ஒரு குறையும் இல்லாம தான் பாத்துக்கிட்டாரு. நாம அத திருப்பி செய்யணும்ல. எனக்கு அதான் ஆதங்கம்'

 

அக்காள்கள் இரண்டு பேர் அவனது அண்ணனை பார்த்தனர். அவர்களிருவரும் அமைதியாக இருந்தனர்.

 

'அண்ணனுக்கு வேலை அப்டி இருந்துச்சுப்பா. அதனால போய்ட்டாங்க. இங்கே இருந்தா நாலு காசு பாக்க முடியுமா?'

 

'நாலு காசு பாக்குறதுக்கு நாம பரதேசம் போறது ஒண்ணும் பிரச்சினை இல்ல. ஆனா கூட போய் வச்சிக்கிலாம்ல. அது ஏன் பண்ணல. அவரு ஏன் மூஞ்ச மட்டும் எவ்ளோ நாள் பாதித்திருப்பாரு?'

 

இப்பொழுது பாஷ்யத்தின் மூத்த அண்ணன் வாய் திறந்தான்.

 

'பாஷ்யம். நீ சொல்றது எல்லாமே சரி தான். அதுல எதையுமே நான் மறுக்கவும் இல்லை. ஆனா வாழ்க்கைல எல்லாருக்குமே எல்லாமே அமைஞ்சிடாது. எனக்கு நல்ல வேலை அமைஞ்சது. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனா அப்பாவை அங்க கூட்டிட்டு போற மாதிரி சூழல் அமையல. இதுக்கு மேல நீ புரிஞ்சுப்பேனு நினைக்கிறன்' என்றார்.

 

'ஆனா ஊனா ஏதாவது காரணம் சொல்லிடுங்க.'

 

'இல்லைடா. அப்பா மேல பாசம் இல்லாமையா நாங்க வந்து பாத்துட்டு பாத்துட்டு போவோம்?'

 

'ஆங். நல்ல வந்தீங்க. வருஷத்துக்கு ஒரு தடவ. இது என்ன திருப்பதி கோவிலா. சோறு போட்டு வளர்த்த அப்பா.'

 

'நாங்க யாருமே மறுக்கலேயே'

 

'ஓ. அப்போ நீங்க எல்லாம் சேர்ந்துதான் முடிவு பண்ணிருக்கீங்க. எல்லாம் கூடி பேசிட்டீங்க'

 

'இல்ல பாஷ்யம். நேத்து சாயந்தரம் தான் முடிவு பண்ணினோம்'.

 

'ஓ. முடிவே பண்ணிட்டீங்களா? அப்போ சரி. அப்புறம் எண்ட கேட்டுட்டு.'

 

'நீ கோவப்படாத பாஷ்யம். அது அவருக்கு மட்டும் இல்லை. உனக்கும் ஒரு ரிலீப் தான.'

 

'நான் எப்போ உங்ககிட்ட சொன்னேன். என்னால அப்பாவை பாத்துக்க முடியாதுனு?. நீங்க வந்து போயிருந்தா எனக்கு இந்த நினைப்பே இருக்காது. அங்க பாரு மொத அக்கா ஆஸ்திரிலேயா போயிட்டா. அம்மா சாவுக்கு கூட வர முடில. பிளைட் டிக்கட் கிடைக்கலன்னு சொல்லிட்டா. ரெண்டாவது அக்கா யூரோப்னு சொல்றா. சரி அதன் பரவால்லன்னு பார்த்தா இந்தியாக்குள்ள இருக்குற உங்களுக்கு என்ன ஆச்சு. கேட்ட மாமாவுக்கு லீவு கிடைக்கல. பிள்ளைக்கு ஸ்கூலுனு உக்காந்திருக்கீங்க'.

 

'சூழ்நிலை அப்போ அப்பிடி இருந்துச்சு டா பாஷ்யம்'

 

'நீங்க கொலைன்னு முடிவு பண்ணிட்டீங்க. நான் என்ன பேசணும்?'

 

'அது எப்படிடா கொலைன்னு சொல்ல முடியும்? வயசாயிடுச்சு.  அவருக்கும் எதுவும் பண்ண முடியல. எப்பிடி ஓடியாடிட்ருந்தவரு. அந்த மாதிரி இருந்தவங்களுக்கு தான் முடங்கிக்கிடக்குறது பிடிக்காதுடா பாஷ்யம். புரிஞ்சிக்க. கௌரவமா வாழணும்னு தான் நினைப்பாங்க. அவரு எந்த காலத்திலேயும் யார்ட்டயும் எதுவுமே எதிர்ப்பார்த்ததில்லை. அவரைப்போய் இப்டி முழுக்க முழுக்க படுத்த படுக்கையாக்கி வச்சிருந்தா எப்படியிருக்கும்? நம்ம கையும் காலும் நமக்கு வேலை செய்றா வரைக்கும்தாண்டா நமக்கு மரியாதை. அதுக்குள்ள போயிடனும். அவருரொம்ப கௌரவம் வாழ்ந்தவர்டா. யோசிச்சுப்பாரு.'

 

'எல்லாம் சரி தான்க்கா. நாம சின்ன வயசா இருக்கும்போது நமக்கு நம்ம அம்மா அப்பா பீ மூத்திரம் அள்ளிபோடலையா. இப்போ அது நம்ம கடமை. நீயேதான் உன் பேர பிள்ளைகளுக்கு செய்யுற. நான் அப்பாவுக்கு செய்யுறேன். அவரு இருக்குற வரைக்கு அப்பிடியே இருந்துட்டு போகட்டும்.'

 

'இங்க பாரு பாஷ்யம். நமக்கு நம்ம பெத்தவங்க செய்றதுக்கும் நாம் நம்ம பெத்தவங்களுக்கு செய்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. குழந்தையா இருக்கும்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனா பெரியவங்களுக்கு அப்பிடி இல்லை. நம்ம பிள்ளை கஷ்டப்படுதேன்னு தான் தோணும். தவிர நம்மகிட்ட அவங்களுக்குனு ஒரு பிம்பம் இருக்கு. அது இந்தமாதிரி செய்றதையெல்லாம் சகிச்சிக்க விடாது. அவரால இப்போ பேச முடியல. ஒரு வேளை பேச மட்டும் முடிஞ்சுதுனா அவரே இந்த முடிவை தான் நம்மகிட்ட சொல்லிருப்பாரு. இதுக்கு மேல உன் இஷ்டம். பாத்துக்கோ.' என்று பெருமூச்செறிந்தாள்.

 

எல்லோரும் ஒரு முடிவாகத்தான் வந்திருப்பார்கள் போல. இதில் தனித்து இருப்பது தான் மட்டும் தான் என்று  ரங்கபாஷ்யத்திற்கு தோன்றியது. இருபக்கத்தின் நியாயங்கள் அவனுக்கு தெளிவில்லாத ஒரு ப்ரக்ஞயை தந்துகொண்டிருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் தனது அப்பாவின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டான்.

 

குழந்தைகள் இந்த சங்கடங்கள் ஏதும் தெரியாமல் அல்லது புரியாமல் விளையாண்டு கொண்டிருந்தார்கள். ஒரு வகையில் குழந்தையை இருப்பது வரம். தோளில் இருக்கும் சுமை தெரியாது. தலையை திருப்பி கொண்டான். எவ்வளவு தேஜஸான முகம். தற்போது சூம்பிபோய் வாடியிருந்தது. தானும் அந்த நிலையை அடைய வேண்டியிருக்கும் என்று தோன்றியது. அதற்குள் இறைவனடி சேர்ந்துவிட வேண்டும் என்று அவனையுமறியாமல் வேண்டிக்கொண்டான். இந்த எண்ணமே அவனுக்கு முரணாகத்தெரிந்தது. தனக்கு என்று வரும்போது தான் வகுத்துக்கொண்ட நியாயம் வேறாக இருப்பது அவனுக்கு புலப்பட்டது. இயற்கையின்  வரமும் சாபமும் இதுதான். சிறுவயதில் பார்த்த விளையாட்டு பொம்மைகள் வயதான பின்பு அதே உவகையை அளிப்பதில்லை. காட்சிகள் மாறாமல் அதன் கற்பிதங்கள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்குத்தகுந்தவாறு நியதிகளை தங்களை தகவமைத்துக்கொள்கின்றன. ஒரு வகையில் உலகத்தின் சமநிலை இதில் அடங்கியிருக்கிறது என்று அவனுக்கு தோன்றியது. எண்ணைகளை கட்டுப்படுத்தி தனது அப்பாவின் முகத்தை மீண்டும் பார்த்தான். அவரது பார்வை எங்கோ வெறித்து கொண்டிருந்தது.

 

அடுத்த நாளிற்கான தலைக்கூத்தல் முன்னிட்டு அன்று இரவு ஏற்பாடுகள் மும்முரமாயிருந்தன. அக்காக்கள் இருவரும் பட்டியலிட்டு தர அண்ணன்கள் வெளியே சென்று இளநீர், எண்ணெய் போன்றவற்றை வாங்கி வந்தனர். அதுமட்டுமில்லாது தவசுப்பிள்ளைக்கு தகவல் தரப்பட்டது. இத்தனை பேர் இன்னன்ன சாப்பாடு, பந்தல், ஊர் பெரியவர்கள், கோடித்துணி என கனஜோராக நடந்து கொண்டிருந்தன.

 

பாஷ்யம் எல்லாவற்றையும் வெறித்து பார்தது கொண்டிருந்தான். அவனுக்கருகில்  தேஜஸ்வினி வந்தாள்.

 

'அப்பா, என்ன பன்றாங்க? நாளைக்கு தாத்தா ஊருக்கு போறாருனு சொன்னாங்க'

 

'யாரு சொன்னா?'

 

'அந்த பாட்டி' என்று பாஷ்யத்தின் மூத்த அக்காவை காய் காட்டியது குழந்தை.

 

'எனக்கு தெரில தேஜு. தாத்தாவுக்கு இங்க ரொம்ப கஷ்டமா இருக்குதுனு சொல்றாங்க. அதான் அவங்க எல்லாம் சேந்து ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கிறாங்க'

 

'அங்க போனா தாத்தாக்கு கஷ்டம் இருக்காதா?'

 

'ஆமா. அங்க எந்த வழியும் தெரியாது'

 

'அப்போ. தாத்தா அங்க போறது தான் கரெக்ட்' சொல்லிவிட்டு வெடுக்கென்று ஓடிவிட்டாள்.

 

சாப்பிட வருமாறு அவனது அக்கா அழைத்தாள். இவன் ஒருமுறை ஏறிட்டு பார்த்து வேண்டாம் என்று மறுத்துவிட்டான். பெற்றவரை நாளை கொல்லப்போகிறோம் என்பதை இவர்கள் எவ்வாறு அவ்வளவு எளிதான ஒரு விஷயமாக மாற்றிவிட்டார்கள் என்று அவனுக்கு அதிர்ச்சியாய் தெரிந்தது. மீண்டும் வாய் திறந்தால் ஏப்பைக்கு சப்பையான ஆலசோனைகளை இந்த தற்குறிகள் நியாயப்படுத்துவார்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஆபிஸ் லீவ் எடுப்பதும் நான்கு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது அசௌகரியம் என்பதால் ஒருவரின் வாழ்க்கைக்கே முடிவு கட்டுபவர்களை என்னவென்று அழைப்பது எனப்புரியவில்லை. அன்றிரவு பாஷ்யம் அப்பாவுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டான். வெறுமையான எண்ணங்கள் அவனது மனதை ஆக்கிரமிக்க மனச்சோர்வு கொண்டு அப்பாவின் கட்டிலில் தலைசாய்த்து படுத்துகொண்டான்.

 

எததனை மணிக்கு தூங்கினான் என்று பாஷ்யத்திற்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவனது அப்பாவின் கை இவனது கையை இருக்க பற்றியிருந்தது. கையை விடுவிக்க முயற்சிசெய்து தோற்றான். கையை பிடித்தவாறே எழுந்து அப்பாவின் முகத்தை பார்த்தவன் கண் மூடியிருப்பதை கண்டான். இருகரம் பற்றி அவரது தோளை உலுக்கினான். மூக்கின் அருகே கை வைத்து நெஞ்சில் முகம் காத்து கொடுத்து பார்த்தவன் '' வென்று கதறினான்.

 

இவனது அலறலை கேட்டு அக்காதான் முதலில் வந்தாள். அவளுக்கு புரிந்தது. ஒவ்வொருவராக எழுப்பி விவரத்தை சொல்லி அப்பாவின் கட்டிலருகே வந்து உட்கார்ந்துகொண்டனர். இரு அக்காக்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தனர். வீடு களேபரமாகியது. குழந்தைகள் எல்லோரையும் எழுப்பி மாடி ரூமிற்கு அனுப்பினார். அவைகள் பாதி புரிந்தும் புரியாமலும் ஜன்னல் ரேழிகள் வழி உற்று பார்த்துக்கொண்டிருந்தன.  வீட்டிற்கு அருகிலிருப்பவர்கள் வர ஆரம்பித்தனர். அடுப்பு பற்ற வைத்து காபி போடப்பட்டது. வாசலில் நாற்காலிகள் போடப்பட்டு ஆண்கள் எல்லோரும் கை கட்டி உட்கார்ந்துகொண்டனர். கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் இறந்துபோன அப்பாவை பற்றி பேச ஆரம்பித்திருந்தனர். அவரின் ஞாபகங்கள் ஆசை போடப்பட்டன. சில அசைகள் அவனது அப்பா உயிரோடிருக்கும்போதே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. Be a Witness  என்பது போல எல்லாவற்றையும் சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

 

சடங்குகள் முடிந்து அவரது சடலம் வெளியே எடுத்துவரப்பட்டது. அவனது அண்ணகளுடன் அப்பாவை மீள பயணத்திற்கு வழியனுப்பி வைக்க கிளம்பினான். தார் சாலையில் வெறுங்காலில் கால் சுட்டது. அப்பா அருகில் இருந்தார் நிழலில் நட என்று கூறியிருப்பாரோ என்று அவனுக்கு ஒரு முறை தோன்றியது. இதுபோன்ற பல எண்ணங்கள் வழி நெடுகிலும் கடல் அலை போல் ஓயாமல் எழும்பி வர ஆனால் அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது அவரது உடலை கிடத்தி சிதைக்கு தீ வைத்து திரும்பி பார்க்காமல் நடந்தனர்.

பம்ப் செட்டில் குளித்து ஈர வெள்ளை வேட்டியை உடலில் போர்த்திக்கொண்டு மெதுவாய் வீடு வந்து சேர்ந்தனர்.

 

வீட்டிற்கு வந்த பாஷ்யம் என்ன நினைத்தானோ தெரியவில்லை. நேராக அவனது மூத்த அக்காவின் அருகில் போய் நின்றான்.

 

'பாத்தியா அக்கா. அப்பாதான் ஜெயிச்சிருக்கார். உங்கள எல்லாம் கொலைகாரனாக்காம அவரே போய் சேந்துட்டாரு. நீ சொன்னது சரி தான். புள்ளைங்க கஷ்டப்படக்கூடாதுனு பெத்தவங்க தான் நினைக்குறாங்க' என்றான்.