செவ்வாய், டிசம்பர் 26, 2023

ரைட்டர்


ஒரு காத்திரமான எழுத்து சமுதாயத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதுபோல் ஒரு திரைப்படமும் சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தி விட வேண்டும். அவ்வாறு சலனத்தை ஏற்படுத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் ஒன்று தான் ரைட்டர்.  



புகார் கொடுக்க வந்தவர்களிடம் என்ன ஏது போன்ற விவரங்களை கேட்டு தன் வாழ்நாள் முழுவதும் பேனா, டைப்ரைட்டர் மற்றும் கம்ப்யுட்டருடன் வாழ்க்கையை கழித்து ஓய்வின் விளிம்பில் இருக்கும் ஒரு வயதான ரைட்டரின் கதை தான் இது. உயரதிகாரியின் ஷொட்டில் மயங்கி, கோர்வையாய் கதை எழுதும் தன் திறமையை வெளிக்காட்டுகிறார். அதுவே ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. குற்ற உணர்ச்சியில் உழலும் ரைட்டர், அந்த இளைஞனை காப்பாற்ற எதற்கும் துணிந்து ஒரு முடிவை எடுக்கிறார். ரைட்டரின் முயற்சி பலித்ததா? மேலும் காவல்துறைக்கென்று தனி சங்கம் வேண்டும் என்று கோரிக்கையையும் இந்த கதைக்குள் அதை உறுத்தலில்லாமல் நெய்த தொனியையும் பாராட்டியே ஆக வேண்டும். 

ஒரு வசனம் வரும். 'இங்குள்ளவன் எதுத்து பேசக்கூடாதுங்கிறதுக்காக பிரிட்டிஸ்காரன் கொண்டு வந்தது தான் இந்த காவல் துறை. சுதந்திரத்துக்கு அப்புறமும் அதை கொஞ்சமும் இம்மி பிசகமா அப்டியே வச்சிருக்காங்க.  அதிகாரம் இல்லாத எந்த ஒரு வேலையும் அடிமை வேலை தான்'. காவல் துறையை ரத்தினச் சுருக்கமாக 

இதை விட விவரிக்க முடியாது. உயரதிகாரி முதல் அடி மட்ட ஊழியர் வரை தனி மனித மரியாதை என்பது கிஞ்சித்தும் இல்லாத ஒரு துறை. எத்தனை குமுறல்கள். மனப்போராட்டங்கள். அழுத்தம். மிகை வேலை நேரம்.  சமூக செயல்பாடே இல்லாது 24x7 வேலை என்பது ஒரு மனிதனை எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு உண்டாக்கும் என்பதை நாம் உணராமல் இல்லை. விடுப்பு என்பது மிகப்பெரிய சொல் அங்கே. ஏன் பாவச்சொல் என்று கூட கொள்ளலாம். 

அந்த ரைட்டரின் கதாப்பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போல் சமுத்திரக்கனி. ஒரு சில இடங்களில் மிகை நடிப்பைத் தவிர்த்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்கும். மிடுக் தோற்றத்தில் அதிகாரமிக்க இன்ஸ்பெக்டராக கவிதா பாரதி. அசல் போலீஸ் ஸ்டேஷனையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். ஆதிக்க மிச்சமாக DCP கவின் ஜெய் பாபு. ஸ்வீட் காரம் காஃபி புகழ் மதுபாலா கணவர். அதிகாரத்த் தோரணையை தான் பிடிக்கும் புகை போல எளிதாக வெளிப்படுத்துகிறார். இனியா, காலா திலீபன், போஸ் வெங்கட், ஜி.எம்.சுந்தர் என தேர்வான கதாபாத்திரங்களின் பிரதிபலிப்புகள். எதற்கு பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத அப்பாவி இளைஞனாய் ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து  ஹரி. அடித்தட்டு அப்பாவி இளைஞனின் அச்சு அசல் பிரதிபிம்பம். 

எந்த காரணத்திற்காக அப்பாவி இளைஞனை பிடித்து வைத்துள்ளார்கள் என்கிற சஸ்பென்ஸ் படத்தின் இறுதி வரை கடத்தப்பட்டிருப்பது ப்ளஸ். உறுத்தலில்லாத காரணம். மெல்லமுடியாமல் தன் முதல் மனைவியிடம் வெடித்து அழும் இடமாகட்டும், முப்பத்தைந்து வருட இறுக்கத்தை அழுத்தத்தை இறுதியில் DCPயிடம் வெளிப்படுத்தும் இடமாகட்டும் சமுத்திரக்கனி தன் முத்திரையைப் பதிக்கிறார். DCPயின் வண்டிக்கெதிரே குதிரையை இனியா ஒட்டி அதன் இரு முன்னங்கால்களை தூக்கி  நிறுத்தும் இடம், அந்த அடக்குமுறை வலியின் வெளிப்பாடு. சபாஷ் பிராங்க்ளின் ஜேக்கப்.  அதுமட்டுமின்றி குற்ற உணர்ச்சி தாளாது அப்பாவி இளைஞனுடைய அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதில் மனம் நிறைவுறுகிறது. தனக்குப் பின் அந்த யூனியன் கனவை நிறைவேற்றத்துடிக்கும் இளைஞனாக காலா திலீபனிடம் பொறுப்பை கொடுக்கும் வரைக்கும் ஒரு நல்ல தலைவனாக ரைட்டரின் கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. 

காவலரின் வலியை பதிவு செய்த விதத்தில் ரைட்டர் துடைத்தெறிந்து விட முடியாத ஒரு சரித்திரம்.

கவால்துறை குறித்து 2022இல் நான் பதிவு செய்திருந்த கட்டுரை முதல் கமெண்ட்டில். 


குய்கோ


குடியிருந்த கோவிலின் சுருக்கும் தான் குய்கோ. 

துபாய்ல வேலை பாக்குற யோகி பாபுவோட அம்மா இங்க இருக்குற ஒரு கிராமத்துல இறந்துடறாங்க. அவர் வர்ற வரைக்கும் அம்மாவோட உடலை பத்திரமா பாத்துக்க ஒரு ஐஸ் பாக்ஸ் ஏற்பாடு பண்றாங்க. கடைசி காலத்துல தன்னோட அம்மா உடல் இருந்த ஐஸ் பக்ஸ்ஸை குடியிருந்த கோவிலா நினைச்சி யோகி பாபு வழிபடுறார். அந்த ஐஸ் பாக்ஸால அவரோட பிரிஞ்சு போன காதல் மறுபடியும் ஒண்ணா சேருது. அவ்ளோதான் கதை. 



அப்படியே கொஞ்சம் நகைச்சுவை கலந்து, கிராமத்து வாடையோட பரிமாறியிருக்காங்க. படத்தோட ஆணிவேர் இளவரசு தான். கருத்தம்மா ஒளிப்பதிவாளர். தற்போதைக்கு பரபர குணச்சித்திர நடிகர். ஒரு துக்க வீட்டுல கணக்கு வழக்குலாம் எழுதி இழுத்து போட்டு வேலை செய்யுற கேரக்டர். பக்கா பொருத்தம். வழக்கமா வருமே வக்கீல் அக்கா. அதான் வினோதினி. அவுக இல்லாத படமே இல்ல இப்போல்லாம். அவுகளும் வராக. மலையரசியா 'மிக மிக அவசரம்' ஸ்ரீ பிரியங்கா. 

இதெல்லாம் கூட ஓகே. ஆனா முதன்மை கதாபாத்திரமா விதார்த்த போட்ருக்காங்க. IPL பாக்கணும். காசு கொடுனு அழுதுட்ருந்தவரை எதுக்கு ஐஸ் பாக்ஸ் மாட்ட அனுப்பிச்சி வச்சாங்கன்னு அவருக்கும் தெரில. நமக்கும் தெரில. நடுவுல ஒரு ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லிக்கொடுக்குறார். படத்துல ஹைலைட்டே 'தும் பாஸ் ஆயேன். க்யோன் முஸ்குராயேன்' பாட்டுதான். அந்த பாட்ட அதகளமா தமிழ்ல ரீமேக்கிருக்காங்க. 

குடும்பத்தோட ஜம்பமா பாத்து சிரிச்சு என்ஜாய் பண்றதுக்கான ஒரு பக்கா சண்டே மிட்மீல் மூவி இந்த 'குய்கோ' நெட்பிலிக்ஸ்ல இருக்குது. 



வியாழன், டிசம்பர் 21, 2023

தி ரயில்வே மென்


நெட்பிலிக்ஸ்ல் வெளியாகியுள்ள நான்கு எபிசோட் தொடர். இதே டிசம்பர் மாதம் 1984இல் போபாலில் நடைபெற்ற மிகப்பெரும் விபத்து பற்றிய சீரிஸ். இன்னும் தெளிவாகச் சொன்னால் அன்று நடந்த அந்த பேரிடரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு ரெயில்வே ஊழியர்கள் காப்பாற்றினர் என்பது தான் இந்த ரயில்வே மென்.



பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க நிறுவப்பட்டிருக்கும் யூனியன் கார்பைட் பேக்டரியில் அந்த விபத்து நடக்கிறது. சீரிஸ் நேரே குதிக்கும் இடம் அந்த விபத்து நடந்த பனிரெண்டு மணி நேரத்துக்கு முன்பு. என்ன காரணம் என்பதை விலாவரியாக சொல்லவில்லை. தொடரின் ஆத்மாவும் அதுவன்று. விஷ வாயு காற்றில் கரைய ஆரம்பித்த மாரு நொடியிலிருந்து இறப்பு ஆரம்பிக்கிறது. தொழிற்சாலை முதற்கொண்டு அந்த ஊரில் காற்று பரவும் வேகத்திற்கு ஏற்ப ஒவ்வொருவராய் சுருண்டு விழுந்து மடிகிறார்கள். குற்றுயிரும் குலை உயிருமாய் தப்பி பிழைத்தவர்கள் சில பேர் ஸ்டேஷனில் தஞ்சம் அடைய, அங்கிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுயிரையும் மதியாமல் அவர்களை காப்பாற்றுகிறார். அதுமட்டுமன்றி அருகில் இருக்கும் இடார்சி ஸ்டேஷனிலிருந்து மற்றொரு பொது மேலாளர் மருத்துவர், ஆக்சிஜன் சிலிண்டர் சகிதமாக துரிதமாக  அந்த நச்சு வெளியியேறிய நகரத்தை நோக்கி முன்னேறுகிறார். நச்சு வாயு வெளியேறிய இரண்டு மணி நேரத்தில் ஊரே சுடுகாடாக மாற, மக்கள் சில பேர் ஸ்டேஷன் வெயிட்டிங் ஹாலில் தஞ்சம் புக, மற்றொரு முனையிலிருந்து கோரக்பூர் செல்லும் விரைவு வண்டி போபாலை வந்தடைகிறது. மக்களை இறங்க விடாமல் தடுத்து, ஜன்னல்களை மூடச்சொல்லி, தஞ்சமடைந்த மக்களை அந்த கோரக்பூர் விரைவு ரயிலில் ஏற்றி பல உயிர்களை காப்பாற்றிய அந்த மூன்று மணி நேரம் தான் தொடரின் கதை.

மாதவனின் முகம் போஸ்டர் எங்கிலும் பரவி நின்றாலும், மனதை தொட்டது என்னவோ கே கே மேனன் தான். உதயம் NH4 என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக வந்து சித்தரத்தை மிரட்டடியிருப்பாரே, அவரே தான் இந்த கே கே மேனன். ஸ்டேஷன் மாஸ்டர். ஏற்பாடு பட்டாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரு மத்திய வயது ரயில்வே அதிகாரியாக அவர் காட்டும் துடிப்பு பச்செக்கென மனதில் ஒட்டிக்கொள்கிறது. ரயில்வே GM ஆக மாதவன். நடிப்பிற்கான வாய்ப்பு மிகக் கம்மி. மிடுக்கு குறையாமல் வந்து போகிறார். நச்சு வாயு வெளியேறும்பொழுது டெல்லியில் நடைபெறும் அரசியல் காட்சிகள், அந்த பேக்டரிக்கான தலைமை நிர்வாக அதிகாரி அன்டேர்சனை பத்திரமாக பேக் செய்து வெளிநாட்டிற்கு தப்ப வைத்தது, விஷ முறிவு மருந்தான சோடியம் தையோசல்பேட் வயலை மூடி மறைத்தது போன்ற காட்சிகள் தெளிவில்லை. என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தாலே HBO ரீலிஸ் செய்தa செர்நோபில் தொடர் போன்று பல உண்மைகளை வெளிக்கொணரும் பேரிடர் இது. அதுவும் இறுதி காட்சியில், பேரிடர் நடந்த மறு நாள் அனைவரையும் புதைக்கும் வேளையில், இறந்துவிட்டார் என்ற நினைத்த ஸ்டேஷன் மாஸ்டர் உயிர்த்து எழும் போது, ஒரு ஊழியர் சொல்லுவார். 'சரியாகப் பாரு. இதோடு நான்காவது முறையாக தவறாகிவிட்டது' என்று. இந்த ஒரு காட்சி போதும் அன்று நடந்த பேரழிவை விளக்க.

தொடர் சற்று நீளம் தான் என்றாலும், மக்கள் பட்ட துயரை, குழப்பங்களை, இழப்பை, வலியை சொல்லுவதற்கு நாலு எபிசோட் என்பது குறைவுதான்.  ஏனெனில் இன்றளவும் தலைமுறை தலைமுறையாக அவர்கள் அந்த நச்சு காற்றின் கோரப்பிடியில் இருந்து மீளவில்லை.

800


பையோக்ராபி படங்கள் எப்பொழுதுமே ஒரு முழு நிறைவை கொடுப்பவை. அந்த வகையில் முத்தையா முரளிதரனின் 800 ஏமாற்றவில்லை. சொல்லப்போனால் ஒரு நல்ல பீல் குட் மூவி. 



டெஸ்ட் கிரிக்கட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முரளியை மட்டுமே நாம் அறிந்திருந்தோம். ஆனால் கிரிக்கெட்டிற்குள் நுழைய அவர் எதிர்கொண்ட சவால்கள், இலங்கை மக்களின் ஆதிக்கத்திற்கு நடுவே மலையகத்தமிழனாய் ஸ்ரீலங்கா கிரிக்கட் டீமிற்குள் நுழைந்தது, முதல் டெஸ்ட் கிரிக்கட் விளையாட இங்கிலாந்திற்கு சென்றது, ஆஸ்திரேலியாவில் போட்டிக்கு நடுவே இவரை விளையாட அனுமதிக்காமல் அவமானப்படுத்தியது, அப்பொழுதிலிருந்து இவர் ஒய்வு பெரும் வரை இவரது பந்து வீச்சு முறைக்கு எதிர்கொண்ட சவால்கள், விமர்சனங்கள், பரீட்சைகள், 1000 விக்கெட்டுக்கு முன்பே தனது ஓய்வை அறிவித்தது என்று இவரது வரலாறு விரிகிறது.  

முரளியாக மிட்டல் நல்ல தேர்வு. குதித்து ஓடி வந்து பந்து வீசும்போது முரளியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கபில்தேவ், அர்ஜுனா ரணதுங்கா, சனத் ஜெயசூர்யா என விளையாட்டு வீரர்களையொத்த நடிகர்களின் தேர்வு நன்று. 1982 முதல் 2010 வரைக்கான போட்டிகளை மீளுருவாக்கம் செய்திருக்கின்றனர். திரளான மைதானத்தை காட்டுவதற்கு முயற்சித்திருக்கும் க்ராபிக்ஸ் சற்று ஏமாற்றமே.  

தேயிலை பறிக்க மலையகத்தமிழர்களாய் இங்கிருந்து இலங்கை செல்வதை காட்சிப்படுத்தி முரளியை பூர்வ தமிழனாய் பதிவு செய்வதிலிருந்து இறுதியில் 800 விக்கெட் வீழ்த்துவது வரை அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை திரைப்படமாய் தந்திருக்கிறார் இயக்குனர். படம் நெடுகிலும் அவரது பந்து வீச்சை விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் இத்தனை விமர்சனங்களா என்று நமக்கே அயர்ச்சி தொற்றிக்கொள்ள முரளியோ தன் வாழ்நாள் முழுவதும் இந்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறார் என்பதே பெருத்த ஆச்சர்யமாய் இருக்கிறது. ஸ்டீல் ப்ரேஸ் செய்து பந்து வீசச்செய்து பரீட்சத்தது எல்லாம் இனவெறியின் உச்சம், பொறாமையின் மறுமுகம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. உலகின் நம்பர் ஒன் விக்கெட் டேக்கர் என்ற மகிழ்ச்சியைத் தாண்டி இந்த போராட்டமே அவரது வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது என்பதை உரக்க பதிவு செய்கிறது இந்த 800. அதனால் தானோ என்னவோ 1000 விக்கெட் என்ற மயில்கல்லைத் தொட அவர் முயற்சிக்கவில்லை. நம்ப வேண்டாம் என்று முடிவு செய்தவர்களிடம் அவர் இனிமேலும் போராடத் தயாராக இல்லை.  

எதைத்தொட எதனை விட என்ற ரீதியில் அவரது வாழ்க்கையை முழுமையாய் காமிக்க முயற்சி செய்திருக்கிறது 800. 

கிரிக்கட் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம். 

 

#MuthaiahMuralidharan #800Movie #800moviereview #MSSripathy

 

இறுகப்பற்று

 

இந்த காலத்துக்கு ஏத்த படம் தான். தேவையான ஒன்னு தான். எங்க ஓடறோம்னே தெரியாம தெறிச்சி ஓடின்னு இருக்கோம். ஆற அமர உக்காந்து கொஞ்சம் அக்கம் பக்கம் பாருடா அப்படின்னு சொல்ற மாதிரி. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி பீல் குட் மூவி பாத்து. ரொம்ப ரசிச்ச விஷயம் பிரச்சினைகளுக்கான காரணத்தை அங்கங்க சொல்லாம கதை போற போக்குல கதாபாத்திரம் மூலமா வெளிப்படுத்தின அந்த ஸ்டைல் ஈர்க்குது. நல்ல எழுத்து. நடிப்புல எந்த குறையுமே இல்ல (ஒருத்தர் தவிர).  



ஜாலியா கொஞ்சம். சும்மா படத்தோட கேரக்டர கொஞ்சம் கலாய்ச்சு...

மூணு ஜோடி. அவர்களுக்குள்ள வர்ற பிரச்சினைகள். அதுக்கு கவுன்சிலிங் கொடுக்குற ஒரு மேரேஜ் கவுன்சிலர். ஆனா அந்த கவுன்சிலருக்கே ஒரு பிரச்சினைன்னா.

விதார்த் அபர்னதி ஜோடி தான் இருக்கிறதுலேயே ரொம்ப டம்பான ஜோடி மாதிரி இருந்துச்சு. இவருக்கு சின்ன வயசுலேந்து பிசினஸ் பண்ணனும் அப்டினு ஆசையாம். நினைச்சதை எதுவுமே அவுங்க அப்பாரு செய்ய வுடலேன்னு சாருக்கு ரொம்ப வருத்தம். அதுக்கு ஏன்டா ஒருத்திய கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கையை கெடுக்கிறீங்க. தடால் புடால்னு டிவோர்ஸ் கேப்பாரு பாருங்க. ஓங்கி ஒரு அப்பு அப்பிருக்கனும். ஆனா அந்த பொண்ணு கைய கால புடிச்சி பல்லு தேச்சிட்டிருக்கு. அதுனாலதான் டம்பான ஜோடின்னு சொன்னேன். பட் அவங்க டம்பா இருக்கப்போய்த்தான் கதை கொஞ்சம் நகருது. இவருக்காங்க உடம்பை குறைக்கனுமாம். ஆனா அந்த பொண்ணு செருப்பால அடிச்ச மாதிரி நடுவுல சொல்லும். 'போடா டேய். உனக்காக இல்ல. எனக்காக குறைக்கிறேன்' அப்டினு. நச். செம ட்ரான்ஸபோர்மேஷன். ஆனா அதுக்காக பேங்க் லோன் கிடைச்ச முத நாளே ரங்கேஷ் மனசு மாறுனதுலாம் கொஞ்சம் போங்கு தான். 

ரெண்டாவது ஜோடில ஸ்ரீக்கு தான் நிறைய ஸ்கோப். நம்மள எரிச்சல் படுத்துறதுல. ஆமா பின்ன. ஆரம்பத்துல ஏதோ அந்த பொண்ணு மேல தான் மிஸ்டேக்குனு பாத்தா, தம்பி அவ்ளோ விளையாண்டிருக்காரு. கல்யாண வீடுன்னாலும் அவர் தான் மாப்பிள்ளை. இழவு வீடுன்னாலும் அவருதான் பொணம் அப்டினு நினைக்கிற கேரக்டர். இதுல நொட்டை. அதுல நொட்டைனு. அந்த பொண்ணு தான் பாவம். ஈரத்துணியை பெட் மேல போட்டதுக்கெல்லாம் டைவர்ஸாய்யா. அவ்வ்.

விரைப்பு விக்ரம் ப்ரபுவைத்தான் கொஞ்சம் அழலாம் வச்சி டார்ச்சர் பன்னிருக்காங்க. மத்தபடி 'நீங்க பாட்டுக்கு ஒரு பேக்கை தூக்கிட்டு வரீங்க போறீங்க'. நடிப்பு ஏதாவது? 'அது என்னைக்கி உங்களுக்கு வந்துருக்கு. அதுக்கு தான் அந்த கேரக்டரையே அந்த மாதிரி எழுதியிருக்கேன்' அப்டினு டெரெக்டர் சொல்லிருப்பார் போல. வராரு போறாரு. ஒரு பிரச்சினையுமே இல்லைன்னாலும் தேடித்தேடி பிரச்சினையே கண்டுபிடிச்ச ஜோடிங்கற போட்டில இவங்களுக்கு மொத மார்க்கு. லவ் ரியலிஸ்டிக்கா இருக்கன்னுங்கிறது தான் மனோ கேரக்டரோட எதிர்பார்ப்பு. அதுக்கு நடிப்பும் ரியலிஸ்டிக்கா வேண்டாமா அப்படிங்கறது தான் ஆடியன்ஸோட எதிர்ப்பார்ப்பு. எமோஷனே இல்லையேப்பா பிரபு. கனெக்டே ஆகலையே. சாக்கு மூட்டையை தூக்கிட்டு பாண்டிச்சேரி கிளம்பிட்டாங்க.

பின்னணி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, காஸ்ட்யூம்ஸ் அதெல்லாம் பிரமாதம். சரி. புது காருக்கு ஏன் பெயிண்ட் அடிச்சிக்கிட்டு. படம் சூப்பர். தாராளமா குடும்பத்தோட பாக்கலாம்.

 

#irugapatru #irugapatrumovie Yuvaraj Dhayalan

 

தீராக்காதல்

 

 

அதே கண்கள் படம் ஞாபகம் இருக்கா. தமன்னாவோட பெட்ரோமேக்ஸ் படம்.

இந்த ரெண்டு படத்தையும் டைரக்ட் பண்ண அதே ரோஹின் வெங்கடேசன் இயக்குன படம் தான் தீராக்காதல். ப்ரோமோலேயே கொஞ்சம் எதிப்பார்ப்பை ஏத்திருந்தார்.



அந்த எதிர்ப்பார்ப்புக்கு கொஞ்சமும் பங்கம் வைக்காம படம் எடுத்திருக்கார். எடுத்த உடனேயே கதை ஆரம்பமாகிடுது. லவ் பண்ணி பிரிஞ்சு வேற வேற வாழ்க்கை வாழ்ந்துட்ருக்கிற ரெண்டு பேரு மீட் பண்ணா என்ன ஆகும் அப்படிங்கற ஒன் லைன் தான் கதை. அதுலேயும் ஒருத்தரோட மேரேஜ் லைஃப் மோசமா இருக்கும்போது எக்ஸ் லவ்வர்ஸ் மீட் பண்ணா என்ன என்ன பிரச்சினைகள் வருங்கிற ரெண்டாவது லைன் தான் கதையோட நாதம்.

தூணிலும் இருப்பான் துரும்பிழும் இருப்பான் அப்படிங்கற மாதிரி எந்த சினிமா நோக்கினும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனா சும்மா சொல்லக்கூடாது. செப்பரேட் ஆகி ஜெய்யை விடாம துரத்துற கேரக்டர்ல பக்கா மேட்சிங். ஜெய் அளவா உறுத்தல் இல்லாம தன்னோட வேலைய பண்ணிருக்கார். நெடுஞ்சாலை ஷிவதா ஜெய்யோட மனைவியா வராங்க. தன்னோட புருஷன trap பண்ற விஷயமாகட்டும் தான் ஏமாந்துட்டோம் அப்படிங்கற நிலைமைல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாம எடுக்குற முடிவாகட்டும், யதார்த்தமான பளிச் நடிப்பு. ஆர்த்தியா வர சின்ன குழந்தை வ்ருத்தி விஷாலுக்கும் ஜெய்யுக்குமான அப்பா பொண்ணு கெமிஸ்ட்ரி அருமை. இயலபா வந்திருக்கு.

காமெடி பண்றோங்குற பேர்ல கடுப்பு பண்ணாம தன்னோட பாத்திரம் அறிஞ்சி சில ஒன் லைன் உதிர்த்திருக்கார் அப்துல் லீ Abdool Lee. ஒர்க் ஓவுட் ஆகியிருக்கு. பிச்சு போட்ட பிஸ்சா மாதிரி குடும்பம் சிதறுனாலும் குழந்தையை வச்சி இணைச்சுது பழைய டெம்ப்லேட் தான்னாலும் ஊருக்குள்ள பல குடும்பங்கள் பிரியாம இருக்கறதுக்கான ரீசன் குழந்தைங்க தான். அதுல எந்த மாற்றமும் இல்ல. க்ளைமேக்ஸ்ல ஸ்டேஷன்ல பேசுற டையலாக் எல்லாம் அடடா ரகம். அந்த டையலாக்ஸ் தான் கதைக்கு ஒரு பிரமாதமான முடிவை கொடுக்குது அப்டினா மிகையில்லை. G.r. Surendarnath 

உணர்வுபூர்வமான படம் கொடுத்த கேப்டன் ஆப் த ஷிப் Rohin Venkatesan க்கு வாழ்த்துக்கள்.

 

ட்ரை ரன்

 

 

கார்ப்பரேட் கம்பெனிகள்ல ஹைலெவல் மீட்டிங் நடக்குது அப்படின்னா ஒரு dry run பாப்பாங்க. டிரை ரன்னா அந்த மீட்டிங் என்னைக்கு நடக்குதோ அந்த மீட்டிங்ல என்னென்ன நடக்குமோ அதை எல்லாத்தையும் ஒரு ரெண்டு நாள் முன்னாடி டெஸ்டிங் மாதிரி செஞ்சு பார்க்கிறது. உதாரணத்துக்கு அந்த கம்பெனியோட சேர்மன் வரார்ன்னு வச்சுக்கலாம். முதல்ல மைக்ரோ பிளானிங் பண்ணுவாங்க. கிட்டத்தட்ட நிமிசத்துக்கு நிமிஷம் அந்த கெஸ்ட் வந்ததுல இருந்து அவரை செண்ட் ஆஃப் பண்ற வரைக்கும் என்ன பண்ணப் போறோம், யார் யாரு ஒவ்வொரு விஷயத்துக்கும் பொறுப்பு அப்படிங்கறதெல்லாம் தெள்ளத் தெளிவா ஒரு அட்டவணை போட்டு ரெடி பண்ணுவாங்க. 

 


அந்த ஸ்கெடியூல் பிரகாரம் ஒரு ட்ரை ரன் செய்வாங்க. அவர் வருவதற்கு இரண்டு நாள் முன்னாடியே அந்த டெஸ்டிங் ப்ரோக்ராம் நடக்கும். ஒருத்தர சீஃப் கெஸ்ட் மாதிரி ஆக்டிங் பண்ண வச்சு அவரு ரிசீவ் பண்றது, காட் ஆப் ஹானர் கொடுக்கிறது, வெல்கம் பண்ணி எல்லாருக்கும் intro கொடுக்கிறது, அப்படியே அவரை எல்லா இடத்துக்கும் விசிட் கூட்டிட்டு போறது, லஞ்ச் சாப்பிட வைக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அந்த dry run டைம்ல நடக்கும். இது ஏன் இப்ப சொல்றேன்னா இதெல்லாம் அந்த கார்ப்பரேட் கம்பெனிகள் வரும்போது ரொம்ப perfectஆ நடக்க ஆரம்பிச்சது. ஆனா வெண்ணிலா அவர்கள் எழுதிக்கிட்டு இருக்கிற நீர் அதிகாரம் தொடர்ல இந்த dry run சமாச்சாரத்த ரொம்ப அழகா விவரிசிருக்காங்க. Relatableஆ இருந்துச்சு. 

 

ஒரு பிரிட்டிஷ் வைஸ்ராய் மதுரை மாகாணத்தை விசிட் பண்ண வராரு. மதுரையில் இருக்கிற கலெக்டர் அங்க இருக்குற அதிகாரிகளை கூப்பிட்டு என்ன என்ன விஷயங்கள் எப்ப எப்ப பண்ணப் போறீங்க அப்படின்னு கேட்டு தெரிஞ்சுக்கிறாரு. இதை சிம்பிளா 'வைஸ்ராய் வரும்போது அதற்கு உண்டான முன்னேற்பாடுகள் சரியாக நடந்ததா அப்படிங்கிறத மதுரை ஜில்லா கலெக்டர் கவனித்தார்' அப்படின்னு எழுதி முடிச்சிருக்கலாம். ஆனா மதுரை கலெக்டர் விசாரிக்கிறார். சொல்லுங்க என்ன பண்ண போறீங்க அப்படிங்கறத? அவங்க சொல்றாங்க. திருச்சிராப்பள்ளியில் இருந்து காலைல 10 மணிக்கு ட்ரெயின் கிளம்பி சாயந்திரம் 4:30 மணிக்கு மதுரைக்கு வருது. ஸ்டேஷனுக்கு 100 மீட்டர் முன்னாடியே ட்ரெயின நிப்பாட்டி காட் ஆப் ஹானர், அப்புறம் லேடி வைஸ்ராய்க்கு பிடித்த மாதிரியான ஒரு மியூசிக் நோட் வாசிக்கிற நிகழ்வு, 31 குண்டுகள் முழங்க வரவேற்பு, அதுக்கு அப்புறம் அவர் அங்கிருந்து மதுரையில் இருக்கிற ராம்நாடு பங்களாவுக்கு கூட்டிட்டு போறது வரைக்கும் என்ன ஏற்பாடுகள், சித்திரை திருவிழாவுக்கு கூட்டம் வரும் அந்த கூட்டத்தை எப்படி சமாளிக்க போறாங்க, எத்தனை போலீஸ் எங்க நிக்க போது, எந்த கேடர்ல இருக்குற போலீஸ் சல்யூட் பண்ணனும் எந்த கேடர்ல இருக்குற போலீஸ் சல்யூட் பண்ண தேவையில்லை, விரைப்பா நின்னா போதும், யாரு கத்தி வச்சிருக்கணும், ஆயுதம் ஏந்தனும், அவர் இந்த இடத்தை விட்டு போறது வரைக்கும் ஜட்கா வண்டிகள் குதிரை வண்டிகளை நிறுத்தி வைக்கிறது, மக்கள் தள்ளுமுள்ளு இல்லாம பார்த்துக்கிறது அப்படின்னு பல விஷயங்களை வரிசை கிரமாமா எழுதி இருக்காங்க. 

 

ரெண்டு விஷயம் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. 1980 ஆம் ஆண்டில் நடந்த விஷயங்கள் அதை எவ்வளவு தெள்ளத்தெளிவா ஆராய்ச்சி பண்ணி ஒரு ஆர்வமா எழுதியிருக்காங்க அப்படிங்கறது ஒன்னு.   

 

இன்னொரு ஆச்சரியம் இந்தத்தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வர நிலைமையில் இருக்கு. 1500 பக்கங்கள் தாண்டி ஒடிட்ருக்கு. முடியுற தருவாய்ல இருக்கு. எப்படி நம்ம கிரிக்கெட்ல ராகுல் டிராவிட் த கிரேட் வால் ஸ்டாண்ட் அண்ட் டெலிவர் பண்ணுவாரோ அது மாதிரி நாவல்ல இறுதி கட்டம் வரைக்கும் அந்த மொழி நடைல மாற்றம் இல்லாம நின்னு ஆடிட்டு இருக்காங்க. அவசரமா அதை முடிக்கணும் அப்படிங்கிற எந்த ஒரு பதட்டமும் இல்லாம ஸ்டாண்ட் அண்ட் டெலிவர் பண்ணிட்டு இருக்காங்க.

 

மைக்ரோ பிளானிங் அப்படிங்கறது அந்த மதுரை கலெக்டர் மட்டும் பண்ணல அ. வெண்ணிலா அவர்களே, நீங்களும் தான். உங்க தொடர்ல அவ்வளோ பிரமாதமா மைக்ரோ டீடைலிங்க் பண்ணி இருக்கீங்க. உங்களுடைய நீரதிகாரம் தொடர்ல இருக்கிற ஒவ்வொரு வரியும் உங்களுடைய ஆராய்ச்சியை உங்களோட உழைப்பை ரொம்ப தெள்ளத்தெளிவா காமிக்குது. வாராவாரம் பிரமிக்க வச்சிட்டு இருக்கீங்க.

 

வாழ்த்துக்களும் நன்றியும். 

 

அந்த லிங்க் கீழே

 

#விகடன் #vikatan #AnandaVikatan Vikatan EMagazine Ananda Vikatan #neerathikaram 

 

The Road 2023


ஸ்பாய்லர் அலர்ட்  

படம் ஆரம்பம் செம த்ரில்லிங்கா இருந்துச்சு. ஒரு அத்துவான ஹைவே. மிட்நைட். கார்ல போறாங்க. ரெண்டு மூணு பெரு அந்த கார பாலோ பண்ணி கொலையும் செஞ்சுட்டு கொள்ளையும் அடிக்கிறாங்க. படபடப்பான ஓப்பனிங். ஒரு டெக்ஸ்சாஸ் செயின் சா மசாக்கர் ரேஞ்சுல எதிர்ப்பார்த்துட்டேன். அந்த டெம்போவ அப்டியே கொண்டு போயிருந்தா படம் செமையா இருந்துருக்கும். ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு பினிஷிங் சரியில்லேயேப்பா அப்படிங்கிற மாதிரி தான் தி ரோட் படம் இருக்குது.  



சந்தர்ப்ப சூழ்நிலையால த்ரிஷாவோட கணவர் அப்புறம் அவங்க பைய்யன். ரெண்டு பேரு மட்டும் ரோட் ட்ரிப் போறாங்க. போற இடத்துல அந்த ஆக்சிடன்ட். ரெண்டு பெரும் ஸ்பாட் அவுட். த்ரிஷா ஸ்பாட்ல வந்து பாத்து அழுது மயங்கி விழுந்து கொஞ்ச நாள் போனவுட்டு ஒரு வழியா தேறி வராங்க. த்ரிஷா திரும்பவும் ஸ்பாட்ல வந்து பூங்கொத்து வச்சிட்டு போகும்போது இன்னொரு ஆக்சிடன்ட். ஹெல்ப்புக்கு யாரையாவது கூப்பிடலாம்னு தேடி போய்ட்டு வந்து பாத்தா ஆக்சிடன்ட் ஆன வண்டியும் காணோம். ஆளும் காணோம். அங்கேந்து இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிக்கிறாப்புல. சரி செமையா போகப்போது அப்டினு வெயிட் பண்ணா அதுதான் இல்ல. முட்டையை உடைச்சி கலக்கிவிட்டுட்டாங்க. இந்த கதை இப்டியே போய்ட்ருக்கும்போது இன்னொரு பேரலல் ஸ்டோரி ஓடுது.  

ஒரு காலேஜ்ல ஒரு வாத்தியார். அங்க படிக்கிற ஒரு பொண்ணு சும்மா இல்லாம அந்த வாத்தியார வம்பிழுக்குது. லவ் பண்ண வைக்கிறேன்னு கங்கணம் கட்டுது. இவரு 'சீ போ' அப்டிங்கறாரு. டென்சன் ஆகி 'இவன் என் மேல கைய்ய வச்சிட்டான்' அப்டினு பிராது கொடுத்து அவரை அவமானப்படுத்தி வேலை போய் வீட்ல சோகமா உக்காந்து அப்புறம் இது காரணமா அவரு அப்பா தூக்குல தொங்கி இவரு மெண்டல் மாதிரி திரிஞ்சு தற்கொலை பண்ணிக்கிலாம்னு சாகப்போகும்போது தப்பிச்சு அதுல ஆக்சிடன்ட் ஆனவங்க நகை பணத்தை திருடி அதையே தொழிலா மாத்துறாரு. என்ன தலை சுத்துதா? இதுக்கே இப்டினா. இவரு இத பெரிய நெட் ஒர்க்கா மாத்துறாரு. ஆக்சிடன்ட் பண்றதுக்கு ஒரு கேங். களவாடுறதுக்கு ஒரு கேங். கொலை பண்ணி வண்டிய எரிக்கிறது ஒரு கேங். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை போர்ஜ் பண்றதுக்கு ஒரு ஆளு. பணம் போடறதுக்கு ஒரு ஆளு. இப்டி பல பேரு ஊரு முழுக்க போஸ்டர் ஒட்டாத குறையா திரியுறாங்க. ஆனா போலீசுக்கு மட்டும் தெரியாது. இந்த வாத்தியாரை கண்டு பிடிக்கிறது தான் த்ரிஷா வேலை. 

ஒரு ஹைவேல டகாய்ட்டி அதுல கொஞ்ச த்ரில்லர் அப்புறம் அந்த கேங்க பிடிக்கிறது அப்டிங்கிறதோட படத்தை முடிச்சிருந்தா ஒரு த்ரில்லர் மூவியா நல்லா இருந்துருக்கும். ஆனா ஏன் கொள்ளை அடிக்க ஆரம்பிச்சான் அப்டினு நியாயப்படுத்தப் போய் படம் பல ஜானர்ல ட்ரேவல் ஆகி முட்டுச்சந்துல மோதி நின்றுச்சு. 

அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை.

 

கண்ணூர் ஸ்குவாட்


 

OTTல எப்ப வரும்னு ரொம்ப நாள் வெயிட் பண்ணி பாத்த படம் கண்ணூர் ஸ்குவாட். மூணு காரணம். முதல் காரணம் இந்த படத்தோட ஜானர். இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர். நம்ம பேவரைட். ரெண்டாவது காரணம் இந்த படத்துக்கு கிடைச்ச அபரிதமான வரவேற்பு. மூணாவது, பொதுவாவே அவ்விட தேசத்துக்காரங்க நம்மள 'செல்லமா' பாண்டிப் பயலுவோ அப்டின்னுதான் 'அன்பா' கூப்பிடுவாங்க. அந்த பிம்பத்தை உடைச்சி ஒரு கேரக்டர் இந்த படத்துக்குள்ள இருக்கு அப்டிங்கிறதும், அதோட இந்த படத்துக்கு திரைக்கதை எழுதுன ரோனி டேவிட் ராஜ் தமிழ் மேல வச்சிருக்கிற ஒரு மரியாதையும் தான் இந்த படத்தை பாக்க தூண்டுச்சு.  



சரி. படம் எப்படி.

ஒரு கொலை நடந்துருக்கு. நாலு பேரு கொண்ட குழு அத பத்து நாள்ல கண்டு பிடிக்குறாங்க. கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர் பயணிச்சு. உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சி இந்த படத்தை இயக்கிருக்காங்க. அம்பத்தஞ்சு வயசு சொல்லலாம். எழுபத்திரண்டு வயசுன்னுலாம் சொல்லவே முடியாது. மம்மூக்கா அப்டி இருக்காரு. படத்துல சில இடங்கள் ரொம்பவே ரசிக்கிற மாதிரி இருந்துச்சு. உதாரணமா இந்த ஸ்குவாட் பத்து நாள் வெயில் மழை குடும்பம் குட்டினு பாக்காம உயிரை கொடுத்து அலைஞ்சாலும் அத டிபார்ட்மென்ட் கொஞ்சம் கூட கண்டுக்கல. ஒரு சோடா பாட்டில் வாங்குனதுக்கு கூட பில் பத்திர படுத்த வேண்டிருக்கு. 1000 கிலோமீட்டர் தள்ளி இருக்குற கொலைகாரங்களை பிடிக்க பிளைட்ல போறதுக்கு உங்க கேடருக்கு பிளைட் எலிஜிபிலிட்டி இல்ல அப்டினு சொல்லுவாங்க பாருங்க. நேபால் பார்டர்ல நிக்கும்போது 'கிரேட் இண்டியன் டூர்' முடிஞ்சிருச்சு. ஸ்குவாட திரும்பி வாங்கனு ஒரு கடுப்பு கிளப்புவாங்க. இந்த மாதிரி சில நுணுக்கமான விஷயங்களை உத்து கவனிச்சு ஸ்க்ரிப்ட்ல கரெக்டா சொருகிறுக்காங்க. படம் தொய்வில்லாம நகருது. கொஞ்சம் ஹீரோயிசம் தலைதூக்கின மாதிரி ஒரு பீல். 

ஆனாலும், நம்ம மக்கள் 'தீரன் அதிகாரம் ஒன்று' அப்படிங்கற படத்தை பாத்திருப்பாங்க. அந்த படத்தை பாத்துட்டு இத பாக்கும்போது கிட்டத்தட்ட அதோட பட்ஜெட் ரீமேக் மாதிரி கண்ணூர் ஸ்குவாட் இருக்குது. தீரன் படத்துல எமோஷன்ஸ் நல்ல கனெக்ட் ஆகியிருக்கும். அதுவும் அவனுங்க வந்து கொலை பண்றதுலாம் நமக்கே ஒரு படபடப்பா இருக்கும். கைரேகை வச்சி தேடினது, பவாரியா கிராமத்துக்கு போனது அப்டினு கொஞ்சம் புதுசா இருக்கும். கண்ணூர் ஸ்குவாட்ல அந்த பதைபதைப்பும், பரபரப்பும் மிஸ்ஸிங்.  

சோழன் கேரக்டர், அப்புறம் க்ளைமேக்ஸ்ல நீளமான தமிழ் டயலாக்லாம் சேட்டன்மார்களுக்கு புதுசு. வரவேற்கப்படவேண்டிய மாற்றம். பரிசோதனை வெற்றிக்கு வாழ்த்துக்கள் Rony David Raj.   

OTT platform - Disney Hotstar 

#MammoottyKampany #Ronydavidraj #KannurSquad #mammootty #Mammookka Rony David Raj