சனி, ஜூலை 29, 2023

டிடி ரிடர்ன்ஸ்


நெபாடிஸம்-அதாவது வாரிசு ஆதிக்கம் நிறைஞ்சிருக்கிற சினிமா இண்டஸ்ட்ரில உங்களையும் என்னையும் போல ஒரு ஆளு இவ்ளோ நாள் நிலைச்சி நிக்கிறதுன்றது பெரிய விஷயம். அதுவும் சினிமாவை கலாய்க்கிற லொள்ளு சபாங்கிற தொடர் மூலமா பிரபலமாகி, 2002ல அதாவது அவரோட 22 வயசுல ஹீரோவுக்கு கூடவே ட்ராவல் பண்ற காமெடியன் ரோல் ஆரம்பிச்சு தன்னோட 33 வயசுல (2013) ஹீரோவா ட்ரை பண்ண ஆரம்பிக்கிறார். 'ஏண்டா என் படத்துல காமெடியனா நடிச்சிட்டு இப்போ எனக்கு எதிராவே பேனர் வைக்கிறியானு அவருக்கு எதிரா வேலை செஞ்சு பல படங்கள் வெளி வராம பண்ணினாங்க.  பன்னிரண்டு வருஷமா தட்டுத்தடுமாறி ஹீரோவா நிலைச்சி நிக்கிற அந்த தில்லுக்கு hats off சந்தானம் சார்.



படம் எப்படி இருக்குனு கேக்குறீங்களா? தன்னோட காதலியை காப்பாத்துறதுக்காக வில்லனோட பணத்தை எடுக்கிறதுக்கு பேய் பங்காளவுக்குள்ள போய் பேயோட ஹாரர் கேம்ஸ் விளையாண்டு கெலிச்சி வந்தா அதுதான் டிடி ரிடர்ன்ஸ்.

என்னடா பேயோட கேமா? அப்டித்தான் நானும் நினைச்சேன். பட் இந்த கான்சப்ட் புதுசு. அதுவும் கூட செமையா ஒர்கவுட் ஆகியிருக்கு. பேய் பங்களாவுக்கு ஒரு முன்கதை, வில்லன்களுக்கு ஒரு முன்கதை, அதுல ஹீரோயின் கேரக்டர் உள்ள கொண்டு வந்து, ஹீரோ சந்தானம் கேரக்டர் எப்படி மாட்டிக்குதுன்ற வரைக்கும் குழப்பமே இல்லாத திரைக்கதை. 

உண்மைய சொல்லனும்னா சந்தானம் கொஞ்சம் இதுல அண்டர் பிளே பண்ணிருக்காருன்னுதான் சொல்லனும். அதாவது மத்த ஆர்டிஸ்டுக்கு ஸ்பேஸ் கொடுத்திருக்கார். லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை அப்டினு ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு. அதுனாலதான் காமெடி வேற லெவல்ல ஒர்க் அவுட் ஆகியிருக்கு. இந்த பார்முலா கண்டின்யு பண்ணுங்க சந்தானம். முக்கியமா அந்த பெர்முடாஸ் காமெடி, குஷ்பு பாட்டு காமெடி, டேடேடே காமெடி எல்லாமே வயிற பதம் பாத்திடுச்சு. அதுக்காக சந்தானம் சும்மா இருக்காருன்னு சொல்ல முடியாது. அவருக்கு இருக்குற ஸ்பேஸ்ல தன்னோட வழக்கமான கவுண்டர் கொடுத்து சிக்ஸ் அடிச்சிருக்கார்.

ஆனா ஒன்னு மட்டும் புரியல. தான் ஹீரோவா நடிக்கிற படம் எல்லாத்துலயும் தொக்கா ஹீரோயின் எப்படி தூக்கிட்டு வாராருனு? தன்னோட படத்தையே ஏன் தன்னையே கலாய்ச்சு நடிச்சிருக்கார்.

மொத்தத்துல குடும்பத்தோட அதுவும் குழந்தைங்களோட போய் ரெண்டு மணிநேரம் வாய்விட்டு சிரிச்சிட்டு வரதுக்கு ஏத்தமாதிரி ஒரு மூவி தான் டிடி ரிட்டர்ன்ஸ்.

45/100

#Santhanam #DDReturns #surbhi #LolluSabha


புதன், ஜூலை 26, 2023

தண்டவாளக் கரும்பு


கடந்த வார விகடனில் வெளியான 'தண்டவாளக் கரும்பு' என்றொரு சிறுகதையை வாசித்தேன். வெகு நெகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

கதை இதுதான். தந்தையை இழந்த சிறுவனை அவனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறாள். தாய் நோய்வாய்ப்படும் நேரத்தில் இவன் காசு சம்பாதிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். துன்பம் மீண்டும் மீண்டும் வாட்டியெடுக்கும் நேரமொன்றில் அவன் தனது தந்தையை நினைவு கூறுகிறான். இவ்வளவுதான் கதை. ஆனால் அதை சுரேஷ் மான்யாவின் எழுத்துக்களில் வாசிக்கும் பொழுது நமக்கு கடத்தப்படுவது விவரிக்க முடியாத ஒரு உணர்வைத் தருகிறது.



அந்தக் குடும்பம் நன்றாகத்தான் இருக்கிறது அவரது தந்தை இறக்கும் வரையில். தந்தை ரயில்வே நிலையத்தில் ஒரு வாழைப்பழ கடை வைத்திருக்கிறார். வியாபாரம் செய்யும் வரையில் அவனது அம்மா மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வேலைக்குச் செல்லுகிறாள். ஆனால் ஒரு நாள் எதிர்பாராத விதமாக பிளாட்பாரத்தில் தவறி விழுந்து அவனது தந்தை இறந்து விடுகிறார். குரலின்றி தவிக்கும் விளிம்பு நிலை மக்களின் சொல்லொண்ணாததுயரம் அதுதானே. அன்றிலிருந்து அவனது அம்மாவுக்கு கூடுதல் பொறுப்பாகிறது. கரும்பு ஆலையில் சங்காயம் பொறுக்கும் வேலைக்குச் செல்கிறாள். காய்ந்த கரும்புத்தோகைகளே சங்காயம் எனப்படுகிறது. இவன் அந்த ஆலையை கண்டுரும் நோக்கில் உள்ளே நுழைய எத்தனிக்க காவலாளி இவனைச் சீண்டாமல் துரத்துகிறான். வறியவர்களுக்கு எல்லா இடமும் எளிதல்லவே. இவனது அம்மாவை காச நோய் பீடிக்க இவன் மீது வீட்டின் பாரம் விழுகிறது. கரும்பு ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் தண்டவாளத்தின் ஓரத்தில் நிற்கும். அதில் ஒன்றிரண்டு கரும்பை எடுத்து க்ராஸிங் கடப்பதற்கு காத்திருக்கும் ரயில் வண்டி பயணிகளிடம் விற்கிறான். ஐந்து ரூபாய் தேறுகிறது. பத்து ரூபாய் தேற்றும் முயற்சியில் சோக்காளிகளுடன் சேர்ந்து கரும்பு விற்க முயலுகிறான்.

இன்னும் இரண்டு பத்தியில் கதை முடிகிறது என்பதைத் தெரிந்து கொண்டபொழுது ஒரு வேளை போலீசிடம் மாட்டிக்கொள்கிறானோ என்ற எண்ணினேன். முடிவு ஆனால் வேறு இடம் நோக்கிச் செல்கிறது.
க்ராஸிங்கில் நிற்கும் ரயில் வண்டி பயணியிடம் கரும்பு விற்கிறான். கிடைத்த சில்லறைக்காசுகளை பத்திரப்படுத்திக்கொண்டு மீதமிருக்கும் ஒரு கரும்பை விற்க அலைகிறான். சிக்னல் போடவேண்டிய நேரம் நெருங்குகிறது. ஒரு கடன்காரப்பயணி அவனிடம் கரும்பை ஒடித்துத்தரச் சொல்கிறார். ஒடித்த கரும்பை அவரிடம் குடுத்து காசை எதிர்பார்க்கும் வேளையில் சிக்னல் விழுந்து வண்டி கிளம்பிவிடுகிறது. வண்டியுடன் இவன் மேடுபள்ளம் பாராது ஓட, அவர் சட்டைப்பையில் கையை விட்டுதுழாவ இன்னும் ஒரு பத்தியில் சிறுகதை முடிகிறது. அந்தச்சிறுவன் ரயிலின் சக்கரத்தில் பலியாகிவிடுவானோ என்று மனம் பதைபதைக்கும் வேளையில் அதை விட மிகவும் கனமான ஒரு முடிவை கதாசிரியர் அழுத்தமாக பதிவிட்டு முடிக்கிறார்.

மேடு பள்ளம் பாராமல் அவன் காசுக்காக ஓட, கரும்பு வாங்கிய சீமான் இவனை நோக்கி காசைத் தூக்கி எரிய, காசு ஒரு புதரில் விழ, அந்த கருக்கல் வேளையில் தன் முன் இருக்கும் கல் தெரியாமல் இவன் இடறி விழ, பத்திரப்படுத்தியிருந்த காசும் இவனது கையில் இருந்து திசைக்கொன்றாகச்சிதற அவனது உடம்பில் சில இடங்களில் காயம் படுகிறது. அந்த கையறு நேரத்தில் ஒரு கணம் அவன் மனம் தன் இறந்து போனத்தந்தையை நினைக்கிறது என்று முடிக்கிறார்.

எவ்வளவு வலிகளைத் தாங்கிய வரிகள் இவை. அந்த கடைசி ஒரு வரி அத்தனை கதைகளைச் சொல்லாமல் சொல்கிறது.

மனம் மிகவும் கனத்து கிடக்கிறது. எழுத்தின் வீச்சு அதுதான். கண்ணீர் வற்றுமளவுக்கு மீண்டும் மீண்டும் வாசித்தேன்.

வாழ்த்துக்கள் சுரேஷ் மான்யா

Ananda Vikatan ananda vikatan - ஆனந்த விகடன் (வாசகர் குழுமம்) Vikatan EMagazine #Vikatan #AnandaVikatan

திங்கள், ஜூலை 24, 2023

காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்

 

வெரி சாரி. வேற வழி தெரில. இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்றது?

முத்தையா படம் இது வரைக்கும் பாத்தது இல்ல. அந்த முடிவு சரிதான்னு காதர பாத்தப்புறம் தான் புரிஞ்சது.

'ஜான் விக்' படம் மாதிரி ஹீரோ எதிர்த்தாப்புல யாரு வந்தாலும் வெட்டிகிட்டே போறாரு. எந்த அளவுக்கு டெர்ரருனா இந்த ஒரு சீன் பாத்தா போதும். ஆர்யாவை தேடி சித்தி இதானி ஜெயிலுக்கு போறாப்பில. மதுரை ஜெயில் போனா அங்க ஒருத்தன் கைய ஒடச்சிட்டானு திருச்சிக்கு மாத்திட்டாங்களாம். திருச்சி போனா அங்க ஒருத்தன் கால ஒடச்சிட்டானு வேலூருக்கு மாத்திட்டாங்களாம். வேலூர் போனா அங்க ஒருத்தன் மண்டைய ஒடச்சிட்டானு பாளையங்கோட்டை மாத்திட்டாங்களாம். அங்க போனா அவன் யாரையோ குத்திட்டான்னு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு மாத்திட்டாங்களாம். எப்பிடி? தலை சுத்துதா? இதுக்கே இப்டினா? இதான் ஹீரோ என்ட்ரி. 



கதைனு ஒன்னு இருக்கணும்ல. அத எங்கேந்து எடுத்துருக்காங்கனு பாத்தா இடியாப்பம் இருக்குல்ல அதுக்கு உள்ளேந்து தேடி கண்டுபிடிச்சி எடுத்திருக்காங்க. கதை அப்டி ஒரு குளறுபடி. வில்லனுங்க எப்ப பாத்தாலும் ஒரு வெறியா இருக்கிறானுங்க. அதுக்கு மேல நம்ம ஆரியா. யாரு எதுத்தாப்புல வந்தாலும் ஒக்கே அடி தான். 

சன் டிவில ப்ரைம் டைம் ஓடுற சீரியல் எந்த அளவுக்கு நாராசமா இருக்கோ அதுக்கு போட்டியா படத்துல கேரக்டர்லான் திரியுதுங்க. ஆறாப்பு படிக்குறதெல்லாம் ஓங்கி அறையுது. ஒரு வழியா சித்தி இதானிய கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறாப்புல. சரி. இனிமேல் வெட்டு குத்து இருக்காதோன்னு நினைச்சா ஒரு கிணத்துல பாம் வச்சி அந்த புள்ளைய கொன்னுட்டாய்ங்க. இந்தா ஆரம்பிச்சிட்டாருல்ல. உடனே பிரபு, 'அவங்க பக்கம் ஒரு பய இருக்க பிடாது. எல்லாரையும் வெட்டி சாச்சிட்டு வா'னு வீரத்திலகம் இட்டு அனுப்புறாரு. பக்ரீத் பிரியாணிக்கு போற பிரண்ட் மாதிரி ஆர்யாவும் குஷியா போய்ட்டு ஒரு இருபது முப்பது பேர வெட்டி சாய்க்கிறாரு. 'முத்தையா அண்ணே, அந்த சின்ன புள்ளைங்க அனாதையாகுமே. அப்புறம் இந்த ஆர்யா திரும்பவும் ஜெயிலுக்கு போவாரே?' அப்டினு நம்ம கேட்டோம்னா, 'கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி திண்ணையில வைங்கிற மாதிரி எல்லாரையும் வெட்டிட்டு ஸ்லோமோஷனல ஆர்யா நடந்து வரும்போது 'எ பிலிம் பை முத்தையா'னு போடுறாப்புல.

படத்துல ஒரே ஆறுதல். தயாரிப்பாளருக்கு ஹீரோ காஸ்ட்யூம் செலவு கம்மி. ஒரு கருப்பு கலர் டைட்டான அரை டிராயர் தான் ஹீரோவோட காஸ்ட்யூம். கிளாமர் எலிமென்டாம்

அடேய்!!! நானா உன்ன படம் பாக்க கூப்பிட்டேன்னு கேக்குற மாதிரி படத்தை எடுத்து வச்சிருக்காங்க. 

படத்த பார்த்த இந்த பாவியை மன்னியும் பிதாவே. 


அஸ்வின்ஸ்

2000 அல்லது 2001னு நினைக்கிறேன். AXN சேனல்ல பல வாராந்திர சீரிஸ்கள் பட்டையை கிளப்பரதுண்டு. 'சில்க் ஸ்டாக்கிங்ஸ்' ஞாபகம் வந்துச்சுனா வாழ்த்துக்கள். பட். விஷயம் அது இல்ல. 'மோஸ்ட் ஹண்டட் பிளேசஸ் இன் த வெர்ல்டு' அப்டினு ஒரு தொடர் வந்துச்சு. வெர்ல்டுல இருக்குற பேமசான பேய் இருக்குற இடத்துக்கு போய் அந்த இடங்களை வீடியோ புட்டேஜ் எடுத்துட்டு கொஞ்சம்  திகிலா ப்ரெசென்ட் பண்ணுவாங்க. பல இடங்கள் போங்கா தெரிஞ்சாலும் சில இடங்கள் அல்லு கிளப்பும். அதுல பார்த்த ஒரு எபிசோட் மறக்க முடியாது. 

எந்த சிட்டின்னு ஞாபகம் இல்ல. ஆனா ஒரு சுரங்கம். அந்த சுரங்கத்துல பேய் இருக்குறதாவும் பல நேரங்கள்ல அழுகுற சத்தம் கேக்குதுன்னும் அங்க யாரும் ஒரு லெவலுக்கு மேல உள்ள போனது இல்லனும் சொல்றாங்க. போர் சமயத்துல அதுல பதுங்கியிருந்த பல வீரர்கள் இறந்துட்டதா சொன்னாங்க. நம்ம டீம் அந்த சுரங்கத்துக்குள்ள இறங்குறாங்க. சத்தியமா சொல்றேன். claustrophobic இருக்குறவங்க யாரும் அந்த இடத்துக்குள்ள நிக்க முடியாது. அவ்ளோ ஒடுக்கமா இருக்கும். பாக்கும்போதே மூச்சு முட்டும்னா பாத்துக்கோங்க. அவ்ளோ ஒடிசலான சுரங்கம்; கொஞ்ச நஞ்சமில்ல, கிட்டத்தட்ட மூணு நாலு கிலோமீட்டர் நீண்டு இருக்குது. நம்ம டீம் கேமராவோட உள்ளே போறாங்க. கும்மிருட்டு. கேமராவோட லைட்ஸ் மட்டும்தான் அங்க இருக்குற வெளிச்சம். ஒரு சில இடங்கள்ல எலும்புக்கூடு கிடைக்குது. அதெல்லாம் தாண்டி ரொம்ப தூரம் உள்ள போனா ஒரு கேமரா கிடைக்குது. அத நம்ம டீம் ரெகவர் பண்ணிட்டு வெளிய கொண்டு வராங்க. இருக்குற வீடியோவை ஓட்டிப்பாத்தா யாரோ அமேட்சுரான ஒரு பையன் இதுக்கு முன்னாடி அந்த சுரங்கத்துக்குள்ள இறங்கி பாத்துருக்கான். அவன் அந்த ஹேண்ட் ஹெல்ட் கேமராவை வச்சிக்கிட்டு ஒவ்வொரு இடமா விளக்கிட்டே போறான். நம்ம டீம் இந்த கேமராவை கண்டு பிடிச்ச இடத்துக்கு வந்துருக்கான். கேமராவை சுத்திட்டே வீடியோ கவரேஜ் பண்ணிக்கிட்டு பாத்தா தூரத்துல ஒரு உருவம் சட்டுனு தெரியுது. திரும்பவும் கேமெராவை அந்த இடத்துக்கு போகஸ் பண்ணி பாத்தா ரொம்ப வேகமா வந்து அந்த உருவம் இவன் மேல பாயுது. கேமரா கீழ விழுது. அதுவரைக்கும் தான் அந்த வீடியோ ரெகார்ட் ஆகியிருக்கு. என்னால சரியா சொல்ல முடிஞ்சுதான்னு தெரில. ஆனா அந்த வீடியோ பாத்ததுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு தூக்கம் இல்ல. அவ்வளோ டெரர்ரா இருந்துச்சு. 



இன்னொரு படமும் இருக்கு. 'The Blair witch project' அப்டினு. நாலு பேர் இதே மாதிரி கையடக்க கேமராவை வச்சிக்கிட்டு ஒரு காட்டுக்குள்ள தனியா போவாங்க. அதுவும் ஹான்டட் பிளேஸ் தான். ஹேண்ட் ஹெல்ட் கேமரா சினிமாவுக்கு இந்த படம் ஒரு பெரிய ஓப்பனிங் கொடுத்துச்சு. படத்துல நாலு பேரும் செத்துடுவாங்க. எண்ட் க்ரெடிட்ல ஒரு ஸ்டேட்மென்ட் போடுவாங்க பாருங்க. 'இந்த கேமராவை ஒரு காட்டுல கண்டெடுத்தோம். உள்ளது உள்ளபடி காமிச்சிருக்கோம்னு' படிக்கும்போது முதுகுத்தண்டுல சில்லுனு ஏறும்.

'அஸ்வின்ஸ்' அப்டின்னு பேர போட்டுட்டு என்னன்னவோ சொல்றான்னு நினைக்காதீங்க. இந்த படத்துலயும் முத ஷாட்லேந்து பட்டய கிளப்பிருப்பங்க. ஹேண்ட் ஹெல்ட் கேமரா தான். அஞ்சு பேரு. ஒரு பாழடைஞ்சு பங்களா. கும்மிருட்டு. கேமரா வெளிச்சம் மட்டும்தான். கரண்ட் கிடையாது. கிட்டத்தட்ட நாப்பது நிமிஷம் அலற விட்ருப்பாங்க. பொதுவா ஹீரோ என்ட்ரிக்கப்புறம் படம் படபடன்னு போகணும். ஆனா திக்கு திசை தெரியாம ஹீரோ சுத்துறாப்புல. நாமளும் அவர் கூட சேர்ந்து காதல் பட க்ளைமாக்ஸ் பரத் மாதிரி 'ஙே, ஙே' னு சுத்துறோம். என்ன தான் ஆக்ட்டிங், லொகேஷன், BGM, கேமரா அப்டினு எல்லாமே செட் ஆனாலும் எடுபடல. 

அல்டிமேட் first half. அது எப்படி first half மட்டும் நல்லாருக்கலாம் அப்டினு நினைச்சு படு பயங்கரமா சொதப்பி வச்சிருக்கிற second half. அவ்ளோதான் படம். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.


வியாழன், ஜூலை 20, 2023

நீராதிகாரம் - டைட்டில்


ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதலாம். அல்லது ஒரு படத்திற்கு. ஏன் பாட்டிற்கு கூட எழுதலாம். பத்திரிகையில் வாராவாரம் வரும் தொடரின் டைட்டிலுக்கு விமர்சனமா என்றால் ஆமாம். தொடரின் டைட்டில் டிசைன் பற்றி தான் இந்த பதிவு. 

ஆனந்த விகடனில் எழுத்தாளர் வெண்ணிலா எழுதிவரும் 'நீரதிகாரம்' தொடருக்கு அவ்வளவு அழகாக மிகவும் பிரயாசையுடன் டைட்டில் வடிவமைத்திருக்கிறார்கள், தலைமை வடிவமைப்பாளர் கருப்பையா பாண்டியன் மற்றும் சரவணன். Synergy என்று சொல்வார்களே. அது அவ்வளவு உயிர்ப்பாக இருக்கிறது இந்த தொடரில். தொடரின் குழுவில்.

ஒரு தலைப்பை சாதாரணமாக எழுதலாம். அல்லது கொஞ்சம் சிரமேற்கொண்டு வரையலாம். calligraphy போல் செய்யலாம். ஆனால் நூறு வாரம் கடந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் அந்த தொடரில் நடைபெறும் கதைக்கு கருவிற்கு நிகழ்விற்கு ஏற்றார் போல் டைட்டில் டிசைன் செய்வது என்பது இதுவரையில் நான் எந்தவொரு தொடரிலும் கண்டறியாதது. 


















உதாரணமாக மேல்மலையில் இருக்கும் மக்களுக்கு காலரா தொற்று வருகிறது. அதை குறிக்கும் விதமாக வைரஸ் வடிவில் அந்த வார டிசைன். கிறிஸ்துமஸ்க்கு விடுமுறை கூட எடுக்காமல் அணை கட்டுமானப்பணியில் பென்னி, டெய்லர் என அனைவரும் சிரத்தையாக வேலை பார்க்கின்றனர். அதை குறிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் சாரட் வண்டியில் 'நீரதிகாரம்' என்ற எழுத்துக்களை இழுத்துக்கொண்டு கலைமான்கள் துள்ளி ஓடுகின்றன. 

டெய்லரின் இறப்பின் நிகழ்வை ஒட்டி பென்னி கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அணை கட்டுமானப்பணியை மட்டும் மேற்கொண்டு பார்த்துக்கொள்வதாக அந்தக் கடிதம் இருக்கும். அதன் பொருட்டு அந்த வார டைட்டில் டிசைனில் மை புட்டியும் எழுதுவதற்கு இறகும் வரைந்திருப்பார்கள். 

கோட வர்மா தனது மாளிகையில் உள்ள கன்று குட்டிகளுடன் நேரம் செலவழிக்கும் தொடரில் கன்றுக்குட்டியின் வடிவில் டைட்டில் டிசைன். 

மேல்மலையை தங்களது உயிரை கொடுத்து கட்டிய மக்கள் கொத்து கொத்தாக மடியும் வாரத்தில் ஒரு சவப்பெட்டியின் வடிவில் டைட்டில் டிசைன். 

மேல் மலையில் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரியும்பொழுது நெருப்பின் வடிவில், மூன்று நாட்கள் தொடர் மழை பெய்தபொழுது மழை போன்ற வடிவில், யானையின் வடிவில் என ஒவ்வொரு வாரமும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். 

எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தது என்றால், அணைக்கான சுவற்றை அடிமட்டத்தில் இருந்து எழுப்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளம் வந்து அந்த சுவற்றை பெயர்த்து எடுத்து செல்கிறது. அதில் தெறித்து விழும் சில செங்கற்களில் 'நீ' 'ர' 'தி' 'கா' 'ர' 'ம்' என்று எழுதியிருப்பார்கள். 

எந்த அளவிற்கு தங்களது வேலையினை ரசித்து செய்தால் இதுபோன்ற படைப்பாக்கங்களை தருவித்திருக்க முடியம். ஒவ்வொரு வாரமும் ஆசிரியருடன் உரையாடல், தொடரின் மேல் கொண்ட ஈடுபாடு ஆகியவை பிரமிக்கவைக்கின்றன. 

அடுத்தடுத்த வாரங்களில் தொடரில் என்ன நிகழப்போகிறது என்பதை அறிந்துகொள்ள காத்திருப்பது போல் என்ன விதமான டைட்டில் டிசைன் செய்து அசரடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்துகொள்வதிலும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.  

டைட்டில் டிசைனில் சிலவற்றை இணைத்திருக்கிறேன்.

வடிவமைப்பாளருக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்கள். 

புதன், ஜூலை 19, 2023

இருமுனை கத்தி


இன்று காலை இன்ஸ்டா ரீல்ஸில்  ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். Wedding Event planners வீடியோ. ரீல்ஸ்க்கு என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த 90 வினாடிகளில் முதல் நாள் நடக்கும் மாப்பிளை அழைப்பு அல்லது நிச்சயதார்த்தம் மற்றும் அதனைச் சார்ந்த சில முக்கிய தருணங்கள், மறுநாள் மணமேடையில் தாலிகட்டுவது, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், outdoor ஷூட் என அத்தனையையும் கவர் செய்திருக்கின்றனர். அதுவும் வீடியோ பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் என்பது போல் இருக்கிறது. எடிட்டிங், கலரிங், கேமரா angle, ஜூம் இன், ஏத்தாற் போல் ஒரு இளையராஜா அல்லது ரஹ்மான் சாங். இது மட்டுமல்ல. ஒரு food ரிவியூ ஆகட்டும், ஹோட்டல் ப்ரோமோஷன், பாடல் ரீமேக், காமெடி கன்டென்ட்ஸ், யோகா டிப்ஸ் என ஏகப்பட்ட ரீல்ஸ்கள். அத்தனையும் ஒரு முழு நீள சினிமாவில் காணப்படும் அளவுக்கு மெனெக்கடல்கள். குவாலிட்டி கன்டென்ட்ஸ்.



பாய்ண்ட் என்னவென்றால், டெக்னாலஜி வளர்ந்ததும் தான் வளர்ந்தது. அவ்வளவு வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. முன்பெல்லாம் ஒருவரிடம் இருக்கும் திறமை ஊரறியவேண்டுமென்றால் அதற்கு மேகசினோ அல்லது மேடையிலோ அல்லது சினிமாவையோ நாட வேண்டியிருந்தது. இப்பொழுது எல்லாமே கைக்குள் அடங்கிவிட்டது. சினிமாவில் காணும் பி.ஸி. ஸ்ரீராமையோ அல்லது உருகி பாடும் சித் ஸ்ரீராமையோ மட்டுமே சிலாகிக்க வேண்டும் என்பது இல்லை. ஊர் முழுவதும் பல திறமையான பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஆர்ட்டிஸ்ட், கதாசிரியர்கள் என விரவிக்கிடக்கின்றனர்.திறமை இருந்தால் அதை சரியான டூலுடன் வெளிப்படுத்தினால் வாய்ப்புகள் மடி மீது வந்து உட்கார்ந்து கொள்ளுகின்றன. 

வெகு வெகு பாசிட்டிவான ஒரு சமுதாய மாற்றமாக இதை பார்க்க முடிகிறது. ஏன், நாம் வாழும் வாழ்வை கொண்டாடும் கொண்டாட்டம் என்று கூட சொல்லலாம். ஒரு சாரார் அல்லது ரெகமெண்ட் செய்ப்பவர்கள் மட்டுமே முன்னுக்கு வருவார்கள் அல்லது அவர்களது படைப்புகள் மட்டுமே வெகு ஜன மக்களால் ரசிக்க முடியும் என்பதைத்தாண்டி அனைவருமே அவர்களது படைப்பை, திறமையை  வெளிக்காட்டி வாய்ப்புகளை தகவமைத்துக் கொள்ள முடியும் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட விஷயமாகவே இது புலப்படுகிறது. 

இருமுனை கத்தியாக இருக்கும் இந்த வசதியை லாவகமாக கையாண்டு கொள்ளுங்கள். 

இளைஞர் சமுதாயத்துக்கு வாழ்த்துக்கள். 


ஞாயிறு, ஜூலை 16, 2023

தலைநகரம் 2



என்னடா தலைநகரம் 2 க்கு ரிவியூவா? அப்டினு ஷாக் ஆகக்கூடாது. 8x ல ஹரி எப்படி படம் எடுப்பாரோ அது மாதிரி வேகமா இருக்கு. மூணு ரவுடி, அவங்களுக்குள்ள ஒரு கேங் வார், நடுவுல நம்ம 'ரைட்டு' சுந்தர் சி, இவங்க எல்லாத்துக்கும் டெரரான ஒரு பிளாஷ் பேக் அப்டினு கமெர்சியல் எலிமெண்ட்லாம் பக்கா. 



அனுஷ்கா சாயல்ல ஒரு ஹீரோயினை கண்டுபிடிச்சிருக்காங்க. KGF ரேஞ்சுக்கு நம்ம ரைட்டுக்கு ஒரு பில்டப் சீன இருக்கு பாருங்க. அசந்துட்டேன். 'நம்ம ஆள அடிச்சது எவன்டா?' அப்டினு நஞ்சுண்டாங்கிற ரவுடி கேக்குறாப்புல. CCTV ல பாக்கலாம்னு தேடுறாங்க. அடி வாங்குறது மட்டும் தான் இருக்கு. அடிச்சது யாருன்னே தெரில அப்டினு கன்பியுஸ் ஆயிடுறாங்க. அப்புறம் தான் என்ட்ரி எக்ஸிட் கேமராவ செக் பண்ணினா நம்ம ஆளு 'ரைட்டு' உள்ள வரும்போது 9:17. வெளில போகும்போது 9:17. ஆக, உள்ளே இருந்து ஆறு அடியாட்களை நம்ம ஆளு 17 செகண்டுல அடிச்சிருப்பாரு. நஞ்சுண்டா மட்டும் இல்ல. நாமளே டெரர் ஆகிற இடம் இது. அப்புறம் ஒரு 17 கத்தி குத்து வாங்கியும் நம்ம ஆளு பிழைச்சுப்பாரு. இதுபோல பல மாசான மசாலா காட்சிகள் இடம் பெற்றுருக்கு. ஜாலியா டைம் பாஸ் பண்ண தாராளமா பாக்கலாம்.

என்ன ஒரே வருத்தம், 'ஆயிரா' அப்டினு ஒரு துணை நடிகை நடிச்சிருக்காப்புல. அவங்கள தங்கச்சி மாதிரியான கேரக்டர்ல போட்டு சென்டிமென்ட் சீன்ஸ் மட்டும் வச்சிருக்கிற v.z.துரைக்கு ஆயிரா ஆர்மி சார்பா கண்டனங்கள். புள்ள பெரிய ரவுண்ட் வரும்.

வெள்ளி, ஜூலை 14, 2023

மாவீரன்

ஆனந்த விகடனில் வெளிவரும் விமர்சனம் போல எழுத வேண்டும் என்று ஒரு அவா. முயற்சித்திருக்கிறேன்.




ஒரு சாதாரண மனிதன் அதுவும் அடிதடி சண்டை என்றாலே தெறித்து ஓடும் ஒருவன், ஒரு கட்டத்தில் அவனுடைய காதில் மட்டும் கேட்கும் குரலால் தம் மக்களுக்கு நிகழும் அநீதியை எதிர்த்து போராடும் வீரனாய் எழுவதே மாவீரன் கதை.

சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடு 'மண்டேலா' என்ற அரசியல் நையாண்டி படம் மூலம் தேசிய விருது பெற்று தனது முதல் படைப்பிலேயே கவனம் ஈர்த்த மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பே இந்த 'மாவீரன்'. இதிலும் சமுதாயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயன் என்ற ஹீரோவையும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் மூலம் சூப்பர் ஹீரோவையும் இதில் துணைக்கு சேர்த்து கொண்டு ஒரு அரசியல் கற்பனை படத்தை கமெர்சியல் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் அஸ்வின்.

குப்பத்தில் வாழும் ஜனங்களை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாய் தூக்கி அடுக்குமாடி குடியிருப்பில் குடிவைக்கிறது அரசு. அடுக்கடுக்காய் நிகழும் சம்பவங்கள் மூலம் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனாலும் தகரக்கொட்டைக்கு இந்த அடுக்குமாடியே மேல் என்று சகித்து வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடம் இடிந்து விழும் என்கிற உண்மை சிவாவுக்கு கேட்கும் அசரீரி குரல் மூலம் தெரிய வருகிறது. பயந்த சுபாவம் கொண்ட சிவா, தன்னை தியாகம் செய்து மக்களை காப்பாற்றினாரா இல்லை சுயநலமாக நடந்து தன்னுயிரை காப்பாற்றி கொண்டாரா? என்பதை நகைச்சுவை மற்றும் அடிதடியுடன் சொல்கிறது இந்த மாவீரன்.

அதிதி ஷங்கர் ஹீரோயின் கதாபாத்திரம். அளவாய் வந்து போனாலும் கவனம் ஈர்க்கிறார். சிரிக்க வைக்க யோகி பாபு. இந்தமுறை அவரது ஒன்லைனர் ஒர்கவுட் ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். சிவாவும் யோகியும் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு அலைகள். நெடுங்காலம் கழித்து அம்மா கதாப்பாத்திரத்தில் சரிதா. மகனை கொஞ்சுவது, திட்டுவது, பரிதாபப்படுவது என தனது அனுபவ நடிப்பினால் முத்திரை பதிக்கிறார். வில்லனாக மிஷ்கின் மிரட்டிடனாலும் கோமாளி போன்ற கதாபாத்திரத்தினால் ஒரு மாற்று குறைதான். வழக்கம் போல படத்தை முழுவதுமாக தன் தோளில் சுமந்து இறுதிவரை வந்து கரை சேர்த்திருக்கிறார் எஸ்கே. அனைத்து வயது மக்களையும் வசியப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையில்லை.

டெக்கினிக்கல் சைடில் மடோன்னாவின் அதே டீம் தான் இங்கும். குப்பம், அடுக்ககம் மற்றும் சண்டை காட்சிகளில் வித்யு அய்யனாவின் சினிமாட்டோகிராபி தனித்து தெரிகிறது. கதைக்கு தேவையானவற்றை அளவாக கத்தரித்து ஒட்டியிருக்கிறார் பிலோமின ராஜ். ஆரம்பம் முதல் இறுதி வரை மாவீரன் படத்தின் முதுகெலும்பாய் நிற்பது பரத் சங்கரின் இசை. 'வண்ணாரப்பேட்டையில' பாடல் தாளம் போட வைக்கிறது. 'தன் சுயநலத்திற்காக எப்பொழுது மக்களை அடமானம் வைத்தானோ அப்பொழுது அவனுள் இருந்த வீரன் மடிந்து கோழை பிறக்கிறான்' போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன. சீட்டுக்கட்டு போல் சரிந்து விழும் அடுக்குமாடி குடியிருப்பு காட்சியில் தெரியும் க்ராபிக்ஸ் குறைகள் பட்ஜெட் கடிவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஸ்டார் காஸ்டிங் மற்றும் நல்ல டெக்கினிக்கல் டீம் இருந்தும் மாவீரன் சறுக்கிய இடம் லாஜிக் மீறிய திரைக்கதையில் தான். மக்களுக்காக குரல் கொடுக்கும் ஹீரோவுக்காக ஒருவர் கூடவா களத்தில் இறங்கமாட்டார்கள்? ஆயிரம் குடும்பங்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிவா மட்டும் தான் போராடுகிறார். ஏன்? இறுதிக்கட்ட சண்டை காட்சியில் கூட ஹீரோவுக்கு ஸ்பேஸ் கொடுப்பது போல் அத்தனை ஜனமும் ஒதுங்கி நிற்கிறது. என்ன தான் சூப்பர் ஹீரோ படம் என்றாலும் இரண்டு முறை செத்து பிழைப்பது எல்லாம் ஆகப்பெரிய போங்கு.

மாவீரன் என்ற தலைப்பில் தினசரி பேப்பரில் வருகிற காமிக் ஸ்ட்ரிப் மற்றும் வாய்ஸ் ஓவர் மூலம் திரைக்கதையை நகர்த்திய யுக்தி தமிழ் சினிமாவுக்கு புதுசு. என்றாலும் சில லாஜிக் குறைகளை களைந்திருந்தால் மாவீரன் வீரக்கொடி நாட்டியிருப்பான்.

43/100

Ananda Vikatan #maaveeran #MadonneAshwin #sivakarthikeyan #AditiShankar #YogiBabu #Vikatan

திங்கள், ஜூலை 10, 2023

நீராதிகாரம் 100

 

எழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்கள் எழுதும் நீராதிகாரம் தொடர் நூறாவது வாரத்தை எட்டிய தருணத்தை கொண்டாடும் விதமாக நீராதிகாரம்-100 என்று ஒரு நிகழ்வு விகடன் அலுவலகத்தில் அரங்கேறியது. நிகழ்வில் பங்கேற்று வாசகர் பார்வையை பகிர்ந்துகொள்ள அழைத்தது மிக நெகிழ்வானதொரு தருணம்.



விகடன் அலுவலகம், திரள் அரங்கம், சிறப்பு விருந்தினர்கள், விகடன் ஆசிரியர்கள் சந்திப்பு என பெருகொண்டாட்டமாக அந்த நாள் கழிந்தது. மேடைப் பேச்சு இதுநாள் வரை அறவே கிடையாது. முதல் அழைப்பே நான் பெரிதும் மதிக்கும் விகடன் மேடை என்பது மிகப்பெரும் வாய்ப்பு. 



நீராதிகாரத்திற்காக ஒரு AV  திரையிடப்பட்டது. எழுத்தாளர் வெண்ணிலா அவர்கள் இந்தத் தொடரை எழுதும் பொருட்டு கிட்டத்தட்ட 25000 தரவுகள் சேகரித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து வியந்து தான் போனேன். அதுமட்டுமின்றி முல்லைப்பெரியாறு பயணம், பூஞ்சாறு சமஸ்தானத்தைத் தேடி ஒரு பயணம், கண்ணகி கோவில் பயணம், பென்னியைத் தேடி இங்கிலாந்துக்கு என அவர் கால் படாத இடமே இல்லை எனுமளவுக்கு பயணம் மேற்கொண்டு இந்த அரும்பெரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 25 வாரம் கடந்தால் போதும் என்று எழுத ஆரம்பித்திருந்தது 100 வது வாரத்தை தன்னைப்போல் எட்டியிருக்கிறது என்று பகிர்ந்து கொண்டார். இப்பொழுதான் அணையின் அடித்தளம் போடப்படுகிறது. குறைந்தபட்சம் இன்னுமொரு 50 அல்லது 100 வாரங்கள், பென்னி மற்றும் மேல்மலை மக்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஒரு அவா இருக்கிறது. 

வாசகர் பார்வையில் பேசும்பொழுது, தொடரில் சிரமேற்கொண்டு எழுதப்பட்டிருந்த கட்டுமானப் பொறியியல் நுணுக்கங்களை சிலாகித்தும், தொடருக்கு உயிரோவியம் தீட்டிய ஸ்யாம் மற்றும் டைட்டில் டிசைன் செய்த பாண்டியன் & சரவணன் அவர்களைப்பற்றியும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த மூன்று நிமிடங்களில் பகிர்ந்துகொண்டேன். 

அடுத்த நாள் போனில் விளித்தது, 'பத்திரமாக வீடு திரும்பிவிட்டீர்களா?" என்று வெண்ணிலா மேடம் அவர்கள் கேட்டது பயண களைப்பை அறவே ஒழித்தது என்றால் முற்றிலும் தகும். Gen X, Y மற்றும் Z தலைமுறைகள் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு. மிக்க நன்றி மேடம். 

காணொளியில் 12:00 முதல் 15:45 வரை பேசியிருக்கிறேன்.

 

 

புதன், ஜூலை 05, 2023

நீரதிகாரம்



பெரும்வாரியான மக்கள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய குடிகளுமே பிரிட்டிஷார் மேல் கோவமாகத்தான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுரண்டப்பட்ட வளங்கள், அடிமைப்படுத்தப்பட்ட நாட்கள், கல்வி அடையாளம் இழந்தது என கொஞ்ச நஞ்சமா நாம் பட்ட பாடுகள். சுதந்திர காற்றை சுவாசிக்க பட்ட இன்னல்கள் தான் எத்தனை? வளங்களை, தாதுக்களை தம் ஊர்களுக்கு எடுத்துச்செல்ல மேம்படுத்தப்பட்ட சாலைகள், ரயில்வே என கொண்டுவந்த கொஞ்ச நஞ்ச திட்டங்களும் ஆங்கிலேயருக்கு லாபம் தரும் வகையில் சுயநலமிக்கவை தான். அப்படியென்றால் அனைத்து ஆங்கிலேயர்களும் கல் நெஞ்சக்காரர்கள் தானா?




இல்லை என உரக்கக் கூறுகிறது எழுத்தாளர் அ. வெண்ணிலா வின் 'நீரதிகாரம்' தொடர்.

சர் ஜான் பென்னி குயிக். முல்லைப்பெரியாறு அணையின் தந்தை எனலாம். அணை கட்டுவதற்கான முழு முதற் காரணகர்த்தா. அவர் இன்றி இந்த அணை இல்லை. அவர் இன்றி தென் மாவட்டங்களில் நன்செய் நிலங்களில் நீர் பாய்ந்திருக்காது. அதனால் தான் பொங்கல் நன்பண்டிகை தினத்தில் அவரை கடவுள் போல் கும்பிடும் வழக்கம் நம் தென்னாட்டவரிடம் இருக்கிறது. ஏன் சமீபத்தில் நமது மாநில அரசு அவரது பேத்தியை தேனிக்கு அழைத்து பொங்கல் கொண்டாடி பெருமை சேர்த்தது.

ஒரு சேதிபோல் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் பென்னி என்ற அளவில் தான் எனக்கு தெரியும். ஆனால் இந்த அணை கட்ட அவர் என்ன என்ன இன்னல்களை எதிர்கொண்டார் என்பதை தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு எடுத்துக்கூறும் ஒரு மாபெரும் சரித்திர சாட்சி தான் எழுத்தாளர் வெண்ணிலா அவர்களின் 'நீரதிகாரம்'.

அணை ஏன் கட்டப்பட வேண்டும். மதுரையில் நிலவிய தாதுவருடப் பஞ்சத்தில் ஆரம்பிக்கிறது தொடர். சொமாலியா பஞ்சத்தை விட பெரும் பஞ்சமாக மதுரையில் கொடுமை கூத்தாடியது என்பதை மனம் நம்ப மறுக்கிறது. கணவன் மனைவி குழந்தைகள் உற்றார் என கண்முன்னே பசியால் கொடும் சாவுகள் ஏற்பட்டன. பிணங்களை அடக்கம் செய்ய அல்லது அகற்றக் கூட திராணியில்லாது மக்கள் பசியால் வாடினர். பஞ்சம் என்று கேள்வி மட்டும் தான் பட்டிருப்போம். ஆனால் அந்த பஞ்சம் எவ்வளவு கொடுமையானது என்று விவரித்திருக்கும் பாங்கு, அதை படித்தபின் நம்மை ஒரு பருக்கை கூட கீழே சிந்தவிடாது. அதுவே அந்த விவரிப்பின் வெற்றி. எழுத்தாளரின் லட்சியம். அது இங்கு நிறைவேறியிருக்கிறது. அந்த பஞ்சத்தின் காரணமாக மக்கள் திருடர்களாக மாறியது, வழிப்பறி செய்தது, கஞ்சித்தொட்டிக்காக கையேந்தி நின்றது என பல நிகழ்வுகள் டாகுமெண்டரி போல் அல்லாது ஓரொரு கதை மாந்தர்கள் மூலமாக நமக்கு கடத்தப்படுகின்றன. இந்த கொடுமையை கண்ட பிரிட்டிஷார் இப்பிணியை போக்குவதற்காக பேரியாற்றின் ஒரு பெரும்பகுதி கடலில் வீணாகாமல் தடுப்பதற்கு மற்றும் மடை மாற்றி மதுரை நோக்கி வைகையாய் பாய்வதற்கு அணை கட்ட முன்னெடுக்கின்றனர்.

அணை கட்ட வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்லவே. முதலில் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்க வேண்டும். பின்பு அணை கட்டும் இடத்தை கையகப்படுத்த வேண்டும். ஒப்புதலும் உடனே கிடைக்கவில்லை. பல ராயல் என்ஜினீயர்கள் கையில் தூக்கி பின் கிடப்பில் போடப்பட்ட கோப்பை மனம் தளராது மீண்டும் மீண்டும் முயற்சித்து ராணியிடம் இருந்து ஒப்புதல் வாங்குகிறார் பென்னி. சர் பென்னி குயிக்கின் அளப்பரிய காதல் அதாவது அணை கட்டுவதின் மீதான காதல் பிரமிக்கவைக்கிறது. பல முறை நிராகரிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய இந்த பேரியாற்று அணை திட்டத்தை எப்படியும் செயல் படுத்தி விட வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி அவர் மீது நமக்கு மாளா அன்பை விதைக்கிறது. பென்னி குயிக்கின் ஆரம்பம் மட்டுமின்றி அவரது தந்தை காலம் முதல் இந்த நாவல் கிளை பரப்பி விவரிக்கிறது. அடிஸ்கும்பே முதல் அவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியது வரை அங்குலம் அங்குலமாக உரையாடல் நடக்கிறது. பிரிட்டிஷாரின் வாழ்க்கை முறை, பென்னி குயிக்கின் மனைவி, அவரது குழந்தைகள் அவர் ஓய்வெடுக்கும் பங்களா என அதகளப்படுத்திருக்கிறார் கதாசிரியர்.

நிலம் கையகப்படுத்த மூலம் திருநாள், சுவாதி திருநாள் என திருவாங்கூர் மகாராஜாவிடம் சமாதானப்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட ப்ரயத்தனங்கள், திவான் அய்யங்கார் மற்றும் மதராஸ் ப்ரெசிடென்ஸி மத்தியில் போக்குவரத்து என அத்தனை வரலாறுகள். கூடவே நாம் பெரிதும் தெரிந்திராத கண்ணகி கோவில் அதன் வழிபாடு என ஒரு ஆவணமே இந்த தொடரில் அடங்கியிருக்கிறது.

அணை கட்டுவதற்கு முந்தைய ஏற்பாடுகளை 'Preliminary investigation for a dam' என்று சொல்லுவார்கள். ஒரு தேர்ந்தெடுத்த சிவில் என்ஜினியர் எத்துணை சிரத்தை எடுத்து அந்த முதல் விசாரணையை செய்வார்களோ அதுபோன்றதொரு நுட்பமான ஆராய்ச்சியுடன் இந்த தொடரை அணுகியிருக்கும் வெண்ணிலா அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படுத்துகிறார். அவ்வளவு minute detailing.

சரி அணை கட்டுவதென்றால் ஆட்கள் வேண்டுமே. அட்டை, கொடிய மிருகம், மாறுபட்ட சீதோஷண நிலை என பல தொந்தரவுகளுக்கு மத்தியில் தேனி கம்பம் என்று மலையடிவாரத்திலிருந்து ஆட்களை கொணர்ந்து அவர்களை மேற்பார்வையிடும் கங்காணிகள், யானை மனிதன் எதிர்கொள்ளல், வெள்ளம், மேல்மலை காய்ச்சல், உணவு உறைவிடம் என தினப்படி அரங்கேறும் நிகழ்வுகள் என காட்சிகள் கண்முன்னே திரை போல் விரிகின்றன. கிடைக்கும் சந்தடி சாக்கிலெல்லாம் மதமாற்றம் செய்யத்துடிக்கும் பாதிரியார்களை, மதம் மாறும் மக்களின் பிரதான காரணமாகிய வர்ணாசிரம பேதம், பஞ்சம் என அவற்றையும் நுட்பமாக விரவியிருப்பது தொடரின் பன்முகத்தன்மையை மெருகூட்டுகிறது.

எழுத்தாளர் ஒரு கோழியை கூட சிறு கதாபாத்திரமாக அந்த சூழ்நிலையை விவரிப்பதற்காக உபயகோபாடுத்திய பாங்கு ரசிக்கவைக்கிறது. உதாரணமாக அவரது எழுத்துக்களில், "இறகு விலக்கிப் பார்த்துக்கொண்டிருந்த கோழிக்குஞ்சின் சிறுவிழி நின்று அசைந்தது' மற்றும் ஒரு பெரும் சரித்திர நிகழ்வுக்காக அடித்தளம் போடும் மெஷினின் இரைச்சலை பொருட்படுத்தாமல் கோழி தன்னியல்பில் இயங்குகிறது என்பதை 'ஜங்க்ஷனின் பரந்த வயலில் குஞ்சுகள் பின் தொடர, காட்டிலிருந்து இடம்பெயர்ந்த ஆனையூர்க்கோழி சத்தங்களைப் பொருட்படுத்தாமல் மண்ணைக் கீறி இரை தேடியபடி முன்னேறிக்கொண்டிருந்தது' போன்ற சொற்தொடர்கள் கடுங்கோடையில் பெய்யும் மழையைப்போல இறுக்கமாக நாவல் செல்லும் சூழ்நிலையில் மனதை லகுவாகின்றன.

அரசுக்காக குருதி சிந்தி உழைத்த திவான் ஒரு கட்டத்தில் அவப்பெயர் பெறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது அவரை குறுகிக் கொன்று கொண்டிருக்கிறது. சில நாட்கள் கழித்து ரெஸிடண்ட் ஹெனிங்க்டனிடம் இருந்து வரும் கடிதம் மூலம் அவர் அவப்பெயர் நீங்கியது என்பதை திவான் உணர்கிறார். மீளாத்துயில் கொள்கிறார். ஒரு கதாபாதிரம் தானே என்று கொள்ளாமல் அதற்கும் தக்க மரியாதை அளித்து ‘sent off with all honours’ என்பார்களே அதுபோன்ற ஒரு பிரியாவிடையளிக்கிறார். ஒரு வகையில் திவான் குற்றமற்றவர் என்பது நமக்கும் சற்று மகிழ்ச்சியைத் தருகிறது.

பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில் கஞ்சியைப் பார்ப்பதே அரிது. அதிலும் மேல்மலையில் வேலைக்குச் சென்றவர்கள் ஆறணா மற்றும் ரூபாய் போன்றவற்றை முதன் முதலாக அவர்கள் பார்க்கும் காட்சி, நடுநிசியில் எழுந்து அதை கண்ணில் ஒற்றிக்கொள்வது, அதை கடவுள் போல பாவித்து விழுந்து கும்பிடுவது என விவரிக்கும் அந்த ஒரு பத்தி போதும் அந்த பஞ்ச காலத்தை நம் கண்முன்னே நிறுத்த.

ராணுவ பணியில் அமர்த்தப்பட்ட ராயல் இஞ்சினியர்கள் எவ்வாறும் பொதுப்பணித்துறைக்கு வந்தார்கள், உள்ளூர் ஜனம் எதற்காக ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று ஹெனிங்க்டன் மற்றும் பென்னி பேசிக்கொள்ளும் சம்பாஷகனைகள், டேம் கட்டுமானத்தில் spillage என்று சொல்லப்படும் உபரி நீர் செல்வதற்கான வாய்க்கால், பென்னி அவர்களின் கிரிக்கெட் பிரயாசை மற்றும் அதில் விற்பன்னராக இருந்தது, மேல்மலையில் வேலை செய்வதற்காக டர்பைனை கப்பலில் ஏற்றி வர யோசிக்கும் யுக்தி என தொடரின் ஏகப்பட்ட சிரத்தையான ஆராய்ச்சிகள் மற்றும் ஆச்சர்யங்கள். ஒவ்வொரு வாரமும் வரலாற்று ஆவணங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

கிளைக்கதைகளில் வெண்ணிலா அவர்கள் என்றுமே ஸ்பெஷலிஸ்ட் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிரூபித்துளார். யார் எதிர்பார்த்தார்கள்? தாது வருடப்பஞ்சத்தை இரண்டு அத்தியாயங்களில் கண் முன்னே கொண்டு வருவார் என்று. யார் எதிர்பார்த்தார்கள்? ஒரு கிராமமே திருட்டுக்கு செல்லும் கதை நீராதிகாரத்தில் முளைக்கும் என்று. யார் எதிர்பார்த்தார்கள்? கண்ணகி கோவில் அதை கும்பிடும் காணிகள் அவரது வாழ்வியல் முறைகள் கோட வர்மாவுக்கு உதவிய கதைகள் இங்கு கிடைக்கும் என்று. ஒரு நாள் பெய்யும் மழையை சிலாகித்து மூன்று பக்கங்கள் சுவாரஸ்யமான விவரணை தந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆறு எந்த வழியில் பாய்கிறது? எத்தனை நிலங்களை பயிர் செய்ய உதவுகிறது? கம்பம் ஜமீன், சுருளியாறு, பாளையம்பரவு அணை, உத்தமுத்து அணை, ரயத்து என நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முந்தைய தரவுகள் அதற்கு பின் இருக்கும் அயராத உழைப்பு அளப்பரிய வியப்பையளிக்கிறது.

எவ்வளவு சிரமத்திற்கு இடையில் பிரிட்டிஷார் டேம் கட்டுமானத்தை நிறைவு செய்திருக்கின்றனர் என்பதற்கு ஒரு அத்தாட்சி பாருங்கள். டெய்லர் என்ற பொதுப்பணித்துறை இன்ஜினியர் பென்னியுடன் வேலை செய்கிறார். மேல்மலையின் மேலேயே தங்கியிருக்கும் அவருக்கு இங்கிலாந்தில் இருக்கும் தன் குடும்பத்தின் ஞாபகம் வருகிறது. அங்கு சென்றால் வேலை தடைபடும் என்ற காரணத்திற்காக அவர்களை இங்கு அழைக்கிறார். அவர்கள் கப்பல் ஏறி இங்கு வந்து கொண்டிருக்கும் வேளையில் இவர் மலை மேலிருந்து கீழே ஒரு மெஷினில் விழுந்து கோர விபத்தில் இறக்கிறார். கப்பல் இறங்கி வரும் டெய்லரின் பெண்ணுக்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று பென்னி கலங்கும் காட்சி நம்மை உலுக்குகிறது.

ஓவியர் ஷ்யாம் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆரம்பதில் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பின்புதான் தெரிகிறது ஒவ்வொரு தொடருக்கும் ‘நீரதிகாரம்’ என்று தலைப்பு கொடுக்கும்பொழுது அந்த வாரம் எழுத்தாளர் என்ன சொல்லாடியிருக்கிறரோ அதை ஒரு hint ஆக தருவித்திருக்கிறார். Brilliant மற்றும் இண்டரெஸ்ட்டிங். இவரது கைவண்ணத்தில் தான் கோடவர்மா, பென்னி, மேல்மலை, டேம் கட்டுமானங்கள், பஞ்சம், மாயன் என ஒவ்வொருவரும் நம் கண்முன்னே விரிகின்றனர். இந்த நாவலின் ஒரே ஒரு பக்கத்திற்காக வரலாற்றின் பல பக்கங்களை புரட்டி குறிப்பு எடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

நாவலின் ஸ்திரத்தை மேம்படுத்த மேலும் அதற்குரிய ஆவணங்களை கண்டறிய எழுத்தாளர் பென்னி வாழ்ந்த இடத்துக்கே நேரடியாகச் சென்றிருக்கிறார். பென்னி மேல் பிரியம் கொள்வது தாங்கள் மட்டும் இல்லை. தங்கள் மூலம் நாங்களும் அவரின் பால் மாளாத அன்பு கொள்கிறோம்.

தொடர் நூறாவது அத்தியாயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இரண்டு வருடங்கள் நீரதிகாரம் மற்றும் பென்னியுடன் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதே பேருவகையாக இருக்கிறது.

‘மழை பாரபட்சமில்லாமல் எல்லோரையும் நனைத்தது’ என்ற ஒரு வரி இந்த சமுதாயம் மொத்தத்துக்கும் ஆனது.

அணை கட்டி முடிக்கப்படும் அந்தத் தருணத்திற்காக பென்னி மட்டும் இல்லை. நாங்களும் காத்திருக்கிறோம்.

வாழ்துக்களும் நன்றியும் மேடம்.

Suguna Diwakar Ananda Vikatan அ. வெண்ணிலா
#neerathikaram #Vikatan #AnandaVikatan

செவ்வாய், ஜூலை 04, 2023

மாடர்ன் லவ்-சென்னை

  

ஆறு எபிசோட்கள். ஒவ்வொன்றும் ஒரு தினுசு. ஆனால் காதல் மட்டுமே கரு.

முதல் எபிசோட். - லால்குண்டா பொம்மைகள். ராஜூமுருகன் இயக்கியிருக்கிறார். படத்தில் வரும் கட்டிடம் மற்றும் இடம் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் வரும் இசக்கி பரோட்டா கடையை ஞாபகப் படுத்துகிறது. ஒரு வேளை அதுதானா. எந்த வித குழப்பமும் இல்லாத லீனியரான ஒரு பீல் குட் கதை.

இரண்டாம் எபிசோட் - இமைகள். பாலாஜி சக்திவேலின் இயக்கம். நிஜத்திற்கு சற்று தொலைவில் கதையைச் சொல்லியிருக்கிறார். பார்வைத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன்; அவர்கள் வாழ்க்கை பற்றியது கதை. இதுவும் லீனியரான யதார்தத்துக்கு சற்று மீறிய பீல் குட் கதை தான்.

மூன்றாம் எபிசோட் - காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கிற எமோஜி. பைவ் ஸ்டார் கிருஷ்ணா இயக்கம். இந்த ஆறு எபிசோடில் மிகவும் இளமைத் துள்ளலான கதை இதுதான்.  ரீத்து வர்மாவின் எனர்ஜடிக் பெர்பார்மன்ஸ். இசை. காட்சியமைப்பு. வாய்ஸ் ஓவர் (தீபா வெங்கட்) என எல்லாமே பிரமாதம். செம ஜாலியான யதார்த்தமான சுய எள்ளலுடன் கூடிய ஒரு பெர்ஃபக்ட் ரிபீட் வாட்ச் மூவி.



நான்காம் எபிசோட் - மார்கழி. பாலாஜி தரணீதரன் எழுத்து. (ந.கொ.ப.கா ஞாபகம் இருக்கிறதா?). ஒரு டெண்டர் ஏஜ் பெண். பெற்றோரின் பிரிவில் டிப்ரஸ் ஆகிறாள். சர்ச் கொயரில் சேர்த்துவிடப்படுகிறாள். டியூஷன், சைக்கிள், பள்ளி விடுமுறை நாட்கள், இளம் சிறார்கள், coming of age, இளையராஜாவின் கட் இசை பாடல், BGM என ஒரு மாதிரியான நோஸ்டால்ஜிக் மூவி. டோன்ட் மிஸ் இட். காதில் இளையராஜாவின் இசை ரீங்காரம் இட்டு கொண்டே இருக்கும்.

ஐந்தாம் எபிசோட் - பறவை கூட்டில் வாழும் மான்கள்- பாரதிராஜாவின் இயக்கம். பிரதீப் குமார் (not 96) எழுத்து. EMA என்று சொல்லப்படுகிற மணத்தை தாண்டிய உறவில் சிக்கும் கிஷோர். மனைவியே இருவருக்கும் இடையில் சமரசம் செய்து விட்டுக்கொடுத்து சென்று விடுகிறாள். கிஷோர், ரம்யா நம்பீசன் மற்றும் விஜயலக்ஷ்மி அகத்தியன், டெல்லி கணேஷ் என தேர்ந்த நடிப்பு. டெல்லி கணேஷ் மட்டும் கோபப்படுகிறார். சம்பந்தப்பட்ட மற்ற மூவருமே மிகவும் கூலாக ஹேண்டில் செயகிறார்கள். இரு குழந்தைகள் மற்றும் அன்பான மனைவி என எந்தவிதமான குறையும் இல்லாத ஒரு குடும்பத்தை களைத்து விட்டு வேறொரு பெண்ணுடன் கிஷோர் பழகுவதற்கான ஒரே காரணம் நாய் காதலா? அந்த கள்ளக் காதலை 'என் இனிய பொன் நிலாவே' பாடல் மூலம் புனிதப்படுத்தும் வேலையை இயக்குனர் செவ்வென செய்கிறார். அதை பார்க்கும் நமக்கு தான் கொஞ்சம் பதட்டம் ஏற்படுகிறது. கணவன் இன்னொரு பெண்ணை விரும்பும் விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக கையாளும் பெண்ணை, படத்தை சற்று பதைபதைப்புடன் தான் கடந்தேன். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்? பார்த்தாலே பரவசம் படத்தின் 2023 version இது என்றால் மிகையாகாது

ஆறாவது எபிசோட் - நினைவோ ஒரு பறவை.பார்ப்பதற்கு ஒரு லீனியரான மூவி போல் தெரிந்தாலும் இணைய உலகமே இந்த எபிசோடை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. சாம் என்ற காதலி. கே என்கிற காதலன். இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். ஒரு விபத்தில் அடிபட்டு கே தனது நினைவுகள் முழுவதையும் இழந்து விடுகிறார். அவர் நினைவுகளை மீட்டெடுக்கும் வேலை சாம் என்கிற அவரின் பழைய காதலியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணங்களையும் விவரிக்கும் சாம், 'நாம் ஏன் பிரிந்தோம்?' என்று கே கேட்கும் கேள்விக்கு பதில் கூற மறுத்துவிடுகிறாள். கோபம் கொள்ளும் கே அவளிடம் இருந்து விலகிச் செல்கிறான். பிறகு அவள் நினைவுகள் இன்றி வாழ முடியாது என்று மீண்டும் அவளிடம் வந்து சேர்ந்து கொள்கிறான். இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? கே ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். காணிக்கப்படும் காட்சிகளில் எது நிஜம் எது பொய் எது ஸ்க்ரிப்ட் ஏன்? சொல்லப்போனால் கே ஸ்க்ரிப் ரைட்டரா அல்லது சாம் தான் ஸ்க்ரிப்ட் எழுதுகிறாளா என ஏகப்பட்ட்ட குழப்பம். இந்த எபிசோடை ஆராய்ந்து இணையமே ஏகப்பட்ட கதையை கூறுகிறது. நல்ல ஒரு உரையாடலை அதுவும் திரை மொழியைப் பற்றி திரையில் விவாதம் தொடங்கியிருக்கிறது. yes. அதே தான். welcome to தியாகராஜ குமாரராஜா மூவி.