ஞாயிறு, மே 28, 2023

IELTS

  

படிப்பு வியாபாரம் ஆகி பல காலம் ஆகிவிட்டது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

இப்போதைக்கு நல்ல பிசினஸ் என்றால் அப்ரூவல் வாங்கி ஒரு கிண்டர்கார்டன் ஸ்கூல் ஆரம்பிப்பது தான். வத வதவென்று பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நம்பிள் கான்ட்ரிபியூஷனும் இதில் அடக்கம். ஹிஹி

போதாக்குறைக்கு நுழைவுத்தேர்வு என்ற வார்த்தையை கேட்டுவிட்டால் போதும். 'ரம்பா' சார் என்பது போல் வாயைப்பிளந்து காத்துக்கொண்டு கிடக்கிறார்கள். எதற்கு என்றா கேட்கிறீர்கள்? கோச்சிங் க்ளாஸ் நடத்துவதற்கு தான்.

NEET பயிற்சி எல்லாம் ஒரு வருடத்திற்கு சுளையாக ஒன்றரை முதல் மூன்று லட்சம் ஓடுகிறது. JEE எக்ஸாம் அது தனி. இதுபோல் ஆயிரத்தெட்டு கோச்சிங் க்ளாஸ்கள். அவ்வளவு பீஸா என்று வாய்பிளக்கும் நேரத்தில் நமது பர்சில் இருந்து உருவி விடுகிறார்கள். Bajaj finserv வட்டியில்லா EMI வரைக்கும் இந்த கோச்சிங் க்ளாஸ்கள் பிரசித்தம்.




சரி விசயத்திற்கு வருகிறேன்.


IELTS என்ற ஒரு வஸ்து இருக்கிறது. அதாவது ஆங்கிலம் தாயமொழியாக இல்லாத நாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் மக்களின்  ஆங்கிலப்புலமையை சோதிப்பதற்கென்று ஒரு தேர்வு. நான்கு பகுதிகளாக நடத்தப்படுகிறது. speaking, listening, writing மற்றும் reading.

அதிகபட்ச மார்க்குகள் 9. பள்ளி முதற்கொண்டு கல்லூரி வரை ஆங்கிலத்திலேயே படித்தவர்கள் எந்த வித பயிற்சியும் இன்றி 6 மார்க்குகளை அள்ளிவிடலாம். தமிழ் மீடியம் பயின்றவர்களுக்கு மற்றும் ஆங்கிலத்தில் கொஞ்சம் தடுமாறுபவர்களுக்கு பயிற்சி மையங்கள் இருக்கின்றன. குறைந்தபட்சம் 10000 முதல் 75000 வரை சுருட்டுகின்றன.

விஷயம் என்னவென்றால் இந்த 9 மார்க் வாங்கியவர்களுக்கு கனடா மற்றும் பிற நாடுகளுக்கு குடியேற விண்ணப்பிக்கும்போது வாய்ப்பு அதிகமாகவும். மார்க் குறைந்தால் குடியேற்ற விண்ணப்பத்திற்கான ஸ்கோர் குறைந்து விடுகிறது. ஆதலினால் 7 மார்க்கிலிருந்து 9 மார்க் எடுப்பதற்கு கிடையாய் கிடந்து செலவளிக்கிறார்கள். கோழியை அமுக்குவது போல் இவர்களை குறிவைத்து ஆன்லைனிலும் வர்த்தகம் களை கட்டுகிறது.


lexical resource என்ன, cohesion என்ன. இதெல்லாம் என்னவா? இவையெல்லாம் தான் நம்மை மதிப்பீடு செய்வதற்கான பாராமீட்டர்கள். உதாரணத்திற்கு listening தேர்வில் ஒரு ஆடியோ ஒலிக்கப்படும். அதனை கூர்ந்து கவனித்து நாம் வினாவிற்கு பதிலளிக்க வேண்டும். ஆடியோவில் ஒருவர் அவரது பெயரை கேட்பார். அவர் அதை கூறவும் நாம் அவரின் பெயரை கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும். இதில் என்ன கூத்து என்றால், 'இன்றைக்கு வருவீர்களா?' என்கிற கேள்விக்கு மற்றொருவர் இவ்வாறு பதில் கூறுவார். 'இன்றைக்கு வரலாம் என்று நினைக்கிறன். மன்னித்துவிடுங்கள். என்னால் இன்று வர முடியாது. தவிர்க்க முடியாத வேலை இருக்கிறது. ஆகையினால் நாளை முயற்சிக்கிறேன். மன்னித்துவிடுங்கள். நாளை எனக்கு வங்கி செல்ல வேண்டிதுள்ளது. ஆதலினால் நாளை மறுநாள் உங்களிடம் தெரிவித்துவிட்டு வருகிறேன்' என்பதாக பதில் இருக்கும். இப்பொழுது இதற்கு என்னவென்று நாம் பதில் எழுதுவது? இது ஒரு சோறு பதம் தான். தலையை இரண்டு முறை சுற்றி மூக்கைத்தோடும் விளையாட்டுகள் நிறைய இதில் உண்டு.

speaking கூத்து இன்னும் அதகளம். ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த கூடாது. மிக சிறியதாக பதிலளிக்க கூடாது. வேறு வேறு புது வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். கடினமான சென்டென்ஸ்களை கட்டமைக்க வேண்டு. அதிலும் coherence போன்ற வஸ்தாதுகள் வேண்டும். அடேய். ஷேக்பியரே யோசித்துதானடா பேசுவார்.

இது ஆங்கிலம் தெரிந்திருக்கிறதா என்று கணிப்பதை விட, ஆங்கிலத்தில் டாக்டர் பட்டம் பெறுபவரை சோதிப்பது போல் இருக்கிறது. கிராமத்தில் மற்றும் தமிழ் மீடியம் படித்து வருபவர்கள் எல்லாம் கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறார்கள். இதில் General மற்றும் academic என்று இரு பிரிவு வேறு இருக்கிறது. General என்பது குடியேற்றத்திற்கு. academic என்பது உயர்கல்வி பொருட்டு. இரண்டிற்கும் ஒரே கட்டணம் தான்.


மாதத்திற்கு இரண்டு முறை தேர்வு நடக்கிறது. சென்னை போன்ற பெருமாகாணங்கள் என்றால் நான்கு முறை. ஒரு முறை தேர்வுக்கு 200 பேருக்கு குறையாமல் வருகிறாரகள். பதினைந்தாயிரம் தேர்வு கட்டணம். British council, IDP மற்றும் Cambridge என மூன்று ஏஜெண்டுகள் இதற்கு. ஒரு நகரத்தில் ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 20 முதல் 60 லட்சம் வரைக்கும் வியாபாரம் நடக்கிறது. இந்தியா முழுமைக்கும் என்று பார்த்தால் 75 நகரங்கள் இருக்கின்றன. தோராயமாக ஒரு மாதத்தில் மட்டும் பத்து கோடிக்கு கல்லா கட்டுகிறார்கள். தலை சுத்துகிறதா?


அடேய். உங்கப்பன் மவனே. 100 வருஷத்துக்கு மேல எங்கள ஆண்டிருக்கீங்கடா? இன்னுமா எங்களுக்கு english தெரியாதுன்னு நினைக்கிறீங்க?
 

செவ்வாய், மே 09, 2023

விடுதலை


தோராயமாக மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்ற விகிதத்தில் கடந்த பதினாறு வருடங்களில் மொத்தம் ஆறு படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் தேசிய விருதை கொண்டு வந்திருக்கின்றன. பாலு மஹேந்திராவின் பட்டறையில் பயின்றவர் என்ற சொல்லைத்தாண்டி வெற்றிமாறன் தனக்கென ஒரு பட்டறையை, பயிற்சி களத்தை நிர்மாணித்திருக்கிறார்.



'உதயம் NH4' என்ற ஸ்க்ரிப்டை தூக்கிக்கொண்டு அலைந்தவர் தான், பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக களம் இறங்குகிறார். இவர் தீட்டிய பட்டையில் ஜொலித்த வைரம் தான் தனுஷ். 'பொல்லாதவன்' கழிந்து மூன்று வருடங்களுக்கு மேல் சலிக்காமல் உட்கார்ந்து எழுதிய 'ஆடுகளம்' தனுஷிற்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கிறது. 'வடசென்னை' ஹேங்கோவரில் இருந்து வெளிவருவதற்காக எடுக்கப்பட்ட படம் 'அசுரன்'. ஒரு சேஞ்க்கு என்கிற சொலவடைக்கேற்ப எடுக்கப்பட்ட படம் அது. அதன் மூலம் மீண்டும் ஒரு தேசிய விருது தனுஷிற்கு.

இவரின் ஆறாவது படமாக விடுதலை. காமெடி நாயகன் சூரி இதில் முதன்மை கதாபாத்திரம். அதாவது சூரியின் பார்வையில் கதை விரிவடைகிறது. கனிம வளங்களை சுரண்ட நிர்மாணிக்கப்படும் சுரங்கத்தை எதிர்த்து நிற்கிறது மக்கள் படை இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவரை கைது செய்ய முனைந்து நிற்கும் போலீஸ். இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுவது மலைவாழ் கிராம மக்கள். கடை நிலை ஊழியராக வந்து சேருகிறார் சூரி. இயல்பான மனிதத்தன்மையுடன் இருக்கும் சூரி அதன் காரணமாக தனது உயரதிகாரியை பகைக்க நேரிடுகிறது. இயக்கத்தின் தலைவரை பிடித்தார்களா என்பதைத்தாண்டி பதிவு செய்ய விளைகிறது இந்தப் படம்.

வெள்ளேந்தியான பாத்திரத்துக்கு சூரி கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். எத்தனை வித விதமான கதாப்பாத்திரம் கிடைத்தாலும் அந்த பாத்திரத்தின் சுவடைத்தாண்டியும் தெரிவது விஜய் சேதுபதிதான். இங்கேயும் வாத்தியார் என்கிற பாத்திரத்தில் விஜய் சேதுபதியாகவேத் தெரிகிறார். கறாரான போலீஸ் உயரதிகாரி வேடத்தில் சேத்தன். எவ்வளவு தான் மிடுக்காக நடந்துகொண்டால் ஒரு மென்மையான உணர்வை அதனைத் தாண்டியும் அவரிடம் வெளிப்படுகிறது. தமிழை சேத்தன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம். தமிழ் யாரென்று கேட்கிறீர்களா?. 'டாணாக்காரன்' இயக்குனர். தெரியவில்லையா? 'ஜெய் பீம்' இன்ஸ்பெக்டர். கடுமையான காட்டுமிராண்டி போலீஸ் கதாபாத்திரத்துக்கு இவர் அளவெடுத்து தைக்கப்பட்டவர். போலீஸ் வேலையை உத்தரவிட்டு சினிமா உலகிற்கு வந்தவர் என்பது கூடுதல் தகவல்.

சரி, பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என்று க்ராப் ஏறிக்கொண்டிருந்த வெற்றிமாறனுக்கு விடுதலை எப்படி அமைந்திருக்கிறது. என்னை பொறுத்தமட்டில் கிராப் சற்றே இறங்கியிருக்கிறது. ஏனெனில் வெற்றிமாறன் இதில் மிஸ்ஸிங். ட்ரெயின் வெடிகுண்டு காட்சிகள், விசாரணை என்கிற பேரில் ஆண்களை அடித்து துன்புறுத்துவது, பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்வது போன்றவற்றில் போதிய உணர்ச்சி கடத்தல் இல்லை. இதனையும் தாண்டி 'ஜெய் பீம்' கொடுமைகளை காட்சிப்படுத்திவிட்டது. மனம் மரத்துப்போய் விட்டதா என்றும் ஒரு ஐயம் இருக்கிறது. ஆயினும் இலங்கையில் IPKF மற்றும் தர்மபுரியின் வாச்சாத்தி போன்ற கொடூர சம்பவங்களை ஆவணப்படுத்துவதில் விடுதலை வெற்றி பெற்றிருக்கிறது. ட்ரெயினிங் போலீசாரின் இன்னல்களை ஆரம்பகட்டத்தில் பதிவு செய்வது போல் விரிந்த திரைக்கதை இறுதியில் அவர்களுக்கு எதிராக ஆங்காரம் கொண்டு அச்சறுத்துகிறது. ஒருவகையில் நிகழ்த்துக்கலையின் ஆச்சர்யமும் அதுதான். இளையராஜா என்பதற்காக பாடல்கள் அருமை என்று சொல்லிவிட முடியவில்லை. பின்னிசை மட்டும் சிறப்பு.

இரண்டாம் பாகத்திலாவது கதையின் முழுச்சாரமும் விரிந்து தென்படுவாரா வெற்றிமாறன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.