கடந்த பதிவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்ததும் பாக்கலாம் என்று கூறியிருந்தேன். ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்திருந்தது.
மிகச்சரியாகச் சொல்வதென்றால் பாகம் இரண்டில் பொன்னியின் செல்வன் பூர்த்தியாகி இருக்கிறான்.
முதல் பாகத்தில் கதைச்சுருக்கம் அதாவது preamble ஏதும் இன்றி 'cut 200mm' என்று ஆரம்பித்திருப்பார்கள். ஆதலால் நாவல் படிக்காதவர்கள் தலையும் புரியாமல் காலும் புரியாமல் இந்த elite கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாவதை விட 'நல்லாருக்குல்ல' என்று மையமாக கூறிவிட்டு நட்புகளிடம் மட்டும் புலம்பினார்கள். அந்த புலம்பலில் சில தேடல்கள் நடந்திருக்கும். கதை என்னவென்று அறிந்திருக்கலாம். இரண்டாம் பாகம் குறித்து தயாராகியிருக்கலாம். அந்த தேடலே உரையாடலே படத்தின் வெற்றி தான்.
சரி, நாவல் படித்தவர்களுக்கு?
முன்னமே சொன்னது போல் முழுமையாக பூர்த்தியாகிவிட்டது. இரண்டாவது மூன்றாவது முறை பார்ப்பதற்கு கூட மனது தயாராய் இருக்கிறது. நாவல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், Justified.
சில எண்ணங்கள்.
1. முதல் பாகத்தில் 'நந்தினி' கதாபாத்திரம் அதிகமாக முன்னிறுத்தப்பட்டிருக்காது. காரணம் அவரின் ஆட்டம் இரண்டாவது பாகத்தில் தான். ஆதலினால் இரண்டாவது பாகத்தில் 'ஐஸு' வேற லெவலில் இருப்பார் என்று எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. என்னளவில் இரண்டாம் பாகத்தில் குந்தவையை காட்டிலும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நந்தினி எடுபடவில்லை. மிகையான மேக் அப் காரணமாக இருக்கலாம். குந்தவையின் ஆளுமை அழகுக்கு முன்னால் நந்தினி ஒரு மாற்று கம்மிதான். வாழ்வு முழுவதும் அவள் மீது அப்பிக்கிடக்கும் மென் சோகம் கூட காரணமாக இருக்கலாம். ஒரு முறை கூட நந்தினி நிறைவாக சிரிக்கவில்லை என்பதை கவனித்தீர்களா?
2. முதல் பாகத்தின் வேகத்திற்கு பெரிய முட்டுக்கட்டை என்றால் அது கரிகாலன் பகுதிதான். இரண்டாம் பாகத்திலும் அது தொடர்கிறது. ஒரு பெரிய போர்வீரன். முரடன் என்றளவில் மட்டுமே கல்கி அவனைச் சித்தரித்திருப்பார். அதையும் தாண்டி அவனது காதலை காட்டிய விதத்தில் நாவல் படித்தவர்களுக்கு ஏமாற்றம் தான். தாம் உருவாக்கப்படுத்தியிருந்த சோழன் இவனில்லையே என்று மீண்டும் மீண்டும் மண்டைக்குள் அலாரம் அடித்தது எனக்கு மட்டும் தானா? ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி வரும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. அதுவும் கடம்பூர் மாளிகையில் கரிகாலன் எப்படி இறந்தான் என்பதை கல்கியே ஒரு தெளிவில்லாமல் முடித்திருப்பார். lights off போலத்தான். ஆனால் அதில் ஒரு தெளிவை ஏற்படுத்துகிறேன் என்று மணி அண்ட் கோ வேறொன்றை திணித்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய போர் வீரனை இப்படி முடித்து வைத்திருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. மொத்தத்தில் கரிகாலன் is wasted in this movie. 'அவளை பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்?' என்ற இரண்டு வசனங்கள் காதில் கொய் என்று ரீங்காரமாய் இம்சை செய்கின்றன. ஜெமோவிற்கு என்ன கோபமோ?
3. முதல் பாகத்தில் மனதில் நிறைந்திருப்பது வந்தியத்தேவன் தான். இரண்டாம் பாகத்திலும் அவரே. வரும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு மற்றும் பார்ப்பவர்களுக்கு energy tonic. கலகலப்பாக நடித்திருக்கிறார். 'என்ன சித்தப்பு' ஸ்டைல் இயல்பாகவே பொருந்தி வந்துவிட்டது. நடிப்பிற்கு அல்லது பாத்திரத்திற்கு முதல் மார்க் என்றால் அது கார்த்திக்குத்தான். charming
4. குந்தவை. இந்த பாகத்தில் அதிகம் தேவைப்படவில்லை. ஆனாலும் வந்தியத்தேவன் காதல் காட்சிகளில் நிறைந்திருக்கிறார். அருண்மொழியுடன் ராஜதந்திரம் சுந்தர சோழரிடம் கேள்விக்கணைகள் என்று நிறைவான பங்களிப்பு.
5. படுத்திருந்த சுந்தரர் இந்த பாகத்தில் தான் எழுந்து நடந்திருக்கிறார். emotion கம்மி என்று ரத்னம் கூறியிருக்கலாம். பிரகாஷ் ராஜும் தெரியவில்லை சுந்தரச்சோழரும் தெரியவில்லை. ஒரு பாத்திரம் அவ்வளவே.
6. முதல் பாகத்தில் வந்த அளவுக்கு கூட இரண்டாம் பாகத்தில் சின்னப்பழுவேட்டரையருக்கு வேலை இல்லை. காட்சிகளும் இல்லை. பெரிதாக ஈர்க்கவும் இல்லை. ஆனால் தஞ்சை கோவில் விசிட்டில் என்ன ஒரு அலப்பறை!!!
7. ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி எப்படி என்று முதல் பாகம் பார்த்த பின்பு மனம் ஒப்பவில்லை. ஆனால் மிகச்சரியான தேர்வு என்று சொல்லுமளவுக்கு இரண்டாம் பாகத்தில் மிளிர்கிறார். அந்த உயரம் உடற்கட்டு எல்லாமே நாம் உருவகப்படுத்தியிருந்த அருண்மொழியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதுவும் நாகையில் புத்த பிக்ஷுக்களுக்கு மத்தியில் அவர் அருண்மொழியாக உருமாறும் தருணம் அதகளம். ஹீரோ என்ட்ரி போல. 'நம் சித்தர்களைப் போல பிக்ஷுக்கள்' என்ற வசனத்தில் அரசியல் பின்னணி ஏதும் இருக்கிறதா?
8. அநிருத்த பிரம்மராயர் மற்றும் ஆழ்வார்க்கடியான் போன்றோரின் பங்கு வெகுவாகச்சுருங்கி விட்டதாகத்தெரிகிறது. நம்பி கதாபாத்திரம் நாவலில் வெடிச்சிரிப்பு வரவழைக்கும். படத்தில் அது மிஸ்ஸிங். ஜெயராம் முயன்றிருக்கிறார். ஆனால் கைகூடவில்லை.
9. ஊமை ராணியின் கண்களை குந்தவையின் கைகள் மூடும்போது கிஷன் தாஸ் மிளிர்கிறது. கிஷன் தாஸ் என்பது படம் முழுமைக்குமான ஆபரணங்களை தயாரித்து கொடுத்த நகை நிறுவனம்.
10. இசை. கேட்கக்கேட்க பிடிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் ARR. முதல் பாகத்தின் 'ராட்சச மாமனே' இப்பொழுதுதான் மனதிற்குள் இறங்கியிருக்கிறது. so, அக நக மற்றும் வீர சோழம் கொஞ்ச காலமாகலாம். மற்றபடி இசை அருமை. காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருப்பதே இசை தான். கரிகாலன் மற்றும் நந்தினி காட்சிகளில் நம்மை திரையிலிருந்து கண்ணகலாமல் பார்த்துக்கொளவது ARRன் பின்னிசையே. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்தனி BGM என்று மெனக்கெட்டிருக்கிறார். கைகூடி வந்திருக்கிறது. கதையுடன் வரும் பாடல்கள் இனிமை. வித்தியாசமான இசைக்கருவிகள் காதில் ஒலிக்கிறது. வரலாற்று நிகழ்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். எல்லாப்புகழும் ARRக்கே
11. லொகேஷன் தேர்வுகள் அருமை. கண்களுக்குளே இன்னும் தேங்கி நிற்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் இவை தான் என்று தெரியவில்லை. அதுவே படத்தின் வெற்றி. கடற்கரை, புத்தவிகாரம், கோட்டை, கடம்பூர் மாளிகை, அகழி, பாதாள வழி, ஆபத்துதவி கூடும் இடங்கள் என எல்லா தெரிவுகளும் அருமை. மணி அண்ட் கோவிற்கு பாராட்டுக்கள்.
12. முழுவீச்சாக உழைத்திருக்கும் ஆடை அலங்கார நிபுணர்கள் மெய் சிலிர்க்க வைக்கிறார்கள். ஏகப்பட்ட நடிகர்கள். அனைவருக்கும் தனித்த அலங்காரம். ஆடைகள் என உழைப்பு அபரிதம். இவர்கள் இல்லையேல் பொன்னியின் செல்வன் இந்த அளவிற்கு ஈர்த்திருக்காது.
13. இறுதியாக, சேர்க்கப்பட்டிருக்கும் புனைவுகள் பற்றி. நந்தினி என்கிற கதாபாத்திரமே கல்கியின் புனைவுதான். திடீரென்று நாவலில் காணாமல் போய்விடுவாள். இங்கே ஒரு முடிவு எழுதியிருக்கிறார்கள். போலவே கடம்பூர் மாளிகையின் கரிகாலன் இறப்பிற்கும் ஒரு முடிவு எழுதியுள்ளார்கள். இவை இரண்டுமே நாவலில் இருந்து இந்த காட்சிப்படுத்துதல் முயற்சியை சற்று நம்மிடையே அந்நியமாக்குகின்றன.
ஆனால் என்னளவில் MGR மற்றும் கமல் கையில் எடுத்து பின்பு கைவிடப்பட்ட இந்த வரலாற்று புதினத்தை, தமிழின் பொக்கிஷத்தை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் (1980 முதல்) அயராது விடாமுயற்சியுடன் காட்சிப்படுத்த முயன்றமைக்கும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியதற்குமே மணிரத்னத்திற்கு தமிழ் பேசும் நல்லுலகம் கடமைப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய ப்ராஜெக்ட். எவ்வளவு கேரக்டர்கள். எவ்வளவு காட்சிகள். நாவலிலிருந்து எதை எடுப்பது? எதை விடுப்பது? வசனங்கள் எவ்வாறு அமைப்பது? ஆடை அலங்காரம், பாத்திரத் தேர்வு, லொகேஷன், சினிமாட்டோகிராபி, பாடல்கள், இசை, வாத்தியக்கருவிகள் அடேங்கப்பா. எழுதிக்கொண்டே போகலாம். எத்தனை மொழிகளில் கொண்டு சேர்த்திருக்கிறார். லைக்காவினால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.
டீம் முழுவதும் ஒத்திசைந்து தேர் இழுக்க வேண்டும். இழுக்க வைத்திருக்கிறார். ரஜினி போன்றதொரு காந்தம். 26 வயதில் ஆரம்பித்து 66 வயது வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அந்த கால இளைஞர்கள் முதல் இந்த கால 2கே கிட்ஸ் வரை அத்தனை பேரையும் கட்டிவைத்திருக்கிறார். களத்தில் கால் வைக்கவே பயந்து கொண்டிருக்கும் வேளையில் புதுப்புது முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார். ஊர்கூடி பொன்னியின் செல்வன் என்ற தேர் இழுக்க வைத்ததற்காகவே ஒரு கிரியேட்டராக கதைகளில் புனைவு கொண்டு வரும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று என்னளவில் ஏற்றுக்கொள்கிறேன். நாவல் படித்தவர்களுக்கு ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பது புரியும். அதை கல்கி இறுதி பக்கங்களில் விளக்கியிருப்பார். மணிரத்னம் நாவலில் இருக்கும் அந்த இடைவெளியை படம் மூலமாகவே நிரப்ப நினைத்திருக்கிறார். ஓரளவு கைகூடிதான் வந்திருக்கிறது. நாவல் படித்தவர்களுக்கு மட்டும் கொஞ்சம் செரிக்காமல் போகலாம். ஆனால் 2கே கிட்ஸ் விசிலடித்து ரசித்து கொண்டுதான் இருந்தன. பிறகு என்ன?
OTTயில் வெளியிட்ட பின் பாகுபலி போல் ரிப்பீட்டட் மோடில் வீட்டிற்குள் ஓடுவதற்கான சரவல்லமை கொண்ட படமாகத்தான் வெளிவந்திருக்கிறது. நம்முடைய சோழர்கள் என்ற வகையில் கொஞ்சம் மிஞ்சவே செய்திருக்கிறது என்று கூட மார்தட்டிக்கொள்ளலாம்.
பொன்னிநதி பார்க்கணுமே!!!


