புதன், ஏப்ரல் 15, 2026

புத்தகம்

முன்பெல்லாம் பயணத்தின் பொழுது இசையைத் தாண்டி உற்றத் துணைவனாக இருந்தது புத்தகங்கள் தான். பாக்கெட் நாவல், மாத இதழ், அல்லது சிறுகதை தொகுப்பு என்று ஏதேனும் ஒன்று கையில் இருக்கும். ரயில்வே தட்கல் புக்கிங் வரிசையில் நிற்கும் பொழுது கூட வாசித்த அனுபவங்கள் உண்டு. இப்பொழுது எங்கு பார்த்தாலும் குனிந்த தலையுடன் மொபைலை பிறாண்டிக் கொண்டிருக்கிறார்கள். ரேகை தேயும் அளவுக்கு. புத்தகம் வாசிப்பவர்களை பொதுவெளியில் எங்குமே காண முடிவதில்லை. 


ஏதேனும் குற்ற செயல் என்று நினைத்துவிட்டு திரைமறைவில் வாசிக்கிறார்களோ என்று ஐயம் எழுகிறது. ஒரே ஒரு முறை பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டர் ஒருவர் தமிழ் நாவல் வாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. புத்தகத் திருவிழாவில் மாய்ந்து மாய்ந்து புத்தகம் வாங்கும் வாசகர்கள் எங்கிருக்கிறார்கள் எனபது பிடிபடவில்லை. 2019 புக் பேரில் நடந்தது தான் ஞாபகம் வருகிறது. ஒரு ஸ்டாலில் மட்டும் அதிக கூட்டம். ‘அந்தக் கடையில் எத்தனை பெர்சன்ட் ஆபர் சர்? இத்தனை பேர் புத்தகம் வாங்க நிற்கிறார்கள்’ என்று அருகில் இருந்தவரிடம் கேட்டேன். ‘அவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் சார்’ என்றார்.

கருத்துகள் இல்லை: