புதன், ஏப்ரல் 17, 2024

குணா 1991

 


 

பொதுவா நெகெட்டிவ் எண்டிங் படம் பாக்குறது கிடையாது. "அது படம் தான டா. அதுக்குள்ள என்னடா கனெக்ட் பண்ணிக்கிறீங்க?' அப்டினா, அப்டித்தான். நாங்கள்லாம் எமோஷனல் இடியட்ஸ் :) 

முன்னொரு முறை டிவில போட்ட போது குணா படத்தை பாத்ததுண்டு. சின்னப்பிள்ளையா இருக்கும்போது பாத்தது. என்ன விளங்கியிருக்கும்? லூசு ஒருத்தன கடத்திட்டு போய் அப்புறம் தற்கொலை பண்ணிக்கும்ங்கற ரேஞ்சில தான் புரிதல். 

2024ல பாக்கும்போது மட்டும் விளங்கிடுச்சான்னு கேட்கக்கூடாது. அதே லூசு தான். அதே கடத்தல் தான். அதே தற்கொலை தான். ஆனா என்ன எமோஷனலா பிழிஞ்சி எடுத்துடுச்சு. சில பாயிண்ட்ஸ். 

1. படம் முழுக்க கமல் தான். 'இந்த பாரு என்னோட ஆக்டிங் ஸ்கில்ஸ்' அப்படிங்கற தொணில சும்மா அள்ளி தெளிச்சிருக்காரு. அவருக்கு நிகர் அவர் தான். பாத்துட்டே இருக்கலாம். அந்த அழுகையெல்லாம் அடடா. பல்கலைக்கழகம். இதுக்கு மேல என்னத்த சொல்ல . 



2. ராஜா ராஜா தான். 'கண்மணி' பாட்ட வச்சி 2024ல ஒரு படமே எடுத்துட்டாங்க. கதையோட ஓட்டத்துக்கு ஏத்த bgm. முக்கியமா க்ளைமாக்ஸ். அவரை பத்தி சொல்ல வேற என்ன. உங்களுக்கே தெரியும். 

3. கதை திரைக்கதை எழுதுனவர் சப் ஜான் அப்படிங்கற ஒரு மலையாளி. குணா அவரோட முதல் தமிழ் படம். ரொம்ப நாள் கழிச்சு சில்லுனு ஒரு காதல்ல ரிட்டர்ன் வந்தார். 

4. படம் குணா அப்டிங்கற பைத்தியத்தை பத்தி தான்னாலும் பல இடங்கள்ல குணா பைத்தியமா? இல்ல மத்த எல்லாரும் (நம்மளையும் சேத்தி) பைத்தியமா? அப்படிங்கற ஒரு சந்தேகம் வருது. குணா தெளிவா தான் இருக்குறாரு. எந்த ஒரு உயிருக்கும் மனசாலையோ உடல் மூலமாவோ துன்பம் கொடுக்குறது கிடையாது (ஒரு exception. அபிராமி).  

5. டாக்டரோட பேசுற டையலாகஸ் ஆகட்டும், குகைல ரோஹிணியோட பேசுற வசனங்களாகட்டும் அவ்ளோ அர்த்த புஷ்டி. முக்கியமா சவரம் பண்ணும்போது சிவாஜி கூட பேசுவார் பாருங்க. ஆர்.எஸ்.சிவாஜியும் சந்தான பாரதியும் சகோதரர்கள் என்பது கொசுறு தகவல். 

6. ஹைதெராபாத் கதைக்களம் அமைச்சதுக்கான காரணம் விளங்க வில்லை. தமிழ்நாட்டுக்குள்ள ஒரு புல் டைம் பிராத்தலா, படம் ஓடாது அப்டினு நினைச்சிட்டு கூட மாத்திருக்கலாம். ரேகா கொஞ்சம் டம்மி பண்ண மாதிரி இருந்துச்சு. முந்தானை நழுவினாலும் கமல், 'ம்ஹும், யூ ஆர் நாட் மை அபிராமி'ன்னு தூங்கிருவார். 

7. ஆரம்பத்துல லட்சுமி பொண்ணு ஐஸ்வர்யாவையும், சிவரஞ்சனியையும் 'அபிராமி' கேரக்டருக்கு யோசிச்சிருக்காங்க. அவங்க கால் சீட் கிடைக்காததுனால 'ரோகினி' நடிச்சிருக்காப்புல. மும்பை மாடல். 2024க்கும் கொள்ளை அழகா தெரியுதுனா 1991ல நம்ம குணா வெறியன்ஸ் பைத்தியமா திரிஞ்சிருப்பாங்க போல. ஆனா ஒரே படம் தான். சிட்டா பறந்து US போய்ட்டாங்கனு சொல்றாங்க. இப்போ வரைக்கும் எங்க இருக்கறாங்கன்னு தெரில. அபிராமியே மனசு வச்சி காட்சி கொடுத்தாத்தான் உண்டு. 

8. ஒரே ஒரு நெருடல். பொண்ணோட சம்மதம் இல்லாம தூக்கிட்டு வந்து காதல் பண்றது மட்டும் ஒத்துக்க முடியலை. ரோஹிணி, அதுபாட்டுக்கு கோயில்ல லட்டு கொடுத்துட்டு போயிட்ருக்கு. அதை தூக்கிட்டு வந்து ரெண்டு மூணு நாள் பாடாபடுத்தி, சந்தர்ப்ப சூழ்நிலையால கடத்திட்டு வந்த குணாவை லவ் பண்ண வச்சி, 'வாட் இஸ் திஸ் கமல் அண்ட் கோ?'. அப்பா சரியில்லாததுனால அம்மா தொழிலுக்கு வந்து அதனால பாதிக்கப்பட்டு, அந்த அபிராமி மட்டும் தான் புனிதம்னு நினைக்கிற ஒரு மனநிலை பிறழ்வு உள்ள ஒரு மனுஷன், அவருக்கு பிடிச்ச ஒரு பொண்ணு வந்த உடனே 'ஏலே எடுறா வண்டியைங்கற' ரேஞ்சுல அந்த பொண்ணை தூக்கிட்டு போய் 'அபிராமி, அபிராமி'னு லவ் பண்ணா சரி ஆயிடுமா?. இந்த படத்தை பார்த்துட்டு எத்தனை பேரு சந்துபொந்துலேந்து பக்கத்துத் தெரு அபிராமியை தூக்கினங்களோ தெரியலை. அடிப்படையே நெருடலா இருக்கு. நெருடல் என்ன நெருடல். தப்புன்னே சொல்லலாம். ஆனா அந்த நெருடலை வசனம், ராஜா இசை, ரோகினி அழகு அப்புறம் கமல் நடிப்புல மழுங்கடிச்சுட்டாங்க. இதைத்தான் சினிமாவோட மேஜிக்னு சொல்லணும். அந்த காதல் கடைசில புனிதம் ஆயிடுச்சு. ரொம்ப கேள்வி கேட்டா என்னனு யோசிச்சு 'அதையும் தாண்டி புனிதமானது'னு ஆக்கிட்டாங்க. 

9. தூக்கிட்டு வராம கூட்டிட்டு வந்திருந்தா குணாவோட லவ் தான் இதுவரை வந்த காதல்லேயே புனிதம்னு சொல்லலாம். ஆனா குணாவோட மனசு சுத்தம் தான். அந்த மனசுக்குத் தெரிஞ்ச வழி அது ஒன்னு தான். அதனாலதான் ரோகினி குணா மேல அவ்ளோ பைத்தியம் ஆயிடுது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல தான். 

10. பாசிட்டிவ் க்ளைமேக்ஸ் வச்சிருந்தா, குணாவோட ரோஹிணி எப்படி குடும்பம் நடத்த முடியுங்கற கேள்வி வரலாம். முக்கியமா இந்த நெகட்டிவ் க்ளைமேக்ஸ் தான் குணாவுக்கு அப்படி ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் கொடுத்திருக்கு. இறந்து போன ரோஹிணியோட தானும் குதிச்சிடுறார். ரோகிணியும் சினி பீல்டுலேந்து காலி. ஏதும் குறியீடா நினைச்சி கமல் இந்த கிளைமேக்ஸை வச்சாரான்னு தெரில.

எது எப்படியிருந்தாலும் லவ் பண்ணா அப்படி உயிரை கொடுத்து பைத்தியமா லவ் பண்ணனும்.  

அபிராமி, அபிராமி, அபிராமி.  

#gunamovie #KamalHaasan #GUNA1991

 

Cherishable Moments

 


அரக்க பறக்க ஓடி ஆடி வேலை செய்றது எதுக்கு. இந்த ஒரு ஜான் வயித்துக்காக. 

சுவையான சாப்பாடோட நண்பர்கள் அரட்டை சேரும்போது அந்த சாப்பாட்டோட சுவை இன்னும் பன்மடங்காயிடும். அது மாதிரி ஒரு தருணம் தான் இந்த போட்டோல.  

கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் இந்த இடத்துல தான் உக்காந்து மதிய சாப்பாடு. ஸ்கூல்லேயே பிடிச்ச ரெண்டு விஷயம் ஒன்னு இந்த சாப்பிட்டு டைம்.  

ரெண்டாவது PET பீரியட். விளையாடறதெல்லாம் கிடையாது. ரெண்டு மூணு பேர் சேர்ந்து தூரத்துல இருக்குற பெட்டிக்கடைல போய் அந்த வாரம் சேத்து வச்சிருந்த ஒன்னு ரெண்டு ரூபாய்க்கு கல்கோனா ஜவ்வு மிட்டாய் உப்பு மிளகா போட்ட மாங்காய் வாங்கிட்டு வருவோம். இந்த ரெண்டுத்திலேயும் ரேங்க் பண்ணனும்னா மதிய சாப்பாட்டு வேலை தான் முதல். ரேங்க்.



 

நாலாவது பீரியட் முடிஞ்சதும் கூடையத் தூக்கிட்டு கிளம்பிடறது. க்ளாஸ் ஒருபக்கம் இருக்கும். சாப்பிடுற இடம் அந்தாண்ட சேப்பல் பக்கத்துல இருக்கும். அதுல ஒரு மரத்துக்கு கீழ பதிவான ஒரு இடம். வெயில் இருக்காது. இல்லனா தெரியாதுனு சொல்லலாம். டவல் விரிச்சி அது மேல உக்காந்துட்டு டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட வேண்டிதான். அன்னன்னைக்கு என்னென்ன உண்டோ அத ஷேர் பண்ணி சாப்பிட்ட ஞாபகம். ஒரு மணி நேரம் லன்ச் டைம்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் சாப்டுட்டு வாட்டர் பாட்டில் ஓபன் பண்ணி பக்கத்துலேயே கைய்ய கழுவிட்டு டிபன் பாக்ஸை மூடி வச்சிட்டு முட்டிய கட்டிட்டு கால் மணி நேரம் அரட்டை. வாத்தியார், சைக்கிள், படம், விளையாட்டு, பரீட்சை மார்க் பேச்சு எங்கெங்கேயோ நீளும். குடிக்கிற தண்ணி காலியாயிடுச்சுனா வேப்ப மரம் அடில ஒரு டேங்க் இருக்கும். கீழ அஞ்சாறு பைப். அதுல கைய வச்சி மோந்து குடிச்சிக்கிறது. பிரிட்ஜ் தண்ணி தோத்துப்போற அளவுக்கு வேப்ப மர குளிர்ச்சி. 

காலேஜ்ல இது மாதிரி மரத்துக்கு அடில உக்காந்து சாப்பிட்ட ஞாபகம் இல்லை. வேலைக்குப் போனப்புறம் எங்கேயுமே உக்காந்து சாப்பிட்ட மாதிரி கூட ஞாபகம் இல்லை. தட்ட தூக்கிட்டு நின்னுக்கிட்டேன் சாப்டுட்டு ஓடுற மாதிரி தான் இருக்கு. பொறுமையா உக்காந்து சாப்பிட்டா, unrealisticஆ இருக்குது. ஒரு guilty ஃபீலிங் வர்ற அளவுக்கு!!! அந்த அளவுக்கு நம்ம மூளையை டியூன் பண்ணி வச்சிட்டாங்க. 

நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒண்ணா விளையாடிருக்கலாம். ஆனா கடைசியா ஒரு நாள் விளையாடிருப்போம். ஆனா அதுதான் கடைசின்னு நமக்கு அன்னைக்கு தெரிஞ்சிருக்காது. ஒருவேளை தெரிஞ்சிருந்தா அன்னைக்கு நம்ம வீட்டுக்கே வராம விளையாண்டுட்டே இருந்திருப்போம். அது மாதிரியான ஒரு sweet memory தான் இது. ஒருவேளை டைம் ட்ராவல் பண்ணி போகணும்னு ஒரு ஆப்ஷன் கிடைச்சா நான் முதல்ல டிக் அடிக்கிற இடம் இந்த ஸ்கூல் வேப்பமரத்துக்கு கீழ கிடைச்ச சாப்பாட்டு நேரம் தான். 

#cherishablemoments

 

பொறுக்கலையே

 


'உனக்கென்ன. மூடிட்டு இரு', அப்டினு சொல்றத கேட்ருப்போம். சும்மா இல்லாம அதாவது மனசுக்குள்ள உண்மையா என்ன நினைக்கிறோம் அப்டிங்கறத வயிறு எறிஞ்சிகிட்டு சொல்லி ஊரெல்லாம் வாங்கி கட்றது தேவையா? நுணலும் தன வாயால் கெடும்ன்ற மாதிரி ஆச்சுல்ல. 

விஷயம் இதுதான். டி.எம். கிருஷ்ணாக்கு 2024 வருடத்துக்கான சங்கீத கலாநிதி அவார்ட் கொடுத்ததுக்கு ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் பொங்கிருக்காங்க. இனிமே ம்யூசிக் அகடெமில பாடப்போறது இல்லை அது இதுனு ஏகப்பட்ட புலம்பல். இவங்க லெட்டர் அனுப்புன கையோட, சொல்லப்போனா லெட்டர் அகடெமிக்கு போய் சேர்றதுக்குள்ளேயே சோசியல் மீடியால அதை போஸ்ட் பண்ணி ஒரே ரகளை பண்ணிருக்காப்புல. காரணம் என்ன?. வவுத்தெரிச்சல். 30 வருஷம் கூவுறோம். வர்லேயேனுட்டு. இதுமட்டுமில்லாம, இன்னும் சில பேர், தனக்கு கொடுத்த அவார்டை ரிட்டர்ன் பண்றோம்னு கூச்சல் வேற. குடு. யாருக்கு நஷ்டம்.

 


பெரிய பங்களாவை இல்ல அரண்மனையை பாக்குறீங்க. உள்ள போய் பாக்கணும்னு நாம ஆசைப்படலாம். உள்ள விடுவாங்களா பாக்கலாமா அப்டிங்கற சந்தேகம்லாம் வருது. அப்போ ஒரு ஆளு 'வாய்யா. இவ்ளோதான் இருக்குது. உள்ள வந்து பாத்துட்டு போ. நான் காமிக்கிறேன்' அப்டினு சொன்னா எப்படி இருக்கும்? பங்களாவுக்கு உள்ள இருக்கறவன், அதை சார்ந்து பிழைக்கிறவன் எல்லாரும் இவனை குத்துவாங்களா இல்லையா? அதுதான் நடக்குது இங்க.  

கர்நாடக சங்கீதம் அப்படிங்கறது சமூகத்துல ஒரு சாராருக்கு மட்டுமே கிடையாது, எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க அப்டினு நினைக்கிற ஆளு நம்ம கிருஷ்ணா. நினைக்கிறது மட்டும் இல்லாம கச்சேரியை நடு ரோட்டுல நடத்தி காட்டுனவரு. எல்லா தரப்பட்ட மக்களும் இந்த கர்நாடக சங்கீதத்தை ரசிக்கணும் கத்துக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கம் அவருக்கு. 

கிருஷ்ணா பெரியாரை புகழ்றாராம். அதான் மெயின் ரீசன் அப்டினு சகோதரிகள் பிராது கொடுத்திருக்காங்க. என்ன ஒரு லாஜிக்கு. எங்க போய் முட்ட. கலாநிதி அவார்ட் சங்கீதத்துக்காக ஒருத்தர் பண்ண பங்களிப்புக்காக கொடுக்கப்படற ஒரு அவார்ட். அவர் சங்கீதத்துல சாதிச்சார இல்லையானு பாத்து விமர்சனம் பண்றதை விட்டுட்டு, அவரோட சித்தாந்தங்களுக்காக வெறுக்குறேன்னு சொன்னா, தவறு யாரு மேல. சுயரூபம் வெளில வந்துருச்சு.

#isupporttmkrishna #TMKrishna #sangeethakalanidhi T.M. Krishna

 

 

விதார்த்

 


25 வருஷமா சினி பீல்டுல கஷ்டப்பட்டாலும் இஷ்டத்துக்கு படம் பண்ணாம வித்தியாசமான கதையைத் தேர்வு பண்ணி நடிச்சிட்டு இருக்கார். விமலும் இவரும் ஒரே டைம்ல தான் பீல்டுக்குள்ள வராங்க. ஆரம்ப கட்டங்கள்ல விமலுக்கு காமெடி படங்கள் நல்ல கை கொடுத்துச்சு. ஆனா போகப்போக கிடைச்ச படம்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டார். இ.எ.ம.இ. மாதிரி. 



விதார்த் அந்த அளவுக்குப் போகலை. நல்ல கதைக்களம் அப்படிங்கற மோட்டிவ்லேயே ட்ராவல் பண்ணிட்டு இருக்கார். மைனாக்கு அப்புறம் முக்கியமான படங்களா குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, காற்றின் மொழி, பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று மற்றும் குய்க்கோ சொல்லலாம். இன்னும் சொல்லப்போனா அண்டர் பிளே பண்ணி கூட இருக்கவங்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து நடிக்கிறதுல கெட்டி.   

44 வயது இளைஞர். மோஸ்ட் அண்டர் ரேட்டட் ஆக்டர் இன்னைய தேதிக்கு. நல்ல ஒரு வெற்றி கிட்டட்டும்.

 #Vidharth

 

 

தேங்க்ஸ்

 


சாதாரணமா ஒருத்தங்களுக்கு உதவி பண்ணா மறுக்கா அவங்க தேங்க்ஸ் சொல்லுவாங்க. இந்த பழக்கம் இப்போ உள்ள ஜெனரேஷன் கிட்ட ரொம்ப அருகின மாதிரி ஒரு பீல். "வீட்டுக்குள்ள இருக்கறவங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லுவோமா. ரொம்ப பார்மலா இருக்காது? அதே மாதிரி ஒரு க்ளோஸ் சர்க்யூட்ல இருக்கீங்க ப்ரோ", அப்டினு சொல்ல வராங்களா இல்ல 'டேக்கன் பார் க்ரேண்டட்' கேட்டகிரில வர்றோமானு தெரில. அவசரத்து பணம் வேணும் அப்டினு கேட்டவனுக்கு ஜிபே அனுப்புனாவோ, இந்த ப்ராடக்ட் வாங்கலாமான்னு கேக்குறவங்களுக்கு ஒரு ரிவியூ லிங்க் அனுப்புனாவோ, இன்னும் பல அனுப்புனாவோக்கு ரிப்லே வரதே கிடையாது. இன்னும் சில பேரு நாலு நாள் கழிச்சி மெசேஜ் பன்றான். பொழுதன்னிக்கும் கைல பிடிச்சி நசுக்கிட்டே இருக்கானுங்க. ஆனா பிசினு பீலா விட வேண்டிது. எட்டி பார்த்தா க்ளீனிங் வி லாகோ இல்ல மிட்நைட் பிரியாணி புட் ரிவியூவ பாத்துட்டு இருப்பானுங்க.  

எது எப்டியோ. லாஸ்ட் வீக் சம்பவம் இது. 

பின் வீட்டு பாட்டி ஒருத்தங்க. 60 இருக்கலாம். பக்கத்தில இருக்குற மண்டபம் சம்பந்தமா ஒரு டீட்டெய்ல் கேட்ருந்தாங்க. தெரிஞ்சதை விலாவரியா சொல்லிட்டு 'மேனேஜர் நம்பர் அனுப்புறேன். கேட்டுக்கோங்கன்னு' சொல்லிட்டேன். 'ஓகே. தேங்க்ஸ்' அப்டினு கையோட சொல்லிட்டு போய்ட்டாங்க.  

உள்ள வந்து நம்பர் அனுப்பிச்சிட்டு, இந்த கல் எடுத்து எரிய கீழ குனிஞ்ச உடனே நாய் ஓடும்ல, அது மாதிரி ஆபிஸ் கிளம்பிப் போய்ட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சி பாத்தா 'தேங்க்ஸ்'னு ஒரு மெசேஜ், பாட்டிகிட்டே இருந்து. அடேங்கப்பா. பக்கத்து வீட்டுக்கு கிண்ணத்துல ஏதாவது வச்சி கொடுத்தா சும்மா கொடுக்காம ஒரு கொய்யாப்பழமாவது போட்டு கொடுப்பாங்கல்ல. அந்த மாதிரி ஒரு ஜெனரேஷன் நம்மளோடது. இப்போல்லாம் கொய்யாவை விடுங்க. கிண்ணம் கூட திரும்பியே வரது இல்ல. யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம். வடிவேலு துபாய் ரிட்டன்ல டீ க்ளாஸ் உடைக்கிற மாதிரி ஆயிடுச்சு இப்போ உள்ள புள்ளீங்கோ. 

நாம? அதான் பேரு வச்சிருக்காங்களே. 'பூமர்ர்ர்ர்ர்ர்ர்'னு. :)

 

கொசு

 


பேச்சுலரா இருக்கும் போது சைதாப்பேட்டையில் தங்கி இருந்தோம். குட்டி குட்டியா வீடு இருந்துச்சு.  

பக்கத்து வீட்ல நண்பன். வீடுன்னு சொல்ல முடியாது ரூம்னு சொல்லலாம் கரெக்டா ஏழுக்கு ஆறுதான் ரூம் சைஸ். சைட்ல நாலு அடிக்கு ஆறு அடி. இதுதான் கிச்சன்.பெ ட்ரூம் அப்டின்லாம் தனியா எதுவும் கிடையாது.  

அன்னைக்கு ஈவினிங் வேலைக்கு போயிட்டு வந்து ரூமுக்குள்ள நுழையிறேன். ஜரூரா கொசுவலை கட்டிட்டு இருந்தாங்க. கொசு வலையோட நாலு கார்னரையும் எடுத்து ரூம்ல கிடைக்கிற இடங்கள்ல இருக்கிற ஆணில, ஜன்னல் கைப்பிடி, டிவி செல்ஃப் ஓரம் அப்படி இப்படினு ஒரு நாலு இடத்தில கட்டி வச்சிருந்தாங்க. 




என்னடா பண்ணிட்டு இருக்கீங்க அப்டினு கேட்டா, கொசு ஜாஸ்தியா இருக்கும். அதனால தான் இந்த ஏற்பாடு அப்டின்னான். இந்த கொசு வலைக்குள்ள போறதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு அப்படின்னு சொன்னான். ஆஃபாயில மஞ்சக்கரு உடையாம வாய்க்குள்ள தள்ற மாதிரி இந்த வலைக்குள மின்னல் மாதிரி உள்ள நுழைஞ்சான். என்னடா குறளி வித்தைலாம் காமிக்கிற அப்டினு கேட்டா, யூ டோண்ட் நோ மேன். வெய்ட் அண்ட் சீன்னு சொன்னான்.  

அன்னைக்குதாம் முதராத்திரி. அந்த ரூமுல. எனக்கும் கொசுக்கும். இவனுங்க கிடக்குறானுங்க. நம்ம கேதான் டேபிள் பேன தலைமாட்டில வச்சி படுப்போம். எந்த கொசு என்ன பண்ணும்னு பாத்தா, அன்னைக்கு தான் தெரிஞ்சது இந்த கொசுவோட ரத்த வெறி. சும்மா சொல்லக்கூடாது. அப்டியே அலேக்கா தூக்கி நம்மள அடுத்த ரூம்ல போடுற லெவலுக்கு அவ்ளோ கொசு. கொய்யி கொய்யின்னு பிச்சிருச்சு. நெக்ஸ்ட் டே விடிஞ்சவுடன முத வேல கொசு வலை வாங்கினதுதான். 

உலகத்துலேயே அதிகமான சாவு இந்த கொசுனாலதான் அப்டினு ஒரு புள்ளிவிவரம் இருக்குது. அப்படிப்பட்ட கொசுவை சும்மா விடலாமா. பல சோதனைகளை அந்த கொசு மேல தொடுத்திருக்கேன். கடிச்சிட்ருக்க கொசுவை பூப்போல அடிச்சி அதை கொல்லாம கைல எடுத்துக்கிறது. சாம்பிராணி போட்டா அதுல கொசுவை பிடிச்சி போடுறது, குட் நைட் மேட் மேல கொசுவை பிடிச்சி உக்கார வைக்கிறது, யூஸ் பண்ண குட் நைட் மேட்டை எரிக்கும்போது அதுல வர புகைய கொசு மேல காமிக்கிறது, சென்ட் பாட்டிலை கொசு மேல அடிக்கிறது, இன்னும் காண்டாகி கொசுவை பிடிச்சு அதோட மூக்குல இருக்குற ஊசியை பிடிங்கி உக்கார வைக்கிறதுனு பல ரகங்கள். 

அந்த விட்ட குறை தொட்ட குறையா நேத்து ஒரு ஆராய்ச்சி. போன்ல மேக்ரோ மோட்ல ஒரு க்ளோஸ் அப். ஃபோட்டோ ஷூட் முடிச்சி அது மேல வெண்ணிய ஊத்திட்டேன். ஹிஹிஹி

 

வாங்கன்னா வணக்கங்கண்ணா

  

பழனி படிக்கட்டு மாதிரி உடம்ப செதுக்கி வைக்கலனாலும் விஜயோட லீன் லுக் எப்பவுமே மாஸ் தான். அது ஒரு தனி இன்ஸ்பிரெஷன். ரஜினி மாதிரி ஒரு ஆன் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் உள்ளே ஒரே நடிகர் விஜய் தான். டான்ஸ்லாம் சொல்லவேத் தேவையில்லை. தேவாவுக்கே டப் கொடுக்குற அளவுக்கு நெளிவு சுளிவு. கதை, படம், ஹிட்டு, பிளாப்பு, சொல்லவர கருத்து அதெல்லாம் இங்க வேண்டாம். ஒரு பெரிய ரவுண்ட் வந்துருக்கார். இப்பவும் உச்சத்துல இருக்குற நடிகர். அதுல எந்த ஒரு மாற்று கருத்தும் இல்ல.





அரசியல் கட்சி ஆரம்பிச்ச பிறகு நடிக்க மாட்டேன்னு சொல்லிருக்கார். அந்த வகைல அவரோட ஸ்க்ரீன் charishma மிஸ் பண்றே அதே சமயத்துல அவரோட பாட்டையும் மிஸ் பண்ண வேண்டிருக்கு. தன்னோட கேரியர்ல கிட்டத்தட்ட 35 பாட்டு பாடிருக்கார். 'பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி'லேந்து கடைசியா பாடுன 'நா ரெடி தான் வரவா' வரைக்கும் பாடின எல்லா பாட்டுமே ஹிட் தான். மிடாஸ் டச்.

'அய்யய்யோ அலமேலு', 'தொட்டபெட்டா ரோட்டு மேல', 'பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி', 'ஊர்மிளா', 'ஓ பேபி பேபி', 'தம்மடிக்கிற ஸ்டைலை பாத்து', ' மிஸ்ஸிஸிப்பி நதி குலுங்க குலுங்க', 'போடாங்கோ', 'வாடி வாடி', 'கூகிள் கூகிள்', 'கண்டாங்கி', 'செல்பி புள்ள', 'வெறித்தனம்', 'குட்டி ஸ்டோரி', 'ரஞ்சிதமே' எல்லாமே பிளே லிஸ்ட் போட்டு லூப்ல கேக்கலாம். 

என்னோட பேவரைட் 'என்னோட லைலா வராலே ஒயிலா

வி வில் மிஸ் யூ சிங்கர் விஜய் ❤️

 #vijaythalapathy #TVKVijay #tamizhagavetrikazhagam #singervijay #actorvijay

 

ஜோ

 


படத்துல பல சீன்கள் சூப்பரா இருந்துச்சு. பர்டிகுலரா ஒரு சீன் ரொம்ப நல்லாருந்துது.




 

ஜோவும் ஸ்ருதியும் க்ளைமேக்ஸ்ல பேசுற இந்த சீன். ஸ்ருதி ரொம்ப குழப்பமான ஒரு மன நிலைல இருக்கிறாங்க. பட் ஜோ தெளிவான ஒரு நிலைல இருப்பார். அது வசனத்துல மட்டும் இல்ல. லைட்டிங்கிலேயும் காமிச்சிருப்பாங்க. ரெண்டு பேரும் ஜன்னல் பக்கம் தான் இருந்தாலும் ஸ்ருதி மேல கொஞ்சமா டார்க் ஷேட் விழும். ஆனா ஜோவுக்கு நல்ல வெளிச்சம் காமிச்சிருப்பாங்க. அதே சீன்ல ஸ்ருதி பேசி முடிக்கும்போது தன்னோட குழப்பத்துலெந்து வெளில வந்துருப்பாங்க. 'என் வாழ்க்கைல ஒரு பைய்யன் இருக்கான்' சொல்லும் போது அவங்க மேல வெளிச்சம் வரும். 

 

நல்ல டீம் அப்டிங்கறது இதுதான். ஸ்க்ரிப்ட்டை டீம் மொத்தமும் உள் வாங்கினாத் தான் இந்த மாதிரி மேஜிக் நடக்கும். அது ஜோ படத்துல நடந்துருக்கு. கேப்டனுக்கும் ஒளிப்பதிவாளருக்கும் டீமுக்கும் வாழ்த்துக்கள் Rahul K G Vignesh Rio Raj Mathewo Arulanandhu Hariharan Ram

 

 

The Indrani Mukerjea Story: Buried Truth

 


இன்வெஸ்டிகேட்டிவ் டாகுசீரிஸ்ல என்னைக்குமே நெட்பிலிக்ஸ் கிங் தான். அதுமாதிரி சொல்லி அடிச்சிருக்குற ஒரு சீரிஸ் தான் இந்த இந்திராணி ஸ்டோரி.  

ஷீனா போரா அப்புறம் இந்திராணி முகர்ஜி அப்படிங்கற பேர்லாம் நமக்கு 2015ல தெரிஞ்சிருக்கும். 2012லேயே ஷீனா போரா கொல்லப்பட்டாலும் 2015ல தான் அது வெளில தெரிய வருது. அதுவும் யாரால? இந்திராணியோட கார் ட்ரைவரால.  



கேஸ் இதுதான். ஷீனாவ இந்திராணி கொலை பண்ணி எரிச்சிட்டாங்க. முதல்ல ஷீனா இந்திராணியோட சிஸ்டர்னு தெரிய வருது. ஆனா இன்வெஸ்டிகேஷன் போகப்போக ஷீனா இந்திராணியோட பொண்ணு அப்படிங்கற அதிர்ச்சிகரமான உண்மை வெளில வருது. இந்திராணியோட முதல் கணவர் யாரு? அவரு எங்க இருக்காரு? அப்டினு மீடியா துப்பு துலக்கும்போதுதான் இந்திராணிக்கு மொத்தம் மூணு கணவர்கள்ங்கிற உண்மை தெரியுது. அதுல முதல் கணவர் யாருங்குறத மீடியாகாரங்க தான் கண்டு பிடிக்கிறாங்க. அவரு பேரு சித்தார்த். ஆனா இந்திராணி தன்னோட வாக்குமூலத்துல ஷீனா சித்தார்த்தோட பொண்ணு இல்ல. தன்னை சிறு வயசுலேயே தன்னோட அப்பா கற்பழிச்சதாவும் அதுல பிறந்த குழந்தை தான் ஷீனா அப்டினும் சொல்றாங்க. என்ன தலை சுத்துதா?  

இதுக்கேவா? ஷீனா இந்திராணி பொண்ணு. இப்போ ஷீனா ராகுலை காதலிக்கிறாங்க. அந்த ராகுல் யாருன்னா இந்திராணியோட மூணாவது கணவரோட முதல் மனைவிக்கு புறந்த பையன். இன்னும் தலை சுத்துதா?  

சீரிஸ் ரெண்டு பெர்ஸ்பெக்டிவ்ல மூவ் ஆகுது. ஒன்னு இந்திராணி நிரபராதி அப்டினு இந்திராணி மற்றும் அவங்க வக்கீலோட பார்வைல. இன்னொன்னு இந்திராணிதான் கொலை செய்தாங்க அப்டினு போலீஸ் பார்வைல. ரெண்டுமே வெவ்வேறு திசைல போகுது. ஆறு வருஷத்துக்கு அப்புறம் இந்திராணி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மத்த மூணு பேரும் இப்போ பெயில்ல வெளில வந்துட்டாங்க.  

கொலை பண்றதுக்கான மோட்டிவ் இதுதான் அப்டினு தெரிஞ்சப்புறமும் சாட்சிகள் இல்லாத காரணத்தால இன்னும் தீர்ப்பு வழங்கப்படலை. இப்படியும் ஒரு குடும்பம் இருக்க முடியுமா? அதை குடும்பனு சொல்லலாமா? ஆசைகள் மனுஷனை எங்க வரைக்கும் கூட்டிட்டு போகுது? இதுமாதிரி பல கேள்விக்கு விடை இந்த சீரிஸ். இறுதில சட்டம் ஒரு இருட்டறை. 

#IndraniMukherjee

 

அமரன் 2024

 


இந்த புகைப்படம் 2014 இல் எடுக்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் இறுதிச் சடங்கின் போது என்னவென்று தெரியாது அவரது குழந்தை அவரது உடலுக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம். 

மிகவும் உருக்கமான நாள் அன்று. மனதை என்னவோ செய்தது. அப்பொழுது எழுதியது கீழுள்ள பதிவு. 

அவரது வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வருவது மேஜர் முகுந்துக்கு செய்யப்படும் ஒரு tribute.  

தீவிரவாதிகள் இருக்கும் கட்டிடத்தை சுற்றி வளைத்து ஒரு மணி நேரப் போராட்டம். அவர்களை வீழ்த்த முடியாமல் தவித்த பொழுது, மேஜர் முகுந்த் ஒரு சிறந்த தலைவன் போல் முன்சென்று கட்டிடத்தின் வாசலை தகர்த்து தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். அங்கேயே வீர மரணமும் அடைந்தார். விவரமறியா வயதில் பறிகொடுத்த தன் தந்தை எப்படிப்பட்ட ஹீரோவாக இருந்தார், எந்த ஒரு கட்டத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்பதை அவரது குழந்தை ஆஷ்ரேயா தெரிந்து கொள்ளும். ஆறாத வடுவுக்கு மயிலிறகில் ஒரு சிறிய வருடல்.  




அமரன் மற்றும் அதன் டீம் அதை நிறைவேற்றும் என்ற பேராவலில்... 

இனி 2014 மீள். 

....,.................................................... 

தூங்கிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது ‘அப்பா இன்னொரு கதை?’ என்றாள். 

ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம். 

ம். 

அது காலைல சீக்கிரமா எழுந்துச்சி பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு அப்புறமா சாமி கும்ப்டுட்டு இட்லி சாப்பிடுச்சாம். 

ம். அப்புறம் ஸ்கூல் பேக் எடுத்துட்டு ஆட்டோல கிளம்பிபோச்சாம். ஏ, பி, சி டி படிச்சிட்டுவீட்டுக்கு வந்துச்சாம். 

ம். 

அப்புறமா சாப்டுட்டு பிரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து

கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ மேஜர் முகுந்தின் இறுதி அஞ்சலி புகைப்படங்கள் கண்முன் நிழலாடின. அனைத்து போட்டக்களிலும் மேஜர் முகுந்தின் குழந்தை மட்டும் சிரித்து கொண்டிருந்தது. மற்றைய இறப்பு போல வெடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது துக்கத்தை மனதினுள் இறுக்கிக்கொண்டு ஒரு அரசின் மாபெரும் நிகழ்வாக நடைபெறும். படார் படாரென்று துப்பாக்கி குண்டுகள் முழங்க ஏதோ வான வேடிக்கை போன்று அதனை அக்குழந்தை பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த குழந்தை அழுது விடக்கூடாது என்பதற்காக தன் மகனின் இறுதி அஞ்சலியிலும் துக்கத்துடனே சிரிக்க முயன்று கொண்டிருந்தார் வயதான அப்பா. ஒளிவிழந்த மனைவியின் முகம். ஒருவேளை அன்றிரவு கதை கேட்க வேண்டுமென்று தோன்றினால் யாரிடம் கேட்கும் என்று கேள்வி எழுந்த போது, கண்ணில் நீர் கோர்த்ததை தவிர்க்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சவப் பெட்டியின் அருகிலேயே குழந்தை விளையாண்டு கொண்டிருந்தது மனதை உருக்கும் நிகழ்வாக இருந்தது. 

காக்கா ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சிட்டு.... 

பாப்பா.....பாப்பா 

தூங்கிவிட்டிருந்தாள்