வெள்ளி, ஜனவரி 20, 2023

கொஞ்சம் படிங்க

 கொஞ்சம் படிங்க

நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் பார்த்த ஒரு காட்சி ரொம்ப பரவசமூட்டுச்சு.  சொல்லப்போனா மனசுக்கு இதமாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு.

கூகிள் மேப் உதவியோடு ஒரு நெடுஞ்சாலையை தவிர்த்துட்டு நேரம் மிச்சம் பண்றதுக்கோசரம் கிராமத்து வழிய தேர்ந்தெடுத்து வந்துட்ருந்தோம். டீசல் எம்ப்டியாகப்போகுது. பக்கத்துல எதுனா பங்க் இருக்கானு பாக்கும்போது இனொரு கிளை ரோடு வழியா போனா ஒரு பங்க் இருக்குதுனு தெரிஞ்சது. ஆயிரங்கால் மணடபம் மாதிரி பரப்பிக்கிட்டு ஷெட் போடாம சின்னதா குடை பிடிச்சிட்ருக்க மாதிரியான ஒரு பங்க். பங்க சுத்தி கோரைப்புற்கள் முளைச்சு இருக்கு. ஆளு யாரையும் காணோம்.

என்னடா இது நமக்குன்னு வந்த சோதனைனு உள்ள போய் பாத்தா அந்த பெட்ரோல் பம்புக்கும் டீசல் பம்புக்கும் இடைல ஒரு பைய்யன் உக்காந்துட்டு ஒரு புக்க படிச்சிடிருந்தான். எக்ஸாம் ஏதும் படிக்கிறான் போலன்னு நினைச்சுகிட்டு பக்கத்துல போய் பாத்தா சுஜாதாவோட 'தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' புக். ஒரு செகண்ட் அப்டியே புல்லரிச்சிடுச்சு. என்னடா நீ இப்டி ஷாக் கொடுக்குற? இந்த அத்துவான கிராமத்துல இப்டி ஒரு வாசகனான்னு கேக்கும்போது அவன் ரொம்ப சாதாரணமா நடந்துக்கிட்டான். பெட்ரோல் போட்டுட்டு திரும்பவும் உக்காந்து படிக்க போயிட்டான். வாத்தியார்ல. இழுத்திருக்கும். ரொம்ப பீல் குட்டா இருந்துச்சு. என்கிட்ட இருந்த ஒரு புக்க அவன்ட கொடுத்துட்டு வாயார பாராட்டிட்டு கிளம்பிட்டேன். அவன் ரொம்ப அலட்டிக்கல. வுட்டா அடுத்தது பிதூர் தத்சவஸ்கி புக்க எடுத்து வாசிப்பான் போல.



ஏன் இத சொல்றேன்னா இந்த மாதிரி ஒரு காட்சிய பாத்து பல வருஷம் ஆகுது. ஏன், சொல்லப்போனா இதுவரைக்கும் ஒரே ஒரு முறைதான் பாத்துருக்கேன். முன்னெல்லாம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, சிவசங்கரி, பாலகுமாரன் இவங்க புக்ஸ்லாம் பாக்கெட் நாவலா கிடைக்கும். பத்து ரூபா இருக்கும். பக்கம் அதிகமா இருந்துச்சுன்னா பதினஞ்சு ரூபா. அவ்ளோதான். பஸ்ஸ்டாண்ட்ல சிப்ஸ் பாக்கெட் நடுவுல வச்சிருப்பாங்க. வாங்கிட்டு பஸ்ல ஏறினோம்னா ஒரு மணி நேரம் ட்ராவலுக்கு பக்காவா இருக்கும். பஸ் ஒரு பக்கம் போக நாம வேற எங்கேயோ ட்ராவல் பன்னிட்டு வந்திருப்போம். அதுமட்டும் இல்லாம வெளியூர் பயணம் செய்றவங்கள்லாம் பைல துணியோட சேர்த்து ஒரு புக்கையும் பேக் பண்ணி எடுத்துட்டு போவாங்க. அது ஒரு வார பத்திரிக்கையா கூட இருக்கலாம். ஆனா ஒரு புக் கண்டிப்பா இருக்கும். இடைல படிக்கிறதுக்காக. இப்போ அது மாதிரி எங்கேயுமே பாக்க முடியல. இருபது நிமிஷ பஸ் ட்ராவல், அரை மணி நேர ரெயில்வெ ரிசர்வேஷன் கியூ, டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வெய்ட்டிங்ல, ட்ராவல்ல இப்டி பல இடங்கள்ல புத்தகத்த கைல வச்சிட்டு இருந்த பழக்கம் வழக்கொழிஞ்சி போய்டுச்சு.

அப்ப மக்கள் என்ன தான் பண்ணிட்டிருக்காங்க அப்படினா போன தான் நோண்டிட்ருக்காங்க. எங்க போனாலும் போன தான் பாக்க முடியுது. சமைஞ்ச புள்ள மாதிரி தலைய தொங்க போட்டுட்டு உக்காந்துக்க வேண்டிது. அங்க கிண்டில்ல படிக்கிறோம் அப்டின்லாம் தூக்கிட்டு வரக்கூடாது. பப்ளிக்ல அதுமாதிரி நான் யாரையும் பாக்கல. பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவ பூக்குற குறிஞ்சி மலர் மாதிரி பத்தாயிரம் பேர்ல ஒருத்தன் படிக்கிறான் அப்டினு ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்லக்கூடாது. மக்கள் முழுக்க முழுக்க இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் அப்டினுதான் தடவிட்ருக்காங்க. பெரியவங்க அப்டியே சன் நெக்ஸ்ட் அல்லது டிஸ்னில சீரியல் பக்கம் ஒதுங்கிருக்காங்க. சின்ன பிள்ளைகளும் விட்டுவைக்கல. அதுங்க யூட்யூப் சேனல் பாக்க போயிடுச்சுங்க. இதெல்லாம் பண்ணக்கூடாதா அப்டினா அப்படிலாம் சொல்ல வரல. பண்ணலாம் தான். தினமும் ரெண்டு பக்கம் வாசிச்சா என்ன குடி முழுகி போகப்போகுது? அப்டியே அந்த பழக்கம் போய்டுச்சே. திருப்பி எடுத்துட்டு வரது ரொம்ப கஷ்டம். சொல்ற மாதிரி பிலிஸ்டைன் சொசைட்டி தான் மிஞ்சும்.

இப்போ மாவட்டம் தோறும் நடக்குற இந்த புத்தக கண்காட்சி ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவரும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா அதுலயும் பாருங்க ரெண்டு கோடி நாலு கோடிக்குலாம் புக் விற்பனையாயிருக்குனு சொல்றாங்க. ஆனாலும் மக்கள் கைல மொபைல் தான் இருக்கு. ஏன் அவ்ளோ. டாய்லட்டுக்கு கூட போன தான தூக்கிட்டு போறாங்க. நீங்களே யோசிச்சி பாருங்க. பாலைவனத்துல கூட ஒயாஸிஸ் (oasis) பாத்துடலாம். மக்கள் கைல ஒரு புக்க பாக்குறது அவ்ளோ சிரமமா இருக்கு. ஒரு வேளை வீட்டுல கதவ சாத்திட்டு போர்வைய போத்திட்டு அதுக்குள்ளே போய் உக்காந்து படிக்கிறாங்களோ என்னவோ. கதவை சாத்திட்டு பண்ற பல விஷயங்கள் இப்போ பொதுவுல ரொம்ப சர்வ சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா புக் படிக்கிறதுல என்ன பிரச்சினை. அதுவும் பொதுவுல புக் படிக்கிறது அவ்வளவு கேவலமாயிடுச்சான்னு தெரில.

MTC பஸ்ல ஏறி ஒரு இடம் கிடைச்சா போன நோண்டாம ஒரு புக்க எடுத்து படிக்கிலாம். சபர்பன், மெட்ரோ மாதிரியான இடங்கள்ல பக்கத்துல இருக்கவன் மூஞ்சிய கொலைகாரன் மாதிரி முறைச்சு முறைச்சு பாக்காம ஒரு புக்க கைல வச்சிக்கலாம். 

ஆக, சொல்ல வரது என்னன்னா கூச்சப்படாம கொஞ்சம் வாசிங்க.

 

 

 

 

 

 

திங்கள், ஜனவரி 09, 2023

2023 புத்தக கண்காட்சி

2023ஆம் ஆண்டு இனிதாகவே விடிந்திருக்கிறது.

எனது 'ராமும் அம்ஜத்கானும் இன்ன பிறவும்' என்ற கட்டுரை தொகுப்பு புத்தகத்தை கோதை பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கின்றனர். 


கொஞ்சம் தாமதமாக தொடர்பு கொண்டாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு ஓய்வில்லாது இரவு பகல் பாராமல் செப்பனிட்டு புத்தகத்தை வெளியீடும் ஆசிரியர் மற்றும் கோதை பதிப்பகத்தின் நிறுவனர் திருமதி தேன்மொழி அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். 

இந்த வருட சென்னை புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 303இல் கிடைக்கும்.

வாழ்த்துக்களுடன் வாங்கி ஊக்குவிக்குமாறு அன்புடன்...



ஞாயிறு, ஜனவரி 01, 2023

இஷ்டபூர்த்தி


 

முடிவை வாசகர்களின் கையில் விடுவது என்பது ஒரு வகை யுக்தி.  அவ்வகையான திரைப்படங்கள் வெற்றியைத்தழுவுவதும் வெள்ளோட்டத்தில் தக்கையாக காணாமல் போவதும் கதையை விளக்கிய பாங்கில் இருக்கிறது.

உதாரணத்திற்கு கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' கதையை சொல்லலாம். அது கனவா நிஜமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று நம்மிடம் விட்டுவிடுவார்.

அதுபோல இருபது வருடத்திற்கு முன்பு படித்த நாவல் நினைவிற்கு வருகிறது. எம்.ஜி. சுரேஷ் எழுதிய 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' என்ற புத்தகம். அந்த நாவலை ஒரு க்ளைமேக்ஸ் எழுதி  முடித்துவிடுவார். அதற்கு பின் பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கும். ஒவ்வொன்றும் வெவ்வேறும் முடிவுகள். அதாவது ஒரு கதை. அதற்கு பன்னிரண்டு வெவ்வேறு முடிவுகள். தமிழில் இதுவரை இப்படியொரு புத்தகம் வந்ததில்லை. கடமைக்கென இழுக்காமல் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்.

படங்கள், நாவல் இதிலெல்லாம் சரி. சிறுகதையில்?



சிறுகதை என்று ஏன் கூறுகிறேன் என்றால் பக்கங்களின் வரையறை காரணமாக அதில் அதிக விவரங்களை தரவியலாது.


ஐந்து பக்கங்களே உடைய சிறுகதையில் கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு ஒரு பின்புலத்தை கூறி அதன் பின் தற்காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்வுக்கு சுவாரஸ்யமான முடிவை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று எழுதி அசரடித்திருக்கிறார் எழுத்தாளர்.


கதையின் பெயர் 'இஷ்டபூர்த்தி'

 

கதையின் தொடக்கமே ஒரு த்ரில்லர் ஜானர் வகை படத்திற்கு நிகராக நம்மை உள்ளே இழுக்கிறது. ஆரம்பமே அதகளம்.


ஹீரோவிடம் அவன் வேலைபார்க்கும் தாதாவின் மனைவி 'தாதாவை கொள்ளமுடியுமா?' என்ற கேள்வியில் தொடங்குகிறது. தாதா மிகப்பிரபலமானவன். முரடன். வீடு முழுக்க ஒட்டுக்கேட்கும் பார்க்கும் கருவிகள் என்று ஆயிரம் கண்கள் மற்றும் காதுகளை உடையவன். அதனால் பனிவிழும் பால்கனியில் ஒட்டுக்கேட்கும் கருவி மற்றும் உற்று பார்க்கும் கேமிரா இல்லாத இடத்தில் இந்த கேள்வியை ஹீரோவிடம் கேட்கிறாள் தாதாவின் மனைவி. கையடக்க துப்பாக்கி. அதை ஒரு வேலைப்பாடுள்ள கைப்பையில் ஒளித்து ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருக்கும். உணவருந்தும் வேளையில் இந்த கைப்பையை எடுத்து அவளிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வளவுதான் வேலை. சுடுவது தன் பொறுப்பு என்கிறாள்.  இந்த வேலையை முடித்தால் லைஃப் டைம் செட்டில்மண்ட்.


ஹீரோ மையமாக ஒத்துக்கொள்கிறான்.


அந்த நாளும் வருகிறது. தாதாவின் மனைவியின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தாதாவின் அழைப்பு வருகிறது. இவனுக்கு ஆதியோடு அந்தமாக நடுங்க ஆரம்பிக்கிறது. பணிவோடு அவர்கள் முன்னாள் போய் நிற்கிறான். மனைவியின் கையில் அந்த வேலைப்பாடான கைப்பை. தாதா ஒரு குட்டி கதை சொல்லுகிறான். சிறுகதைக்குள் ஒரு குட்டி கடத்தி பாருங்கள். குட்டி கதை என்னவென்றால் ஒரு ராஜா இருந்தானாம். தவறு செய்தவர்களுக்கு ஒரு வினோதமான தண்டனை வழங்குகிறான். இரண்டு கதவுகள். ஒரு கதவிற்கு பின் புலி. மற்றொன்றில் பெண். குற்றவாளி தேர்வு செய்யும் கதவில் பெண் என்றால் திருமணம் ராஜா செல்வதில். புலி என்றால் அதற்கு இரை.    எந்த கதவிற்கு பின் எது என இளவரசி தெரிந்துகொள்ளுகிறாள். அவள் குற்றவாளிக்கு சைகை புரிகிறாள். குற்றவாளி தேர்வு செய்த கதவு பின்னாடி என்ன இருந்தது? என்பதோடு குட்டி கதை முடிகிறது என்று தாதா விவரிக்கிறான்.


தாதா இதை தனக்கு ஏன் சொல்லுகிறான் என்று இவனுக்கும் ஓரளவு பிடிபடுகிறது. கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் நீங்கள் பேசிவிட்டீர்கள் என்று மிதப்பு கொள்ள வேண்டாம். எதிர் புறம் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கேமிராவில் பதிவாகியிருக்கிறது என்று தாதா ஹீரோவின் கண்களை பார்க்கிறான்.  இவனுக்கு நடுங்க ஆரம்பிக்கிறது. குட்டு வெளிப்பட்டுவிட்டது என்று தெரிகிறது. இப்பொழுது ஹீரோவிடம் ஒரு சுழலும் கூண்டை தாதா காண்பிக்கிறான். இந்த கூண்டில் ஒரு பக்கம் வைரம். இரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். இன்னோரு பக்கம் துப்பாக்கி. இந்த கூண்டை சுழற்றுகிறேன். ஒன்றை தேர்வு செய். முடிவு உன் கையில் என்று தாதா சிரிக்கிறான். ஹீரோ ஒரு முடிவெடுக்கிறான். எப்படியென்றால் இவன் விடப்போவதில்லை. அந்த துப்பாக்கியை எடுத்து நாமே சுட்டுவிட்டால் என்ன என்று யோசிக்கிறான். சுழன்று நிற்கும் கூண்டின் ஒரு கதவை நோக்கி கையை நீட்டுகிறான். தாதா தன இடுப்பில் இருந்து மற்றொரு துப்பாக்கியை எடுத்து வெளியில் வைக்கிறான். தாதாவின் மனைவி கைப்பையில் கையை நுழைக்கிறாள். கூண்டின் கதவை தாதா திறந்த மறு நொடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஒரே ஒரு தோட்டா பாயும் ஒளி கேட்கிறது என்றோடு கதை முடிகிறது.


யார் இறந்தார்கள் என்ற முடிவு அவரவர் குணநலனிற்கு ஏற்ப வாசகர்களே தெரிவு செய்துகொள்ள வேண்டிதான்.

 

நீரதிகாரம்


 

முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட கதையை வரலாற்று ஆதாரங்களுடன் வடித்து வைத்தால் அதுதான் நீரதிகாரம்.

 

சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட கதைகளில் புனைவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். காரணம் அதற்கான தகவல்கள் நம்மிடம் கிடையாது. உதாரணத்திற்கு பொன்னியின் செல்வன் நாவலின் வரிவடிவம் வரலாற்று நிகழ்வுகள். ஆனால் அந்த வரி வடிவத்தின் ஊடே பயணிக்கும் கதைமாந்தர்களின் உணர்வுகள் உரையாடல்கள் அனைத்தும் புனைவு. அந்த புனைவின் சுவாரஸ்யமே அதனின் ஸ்திரமான வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது. 25% காஃபி. 75% சிக்கரி.



 


'நீரதிகாரம்' அதுபோன்ற ஒரு புனைவு தான் என்றாலும் இது நேரெதிர். ஏனெனில் இதில் 75% காஃபி. 25% சிக்கரி. ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கதை என்றால் மிக சுதந்திரமாக கதையினுள் விளையாடலாம். ஆனால் இது நூறு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு. தரவுகள் எங்கெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அடி பிசகினாலும் எந்த திசையிலிருந்து பிராது கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு கருவை எடுத்து எந்த ஒரு சமரசமும் இல்லாமல் நாவலாக வடித்துக்கொண்டிருக்கிறார் அ.வெண்ணிலா.  தற்போது விகடனில் 71வது வாரம். அதாவது ஒரு வருடம் தாண்டி இந்த கதை சென்று கொண்டிருக்கிறது. தொடர் தொடங்கி 65வது வாரத்தில் தான் அணை கட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாக கூட தொடர் செல்லுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 

வெங்கடேசனின் காவல் கோட்டம் போன்றதொரு பிரம்மாண்ட தொடராக விகடன் இதை பிரஸ்தாபிக்கலாம். துல்லிய தகவலின் மீது பிணைந்தோடும் இந்த வரலாற்று புனைவுக்கு விருதுகள் பல காத்திருக்கின்றன.

 

தொடரில் ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள்

 

1. ஒரு அணை கட்ட வேண்டுமானால் அதற்கான தேவை ஏற்பட வேண்டும். அந்த தேவையின் பெயர் பஞ்சம். அங்கு ஆரம்பிக்கிறது இந்த நாவல். Famine- பஞ்சம் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த பஞ்சம் எவ்வளவு கொடுமையானது என்று விவரித்திருக்கும் பாங்கு, அதை படித்தபின் நம்மை ஒரு பருக்கை கூட கீழே சிந்தவிடாது. அதுவே அந்த விவரிப்பின் வெற்றி. எழுத்தாளரின் லட்சியம். அது இங்கு நிறைவேறியிருக்கிறது. மதுரையில் சோமாலியாவைப்போல ஒரு பஞ்சமா? அந்த பஞ்சத்தின் காரணமாக மக்கள் திருடர்களாக மாறியது, வழிப்பறி செய்தது, கஞ்சித்தொட்டிக்காக கையேந்தி நின்றது என பல நிகழ்வுகள் டாகுமெண்டரி போல் அல்லாது ஓரொரு கதை மாந்தர்கள் மூலமாக நமக்கு கடத்தப்படுகின்றன.

 

2. திருவிதாங்கூர் சமஸ்தானம், திவான் அய்யங்கார் என அணை கட்டுவதற்காக அறியப்பட்ட நிலங்களை கையகப்படுத்த மெட்ராஸ் ப்ரெசிடென்சிக்கும் விசாகம் மற்றும் மூலம் திருநாள் (மஹாராஜா) ஆகியோருக்கும் இடையில் உண்டான சம்பாஷணைகள், அரசியல் விளையாட்டுகள் என நாவல் அசரடிக்கிறது.

 

3. மலைமேல் வாழும் மக்கள் அவர்கள் வாழ்வியல்கள் மற்றும் கண்ணகி கோயில் என மற்றொரு பக்கம் சிறகை சீராக விரிக்கிறது.

 

4. சர் பென்னி குயிக்கின் அளப்பரிய காதல். அணை கட்டுவதின் மீதான காதல் பிரமிக்கவைக்கிறது. பல முறை நிராகரிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிய இந்த பேரியாற்று ஆணை திட்டத்தை எப்படியும் செயல் படுத்தி விட வேண்டும் என அவர் கொண்டிருந்த உறுதி அவர் மீது நமக்கு மாளா அன்பை விதைக்கிறது. பென்னி குயிக்கின் ஆரம்பம் மட்டுமின்றி அவரது தந்தை காலம் முதல் இந்த நாவல் விவரிக்கிறது. அடிஸ்கும்பே முதல் அவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியது வரை அங்குலம் அங்குலமாக உரையாடல் நடக்கிறது. பிரிட்டிஷாரின் வாழ்க்கை முறை, பென்னி குயிக்கின் மனைவி, அவரது குழந்தைகள் அவர் ஓய்வெடுக்கும் பங்களா என அதகளப்படுத்திருக்கிறார் கதாசிரியர்.

 

5. கிடைக்கும் சந்தடி சாக்கிலெல்லாம் மதமாற்றம் செய்யத்துடிக்கும் பாதிரியார்களை, மதம் மாறும் மக்களின் பிரதான காரணமாகிய வர்ணாசிரம பேதம், பஞ்சம் என அவற்றையும் நுட்பமாக விரவியிருப்பது நாவலின் பன்முகத்தன்மையை மெருகூட்டுகிறது.

 

6. Geological investigation of site என்றொரு பதம் உண்டு. அதாவது கட்டப்போகும் அணையைத்தாங்க வலுவான இடம்தானா என கண்டறியும் ஒரு பரிசோதனை. தேர்ந்தெடுத்த கட்டுமானப்பொறியாளர் போல அதை இவ்வளவு நுண்ணறிவுடன் விலாவரியாக எழுதியிருப்பது எழுத்தாளரின் சிறுத்தைக்கு ஒரு சோற்று பதம். இந்த நாவலின் ஒரே ஒரு பக்கத்திற்காக வரலாற்றின் பல பக்கங்களை புரட்டி குறிப்பு எடுத்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

 

எவ்வாறு பேரியாற்று நீரை தேக்கி வைத்து வைகை ஆற்றின் படுகையை குளிர்வித்து பென்னிகுயிக் தன் லட்சியத்தை நிறைவேற்றினாரோ அது போல அ.வெண்ணிலா அவர்களின் சரித்திர சாட்சியான 'நீரதிகாரம்' மாபெரும் வெற்றி பெறட்டும்.