'அப்பாடா' என்று சோபாவில் அமர்ந்தார் மோகன். ஒய்வு பெற்று ஒரு மாதமாகிறது. பீரோவில் இருந்து எடுத்த ஆல்பம் ஒன்று கையில் இருந்தது. முதல் போட்டோ, அவரது செல்ல மகள் அமுதாவின் முதல் வருட பிறந்த நாள். ஒரு வயது அமுதாவைச் சுற்றி அவரது மனைவி, பெற்றோர், பக்கத்து வீட்டு வாண்டுகள் எனச் சூழ்ந்து நின்றனர்.
அமுதா, தலை நிமிர்ந்து தன் பொக்கை வாய் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளைத் தூக்கி ராட்டினம் போல் சுற்ற வேண்டும் போலிருந்தது. அதுபோல சுற்றுவதற்கு அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று அவர் அதைச் செய்யவில்லை. அலுவலக போன், நண்பர்களின் அரட்டை, விருந்தினர், அசதி — ஏதோ ஒரு காரணம். அவருக்கு நினைவில்லை. இன்று அது போல் எந்த வேலையும் இல்லை. ராட்டினம் சுற்றலாம் என்று ஆசையாயிருந்தது. ஆனால் 28 வயது அமுதா ஒன்டாரியோவில் இருக்கிறாள்.
பிறந்தநாள் கொண்டாடிய அதே தினம், அதே ஒரு வயது அமுதா, அந்த மழலை மீண்டும் கிடைக்காதோ என்று அவரது மனம் ஏங்கியது. அடுத்த போட்டோவைப் பார்க்காமல் ஆல்பத்தை மூடி வைத்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக